Tuesday 27 January 2015

ஐ VS திருநங்கைகள் சில விளக்கங்களும், கேபிள் சங்கருக்கு சில கேள்விகளும்...


அறச்சீற்றம்(!) தொடர்கிறது....
படத்தில் திருநங்கைகளை வக்கிரமாகக் காட்சிப்படுத்தியது தொடர்பாக கடந்த பதிவில் எழுதியிருந்தேன். பலருக்கு அதில் உடன்பாடு இல்லை போலும். இணையத்தில் திருநங்கைகளுக்கு ஆதரவாக வந்த பதிவுகளை விட அவர்களை விமர்சனம் செய்து வந்த பதிவுகள்தான் அதிகம்.

ஒரு பெண் பதிவர் எழுதிய பதிவைப் படித்தேன். நம் சமூகம் எவ்வளவு தட்டையான சிந்தனையமைப்பு உடையது என்பதை அவரது பதிவையும் அதற்கு ஆதரவாக வந்த சில கருத்துகளையும் படித்தபோது உணர முடிந்தது.

திரைப்படங்களில் பெண்களை கெட்டவர்களாக, கொடுமைக்காரியாக சித்தரிக்கும் சில படங்களை குறிப்பிட்டு அதற்கெல்லாம் பெண்களாகிய நாங்கள் போராட்டம் நடத்தினோமா என்கிற ரீதியில் வினா எழுப்பியிருந்தார். அதேப்போல் சினிமாவில் கெட்டவர்களாக சித்தரிக்கப்பட்டவர்கள் எல்லோரும் போராட்டம் நடத்தினால் சினிமாவே எடுக்க முடியாது என்கிற ரீதியிலும் சிலர் கருத்துகளை சொல்லியிருந்தார்கள்.

அவர்களின் சிந்தனையை தஞ்சாவூர் கல்வெட்டில்தான் செதுக்கி வைக்கவேண்டும்..!.

திருநங்கைகளைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது. சினிமாவில் ஏதாவது ஒரு சாதியையோ அல்லது மதத்தையோ அல்லது அந்த அமைப்பின் தலைவர்களையோ, பகடி செய்தோ அல்லது விமர்சித்தோ காட்சிகள் வந்தாலோ அல்லது வரலாம் என்கிற ஊகம் இருந்தாலோ ஒரு பெருங்கூட்டமே திரண்டு அப்படத்திற்கு எதிராக போராட்டம் நடத்துகிறது. வழக்கு போட்டு தடை வாங்குகிறது. இறுதியில் அந்தப் படைப்பாளி பணிந்து போகிறார்.

ஆனால் திருநங்கைகள் பாவப்பட்டவர்கள். ஒன்றிணைந்து போராடிப் பார்த்தார்கள். யாரும் கண்டுகொள்ள வில்லை. குறைந்த பட்சம் இயக்குனர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றார்கள் . மிரட்டலுக்கும் கேலிக்கும் உள்ளாகினர். கடைசியில் எந்த நீதியும் கிடைக்காமல் பின்வாங்கிவிட்டனர். பாவம், அவர்களுக்கு படம் வெளியாகும் முன்பே வழக்குப் போட்டு தடை வாங்கத் தெரியவில்லை. படத்தை எங்களுக்கு போட்டுக் காட்டிய பிறகே வெளியிடவேண்டும் என்று சாதூர்யமாக இயக்குனரையும் தயாரிப்பாளரையும் நடுத்தெருவுக்கு இழுக்கத் தெரியவில்லை.

முன்பெல்லாம்  திருநங்கைகளைப் பார்த்தாலே எனக்கு அருவருப்பாக இருக்கும். அதைவிடவும்  கடுங்கோபம் வரும்.ஆணாகப்பிறந்த இவர்கள் ஏன் பெண்ணாக மாறவேண்டும்?.ஆணாகவே இருந்து தொலையவேண்டியது தானே. செக்ஸில் ஈடுபாடு இல்லையென்றால் திருமணம் செய்யாமலே இருந்துவிட வேண்டியது தானே. எதற்கு குறியறுத்து இச்சமூகத்தில் தங்களை மூன்றாம் பாலினித்தவர்களாக அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும்?

பிறகுதான் தெளிந்தேன். அது படைத்தவனின் திருவிளையாடல் என்று... அவர்களின் தலைவிதி கருவிலே எழுதப்படுகிறது என்று... குரோமோசோம்களின் குறைபாடுகளால் கரு உருவாகும்போதே மூன்றாம் பாலினம் என்கிற முகவரியை கொடுத்துவிடுகிறான் பிரம்மன். ஆனால் அது வெளிப்படுவது ஏனோ பருவ வயதில் தான்.
சொல்லப்போனால் திருநங்கைகளும் ஒரு மாற்றுத் திறனாளிதான். பிறக்கும் போதே மூளை வளர்ச்சி இல்லாமலோ அல்லது உறுப்புகள் ஊனமாகவோ பிறக்கும் குழந்தைகள் மீது நமக்கு பரிதாபம் வருகிறது. சமூகத்தில் அவர்கள் இழிவுபடுத்தப்பட்டால் நமக்கு கோபம் வருகிறது. அதற்கு, நாளை நமக்கும் இதே போல குழந்தை பிறக்கலாம் என்கிற அச்ச உணர்வு கூட காரணமாக இருக்கலாம். அதே போல் இப்படியும் நடக்கலாம். நாளை நமக்குப் பிறக்கும் குழந்தை ஒரு திருநங்கையாகக் கூட  இருக்க வாய்ப்பிருக்கிறது. உடல் ஊனமாகப் பிறப்பதற்கான நிகழ்தகவு 1/100 என்றால், திருநங்கையாகப் பிறப்பதற்கு நிகழ்தகவு 1/1000... அவ்வளவுதான் வித்தியாசம்.

திரைப்படத்தில் பெண்கள் மட்டும் இழிவுபடுத்தப் படவில்லையா என்று கேட்பவர்களுக்கு நான் ஒரு கேள்வி கேட்கிறேன். ரம்யா கிருஷ்ணனோ அல்லது வடிவுக்கரசியோ வில்லியாக நடிக்கும் படத்தைப் பார்த்துவிட்டு வெளிவரும்போது, நாம் பார்க்கும் பெண்களையெல்லாம் அந்த கேரக்டர்களின் நகலாக நினைத்து பார்ப்பதில்லை.ஏன்,பெண்கள் வில்லியாக நடிக்கும் காட்சிகளை பெண்களே ரசிக்கத்தானே செய்கிறார்கள். ஆனால் 'ஐ' போன்ற ஒரு படத்தை ஓர் திருநங்கை பார்த்துவிட்டு உடன்பார்த்தவர்களின் நக்கல், நையாண்டிகளுக்கு ஆளாகாமல் குறைந்த பட்சம் அவர்களின் குரூர பார்வையில் சிக்காமல் தப்பித்து வர முடியுமா...? ஒரு பெண்ணை தவறானவளாகக் காண்பித்தால் அந்தப் பாத்திரத்தை மட்டுமே தவறாக நினைக்கும் நம் சிந்தனை, ஒரு திருநங்கையை தவறாக காட்சிப்படுத்தினால் அச்சமூகத்தையே கேலியாகப் பார்க்கும் அளவுக்கு செல்கிறதே அது ஏன்..?

கட்டுமஸ்தான உடலமைப்பு உடைய ஒருவன், உடல் ஊனமுற்ற ஒருவனைப் பார்த்து 'ஏய்..நொண்டி' என கூப்பிடுகிறான். அப்போது அந்த மாற்றுத்திறனாளி கடும் சினத்துடன் 'என்னை ஏன் நொண்டி என கூப்பிட்டாய்' என்று சண்டைக்கு வருகிறான். அதற்கு அவன் ' என்னைக் கூடத்தான் பாடிபில்டர் எனக் கூப்பிடுகிறார்கள்.. அதற்காக நான் கோபப்பட்டேனா..' என பதிலளிக்கிறார். உங்கள் தர்க்கப்படி அவன் சொல்வது சரிதானே.  ஆனால் நம் மனது அந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கிறதே ஏன்..?.

மானிடர் ஆயினும் கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறந்த நம்மை பகடி செய்வதையும், பிறக்கும் போதே குறைபாடுகளுடன் பிறந்தவர்களை பகடி செய்வதையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கும் நம் தட்டையான சிந்தனையை மாற்றத்தான் திருநங்கைகள் தங்கள் போராட்டத்தை இன்னும் தீவிரப் படுத்த வேண்டும் என்று சொல்கிறேன். அவர்களின் போராட்டம் குறைந்த பட்சம் அச்சமூகத்தின் மீது நாம் கொண்டிருந்த தவறான கண்ணோட்டத்தையாவது மாற்ற வேண்டும்..!

ஷங்கர் போன்ற பிரும்மாண்ட இயக்குனர்களின் படத்தில் நடிப்பது என்னவோ ஓஜஸ் ரஜானி போன்றோருக்கு பெருமையாக இருக்கலாம். ஆனால் அவர் சார்ந்த சமூகம் கொதிப்படைந்து போராட்டம் செய்துக் கொண்டிருக்கும் பொழுது, வெகு இயல்பாக 'அப்படியெல்லாம் ஐ படத்தில் திருநங்கைகள் கொச்சைபடுத்தப் படவில்லை' என்று சொன்னதுதான் விக்ரம் உடலில் வைரஸ் செலுத்தியதை விடக் கொடுமையான விஷயம்.

<<<<<<<<<<<<<<<<<<<<------- &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&& ------->>>>>>>>>>>>>>>>>>

அன்புள்ள கேபிள் சங்கர் அவர்களே..
                                               
இணையத்தில் சினிமா விமர்சனம் எழுதும் என்னைப்போன்ற கத்துக் குட்டிகளின் மானசீக குருவும், எட்டுத் திக்கும் தகவல் திரட்டி, ராப்பகலா உருட்டி புரட்டி கஷ்டப்பட்டு பிளாக்ல பதிவு போட்டா நூறு ஹிட்ஸ் கூட தாண்டாத எங்களுக்கு, ஒரே நாளில் ஆயிரம் ஹிட்ஸ் வாங்குவது எப்படி என்கிற சூட்சமத்தை சொல்லிக் கொடுத்த ஆசானும், சினிமா விமர்சனம் எழுதுங்க..அதுவும் FDFS எழுதுங்க. ஒரே நாளில் பிரபலமாகி விடலாம் என்கிற பிளாக் சீக்ரட்டை பட்டவர்த்தனமாக போட்டுடைத்த பழம்பெரும் பதிவருமாகிய கேபிள் சங்கர் அவர்களே..

" சுப்புடுகள் எல்லாம் கச்சேரி செய்யலாமா..?" என்ற வினா உங்கள் மீது வீசப்பட்ட பொழுது, யதார்த்த சினிமாவை தமிழ்த் திரையுலக்கு அறிமுகப்படுத்திய மகேந்திரனே, இயக்குநர் ஆவதற்கு முன்னால் துக்ளக்கில் சினிமா விமர்சனம் எழுதியவர்தானே.. ஏன் இன்னொரு மகேந்திரனாக நீங்கள் இருக்கக் கூடாது என்கிற வினாவை நானே எழுப்பி விடை தேடிக்கொண்டேன்.

இப்படிப்பட்ட சூழலில்....  இணைய ஊடகத்திலிருந்து திரை ஊடகத்துக்கு பயணம் செய்யும் உங்களின் முதல் கலைப் படைப்பை உங்கள் ரசிகனாக முன்னிருக்கையில் குடும்பத்துடன் அமர்ந்து திரையில் காண ஆவலாக இருந்தேன். அதுமட்டுமல்ல.. அப்படைப்பை  எக்காரணம் கொண்டும் திருட்டு விசிடியிலோ அல்லது இணையத்திலோ பார்க்கக் கூடாது என்கிற கோட்பாட்டுடன் இருந்தேன். தயாரிப்பாளர் சிங்கப்பூர்வாசி என்பதாலும் உங்களுக்கும் சிங்கப்பூருக்கும் நீண்ட நெடிய வரலாற்று தொடர்பு இருப்பதாலும் கண்டிப்பாக தொட்டால் தொடரும் படம் சிங்கப்பூரில் வெளியாகும் என நம்பிக்கையோடு இருந்தேன்.

என் நம்பிக்கைக்கு மகுடம் வைத்தாற்போல்,சிங்கப்பூரின் பரபரப்பான தேக்கா மார்கெட்டில் முதன்முறையாக ஒரு சினிமா போஸ்டர் ஓட்டப்பட்டிருப்பதை கண்டேன். அது 'தொட்டால் தொடரும்'படத்தின் போஸ்டர். 

ஆனால் படம் மட்டும் ரிலீஸ் ஆகவில்லை. பார்த்தால் திரையில்தான் என்ற வைராக்கியத்தில் இருப்பதால், இதற்காக 30 ஆயிரம் செலவு செய்து சென்னை வந்து பார்க்கக் கூடிய சூழலில் நான் இல்லை.மலேசியாவிலும் ரிலீஸ் ஆனதாக தெரியவில்லை. பாடாவதி படங்களை முதல்நாளே பார்க்கும் எனக்கு கேபிள்ஜியின் படத்தை பார்க்கவே முடியாதபடி ஆகிவிடுமோ என்கிற கவலை வாட்டுகிறது. தவிரவும், இந்த வார எனது 'கடமையை'  செய்ய முடியாமல் அறச்சீற்ற பதிவுகள் எழுதும் நிலைமைக்கு ஆளாகியுள்ளேன். இதற்கிடையில் இன்னும் சில நாட்களில் வழக்கமாக இணையத்தில் உங்களின் கலைப்படைப்பு வெளியாகலாம். அப்படிப்பட்ட சூழலில் என்ன முடிவு எடுப்பது என்று ஒரே குழப்பமாக இருக்கிறது... என் குழப்பத்திற்கு என்னதான் முடிவு..?

இப்படிக்கு....

FDFS ஓவர்சீஸ் விமர்சன கம்பெனி..

Friday 23 January 2015

'ஐ' திரைப்படம் திருநங்கைகளுக்கு எதிரானதா..?

(ஒரு முன் எச்சரிக்கை..:இந்தக் கட்டுரையில் 'சமூகம் ' என்கிற வார்த்தை ஆங்காங்கே வருவதால் அறச்சீற்றம் அடையாமல் அதைக் கடந்து செல்லுமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.)


'ஐ' திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும்தான் மந்தம். வெளிநாடுகளில் செம ரெஸ்பான்ஸ். ஐந்தாவது நாள் குடும்பத்துடன் சென்றேன். எனக்கு இரண்டாவது முறை. அம்மணியின் வற்புறுத்தல் வேறு. தவிரவும் எனது விமர்சனத்தில் ' விக்ரமின் உழைப்புக்காக இருமுறை பார்க்கலாம் ' என்று எழுதியிருந்தேன். எழுதிய நானே பார்க்காமல் போனால் எப்படி..? 'எனக்கு நானே தண்டனை'  திட்டத்தில் தியேட்டரில் இரண்டு முறை பார்த்த படம் இதுவாகத்தான் இருக்கும். 

ஆங்கிலப் படங்களைக் காட்டிலும் இரண்டு மடங்கு கட்டணம் வசூலித்தாலும், ஹவுஸ்புல்..!. ஆனால்.., படம் முடிந்து வீடு வரும் வரை கடும் அர்ச்சனை. ' ஒன்னுமே இல்லாத கதையை மூணு மணி நேரம் இழுத்து சோதிச்சிட்டாங்களே..' என்று அம்மணி புலம்பியதைக்கூட சட்டை செய்யவில்லை. ஆனால்  ' ஆம்பள இதுக்கு எவ்வளவோ பராவாயில்லை ' என்று சொன்தைத்தான் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை...!

போகட்டும்..சொல்ல வந்த விஷயம் வேறு.

'ஐ' படத்தில் திருநங்கை காதாபாத்திரம் மூலம் அச்சமூகத்தை கேவல
ப்படுத்தி விட்டார்கள் என்று மூன்றாம் பாலினத்தவர்களான திருநங்கை சமூகத்திடமிருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இந்தவாரம் புதுப்படம் எதுவும் இங்கே ரிலீஸ் ஆகாததால் வேறுவழியில்லாமல் இந்தப் பிரச்சனையைக் கொஞ்சம் கிளறி இந்தவார போஸ்டை தேத்திவிடலாம் என்று கம்பெனி முடிவு செய்திருக்கிறது.

இப்பிரச்சனையை முதலில் கிளப்பியது பேஸ்புக்கில் பலரால் அறியப்பட்ட 'லிவிங் ஸ்மைல் வித்யா' என்கிற திருநங்கை. அவருடைய பதிவில் இயக்குனர் ஷங்கரை கடுமையாக சாடிவிட்டு, ஐ படத்திற்கு விமர்சனம் எழுதியவர்களையும் குட்டு வைத்திருந்தார். 

"படத்திற்கு இணையத்தில் விமர்சனம் எழுதியவர்கள் எவரும் அதைக் கண்டிக்கவில்லை, ஒருவர் ' நயன்'தாரா கூட ஒரு வில்லன் என எழுதியிருந்தார் "என்று அவர் குறிப்பிட்டதைப் படித்த பொழுது எனக்கு 'சுருக்' கென்றது. அந்த ' நயன் 'தாரா என்கிற வார்த்தையை என் விமர்சனத்தில் பயன்படுத்தி இருந்தேன். ஒருவேளை என்னைத் தான் சொல்கிறாரோ என்கிற குற்ற உணர்வு என்னைக் குடைந்தது. நானே ஏதோ அமெச்சூர்தனமாக சினிமாப் பற்றிய அடிப்படை அறிவு எதுவுமில்லாமல், எண்ணத்தில் தோன்றியதைக் கிறுக்கிக் கொண்டிருக்கிறேன். அது எப்படி இவர் கண்ணில் பட்டிருக்கும். உண்மையிலேயே அவர் குறிப்பிட்டது என்னைத்தான் என்றால் அப்படி நான் எழுதியதற்காக என்னை 'மன்னிச்சு.......'

ஏனெனில் வலி, வேதனை எல்லாம் பாதிக்கப் பட்டவர்களுக்குத்தான். வெளியிலிருந்து ரசிக்கும் நமக்கு அது வெறும் நகைச்சுவை. நானும் அப்படித்தான் ரசித்தேன். ' நயன் 'தாரா என்கிற வர்ணனை அப்படத்தில் சந்தானத்தின் திருவாயால் உதிர்க்கப்பட்டது. அதை அப்படியே எனது விமர்சனத்தில் பயன்படுத்திவிட்டேன். என்ன செய்வது FDFS விமர்சனம் எழுதும்பொழுது இதுபோன்ற சவால்(!)களை எதிர்கொள்ளத்தான் வேண்டும்.

இந்தச் சர்ச்சையைத் தொடர்ந்து அவர்கள் பொதுவாக முன்வைக்கும் குற்றச்சாட்டு என்னவென்றால் தமிழ் சினிமாவில் தொடர்ந்து திருநங்கை சமூகத்தை கீழ்த்தரமாக சித்தரித்து வருகிறார்கள், உதாரணமாக பொட்டை என்கிற வார்த்தை..!

எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது. பொட்டை என்கிற வார்த்தை திருநங்கைகளையா குறிக்கிறது...? கிராமப்புறங்களில் பெண் குழந்தை பிறந்தால் ' பொட்டப் புள்ள பொறந்திருக்கு' என்பார்கள். பொட்டை என்பது பெண் சமூகத்தை குறிக்கும் ஓர் வட்டாரச்சொல். 'வாடிப் பொட்டப் புள்ள வெளியே..' என்று வடிவேல் பாடுவது திருநங்கையைப் பார்த்து அல்ல. கோவை சரளா என்கிற பெண்ணைப் பார்த்து.

ஆண் இனம் வீரம் நிறைந்தது போலவும், பெண் இனம் பயந்த சுபாவம் உடையது போலவும் ஏற்கனவே பொதுப்புத்தியில் நமது முன்னோர்கள் பதியவைத்து சென்றிருக்கிறார்கள். அதற்கு மாறாக பயந்த சுபாவம் கொண்ட ஆண் யாராவது இருந்தால் அவனை ' பொட்டை ' என்று கிராமப் புறங்களில் பகடி செய்வார்கள். சண்டைக்கு பயந்த ஒருவனை, ' பொட்ட போல பயப்படுறாண்டா...' என்று நண்பர்கள் கேலி பேசுவார்கள். இந்த இடத்தில் பொட்டை என்கிற வார்த்தை திருநங்கையைக் குறிக்க சொல்லவில்லை. அவர்களைக் குறிக்க நிறைய வார்த்தைகள் கிராமப்புறங்களில் இருக்கிறது.

ஆதலால், பெண் தன்மையுள்ள ஆண் என்பதற்கும், பயந்த சுபாவம் உடைய ஆண் என்பதற்கும் வேறுபாடுகள் நிறைய இருக்கிறது. முன்னால் சொல்லப்பட்டது திருநங்கை. பின்னால் சொன்னது 'பொட்டை'.  தவிரவும், திருநங்கைகள் பயந்த சுபாவம் உடையவர்களா என்ன..? பிறகு எதற்கு பொட்டை என்கிற வார்த்தைக்கு 'பேட்டன்ட் ரைட்' எல்லாம் எடுக்கிறார்கள்...? கிட்டத்தட்ட இதே அர்த்தத்தில் சொங்கி, சோப்ளாங்கி ,சப்பை போன்ற வார்த்தைகள் கூட கிராமப் புறங்களில் பயன்படுத்தப் படுகிறது. இதற்கும் ஒட்டுமொத்த 'ரைட்ஸ்' எடுப்பார்கள் போலும்...

மற்றொரு குற்றச்சாட்டு, ஓரினச் சேர்க்கையாளர்களை தவறாகக் காண்பித்து நக்கல் செய்கிறார்கள்... அதற்கு வேட்டையாடு விளையாடு படத்தை இழுக்கிறார்கள். தெரியாமத்தான் கேட்கிறேன். ஒரு பால் ஈர்ப்பினருக்கும் திருநங்கைகளுக்கும் என்ன சம்மந்தம்..?.

பள்ளிப் பருவத்தில் தவறான நட்புகளினால் ஓரினச்சேர்க்கையில் சிலர் ஈடுபடுவதுண்டு. பிறகு வாலிபப் பருவத்தை அடைந்தவுடன் பெரும்பான்மையானவர்கள் அதை விட்டுவிடுவார்கள். அப்போதும் விடமுடியாத வர்கள் திருமணத்திற்குப் பின் தகுந்த கவுன்சலிங் மூலம் ஓரினச்சேர்க்கை பழக்கத்திலிருந்து விடுபட்டு தாம்பத்திய வாழ்க்கைக்கு செல்வதாக சேலம் சித்த வைத்திய டாக்டர் டிவியில் தோன்றி சொல்வதைக் கேட்டிருக்கிறோம். அவர்களுக்கும் திருநங்கைகளுக்கும் என்ன சம்மந்தம்..? திருநங்கைகள் எல்லோரும் ஓரினச்சேர்கையாளர்கள் கிடையாது. ஓரினச் சேர்க்கையாளர்கள் எல்லோரும் திருநங்கைகளும் கிடையாது.


அடுத்து ஐ படத்திற்கு வருவோம்.

இந்தப் படம் தொடர்பாக அவர்கள் முன்வைக்கும் அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் நான் உடன்படுகிறேன். காரணம் மிகத் தெளிவானது.

படத்தில் மொத்தம் ஐந்து வில்லன்கள். அதில் ஒருவராக திருநங்கையை இயக்குனர் தேர்ந்தெடுத்ததில் எந்த தவறும் இல்லை. ஆனால் மற்ற நான்கு பேரும் எப்படி வில்லனாகிப் போனார்கள் என்பதற்கு தர்க்க ரீதியான காரணங்களை  இயக்குனர் சொல்லியிருக்கிறார்.அதில் ஒரு நியாயமிருப்பதை நாமும் ஏற்றுக்கொள்கிறோம்.

ஆனால் மேக்கப் ஆர்டிஸ்டாக வரும் ஒரு திருநங்கை, வில்லனாக மாறியதற்கு இயக்குனர் வைத்திருக்கும் காரணம் 'காம வெறி' . நன்றாகக் கவனியுங்கள் காதல் வெறியல்ல.. காம வெறி. அதற்கான குறியீடுகளை அவர் அறிமுகமாகும் முதல் காட்சியிலிருந்தே வைத்திருப்பார் இயக்குனர். " கொய்ட் இன்டரஸ்டிங் " என்று ஒஜாஸ் ரஜானி விக்ரமை பார்க்கும் முதல் பார்வையிலேயே அவ்வளவு காமத்தைப் பதிவு செய்திருப்பார். அவர் விக்ரமோடு நெருங்கும் அத்தனைக் காட்சிகளிலும் காமம்தான் துருத்திக்கொண்டு இருக்குமே தவிர, துளி கூட காதல் இருக்காது.

விக்ரமைத் தடவுவது, முத்தமிடுவது , வலுக்கட்டாயமாக படுக்கைக்கு அழைப்பது என்று ஆபாசமாகவே காட்சிப்படுத்திய இயக்குனர் ஒரு காட்சியில் வக்கிரத்தின் உச்சிக்கு சென்றிருப்பார். விக்ரம் மீது எமி வைத்திருந்த காதல் உண்மையானதல்ல, தான் வைத்திருக்கும் (காம)காதலே உண்மையானது என்பதை ஒஜாஸ் சொல்லும் போது, தட்டில் இருக்கும் 'ஹாட் டாக்' கை எடுத்து அவர் லாவகமாக கடிப்பது போன்ற காட்சியை வைத்திருப்பார். எவ்வளவு வக்கிரமான சிந்தனை இயக்குனர் ஷங்கருக்கு. ஏன் திருநங்கைகளின் மனதில் காதலே அரும்பாதா..?

இவ்வளவும் செய்துவிட்டு கடைசியில், " என் லவ்வ இன்சல்ட் பண்ணினியில்ல.. என் ட்ரூ லவ் உனக்கு அருவருப்பா இருந்துச்சு இல்ல" என அவர் சொல்வது போல டயலாக் வைத்திருப்பார்.

இதன்மூலம், விக்ரம் போன்ற புஜபல பராக்கிரம இளைஞன் எப்படி ஒரு திருநங்கையுடன் உடலுறவில் ஈடுபடமுடியும் என்கிற கேள்வி, படம் பார்க்கும் சாமானிய ரசிகர்களின் மனதில் எழுந்து, அவர் மீது, குறிப்பாக அவர் சார்ந்த சமூகத்தின் மீது வெறுப்பு வரக் காரணமாக இருக்காதா...?.  ஏன் ஆரம்பத்தில் இயல்பாகப் பழகி பிறகு விக்ரம் மீது காதல்(காமமல்ல) கொள்வது போல காட்சியமைத்தால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்களா..? இங்கே இயக்குனரின் நோக்கம் ஒரு திருநங்கையின் காதலைப் புனிதப் படுத்துவதல்ல. கொச்சைப் படுத்துவது...!  வக்கிரமாகக் காண்பிப்பது..!.

ஷங்கரின் படங்களைத் தொடர்ந்து பார்த்து வந்தால் ஒரு உண்மைப் புரியும். ஆபாசத்திற்கும் கவர்ச்சிக்கும் இடையேயான வித்தியாசத்தை உணராதவர் ஷங்கர். கவர்ச்சியான காட்சி என்று வக்கிரத்தைத் திணிப்பவர். ஜென்டில்மேன் படத்தில் சுபஸ்ரீ முறுக்கு பிழியும் போது கவுண்டருக்கு ஒரு டபுள் மீனிங் டயலாக் வைத்திருப்பார். படத்தின் மற்ற பகுதிகள் சிறப்பாக அமைந்ததால் இதை யாரும் பெரிதாக கண்டுகொள்ள வில்லை. காதலன் படத்தில் நக்மா தடுக்கி விழுவது போல ஒரு சீன். அவரை பிரபுதேவா தாங்கிப் பிடிக்க வேண்டும். மலையாளப் பிட்டுப் படத்தில் கூட இப்படி ஒரு கற்பனை செய்திருக்க மாட்டார்கள். இவற்றின் ஒட்டுமொத்த உச்சமாகத்தான் பாய்ஸ் படம் அமைந்தது. அதில் சூடுபட்டவர் திரும்பவும் காமெடி என்ற பெயரில் வக்கிரத்தை கையில் எடுத்திருக்கிறார்.

இதில் சில அரவேக்காடுகள் கேள்வி எழுப்புகிறது. இதற்கு முன் பிரகாஷ்ராஜ், லிவிங்க்ஸ்டன் போன்றவர்கள் திருநங்கையாக நடிக்க வில்லையா..? அப்போது வராத எதிர்ப்பு இப்போது மட்டும் ஏன் வருகிறது. அட லூசுகளா... பிரகாஷ்ராஜும்,லிவிங்க்ஸ்டனும் என்ன வேடம் போட்டு நடித்தாலும் அதில் அந்த நடிகர்கள்தான் தெரிவார்களே தவிர அவர்களின் கேரக்டர்கள் தெரியாது.இன்னும் புரியும்படி சொல்கிறேன்.அதே பிரகாஷ்ராஜ் ஒரு பெண் வேடத்தில் நடிக்கிறார். படம் முழுக்க சிகரெட், தண்ணி அடிக்கிறார் என வைத்துக் கொள்வோம். இன்னொரு படத்தில் உண்மையான கதாநாயகியே படம் முழுக்க அவர் செய்ததையே செய்கிறார் என வைத்துக் கொண்டால், இந்தச் சமூகம் எந்தப் படத்திற்கு எதிராக பொங்கும்...? ஒரு ஆணை திருநங்கையாக நடிக்க வைப்பதற்கும், ஒரு திருநங்கையையே  நடிக்க வைத்து அவர்கள் மூலமாக அச்சமூகத்தைக் கேவலப் படுத்துவதற்கும் வித்தியாசம் நிறைய இருக்கிறது.


ஒரு படத்தின் கதாநாயகன் என்பவன் ஒட்டுமொத்த ஆண் சமூகத்தின் பிரதிநிதியல்ல. சமூகத்தில் ஒருவன். அதே போல் கதாநாயகி என்பவள் ஒட்டுமொத்த பெண் சமூகத்தின் பிரதிநிதியல்ல. அவளும் இச்சமூகத்தில் ஒருத்தி. இவர்களைக் கொச்சைப் படுத்தினால், பாதிப்பு தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு மட்டும்தானே ஒழிய அவர்கள் சார்ந்த ஒட்டுமொத்த சமூகத்துக்கு அல்ல.. ஆனால் ஒடுக்கப்பட்ட , ஒதுக்கப்பட்ட சமூகத்திலிருந்து, இனத்திலிருந்து ஒருவரைத் தேர்ந்தெடுத்து சினிமா போன்ற ஒரு பவர்புல் மீடியத்தில் வைத்து வக்கிரமாக காட்சிப்படுத்தினால் அது அச்சமூகத்தையே கொச்சைப் படுத்தியது போல் ஒரு பிம்பத்தை ஏற்படுத்திவிடும் என்கிற அடிப்படை உண்மை கூடவா இத்தனை வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குனர் ஷங்கருக்குத் தெரியாது..?

ஒடுக்கப்பட்ட தலித் சமூகத்தினரை சினிமாவில் கொச்சைப்படுத்திவிட்டு, நாங்கள் கவுண்டர்களைக் கூடத்தான் கலாய்த்திருக்கிறோம் என்று வியாக்கியானம் பேசமுடியுமா..?  அதை எவ்வளவு சென்சிடிவாகப் பார்க்கிறோமோ அதே அளவு திருநங்கைகளைக் காட்சிப்படுத்தும் போதும் கவனம் வேண்டாமா..?

இன்னும் ஒருசிலர் ரயிலில் செல்லும்போது எங்களை தொந்தரவு செய்தார்கள், மிரட்டி பணம் வாங்கினார்கள். அதனால் அப்படி காண்பித்ததில் தவறு இல்லை என்கிறார்கள். இது ஒன்றும் திருநங்கைகளைப் பற்றிய ஆவணப் படம் கிடையாது. அவர்களின் அகம்,புறம், பிளஸ் ,மைனஸ் எல்லாவற்றையும் சொல்வதற்கு. ஒட்டுமொத்த தமிழ் உலகமே பார்க்கும் கமர்சியல் படம். இந்தப் படத்தின் மூலம் அச்சமூகத்தின் மீது தவறான ஒரு அபிப்ராயம் உருவாகுகிறது என்றால் அதற்கான விலையை படைப்பாளி என்கிற வகையில் இயக்குனர் ஷங்கர் கொடுத்தே ஆகவேண்டும்.அதற்கு திருநங்கைகள் போராட்டத்தை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும்.  


Saturday 17 January 2015

டார்லிங் (விமர்சனம்)

பாலியல் வன்புணர்வு செய்து கொல்லப்பட்ட ஒரு பெண்ணின் ஆவி, மற்றொரு பெண்ணின் உடலில் புகுந்து தன் சாவுக்குக் காரணமானவர்களை பழிவாங்கும் கதைதான் டார்லிங்.

பிரேமகதா சரித்திரம் என்ற தெலுங்குப் படத்தின் தமிழ் மறு உருவாக்கம் தான் டார்லிங். ஏற்கனவே பல பேய் படங்களில் சொல்லப்பட்ட கதை தானே. புதிதாக என்ன சொல்லப்போகிறார்கள் என்ற சலிப்பு ஆரம்பத்தில் வந்தாலும் மென்மையான திரைக்கதையும், நகைச்சுவை காட்சியமைப்புகளும் படத்தை உற்சாகமாக தூக்கி நிறுத்துகின்றன.

தான் காதலித்த பெண் ஒரு 'ஐட்டம்' என்பதை அறிந்த ஹீரோ ஜி.வி.பிரகாஷ்குமார் தற்கொலைக்கு முயற்சிக் கிறார். அதை, பிரகாஷ்குமாரை ஒருதலையாகக் காதலிக்கும் நிக்கி கல்ரானியும், நண்பன் பாலாவும் தடுக்கிறார்கள். இருப்பினும் தற்கொலை முடிவிலிருந்து பின்வாங்க மறுக்கிறார் ஹீரோ. அவரது தற்கொலை முடிவை மாற்றி நிக்கி கல்ரானியை காதலிக்க வைப்பதற்காக பாலா ஒரு திட்டம் போடுகிறார். பாலாவும் நிக்கியும் வெவ்வேறு சொந்த பிரச்சனைகளில் வெறுப்புற்று அவர்களும் ஹீரோவோடு சேர்ந்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக நாடகம் போடுகிறார்கள்.

அதற்காக ஒரு பங்களாவை தேர்ந்தெடுக்கிறார்கள். அதே தற்கொலை லட்சியத்தோடு இருக்கும் கருணாவும் இவர்களோடு சேர்ந்துக் கொள்கிறார். அந்த பங்களாவில் ஏற்கனவே ஓசியில் சொகுசாக வாழும் இன்னொரு கோஷ்டி, அங்கு பேய் இருப்பதாக பொய் சொல்லி அவர்களை விரட்டப் பார்க்கிறது. உண்மையிலேயே அந்தப் பங்களாவில் பேய் இருப்பது பிறகு தெரியவருகிறது. அது நிக்கியின் உடலில் புகுந்து தனக்கு நேர்ந்த கொடுமையை ஹீரோவிடம் சொல்கிறது. நிக்கியின் உடலில் புகுந்த அந்த பேயை விரட்ட வேண்டுமென்றால் அந்தப் பெண்ணின் கொலைக்குக் காரணமானவர்களைத் தேடிப்பிடித்துத் தண்டிக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள்.

பிறகு என்ன நடந்தது , அவர்கள் எப்படி தண்டிக்கப்பட்டார்கள் என்பதே மீதிப்படம்.

 G.V. பிரகாஷுக்கு இது முதல் படம் என்பதால் நிறைய காட்சிகள் சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. வாய்ஸ் மாடுலேஷன் பின்வரும் படங்களில் சரி செய்துவிடுவார். ஆனால் எக்ஸ்பிரஷன் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பார் போலும். தன் காதலி மைக்கில் பாடிக்கொண்டிருக்கும்போது அவர் மீது காதல் கொண்டு ரொமாண்டிக் லுக் விடும் காட்சி ஒன்று. ' ஆத்தா வைய்யும் சந்தைக்கு போகணும் மைக்கை குடு...' என்று கெஞ்சுவதுபோல நிற்கிறார்.

நிக்கியை முத்தமிட முதன்முதலாக அவர் நெருக்கும்போது அவளுக்குள் இருக்கும் பேய் வெளிப்படுகிறது. முகம் கோரமாகி மாறி அந்தரங்கத்தில் மிதக்கிறது. பிரகாஷை ஓங்கி சுவரில் அடிக்கிறது. மனுஷனுக்கு முகத்தில் ஒரு பய உணர்ச்சி இருக்கணுமே.. ம்ஹும்.. ஸ்கூலில வாத்தியார் பாடம் நடத்திகிட்டு இருக்கும் போது ஒன் பாத்ரூம் வந்தா போகவும் முடியாம, கேக்கவும் முடியாம ஒரு முழி முழிப்போம் பாருங்க.. அப்படி முழிக்கிறார்.

சரி பேயைப் பார்த்தவர் வெளியே வந்து மேட்டரை சொல்வார் என்று பார்த்தால், பாத்ரூல பொட்டுத்துணி இல்லாத குஷ்புவைப் பார்த்த ரஜினி போல திரு திருனு முழிக்கிறார்.(ஒருவேளை பேய் முழி முழிக்கிறான்னு சொல்லுவாங்களே அது இதுதானோ..?) . கடைசியில் உக்கிரமாக மாறவேண்டிய காட்சிக் கூட அவ்வளவு சிறப்பாக இல்லை.  படத்தில் இவரது நடிப்பு முக்கியமான  மைனஸ்.

ஆனால் நிக்கி கல்ரானி செம பர்ஃபார்மன்ஸ். G .V .பி யுடன் ரொமான்ஸ் காட்சியாகட்டும், திடீரென்று பேயாக மாறும் கட்டமாகட்டும் தனக்கான பாத்திரத்தை நன்றாகச் செய்திருக்கிறார். அடிக்கடி அம்மணி  ஷார்ட்ஸ்-ல்  வந்து நம்ம ஹார்ட் பீட்டை ஏற்றுகிறது.

உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் படத்தின் நிஜமான ஹீரோ கனாகாணும் காலங்கள் பாலாவும், கருணாஸும் தான். மொத்தப் படத்தையும் அனுமார் மாதிரி இவர்கள் தான் தூக்கி சுமக்கிறார்கள். டைமிங் சென்ஸ் பாலாவுக்கு நன்றாக வருகிறது. சந்தானத்துக்கு போட்டியாக வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. கருணா தானாக கேட்டு நடித்த படமாம் . நீண்ட இடைவேளைக்குப்பின் செம என்ட்ரி. நல்லவேளை இவர் இல்லை என்றால் சூரியை போட்டு உயிரை எடுத்திருப்பார்கள். இணையத்தில் பிரபலமான விஜய் டிவியின் சிரிச்சா போச்சி மேட்டரை ஆங்காங்கே தூவி கிச்சு கிச்சு மூட்டியிருப்பது செம டெக்னிக். இவர்கள் செய்வது அதகளம் என்றால், பேய் விரட்ட 'கோஸ்ட் கோபால்வர்மா ' வாக வரும் நான் கடவுள் ராஜேந்திரன் அதிரடி பட்டாசு.!. ' ஜெய் சடகோபன் ரமேஷ் ' என்று இவர் வாயைத் திறந்தாலே தியேட்டரே அதிர்கிறது.( பொதுவாக பேய் விரட்ட மனோபாலா தானே வருவார்..?)  
அது என்ன, பேய் என்றால் பெண் மீதுதான் ஏறவேண்டும் (ஐ மீன்.. உடம்புக்குள்) என்கிற சட்டம் ஏதாவது இருக்கிறதா...?  மோனோலிசா படத்திலிருந்து இப்போ வரைக்கு ஒரே மாதிரியாகக் காட்டினால் எப்படி .? 

பாடல்கள் எதுவும் பெரிதாகக் கவரவில்லை. சார் நடிப்புக்கு வந்து விட்டதால் இசைக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார் போல. ஆனால் பின்னணி இசையில் ஸ்கோர் செய்துவிட்டார். அழகு தேவதையாக வரும் 'புத்தம் புது காலை' ஸ்ருஷ்டி டாங்கேவை கேரக்டர் சரியில்லாத பெண்ணாகக் காண்பித்திருப்பது ஏனோ மனம் ஏற்க மறுக்கிறது. நிறைய இரட்டை அர்த்த வசனங்கள் படத்தின் மைனஸ் என்று சொன்னார்கள். பின்னால் அமர்ந்திருந்த பெண்களும் வாய்விட்டு சிரித்ததை கேட்க முடிந்தது.

சீரியஸாக ஆரம்பிக்கும் நிறைய காட்சிகள் காமெடியில் முடிவது போல திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். இரண்டாம் பாதி கலகலப்புகாக ஒருமுறை பார்க்கலாம்.

                        ப்ளஸ்                   மைனஸ்
பாலா-கருணா காமெடி G.V. பிரகாஷ் நடிப்பு.
கோஸ்ட் கோபால்வர்மா பாடல்கள்
நிக்கி கல்ரானி அதிக ட்விஸ்ட் இல்லாதது.
திரைக்கதை மற்றும் பின்னணி இசை

Friday 16 January 2015

ஆம்பள - அதகளம் ..!

ரு முடிவோடுத்தான் சுந்தர்.C களத்தில் இறங்கியிருக்கார் . இரண்டரை மணி நேரம் ஆடியன்ஸின் கவனத்தை சிதறடிக்காமல் கலகலப்பாக படத்தைக் கொண்டு சென்றாலே போதும். ஓரளவு வெற்றியை தக்கவைத்து விடலாம் என்று தன் திரை அனுபவத்தின் மூலம் அவர் போட்ட கணக்கு இந்த முறையும் தப்பவில்லை. தன் கோட்டையில் இன்னொரு வெற்றிக்கொடியை நாட்டியிருக்கிறார் தமிழ் சினிமாவின் தற்போதைய ஒரே மினிமம் கியாரண்டி இயக்குனர் சுந்தர்.C.

படம் வெளிவரும் முன்பே, உலகத்திலே இப்படியொரு சினிமா வந்ததில்லை என்று ஓவர் பில்டப் கொடுத்து  எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் எகிற வைத்துவிட்டு, திரையரங்கைவிட்டு தொங்கிய முகத்துடன் வரும் ரசிகனைப் பார்த்து, 'படம் புடிக்காவிட்டால் எழுந்து போக வேண்டியதுதானே' என தர்க்கம் பேசும் இயக்குனர்கள் மத்தியில், ரசிகர்கள் தன்னிடம் எதை எதிர்பார்த்தார்களோ அதை விட கொஞ்சம் அதிகமாகவோ கொடுத்து திருப்திப் படுத்தும் சுந்தர்.C யை அடித்துக்கொள்ள தற்போதைய தமிழ் சினிமாவில் எவரும் இல்லை.

சிம்பிளான குடும்ப செண்டிமெண்ட் கதை - கதையை விட காமெடிக்கு முக்கியத்துவம் - மென்மையான கதாபாத்திரங்கள்-சிரிப்பு வில்லன்கள்- அதிரடி சண்டைக்காட்சிகள்-ஒரு குடும்பப் பாட்டு அதற்கு முன்பு செம குத்துப்பாட்டு -  திகட்டாத கவர்ச்சி என்ற சுந்தர்.C யின் அதே டெம்பிளேட் பர்முலா.. அதை சலிப்படையாமல் சொல்வதுதான் அவரது தனித்தன்மை. ஆம்பளை சொல்லி அடித்திருக்கிறது.

நிமிடத்திற்கு ஒரு தடவை சிரிக்க வைக்க வேண்டும் என்பதில் குறியாய் இருந்திருக்கிறது ஆம்பள டீம்.


ப்பாவைப் பிரிந்து அம்மாவுடன் வாழும் விஷால், அரசியல் கூட்டங்களுக்கு ஆள் சேர்க்கும் தொழில் செய்கிறார். பிறகு அம்மாவின் வற்புறுத்தலின் பேரில் அப்பாவைத் தேடி சொந்த கிராமத்துக்கு செல்கிறார். அங்கே ஜமீன்தாராக இருக்க வேண்டிய அப்பா பிரபுவும், தம்பி சதீஷும் ஜேப்படி திருடர்களாக இருக்கிறார்கள். அதன் பின்னணியை ஐந்து நிமிட ஃபிளாஷ்பேக்கில் சொல்கிறார்கள்.

ஜமீன்தார் விஜயகுமாரின் மூத்த மகன் பிரபு.  அவருக்கு  ரம்யாகிருஷ்ணன், ஐஸ்வர்யா, கிரண் என்று மூன்று தங்கைகள் . தங்கைகள் மேல் கொண்ட பாசத்தால் மொத்த சொத்தையும் அவர்களுக்கு எழுதிவைத்து விடுகிறார். அவர்கள் வீட்டில் கூலிவேலை செய்யும் பிரதீப் ராவத், விஜயகுமார் வகிக்கும் எம்.எல்.ஏ பதவிக்கு ஆசைப்பட்டு, அவரைக் கொன்று அப்பழியை பிரபு மேல் போட்டு ஜெயிலுக்கு அனுப்புகிறார்.

அதற்கு முன்பாக, பிரபுவின் பழைய காதலைத் தெரிந்துகொண்ட அவரது மனைவி, முதல் குழந்தையை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார். பிறகு ஜெயிலிலிருந்து விடுதலையாகி வரும் பிரபுவை தங்கைகள் வெறுத்து ஒதுக்க,  தன் இளைய மகனுடன் திருட்டு தொழிலில் ஈடுபடுகிறார். இதுதான் பிளாஷ்பேக்.

பிரபுவின் அந்த மூத்த மகன்தான் விஷால். இளைய மகன் சதீஸ். முன்னாள் காதலிக்குப் பிறந்தவர் வைபவ். அப்பாவைத் தேடி வந்தவர் தனது இரு தம்பிகளையும் கண்டுபிடிக்கிறார். பிரிந்த குடும்பங்கள் பழையபடி சேர வேண்டுமானால், அத்தைகளுக்கு பிறந்த மூன்று பெண்களையும் ஆளுக்கு ஒன்றாக அபேஸ் செய்து கல்யாணம் செய்யவேண்டும் என்ற அப்பாவின் அன்புக் கட்டளையை ஏற்று அந்த ஜமீன் பங்களாவுக்குள் நுழைகிறார்கள் மூவரும்.

அதன்பிறகு நடக்கும் அடிதடிகள் , ஆள் மாறாட்டங்கள், துரத்தல்கள்  என அமர்க்களப்படுத்தி கடைசியில்  எப்படி ஒன்று சேர்ந்தார்கள் என்பதை தனக்கே உரிய ஸ்டைலில் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.


நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்கிற வறட்டு பிடிவாதத்தால் கடந்த வருடத்தில் கோட்டை விட்ட சந்தானத்திற்கு இந்த வருடத்தின் ஆரம்பமே அமர்களம். முன்பாதியில் விஷாலைவிட சந்தானம்-மனோபாலா கூட்டணிக்குத்தான் அதிக காட்சிகள். ஆரம்பத்தில் எஸ்.ஐயாக இருந்து டீ புரமோஷன் ஆகிக்கொண்டே வரும் காமெடி ஏற்கனவே வடிவேல் செய்தது ஆச்சே என்று ஆரம்பத்தில் தோன்றினாலும் அதை விஷால்- ஹன்சிகா வின் காதல் விளையாட்டுகளோடு பின்னியிருப்பது செம கான்செப்ட்.

மூன்று அத்தைகளில் ஒருவராக கிரனை பார்ப்பதற்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும், அத்தை கேரக்டர்களே கிளுகிளுப்புக்காகத்தான் என்று பிறகு தெரியவரும்போது மற்ற இரண்டு ஆண்டிகளாக ஒரு ரம்பாவையோ அல்லது நமீதாவையோ போட்டிருக்கலாமே என மனது சஞ்சலப்படுவதை தவிர்க்க முடியவில்லை. ரம்யா கிருஷ்ணன் சவால் விடுவதற்கு என வைத்துக்கொண்டாலும் ரிடையர்ட் ஆன ஐஸ்வர்யாவை இயக்குனர் எதற்காக தேர்ந்தெடுத்தார் என்பதுதான் புலப்படவே இல்லை.

பூனம் பஜ்வா ஒரு குத்துப் பாட்டுக்கு வருகிறார். ஆண்ட்ரியா, விஷால்-ஹன்சிகா காதலைப் பிரிக்கும் ஒரு சீனுக்கு வந்துவிட்டு போகிறார். குஷ்பு கூட டூயட்டின் இடையில் வந்து ஆடிவிட்டு போகிறார். இப்படி படம் முழுக்க ஏதாவது ஒன்றை கலர் கலராக காண்பித்து ஒரு 'ஃப்ரெஷ்னெஸ்' மெயிண்டைன் பண்ணுகிறார் இயக்குனர்.


ஹன்சிகாவை குளோசப்பில் பார்க்கும்போது அடுத்தப் படத்தில் அத்தை கேரக்டருக்குக் கூப்பிட்டுவிடுவாரோ என்கிற அச்சம் ஒருபுறம் வருகிறது. சிங்கிள் ஹீரோயினை வைத்தே சிக்சர் அடிப்பார் சுந்தர்.C. இதில் மூன்று ஜில்பான்சிகள். அடிஷனலாக அத்தைகள் வேறு.. கேட்க வேண்டுமா ..?  சென்டிமென்டான ' பாத் டவல் ' சீனும் உண்டு.

இசை ஹிப்ஹாப் தமிழன் ஆதி. சில பாடல்கள் குத்து ரகம் என்றாலும் எதுவும் போரடிக்கவில்லை. 'இன்பம் பொங்கும் வெண்ணிலா' பாடலை ரீமிக்ஸ் செய்திருக்கிறார். கடைசியாகப் போடப்படும் டைட்டிலில் வருகிறது அப்பாடல். பாடல் முடியும் வரை பார்த்துவிட்டுத்தான் கூட்டம் கலைகிறது.

சுந்தர்.சி படங்கள் என்றாலே ஜாலியாக பீச்சுக்கு காற்று வாங்க போவது போல் தான் . போனோமா என்ஜாய் பண்ணினோமா என்று வரவேண்டும். மாறாக, அங்கு மணல் ஏன் சதுர வடிவில் இருக்கு... கடல் ஏன் பெரிதாக இருக்கிறது என்று யோசிக்கக் கூடாது. லாஜிக் என்ற மேட்டரை ஒரு ஓரமாக வைத்துவிட்டு இரண்டரை மணிநேரம் ஜாலியாக சிரித்துவிட்டு வரலாம்.



Wednesday 14 January 2015

ஐ - அதுக்கும் மேல..(விமர்சனம்)

னது உடலில் வைரஸை செலுத்தி அகோரமாக மாற்றிய ஒரு கும்பலை அதே பாணியில் தண்டிக்கும் ஒரு ஹீரோவின் கதைதான் ஐ.

அரதப் பழசான கதைதான். ஆனால் மேக்கிங்கில் சிகரம் தொட்டிருக்கிறார் ஷங்கர். படத்தில் மொத்தம் ஐந்து வில்லன்கள்.

ஆணழகன் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்வதற்கு கடினமாக உழைக்கும் லிங்கேசனாக சீயான் விக்ரம். பட்டத்தை குறிவைக்கும் சக போட்டியாளர் ரவி (வில்லன் நம்பர்-1), விக்ரமை மிரட்டி வாபஸ் வாங்கச் சொல்கிறார். இருவருக்குமான மோதலில் விக்ரம் ஜெயிக்கிறார்.

மாடலிங் துறையில் இந்திய அளவில் முன்னனியில் இருக்கும் தியா (எமி ஜாக்சன்) மீது விக்ரமுக்கு செம கிரேஸ். தியாவுடன் நடிக்கும் ஆண் மாடல் ஜான் என்பவரால் (உபன் பட்டேல் -வில்லன் நம்பர்-2) பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகிறார். அவருடன் 'ஒத்துழைப்புக்கு' மறுப்பதால் பல விளம்பரப் படங்களிலிருந்து தியா கழட்டி விடப்படுகிறார். அந்த இடத்திற்கு விக்ரமை கொண்டு வருகிறார் தியா. சீனாவில் நடைபெறும் விளம்பரப் போட்டியில் லோக்கல் லிங்கேசனை ' லீ ' யாக மாற்றியதுடன், தன் இதயத்திலும் இடம் கொடுக்கிறார் தியா. லீ-தியா ஜோடி இந்திய விளம்பர உலகில் கொடிகட்டி பறக்கிறது. ஜான் அனைத்து விளம்பர ஒப்பந்தத்திலிருந்தும் நீக்கப்படுகிறார். அதுதான் அவரை  ' நம்பர் 2 ' வில்லனாக மாற வைக்கிறது.

விக்ரமின் மேக்கப் ஆர்டிஸ்ட் ஓஜஸ் ரஜானிக்கு விக்ரம் மீது ஒருதலைக்காதல். இந்தியாவின் லீடிங் மேக்கப் ஆர்டிஸ்டுக்கு விக்ரம் மீது எதற்காக காதல் வருகிறது என்றெல்லாம் கேட்கக்கூடாது. விக்ரம் தியாவைக் காதலிப்பதால் அந்த 'நயன்'தாராவை உதாசீனப்படுத்துகிறார். தவிர ஒரு திருநங்கை மீது யாருக்குத்தான் காதல்வரும்..?. காதல் தோல்வி அடைந்த அவர்(ள்) ' வில்லன் நம்பர்- 3 ' இடத்துக்கு மூர்க்கமாக முன்னேறுகிறார். 

விளம்பரப் படத்தில் நடித்தாலும் தனக்கென்று ஒரு பாலிசியை வைத்திருக்கிறார் விக்ரம். அதாவது கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த பொருட்களின் விம்பரங்களிலும் நடிக்க மாட்டேன் என்பதுதான் அப்பாலிசி. அதனால் தன்னை வளர்த்து ஆளாக்கிய விளம்பர நிறுவனத்தின் ஒனராகிய ராம்குமார் (நடிகர் திலகத்தின் மூத்த புதல்வன்) உடன் பகை வருகிறது. அதன்மூலம் வில்லன் நம்பர் -4 வது இடத்துக்கு அவர் போட்டியின்றி தேர்வாகிறார்.

ஐந்தாவதாக, கூட இருந்தே ஒருவர் குழி பறிக்கிறார். படத்தில் இருக்கும் ஒரே ஒரு ட்விஸ்ட் அது என்பதால் ஐந்தாவது வில்லனை தியேட்டரில் சென்று பாருங்கள். ' சைடு வாகு எடுத்து சாஃப்டா பேசினா சரத்பாபுனு நெனச்சியா..'  என்று அவரை அறிமுகப்படுத்தும் அந்த இடம் செம்ம.

இப்படி வில்லனாகிப் போன ஐந்து பேரும் தமிழ் சினிமா திரைக்கதைப்படி கடைசியில் ஒன்று சேர்கிறார்கள். விக்ரமை பொட்டுனு தீர்த்து விடக்கூடாது. அதுக்கும் மேல..அதுக்கும் மேல..அதுக்கும் மேல..ஏதாவது செய்யணும் என்று திட்டம் போடுகிறார்கள். அதுதான் விக்ரம் உடம்பில் ' I ' வைரஸை செலுத்தி அவரை உருக்குலைப்பது. அசத்தலாக இருக்கும் விக்ரம் அகோரமாக மாறுகிறார். அதனால் தியாவுடன் அவருக்கு நடக்கவிருந்த கல்யாணமும் நின்றுவிடுகிறது. அந்த ஐந்தாவது வில்லன் தியாவுக்கு மாப்பிள்ளையாக மாறுகிறார் ( அதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா...!).

கடைசியில் அவர்கள்  மூலமாகவே தனக்கு நடந்த கொடூரத்தை அறியும் விக்ரம், அதே பாணியில் ஒவ்வொரு வரையும் சாகடிக்காமல் 'அதுக்கும் மேல' அந்நியனை விட கொடூர தண்டனை வழங்குகிறார்.

சரி. கடைசியில் எமி ஜாக்சனுக்கு இந்த உண்மை தெரியுமா..அவர் விக்ரமை ஏற்றுக் கொண்டாரா என்றுதானே கேட்கிறீர்கள்.திரையில் காண்க என முடிப்பதற்கு ஏதாவது விட்டு வைக்க வேண்டாமா ....?


சுஜாதா மறைந்த பிறகு கதைப் பஞ்சத்தால் ஷங்கர் கஷ்டப்படுகிறார் என்பதற்கு ஐ ஒன்றே உதாரணம். கதை சுபா. பாவம்.. அவரிடமிருந்து  இதுக்கு மேலே எதுவும் எதிர்பார்க்க முடியாது.

பாடல் காட்சிகள் அனைத்தும் விஷுவல் ட்ரீட்.  ' பூக்களே சற்று ஓய்வெடுங்கள்..' பாடலில் பி.சி. ஸ்ரீராமின் உழைப்பு பிரமிக்க வைக்கிறது. ஆஸ்கார் விருதுகள் வாங்கிய ஹாலிவுட் மேக்கப் ஆர்டிஸ்டுகளின் உழைப்பு மற்றொரு பிரும்மாண்டம். பாடல் வெளியீட்டின் போது ரியலாக மிரட்டிய அந்த தோற்றத்தை ஒரு மெலடியான பாட்டுக்கு வைத்து வெறுப்பேற்றி விட்டார்கள். ஒரேயொரு பாடலுக்கு மட்டும் வரும் அந்த மேக்கப்புக்கு எதற்கு இத்தனை பில்டப்..?.

வழக்கமாக தன் படங்களில் கிளைமாக்ஸுக்கு சற்று முன்பு செம குத்து பாடல் ஒன்று இருக்கும்படி பார்த்துக் கொள்வார் ஷங்கர். இதில் ஏனோ அது மிஸ்ஸிங்..

ஷங்கர்- விக்ரம் காம்பினேசனில் அந்நியனுக்குப் பிறகு சண்டைக்காட்சிகள் அதிரடி. சீனாவில் படமாக்கப்பட்ட அந்த பைட் உண்மையிலேயே திரில். அவர்களோடு எப்படி விக்ரமும் சைக்கிளில் பறக்கிறார் என்பது மட்டும் புலப்படவே இல்லை.

படத்தில் அசுர பலம் விக்ரம்தான். தமிழில் கமலைத்தவிர வேறு எவரும் உடல்வருத்தி நடிக்க மாட்டார்கள் என்று யாரும் இனி சொல்ல முடியாது. ஏன், கமலே இந்தளவுக்கு ரிஸ்க் எடுக்க  மாட்டார் என்பதுதான் உண்மை. படம் முடிந்து வெளிவரும்போது விக்ரம் மட்டுமே கண்ணில் நின்று நெஞ்சில் நிறைகிறார். சென்னைத் தமிழ் ஸ்லாங் லிங்கேசனாக, மாடலிங் ஸ்மார்ட் லீயாக, அகோர அரக்கனாக மூன்று வேடங்களிலும் நூற்றுக்கு நூறு வாங்குகிறார். அவரது உழைப்புக்கு ராயல் சல்யூட்..

எமி ஜாக்சனை செம அழகாகக்  காட்டியிருக்கிறார்கள்(ஏற்கனவே அழகுதானே..!). மாடலிங் சம்மந்தப்பட்ட படம் என்பதால் அதே துறையில் இருக்கும் எமியை தேர்ந்தெடுத்தது சரியான முடிவு. அம்மணிக்கு டூ பீஸ் காட்சிகள்  இருக்கிறது. லிப் லாக் சீன் கூட இருக்கிறது. பார்த்த நான்தான் மெர்சலாகிவிட்டேன்.

சந்தானத்தின் காமெடி உண்மையிலேயே ரசிக்க வைக்கிறது. கடைசியில் உருக்குலைந்து கிடக்கும் வில்லன்களிடம்  சென்று தனித்தனியாக பேட்டி எடுப்பது செம ரகளை. பவர் ஸ்டார் கூட சில காட்சிகளில் வந்து பன்ச் டயலாக் அடித்து பரவசப் படுத்துகிறார்.

அறுவடை நாள் படத்திற்குப் பிறகு நடிகர் திலகத்தின் மூத்த புதல்வனை இப்பொழுதுதான் திரையில் காண்கிறேன். கம்பன் வீட்டு கட்டுத்தறி கவிபாடுமென்பதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.. இவ்வளவு நாட்கள்  நடிப்புலகை விட்டு ஏன் ஒதுங்கி இருந்தார் ..?


முதல் பாதி ஏனோ ஜவ்வாக இழுக்கிறது. ஓரிரு நாட்களில் நீளம் குறைக்கப்படலாம். பாடல்களிலும் காட்சிகளிலும்  ஃபேர் அண்ட் லவ்லி , கில்லட் உள்ளிட்ட நிறைய அழகு சாதனப் பொருட்கள் வருவதால் விளம்பரப் படம் பார்ப்பது போன்று உணர்வு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

பொதுவாக ஷங்கர் படங்களில் சமகால சமூகப் பிரச்சனைகளுக்கு சாட்டையடி தீர்வு ஏதாவது இருக்குமே என்று தானே கேட்கிறீர்கள்?. இருக்கே..!. அழகு சாதனப் பொருட்களை உபயோகப்படுத்தும் பொழுது  நமக்கு வேண்டாதவர்கள் அதில் எதையாவது கலந்து வைத்து நம்மை அகோரமாக மாற்றி விடுவார்கள். ஆகையால் இறைவன் கொடுத்த இயற்கை அழகு மட்டுமே நமக்கு போதும். செயற்கையான கிரீம்கள் வேண்டாம்  ( இப்படி ஏதாவது நாமளா கண்டுபிடித்தால்தான் உண்டு).

யோசித்துப் பார்த்தால் , பாதிக்கப்பட்ட அனைவரும் ஒன்று சேர்ந்து  ஹீரோவைப் பழிவாங்கும் கதை தமிழில் நிறைய வந்திருக்கிறது. அபூர்வ சகோதரர்கள் கூட அதுபோன்ற ஒரு கதைதான். அதில் வில்லன்கள் ஒன்று சேர்ந்து கருவிலிருக்கும் குழந்தைக்கு விஷம் கொடுக்கிறார்கள். இதில் வைரஸை ஹீரோவின் உடலுக்குள் செலுத்துகிறார்கள். விசத்தன்மையால் குள்ளமான அப்பு அதற்குக் காரணமான ஒவ்வொருவரையும் தனித்தனியாகப் பழிவாங்குகிறார். இதில் வைரஸால் பாதிக்கப்பட்ட விக்ரம் அதற்குக் காரணமானவர்களை பழிதீர்க்கிறார். அதில் கமல் குள்ள அப்புவாக நடிக்க கால்களை பின்பக்கமாகக் கட்டிக்கொண்டு கஷ்டப்பட்டு நடித்தது அப்போது பலரால் வெகுவாகப் பாராட்டப்பட்டது. இதில் விக்ரம் உடல் இளைத்து வித்தியாசமான தோற்றத்தில் வந்து அசத்துகிறார். ஆனால் கமலுடன் ஒப்பிடும்போது விக்ரமின் உழைப்பு நூறு மடங்கு உயர்ந்தது . கதையில் இன்னும் இயக்குனர் கவனம் செலுத்தியிருக்கலாம் என்றே தோன்றுகிறது.

சுபா, ஜெயமோகன் போன்ற சமகால ஆளுமைகளை இயக்குனர்கள் தேடிச்சென்றாலும் திரைமொழிக்கு அவர்கள் சரிபட்டு வரமாட்டார்கள் என்பதைத்தான் சமீபத்திய தோல்விகள் உணர்த்துகிறது. தமிழ் சினிமாவின் உச்ச இயக்குனர்களான ஷங்கரும் மணிரத்னமும் இவ்வளவு நாட்களாக சுஜாதாவின் முதுகில் ஏறி பயணம் செய்திருக்கிறார்கள் என்பதையும் அவர்களின் சமீபத்திய தடுமாற்றம் உணர்த்துகிறது. சுஜாதா விட்டுச்சென்ற வெற்றிடம் இன்னும் அப்படியேத்தான் இருக்கிறது.   

தமிழ் சினிமாவின் பொக்கிஷமான விக்ரம் என்ற மகா கலைஞனின் உழைப்புக்காக ஒருமுறை அல்ல.. இருமுறை பார்க்கலாம்.


                        ப்ளஸ்                   மைனஸ்

விக்ரம்..

வலுவில்லாத கதை...

விக்ரம்..

மெதுவாக நகரும் முதல் பாதி...

விக்ரம்..

ஓவர் பில்டப்..

ஒளிப்பதிவு.. பாடல்கள்..

விளம்பரப் படம் பார்ப்பது போன்ற உணர்வு ..

சண்டைக் காட்சிகள், மேக்கப்

திரைக்கதை...

எமி ஜாக்சன்