Friday, 6 February 2015

என்னை அறிந்தால்...அல்டிமேட்..! -(விமர்சனம்)

காக்க...காக்க.., வேட்டையாடு விளையாடு பாணியில் ஒரு நேர்மையான போலிஸ் அதிகாரியைச் சுற்றி நடக்கும் சம்பவங்களை மீண்டும் ஒருமுறை அதே ஆட்டுகல்லில் வைத்து அரைத்தெடுத்திருக்கிறார் கவுதம் மேனன்.

கிட்டத்தட்ட படம் பார்த்த அனைவரும் விமர்சகர்களாக மாறி கதையை வெவ்வேறு வடிவங்களில் சொல்லி விட்டார்கள். என் பங்குக்கு நானும் கதையை சொல்லி ஆரம்பிக்கிறேன்.

நடந்தது என்னான்னா ...
அன்புச்செல்வன் ஐபிஎஸ்..., ராகவன் ஐபிஎஸ்..., வரிசையில் சத்யதேவ் ஐபிஎஸ்-ஸாக வரும் 'தல' ஒரு நேர்மையான, கண்ணியமான போலிஸ் அதிகாரி. இளம் வயதில் ரவுடி ஒருவனால் அவரது தந்தை சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மனதில் ஆழமாய்ப் பதிய, அதுபோன்ற கேங்ஸ்டர் கும்பல்களை அழித்தே தீருவேன் என்கிற சபதம் கொண்டு போலிஸ் ஆபிசராகிறார். சட்டத்துக்கு புறம்பாக கடத்தல் தொழில் செய்யும் அருண் விஜய்யோடு நட்பு பாராட்டி அந்தக் கும்பலில் நம்பிக்கையுள்ளவனாய் மாறி,சமயம் பார்த்து அக்கும்பலை தீர்த்து கட்டுகிறார். கோட்டுக்கு அந்தப் பக்கம் கெட்டவனாக  இருக்கும் அருண் விஜய்யை கோட்டுக்கு இந்தப் பக்கம் ஜம்ப் பண்ணி வர சொல்கிறார்.

இதற்கிடையில், கணவனைப் பிரிந்து குழந்தையோடு தனியாக வாழும் நாட்டியத் தாரகை திரிஷாவுடன் தலை-க்கு காதல் மலருகிறது. காதல், கல்யாணம் வரை செல்ல, திருமணத்திற்கு முதல்நாள் திரிஷாவும் அவளது பெற்றோரும் கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள். தன் காதலி இறந்த சோகத்தில் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு அக்குழந்தையுடன் பொழுதைக் கழிக்கிறார்.

தன் நண்பர் ஒருவரின் மகள், சிலரால் கடத்தப்பட, மீண்டும் தல-யின் காக்கிச் சட்டைக்கு வேலை வருகிறது. அக்கடத்தலின் பின்னணியில், மனிதர்களைக் கடத்தி அவர்களின் உடல் உள் உறுப்புகளை (Human organ transplantation) விற்பனை செய்யும் ஒரு மிகப்பெரிய நெட்வொர்க் இருப்பது தலைக்கு தெரிய வருகிறது. அக்கடத்தல் கும்பலின் தலைவன் 'கோட்டுக்கு அந்தப்பக்கம்' இருக்கும் அருண் விஜய்.

நகரின் பெரும்புள்ளியான சுமனுக்கு இதயம் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்காக அதே ரத்த வகையைச் சேர்ந்த அனுஷ்காவைக் கடத்தி அவரது இதயத்தைக் களவாடும் அவர்களின் அடுத்தத் திட்டம் தலைக்கு தெரிய வருகிறது. அதை முறியடிக்க அனுஷ்காவுடன் நட்போடு பழகி தன் கஸ்டடிக்குள் கொண்டு வருகிறார் தல. ஏற்கனவே பழைய பகை வேறு இருக்க, அஜித்தும் அருண் விஜய்யும் மோதிக்கொள்கிறார்கள். அடுத்தக் கட்டமாக அவரது வளர்ப்பு மகளை கடத்தி அதன் மூலம் அனுஷ்காவை அடைய திட்டம் போடுகிறார் அருண் விஜய். இறுதியில் அனுஷ்காவும் அந்தக் குழந்தையும் காப்பாற்றப் பட்டார்களா என்பதை விறுவிறுப்பான திரைக்கதை மூலம் அசத்தலாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் கவுதம் மேனன்.


கவுதம் மேனன்... 
'தல' யின் அலட்டலில்லாத அறிமுகக் காட்சியே சொல்லிவிடுகிறது, இது கவுதம் மேனனின் படம் என்று.  இயக்குனர் இதில் புதிதாக எதையும் சொல்லிவிடவில்லை. அவரது முந்தைய போலிஸ் ஸ்டோரிகளான  காக்க காக்க , வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம் படங்களிலிருந்து ஒவ்வொரு காட்சியாக உருவி புதிய மொந்தையில் பழைய கள்ளை ஊற்றியிருக்கிறார்.முன்பாதியில் ஒவ்வொரு சம்பவமும் கோர்வையாக இல்லாததால் பெரிய தாக்கத்தைக் கொடுக்க வேண்டிய காட்சிகள் எல்லாம் வெறுமனே வந்து போவது போல் உள்ளது. ஆனால் இரண்டாம் பாதியில் திரைக்கதை ஜெட் வேகம் எடுக்கிறது. பரபரப்பாக செல்லும் கடைசி ஒரு மணிநேர துரத்தல்கள் முன்பாதி தொய்வை தூக்கி நிறுத்துகிறது. கவுதம் மேனனின் ஆக்சன் படங்களில் மென்மையான காதலையும் சரிவரக் கலந்து சொல்வார். இதில் அஜித்துக்கும் திரிஷாவுக்கும் இடையேயுள்ள காதல் வழக்கம்போல அழகான கவிதை..! தனது முந்தைய படங்களின் தோல்வியால் ஏற்பட்ட அவப்பெயரை தல உதவியுடன் இதில் போக்கிவிடுவார் இயக்குனர்.

அஜித்... 
படத்தின் மாஸ் ஓபனிங் 'தல' யால் தான் சாத்தியமானது என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. படத்திற்குப் படம் தலயின் அழகும் நடிப்பும் மெருகேறிக்கொண்டே போகிறது. அது என்னவோ தெரிவில்லை. திரிஷா, அனுஷ்கா என்ற இரண்டு ஜில்பான்சிகள் திரையில் தோன்றினாலும் தல வரும் சீன்களில் அவரைத் தான் கண்கள் அனிச்சையாக ரசிக்கிறது. இவ்வளவுக்கும் எவ்வித மேக்கப்பும் இல்லாமல் சால்ட் & பெப்பர் ஸ்டைலில் எளிமையாக இருக்கிறார். அளவான நடிப்பு..அலட்டலில்லாத பேச்சு....சண்டைகாட்சிகளில் மட்டும் அனல் பறக்கிறது. என்ன.., நடனத்திற்கும் மட்டும் கொஞ்சம் சிரமப்படுகிறார். முந்தைய மூன்று படங்களிலும் மாஸ் ஹீரோவாக கர்ஜித்த அல்டிமேட்டை இந்தப் படத்தில் கொஞ்சம் அடக்கி வாசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர். அவரது ரசிகர்களுக்கு கொஞ்சம் வெரைட்டியான அனுபவம் கிடைக்கட்டுமே..!


அருண்விஜய்.
தான் ஹீரோவாக நடிக்கும் படம் ஜெயிக்கவேண்டும் என்று தவமிருப்பதைவிட, ஜெயிக்கும் படத்தில் தான் இருந்தால்தான் திரையுலகம் தன்னை கவனிக்கும் என்கிற சூட்சமம் மிகத் தாமதமாகப் புரிந்திருக்கிறது அருண்விஜய்க்கு.கவுதம்மேனனின் முந்தைய படங்களின் கொடூர வில்லன்கள் போலில்லாமல் ஹீரோவுக்கு இணையான ரோல். அஜீத்தோடு போனில் நடக்கும் வாக்குவாதத்தில் தலையையே ஓவர் டேக் செய்யும் அந்தக் காட்சிக்கு திரையரங்கில் செம அப்ளாஸ். காசி தியேட்டரில் முதல் காட்சியில் ரசிகர்களின் உற்சாக ஆரவாரத்தைக் கண்டு கண்கலங்கிய காணொளி பார்க்க நேர்ந்தது. இப்படத்திற்கு உழைத்த உழைப்பு அப்போது வியர்வையாக வராமல் தற்போது கண்ணீராக பெருக்கெடுக்கிறது போல. அடுத்த இன்னிங்க்ஸ்க்கு தயாராகி விட்டார். வாழ்த்துக்கள்...!

திரிஷா - அனுஷ்கா..
நாயகிகள் இருவருக்கும் தொட்டுக்க ஊறுகாய் போல் இல்லாமல் சமமான, நடிக்க வாய்ப்புள்ள பாத்திரம். இருவரது நடிப்பிலும் நல்ல முதிர்ச்சி(முகத்திலும் தான்). சிங்கம் படத்தைத் தவிர்த்து நடித்த நேரடித் தமிழ் படங்கள் எதுவும் கைக்கொடுக்காத நிலையில் அனுஷ்காவுக்கு இப்படம் கொஞ்சம் ஆறுதல். நல்லவேளை சால்ட்-பெப்பரில் தலையோடு இருவருக்கும் டூயட் இல்லை. இருந்திருந்தால் திருஷ்டியாக இருந்திருக்கும்.

"உனக்கென்ன வேணும் சொல்லு...", "இதயத்தை ஏதோ..." பாடல்களில் ஹாரிஸ் ஜெயராஜ் மீண்டும் மிளிர்கிறார். பின்னணி இசையும் பாடல்களும் மீண்டும் தனது பழைய ஃபார்முக்கு அவர் வந்திருப்பதை உணர்த்துகிறது. படத்தில் குறிப்பிட்டு சொல்லவேண்டிய இன்னொரு விஷயம் டான் மெக்கார்த்தரின் ஒளிப்பதிவு. ஒவ்வொரு ஃபிரேமும் மிகத்துல்லியமாக அழகாக இருக்கிறது.

படத்தின் முக்கியமான குறையாகத் தெரிவது முன்பாதி திரைக்கதை. ஒன்றோடொன்று தொடர்பில்லாத சம்பவங்கள் சுவாரஸ்யத்தை தரவில்லை. அனுஷ்காவை காரணமாகத்தான் அஜித் பின்தொடர்கிறார் என்று தெரியவருகிறபோது அவரைப்போல நமக்கும் பதட்டம் ஏற்படவில்லை. அதேப்போல அஜித்துக்கும் திரிஷா வுக்குமான காதல் காட்சிகள் ஆழமாகக் காட்டப்பட்டிருந்தாலும் அஜித் எதற்காக திரிஷாவை விரும்புகிறார் என்பதை அழுத்தமாக சொல்லவில்லை. வேட்டையாடு விளையாடு படத்தில் ஏற்கனவே திருமணமாகி மனைவியை இழந்த கமல், ஒரு குழந்தைக்கு தாயான ஜோதிகாவை திருமணம் செய்யவிரும்புவதில் ஒரு லாஜிக் இருக்கிறது. இதில் நேர்மையான, திருமணம் ஆகாத போலிஸ் அதிகாரி எதற்காக திரிஷாவுக்கு வாழ்வு கொடுக்க வேண்டும்..?. தல ஒன்னும் 'ஆண்டி'களுக்கு வாழ்வளிக்கும் அளவுக்கு தரம் தாழ்ந்து விடவில்லையே .... என்று பக்கத்து சீட்டுல ரசிகர்கள் பேசிக்கொண்டார்கள்..  :-)!.



பதினைந்து நிமிடக் காட்சிகளை இயக்குனரே கத்தரிப் போட்டுள்ளதாக செய்து வந்தது. அனேகமாக அது விவேக் போர்ஷனாக இருக்கலாம். அவர் வரும் ஒன்றிரண்டு காட்சிகளில் தியேட்டரில் சிரிப்பலை எழுந்தது. இன்னும் சொல்லபோனால் முன்பாதியில் சோர்ந்து போய் உட்கார்ந்திருக்கும் ரசிகர்களை அவர் வரும் சில காட்சிகள் உற்சாகப் படுத்தின. விவேக்கை ஏன் இவ்வளவு சீரியஸாக காண்பித்தார் இயக்குனர் என்பது புரியவில்லை. முன்பாதி தொய்வை அவரை வைத்து சமாளித்திருக்கலாம். தல திரிஷாவிடம் காதலை சொல்லும் அந்த காட்சிவரை சவசவ என்றுதான் படம் நகர்ந்தது. அதன்பிறகுதான் படைப்பிற்குள் ரசிகனை இழுத்தார் இயக்குனர்.

எப்படிப்பார்த்தாலும் தலைக்கு இது இன்னொரு மாஸ் ஹிட். ஒரு படம் ஹிட் கொடுத்தால் அடுத்த நான்கு படங்கள் அவருக்கு சொதப்பும். ஆனால் தொடர்ந்து நான்கு படங்கள் ஹிட் என்பதே ஆச்சர்யம்தான்.

                        ப்ளஸ்                   மைனஸ்
அஜித்தின் Screen presence... மெதுவாக நகரும் முதல் பாதி.... 
அருண் விஜய்... விவேக்கை சரியாகப் பயன்படுத்தாதது.
விறுவிறு இரண்டாம்பாதி. முந்தைய படங்களிலிருந்து சில காட்சிகளை உருவியது.
மெக்கார்த்தரின் ஒளிப்பதிவு... சலித்துப் போன போலிஸ் ஸ்டோரி.
ஹாரிஸின் பின்னணி இசை... 
கவுதம்மேனனின் இயக்கம் (especially in the second half..)
திரிஷா,அனுஷ்காவை அழகாகக்
காட்டியது.



14 comments:

  1. கடைசி வரி ஆசம் ஆசம் :-)

    ReplyDelete
    Replies
    1. ஹி..ஹி.. வழியில்லை. அப்படித்தான் முடித்தாகவேண்டும்..:-)

      Delete
  2. அருமை
    நன்றி நண்பரே
    தம +1

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சார்

      Delete
  3. சிறப்பான விமர்சனம்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ‘தளிர்’ சுரேஷ்

      Delete
  4. ஜெட் வேகத்தை பார்க்க வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக மிக்க நன்றி DD

      Delete
  5. படம் கலக்கல்...
    இடைவேளைக்கு முன்னர் கொஞ்சம் தொய்வு...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி பரிவை சே.குமார்

      Delete
  6. தலைக்கு இது இன்னொரு மாஸ் ஹிட். ஒரு படம் ஹிட் கொடுத்தால் அடுத்த நான்கு படங்கள் அவருக்கு சொதப்பும். ஆனால் தொடர்ந்து நான்கு படங்கள் ஹிட் என்பதே ஆச்சர்யம்தான்.

    இடைவேளைக்கு பின் வரும் ஆக்சன் தான் படத்தையே தூக்கி நிறுத்தியிருக்கிறது. அஜித் தோற்றம் ஒவ்வொரு காட்சியிலும் அசத்தல்

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் சார். மிக்க நன்றி

      Delete
  7. Both movie and your review are appreciable sir.

    ReplyDelete