Thursday 19 January 2012

கங்காரு தேசத்தில் நொண்டியடிக்கும் நம் சண்டிக்குதிரைகள்.....




" பால் இந்தப்பக்கம்மா தான் வந்திச்சி...இப்ப அது எங்க போச்சுன்னு தெரியிலயே...."

"இங்க சீனியரெல்லாம் சிங்கிலா  அடிக்கும் போது  நான் மட்டும் செஞ்சுரி அடிக்கனுமா?"

"ஹி.. ஹி...என்ன  ரொம்ப   புகழாதிங்க ...நான் நூறாவது சதம் அடிக்க இன்னும் நாப்பது மேட்ச் இருக்கு..........."


"நானும் எனக்கு தெரிஞ்ச எல்லா வழியிலேயும் ட்ரை பண்ணி பாத்துட்டேன் ....இவனுக மட்டும் எப்படி அசால்டா  செஞ்சுரி   அடிக்கிறானுவனே   தெரியிலயே ...."

 "எல்லாரும் நல்லா பாத்துக்குங்க ......எங்களுக்கு தொப்பையும் இல்ல தொந்தியும் இல்ல .. "

"சனியம் புடிச்சவனே ....நானும் அப்பத்திலேருந்து பாத்துகிட்டே இருக்கேன் .... பக்கத்திலே நின்னுகிட்டு ஒரு ரன் கூட எடுக்க விடாம  பண்றான்....."

            "  ஓ....இதுக்கு பேருதான் கிளீன் போல்டா ?...சொல்லவே இல்ல....."


          "கோட்டத்தாண்டி நீயும் வரக்கூடாது....நானும் வரமாட்டேன்...பேச்சி பேச்சாத்தான் இருக்கணும்....."

"ரெண்டு பிளேட் பிரியாணியும் ,ஒரு குவாட்டரும் ஆர்டர் பண்ணி வைடா மாப்ளே . ஒன் அவர்ல மேட்டர் முடிச்சிட்டு வந்திடுறேன்..... "


"நம்மள அடிச்சி இவனுக பெரிய ஆளாகுனும்னு  நெனைக்கிராய்ங்க... அடிச்சிட்டு போவட்டும்.. அதுக்காக எவ்வளவு நேரந்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது?.....  "   

    "அநியாயமா இருக்கு...... நம்மள மட்டும் ஒரு செஞ்சுரி  கூட அடிக்கவிட மாட்டேன்கிறாங்க....அவனுக இத்தன செஞ்சுரி அடிச்சாங்களே  ..நாம ஒரு வார்த்தை கேட்டிருப்போமா..இல்ல.. அடிக்க விடாமத்தான் தடுத்திருப்போமா.. ஒரு டீசன்சி வேணாம்? சின்னப்புள்ளத்தனமாவுல இருக்கு....."


                              "ஏன் மாப்ளே 'அதுக்கு' நாம சரிபட்டு வருவோமா?..."

"இதுக்கெல்லாம் கவலை படுற ஆள் நான் கிடையாது....பத்து மேட்சில டக் அவுட்டாகி பதினோராவது மேட்சில வேர்ல்டு ரெகார்ட் பண்ணி சரி கட்டிடுவேன்.."

"நைட்டு சரக்கு அடிச்சிட்டு சாய்ஞ்சு கெடந்த என்ன இப்படி அர தூக்கத்தில எழுப்பி பேட்டிங் பண்ண சொல்றிங்களே......." 

"போயிட்டு பொறுமையா நாலு மணி நேரங்கழிச்சு வாங்கயா ...அவ்வளவு சீக்கிரம் யாரையும் நாங்க அவுட்டாக்கிட  மாட்டோம்......"

"ச்சே....நாங்களும் எவ்வளவு நேரம்தான் பேட்டிங் பன்றது......எப்படியாவது அவுட்டாகி ரெஸ்ட் ரூம்ல போயி ரெஸ்ட் எடுக்கலாம்னு பாத்தா ...கடைசியில இங்கேயே ரெஸ்ட் எடுக்கும்படி   ஆயிடிச்சே ..... "


"வா மாப்ளே ...நீயும் வந்து படுத்துக்க....நாமளும் அவங்கள அவுட்டாக்குற மாதிரி தெரியில....அவனுவளும் அவுட்டாவுற  மாதிரியும்  தெரியில....."


"அந்த ஸ்டெம்ப  பாத்து  பால போடுங்கடான்னா.....  ...............  ............ ........"


"நாங்க மொத்தமா அடிச்சத இப்படி ஒத்த ஆள விட்டு அடிக்க வக்கிறீங்களே... உங்களுக்கெல்லாம் வெக்கமா இல்ல?.தைரியம் இருந்தா மொத்தமா வந்து அடிச்சி காமிங்கடா...."


"நீ எப்படி வேணும்னாலும் தள்ளி நின்னு..அதப்பத்தி எனக்கு கவலை இல்ல .. ஆனா நான் போடுற பால் ஸ்டம்புக்கு மட்டும் வராது....."


"அடிக்கிற  மாதிரியே எல்லா பாலையும் போடுறாங்களே.....நான் எப்படித்தான் அவுட்டாவுறது  ?....."


" இப்படி சொல்லி வச்சி அவுட்டாக்குராங்களே.... இப்பவே இப்படி கண்ணக்கட்டுதே....."


                                                      (வொய் திஸ் கொலைவெறி?)


"ஏன் மாப்ளே  ஷேவ் பண்ணி ஸ்மார்டா இருக்க கூடாதா?..நைட் 'பப்'க்கெல்லாம் வேற போகணும்....."


"அஞ்சு நாளு விளையாட வேண்டிய மேட்ச இப்படி மூணு நாளிலே முடிச்சி வைக்கிரமே...நமக்கு ஏதாவது ஸ்பெஷல் கப் தருவாங்களா ?.."


"இந்த பத்திரிகைகாரங்க எதைக்கேட்டாலும் வாயே திறக்கக்கூடாது...இன்னும் கொஞ்ச நாளைக்கு இப்படித்தான்....." 




                           (இவர் காட்டுவது நமக்கா?... அல்லது அவர்களுக்கா?..)

Monday 16 January 2012

வீரம் வெளஞ்ச மண்ணு....


              தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டாலும் தமிழர்களின்  வீரத்தை உலகுக்கே வெளிச்சம் போட்டுக் காட்டும் ஜல்லிக்கட்டு நம் தென் மாவட்டங்களில் தான் வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது...

        ஜல்லிக்கட்டு என்ற விளையாட்டின் பின்னால் தமிழகத்தின் தென்மாவட்ட கிராமப்புறக் கலாச்சாரத்தின் வேர்கள் மிக ஆழமாக ஊடுருவியிருக்கிறது  என்பதை யாரும் மறுக்கமுடியாது....

 
           

       ஜல்லிக்கட்டுக்கு காளைகளை தயார் செய்வதை ஒரு கலையாகவே நினைத்து செய்கின்றனர்.இதற்கு பச்சரிசி ஊறவைத்து அரைத்து கொடுப்பது , குளிப்பாட்டுவது,போட்டிக்கு தயார் செய்வது என்று ஆண்களுக்கு இணையாக வீட்டுப் பெண்களும் ஈடுபடுவது ஆச்சர்யமான விஷயம்.இதன் கொம்புகளும் மிக கூர்மையாக தீட்டப்பட்டு ராணுவத்திற்கு தயார் செய்வது  போல பார்த்துப் பார்த்து வளர்க்கிறார்கள்.

      ஜல்லிக்கட்டில் இரண்டு வகை உள்ளது.ஒன்று வாடிவாசல் வழியாக ஒன்றன்பின் ஒன்றாக காளைகள் திறந்து விடப்படும்.வெளியில் காத்திருக்கும் வீரர்கள் இதை பாய்ந்து  சென்று பிடிப்பார்கள்.மற்றது வெளிவிரட்டு எனப்படும் திறந்தவெளியில் மாடுகள் அவிழ்த்துவிடப்படும். இதில் மாடு எந்தப் பக்கம் இருந்து வரும் யாரைத் தூக்கும் என்று தெரியாது. 

       தென்தமிழகத்தில்  அலங்காநல்லூர், கொடிக்குளம், வேந்தன்பட்டி, அவனியாபுரம்,சிறாவயல், பாலமேடு, கண்டுபட்டி,  மேட்டுபட்டி என்று மதுரை சிவகங்கை புதுக்கோட்டை பகுதிகளில் இந்த ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.


          
         

        காளையை அடக்குவது ஒன்றும் சாதாரமான விஷயம் அல்ல.நாம.... துள்ளி வரும் கன்னுக்குட்டியைப் பார்த்தே பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடுவோம்.செம்மண் புழுதியில் சீறிவரும் காளைகளை நம் மண்ணின் சிங்கக் குட்டிகள்  எப்படி அடக்குகிறார்கள் என்று பாருங்கள்.இதில் ஜெயித்தால் இவர்களுக்கு கிடைப்பதென்னவோ சோப்பு டப்பாவும்,பிளாஸ்டிக் குடமும் தான். ஆனால் இவர்களுக்கு பரிசு ஒரு பொருட்டு அல்ல.நாலு காளைய அடக்கினோம்  என்ற பெருமையோடு வீட்டுக்கு போகணும்னு விரும்புவாங்க. கை,கால்,மார்பு,முதுகு என்று தழும்பு இல்லாத இளைஞர்களை பார்ப்பதே அபூர்வம். புதுப்படம் ரிலீஸ் ஆகும்போது  தியேட்டர் வாசலில் டிக்கெட் வாங்க முண்டியடித்து சண்டை போடும் இளைஞர் கூட்டத்தை பார்த்திருக்கலாம். இங்கே வாடிவாசல் வெளியே...திமிறி வரும் காளையை  அடக்க திரண்டிருக்கும்   நம் மண்ணின் மைந்தர்களைப் பாருங்கள்.......



  

இவர்களின்  செங்குருதி இம்மண்ணில்  சிந்திதான் செம்மண் ஆனதோ?



-------------------------------((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))))------------------


   

Saturday 14 January 2012

சச்சின் சதம் அடிக்க பத்து யோசனைகள்...

"வருசத்துக்கு ஆறேழு செஞ்சுரி அடிச்சிகிட்டு இருந்தேன் ..இந்த சனியன் புடிச்ச அ.'.ப்ரிடி என்னைக்கு வாய வச்சானோ தெரியில ...ஒரு செஞ்சுரி அடிக்கிறதுக்குள்ள உசிரே  போவுதே....." அனேகமா சச்சினோட லேட்டஸ்ட் புலம்பல் இதுவாகத்தான் இருக்கும்.சச்சினுக்கு இந்தியாவில் மட்டுமல்ல. உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்....சச்சினின் சதத்தில் சதம்... உலகமே எதிர்பாக்குது...அதனாலையோ என்னவோ சச்சினுக்கு டென்சன் எகிறுது ..உலகின் நெ. 1 பேட்ஸ்மேன்.... கிரிகெட்டின் அடையாளம்...  யாருமே கிட்ட வரமுடியாத சாதனைகள்...ஆனா என்ன....90 ரன்ன தாண்டினாத்தான் கொஞ்சம் பேஸ்மென்ட் வீக்..


அவரோட டென்சன குறைக்கிறதுக்கும்,சதம் அடிக்கிறதுக்கும் என்னால் முடிஞ்ச யோசனையை I.C.C க்கு ஒரு கோரிக்கையா வைக்கலாம்னு  இருக்கேன்,கண்டிப்பா சச்சினுக்காக இத பரிசீலனை செய்வாங்கன்னு நெனைக்கிறேன். 

1 .ஒவ்வொரு சீரிஸ் ஆரம்பிக்கும் போது,அபசகுனமாக,"இந்த தொடரில் சச்சின் சதமடிப்பார்" என்று நாக்குல சனியோட திருவாய் மலரும் தோனியை இனிமேல்"இந்த தொடரில் சச்சின் சதம் அடிக்க வாய்ப்பே இல்ல"ன்னு மாத்தி சொல்ல வைக்கணும்.

2 .  உடனடியாக கென்யா,பெர்முடா,U.A.E போன்ற நாடுகளுடன் ஐந்து டெஸ்ட் மற்றும் பத்து ஒரு நாள் போட்டி நடத்த ஏற்பாடு செய்யவேண்டும். அதுவும் இந்திய மண்ணில்.

3 .சச்சின் விளையாடும் போது அப்பப்போ கேமரா,லைட்டிங்,ரெண்டு மூணு மாடல் அம்மணிங்க  எல்லாம் சச்சின் கண்ணுக்கு தெரியும்படி வந்து போக வேண்டும். இடை இடையே 'பஸ் டயர' குறுக்கால நெடுக்காலையும் ஒருவர் ஓட்டி செல்ல வேண்டும்.கண்டிப்பாக அடிக்கடி 'கட்' சொல்லவேண்டும். இதெல்லாம் விளம்பர படம் எடுக்கிற ஒரு செட்டப் உருவாக்கத்தான்.( பின்ன ... அதுலதானே எல்லோரும்  சிக்ஸர் அடிக்கிறாங்கபா ...)

4 .சச்சின் பேட்டிங் செய்யும் போது 'பீல்டிங் செட்' பண்ணும் உரிமை சச்சினுக்குதான் கொடுக்கவேண்டும்....

5 .சச்சின் அடிக்கிற பாலை டைவ் அடிச்சோ ,ஓடிவந்தோ பிடிக்கக் கூடாது.கைக்கு தானாக வந்தால் மட்டுமே பிடிக்க வேண்டும்.அப்படியும் மீறி புடிச்சா...புடிச்சவுங்க அவுட்.(இது எப்படி இருக்கு...?) 

6 .சச்சின் 80 ரன்னை தொட்ட  பிறகு அடுத்தடுத்து   யார் 'பவலிங்' செய்யனும்னு சச்சின்தான் முடிவு செய்வார்...

7 .ரெண்டு காலிலேயும் 'லெக் கார்ட்ஸ்' க்கு பதில் 'பேட்ட' கட்டிக்க அனுமதிக்க வேண்டும். .'.புட் பால்ல எப்படி நெஞ்சு,தலையால  பால அடிக்கலாமோ அதே மாதிரி இங்க காலாலையும்,தலையாலையும் 'பேட்டிங்'பண்ண அனுமதிக்க வேண்டும்... 

 8 .சச்சின் 'பேட்டிங்' பண்ணுவாரே தவிர 'ரன்' எடுக்க ஓட மாட்டார். அவருக்கு கொறஞ்சது மூணு  பேராவது 'பை ரன்'னரா  களத்தில் எப்போதும்  இருக்கவேண்டும். இவர்கள் 'ரிலே ரேஸ்' முறையில் ஓடி ரன் எடுப்பார்கள்.

9 . 'டெஸ்ட் போட்டி' யில  நாலு இன்னிங்க்ஸ், 'ஓன் டே' யில ரெண்டு இன்னிங்க்ஸ் விளையாடசச்சினுக்கு மட்டும்  அனுமதி கொடுக்கணும்.... 

இப்படியும் முடியலயா.....கடைசியாக..

10 .சச்சினை 'அவுட்' செய்பவருக்கு கிரிகெட் விளையாட மூன்று   வருஷம்  தடை விதிக்கப்படும் னு அறிவிக்க வேண்டும்.

(ஹி ஹி..இதெல்லாம் சச்சின் நூறாவது சதம் அடிக்க மட்டும்தான்.  அடிச்சிட்டாரு......அப்பறம் எந்த கொம்பனாலையும்   சச்சின அவுட்டாக்க முடியாது...)
-------------------------------------------------------------------------------------------------------------------------

டிஸ்கி: சச்சின் கிரிக்கெட்டின் கடவுள் ....சதத்தில் சதமடிப்பார் என்று ஆவலோடு எதிர்பார்க்கும் கோடானுகோடி ரசிகர்களுள் நானும் ஒருவன்...சீக்கிரமே எனக்கு 'பெரிய பல்ப்' கிடைக்க சச்சிதானந்த ஸ்வாமிகள் அருள் புரிவாராக....

Friday 13 January 2012

நண்பன்னா எப்படி இருக்கணும்?




       நண்பன்னா எப்படி இருக்கணும்?

     "தளபதில வர்ற மம்முட்டி போல? ....."

     "ஏற்கனவே ஏகப்பட்ட தண்ணி  பிரச்சனை .... "

     " நட்பு புகழ் சரத்பாபு போல?......"    

      "அவரு ரஜினி கமலுக்கு மட்டும்தான்.... "
  
     " மன்னார்குடி ச........?"

     "ஏன் ஊரு பக்கம் வர்ற ஐடியா எதுவும் இல்லையா? "

     "இராமயன குகன். .....மகாபாரத கர்ணன் போல? ......."

     "இது மாதிரி எல்லாம்  பேச உனக்கு யாரு ராசா சொல்லிக்குடுத்த ? "
      .
      .
      .
    " பின்ன எப்படித்தான் இருக்கணும்?......"

     " இப்படி இருக்கணும்........................"




   இந்த உலகத்தில் மாறாதது மாற்றம் மட்டும் அல்ல.. நண்பர்களும்தான்...

-----------------------------------------------------((((((((((((((((((((((())))))))))))))))))---------------------

Thursday 12 January 2012

தைத்திருநாளை புத்தாண்டாக கொண்டாடுவோமே....




     என் இனிய தமிழ் நெஞ்சங்களுக்கு தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல்  நல்வாழ்த்துக்கள்.......


ல்தோன்றி,மண்தோன்றா..மணல் தோன்றா... மரம்தோன்றானு தமிழைப்பற்றி தற்பெருமை பேசுறதுக்காக இத எழுதல. வள்ளுவன்,இளங்கோ,கம்பன்,பாரதி கண்ட தமிழ், பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூற்றாண்டு வாழும்.
 
எல்லோரும் ஆங்கில புத்தாண்டை  வெகு விமரிசையாக கொண்டாடியிருப்பீங்க. வான வேடிக்கைகள் பட்டய கிளப்பியிருக்கும். முதல் நாளே சரக்கு-சைடுடிஷ் எல்லாம் தயார் பண்ணி தெருமுனை,ரோட்டோரம், மொட்டமாடி என  திடீர் மினிபார்கள் தோன்றி கவுண்டவுனுக்காக காத்திருக்கும்.  தமிழ்நாட்டில் அன்னிக்கு மட்டும் 142 கோடி ரூபாய்க்கு டாஸ்மாக் சரக்கு விற்பனை ஆகியிருக்காமே...!!!! 

தியேட்டர்களில் ஒரே டிக்கட்டில் மூன்று படங்கள் போடப்பட்டு,கோயில்கள் நள்ளிரவில் திறக்கப்பட்டு 'இளமை இதோ இதோ' பாட்டும் 'சொர்க்கம் மதுவிலே' பாட்டும் அன்னிக்கு மட்டும் உயிர்பெற்றிருக்கும்.

மணி 12.00 அடித்தவுடன் எல்லோருடைய முகத்திலும் கோடி ரூபாய் லாட்டரி விழுந்த மாதிரி ரோட்டுல போற வர்றவங்களுக்கெல்லாம் கை கொடுத்து, 'ஹாப்பி நியூ இயர்' வாழ்த்து சொல்லியிருப்போம். அடுத்த நாள் காலை காத்து வாங்குன கோயிலெல்லாம் கூட்டம் அலைமோதியிருக்கும்..  ஒரு நிமி தரிசனத்துக்கு நாலு மணிநேரம் கால்கடுக்க நின்றிருப்போம். 

சரி கொண்டாட வேண்டியதுதான் .. உலகமே உற்சாகத்துல ஊஞ்சல் கட்டி ஆடுறப்ப, நாம மட்டும் என்ன கைகட்டி வேடிக்கையா பார்க்க முடியும்?


டி.வியில காண்பித்தார்கள், ஒவ்வொரு நாடும் எப்படி புத்தாண்டு கொண்டாடுனாங்க என்று. அவங்களுக்கு உள்ள ஒரே புத்தாண்டு;பிரமாண்டமாத்தான்  கொண்டாடுவாங்க. கிரிஸ்த்மஸ், நியூ இயர் என்று  வாரம் முழுக்க கொண்டாடியிருப்பாங்க. சீனாவிலும் கொண்டாடினத காமிச்சாங்க.  ஆனா இன்னும் இரண்டு வாரத்தில் வரப்போற சீனப்புத்தாண்ட இத விட சிறப்பா கொண்டாட இப்பவே தயாராயிட்டங்க. இவங்களும் ஐந்து நாட்கள் கொண்டாடுவாங்க.

    இங்க.. சிங்கப்பூர் சீனர்களில்  பௌத்தர்களும்  கிருஸ்துவர்களும் சமமா இருக்கிறாங்க.ஆனா சீனப் புத்தாண்டுன்னு வந்துட்டா இவங்களுக்கு 'மதம்' ஒரு விஷயமா  தெரியிறதில்ல.... தன் மொழிக்காகவும் நாட்டுக்காகவும்  ஒற்றுமையா கொண்டாடுவதைப் பார்க்கும் போது  நமக்கே கொஞ்சம்  நெருடலாகத்தான் இருக்கும். உலக சீனர்கள் எல்லாம் இந்த பண்டிகையில் தான்  ஓன்று சேர்கிறார்கள். 

      சீனர்களைப் பற்றி   பெருமையாப் பேசுறேன்னு    நெனைக்காதிங்க. அவர்களோட மொழிப்பற்ற நெனச்சா நமக்கே ஆச்சர்யமா இருக்கும். உலகிலே அதிகமான மக்கள் பேசும் மொழி சீன மொழிதான். நாம் பேசும் 'டமிங்கிளத்த' யார் வேண்டுமானாலும் புரிந்து கொள்ள முடியும். எங்க ஆபிஸ்ல பாஸும் மேனேஜரும் ஆபிஸ் விசமா பேசுனாகூட சீன மொழியில்தான் பேசிக்குவாங்க. இதில் என்ன ஆச்சர்யம் இருக்குனு நெனைக்கிறீங்களா?ஒருமணி நேரம் பேசினாலும் ஒரு ஆங்கில வார்த்தை  கூட இருக்காது. அவங்க என்ன பேசிக்கிறாங்கன்னு நம்மளால யூகிக்கவே முடியாது. இது அந்த மொழிக்கு அவர்கள் கொடுக்கும் மரியாதை!. 


      இங்கு  தமிழர்கள்  அதிகமா இருந்தாலும், தமிழ் மொழியும் ஒரு ஆட்சி  மொழியாக   இருந்தாலும்  நம்ம   பண்டிகைன்னா...  இங்க தீபாவளி தான். ஒவ்வொரு வருடமும் சீனப் புத்தாண்டுக்கு  நாங்கள் அவர்களுக்கு கோங் சி .'.பா சை ( Gong Xi Fa Cai ) னு  சொல்லி வாழ்த்து தெரிவிப்போம். அதாவது சீன மொழியில் இனிய பத்தாண்டு வாழ்த்துக்கள் என்று அர்த்தம். பதிலுக்கு அவங்க தீபாவளிக்கு நமக்கு "ஹாப்பி நியூ இயர்" னு கை  கொடுக்கிறப்ப  அப்படியே  அந்த  கையால  நடு மண்டையில   நச்சுனு  கொட்டுன  மாதிரி  இருக்கும். "இது புத்தாண்டு இல்ல..எங்க ஊர்ல நரகாசுரனு ஒருத்தர் இருந்தாரு".......னு கதையா சொல்ல முடியும்? நாங்களும் 'தேங்க்யு' சொல்லி சமாளிச்சுடுவோம். சீனர்களுக்கு அடுத்து உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் தமிழர்கள் தான்  இருக்கிறார்கள். தமிழ்மணம்  உலகம் முழுவது வீசுகிறது. நம்மவர்களை  ஒன்றிணைக்க   நம் மொழி சார்த்த ஒரு பண்டிகை வேண்டாமா?

       ஆனா நாம உற்சாகமா கொண்டாடுற நியூ  இயர்  உருவான கதைய கேளுங்க....இந்த காலண்டர் யார் யார் கையில் சிக்கி சின்னா பின்னாமாச்சினு   பாருங்க....  
 
  •  காலண்டரை   கண்டு பிடிச்சதே கிரேக்கர்கள் தான். கை விரல்களின் எண்ணிக்கையை வைத்தே கணக்கிட்டு வந்ததால்,இவர்கள் பத்து மாதங்களாகத்தான் ஒரு ஆண்டை பிரித்திருந்தார்கள். இப்போது நாம் குத்தாட்டம் போடும் ஜனவரியும்,பிப்ரவரியும் அப்போ கிடையாது..மார்ச் முதல் டிசம்பர் வரைதான் இருந்தது..
  • பிறகு இது ரோமானியரின் கைக்கு போனது.தற்போது உள்ள காலண்டரின் அமைப்பு இவர்கள் போட்ட விதையிலிருந்துதான் வந்தது.   இவர்கள்தான் ஜனவரியையும்,  பிப்ரவரியையும்  முறையே 11 , 12  வது மாதங்களாக சேர்த்தனர்.ஒரு வருடத்திற்கு 365நாட்கள் என்று கணக்கிட்டு, நாட்களை பிரிக்கும் போது முதல் மாதமான மார்ச்சுக்கு 31 நாட்களும்,பிறகு அடுத்தடுத்து 30, 31 என்று பிரிக்க ..கடைசியில் பாவம் பிப்ரவரிக்கு 28நாட்கள்தான் எஞ்சியது. பிறகு கி.மு 46ல் ஜூலியஸ் சீசரின் கையில் சிக்கியவுடன், ஜனவரியும், பிப்ரவரியும் முதல் இரண்டு மாதங்களானது.இது ஜூலியன் காலண்டர் என்று அழைக்கப்பட்டது. இதில் இன்னொரு விஷயம் இருக்கு..ஜூலியஸ் சீசரின் பெயரில் அழைக்கப்பட்ட ஜூலையும், அகஸ்டஸ் என்ற மன்னன் பெயரில் அழைக்கப்பட்ட ஆகஸ்ட்டும் அடுத்தடுத்து வருவதால் ஒருத்தருக்கு 30 இன்னொருவருக்கு 31  வைத்தால் சரியிருக்காது என்று இரண்டுக்குமே 31 நாட்களை வைத்து விட்டார்கள். இத்தோடு விடவில்லை.. லத்தின் மொழியில் Septem-என்றால் ஏழு, Octo- என்றால் எட்டு, Novem -என்றால் ஒன்பது, Decem-என்றால் பத்து. இவர்களால் மாற்றியமைக்கப்பட்ட காலண்டரில் இவைகள்   எல்லாமே இரண்டு  மாதங்கள்  பின்நோக்கி  தள்ளப்பட்டன. இந்த காலண்டர் கிபி 1582  வரை பின்பற்றப் பட்டது...

  •  .
       பதிமூன்றாம் போப் ஆண்டவராக இருந்த போப் கிரிகோரியின் ஆணைப்படிஜூலியன் காலண்டரில் காணப்பட்ட குறைபாடுகளைத் திருத்தியமைத்து ஏசுகிருஸ்துவின் பிறந்ததினத்தை அடிப்படையாகக் கொண்டே கிபி 1582ல் கிரிகோரியன் காலண்டரை உருவாக்கினார்கள். இது ஜூலியன் காலாண்டரை முன்மாதிரியாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது இதில் இன்னொரு கூத்தும் நடந்தது.இந்த காலண்டரில் ஒரு ஆண்டு என்பது 365.25 நாட்கள் என கணக்கிட்டதால் 10 நாட்கள் அதிகமாகி இன்னொரு சிக்கல் வந்தது. இந்திய வரைபடத்தில் இருந்து எப்படி அத்திப்பட்டி காணாமல் போனதோ.அதே போல் இதை சரி செய்ய  1582ஆம் வருடத்தின் அக்டோபர் மாதத்தில் 5-ம் தேதியிலிருந்து 14-ம் தேதி வரை உள்ள 10நாட்கள் காலாண்டரிலிருந்தே நீக்கப்பட்டது.அதன் பிறகே லீப் வருடத்தைக் கணக்கிட புதியமுறை கையாளப்பட்டது.  அந்தப் புதிய முறை கிரகோரியன் நாள்காட்டி (Gregorian Calendar) என்று அழைக்கப்படலாயிற்று....
Pope Gregory XIII
  • இங்கிலாந்து மற்றும் அதன் காலனி நாடுகளில்(இந்தியா உட்பட) கிபி1752-ம் ஆண்டில் இருந்துதான்  ஜனவரி 1-ம் தேதியை புத்தாண்டாக கொண்டாடும் வழக்கம் துவங்கியது.
 
  சூரியனை பூமி ஒரு முறை சுற்றி வருவதற்கு 365 நாள் 5 மணி, 48 நிமிடம், 46 வினாடிகள் ஆகிறது. இந்த வானவியல் உண்மையை  மட்டும் அடிப்படையாகக் கொண்டு,மாதங்களும், கிழமைகளும், நாட்களும் அவரவர் வசதிற்கேற்ப வகுக்கப்பட்டது தான் இப்போது நாம் பின்பற்றும்  கிரகோரியன் காலண்டர் (Gregorian Calendar). அவர்கள் ஜனவரி1 தான் புத்தாண்டு என்றால் .. அதுதான் நமக்கும் புத்தாண்டு... ஏப்ரல் 1 என்று கூட பிறகு மாற்றப்படலாம். அதற்கும் நாம் தயாராக இருப்போம்.



     ஆனால் தமிழ் புத்தாண்டை தை முதல் நாளுக்கு மாற்றினால் மட்டும் கொதித் தெழுவோம்.  சித்திரையில் இருக்கும் புத்தாண்டை எத்தனை பேர் கொண்டாடுகிறோம். அன்று ஒரு நாள்  பொது விடுமுறை. வீட்டில் படுத்து ஒய்வு எடுப்பதைத் தவிர வேறென்ன செய்வோம்?  அக்னி  வெய்யில்  அனலாய் அடிக்க,நஞ்சை நிலங்கள் வறண்டுபோய் உழவுக்கு ஒய்வு கொடுக்கும் நேரமது. சித்திரையில் குழந்தை பிறக்கக்கூடாது என்பதால் தான்  ஆடியில் 'தள்ளி' வைக்கிறார்கள் என்று கூட சொல்வார்களே...

      சித்திரை தான்  தமிழின் முதல்மாதம் என்பதற்கு ஒரே ஒரு விஷயம் தான் சொல்லப்படுகிறது...பன்னிரெண்டு ராசிகளுள் முதல் ராசியான மேச  ராசி சித்திரையில்தான் சங்கமிக்குதாம்.

    சித்திரை புத்தாண்டு என்பது அறுபது ஆண்டுகளின் சுழற்சியே… இதில் “பிரபவ முதல் அட்சய” வரை அறுபது பெயர்கள் இருக்கின்றன… இவற்றில் ஒன்றுகூட தமிழ்ப்பெயர் இல்லையே…தமிழ்ப்பெயரே இல்லாத ஆண்டுகள்  எப்படி தமிழாண்டு தொடக்கம் ஆனது!!?இந்த அறுபது ஆண்டு முறையின் விளக்கத்தைக் கேட்டால் ஆபாசக்கதையை அல்லவா சொல்கிறார்கள்..அப்படி என்றால் இடைப்பட்ட காலத்தில் இறக்குமதியாகி தமிழன் கொண்டாட தொடங்கிய “பண்டிகை” தான் இந்த சித்திரை ஆண்டு பிறப்பா?.

    தமிழ் மாதங்களில் சித்திரையைவிட 'தை' க்குதான் அதிக சிறப்பு.'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்று பழ மொழியே இருக்கிறது. தமிழையும் உழவையும் தனித்தனியாக பிரிக்க முடியாது.தமிழகத்தின் பிரதான தொழில் விவசாயம்தான்.பயிர் செய்த நெற்மணிகளை அறுவடை செய்து செல்வங்களாக வீட்டிற்கு கொண்டு வரும் மாதம் இது.இந்த தை முதல்  நாளில் தான் உழைக்கும் தமிழ் மக்கள் தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் பொங்கல்விழா கொண்டாடப் படுகிறது. இத்திருநாளில் தான் தமிழின் பெருமையை உலகுக்குச் சொன்ன வான் புகழ் வள்ளுவன் பிறந்த தினமும் வருகிறது.தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டும் இப்போதுதான் நடத்தப் படுகிறது.
 .


 
ஏன்... பழைய சாஸ்திரங்களில்  கூட  தை முதல் ஆனி வரையிலான மாதங்கள் உத்தராயணம் என்று சொல்லக் கூடிய தேவர்களின் பகல் பொழுது என்று தானே சொல்லப்பட்டிருக்கிறது.



இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான் தை மாதம் முதல் தேதி தமிழ் புத்தாண்டாக அறிவிக்கப்பட்டது.    இதை அறிவித்தது திமுகவோ கலைஞரோ அல்ல.  மறைமலை அடிகள் தலைமையில், திரு.வி.க., சுப்பிரமணிய பிள்ளை, சச்சிதானந்தபிள்ளை, வெங்கசாமி நாட்டார், சோமசுந்தர பாரதியார், கி.ஆ.பெ.விசுவநாதம் உள்ளிட்ட அறிஞர்கள், 1921ம் ஆண்டு,சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஒன்று கூடி கலந்து ஆலோசித்து  எடுத்த முடிவு.


 கடந்த 1939ல், திருச்சியில் நடந்த அகில இந்திய தமிழர் மாநாடு, சோமசுந்தர பாரதியார் தலைமையில் கூடியது. அதில், ஈ.வெ.ரா., கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர் உமா மகேஸ்வரன், கா.சுப்பிரமணியம், தெ.பொ. மீனாட்சிசுந்தரம், திரு.வி.க., மறைமலை அடிகள், பி.டி.ராஜன், ஆற்காடு ராமசாமி முதலியார், பாரதிதாசன், பட்டுக்கோட்டை அழகிரி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.அந்த  மாநாடும், தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு; பொங்கல் திருநாளே தமிழர் திருநாள் என்று தீர்மானித்தது.இவர்கள் அன்று முன் மொழிந்ததை கலைஞர்  கடந்த  ஆட்சியில் வழி மொழிந்திருக்கிறார்.


புரட்சிக்கவி பாரதிதாசன் கூட பொங்கி எழுந்தாரே!.............

"நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததே
அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழனுக்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!"     என்று......

  ஆனால் அரசியல் காற்புணர்ச்சியில் தமிழ் மட்டும் தப்புமா என்ன? இன்று...தமிழ்  புத்தாண்டு மீண்டும் சித்திரைக்கே துரத்தப்பட்டது..
  
                  உலகில்   பைபிளுக்கு அடுத்து அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு, ஒன்றே முக்கால் அடியில் உலகை அளந்த திருக்குறளை இயற்றிய அய்யன் திருவள்ளுவர் பிறந்த தினத்தை தமிழ் புத்தாண்டாக நாம் கொண்டாடினால்..இதைவிட அவருக்கு நாம் செய்யும் சிறப்பு வேறெதுவும்  இல்லை... திருவள்ளுவர் நாள்காட்டியை பின்பற்றுவதில் ஒரு சில நடைமுறை   சிக்கல்  இருக்கலாம்..ஆனால் அவர் பிறந்த தினத்தை தமிழ் புத்தாண்டாக கொண்டாடுவதில் நமக்கு என்ன  சிரமம்   இருக்க போகிறது?

     நம் இந்தியாவில் தீபாவளி,கிறிஸ்துமஸ்,ரன்ஜான் போன்ற சமய ரீதியான பண்டிகைகள்தான் ரொம்ப சிறப்பா கொண்டாடப் படுகிறது.இங்கு  மொழிகள் இணைகிறது. இதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.. ஆனால் மொழி ரீதியான பண்டிகை கொண்டாடினால் 'மதங்கள்' இணையுமே! உலகத் தமிழர்களை ஒன்றிணைக்க இது வழி செய்யுமே!!

         இதோ... ஓரிரு நாளில் பொங்கல் பண்டிகை வரப்போகிறது.பொங்கல் வாழ்த்துகளை பரிமாறிக்கொள்ள போகிறோம்..அப்படியே தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளையும் சேர்த்து சொல்வோமே!!! ......
 
(நன்றி கூகிள் படங்கள்)                       
------------------------------------------((((((((((((((((((((((((((((((((())))))))))))))))))))))))))))----------------------------    

Sunday 8 January 2012

தமிழ் திரையுலகின் அஷ்டாவதானி T.ராஜேந்தர் ஒரு சகாப்தம்

ணையத்தில்.. குறிப்பாக பேஸ்புக் மற்றும் ப்ளாக்கரில் பவர் ஸ்டாருக்கு அடுத்து செமயா டேமேஜ் ஆவது நம்ம சகலகலாவல்லவர் T.ராஜேந்தர் தான். தெரிஞ்சிதான் செய்யுறாரானு தெரியில... தான் ஒரு யூத்னு நெனச்சிகிட்டு இவர் குடுக்கிற அளப்பரைதான் இவருக்கே ஆப்பா வருதுனு நெனைக்கிறேன். பொதுவா அரசியல் மேடையில்தான் நம்ம டி.ஆர் கலக்குவார். ஆனா இப்போதெல்லாம் பாடல் வெளியீட்டு விழாவில ஆரம்பிச்சி டி.வி. நிகழ்ச்சி, பாராட்டு விழானு பட்டய கெளப்புறார் டி.ஆர்.


சரி... வந்தோமா டீயும் பிஸ்கட்டும் சாப்டோமா... அப்படியே ஹீரோயின் அம்மணிகிட்ட கொஞ்சம் கடலையை போட்டோமான்னு இல்லாம.. மியூசிக்ல தான் பெரிய தில்லாலங்கடினு சொல்லிக்கிட்டு, தோல்பட்டைய தவிலாக்கி, தொடைய ட்ரம்ஸாக்கி, இடுப்ப அடுப்பாக்கி, நம்மள கடுப்பாக்கி இவர் பண்ற இம்ச தாங்கமுடியல. ஆனா இவர் எந்த சேட்டை பண்ணினாலும் யாரும் எதுவும் சொல்றதில்ல. ரஜினியில் தொடங்கி..  கேப்டன், பாக்கியராஜ், பத்திரிக்கைக்காரங்கனு இவர் விளாசித் தள்ளாத ஆளே கிடையாது. ஆனா யாரும் எதுவும் சொல்றதில்ல. ஏன்..?  



T.ராஜேந்தரைப் பற்றி இப்போதுள்ள இளைய தலைமுறைக்கு அவ்வளவாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எண்பதுகளில் ரஜினியையும், கமலையும் மிரள வைத்தவர். இவர் படம் ரிலீஸாகிறது என்றால் மற்ற முன்னணி ஹீரோக்கள் ஒதுங்கிக் கொள்வார்கள். ரஜினி, கமலுக்கு வெறும் லட்சங்களில் சம்பளம் இருந்த காலகட்டத்தில் படம் பூஜை போட்ட உடனேயே கோடிக்கு மேல் விற்று சாதித்துத் காட்டியவர். இளையராஜா கொடிகட்டி பறந்த காலத்திலும் இவர் இசையமைத்த எல்லா பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி கேசட் விற்பனையிலும் தூள் கிளப்பினார். கதை,திரைக்கதை,வசனம்,பாடல்கள், இசை,ஒளிப்பதிவு, இயக்கம் என்று எல்லாப் பொறுப்புகளையும் கவனித்து, அதில் நடித்து சொந்தமாக தயாரிக்கவும் செய்தார். இவர் படங்கள் சர்வ சாதரணமாக நூறு நாள்களுக்கு மேல் ஓடும். திரையிட்ட அனைத்து தியேட்டர்களிலும் ஐம்பது நாட்கள் அசால்டா ஓடும். இப்ப சொல்லுங்க.. இவரை தமிழ்த் திரையுலகின் அஷ்டாவதானி என சொல்லலாம் தானே!.. 


 ஆனா பாருங்க... இவர் சொந்தமா படம் எடுத்தாலும் ஒரு கொள்கைப் பிடிப்போடதான்(!) இருந்தார்..  அது என்னான்னு நோட் பண்ணிக்குங்க...

1. இவர் எடுக்கும் படங்களின் தலைப்பு ஒன்பது எழுத்தில்தான் இருக்குமாம் .

2. எந்தப் பெண்ணையும் தொட்டு நடிக்கமாட்டாராம். அது அம்மாவாக இருந்தாலும் சரி.. குழந்தையா இருந்தாலும் சரி.. (அந்த ஏக்கத்திலதான் சிம்புவ உசுப்பேத்திவிட்டாரோ ? ). ஆனா இவர் படத்தில கவர்ச்சி கொஞ்சம்  தூக்கலாகவே இருக்கும்.

3. வசனம் பேசிக்கிட்டே சண்டை போடுற ஸீன இவருதாங்க ஆரம்பிச்சி வச்சாரு..  அதுல ஒரு கன்டிஷன் இருக்கு.. இவரு வசனம் பேசி முடிக்கிற வரையில சண்டை போடுறவுங்க அமைதியா கைகட்டி கேட்டுகிட்டு இருக்கணும்.

3.இந்த உலகத்திலே ஒரே படத்த தொடர்ந்து ஒன்பது தடவ 'ரீமேக்'  பண்ணினது இவருதாங்க.அப்படி என்னதான் கதை?....ஹிஹி... உங்க ஆர்வம் புரியுது. அது கல்வெட்டுல செதுக்கப்பட வேண்டிய காவியம்..!. பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய பொக்கிஷம்..!..நல்லா கவனமாக் கேளுங்க....   

 "இவருக்கு ஒரு தங்கச்சி இருக்கும். அது ஒருத்தன இழுத்திட்டு ஓடிடும். ஒரு காதலி இருக்கும் அதுவும் ஒருத்தன இழுத்துட்டு ஓடிடும். இவரு அப்பா ஒரு குடிகாரன். அவரும் ஒரு பொம்பள பின்னால ஓடிடுவாரு... இவருக்கு ஒரு அம்மா இருக்கும்.. ச்சே ச்சே..அங்கதான் வப்பாரு ஒரு சென்டிமென்ட்.. தன் புருஷன் கெட்டவனா இருந்தாலும் பரவாயில்ல.. க(ள்)ல்லானாலும் கணவன்.. (.'.)புல்லானாலும் புருசன்னு  சொல்லிட்டு... அதுவும் புருஷன் கிட்ட போயிடும்... கடைசில நம்ம ஹீரோ தனிமரமா நின்னு ஒரு சோகப் பாட்டு பாடுவாரு. அதுவும் தன் சொந்தக்குரலில.."(இனிமே கதை என்னான்னு கேட்பீங்க?...)

4 . இவரோட எல்லா படத்தின் முடிவில் இவர் சாகுற மாதிரி ஒரு சென்டிமென்ட் ஸீன் இருக்கும். குண்டடிப் பட்டு ரத்த வெள்ளத்தில உயிருக்கு போராடிகிட்டே அஞ்சு பக்க வசனத்த அப்படியே வார்த்தை பிசகாம பேசி முடிச்சிட்டு கடைசியில 'டொய்ங்' னு தலைய சாய்ச்சிடுவாரு.. அப்படினா தலைவரு டிக்கெட் வாங்கிட்டாருனு அர்த்தம்.

5. ஒவ்வொரு படத்திலேயும் புது முகங்களை அறிமுகப்படுத்துவார். அந்த வகையில நம்ம டி.ஆர்  செய்த ஒரே நல்ல விசயம் என்னோட ஆல்டைம் ஃபேவரைட் 'அழகு தேவதை அமலா'வை அறிமுகப்படுத்தினதுதான்.. இந்தப் பட்டியல் ஆனந்தபாபு, ராஜிவ், தியாகராஜன், நளினி,பப்லு,ரேணுகா, மும்தாஜ்னு நீண்டுகொண்டே செல்லும் ....


6.  தமிழ் சினிமாவின் 'செட் மன்னன்' இவருதாங்க. சந்திரலேகா படத்திற்குப் பிறகு இவரு படங்களில போடுற செட்டுதான் பரபரப்பா பேசப்பட்டது.

7.  இவரு இவ்ளோ செலவு பண்ணி படம் எடுத்தாலும் இதுவரையில எந்த பைனான்சியர்கிட்டேயும் கடன் வாங்கியது கிடையாதாம். இதுவரையில் எந்த கிசுகிசுவிலும் சிக்காதவர். இவர் திரைக்கு வந்த நேரம் மதுரைக் காரர்கள் கொடிகட்டி பறந்து கொண்டிருந்த காலகட்டம். மாயவரத்திலிருந்து வந்த டி.ஆர். ஆரம்பத்தில் நிறைய அவமானங்களையும் கஷ்டங்களையும் சந்தித்திருக்கிறார்.

எண்பதுகளில எப்படி பாக்யராஜ் தாய்க்குலங்களை கவர்ந்தாரோ, அதே மேஜிக் T.ராஜேந்தருக்கும் அப்போ தெரிஞ்சிருந்தது. ஒருதலை ராகத்தில் ஆரம்பித்த இவரது வெற்றிப் பயணம் 'என் தங்கை கல்யாணி' யோட முடிஞ்சிடுச்சினுதான் சொல்லணும். அரசியல், சினிமா இரண்டிலும் ஒரே நேரத்தில் பயணித்தவர் டி.ஆர். எம்ஜியார் ஆட்சியில் இருந்த நேரத்தில் அவரை எதிர்த்து திமுகவில் இருந்த ஒரே நடிகர்!. 

எம்ஜியாருக்கு எதிராக கடுமையா பிரச்சாரம் செய்ததால திமுக தொண்டர்களிடம் தனி செல்வாக்கு பெற்றவர். அதனாலயோ என்னவோ இவர் ரசிகர்கள் பெரும்பாலும் திமுகவைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.பின்பு இதுவே வருக்கு எமனாக அமைந்தது.1988ஆம் ஆண்டு  'என் தங்கை கல்யாணி' வெளியாகி வெள்ளிவிழா கண்டது. 1989ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத்தேர்தலில்  'சீட்' பேரத்தில் கலைஞரிடம் ஏற்பட்ட மனக்கசப்பால் திமுகவை விட்டு வெளியேறினார். துரதிஷ்டவசமாக அந்த வருடம் வெளியான  'சம்சார சங்கீதம்' படுதோல்வி அடைய, டி.ஆரின் தோல்விப்பயணம் அதிலிருந்துதான் ஆரம்பித்தது. அப்ப விழுந்தவர் தான், இன்னும் எழுந்திருக்க முடியவில்லை. இவருடைய வசந்த காலங்கள் என்று ஒரு தலை ராகம் வெளியான 1980 காலகட்டத்திலிருந்து 1989 வரை சொல்லலாம். அந்த கால கட்டத்தில் வந்த படங்களின் பாடல்கள் உங்கள் பார்வைக்காக....



  ஒருதலை ராகம் (1980 )

தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றிய படம். ஒருதலைக் காதலைப்  பற்றிச் சொன்ன உன்னத படம். அதுவரை யாரும் பயணிக்காதப் பாதையில் தனது முதல் காலடியை எடுத்து வைத்தார் டி.ஆர். இந்தப்படத்தில் இவருக்கு பேசப்பட்ட சம்பளம் வெறும் ஆயிரம் ரூபாயாம். ஆனால் அதையும் வாங்க நாய் படாத பாடு பட்டாராம். எங்க ஊரில் நூறு நாள் ஓடிய முதல் படம். 'நான் ஒரு ராசியில்லா ராஜா...', " என் கதை முடியும் நேரமிது.... என்பதை சொல்லும் ராகமிது....' என்று முதல் படத்திலே அபசகுனமான பாடல்வரிகளை எழுதி, அதையும் டி.எம்.எஸ் சை பாட வைத்து அதிர வைத்தவர்.


  வசந்த அழைப்புகள் (1981 )

ஒருதலை ராகம் வெற்றிபெற்றவுடன் டி.ஆரின் திறமையை அறிந்த ஜே.பி.ஆர், தான் எழுதி வைத்திருந்த கதையைப் படமாக எடுத்துத் தருமாறு டி.ஆரிடம் கொடுத்தார்.ந்தப் படத்திற்கு ஜே.பி.ஆர் தான் தயாரிப்பாளர். இந்தப்படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.



  இரயில் பயணங்களில்...(1981 )

இதுவும் சக்கைப்போடுப் போட்ட படம்தான். பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். இதில் ராஜீவ், ஸ்ரீநாத் மற்றும் ரவீந்தர் நடித்திருப்பார்கள். இந்தப்படம் எடுத்துக் கொண்டிருந்த வேளையில் இதன் தயாரிப்பாளர் இறந்துவிட, பண நெருக்கடியால் படம் பாதியிலே நின்று போனது. இருந்தாலும் மனம் தளராமல் போராடி பல இன்னல்- களுக்குப் பிறகு படத்தை வெளியிட்டார் டி.ஆர். படம் வெள்ளிவிழா கண்டது.
 

நெஞ்சில் ஓர் ராகம்(1982 )
  
கே.ஆர்.ஜி தயாரிப்பில் வெளிவந்த படம். ந்தப் படத்தில் தியாகராஜன், ராஜிவ் இருவரையும் அறிமுகப் படுத்தினார். இதுவும் வெற்றிப் படம் தான்.


 உயிர் உள்ளவரை உஷா (1983 )

 "தஞ்சை சினி ஆர்ட்ஸ்" என்ற பெயரில் டி.ராஜேந்தர் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து எடுத்த முதல் படம். அப்போது இவரைப் போல காதலில் தோல்வி அடைந்த நடிகை உஷாவை திருமணம் செய்து கொண்டதின் ஞாபகமாக வைத்த பெயராம் 'உயிர் உள்ளவரை உஷா'. ஜேசுதாஸ் பாடிய "வைகைக் கரை காற்றே நில்லு"  இவர் இசைக்கு மகுடம் சூட்டிய மெலடி. நளினி இதில் தான் அறிமுகம்.


 தங்கைகோர் கீதம்.(1983 )  

சமூக அக்கறைக் கொண்ட படத்தை எடுத்திருப்பதாகச் சொல்லி டி.ஆர். வெளியிட்ட படம் தங்கைகோர் கீதம். இது வரதட்சனைக் கொடுமையால் ஏற்படும் பாதிப்பை விளக்கிச் சொன்ன படமாகப் அப்போது பேசப்பட்டது. சிவகுமார், டி.ஆர். தங்கையின் கணவராக நடித்திருப்பார்.. 'தட்டிப்பாத்தேன் கொட்டாங்கச்சி....' னு சொந்தக் குரல்ல பாடி நம்மள காய்ச்சி எடுத்தது இந்தப் படத்தில்தான். இதுவும் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. 

           (சிரிக்கபடாது.. சீரியஸா பாக்கோணும்...)

உறவை காத்த கிளி(1984 )

அடுத்து இவர் குடிப்பழக்கதிற்கு எதிராக எடுத்தப் படம். இது பெரிய வெற்றியைக் கொடுக்காவிட்டாலும் அவரை அரசியலுக்கு இழுத்து வந்ததில் முக்கியப் பங்காற்றியது. இப்படத்தின் தயாரிப்பளார் ஒரு அதிமுக காரர். இருவருக்கிடையே பண விவகாரத்தில் பிரச்சனை வர, விஷயம் எம்.ஜி.ஆர் காதுக்கு எட்டியது. உடனே டி.ஆர் ராமாவர தோட்டத்திற்கு வரவழைக்கப் பட்டார். அங்கே, தனது வழக்கமான பாணியில் எம்.ஜி.ஆர். இவரை கும்மி எடுக்க, வலிதாங்க முடியாமல் இவர் ஓடிய இடம் கோபாலபுரம். அதன் பின்பு  திமுகவில் ஐக்கியமாகி, எம்.ஜி.ஆரை எதிர்த்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டாராம் டி.ஆர்.... 


மைதிலி என்னை காதலி(1986 )

சிம்புவுக்கு பாவாடை சட்டையை அணிவித்து கேபரே டான்ஸ் ஆடவிட்டு அமர்க்களமாக அறிமுகப்படுத்தியது இந்தப் படத்தில்தான். பாவாடையை தூக்கி காண்பித்து ஆட்டம் போட்டு 'குட்டி மன்மதனா' அவரது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்து வைத்தார் டி.ஆர்.  அந்த ஆட்டம் இன்னும் நின்ன பாடில்லை. இந்தப் படத்தில்தான் அமலா அறிமுகமானார்.  டி.ஆரின் படைப்புகளில் இதுதான் சூப்பர் டூப்பர் ஹிட்...!

 
 ஒரு தாயின் சபதம்(1987 )

ம்ம டி.ஆர் இந்தப் படத்தில் வக்கீலாக நடித்திருப்பார். வக்கீல்கள் எல்லாம் எதுகை மோனையோடு வாதாடினால் என்ன விளைவு ஏற்படும் என்பதை இந்தப்படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இதுவும் பெரிய வெற்றிப் படம்.

   
 என் தங்கை கல்யாணி.(1988 )

அன்னாரின் கடைசி வெற்றிப்படம். 18 தியேட்டர்களில் நூறு நாட்கள் ஓடியது. இதை குறிக்கும் விதமாக நூறாவது நாளில் தினகரன் பத்திரிகையில் ஒரு முழு பக்கத்தில் ஐயப்பன் படத்தை போட்டு அதன் கீழே பதினெட்டு படிகளிலும் பதினெட்டு தியேட்டர்களின் பெயரையும் போட்டு விளம்பரப் படுத்தியிருந்தது இன்னும் ஞாபகம் இருக்கிறது...

 
இவர் பிஸியாக இருந்த காலகட்டத்திலும் கிளிஞ்சல்கள், பூக்களைப் பறிக்காதீர்கள், கூலிக்காரன், பூப்பூவா பூத்திருக்கு போன்ற பல வெளிப்படங்களுக்கும் பாடல் எழுதி இசையமைத்துக் கொடுத்தார்.இந்தப் பாடல்களும் மெகா ஹிட்டாகி இவருக்கு சிறந்த இசையமைப்பாளர் என்கிற பெயரை எடுத்துக்கொடுத்தது. 

கிளிஞ்சல்கள்  



பூக்களை பறிக்காதீர்கள்

எண்பதுகளில் தனி ராஜ்ஜியமே நடத்திய டி.ராஜேந்தரின் வெற்றிப் பயணத்தில் வேகத்தடையாக வந்தது சம்சார சங்கீதம். அப்படத்தில் தொடங்கிய தோல்வி, சாந்தி எனது சாந்தி, சொன்னால்தான் காதலா...என்று ஆரம்பித்து கடைசியில் இவரெடுத்த 'முழு நீள காமெடிப் படமான' வீராசாமி வரை தொடர்கிறது.
    
நிறைய தடைகளைத் தாண்டி உச்சத்துக்கு வந்தவர். தன்னம்பிக்கை மிக்கவர். தொழிலில் நேர்மையானவர். எவருடைய உதவியையும் எதிர்பார்க்காத கடும் உழைப்பாளி. தன் கொள்கையை எந்தக் காலத்திலும் விட்டுக் கொடுக்காமல், தான் ஒழுக்காமானவர் என்பதை நிஜ வாழ்க்கையிலும் சரி, சினிமாவில் நடிக்கும் போதும் சரி தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார். நெளிவு சுளிவு இல்லாதவர். மனதில் பட்டதை தைரியமாக சொல்பவர். சினிமாவை உயிருக்குயிராய் நேசிப்பவர். தான் தயாரித்தப் படங்களை இது வரை 'டி.வி ரைட்ஸ்' க்கு விடாதது இதற்கு மிகப் பெரிய சான்று.

'வீராசாமி'  என்கிற ஒரு படத்தை மட்டும் அளவுகோலாக வைத்து இவரது திறமையை நாம் எடைபோட்டு விட முடியாது. இவரின் பழைய வரலாற்றைப் புரட்டிப் பார்த்தீர்களேயானால் நிச்சயம் இவர் ஒரு சகாப்தம் என்பதைப் புரிந்துகொள்வீர்கள்....


-------------------------------(((((((((((((((((((((((((((((((((((())))))))))))))))))))))))))))))-----------------------