Tuesday 24 April 2012

டிவி சீரியலும் கில்மா படக்காலண்டரும் -ஏன் இப்படி இருக்கு?(சிதறல்கள்-6)



 வானம் வசப்படும்.....

       சிங்கப்பூர் ஒலி 96.8 FM வானொலியில் சில  வருடங்களுக்கு முன் ஒலிபரப்பப்பட்ட நிகழ்ச்சி.ஒவ்வொரு வாரமும் ஒரு சாதனையாளரைப் பற்றி அழகாகத் தொகுத்து வழங்குவார்கள்.அவர்கள் பேசும் நடையும்,துல்லியமாகத் தரும் தகவல்களும்,பின்னணியில் வரும் இசையும் அப்படியே நம்மைக் கட்டிப் போட்டு விடும்.ஒரு முறையாவது இதைக் கேட்டுப் பாருங்கள்... 





--------------------------------------------------------------------------

 நான் ஏன் இப்படியிருக்கேன்?

        பதிவுலகில எங்கிருந்துதான் ரொம்ப கேஷுவலான தலைப்பெல்லாம் புடிக்கிறாங்களோ தெரியில.சொல்ல வந்த விசயங்கள விட அதன் தலைப்பு தான் மனசில பசைப்போட்டு ஒட்டிக்கிது. ஆனா என்ன....சில நேரங்களில பின் விளைவையும் இது ஏற்படுத்திடுது.கொஞ்ச நாட்களுக்கு முன் நண்பர் தமிழ்வாசி பிரகாஷின் பைக் ஸ்டாண்டு ஏன் இப்படி இருக்கு? படிச்சுட்டு,ரெண்டு நாளைக்கு எதப்பாத்தாலும் இந்த கிச்சன் ஏன் இப்படியிருக்கு?, இந்த பாத்ரூம் ஏன் இப்படி இருக்கு?,இந்த டிவி-ஸ்டாண்டு ஏன் இப்படி இருக்கு?-னு கேக்க ஆரம்பிச்சுட்டேன்.நல்லாத்தான இருந்தாரு இந்த மனுஷனுக்கு என்ன ஆச்சுன்னு வீட்ல வேற சந்தேகப்பட ஆரம்பிச்சுட்டாங்க. அப்பறம் கொஞ்ச நாட்கள்ல அது சரியாயிடுச்சு. இப்படித்தான் நேத்திக்கு  நைட் இன்னொரு பதிவரோட பதிவப் படிச்சி அப்படியே லயிச்சி போயிட்டேன். இன்னிக்கி காலையில ஆபிஸ் மீட்டிங்க்ல ப்ராஜெக்ட் விசயமா பேசிக்கிட்டு இருக்கும் போது எங்க பாஸ் தோ கேட்க,எப்படித்தான் அந்த வார்த்தையை சொன்னேனோ தெரியல.பாஸே குழம்பிப் போய் அவர் முகமே கேள்விக்குறி மாதிரி வளைஞ்சி போச்சி. நல்லவேளை அவருக்கு அர்த்தம் புரியாததால நான் தப்பிச்சேன். அப்படி ஒன்னும் தப்பா ஏதும் சொல்லிடலங்க..அவரு என்னைப் பார்த்து ஆச்சர்யமா, எப்படி உனக்கு இப்படி தோணிச்சினு கேட்டார்.அதுக்கு நான் சொன்ன பதில்.. ஹி.ஹி .'நானா யோசிச்சேன்'  
      

----------------------------------------------------------------------------------------------------------------
 இந்த டிவி சீரியல் எல்லாம் ஏன் இப்படி இருக்கு?


      வர வர இந்த டிவி சீரியலே பார்க்கப் பிடிக்கல.... பின்ன என்னங்க.. திடீர் திடீர்னு இவருக்குப் பதில்அவர்,அவருக்குப் பதில் இவர்னு ஆள மாத்திக்கிட்டே இருக்காங்க.ஒரு கன்டினியுட்டியே இருக்க மாட்டேங்குது.அதுவும் ரொம்ப முக்கியமான கேரக்டர்களை மாற்றும்போது கதையோட அழுத்தமே குறைந்து போயிடுது.

      சன் டிவியின்  தொடர்களிலே டாப்ல உள்ள தென்றல்-ல என்னப் பிரச்சனையோ தெரியில..இப்படித்தான் கொஞ்ச நாட்களா ஆள்மாறாட்ட வேலை நடக்குது.டிவி சீரியல் என்றாலே குறைந்தது ஒரு நாளைக்கு ரெண்டு பேராவது அழுகிற மாதிரி சீன் இருந்தே ஆகணும் என்கிற விதியை உடைச்ச ஒரு சில தொடர்களில் தென்றலுக்கும் தனி இடமுண்டு. "பெண்ணென்பவள் பூவில்லையே பூகம்பம் நேர்ந்திடும் வேளையிலே.." என்று பாடகர் கார்த்திக்கின் கணீர் குரல் இரவு ஒன்பது மணிக்கு ஒலிக்கும் போது,எவ்வளவு முக்கியமான வேலையாக இருந்தாலும் அதை ஒதுக்கி வைத்து விட்டு, டிவியின் முன் உட்கார வைத்து விடுவது தென்றலின் தனிச்சிறப்பு. அப்படிப்பட்ட சீரியல்ல கொஞ்ச நாளைக்கு முன்னால் துளசியின் மாமியாராக நடித்த சாந்தி வில்லியம்-ஐ தூக்கிட்டு அவருக்குப் பதிலா 'துண்டு' கேரக்டர்ல நடித்த ஒரு நடிகையை போட்டிருக்காங்க.ஆனால் சாந்தி வில்லிமோட முக பாவனை, அதுவும் குத்திக்காட்டிப் பேசறப்போ நக்கலாக ஒரு சிரிப்பு சிரிப்பாங்க பாருங்க ..அந்த நடிப்பு யாருக்குமே வராது.மெட்டிஒலி நாடகத்திலேயே ஒரு டிபிகல் நடுத்தர குடும்பத்து மாமியாரா வாழ்ந்துக் காட்டியிருப்பாங்க.

       சரி இவங்கள விடுங்க...துளசியின் அம்மாவா நடிக்கிற ஐஸ்வர்யாவைத் தூக்கிட்டாங்க.இந்த நாடகத்தில இவங்களுக்கு கிட்டத்தட்ட வில்லி வேடம். துளசிக்கு இவங்கதான் அம்மான்னு தெரிய வருகிற நேரம்.துளசியோட ரியாக்சன் எப்படி இருக்கும், ஐஸ்வர்யாவை எப்படியெல்லாம் நாக்கைப் பிடிங்கிக்கிற மாதிரி கேள்வி கேட்கப்போறாங்க,அதுக்கு ஐஸ்வர்யாவோட ரியாக்சன் என்னவா இருக்கும்னு ஆவலோட எதிர்பார்த்துக்கிட்டு இருக்கிற நேரத்தில ஐஸ்வர்யாவுக்கு ஆப்பு வச்சுட்டாங்க.இதுல இன்னொரு கொடுமை என்னானா...இவங்களுக்குப் பதிலா இந்தக் கேரக்டர்ல நடிக்கிற சுதாசந்திரன். இவங்களைப் பார்த்தாலே பாவமா இருக்கு.அந்த வேடம் கொஞ்சம் கூட சூட் ஆகல.எனக்கு ஒரு டவுட்டு...பிற்பாடு,இதுதான் உன் அம்மா-னு துளசியோட  அப்பா,சுதாசந்திரனை நோக்கிக் கை காட்டும் போது,அய்யய்யோ இது எங்க அம்மா இல்ல.அவங்க இப்படி இருக்கமாட்டாங்க.ஐஸ்வர்யாதான் எங்க அம்மானு சொல்லிட்டா என்ன பன்றது? ச்சே....இதுக்குத்தான் ஓவரா சீரியல் பாக்கக் கூடாது. 

     இந்தக் கூத்து தென்றலில் மட்டுமல்ல...திருமதி செல்வத்திலும் இருக்கு. முதல்ல நந்தினிங்கிற கேரக்டர்ல ஒரு பொண்ணு நடிச்சது.பிற்பாட்டு இதைத் தூக்கிட்டு லதாராவ் வந்தாங்க.இப்ப லதாராவை தூக்கிட்டு  திரும்பவும் அதேப் பெண்.இதே மாதிரி நாதஸ்வரம்...மௌலியின் மூத்தப் பெண்ணை இதுவரை நான்கு தடவை மாற்றியாச்சு.ராசியில்லாத கேரக்டர் போல...

    இப்பெல்லாம் சீரியல்ல யாராச்சும் புதுசா வந்தாங்கன்னா,யாருக்குப் பதிலா இவங்கனு கேட்க வேண்டியிருக்கு. ச்சே....இந்த டிவி சீரியல் எல்லாம் ஏன் இப்படி இருக்கு?

---------------------------------------------------------------------------------------------------- 

இந்த பஸ் ஸ்டாண்டு ஏன் இப்படி இருக்கு?


       ஒரு வழியா விவேக் கண்ட கனவு நினைவாகிடும்னு நெனைக்கிறேன். பயப்படாதீங்க.இது சென்னையில உள்ள ஒரு பஸ் ஸ்டாண்ட்.சென்னையில நிறைய டிராபிக் ஜாம் ஆகுதாம்.அதனால மாநகராட்சியே இந்த பைபாஸ் வழிய திறந்து விட்டிருக்கு.உள்ளே டிராபிக் ஜாமே இல்லையாம்.இப்படிக்கா குதிச்சீங்கனா, எப்படிக்கா வேணும்னாலும் வெளிய வரலாமாம்.காலையில ஆபிசுக்கு போறவங்க இந்த ரூட்ட பயன்படுத்தினா கரக்ட் டைமுக்கு போயிடுலாம்னு பேசிக்கிறாங்க.என்ன ஒரு பிராப்ளம்னா ...மழைக் காலத்தில இது வழியாப் போகணும்னா நீச்சல் அடிக்கத் தெரிஞ்சிருக்கணும். ச்சே.. இந்த பஸ் ஸ்டாண்டு ஏன் இப்படி இருக்கு?

----------------------------------------------------x ----------------------------------------------------- 

சிங்கப்பூரும்  கில்மா பட காலண்டரும்.


         
  நான் சென்னையில வேலை பார்த்தப்போ நியூ இயர்  காம்ப்ளிமண்ட்ஸா  எங்க ஆபிசுக்கு நிறைய காலண்டர் வரும்.அதுல எல்லாமே சாமி படம்(நிஜ சாமிங்க..)அல்லது இயற்கைக் காட்சி சம்மந்தப்பட்ட படமாகத்தான் இருக்கும். ஆனால் சிங்கபூர்ல இது மாதிரி வர்ற காலண்டர் எல்லாம் அடல்ட்ஸ் ஒன்லி ரகமாத்தான் இருக்கும்.முக்கால் நிர்வாணத்தோடு பீச்சுல படுத்து போஸ் கொடுக்கிறது,அருவிக்குப் பக்கத்தில நின்னு மலையில சாஞ்சிகிட்டே போஸ் கொடுக்கிறது,இலை,செடி மறைவுல நின்னு பார்க்கிறதுனு நெறைய ஆங்கில்ல எடுத்த போட்டோக்கள் அதுல இருக்கும்.தாய்லாந்து,சீனா, இந்தோனேசியா,பிலிப்பைன்ஸ்-னு பாரபட்சம் பார்க்காம எல்லா நாட்டு பொண்ணுங்களோட போட்டோவும் இருக்கும்.இதுல...இந்தக் காலண்டர் எல்லோருடைய டேபிள் மேலேயும் இருக்கணும்னு கண்டிசன் வேற.சரி..இதுக்குப் பின்னாடி ஏதாவது கதை இருக்கானு கேட்டா,அப்படியேதும் இல்லைங்கிறாங்க.ஏன்னா...சைனாக்காரங்க எதற்கெடுத்தாலும் ஒரு கதை சொல்வாங்க. 

      போன வாரம் எங்க HR மேனேஜர் லீவு விசயமா பேசறுத்துக்காக என் டேபிளுக்கு வந்தாங்க.அவங்க ஒரு சைனா கேர்ள்.நான் என் டேபிள்ள இருந்த காலன்டர எடுத்து வச்சுக்கிட்டு அவங்களுக்கு தீவிரமா விளக்கிக்கிட்டு இருந்தேன்.அவங்களும் எல்லாத்தையும் பொறுமையாக் கேட்டுட்டு ஓகேனு சொல்லிட்டு போய்ட்டாங்க.அவங்க போனப்பின்னதான் பார்த்தேன் என் கைல இருந்தது 'அந்த மாதிரி' காலண்டர். அடச்சே..இந்த கன்றாவியத்தான் இவ்வளவு நேரமா விளக்கிகிட்டு இருந்தேனா..பாவம் அந்தப்புள்ள எவ்வளவு சங்கடப்பட்டிருக்கும்...  

   அதிருக்கட்டும்,இந்த மாதிரி காலண்டருக்கு பொட்டப் புள்ளைங்க மட்டும் தான் போஸ் கொடுக்கனுங்களா... ஏன் நாம கொடுக்கக்கூடாது? 

 ------------------------------------------------------------------------


3D  CORNER                                          காமாட்சி


 மனதை மட்டுமல்ல,கண்களை ஒருமுகப் படுத்தினால் கூட கடவுளைக் காணலாம்.




----------------------------------------------------((((((((((((((((((((((((())))))))))))))))))))))))------------------





Thursday 19 April 2012

ஒய் திஸ் கொலைவெறிக்கு OK OK.....OK OK வுக்கு ஒய் திஸ் கொலைவெறி?

     இந்தப் பதிவின் தலைப்பில் உள்ள தமிழின் செழுமையையும் அதன் வளமையும் கண்டு கடுமையான அறச்சீற்றம் அடைந்திருப்பீர்கள் என்பது உங்கள் கண்களில் நான் காணும் கொலைவெறியே சாட்சி!!...தடுக்கி விழப் போகும் தமிழை தாங்கிப் பிடிக்கிறோம் என்று தானாகவே வளரும் தமிழை தன் கரங்களால் கசக்கிப் பிழியும் நம் நாட்டு அரசியல் (தறு)தலைவர்களின் பிடியிலிருந்து காப்பாற்றும் காலம் கண்கெட்டும் தூரத்தில் கூட தெரியவில்லை என்பதே உண்மை.இந்தத் தலைப்பு இன்னும் புரியவில்லை என்று நீங்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகுமுன் விஷயத்தை சொல்லிவிடுகிறேன். 

          சமீபத்தில் வெளிவந்து திரையிலும்,பர்மாபஜார்,இணையம் மற்றும் பதிவுலக திரை விமர்சனத்திலும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ஒரு கல் ஒரு கண்ணாடி(OK OK).உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பு மற்றும் நடிப்பில் வெளிவந்திருக்கும் இந்தப் படம் வசூலில் சக்கைப் போடு போடுகிறது என்பது ஊடகங்களின் ஊர்ஜிதமானத் தகவல்.ஆனால் சமீபத்தில் கிடைத்தத் தகவல், இந்தப் படத்திற்கு கேளிக்கை வரிவிலக்கு கிடைக்க வில்லையாம்.

என்ன சார் நியாயம்  இது?

          இந்தப்படம் நம் கலாச்சாரப் பின்னணியில் எடுக்கப்பட்டப் படமோ அல்லது தமிழ் மொழியின் பெருமையைப் பறைசாற்றும் படமோ கிடையாதுதான். வரிவிலக்கு கட்டாயம் கொடுத்தே ஆக வேண்டுமென்று அடித்துக் கேட்பதற்கு இந்தப்படத்தில் ஒன்றுமே இல்லைதான்,இது ஒரு ஜனரஞ்சகமானப் படம் என்பதைத்  தவிர.

       ஆனால் தற்போது எழுப்பபட்டிருக்கும் விவாதம் வரிவிலக்கு அளிக்கப் பட்டிருக்கும் படங்கள் அனைத்தும் உண்மையிலேயே தரமானப் படங்களா? அவைகள் நிபந்தனைகளுக்கு உட்பட்டுதான் விலக்களிக்கப்படுகிறதா? இந்த வினாவைத் தொடுத்திருப்பவர் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி  ஸ்டாலின்.இதற்கு அவர் சொல்லும் உதாரணம் உலகப் புகழ்பெற்ற செம்மொழிப் பாடலான 'ஒய் திஸ் கொலைவெறி' பாடல் இடம்பெற்ற 'மூணு' படம்.

  "சமீபத்தில் கேளிக்கை வரிவிலக்கு கொடுக்கப்பட்ட ஒரு திரைப்படத்தில் ஆங்கிலம் கலந்த தமிழ் பாடல் உள்ளது.பாரில் வைத்து திருமணம் நடப்பது போல் காட்சி வருகிறது.இதுபோன்ற திரைப்படத்துக்கு வரிவிலக்கு அளித்து விட்டு,எந்தவித ஆபாச காட்சிகளும்,கலாச்சார சீரழிவு விஷயங்களும் இல்லாத, எங்கள் படத்துக்கு வரிவிலக்கு அளிக்க மறுப்பது எந்த வகையில் நியாயம்? வன்முறை அதிகமாக உள்ள மற்றும் ஆங்கில கலப்பு அதிகமாக உள்ள படத்துக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.அனைத்து மக்களையும் கவர்ந்த, ஆங்கிலக் கலப்பில்லாத 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்துக்கு வரிவிலக்கு அளிக்க மறுப்பது என்ன நியாயம்? இதனால் எனக்கு மட்டும் பாதிப்பு இல்லை. என்னை நம்பி படத்தை வாங்கிய வினியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்று ஒரு தயாரிப்பாளர் ஸ்தானத்திலிருந்து புலம்பி இருக்கிறார்.அவர் குறிப்பிடும் அந்தப்படம் 'மூணு'தான் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

                

     கடந்த திமுக ஆட்சியில் தமிழில் பெயர் வைக்கும் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரிவிலக்கு அளிக்கப்பட்டது நாம் அறிந்ததே.தமிழில் பெயர் இருந்தால் மட்டும் போதாது அது தமிழ் கலாச்சாரத்துக்கு உகந்ததாக இருக்க வேண்டும் என்ற அடிப்படை விதியைக் கொண்டு ஒரு குழு அமைக்கப்பட்டு,அது பரிந்துரைக்கும் திரைப்படங்களுக்கு மட்டுமே இந்தவரிவிலக்கு அளிக்கப்பட்டது. கோடிகளில் கொழிக்கும் தமிழ்
த் திரைப் படத்துறையினருக்கு,கலைஞர் வஞ்சனை  இல்லாமல்  வாரி வழங்கியது,அடித்தட்டு மக்களின் நெஞ்சினில் சிறு சலனத்தை ஏற்படுத்தியது என்பது நாமறிந்த நிதர்சன உண்மை.திரைப்பட வசனகர்த்தாக்கள் ஹோட்டலில் ரூம் போட்டு யோசிக்கும் அளவுக்கு பாசத்தலைவனுக்கு பாராட்டு மழை பொழிந்தனர்.ஆனால் இந்த கேளிக்கை வரிவிலக்கு தமிழ்த் திரையுலகில் கண்டிப்பாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது என்பது மட்டும் நிச்சயம். தமிழ்க்குடிதாங்கியும் சிறுத்தைகளும் தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்று பல போராட்டங்கள் நடத்தினாலும் அதற்கு யாரும் செவிசாய்க்கவில்லை. 'மும்பைஎக்ஸ்பிரஸ்' படம் வந்தபோது தியேட்டர் வாசலிலே ரகளையில் ஈடுபட்டனர்.கடைசியில் அது இத்துப்போன சட்டைக்கு இஸ்திரி போட்ட கதையாயிடுச்சு.ஆனால் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அறிவிக்கப்பட்டப் பின்னர்தான் தமிழ்ப்படங்களின் தலைப்பு தமிழில் வர ஆரம்பித்தது.'ரோபோ' கூட 'எந்திரன்' ஆனது ஊரரிந்ததே. தற்போதைய நிலையை வைத்துப்பார்த்தால் கடந்த ஆட்சிக்காலத்தில் தமிழ்த்திரைத் துறையினர் 'நல்லா வாழ்ந்தனர்' என்றே கூறலாம்.

   ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு ஏற்பட்ட அதிரடி ஆக்சனில் திரைத்துறையும் தப்பவில்லை.சிறிது காலத்திற்கு கேளிக்கை வரிவிலக்கு பற்றி எந்த அறிவிப்பும் தமிழக அரசிடமிருந்து வரவில்லை.இதனால் கோடம்பாக்கத்தில் சிறு சலசலப்பு ஏற்படவே,கடந்த மார்ச் மாதம் தமிழக அரசிடமிருந்து கேளிக்கை வரிவிலக்குப் பற்றி ஒரு உத்தரவு வந்தது.

     அதில் பழைய விதிமுறையான திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என்ற நிபந்தனையுடன்,சில கூடுதல் தகுதிகளையும் நிர்ணயித்து, தமிழக அரசு அப்போது உத்தரவிட்டுள்ளது.

* திரைப்படம், திரைப்பட தணிக்கை வாரியத்திடம் இருந்து, 'யு' சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

* திரைப்படத்தின் கதையின் கருவானது, தமிழ் மொழி மற்றும் பண்பாட்டின் வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்க வேண்டும்.

* திரைப்படத்தின் தேவையை கருதி, பிறமொழிகளை பயன்படுத்தும் காட்சிகளைத் தவிர, பெருமளவில் திரைப்படத்தின் வசனங்கள் தமிழ் மொழியில் இருக்க வேண்டும்.

* திரைப்படத்தில் வன்முறை மற்றும் ஆபாசங்கள் அதிகளவில் இடம்பெற்றால், அத்திரைப்படம் வரிவிலக்கு பெறுவதற்கான தகுதியை இழக்கும்.

இது கிட்டத்தட்ட வரிவிலக்கு ரத்து என்பதின் தெளிவுரை விளக்கம் தான்.நல்ல மெசேஜ் உள்ள படங்களுக்குக் கூட U/A சான்றிதல் கிடைக்கும் இந்தக் காலக் கட்டத்தில் மேலே சொல்லப்பட்ட அனைத்து தகுதிகளையும் ஒரு படம் பெற வேண்டும் என்றால் வி.சேகரும்,விசுவும் மீண்டும் களத்தில் இறங்கினால் மட்டுமே சாத்தியம்.

  ஆனால்,இந்த அறிவிப்புக்கு தமிழ் திரைப்பட உலகில் எதிர்ப்பு இருந்தாலும் யாருமே அதை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.மாறாக ஒளிஓவியர் உட்பட ஒரு சிலர் இதற்குத் துதிபாடவே செய்தனர்.

சரி....இதில் எந்தத் தகுதியின் அடிப்படையில் 'மூணு' படம் வரிவிலக்குப் பெற்றது?
 
 

Monday 16 April 2012

ஒரு கல் ஒரு கண்ணாடி -சந்தானத்தின் காமெடி சரவெடி வசனங்கள்




உதயநிதி:  பாண்டிச்சேரி போறோம். கல்யாணத்த நிப்பாட்டுறோம். பொண்ணத் தூக்குறோம். இதான் மச்சான் பிளான்.

சந்தானம்:  என்னது பொண்ணத் தூக்குறதா?...டேய்,அவங்க சீர்வரிசையா குடுக்கிற கட்டில் பீரோவக் கூட என்னாலத்  தூக்கமுடியாது. மீசை வளந்தா பெரிய பசங்களெல்லாம் சண்டைக்கு கூப்பிடுவானுவோனு பயந்துதான்  மீசையே வைக்காம இருக்கிறேன்.

உதயநிதி: டேய் என்னடா பன்னுவானுவோ..ஆளு வச்சி அடிப்பாங்களா? இல்ல போலீசுகிட்ட  போவாங்களா...என்ன ஆனாலும் சரி ..எவன் குறுக்க வந்தாலும் சரி..................மச்சான் நீ பாத்துக்கோ..!

சந்தானம்:   ???????????
--------------------------------------------------------------------------

உதயநிதி: டேய் ..கல்யாணத்த நிப்பாட்ட கார் கேட்டா.. இதப்போயி எடுத்துட்டு வந்திருக்க.

சந்தானம்: ஏன் மச்சான் கல்யாணத்த நிறுத்திறதுக்குன்னே ஏதாவது புது மாடல் கார் விட்டிருக்காங்களா? 

---------------------------------------------------------------------------
பூக்கடைக் காரரிடம்..

சந்தானம்: யோவ்...ஏதாவது டிஸ்கவுன்ட் கொடுய்யா..

பூக்கடைக்காரர்:  டிஸ்கவுன்ட் எல்லாம் கிடையாது சார்...வேணா  இந்தப் பூவ வச்சுக்கிங்க..

சந்தானம்:  காதுலையா?
-----------------------------------------------------------------------------
சிக்னலில் ஒரு பெண்ணிடம்..

உதயநிதி: எக்ஸ்கியுஸ்மி..ஒரு கப் காபி சாப்டலாமா?.ஏனா.எந்த நல்லக் காரியம் பன்றதுக்கு முன்னாடியும் காபி சாப்டனும்னு எங்க அம்மாசொல்லியிருக்காங்க.

பெண்: காபி சாப்டர பழக்கம் இல்லீங்க..

சந்தானம்: வாங்க அப்ப பீர் சாப்டலாம். ஏனா எந்த நல்ல காரியம் செய்யுறதுக்கு முன்னாடியும் பீர் சாப்டனும்னு எங்க ஆயா சொல்லியிருக்காங்க...  

பெண்: லெகரா.?..ஸ்ட்ராங்கா ?

-------------------------------------------------------------------------------

(ஹன்சிகாவை சந்தானத்திடம் அறிமுகம் செய்யும் போது....)

சந்தானம்: பசங்க பாக்கனுன்னே பால்கனியில சுத்துராளுகளே  

சந்தானம்: வாவ்...

உதயநிதி: டேய் என்னடா உன் சிஸ்டர இப்படி பாக்கிற? 

சந்தானம்:???????? .. இட்ஸ் ஓகே மச்சான்.. கேரி ஆன்
 --------------------------------------------------------------------------------

 உதயநிதி: மனிதனாகப பிறந்தால் ஏதாவது ஒரு தீயப் பழக்கம் இருக்க வேண்டும்.அப்போதுதான் அவனது வாழ்க்கை முழுமையடையும் 

சந்தானம்: இந்தப் பொன்மொழியை காலையில காலேண்டர் கிழிக்கும் போதுதான படிச்ச..?


-----------------------------------------------------------------------------------


சந்தானம்:  ஏண்டா, சரக்குல ஆ.'.ப் போட முடியலுனு பேசுறதுல ஆ.'.ப் போட்டு பேசுறியா..

-----------------------------------------------------------------------------------

 சந்தானம்: திட்டுறதுக்கு வார்த்தையில்லாம திட்டுற வார்த்தையையே திருப்பி திருப்பித் திட்டிகிட்டு இருக்கிற..

-----------------------------------------------------------------------------------

சந்தானம்:  மச்சான்...செட்டாகாத பிகரு பின்னால சேவிங் பண்ணிட்டு பிரண்டு ஒருத்தன் சுத்துறானா,கூட இருக்கிற பிரண்டு  தாண்டா உள்ள போயி கெடுக்கணும்.இதெல்லாம் பெருமையில்ல..கடமை..!.

-------------------------------------------------------------------------------------
 ஹலோ ..அஞ்சி ஈ (5E) பஸ் வருமா..?.

சந்தானம்:  அழுகிப்போன பழம் மாதிரி மூஞ்ச வச்சிருந்தா,அஞ்சி ஈ இல்ல பத்து ஈ ,பதினஞ்சு கொசு, இருபது வண்டு கூட வரும்.
-------------------------------------------------------------------------------------

உதயநிதி: உனக்கு விரலு சூப்புற பழக்கம் இருக்குனு உங்க அம்மா உன் விரலுல வேப்பெண்ணையை தடவி விடுவாங்க ,அப்ப நீ என் விரலதான சப்பின..

--------------------------------------------------------------------------------------
 அய்யோ.... பார்த்தா(பார்த்தசாரதி) ஏன் இந்த காவி டிரஸ்?

சந்தானம்: காதல்ல தோத்தவன் காவி டிரஸ் போடாம, பின்ன நேவி டிரஸ்ஸா  போடுவான்?
---------------------------------------------------------------------------------------
சாமிநாதன் : சீடா..

சந்தானம்:     இருடா... ஐயோ குருஜி 

சாமிநாதன் : மீண்டும்  லவ்கீக வாழ்க்கை என்னும் குழியில் விழத்தான் போகிறீர்களா... 

சந்தானம்:   ஆமாம் குருஜி.

சாமிநாதன் : முதலில் அவள் உன்னை மெட்டி போட வைப்பாள் ..பிறகு முட்டி போட வைப்பாள் 

சந்தானம்:  அவ என்னை  ஜட்டி போட வச்சாலும் பரவா இல்ல குருஜி!

----------------------------------------------------------------------------------------- 

சந்தானம் கேர்ள் பிரன்ட்:அந்த குருஜி ஒரிஜினல் இல்ல...
 
சந்தானம்:அவரு ஒரிஜினலு இல்லாம அசெம்பல் செட்டா

------------------------------------------------------------------------------------------

உதயநிதி: என் ஆளு மீரா ஏர் ஹோஸ்டஸ் டிரைனிங்க்காக சென்னை டு மும்பை போறாங்க.. 

சந்தானம்: அதுக்கு..முதல் முதல்ல பிளைட்ல போறதால பிளைட் டயருல எலுமிச்சப்பழம் வைக்கச் சொல்றீங்களா.. இல்ல மொட்ட மாடியிலிருந்து டாட்டா காட்ட சொல்றீங்களா?


-----------------------------------------------------------------------------------------------
(சினேகா  அறிமுகமாகும்  போது ...)
.
உதயநிதி: டேய்... புன்னகை அரசிடா...!

சந்தானம்: நான் என்ன... புழுங்கல் அரிசின்னா சொன்னேன்.

 ----------------------------------------------------------------------------------------------

சந்தானம்: DC சார் எதுக்கு.. நாட்டு கோழி முட்டையை நல்ல பாம்பு பாக்கிற மாதிரி அப்படி பாக்குறீங்க..

-----------------------------------------------------------------------------------------------

சந்தானம்: டேய்... மொட்டையப்பாத்து இது வெய்யிலுக்கு அடிச்ச மொட்டையா வேளாங்கண்ணிக்கு அடிச்ச மொட்டையானு சொல்ற ஆளு நானு.உன் முழிய பாத்தாலே தெரியுது நல்ல மூடுல இருக்க.பிரண்ட்சிப் பத்தியெல்லாம் பேசி ரியாக்சன கெடுத்துக்காத.

----------------------------------------------------------------------------------------------

ஹைலைட்டான .'.பிளைட் காமெடி.

(ஏர்போர்ட்டில் )

சந்தானம்:எக்ஸ்கியுஸ்மி.. நீங்க கிங் பிசர்ல ஒர்க் பண்ணுறீங்களா..

                   : எஸ்.......  

சந்தானம்: எந்த ஒயின் ஷாப்பிலும்  உங்க கம்பெனி பீர் கூலிங்காகவே  கிடைக்க மாட்டேங்குது.இது விசயமா உங்க எம் டி கிட்ட நான் கொஞ்சம் பேசமுடியுமா?


 (.'.பிளைட்டில்....)


ஏர் ஹோஸ்: ஹலோ இங்க என்ன பிரச்சனை.

உதயநிதி:    வாழ்க்கையே பிரச்சனைதாங்க.நான் நினைச்சது எதுவுமே கிடைக்க  மாட்டேங்குது.லவ்வும் செட்டாகுல..அட்லீஸ்ட் இந்த ஜன்னல் சீட்டாவது எனக்கு குடுங்க. 

ஏர் ஹோஸ்: நீங்களாவது கொஞ்சம் விட்டுக் கொடுக்கலாமே.

சந்தானம்:  என்னது.. டிபன் சாப்றது ஒருத்தன்.டிப்ஸ் வக்கிறது ஒருத்தனா. அதுலாம் முடியாது.  

உதயநிதி:  அப்ப.. இதெல்லாம் ஒத்துவராது. நான் .'.புட்போர்ட் அடிச்சசிகிறேன்.

ஏர் ஹோஸ்: என்னது  பிளைட்ல புட் போர்டா ? அது மாதிரி எல்லாம் பண்ண முடியாது.

உதயநிதி:  என்னங்க நீங்க..ஜன்னல் சீட்டும் இல்லங்கிறீங்க..'.புட்போர்டும் முடியாதுங்குறீங்க.பின்ன என்ன டிரைவர் சீட்லயா ஒக்காருறது?

ஏர் ஹோஸ்: என்னது டிரைவர் சீட்டா?

சந்தானம்: அப்ப.. உங்க சீட்ல ஒக்கார வச்சுகிங்க... 

(ஒரு வழியா சமாதானம் ஆகி... )

உதயநிதி: எப்படியும் சாப்டறதுக்கு வழியில கேண்டீன்ல நிப்பாட்டுவீங்களே....  அப்ப மாறி ஒக்காந்துக்கலாம்.

ஏர் ஹோஸ்: என்னது கேண்டீனா?  சார்.. நாங்க கேண்டீன்ல எல்லாம்  நிப்பாட்டுரதில்ல.

சந்தானம்: ஓ..அப்ப பாய்ன்ட் டு  பாய்ண்டா  
 
ஏர் ஹோஸ்: இல்ல சார் எல்லாமே இங்கேயே கிடைக்கும். 
------------------

ஏர் ஹோஸ்:  சார்.. இட்ஸ் டைம் டு  டேக் ஆ.'.ப் .கேன் யு பிளீஸ் பாஸ்டன் யுவர் பெல்ட் .

உதயநிதி: பெல்ட்டா... நான் ஆல்ரெடி வீட்லே  போட்டுட்டு வந்துட்டேனே.

ஏர் ஹோஸ்:  நான் அந்த பெல்ட்ட சொல்லல ..சீட் பெல்ட்ட சொன்னேன். 

உதயநிதி: அய்யய்யோ நான் சீட் பெல்ட் எல்லாம் எடுத்துட்டு வரலியே
-------------------------------

உதயநிதி: ஹலோ மேடம். என் பெல்ட்ட அவுத்து விடுங்க.நான் டிரைவர பாக்கானும்.எனக்கு அவரு மேல டவுட்டா இருக்கு.

ஏர் ஹோஸ்: என்னது டிரைவரா ?

சந்தானம்: அப்ப கிளீனர வர சொல்லுங்க...
-------------------------------

ஏர் ஹோஸ்: உங்களுக்கு எதுவும் ஆகாது.பயப்படாதிங்க.அப்படியே எதுவும் ஆனா நாங்க உங்களுக்கு பாராசூட் தருவோம்.

சந்தானம்: ஏங்க.. உயிர் போற நேரத்தில தேங்கண்ணெய வச்சி நாங்க என்ன பன்றது?
----------------------------------------------------------------------------------------------------------------------



நடிகர் திலகத்தை கலாய்த்த இடங்கள்.....

சந்தானம்:  டேய்...மோந்து பாத்தாலே போதையாயிடுவாங்கனு கலாச்சிதாண்டா பார்த்திருக்கேன்.ஆனா.. கண்ணெதிரே இப்பதாண்டா பாக்குறேன்.தமிழ் நாட்டுல பீர் தட்டுபாடு வந்தப்ப மொத பஸ்ஸ புடிச்சி பாண்டிச்சேரி போயி பீர் வாங்கி குடிச்சது யாரு?. நம்ம பயலுகதான். அப்படியாப்பட்ட மண்ணுல பொறந்துட்டு, மோந்து பாத்தே போதையாவிறியேடா..


(போலிஸ் நிலையத்தில் ..இரவு முழுவதும் சந்தானம் மிமிக்கிரி செய்து சோர்ந்து போனபின் ) 

உதயநிதி: என்ன மச்சான்  சிவாஜி சார் வாய்ஸ் எடுக்கிறியா 

சந்தானம்: டேய்...ராத்திரி பூரா மிமிக்கிரி பண்ணி பண்ணி அந்த ஆளு வாய்ஸ் மாறி ஆயிடிச்சிடா ..
-----------------------------------------------------------------------------------------------------------------------



சந்தானத்தின் தத்துபித்துவங்கள்...
தண்ணியடிக்கிற  பழக்கம் என்பது தலையில வர்ற வெள்ள முடி மாதிரி.. ஒன்னு வந்துட்டா போதும். ஜாஸ்தியா ஆகுமேத் தவிர கம்மி ஆகவே ஆகாது.

நீ கரக்ட் பண்ற பொண்ண விட,உன்ன கரக்ட் பண்ணுற பொண்ணுதான் ஒர்க் அவுட் ஆகும் .

ஏரி உடைஞ்சா மீனு ஏரியாவுக்கு வந்துதானே ஆகணும்.

கேக்கிறவன் கேனையனா.. கேரம்போர்ட கண்டு பிடிச்சது கே.எஸ்.ரவிக்குமாரு சொல்வியா?

 FACT..FACT..FACT..இந்தப் பொண்ணுங்க ஒருநாளைக்கு பத்து பேருக்கு ஓகே சொன்னா.. பத்தாயிரம் பேரை கழட்டி விடுறாங்க. 

டேய் ஆணவத்தில ஆடாதடா. ராணுவத்தில அழிஞ்சவங்க விட ஆணவத்தில அழிஞ்சவங்கத்தான் அதிகம்.

அயன் பன்றவங்க அழக் கூடாது.


பொண்ணுங்களோட ரத்தமும் சிவப்பு.பையன்களோட ரத்தமும் சிவப்பு.அப்பறம் ஏன் பொண்ணுங்களோட எண்ணம் மட்டும் கருப்பா இருக்கு.?

டேய்... நான் மொடாக் குடிகாரனுவ கூட சேர்ந்துக் குடிப்பேன். ஆனா மோந்துப் பாக்குறவன் கூடெல்லாம் குடிக்க மாட்டேன்.
--------------------------------------------------------------------(((((((((((()))))))))))))))))------------------

Saturday 14 April 2012

வூடு கட்டி அடி.....(சிறுகதை)


"ம்ப்பா..இந்த வூட்ட, டவுனுக்கு பக்கத்தில வேற எங்கயாவது கட்டியிருக்கலாமே.." மரத்துப் போன நாக்கின் செல்களை  மீண்டும் உயிர்பித்த தன் அம்மாவின் கைப்பக்குவத்தைச் சுவைத்துக் கொண்டிருந்த மகேசிடம், கொஞ்சம் தயக்கத்துடன் கேட்டார்,அப்பா கந்தசாமி.

"இல்ல...டவுனுல இருக்கிற வூட்டோட வெல எல்லாம் சர சர யேறிகிட்டுயிருக்கு. இந்த கிராமத்துல இம்புட்டு காசபோட்டு....." கட்டிலின் இரு புறங்களிலும்  கைகளை ஊன்றிக்கொண்டு விட்டத்தைப் பார்த்த படி மீண்டும் முணுமுணுத்தார். 
       
"சங்கர் வீட்டுல ஏதாவது சொன்னாங்கலப்பா?...சாப்பிடுவதை நிறுத்திவிட்டு அப்பாவிடம் வினவினான் மகேஷ்.

"அதெல்லாம் ஒண்ணுமில்ல...எனக்கு இந்தக் கிராமத்தில போயி வூடு கட்டுறது  அவ்வளவு சரியாப் படல..." 

"அப்ப...கட்டுன வீட்ட இடிச்சிரலாமாப்பா?" மகேசின் வாயிலிருந்து விழுந்த இந்த வார்த்தையில் கொஞ்சம் கோபமும் கலந்திருந்தது.

"புள்ள சாப்பிடறப்பத்தான் இதெல்லாம் கேக்கணுமா..நல்ல சாப்பாடு சாப்பிட்டு எவ்ளோ நாளாச்சி..அவன் எது செஞ்சாலும் சரியாத்தான் இருக்கும்.நீ சாப்புடுயா.." மகனுக்காக வரிந்துக் கட்டிக்கொண்டு பேசினாள் அம்மா பாக்கியவதி.

"இப்ப நான் என்ன சொல்லிட்டேன்..எல்லாம் அவன் எதிர் காலத்துக்காகத் தான் பேசுறேன்"

"நாலு எழுத்து படிச்சவன்.அவனுக்குத் தெரியாதா எது நல்லது எது கெட்டதுன்னு? எல்லாம் காலையில பேசிக்கிலாம் போங்க"

"என் பேச்சுக்கு இங்க எந்த காலத்துல மரியாத இருந்திருக்கு .." உதறிய துண்டை தோளில் போட்டவாறு வெளிநடப்பு செய்தார் கந்தசாமி.

"எல்லாம் அந்த சங்கரப்பா செய்யிற வேல தம்பி.டீக்கடைக்கு எப்பப் போனாலும் இதப்பத்தி தான் பேசுறாராம்" கந்தசாமியின் கோபத்துக்கு விளக்கம் சொன்னாள் பாக்கியவதி.  

மகேஷ்-சங்கர் இருவரும் பள்ளியிலிருந்தே நண்பர்கள்.மகேஷ் வீட்டிலிருந்து நான்கு வீடு தள்ளி தான் சங்கர் வீடு உள்ளது.இரண்டு குடும்பமும் நடுத்தர வர்க்கம்தான்.என்றாலும் இருவரையும் பாலிடெக்னிக் வரை படிக்க வைத்திருந்தனர்.இப்போது மகேஷும் சங்கரும் இருப்பது வெளிநாட்டில். அதுவும் நிரந்தரக் குடியுரிமையில்.
    
          இரண்டு குடும்பத்திற்கும் முகநக நட்பு இருந்தாலும் உள்ளுக்குள் பொறாமைப் பூசின ஒரு போட்டி இருந்து கொண்டு தான் வருகிறது.அது பரம்பரைப் பகையல்ல.ஒரே மட்டத்திலுள்ள நெருக்கமான இரண்டு குடும்பங்களில் ஓன்று தன் நிலையை சற்று உயர்த்திக் கொண்டால்,மற்றக் குடும்பத்திற்கு வரும்  சாதாரண ஈகோபோலியா நோய்.இருவரது வீட்டில் யார் எந்தப் பொருள் புதிதாக வாங்கினாலும் அடுத்த கணமே மற்றொரு வீட்டில் மாங்கல்யத்தை அடகு வைத்தாவது அந்தப் பொருளை வாங்கியாக வேண்டும் என்கிற கட்டாய விதி. அது,இவர்களை வெளி நாட்டுக்கு அனுப்புவதில் கூட நீடித்தது.

        ஆனால் இந்த ஒரு விசயத்தில் மட்டும் தான் இருவருக்குள்ளும் வேறுபாடு இருந்தது.அது அவர்கள் வீடு கட்டத் தேர்ந்தெடுத்திருக்கும் இடம்.சங்கர் தற்போது வீடு கட்டிக் கொண்டிருப்பது டவுனில்.ஆனால் மகேஷின் தீர்க்கமான முடிவு, தன்னை வளர்த்த கிராமத்தில்.

      மகேஷ்-சங்கர் இருவருக்குமே திருமணத்திற்கு முன் எப்படியாவது வீடு கட்டி முடித்து விட வேண்டும் என்ற கனவு இருந்தது.அதற்காக இருவரும் திருமணத்தைக் கூட தள்ளி வைத்து விட்டார்கள்.தன் உழைப்பில் சிந்திய வியர்வையையும், ஓயாமல் பட்ட கஷ்டங்களையும் இருவரும் அவரவர்கள் கட்டும் வீட்டில் தான் விதைத்திருக்கிறார்கள்.

        இரவு பகல் பார்க்காமல் கஷ்டப்பட்டு உழைத்து பணமீட்டுபவர்கள் ஒரு போதும் ஈகோ பார்ப்பதில்லை.ஆனால் அதை அனுபவிப்பவர்களுக்குத் தான் இனம் புரியாத ஒரு அகங்காரம் இதயத்தில் குடியிருக்கும்.தான் எடுக்கும் முடிவே சரியானதே என்று வாதிடும் கர்வம் இருக்கும்,அது தவறான முடிவாக  இருந்தாலும் கூட.

      ஆரம்பத்தில் சரியெனச் சொன்ன மகேஷின் தந்தை,தற்போது மனமாறி அங்கலாய்த்துக் கொள்வதற்கான காரணமே சங்கரின் அப்பாதான் என்பது மகேஷுக்கு புரியாமல் இல்லை.ஆனால் இந்தப்பிரச்சனையை பெரிதுப் படுத்தி நல்ல நட்பை  நஞ்சாக்க அவனுக்கு விருப்பமில்லை.

   றுநாள் காலை,வங்கியில் பணம் எடுப்பதற்காக மகேஷ் தன் தந்தையை அழைத்துக் கொண்டு புறப்படலானான்.கந்தசாமியின் கோபம் இன்னும் அடங்கவில்லை என்பது அவரின் மௌனம் உணர்த்தியது.பேருந்து நிறுத்தத்திற்கு செல்லும் வழியில் உள்ள டீக்கடைய கடந்த போது அந்த குரல் கேட்டது.

 "மகேஷ்..." அது..... சங்கரின் அப்பா.  

 "என்ன மகேஷ் எப்ப வந்த ?.சங்கர் கூட .'.போன் பண்ணிருந்தான், நீ நேத்திக்கு   வருவேன்னு..." 

"........................."

"வேலையெல்லாம் பரவாயில்லையா?..நீ ரொம்ப கஷ்டப் படுறதா சொன்னான்"

இவர் இப்படித்தான்.கேள்வியைக் கேட்டுவிட்டு அதற்கான பதிலை நாசுக்கா இவரே சொல்லிவிடுவார்.நக்கலடிக்க நினைப்பவர்கள் பின்பற்றும் சுலப வழி.

"சங்கருக்கு கம்பெனியிலே வீடு குடுத்திருக்காங்கலாமே...நீயும் அது மாதிரியான  கம்பெனியா பாத்து போயிருக்கலாமே..."

"ம்ஹும்.. .'.பிரி அக்கொமொடேசன் என்கிற பேருல 'கன்டைனர்ல' தங்க வைக்கிறது இவருக்கு எங்கே தெரிய போகுது....". மனதுக்குள்ளே புலம்பிக் கொண்டான் மகேஷ். 

"ஆமா..இவ்வளவு அவசரமா எங்கே கெளம்பிட்டீங்க.?..முதல் முறையாக மகேசை பேசுவதற்கு அனுமதித்தார்.

"கொஞ்சம் பேங்க் வரை போறோம் மாமா..."  

"அப்படியா...சரி,வீட்டு வேலையெல்லாம் எப்படிப் போவுது?"

"முக்கால்வாசி முடிஞ்சிடிச்சி...இன்னும் பூச்சு வேலை மட்டும் பாக்கியிருக்கு. அதான் பாத்துட்டு போவலாம்னு வந்திருக்கேன்."

"ஆனாலும் நீ கொஞ்சம் அவசரப்பட்டுட்ட மகேஷ்.. " அவர் நெஞ்சிலிருந்த நஞ்சுப் பூனை லேசாக எட்டிப் பார்க்க ஆரம்பித்தது.

"இப்ப எங்களையே எடுத்துக்க..போன வருஷம் டவுன்ல நாங்க வாங்குன இடம் நாலு லட்சம்.இன்னிக்கு தேதிக்கு அஞ்சரை லட்சத்துக்கு போகுது.இன்னும் பத்து வருசத்தில அதோட விலை எங்கேயோ போயிடும்.நாலு பேருகிட்ட விசாரிச்சிதான் நாங்க இந்த முடிவ எடுத்தோம்.ஏன்னா நாள பின்ன எம் மவன் வருத்தப்படக் கூடாது பாரு.டவுன்ல வீடு கட்டுறது எவ்வளவு பெருமையா இருக்கு தெரியுமா தம்பி...?. ஏன் கந்தசாமி நீயாவது உன் பையன்கிட்ட எடுத்து சொல்லியிருக்கக் கூடாதா?" 

கந்தசாமியின் மனதுக்குள் புகைந்துக் கொண்டிருந்ததை பெட்ரோல் ஊற்றி பற்ற வைக்க ஆரம்பித்தார்.ஆனால் கோபத்தை கட்டுக்குள் வைத்து அமைதியாக இருந்தார் கந்தசாமி.தன் அப்பாவின் முகம் மேலும் வாடிப் போவதை விரும்பாத மகேஷ், தீர்க்கமாக பேச ஆரம்பித்தான்.

"நீங்க எடுத்த முடிவு உங்களுக்கு சரின்னு பட்டா,தாராளமா செய்யுங்க.பணம் என்கிற ஒரு விசயத்த மட்டும் வச்சுப் பார்த்தா,நீங்க சொல்றது சரி தான் மாமா.ஆனா..எங்களுக்கு?..நானும் சங்கரும் கல்யாணத்துக்குப் பிறகு வெளிநாட்டிலே செட்டில் ஆகத்தான் முடிவு செஞ்சிருக்கோம்.எங்க குழந்தைகளும் அங்கு தான் வளரப் போகுது.அங்க,பேசிப்பழக நல்ல மக்கள் அவ்வளவா கிடையாது.நாம பெருசா மதிக்கிற பண்பாடும் கலாச்சாரமும் நம்ம அளவுக்கு அங்க யாரும் பின்பற்ற மாட்டாங்க.இது எல்லாத்தையும் எங்களோட அடுத்த தலைமுறைக்கு கற்றுக்கொடுக்கணும்னா,வருசத்துக்கு ஒரு முறையாவது நாங்க ஊருப்பக்கம் வந்துட்டு போகணும்.ஒரு மாச லீவுல ஊருக்கு வர்ற நாங்க சிட்டியிலே தங்கிட்டா, நாம வாழ்ந்த மண்ணோட மகத்துவத்தையும்,பெருமையையும் எப்படி அவங்களுக்கு உணர வைக்கிறது?.. இது நான் படிச்ச பள்ளிக்கூடம்,இதோ இந்தக் குளத்தில்தான் நான் டைவ் அடிச்சி குளிப்பேன்,இந்த மரத்தில்தான் நாங்க ஊஞ்சல் கட்டி ஆடுவோம்னு எங்க பசங்களுக்கு சொல்றப்போ அதுல கிடைக்கிற ஆனந்தமே தனி மாமா.இதோ... எங்க வீட்டிலிருந்து இங்க வர்றதுக்குள்ள எத்தனைப் பேரு.. "நல்லா இருக்கியா தம்பி...எப்ப வந்தீக"னு அன்பா கேக்கிற இந்த வார்த்தைகளை,நாங்க இங்க வந்து போற அந்த ஒரு மாசத்தில சிட்டியில எங்க போயி தேடுறது?.சிட்டியில நாம கட்டுன வீட்டோட விலை ஏறத்தான் செய்யும்.அதனால நமக்கு என்ன லாபம்?.நாம என்ன ஆசையா கட்டுன வீட்ட விக்கவா போறோம்?விக்காத வீட்டுக்கு விலை ஏறினா என்ன? இறங்கினா என்ன? சிட்டியில உள்ள நெருக்கடியையும்,தண்ணி கஷ்டத்தையும் எங்க பசங்க அனுபவிச்சா,பிற்பாடு அவங்களுக்கு இங்க வர்ற ஆசையே அத்துப் போய்டும்.என் மனசுக்கு இதுதான் சரின்னு பட்டது..." மகேஷ் பேசிக்கொண்டேப் போக அந்த அதிகாலையிலும் சங்கர் அப்பாவின் முகம் வியர்த்தது.

"நாலு பேரு நாலு விதமா சொல்வாங்கப்பா..அதையெல்லாம் நாம பொருள் படுத்தக்கூடாது.நாம பேங்க்குக்கு போகலாம் கெளம்பு மகேஷ்.." நீண்ட நாட்களுக்குப் பிறகு தன் மகனின் தோளைத் தொட்டுப் பேசினார் கந்தசாமி. 
 

டிஸ்கி.

     இது எனது முதல் சிறுகதை(மாதிரி).இதெல்லாம் ஒரு....அப்படீன்னு நெனைக்கிறவங்க,தாராளமா பின்னூட்டத்தில பின்னிப் பெடலெடுத்துட்டுப்  போகலாம்.

---------------------------------------------------------(((((((((((((()))))))))))))))))---------------------------- 




Thursday 12 April 2012

சார்... உங்களுக்கு ஆறு கோடி ரூபாய் பரிசு விழுந்திருக்கு.


"ஹலோ.. மிஸ்டர் ஏமாந்தவாயன்...."

"அமாங்க...  நான் தான்."

"வி ஆர் காலிங் .'.ப்ரம்   பிரான்ஸ்....."

 "?!?!?!?!?!?! ..."

 "ஹலோ மிஸ்டர்.... ஆர் யு தேர்?"

"யாருய்யா நீங்க?"

"ஐ ஆம் ஜேம்ஸ் கிரே. டுபாக்கூர்  லாட்டரியில இருந்து பேசுறோம்.நீங்க தானே மிஸ்டர் ஏமாந்த வாயன்"

"ஆ.ஆ...ஆமாங்க....."

"மொதல்ல ஒரு கிலோ சக்கரையை வாங்கி உங்க வாயில கொட்டிக்கீங்க.."

"எதுக்குங்க..? ஒன்னும் வெளங்கலியே ...."

"கரக்ட்... எங்களுக்கு அதுதான் வேணும்...நீங்க ரொம்ப அதிஷ்டசாலிங்க. சார்.."

"எல்லாம் சரிதான்...மொதல்ல விசயத்த சொல்லுங்க."

"சார்... உங்க வீட்டத் தேடி லட்சுமி வந்திருக்குங்க"

"எந்த லட்சுமி????"

"ம்ம்....ஜோதிலட்சுமி....நீங்க கோடீஸ்வரன் ஆயிட்டீங்கனு சொல்லவறேன் சார்" 

"ஐ  திங் யு ஆர் ராங் நம்பர்..."

"சார்.. சார்...வச்சிடாதிங்க. ஒரு நிமிஷம்.நம்பர் 111,இளிச்சவாயன் காலனி,வெகுளி காரத்தெரு, அப்பாவி நகரில் உள்ள ஏமாந்தவாயன் நீங்க தானே..."
    
 "ஆ.ஆ..ஆமாங்க.....ஆனா..ஒன்னும் மட்டுப் படலியே..."

"இப்பப் படுத்துறோம்  பாருங்க...உங்களுக்கு டுபாக்கூர் லாட்டரியில ஆறு கோடி ரூபாய் விழுந்திருக்கு சார்...."

"என்னது... ஆறு கோடியா...ஆஆஆ"

"(அப்பாடா...இது போதும்..) ஆமா சார் ஆறு கோடி!"

"சார்.. இது நெசமா?!?!?!?!?!?!"

"ஆமா சார்... யு வொன் ஒன் மில்லியன் யுரோ-டாலர்ஸ்...."

"சார் ஆனா.. நான் ஏதும் லாட்டரி ..வாங்கின... மாதிரி... ஞாபகம்... இல்லையே.."

"(அது எங்களுக்கும் தெரியும்) என்ன சார்..நல்லா ஞாபகப் படுத்திப் பாருங்க."

"ம்ம்ம்ம்..ஒரே  கொழப்பமா இருக்கே..."

"நல்லா யோசிச்சிப் பாருங்க சார்.ஆறு கோடி!!!!."

"இல்ல... வாங்கின மாதிரியும் இருக்கு ..வாங்காத மாதிரியும் இருக்கு."

"(இதத் தான் நாங்க எதிர் பார்த்தோம்.....)நல்ல யோசிச்சி பாருங்க சார்...இப்ப நீங்க ஷாப்பிங் பண்ணப் போறிங்க.மீதி சில்லறை இல்லனா எதாவது லாட்டரி எடுத்துக் கொடுப்பாங்க.."

"ஒரு வேலை இருக்குமோ?..."

"இல்ல இன்டர்நெட்ல ஒக்காந்து பலான பலான மேட்டர் பாத்துக்கிட்டு, தன்நிலை மறந்து இருக்கிறப்போ ஏதாவது கிளிக் பண்ணி வாங்கியிருப்பீங்க..."

"ஆங்........கரக்ட் சார். திடீர்னு 'நீங்க 99999 ஆவது ஆள்...யு வொன் தி ப்ரைஸ்' னு வர்றத  பாத்திருக்கேன் சார்."

"(எலி சிக்கிருச்சி....)அதே தான்...அதுல தான் சார் நீங்க வாங்கியிருக்கீங்க....."

"ஆனா நான் ஏதும் 'பே' பண்ணலையே  சார்..."

"யாருக்குங்க தெரியும்...கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வருது.. கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிச்சிகிட்டுப் போடுது...இதெல்லாம் நீங்க கேட்டதில்லையா. அது போல இப்ப அந்த தெய்வத்துக்கு உங்க மேல கரிசனம் போல சார்..."

"இருக்கலாம்....இருக்கலாம்...ஆனா எப்படி சார்  இத  உறுதியா நம்புறது?"

"ஹலோ... வி ஆர் காலிங் .'.ப்ரம்  பிரான்ஸ்.....யு செக் திஸ் நம்பர்..யு சஸ்பெக்ட் அன்ட் டிஸ்டர்ப் அன்ட்  நாட் ரெஸ்பெக்ட் அன்ட் இன்சல்ட் மீ (அப்பாடா ...ஒரு கோர்வையா வந்துடுச்சி..)"

"சார்....சார்...ஏதாவது தப்பா பேசியிருந்தா மன்னிச்சுகுங்க சார்."

"தென்... ஹொவ் டேர் யு ஆஸ்க் திஸ் சில்லி கொஸ்டின்?...யு டோன்ட் வான்ட் சிக்ஸ் குரோர்ஸ் ???"

"அய்யய்யோ....எதோ பதட்டுத்துல வந்துட்டு சார்."

"பதட்டுத்துல உச்சாதான் வரணும்..இது மாதிரி டவுட் எல்லாம் வரக்கூடாது. சரி.. இருந்தாலும் நீங்க கேட்டதுக்காக சொல்றேன்..நீங்க வாங்கின (?!) லாட்டரி யோட நம்பர் தாரேன்.அதை WWW.DUPAKKURLOTTARY.COM ல போயி செக் பண்ணி பாருங்க.அதிலேயும் நம்பிக்கை இல்லனா..."
"சார்..சார் ..உங்களை நம்புறேன்   சார்."


(அப்படி வா மவனே வழிக்கு ....) ம்ம்ம்...அது!

"அப்பறம் சார் ஒரு விஷயம்..இந்த விசயத்த யாருகிட்டேயும் சொல்லிடாதீங்க சார்.தெரிஞ்சா... என் வீட்டு வாசலில கியூ கட்டி நிப்பாய்ங்க.."

"( இது நாங்க சொல்ல வேண்டிய டயலாக் ஆச்சே...) வெரி குட்.இத ரெண்டு பேரும் மெயின்டைன் பண்ணுவோம்.சும்மாவா... ஆறு கோடியாச்சே..."  

"சார் இந்தப் பணத்த  எப்பத் தருவீங்க..."

"(ஐ...அஸ்கு..புஸ்கு ...) கண்டிப்பா உங்களுக்கு மொத்தப் பணத்தையும் செட்டில் பண்ணி விடுவோம்.அதுக்கு முன்னாடி ஒரு விஷயம்... உங்களுக்கு பேங்குல அக்கவுன்ட் இருக்கா?"

"ஆங்....இருக்கு சார்.."

"(அப்பாடா..)..சரி...இனிமே எதைப்பத்தியும்  கவலை படாதீங்க. எல்லாத்தையும் நாங்க பாத்துக்குறோம்.உடனே  எங்களுக்கு உங்க பாஸ்புக்,செக்புக்,ஏடிஎம் கார்டு,வேற எதெல்லாம் இருக்கோ எல்லாத்தையும் கொரியர்ல அனுப்பி வையுங்க."

"இதெல்லாம் எதுக்கு சார்?"

"யோவ்....ஆறு கோடியை போயி ஆத்துலையா போடமுடியும்? உன் அக்கவுண்டுல போடனுமையா...இப்படியெல்லாம் கேள்வி கேட்டா அப்பறம் ஆறு கோடியும் ஆசிரமத்துக்கு எழுதிவச்சி புடுவேன் ஆமா..."

"அய்யய்யோ...அப்படியெல்லாம் செஞ்சிடாதீங்க சார்...இத வச்சி என்னெல்லாம் பிளான் பண்ணியிருக்கேன்...உடனே அனுப்பி வச்சிடுறேன் சார்."

"(நாங்களும்  இத வச்சி என்னெல்லாம் பிளான் பண்ணிருக்கோம் ) அது இருக்கட்டும். அக்கவுண்ட்ல அமௌண்டு  இருக்குல.?"

"அதெல்லாம் இருக்கு சார்.கரெக்டா மினிமம் பேலன்ஸ் ஐநூறு ரூபாய் மெய்ண்டைன் பண்ணிட்டு வர்றேன் தெரியுங்களா... "

"வாட்... பைவ் ஹன்ரடு ருபீஸ் ஒன்லி?...நோ..நோ...யு ஆர் ரிஜெக்டெடு."

"என்ன சார் ஆசைய காட்டி ஆப்பு வைக்கிறீங்க.எனக்கு பணம் கொடுக்கிறதுக்கு என் அக்கவுண்ட்ல எதுக்கு சார் பணம் இருக்கணும்?"

"இது என்ன சாதாரண விசயமா ஆறு கோடி மேட்டர்...இதுல பல புராசசிங் இருக்கு....."
 
"அப்படீன்னா?.."

"அப்படீன்னானா....மொதல்ல பணம் அடிக்கணும் ச்சீ...அடுக்கனும். அப்பறம் சூட்கேசுல வச்சி பேக் பண்ணனும்.அப்பறம் இன்னும் எவ்ளோவோ இருக்கு. இதுக்கெல்லாம் மொதல்ல பணம் கட்டினாத்தான் அந்த ஆறு கோடி கைல கிடைக்கும்.ஆறுகோடி.....ஆசிரமம்....அப்புறம் உங்க இஷ்டம்."

"எனக்கு புரிஞ்சி போச்சி சார்...கொஞ்சம் வெவரமா எவ்வளோ ஆகும்னு சொன்னீங்கனா,இருக்கிற தோட்டம் தொரவ வித்தாவது பணம் ரெடி பண்ணிடுறேன் சார்."

"கரக்ட்...யு கேட்ச் மை பாய்ன்ட்..மொதல்ல எங்க லாட்டரி நிறுவனத்துக்கு பத்து பர்சன்ட் கமிசன் கட்டனும்."

"அப்படீன்னா..அறுபது லட்சம்.சரி..அதுக்கு தென்னந்தோப்ப வித்துடலாம்."

"அடுத்ததா ...போக்குவரத்து செலவு..."

"யாரு போக்குவரத்து சார்?"

"யோவ்....எங்க போக்குவரத்துக்குயா...ஆறு கோடி...கொண்டு வந்து சேக்கரதுனா சும்மாவா... அதுக்கு ஒரு அஞ்சு லட்சம் ஆகும்."

"சரிங்க சார்..இதுக்கு பொண்டாட்டி நகையெல்லாம் வித்துடலாம்."

"அப்பறம்...வரி..."

"யு  மீன் டாக்ஸ்?"

"அதே தான்யா....என்கிட்டே பேசி பேசி நீ ரொம்ப விவரமாயிட்ட."

"அதுக்கு  எம்புட்டுங்க ஆகும்..."

"அதுக்கு....நிறைய ஆகும்.சுங்கவரி,கலால்வரி,சொத்துவரி,சேவைவரி, மதிப்புகூட்டு வரி,ஆக்ட்ராய்  வரி,நில வரி,கேளிக்கை வரி,கொல வெறி இப்படி நெறைய இருக்கு.இது எல்லாத்தையும் கூட்டி நாளால பெருக்கி அஞ்சால வகுத்தோமுனா,கடைசில நாற்பத்தாறு லட்சம் வருது.. உங்களுக்காக எங்க இன்கம்டாக்ஸ் ஆபிசருகிட்ட பேசி ஸ்பெஷல் டிஸ்கௌன்ட் வாங்கி வச்சிருக்கேன்.நீங்க இதுக்கு வெறும் நாப்பது லட்சம் கட்டினாப் போதும்."

"அப்படீங்களா..அப்ப குடியிருக்கிற வீட்ட வித்துட வேண்டியதுதான்."

"அப்பறம்........."

"வெயிட்...கடைசியா என்கிட்டே ஒரு ஸ்கூட்டரும்  என் பொண்டாட்டி தாலி மட்டும் தான் இருக்கு.இத ரெண்டையும் வித்தா...ஒரு மூணு லட்சம் தேறும்."

"என்ன சார் நீங்க..ஆறு கோடி ...விட்டத எல்லாத்தையும் புடிச்சிரலாம். கடைசியா இந்தியன் கவர்மெண்டுக்கு 'கருப்புப்பணம் சுருட்டும்வரி' வேற கட்ட வேண்டியிருக்கு.அதுவும் நாங்கதான் கட்டுவோம்.ஒன்னு பண்ணுங்க சார். எவன் காலிலாவது விழுந்து,எவன் வீட்டு தாலியாவது அறுத்துதாவது ஏழு  லட்சம் புரட்டி,மொத்தப் பணத்தையும் எங்களுக்கு  டிடி எடுத்து அனுப்பினீங்கனா ..அடுத்த  வாரமே  நீங்க தெருக்கோடிக்கு.. ச்சீ...ஆறு கோடிக்கு அதிபதி சார்!!!.

"ஏன் சார்...கடைசியா ஒரு கேள்வி....."

"கேளுங்க..மிஸ்டர் ஏமாந்தவாயன்.."

"நீங்க கேட்ட எல்லாப் பணத்தையும், நான் ஜெயிச்ச பணத்திலிருந்து கழிச்சுட்டு... பேலன்ஸ மட்டும் எனக்கு கொடுக்கலாமே...."

"வாட் டு யு மீன்?.."

"ஐ  மீன்....எங்க ஊர்ல வெள்ள நிவாரண நிதி,புயல் நிவாரண நிதி,லோன் இதெல்லாம் கொடுக்கும் போது அதிகாரிகளெல்லாம் கமிஷன் எடுத்துகிட்டு பேலன்ஸ எங்களுக்கு தருவாங்களே...அதுமாதிரி நீங்களும் செய்யலாமே சார்...."

"என்ன மேன்...புத்திசாலித்தனமா பேசுறதா நெனப்பா?...."

"ச்சே..ச்சே..நாங்களெல்லாம் உங்க அளவுக்கு படிக்காதவங்க சார்... அடுத்தவங்க வயித்தில அடிச்செல்லாம் பழக்கமில்லை...."

"அப்ப...அந்த ஆறு கோடி வேண்டாமா? பிற்பாடு ஆசிரமத்திற்கு கொடுத்திடுவேன்..."

"எனக்கு ஒரு வெங்காயமும் வேணாம்டா வென்ட்ரு!.போடா போ.....நீ கேக்கிற பணத்த கொடுத்தா,நாங்க தான் குடும்பத்தோட ஆசிரமம் போகணும்."

"மிஸ்டர் ஏமாந்தவாயன்..ஆர் யு சீரியஸ்?.."

"அதே தாண்டா என் அப்பாடக்கறு...பேரப்பாத்து எங்க ஊர்ல யாரையும் எடை போடாத..செவ செவனு இருப்பன்...அவனுக்கு கருப்பையன்னு பேரு வைப்போம்.கருவாயனுக்கு வெள்ளைச்சாமினு பேரு வைப்போம்.ஒரு விஷயம் நல்லா தெரிஞ்சுக்கோ..நாங்க ஏமாந்தாலும் ஏமாத்தினாலும் அது.. எங்க ஊருகாரங்க கிட்ட மட்டும்தான்! .(இதுல ஒரு பெருமை!!!). நல்லாக் கேட்டுக்க...எங்கள யாரும் ஏமாத்த முடியாது...எங்களைத்தவிர"
 
  

-----------------------------------------------((((((((((((((((()))))))))))))))))))))))))))--------------------------
  





Saturday 7 April 2012

'குமுதம்' இப்படி குனிந்து போவது ஏன்?


  தமிழகத்தின் நம்பர் ஒன் வார இதழ்.எல்லாப் பெட்டிக் கடைகளிலும் எட்டிப் பார்க்கும் தமிழ் என்சைக்ளோபிடியா!.உலகத்தையே நம் உள்ளங்கையில் கொண்டு வரும் கையடக்க கணினி!.ஊழல்வாதிகளின் விலா எலும்பையே உடைத்த பத்திரிக்கைகளின் முதுகெலும்பு!. ம்ஹும்......இதெல்லாம் ஒரு காலத்தில்......நினைவு தெரிந்த நாளிலிருந்து வாரம் தவறாமல் நான் படிக்கும் ஒரே 'வாரஇதழ்' இது தான்.ஆனால் இப்போது அரசியல் கட்சிகளுக்கு ஜால்ரா போட்டு, அவர்கள் குட்டுவதற்கு முன்பே குனிந்து....குனிந்து....இதன் முதுகெலும்பே முறிந்து போய் விட்டது.
   
   குமுதம்..ஒரே வரியில் சொன்னால்..ஒவ்வொரு தேர்தலுக்கும் நிறம் மாறும் பூ.கடந்த சட்ட மன்ற தேர்தலுக்கு முன் மு.க குடும்பத்தையே நடு வீதிக்கு கொண்டு வந்து நாறடித்த பத்திரிகை.என்ன ஆயிற்றே தெரியவில்லை.தேர்தல் நேரத்தில் திடீரென்று கலைஞர் மீது பாசம்.வசைபாடி வாரி இறைத்த பத்திரிக்கை சட்டென்று புகழ்பாடி பூத்தூவின மர்மமென்ன?...குமுதத்தின் சர்குலேசனையே அதிகரித்த ஞானியின் 'ஓபக்கங்கள்' திடீரென்று நிறுத்தப்பட்டதின் நோக்கம் என்ன?...இது ஒன்றும் புரியாத புதிரல்ல.ஆனால்........       

    இதோ இந்த வார குமுதத்தில்....ஒரு ஆளுங்கட்சி இடைத் தேர்தலில் அதுவும் தமிழ் நாட்டில் வெற்றி பெறுவது ஒன்றும் உலக அதிசயம் அல்ல..அதற்காக முதல் பக்கத்தில் பத்திரிக்கையின் சேர்மேனே இப்படி துதிபாடியிருப்பது, கிட்டத்தட்ட எதிர்கட்சியே இல்லாமல் இருக்கும் தமிழகத்தில் அவர்கள் சார்பாக  அந்தப் பணியை தன் தோளில் சுமந்து, ஆளுங்கட்சி செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டும் முன்னணி நடுநிலைமை பத்திரிக்கையில் ஒன்றான குமுதத்திற்கு இது அழகல்ல.





                          இந்தச் செய்தி முதல் பக்கத்திலே வரவேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையுடனும்,அதீத கவனத்துடன் இருந்ததால் நிறைய விசயங்கள் விடுபட்டு போய்விட்டதாம்.அதை,குமுதம் நிர்வாகத்தின் அனுமதி பெற்று  இங்கே பிரசுரிக்க கடமைபட்டுள்ளேன்.(இதை எப்படியாவது முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லுமாறு சொம்போடு.ச்சீ..அன்போடு விழைகிறேன்.)

விடுபட்ட அந்த செய்(து)திகள்... 

  தமிழத்தின் விடி வெள்ளியாய் பல தடைகளைத் தாண்டி பொடிநடை போட்டு வந்த வறட்சி..ச்சீ...புரட்சித் தலைவியே!!!!! 

     உங்கள் வருகையால் தமிழகம் நட்டநடு நிசியிலும் பட்டப் பகல் போல் வெட்ட வெளிச்சமாக ஒளிருகிறது. ஆட்சிக்கு வந்த ஒரேமாதத்தில் மின்சாரத் தடையை அகற்றுவேன் என்று சூளுரைத்து அதை செயல் வடிவம் தந்து வெற்றி கண்ட ஸ்ரீரங்க நாயகியே..

                  மின்சாரம் இருந்தால் தானே தடையே.மின்சாரமே இல்லை என்றால்? என்று அறிவுப் பூர்வாக சிந்தித்து தமிழர்களின் 'நெஞ்சில் வேலை பாய்ச்சிய' ச்சீ....'வயிற்றில் பாலை காய்ச்சிய' போயஸ் தோட்டத்துத் புயலே.!!!!

          மின்சாரத்தடைக்கு காரணமே தமிழகத்தை இதுவரை ஆட்சி செய்தவர்கள்தான். இந்த உண்மையை,கடந்த மூன்று மாதமாக போயஸ்தோட்டத்தில் ரூம் போட்டு ராப்பகலா யோசித்து கண்டறிந்து மக்களுக்கு தெரியப்படுத்திய ஒளிவிளக்கே!. 

         உங்களை மட்டுமே நம்பி தங்கள் வாழ்வாதாரத்திற்காக போராடிய கூடங்குள மக்களை,உங்களின் இரும்புக்கரங்களால் ச்சீ.அன்புக்கரங்களால் அரவனைத்துச் சென்ற கருணையுள்ளம் கொண்ட அன்னையே..!

        கடந்த ஆட்சியில் பேசினால் தான் சிறை.உங்கள் ஆட்சியில் பேச்சு சுதந்திரத்திற்கே சிறை.சீறிய சீமானையும் பொட்டிப்பாம்பாய் அடங்கச்செய்த கெட்டிக்கார முதல்வர் நீங்கள்.

         'கூடா நட்பு கேடாய் முடியும்' என்பதையுணர்ந்து தன்னை சுற்றியிருந்த கும்பலை துரத்தியடித்தப் பின் மீளா துயரத்தில் இருந்த நீங்கள்,அதிலிருந்து மீள ஒவ்வொருவரையும் தோட்டத்தின் பின் வாசல் வழியே திரும்ப வரவழைக்கும்  உங்கள் இரக்க குணத்தை என்னவென்று புகழ்வேன்?

   உள்ளாட்சி தேர்தளுக்குப்பிறகு பஸ்கட்டணம்,பால்விலை,மின்சாரக்கட்டணம் உயர்வு.இடைத்தேர்தலுக்குப் பின் கூடங்குளம் போராட்டக்காரர்களுக்கு ஆப்பு... என்னே ஒரு ராஜதந்திரம்....தமிழகத்தின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு நீங்கள் முன்னுரைக்கும் அனைத்து திட்டங்களுக்கும் எங்களின் பரிபூரண சொம்பு..ச்சீ அன்பு என்றும் இருக்கும்.   


(இந்த வாரம் 'குமுதம்' படித்து முடித்திருப்போர் கவனத்திற்கு...அது பத்தல அப்படீன்னு பீல் பண்ணினா இதையும் கொஞ்சம் சேத்துக்குங்க..'கும்'முன்னு இருக்கும்.


-----------------------------------------------------(((((((((((()))))))))))))))))))))))))--------------------------