Wednesday 29 February 2012

CAD -CAM PROGRAMMER ஆக வேண்டுமா?-PART-2


MASTERCAM-தமிழில்...

          MASTERCAM பற்றி படிப்பதற்கு முன்பு....மற்ற CAD/CAM SOFTWARE-லிருந்து இது எவ்வாறு வேறுபடுகிறது என்பதை முதலில் தெரிந்து கொள்வோம்.

                

  MASTERCAM போல Manufacturing Company-களில்    அதிகமாக உபயோகப் படுத்தப்படும் SOLIDWORKS, UNIGRAPHICS, PRO-E போன்றவைகள் எல்லாமே DESIGNING-க்கு கொடுக்கும் முக்கியத்துவம் MACHINING-க்கு கொடுப்பதில்லை. அதாவது MASTERCAM போல சுலபமாக TOOLPATH எடுக்க முடிவதில்லை என்பது  இந்தத் துறையில் உள்ள அனுபசாலிகளின் குற்றச்சாட்டு.பொதுவாக 2D TOOLPATH-க்கு MASTERCAM-ஐ அடிச்சிக்கிரதுக்கு வேற எந்த சாப்ட்வேர் -ம் கிடையாது என்பது  எல்லா  CAD/CAM SOFTWARE-ம் ஓரளவு தெரிந்தவர்கள் ஒப்புக் கொள்ளும் உண்மை. ஆனால் DESIGNING & AASEMBLY-க்கு SOLIDWORKS-ம்,  MOULD&DIE MAKING-க்கு  UNIGRAPHICS-ம்  அதிகமாக  உபயோகப்படுத்தப்படுகிறது.

       

       பொதுவாக CNC இண்டஸ்ட்ரியில் வெளிநாடுகளில் வேலைக்கு விளம்பரம் கொடுக்கும் போது  CAD/CAM SOFTWARE தெரிந்திருக்க வேண்டும் என்று தெரிவித்திருப்பர்கள்.இதன் அர்த்தம் இவற்றில் ஏதேனும் ஒன்றில் நீங்கள் கைதேர்ந்தவராக இருந்தால் போதுமானது என்று அர்த்தம்.அதெப்படி என்று குழம்புகிறீர்களா.....இவற்றில் ஏதாவது ஒன்றில் நீங்கள் வல்லவராக இருந்தால் மற்ற SOFTWARE-களை சுலபமாக கற்றுக்கொள்ள முடியும்.எல்லா CAD/CAM  SOFTWARE-களிலும் கமாண்ட்ஸ்(COMMANDS), வரையும்முறை (DESIGN)  எல்லாமே ஒரே மாதிரியாக இருக்கும்.ஆனால் TOOLPATH எடுக்கும் முறைதான் கொஞ்சம் வித்தியாசமானது.
    பொதுவாக  MASTERCAM -ஐ ஒரு  User-friendly Software என்று சொல்வார்கள். அதாவது யாரும் மிக எளிதில் கற்றுக்கொள்ள முடியும். இதைக்   கற்றுக் கொள்வதற்கு நீங்கள் CNC துறையில் பெரிய அனுபசாலியாகவோ அல்லது திறமைசாலியாகவோ இருக்கவேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஏன்.......இந்தத்துறை சம்மந்தப்படாதவர்கள் கூட இதைக்கற்று சிறந்த Programmer-ஆக  இருக்கிறார்கள். 


              

     1998 -ல் நான்  MASTERCAM படித்தபோது Version 8 தான் உபயோகத்தில் இருந்தது.அந்த நேரத்தில் 2D &3D Toolpath-க்கு இது மிகச்சிறந்த Software ஆக இருந்தது என்பதை இந்தத் துறையில் இருந்தவர்கள் ஒப்புக்கொள்வார்கள். ஆனால்  Toolpath Simulation கொஞ்சம் மெதுவாகத்தான்  இருந்தது. அந்த நேரத்தில்  UNIGRAPHICS, PRO-E பிரபலமாக,MASTERCAM -லும் பல மாற்றங்கள் செய்தார்கள்.சில ஆண்டுகளுக்குப் பிறகு MASTERCAM-V9 ரிலீஸ் செய்தார்கள். இது 3D Toolpath & Simulation மிக வேகமாக இருந்தது.அடுத்த சில ஆண்டுகளிலே Toolpath-ல் சில மாற்றங்கள் செய்து   MASTERCAM-V9.1 வெளியிட்டார்கள்.இதன் பிறகு UNIGRAPHICS ,SOLIDWORKS போல இதன் முகப்பு தோற்றத்தை மாற்றம் செய்து 2006 ல் MASTERCAM X வெளியிட்டார்கள்.ஆனால் இதில் ஏகப்பட்ட குளறுபடி இருந்தது. MASTERCAM-V9-ல் வேகமாக செய்தவர்கள் இதில் தடுமாறிப் போனார்கள்.TOOLPATH-ம் கடினமாக இருந்தது.MASTERCAM-V9 உபயோகப்படுத்தும் நிறையக் கம்பெனிகள் இந்த மாற்றத்தை ஏற்கவில்லை. பிறகு இதன் சிறு குறைகளைத் திருத்தி  அடுத்தடுத்து X1,X2,X3,X4 என்று வெளியாக, இறுதியாக வெளியிடப்பட்ட  MASTERCAM X5 மற்ற CAD/CAM SOFTWARE -களுக்கு சவால் விடும் வகையில் உள்ளது.சமீபத்தில் MASTERCAM X6 வெளியாகியிருக்கிறது.ஆனாலும்  MASTERCAM உபயோக்கிக்கும்  கம்பெனிகளில் 90 சதவீதம் பேர் இன்னமும்  MASTERCAM-V9 யையே பயன்படுத்துகின்றனர்.இதற்கு முக்கிய காரணம் USER -FRIENDLY.அதாவது மற்றவர்களுக்கு சுலபமாக புரியவைக்க முடியும்.அதே நேரத்தில் தவறுகள் ஏற்படுவதும் மிகக் குறைவு, 

       MCAM-9 க்கும் MCAM-X6 க்கும்  பெரிய வித்தியாசமில்லை.COMMANDS, TOOLPATH,வரையும்முறை எல்லாம் ஒரே மாதிரிதான்.கொஞ்சம் அட்வான்சாக இருக்கும் அவ்வளவுதான்.நீங்கள் MCAM 9-ல் கைதேர்ந்தவராக இருந்தால்  MCAM X6 கற்றுக்கொள்வது மிக சுலபம்.முதலில் நான் நடத்தப்போவது  MCAM-V9.கடைசியில் இரண்டு அல்லது மூன்று  பதிவுகளில் MCAM-X6 யை விளக்கிவிடலாம் . 
   
      சரி.....MASTERCAM படிக்க ஆர்வமுள்ளவர்கள் கவனிக்க... இதைப்படிக்க நீங்கள் எந்த  இண்டஸ்ட்ரிக்கும் செல்ல வேண்டாம்.வீட்டில் ஒரு PC இருந்தாலே போதுமானது.ஏற்கனவே உங்கள் PC யில் MASTERCAM இன்ஸ்டால் செய்யவில்லை என்றால் இந்தத் துறையில் உள்ள நண்பர்களிடம் இந்த CD யை வாங்கி  உடனே  இன்ஸ்டால் செய்யவும்.அடுத்தப் பதிவில் எவ்வாறு இன்ஸ்டால் செய்வது என்று விளக்கமாக சொல்கிறேன்.
         
சரி....முன்னுரை போதும்னு நெனைக்கிறேன்.

அது சரி...அது என்ன...2D TOOLPATH....3D TOOLPATH.....புதுசா படிக்கிறவங்களுக்கு கொஞ்சம் குழப்பமாத்தான் இருக்கும்.இதை விரிவா பிறகு சொல்கிறேன். உங்களுக்கு புரியும் படியா சிம்பிளா சொல்லனும்னா....கீழே இருக்கிற ரெண்டு படத்தையும் கொஞ்சம் நல்லா பாருங்க.
  
      நீங்க ஒரு பேனா எடுத்துக்குங்க.ஒரு பேப்பர்ல படம் 'A' யில உள்ள மாதிரி 1---2---3--4 --1 னு ஒரு சதுர வடிவில ஒரு கட்டம் வரைங்க....இப்போ உங்க பேனா போற பாதை...இடமிருந்து வலம்(1-2),கீழிருந்து  மேல்,வலமிருந்து இடம்,கடைசியாக மேலிருந்து கீழ்.

 அடுத்ததா படம் 'B'
      
                ஒரு உருண்டையான பந்து (எல்லா பந்தும் உருண்டையாத்தான் இருக்கும்) எடுத்துக்குங்க.இப்ப .....முன்பு பேப்பர்ல வரைஞ்ச மாதிரி இதுலயும் ஒரு கட்டம் போடுங்க...இப்ப உங்க பேனா போற பாதை எப்படி இருக்கு?...... முன்பு சொன்ன பாதையை விட கூடுதலாக ஒரு பாதை செங்குத்தாக கீழேயும் மேலேயும்  போகுது இல்லையா?......

       



                படம் 'A' யில் இடமிருந்து வலம்,வலமிருந்து இடம் ...இதை X-AXIS னு சொல்லுவாங்க... 

       மேலிருந்து கீழ்,கீழிருந்து மேல் ......இது Y-AXIS.

      படம் 'B' ல் செங்குத்தாக மேலும் கீழும் போகுதே....இதை Z-AXIS னு சொல்வாங்க.

   இப்ப உங்க பேனாதான் TOOL -னு வச்சுகிங்க....உங்க பேனா போற பாதைதான் TOOLPATH.
    
   இப்பயாவது  2D-க்கும் 3D-க்கும் வித்தியாசம் தெரியுதுங்களா ?....X &Y திசையில்  TOOL நகர்ந்தால் அது 2D TOOLPATH.....

   X &Y&Z திசையில்  TOOL நகர்ந்தால் அது 3D TOOLPATH.....


 சரிங்க......அடுத்த பதிவிலிருந்து ஒவ்வொரு Command யைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.அதற்கு முன்னால.ஒரு வரைபடத்திலிருந்து எப்படி MASTERCAMல் படம் வரைந்து TOOLPATH எடுத்து MACHINE-ல் JOB OUTPUT வருகிறது என்பதை ஒரே பதிவில் சுருக்கமாக சொல்லிவிடுகிறேன். பிறகு தான் உங்களுக்கு எல்லாம் தெளிவாக புரியும் .இல்லைஎன்றால் தலை எது வால் எது என்று தெரியாமல் குழம்பி போய்விடுவீர்கள்....

அடுத்த பதிவில் ச(சி)ந்திப்போம்......


----------------------------------------------(((((((((((((((())))))))))))))))))))))))))))))))))))))))----------------   

Monday 27 February 2012

CAD -CAM PROGRAMMER ஆக வேண்டுமா?



                மெக்கானிகல் லைனில் வெளிநாட்டில் மட்டுமில்லைங்க... நம்ம நாட்ல கூட நல்ல வேலையா கிடைக்கனும்னா CNC யப்பத்தி நல்லா தெரிஞ்சிருக்கனும்ங்க.    CNC ன்ன என்னான்னு தெரியுனுங்களா?....

  மின்னலே படத்தில விவேக் ஒரு டயலாக் சொல்லுவாருல...'அடப்பாவிகளா உள்ள 750 ஸ்பேர் பார்ட்ஸ் இருக்கு...அதுல ஓடாத வண்டியாடா இந்த எலுமிச்சைப் பழத்துல ஓடப்போகுது?......." . அந்த  750 ஸ்பேர் பார்ட்ஸ்-யும் உருவாக்கின பிரம்மாதான் இந்த CNC .

         CNC யோட விளக்கம் Computer Numerical Control . இதப்பத்தி புரியும் படியா சொல்லனும்னா....உங்க பைக்ல அல்லது கார்ல உள்ள ஒரு 'ஸ்பேர் பார்ட்' செய்யுறதுக்கு நம்ம ஆளு வியர்வை சிந்தி கஷ்டப்பட்டு ஒரு சாதாரண மேனுவல் மெசின்(Manual Machine)ல்ல மூணு மணி நேரம் எடுத்துக்குறாருனு வச்சிப்போம்.அதே ஆளு அதே 'பார்ட்ட' நூறா செய்யும் போது முன்னூறு மணி நேரம் எடுத்துக்கிறார். இதுவே ஆயிரம் ரெண்டாயிரம்னு வரும்போது நாள் கணக்கா எடுத்துக்க நேரிடும். இதனால் விரயமாகும் நேரம்,  செலவு, உழைப்பு, இழப்பு, மனிதவளம் இப்படி எல்லாத்தையும் ஒரு முடிவு கட்ட கண்டுபிடிக்கப்பட்டதுதான்  இந்த CNC .

           அப்படி இந்த மெசின் என்னாதான்  செய்யுதுன்னு கேக்கிறீங்களா?... ரொம்ப சிம்பிள் தாங்க...ஒரே ஒரு  பார்ட்டு(part ) க்கு புரோக்ராம் (program ) எழுதி செட்டப்(setup) செஞ்சா போதும்ங்க....ஆயிரம் என்ன, பத்தாயிரம் என்ன அப்படியே மாட்டிக் கழட்டுற  வேலைதான் நமக்கு.... மூணு மணி நேரம் செஞ்ச இதே பார்ட்ட மூணு நிமிசத்தில முடிச்சிரலாம். எத்தன Job போட்டாலும் அதன்  தரமும் (Quality) நூறு சதவீதம் அப்படியே இருக்கும்.இந்த CNC  மட்டும் கண்டு பிடிக்கலனா இப்ப நாம ஓட்டிகிட்டு இருக்கிற பைக்கும் காரும் விக்கிற விலைக்கு நமக்கு வெறும் கனவாவே போயிருக்கும். Quality,Quantity ரெண்டுக்கும் அசைக்க முடியாத உத்திரவாதம் தருவதுதான் இந்த CNC,
  
            இந்த  CNC  யோட வரப்பிரசாதத்தில முக்கியமான ஒன்னு ஏரோபிளேன். முப்பதாயிரம் அடிக்கு மேல அவ்வளவு தைரியமா நாம பறக்கிறோம்னா   அதுக்கு முக்கிய காரணமே இந்த CNC  தாங்க.இப்ப நீங்க கையில புடிச்சிகிட்டு இருக்கிற மவுஸ்,கி போர்டு,எதிரே பாக்கிற ஸ்க்ரீன் .'.பிரேம்,உங்க சட்டையில உள்ள பட்டன்,தண்ணி பாட்டில்,பிளாஸ்டிக் சாமான்கள் இப்படி நம் வாழ்வில் அன்றாடம் உபயோகிக்கிற எல்லா பொருட்களையும் செய்யிற மோல்டு (Mould ) -ஐ உருவாக்கியது சாட்சாத் இந்த CNC தான்.வேற மாதிரியா சொல்லனும்னா ...கரடு முரடான இந்த உலகத்தை அழகா வடிவமைச்சி, நவீன உலகமா மாற்றியப் பெருமைக்கு உரியது இந்த CNC ......  

       பதினைந்து வருசத்துக்கு முன்னால நான் சென்னையில CNC யில ப்ரோகிராமரா வேலை செய்தபோது அவ்வளவு CNCமெசின்கள் கிடையாது. அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மொத்தமே பத்து கம்பெனியிலதான்  CNC இருந்தது.ஆனால் இன்னைக்கு திரும்பிய பக்கமெல்லாம் ஒரேCNC மயம்தான். இங்க மட்டுமில்லைங்க....உலகம் பூராவும் இருக்கு.மெக்கானிகல் இண்டஸ்ட்ரி யில் உள்ள எல்லோரும் தங்களை மேம்படுத்திக்கொள்ள CNC மெசின்கள்  வாங்கி உபயோகிக்க ஆரம்பிச்சிடாங்க....

             இந்த CNC லைனில் உலகம் பூராவும் வேலைவாய்ப்புகள் அபரிமிதமாக இருக்கிறது.குறிப்பாக சிங்கபூர், மலேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து,UK, கனடா,வளைகுடா நாடுகள் உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் CNC லைனில் நம்மவர்கள்தான் கொடிகட்டி பறக்கிறார்கள்.

     சரி.....இந்த விவரங்கள் எல்லாம் எங்களுக்கும் தெரியும் .....நீ என்ன புதுசா சொல்லப்போறனு கேட்க வரீங்க......நேரா மேட்டருக்கு வந்திடுறேன்...CNC மெசின் ஓட்டுறது ஒன்னும் பெரிய விஷயமில்ல.....மாட்டி கழட்டுற வேலைதான்.வெறும் ஆபரேட்டரா இருந்தா காலம் பூரா அப்படியே இருக்க வேண்டியதுதான்.அடுத்தக் கட்டத்துக்கு போகணும். அதுதான் Programmer. 

       கம்ப்யுட்டர் மட்டும்தான் ஆபரேட் பண்ணத் தெரியும்ன்னா நமக்கு Data entry operator வேலைதான் கிடைக்கும்.JAVA,.NET,C++ தெரிந்தால் தானே IT Company யில் வேலை கிடைக்கும்.அது போலதான் இதிலும்.நீங்கள் ஒரு சிறந்த CNC Programmer ஆக இருந்தால் தான் நல்ல வேலையும் நிறைய சம்பளமும் கிடைக்கும். முன்பெல்லாம் Program கையில்தான் எழுதினாங்க.இதற்கு நிறைய நேரம் தேவைப்படும்.பல நேரங்களில் தவறுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.இந்த முறையில் மிக சுலபமான Jobs மட்டுமே போடலாம். கம்ப்யுட்டரில் Program தவறாக எழுதியிருந்தால் bugs காண்பிக்கும்.ஆனால் CNC யில் தவறு செய்தால் மிகப்பெரிய விபத்து நடக்க வாய்ப்புண்டு.சில நேரங்களில் கோடிக்கணக்கில் வாங்கிய மெசின் மொத்தமாக கண்டமான கதைகளும் உண்டு.இந்தப் பிரச்சனைகளை   களையவும், Mold,Die,3D Machining என்று மெக்கானிகல் .'.பீல்டு முன்னேறியதாலும் கண்டுபிடிக்கப்பட்டதுதான் CAD-CAM  SOFTWARE 

 இது போன்ற Manufacturing software நிறைய இருந்தாலும் ஒரு சில சாப்ட்வேர்கள் மட்டுமே அதிகமாக உபயோகிக்கப் படுகிறது.அவற்றில் சில...
  • MASTERCAM 
  • UNIGRAPHICS
  • ALPHACAM
  • GIBSCAM 
  • SOLIDWORKS&SOLIDCAM
             இவற்றில் MASTERCAM இந்தியாவிலும்   மற்ற வெளிநாடுகளிலும் மிக அதிகமாக உபயோகப்படுத்துகிறார்கள்.வெளிநாடுகளில் CNC Field-ல் வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு  இது போன்ற CAD-CAM  SOFTWARE களில் ஏதாவது ஒன்றில் அனுபவம் இருந்தால் உடனே நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்துவிடும்.அதே போல காலங்காலமாக வெறும் Opertor-ஆக மாவாட்டிக் கொண்டிருப்பவர்கள் கட்டாயம் இது போன்றவற்றில் ஏதோனும் ஒன்றை கட்டாயம் பயில வேண்டும்.     
  
     சரி இதில் என் வேலை என்ன?...... CNC Field-ல் அதிகமா உபயோகப் படுத்தப்படும் MASTERCAM-ஐ தமிழில் எழுதப் போகிறேன்.   பதினைந்து  வருடத்திற்கு முன்பு சென்னையில் வேலை பார்த்துக் கொண்டே இன்ஷிடியுட்-ல்  கிளாஸ் எடுத்துக்கொண்டிருந்த சமயம்  'CNC தமிழில்'  என்ற புத்தகம் எழுதலாம் என்று நானும் என் நண்பரும் முயற்சி செய்தோம். அதற்கான பணிகள் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது,எனக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்ததால் அந்தப் பணியை தொடர முடியாமல் போயிற்று.தற்போது பதிவுலகில் இணைந்திருப்பதால் இதைத் தொடரலாம் என்று எண்ணம் வந்தது.பத்து வருடமாக MASTERCAM  சொல்லிகொடுத்த அனுபவம் இருப்பதால் எல்லோரும் பயனடையும் படியும் புரியும் படியும் எழுத முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இதைப்படிப்பவர்கள் இந்த  Field-ல் உள்ள மற்றவர்களுக்கும் இதைத் தெரியப் படுத்தவும்.

  அடுத்த வாரத்திலிருந்து ஒவ்வொரு வாரமும் இதன் பாகங்கள் வெளிவரும்...

 --------------------------------------((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))----------------------------         

Thursday 23 February 2012

பவர்கட் ஜோக்ஸ்


இவிங்க  இம்ச  தாங்க  முடியலப்பா.....






---------------------------------------------------------------------------------------------------------------


 "இவிங்க பிரச்சனையில நம்ம பேர 'பவர்கட் ஸ்டார்' னு மாத்திட்டாங்கனா என்ன பண்றது?..........."

--------------------------------------------------------------------------------------------------------------

   "நம்ம அமைச்சர் ரொம்ப வெகுளியா இருக்காருப்பா.... "

   " எத வச்சு சொல்ற?..... "

    " CM  .'.போன்  பண்ணி,உங்க பவர புடுங்கியாச்சுனு  சொன்னதுக்கு....  பரவாயில்ல மேடம் ..  வீட்ல UPS இருக்கு வச்சி சமாளிச்கிகுவன் னு பதில் சொல்லியிருக்காரு...."

--------------------------------------------------------------------------------------------------------------
   பவர்கட்டை  சமாளிக்க   ஒரே வழி........


      இந்தியனின் உன்னத கண்டுபிடிப்பு.......அரிக்கேன் விளக்கு......

    என்ன யோசிக்கிறீங்க....அந்தக் காலத்து "பெல் பாட்டம்' இந்தக் கால .'.பேஷன் ஆகலியா?... எவ்வளவு   காலம் கடந்தாலும் இளையராஜாதான் 'தி பெஸ்ட்' னு சொல்றதில்லையா?...............ஆதிகால மக்கள் கீழேயும்  மேலேயும்  இலை தழைய வச்சி மறச்சிகிட்ட மாதிரி இப்ப உள்ள மாடர்ன் பெண்கள் டிரஸ் போடுறதில்லையா?.......ஆதிவாசிகள் காட்டுல இருக்கிற மிருகங்கள வேட்டையாடி பிறகு நெருப்புல சுட்டுத் தின்ன மாதிரி இப்போ 'BBQ சிக்கன்'  னு சொல்லிட்டு நாம சுட்டுத் திங்கலையா?..........அது போல தான் இதுவும்......

     இத அவ்வளவு லேசா நெனச்சிடாதீங்க.....இந்த விளக்கு வெளிச்சத்துல படிச்சுதான் பல மேதைகளும்,அறிஞர்களும்,விஞ்ஞானிகளும்,தலைவர்களும் உருவாகியிருக்காங்க.....
  
-----------------------------------------------------------------------------------------------------------
                    (பவர்கட்டுக்கும்  இதுக்கும்  சம்மந்தமில்ல .....)

பழைய மொக்கையான ராமராஜன் மேட்டர் ஒன்னு .....



                        'ஒலக மகா பால்காரன்' அப்படீங்கிற பட்டத்துக்காக, உலகத்திலே அதிகமா பால் கறக்கிரவிங்க யாருனு ஒரு போட்டி நடந்துச்சு ... அதுல நம்ம இந்தியாவிலேருந்து 'போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட'நம்ம பசுநேசன் ராமராசன் கலந்துக்க போனாரு.போட்டி கடுமையா இருந்துச்சு.முடிவில, நடுவர்கள் ஒவ்வொரு நாட்டு பால்காரன் கிட்டையும் போயி எவ்வளவு பால் கறந்திருக்கிராங்கனு அளந்து பாத்துட்டு நோட் பண்ணிட்டு வந்தாங்க. ஒவ்வொருத்தனும் கறந்தது பத்து லிட்டர், பதினஞ்சி, இருபதுன்னு போய் கிட்டே இருந்திச்சி. கடைசியா நம்ம ஆளுகிட்ட வந்தாங்க...நம்ம ஆளு பாட்டுப்படி,டான்ஸ் ஆடி,வித்த காட்டி அப்டி இப்டினு வெறும் அரை லிட்டர் பால கறந்திட்டு வேர்க்க விருவிருக்க நின்னுகிட்டிருந்தார். கிட்ட போயி  பாத்த நடுவர்கள் ஆச்சர்யப் பட்டுப் போய்.. ராமராசந்தான் 'ஒலக மகா பால்காரன்' னு அறிவிச்சிட்டாங்க.. என்னடான்னு விசாரிச்சா..... பொறவுதான் தெரிஞ்சது..... நம்ம ராமராசன் போட்டிக்கு கெளம்புற அவசரத்துல பசு மாட்டுக்குப் பதிலா காளமாட்ட கூட்டிட்டு போயிருக்கிறாருனு.......    


---------------------------------------((((((((((((((((((((((((((((((())))))))))))))))))))))))))))))------------------

Wednesday 22 February 2012

பெரிய கோயிலும் சாய்ந்த கோபுரமும்



     லகின்  பணக்கார  நாடுகள் எல்லாம் கட்டுமானத் தொழிலில் கொடிகட்டிப் பறக்கிறார்கள்.உலகில் உயரமான கட்டிடம் எங்களிடம்தான் உள்ளது என்று சொல்வதற்காகவே கட்டப்படும்  விண்ணை முட்டும் கட்டிடங்களுக்கு அவர்கள் அள்ளி வீசும் டாலர்கள்,யுரோ, திர்ஹம், ரியால்  அளவிட முடியாது. ஆனால் அவற்றை கட்டுவதற்காக இரவும் பகலும் உழைக்கும் கட்டுமானத் தொழிலாளர்கள் பெரும்பாலும் நம்மர்களே..நம் மூளையும்,அயராத உழைப்பும், சிந்தும் வியர்வையும் தான் அவர்களை ஜொலிக்க வைக்கிறது. ஆனால் வெள்ளைக்காரன் நம்ம நாட்டுக்கு வருவதற்கு முன்பு  உலகத்துக்கே கட்டுமானத் தொழிலில் நம்மவர்கள் தான் முன்னோடியா இருந்ததாக வரலாறு சொல்கிறது...

     உதாரணத்திற்கு...உலகின் எட்டு அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் மொத்தம் மூன்று கட்டங்களாக 177 வருடங்களாக கட்டப்பட்டதாம்.. இவ்ளோ உயரமா  கட்டப்போறோமே....இதன் கீழே உள்ள மண்ணின் தன்மையை சோதிக்கவேண்டும் என்ற அடிப்படை விஷயம் கூடவா  தெரியாமல்  இருக்கும். கட்டிய கொஞ்ச நாட்களில் கொஞ்ச கொஞ்சமா சாய, பிறகு  இரண்டாம் தளம், மூன்றாம் தளம்  அமைத்து மொத்தமாக சாய்ந்து விடாமல் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள். உலகில் மிக கேவலமான கட்டுமானத்திற்கு எடுத்துக்காட்டு இந்தக் கட்டிடம். ஆனால் இது  உலக அதிசயப் பட்டியலில் இன்றும் இருப்பது தான் மாபெரும்  வியப்பு.


    நம் தஞ்சையில் கம்பீரமாக நிற்கும் 216  அடி தஞ்சை பெரிய கோயில் வெறும் 12 ஆண்டுகளில் கட்டப்பட்டதாம். கட்டிடக் கலையில் உலகையே மிரளச் செய்யும் இந்தக்கோயில் ராஜராஜசோழனால் கட்டி முடிக்கப்பட்டது. இந்தக்  கோபுரத்தில் உள்ள  ஒரே ஒரு பாறை மட்டும் 80டன் (80 ஆயிரம்   கிலோ) எடை கொண்டதாம். கிரேன்,புல்டோசர்,உட்பட எந்தவித  தொழில் நுட்பமும் இல்லாத அந்தக் காலத்தில் கட்டப்பட்டு ஆயிரம் வருடங்களுக்கு மேல் கம்பீரமாக காட்சியளிக்கும் இந்தக் கோபுரம் அதிசயப் பட்டியலில் இடம் பெறாததே ஒரு அதிசயம் தான்.

     கட்டுமானத்தொழிலில் நாமதான் 'கிங்' என்று சொல்வதற்கு இதைவிட வேறென்ன உதாரணம் வேண்டும்?.....  

 -------------------------------------((((((((((((((((((((((((((((((((((((())))))))))))))))))))))))))--------------------------------

Tuesday 21 February 2012

எய்ட்ஸ் -சிதைந்து போன குடும்பம்...சிந்திக்குமா அரசாங்கம்?.....

         மீபத்தில் நான் ஊருக்கே சென்று திரும்பியபோது என் மனதை பாதித்த சம்பவம்........ இதை ஹிட்ஸ்காகவோ, யாரையும் காயப்படுத்த வேண்டும் என்பதற்காகவோ அல்லது  ஏதோ எழுதவேண்டும் என்றோ எழுதவில்லை. என்னால் முடிந்த விழிப்புணர்வை ஏற்படுத்தலாமே என்ற எண்ணத்தில் தான் இந்தப் (கொஞ்சம் சீரியசான) பதிவு......


         திருவாரூருக்கு  மிக அருகில் உள்ள ஊர் (ஊர், பெயரெல்லாம் சொல்லி அந்தக் குடும்பத்தை மேலும் காயப்படுத்த விரும்பவில்லை..).அங்கிருந்து ஒரு துக்கச்செய்தி வந்திருந்தது.ஏதோ வயதானவர் இறந்து விட்டார் போல என நினைத்து சாதாரணமாகத்தான் விசாரித்தேன்.

     "பாவம் நாப்பது  வயசுதான் இருக்கும்.....குடும்பத்தப்பத்தி இப்படி யோசிக்காம பண்ணினதால  அல்ப ஆயுசுல போயிட்டாரு " னு அந்த ஊருக்குள்ள பேசிக் கொள்ள, என்ன ஆச்சுனு விசாரிச்ச எனக்கு அதிர்ச்சி. அவர் எய்ட்ஸ் நோய் தாக்கி இறந்திருக்கிறார். கிட்டத்தட்ட அந்த ஊரில் உள்ள எல்லோருக்கும் இந்த விஷயம் தெரிந்திருக்கிறது.

    அடப்பாவமே....படிப்பறிவு இல்லாதவர் போல.இப்படி பண்ணிட்டாரேன்னு நான் நினைத்துக்கொண்டு அவரைப்பற்றி விசாரித்த எனக்கு மேலும் ஒரு அதிர்ச்சி.அவர் படிக்காதவரோ விவரம் அறியாதவரோ அல்ல. நம் நாட்டின் பெருமை மிக்க வேலையில் இருந்தவர்.தான் செய்யும் வேலையில்  நூறு சதவித JOB SATISFACTION இருப்பதாக இந்தப் பணியில் உள்ள  ஒவ்வொரு இந்தியனும் எண்ணும்  வேலை.... நம் ராணுவத்தில் எல்லை பாதுகாப்புப் படை வீரராக இருந்தவராம்.

          நிறைய சொத்து,சொந்த வீடு,அரிசி மில்,ஆசைக்கு ஆஸ்திக்கு என்று இரண்டு குழந்தைகள்,அன்பான மனைவி என்று சகல வசதியோடு வாழ்ந்தவருக்கு இப்படி ஒரு சாவு.
   
      ராணுவத்திலிருந்து ஒய்வு பெற்று ஊருக்கு வந்தவருக்கு சில ஆண்டுகளில் உடல் நலம் சுகமில்லாமல் போகவே டாக்டரிடன் சென்றிருக்கிறார். அவர் பரிசோதித்தப் பின்பு தான் தெரியவந்தது, இவருக்கு இப்படி ஒரு நோய் தாக்கியிருக்கிறது என்று. உடனடியாக இவரின் மனைவியை சோதித்த டாக்டர் அடுத்ததாக சொன்ன செய்தி இடி போல் இறங்கியதுஅவர்களது குடும்பத்தில். கணவருக்காக காலமெல்லாம் காத்திருந்த அந்த அப்பாவி பெண்மணிக்கு அவர் கணவன் கொடுத்த பரிசு எய்ட்ஸ்..... நல்லவேளை அந்த இரண்டு சின்னஞ்சிறு பிஞ்சு உள்ளங்கள் தப்பியது.
   
      இந்த விஷயம் எப்படியோ லீக் ஆகி சொந்த பந்தங்களுக்கும் ஊராருக்கும் தெரிய வர, செல்வ செழிப்போடு வாழ்ந்த அந்தக் குடும்பத்தை கிட்டத்தட்ட தள்ளியே வைத்து விட்டார்கள். அவமானம் தாங்காத அந்த பெண்மணி இரண்டு மறை தன்னை மாய்த்துக்கொள்ள முயற்சி செய்தாராம்.அவமானத்தால் அணு அணுவாக செத்துக்கொண்டிருந்த இருவரில்,அந்த ராணுவ வீரர் இரண்டு வாரங்களுக்கு முன்னே நோய் முற்றி இறந்துவிட, ஒரு பாவமும் செய்யாத அவர் மனைவி தனது நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கிறார்.அவர் சொந்தக்காரர்கள், இது ஆரம்ப கட்டம் தான்...எப்படியும் சரியாக்கிவிடலாம் என்று தேற்றிக்கொண்டிருக்கிறார்கள்......

   நன்மையையும் தீமையும்  நாம் தேடிக்கொள்வதுதான். வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பது போல....இது போல் நிறைய சோகங்கள் நம் நாட்டில் ஆனால் இதில் சம்மந்தப்படாதவர்கள்  தண்டிக்கப்படுவது தான் மிகப்பெரிய கொடுமை.

          மீபத்தில் பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா ஒரு நிகழ்ச்சியில் சம்பவம் ஓன்று சொன்னார். இரண்டாம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுமிக்கு எய்ட்ஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாம்.அவளின் பெற்றோரை சோதித்துப் பார்த்ததில் அவர்களுக்கு ரிசல்ட் நெகடிவ் என்றே வந்ததாம்.குழம்பிப் போன டாக்டர்கள் அவளுக்கு ஏதோனும் ஊசி போடப்பட்டதா அல்லது ஆபரேஷன் நடந்ததா என்று துருவ ...எதுவுமே இல்லையென்று பதில் வர அவர்களுக்கே ஆச்சர்யமாக இருந்ததாம்.பிறகு அவளுக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டதா என்று விசாரிக்க..சில மாதங்களுக்கு முன்பு ரோட்டில் நடந்து செல்லும் போது ஒரு பிளேடு கிடந்ததாம்.அதை எடுத்து பென்சில் சீவும் போது இவளின் கை விரலில் வெட்டிவிட்டதாம்.பிறகு கொஞ்ச நாட்களில் அந்த காயம் சரியாகிவிட்டதாக  சொல்லியிருக்கிறார்கள். அதன் பிறகு விசாரித்தபோது தான்  தெரிந்தது அது ஒரு எய்ட்ஸ் நோயாளி சேவ் செய்துவிட்டு அந்த பிளேடை ரோட்டோரத்தில் வீசிவிட்டு சென்றதின் விளைவு என்று. எவ்வளவு அலட்சியம்!. அந்தச் சிறுமி என்ன பாவம் செய்தாள்?

       எய்ட்ஸ் பற்றி நம் மக்களுக்கு எந்த அளவு விழிப்புணர்வு இருக்கிறது? உலகில் மனித வளத்தில் நாம் தான் முதலில் இருக்கிறோம்.வளர்ந்த நாடுகள் எல்லாம் இந்தியர்களைத்தான் போட்டி போட்டுக்கொண்டு வேலைக்கு ஆள் எடுக்கிறார்கள்.ஆனால் எய்ட்ஸ் நோயாளிகள் எண்ணிக்கையில் நாம் எத்தனாவது இடம்?   2009  ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வு கீழே....


 
     எய்ட்ஸ்-யை உலகுக்குப் பரப்பிய ஆப்பிரிக்க நாடுகளுடன் நாம் போட்டிப் போட  வேண்டிய அவல நிலை..இந்தியாவில் மட்டும்  24லட்சம் பேருக்கு எய்ட்ஸ் உள்ளது. இது 2009 -ல் எடுக்கப்பட்ட சர்வே.  இன்று?

     இந்த எண்ணிக்கைகள் எல்லாமே எய்ட்ஸ் இருப்பது கண்டிப்பாக உறுதி செய்யப்பட்ட அறிக்கை. இதில் சந்தேக கேஸ்,மற்ற பால்வினை  நோய்கள்  என்று பார்த்தால் கோடியை தாண்டும் என்று சொல்கிறது ஒரு ஆய்வு.

   அப்படிஎன்றால் இவர்களுக்கு எய்ட்ஸ்யைப்பற்றி எதுவுமே தெரியாதா? அல்லது பாதுகாப்பான முறை பற்றி  விழிப்புணர்வு இல்லையா? பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை விடுங்கள்...இது அவர்கள் தலைவிதி ... ஆனால்  தெரிந்தே தவறு செய்யும் ஆண்கள்?

    தகாதஉறவை தடுக்கமுடியாது என்பதை அரசாங்கமே அறியும்.. அதனால் தான் பாதுகாப்பு முறையை பின்பற்ற சொல்லி அறிவுறுத்துகிறது. அதை கடைபிடிக்காததின் காரணம் என்ன? ஒருவேளை இப்படி இருக்கலாம்.   ஓன்று.. தப்பு செய்யும் எல்லோருக்குமா இந்த நோய் வருகிறது என்ற அலட்சியப்போக்கு ....இன்னொன்று ..எய்ட்ஸ் வந்து செத்தாலும் பரவாயில்லை என்று  'அந்தத் தருணத்தில்' தோன்றும் மனமாற்றம். இதை எவ்வாறு தடுக்கப் போகிறது நம் அரசாங்கம்...?
  
        தமிழ் நாட்டில் எய்ட்ஸ்-ல் முதலிடம் பிடிப்பது,தொழில் வளர்ச்சியில் முன்னணியில் இருக்கும் நாமக்கல்.இங்கு அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பது லாரி ட்ரைவர்கள் தானாம்.சரக்கு போக்குவரத்திற்காக குடும்பத்தை பிரிந்து தொலைதூரம் செல்வதால் இந்தத் தவறு நடப்பதாக சொல்கிறார்கள். இவர்களுக்கு பாதுகாப்பான முறை பற்றி விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதை விட்டு விட்டு, செக்ஸ் பற்றி சரிவரத் தெரியாத பள்ளிச் சிறுவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் 'எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம்' நடத்தி என்ன பயன்?



        இந்த நோயுக்கு மருந்தில்லை என்பது யாவரும் அறிந்ததே. ஆனால் இதைக்கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்திருக்கும் முயற்சி போதுமானதாக உள்ளதா?

    
----------------------------------((((((((((((((((((((((((((((((((((((())))))))))))))))))))))))))))))))))))))------------------    

Monday 20 February 2012

'லேட்'-ஆன லேடி சிவாஜி......



   "ஆத்தி....ஆத்தி.....நான் கொடுத்த பாலெல்லாம் ரத்தமா ஓடுதே........" இது.... தமிழ் சினிமாவின் இரண்டு தலைமகன்கள் நடிப்பில் போட்டிப்போட்டுக் கொண்டு  நடித்த  அழியா காவியமான 'தேவர்மகன்'-ல்  வரும் கடைசி டயலாக்...

      கமல்,நாசரை வதம் செய்துவிட்டு.. தூக்க முடியாத அந்த அரிவாளை தரையில் இழுத்துக்கொண்டே..."போங்கடா...ஏத்துக்கிட்டதெல்லாம் போதும். போயி உங்க புள்ளக்குட்டிங்கள  படிக்க வையுங்கடா...".னு புலம்பிகிட்டு வரும் போது, கடைசியாக எஸ்.என்.லட்சுமி அழுதுக்கொண்டே  பேசும் வசனம். இதைக் கேட்டவுடன் கமல் உடைந்து போய் அழுவார்.கமலின் திரை வரலாற்றில்,அவர் நடிப்பு கிரீடத்தில் சிம்மாசம் போட்டு அமர்ந்திருக்கும் காட்சிகளில் இதுவும் ஓன்று..

         மகாநதி படத்தில்....கமல் ஜெயிலில் இருப்பார்.அவரை பார்க்க அவரின் மாமியாராக நடித்திருக்கும்  எஸ்.என்.லட்சுமி,கமலின் மகளையும் மகனையும் உடன் அழைத்து வந்திருப்பார்.தன் மகனை மட்டும் பார்த்த கமல், மகளை தேடுவார்...

"காவேரி எங்க?..." 

உடனே  எஸ்.என்.லட்சுமியின் பின்னேயிருந்து எட்டிப்பார்ப்பார் குட்டி ஷோபனா,பாவாடை தாவணியுடன்..

"என்ன இது பொட்டு....தாவணி....."   

அடுத்த நொடி எஸ்.என்.லட்சுமி இவள் பெரியவளாக ஆகிவிட்டாள் என்பதை,

 "ஆமாம்...ம்ம்ம்ம்.." என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிட்டு  முகத்தில் ஒரு நடிப்பை காட்டுவர் பாருங்கள்.கமலை விஞ்சி விடுவார்.தன் இயலாமையை நினைத்து கலங்கும் கமல்,

"எப்போ....." என்பார்.

"இங்க வந்துட்டு போனோமே......"

"ஆங் ..........."     
"போன வாரம் இங்க வந்துட்டு போனோமே.......இவ அர வருஷ பரிச்சையில முதல் மாணவியா தேரியிருக்கா மாப்பிள..." னு  நெஞ்சிலிருந்து வெடித்து சிதறும் அந்த வார்த்தைகள், கமலையும் நம்மையும் அழவைத்துவிடும்.ஒரு துளி கூட மிகைப்படுத்தப்படாத  நடிப்பு. கல் நெஞ்சையும் கரைத்துவிடும் காட்சி.இது தேவர் மகனில் சிவாஜியும் கமலும் உருகி நடித்த அந்த காட்சியைவிட அழுத்தமான உணர்வுப் பூர்வமான காட்சி.
    
     கமல் என்ற உலக மகா கலைஞன் இது போன்ற காட்சிகளை அவ்வளவு சீக்கிரம் எந்த நடிகையையும் நம்பி தரமாட்டார்.இவரை,கமல் ஒரு பெண் சிவாஜி என்றே வைத்துப் பார்த்திருப்பார் போல.... இவர்களது நடிப்பு பயணம் மை.ம.கா.ராஜன்,விருமாண்டி என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

   எம்ஜியார்,சிவாஜிக்கே அம்மாவாக நடித்தவர்.அப்படிஎன்றால் இவர் ஐந்து தலைமுறை நடிகர்களை பார்த்த நடிகை என்று கூட சொல்லலாம். 'சர்வர் சுந்தரத்தில்' நாகேஷின் அம்மாவாக கூட நடித்து அசத்தியிருப்பார். ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்திருக்கிறாராம்.

          சன் டிவியின்   டாப் சீரியலான தென்றலில் கூட துளசிக்கு பாட்டியாக நடித்து கலக்கியிருப்பார்.நடிப்பு...நடிப்பு.. என்று வாழ்ந்ததாலையோ  என்னவோ இவர் திருமணமே செய்து கொள்ளவில்லையாம். தள்ளாத வயதிலும் கணீரென்று இருக்கும் குரல், மிகைப் படுத்தாத நடிப்பு, திரையுலகில் நலிந்த கலைஞர்களுக்கு உதவும் மனம்,தன் கடைசி நாட்கள் வரை நடிப்பின் மீது உள்ள தாகம்.. என்று பார்த்தால் நிச்சயம் இவர் ஒரு லேடி சிவாஜி தான்...இவர் இடத்தை நிரப்புவது மிகவும் கடினம். தமிழ் திரையுலகில் இவரின் இழப்பு நிச்சயம் ஈடு செய்ய முடியாதது. 
  
விருமாண்டி படத்தில் இவர் இறந்தபிறகு கமல் பாடும் அந்த பாட்டு...

        "மாட விளக்கே....மகராசி மண்ணை விட்டு போனியே.....
        சொர்ன நிலாவே சொந்தம் விட்டு சொல்லாம போனியே.......
        வானம் யேறி போனவளே வந்தவழி திரும்புவியோ.....
        அடி ஆத்தாடி வாயு வயித்துல அடிக்கிறேன்.....
        இப்போ  வார்த்தை வராம துடிக்கிறேன்.....
        நீ பழகினதெல்லாம் நினைக்கிறேன்.....
        இப்போ  ரத்த கண்ணீர வடிக்கிறேன்....."




        
 வருடைய ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்......

------------------------------(((((((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))---------------------


Saturday 18 February 2012

கலைஞரின் 'குடியிருந்த கோயில் '--ஒரு நேரடி விசிட்



     மிழ் நாட்டில் விருதுநகர்,காஞ்சிபுரத்திற்கு அடுத்து பெருசா பேசப்படுற ஊர்  திருவாரூர்.தமிழக அரசியல் வரலாற்றை இந்த மூன்று ஊர்களையும் தவிர்த்து எழுதிவிட முடியாது.அப்படியென்ன சிறப்பு? பின்ன....மூன்று முத்தான முதல்வர்களை தந்த மண் அல்லவா இது..படிக்காத மேதையையும், பேரறிஞரையும், முத்தமிழ் அறிஞரையும் ஈன்றெடுத்த  பூமி இது...

கலைஞர் பிறந்த வீடு 

       காமராசரும்,அண்ணாவும் அவங்க சொந்த ஊரிலே தோற்றாலும்  போன  தேர்தலில் திருவாரூரில் போட்டியிட்ட கலைஞர் ஐம்பதாயிரம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிச்சிருக்கார்.இது ஜெயாவின் திடீர் பூர்வீகமாக அறிவிக்கப்பட்ட ஸ்ரீரங்கத்தில் அவர் பெற்ற வாக்கு வித்தியாசத்தைவிட பத்தாயிரம் ஓட்டுகள் அதிகம்.கடந்த தேர்தலில் திமுக வென்ற பெரும்பான்மையான தொகுதிகள் இழுபறியில் இழுத்துகிட்டு நிக்க... தலைவர் மட்டும் ஜம்முனு முன்னணியில் போய்கிட்டிருந்தார்.பொதுவா கம்னியுஸ்ட் அதிகம் உள்ள தொகுதியாச்சே இது எப்படி சாத்தியம்னு ஊருக்கு போன் போட்டு விசாரிச்சா...எல்லா சிவப்பு சட்டைக்காரங்களும்  கலைஞருக்குத்தான் ஒட்டு போட்டதா சொல்றாங்க.அப்படி என்னதான் பெரிசா செஞ்சிட்டாரு?


      கடந்த திமுக ஆட்சியில் அரசு அலுவலகங்கள் முதலில் கணினி மயமாக்கப்பட்டது திருவாருரில்தான். சென்ட்ரல் யுனிவர்சிட்டியையும் மெடிகல் காலேஜையையும் போராடி பெற்றுக்கொடுத்திருக்கிறார்.ஏர்போர்ட் கட்டும் பணியும் ஒரு புறம் நடைபெறுகிறது.உலக புகழ்பெற்ற திருவாரூர் தேர் தீ விபத்தால் நின்றுவிட தன் பகுத்தறிவு கொள்கையை கொஞ்சம் ஓரம்கட்டி விட்டு தேரை புதுப்பித்து ஓட வைத்திருக்கிறார்.இன்னும் எத்தனையோ..!! இதில் ஆச்சர்யமான ஒரு விஷயம்.. இவை எல்லாமே இவர்  இந்தத் தொகுதி  MLA வாக இல்லாத போது நடந்த நன்மைகள்.இவர் அரசியலில் காலடி எடுத்து வைத்து முதன் முதலில் போட்டியிட நினைத்தது திருவாருரில்தான்.ஆனால் அரசியல் சூழ்ச்சியால் அன்று இது தனித்தொகுதியாக மாற்றப்பட.. வேறு வழியில்லாமல் குளித்தலையில் போட்டியிட வேண்டியதாயிற்று.ஆனால் அன்றிலிருந்து இன்று வரை திருவாருரை அவர் தனது 'செல்லத்தொகுதி' யாக நினைத்து,மாவட்ட தலைநகராக்கி, தான் பிறந்து வளர்ந்த மண்ணின் மக்களின் துயர் துடைத்து அவர்கள் மனதில் 'மண்ணின் மைந்தனாக'  இன்று வரை இருக்கிறார்.  தொகுதி சீரமைப்பால் கடந்த தேர்தலில் திருவாரூர் தனித் தொகுதியிலிருந்து விடுபட,இது அவருக்கு 'கனித்தொகுதி'யாக  மாறியது.       

   கலைஞர் பிறந்த ஊரான திருக்குவளை,திருவாருரிலிருந்து சுமார் பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.ஒரு காலத்தில் இது ஒரு குக்கிராமம்தான். இன்று ஒரு பெரிய நகரத்தில் இருக்கும் அனைத்து அடிப்படை வசதிகளுடன் கம்பீரமாக காட்சி அளிக்கிறது.இங்குதான் கலைஞர் பிறந்து வளர்ந்த வீடு உள்ளது.எந்தவித ஆர்பாட்டமில்லாமல் ஐநூறு சதுர அடிக்கும் குறைவாக உள்ள அந்த அழகிய ஓட்டு வீடுதான் ஒரு மிகப்பெரிய தலைவனை தமிழகத்திற்கு அளித்த வீடு.
வீட்டின் உள்ளே...
 
வீட்டின் உள்ளே கலைஞரின் வசந்தகால நினைவுகள்.....

    நான் எப்ப ஊருக்கு போனாலும்  ரெண்டு விஷயம் கண்டிப்பா நடக்கும். ஒன்னு குல தெய்வ கோயிலுக்கு  வழுக்கட்டாயமா  கூட்டிடுப்போவாங்க. இன்னொன்னு எட்டுக்குடி முருகன் கோயில்.நான் பெரிய பக்திமான் இல்லன்னாலும் மற்றவங்க வற்புறத்தலையோ, நம்பிக்கையையோ  குறை சொல்லியதுமில்லை  புறந்தள்ளியதுமில்லை. எட்டுக்குடி கோயில்னா  உடனே கெளம்பிடுவேன்.அதுக்கு முக்கியமான காரணம் ஒன்னு இருக்கு.. போற வழியில் தான் கலைஞர் பிறந்த திருக்குவளை இருக்கு. அவர் வீடு வழியாத்தான் கார் போகும்.அப்படியே  கலைஞர் வீ ட்டுக்குள்ள  போயி கொஞ்ச நேரம் ஒய்வு எடுத்துட்டு அங்கிருக்கும்  அவருடை பழையகால போட்டோ, செய்திகள் எல்லாத்தையும் படித்து பாத்துட்டு வருவது வழக்கம்.அவர் வீட்டு காவலாளி சந்தானம்,'தலைவர் இப்பத்தான் ரெண்டு மாசத்துக்கும் முன்னால வந்து போனார். இதோ இங்கதான் சேர்ல உட்காந்திருந்தார்...இந்த முறை கொஞ்சம் கண்கலங்கிட்டார்'-னு செட்ன்டிமென்டா எடுத்துவிடுவார்.இந்த முறை ஊருக்கு நம்ம ஜுனியரோட முதல் முறையா வந்ததால கண்டிப்பா கலைஞர் வீட்ட ஒரு விசிட் போட்டுறலாம்னு கெளம்பி போனோம்.

கலைஞரின் படைப்புகள்...

       கலைஞர் பிறந்து வளர்ந்தது பழைய ஓட்டு வீடு என்பதால் அதை புதுப்பித்து நூலகமாக மாற்றியிருக்கிறார்கள்.தரையில் மொசைக்,ஏசி  என்று சகல வசதிகளுடன் ஒரு காட்சியகம் போல இருக்கும்.வீட்டிற்கு வெளியே அழகான சுத்தமான ரோடு.அதையொட்டி மிகப்பெரிய குளம்.குளத்தைச்சுற்றி  அழகிய பூங்காக்கள்.எந்த பேனரோ கட்சிக்கொடியோ தலைவர்கள் சிலையோ எதுவும் இல்லாமல் அமைதியாக இருக்கும் ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஓடியாடி விளையாடிய அந்த தெரு.

        அங்குள்ள பெரிசுகளிடம் பேச்சுக்கொடுத்தால் அவரோடு பழகிய  பழைய நினைவுகளை பெருமிதத்தோடு சொல்லி பூரிப்படைகிறார்கள். கலைஞர் ஒவ்வொரு முறையும் இங்கு வரும்போது அவருடன் பள்ளியில் படித்த நண்பர்கள் ,தெருவில் ஓடியாடி விளையாடிய நண்பர்கள் என்று யாரையும் மறக்காமல் அழைத்து தனது பழைய கால நினைவுகளை பகிர்ந்துக் கொள்வாராம்.

   
       திருக்குவளை கிராமத்தில் கலைஞரின் சொந்த பந்தங்கள்  என்று யாருமில்லை. சொத்து பத்தும் எதுவுமில்லை. இங்கு கட்டாயம் வரவேண்டும் என்ற அவசியமும் இல்லை.ஆனாலும் வருடாவருடம் இங்கு வருகிறார். இங்குள்ள மக்களின் பிரச்சனைகளை கேட்டு அவர்களுக்கு உதவி செய்கிறார். ஒவ்வொரு முறையும் இங்கு வரும் போது தன் பேரக் குழந்தைகளை அழைத்து வந்து 'இதுதான் உங்க தாத்தா வாழ்ந்தவீடு,இது நான் படித்த பள்ளிக்கூடம்,இது நான் ஓடி விளையாடிய தெரு, இந்தக்குளத்தில்தான் நான்  'டைவ்' அடித்து குளிப்பேன்,இந்த மரத்தில் தான் நாங்கள் ஊஞ்சல் கட்டி விளையாடுவோம் ' என்று தன் அடுத்த சந்ததியினருக்கு அந்த மண்ணின் மகத்துவத்தையும், பெருமையையும் சொல்லி பூரிப்படைவாராம்.

சந்தானம்.


வீடு அமைந்திருக்கும் தெரு.

கலைஞரின் 'குடியிருந்த கோயில்' (உள்ளே பழைய வீடு)
   
அரசியல்,சினிமா என்று தொட முடியாத உச்சத்திற்கு சென்றாலும்,தான் பிறந்து,தவழ்ந்து,வளர்ந்து,வாழ்ந்த அந்த வீட்டை ஒரு 'கோயில்' போல் தான் இன்றும் கலைஞர்  பார்க்கிறார். 



நன்றி சொல்லும் கலைஞர்..........


-------------------------------((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))-------------------------------- 

Friday 17 February 2012

மெரினா-கொஞ்சம் லேட்டான விமர்சனம்



      சங்களின் சேட்டைகளை பசங்களை வைத்தே  பக்காவாக செல்லி,அந்த பசங்களுக்கு தேசிய விருது வாங்கிக்குடுத்து தானும் விருது வாங்கி தமிழ் ரசிகர்களின் மனசில் 'பச்சக்' என்று ஒட்டிக்கொண்ட 'பசங்க' பாண்டிராஜின் படமாச்சேன்னு படபடப்பு கலந்த ஆவலோடு தியோட்டருக்குப் போனா....... உள்ளே லைட்டா பொசுங்குன வாடை.

                சரி...படம் ஆரம்பத்தில அப்படித்தான் இருக்கும்.போகப் போகப் பாருங்க பாண்டிராஜ் பட்டையக் கெளப்புவாருன்னு  நெனச்சுக்கிட்டு பக்கத்து சீட்ல உள்ளவர்கிட்ட "படம் போட்டு ரொம்ப நேரமாச்சோ?.....படம் எப்படிங்க இருக்கு ? '-னு  கேட்க அவர் எந்த பதிலும் சொல்லாம முறைச்சுப் பார்க்க...அப்பறம்தான் தெரிந்தது பொசுங்குன வாடைக்கு காரணம்.

         சின்னப் பசங்கள வச்சே சிக்ஸ்சர் அடிச்சவராச்சே..சிவகார்த்திகேயன் கெடச்சிருக்க சிங்கிலாவா அடிப்பார்?- னு நான் நெனச்சது தப்பா போச்சே.... அதுக்குன்னு காமெடி னு சொல்லிட்டு அவங்க போடுற மொக்கையில ஏசி தியேட்டருலேயும் ஒரே வெக்கை...

    'பசங்க' படத்தில் புது ஹீரோ,புது ஹீரோயின்,பால்குடி மறவாத பொடிப் பசங்க,புது டெக்னிசியன் -னு புதிய டீமை  வைத்து பின்னி எடுத்தவராச்சே.... 'வம்சம்' படத்தில நாம எதிர்பாக்காத நேரத்தில இடுப்பிலிருந்து 'சுனைனா' சைக்கிள் செயினை உருவும்போது நம் ஈரகுலையே நடுங்கிப் போகுமே..... அந்தமாதிரி இதுலேயும் ஏதாவது இருக்கும்னு நெனைச்சிகிட்டு உட்காந்திருந்தா..கடைசியில படமே முடிஞ்சுபோச்சு....
 
            நீ வேணா பாரு மெரீனா படத்திற்குப்பிறகு 'பசங்க பாண்டிராஜ்'-னு பேரை 'மெரீனா பாண்டிராஜு'-னு  மாத்தி வச்சுக்க போறாருனு என் .'.பிரண்டு கிட்ட  சவால் விட்டது தப்பா போச்சே...சரி பழைய மேட்டரயெல்லாம்  விட்டுத் தள்ளுவோம்...இது அவரோட முதல் படம்னு வச்சுப்பாத்தா உண்மையிலே மனுஷன் கலக்கிட்டாருனுதான் சொல்லணும். 

   டலுக்கும் கரைக்கும் உள்ள பாசப்பிணைப்பை பல  தமிழ்படங்கள் ( எம் ஜி யாரின்  படகோட்டியிலிருந்து ஒரே வாரத்தில் படுத்துக்கொண்ட விஜயின்   சுறா  வரை)  ஏற்கனவே  பல கோணத்தில் சொல்லியிருந்தாலும் கரைமேல் உள்ள சிறுவர்களின் நெஞ்சில் உள்ள  சோகங்களை  அந்த ஈர மணலின் வாசத்தோடு சொல்லிய இயக்குனர் பாண்டிராஜுக்கு தாராளமாக ஒரு கோடி பூங்கொத்துக்கள் கொடுக்கலாம்.

     
   50 க்கும் அதிகமான புதுமுகங்களை நடிக்க வைத்து வேலைவாங்குவது ஒன்றும் சாதாரணமான விஷயம் அல்ல.எல்லோரையும் நடிக்க வைத்து சாதித்து காட்டியிருக்கிறார் இயக்குனர்.

     சுண்டல்,சங்கு,காத்தாடி விற்கும் சிறுவர்கள்,பிச்சைக்கார தாத்தா,குதிரை சவாரி ஏற்றுபவர்,பெட்ரோல் திருடுபவன்,பாட்டுப்பாடி வித்தைக்காட்டி காசு கேட்கும் அப்பாவும் மகளும்,சேகுவாரா கெட்டப்பில் வரும் கீழ்பாக்கத்து இளைஞர், இவர்களுக்கு உதவும் போஸ்ட்மேன் என நாம் அன்றாடம் பீச்சில் பார்க்கும் கேரக்டர்களை அப்படியே நம் கண் முன் நிறுத்துகிறார்.

      ஆனால் இவர்களுக்குப் பின்னால் மறைந்திருக்கும் சோகங்களை சொன்ன விதத்தில்தான் இயக்குனர் கொஞ்சம் சறுக்கியிருக்கிறார்.மருமகளின்   கொடுமை தாங்காமல் வீட்டை விட்டு வெளியே வந்து பிச்சை எடுக்கும் அந்த பிச்சைக்கார தாத்தாவின் கேரக்டர்தான் படத்தில் அழுத்தமாக சொல்லப் பட்டிருக்கிறது.அப்படிஎன்றால் பிச்சை எடுத்து வாழத் துணிந்ததற்கான காரணத்தை அழுத்தமாக சொல்ல வேண்டாமா? வெறும் ஐந்து நொடிகளில் முடிந்து விடுகிறது அவரது பிளாஷ் பேக்.

   பசங்க படத்தில் கலக்கிய பக்கடா பாண்டிதான் இதில் ஹீரோ.ஆனால் அவருக்கு ஒரேயடியா  செண்டிமெண்ட் சீன வச்சி வெறுப்பேற்றி இருக்கிறார்கள்.அவரோட நண்பனா வரும் கைலாஷ் பக்கத்து வீட்டு பையன்  போல இருக்கிறார்.அவர் வீட்டை விட்டு ஓடிவந்த காரணம் அவ்வளவு சுவாரஸ்யம் இல்லையென்றாலும் கொஞ்சம் நடிக்கவும் செய்திருக்கிறார்.

   படத்தின் இன்னொரு நெருடல் திரைக்கதை.மொத்தப்பேரும் கயிறு கட்டி இழுத்தாலும் நகராத திரைக்கதையை,இன்ஸ்பெக்டர் மகனை கைலாஷ் கல்லால் அடித்துவிட அவனை  இரண்டு சிரிப்பு போலிசை வைத்து தேடவைத்து ஏதோ சஸ்பென்ஸ் கதை போல் நகர்த்த முயற்சி செய்திருக்கிறார்கள்.கடைசியில் 'சப்' பென்று முடிந்ததுதான் சிரிப்பே வராத கொடுமை. 
   
    டிவி இன்டர்வியில் படபடவென்று பொரிந்துதள்ளும் பசங்களின் பயோடேட்டா,கொரியரில் அனுப்பும் ஆப்பு,ரிவெட் ஐடியா இரண்டும் புதுமையான கவிதை.    

  காம்பெயரிங்கில் கலக்கும் சிவகார்த்திகேயன்,பக்கடா பாண்டி இருந்தும் காமெடிக்கு அப்படியொரு  பஞ்சம்.வெறும் எஸ் எம் எஸ் ஜோக்கை வைத்துதான் ஒப்பேற்ற வேண்டுமா? சிவாவுக்கு மாடுலேஷன் நெறைய மிஸ்ஸிங்.இழுத்து இழுத்து பேசுகிறார்.பசங்க படத்தில் வரும் .'.போன் மேட்டர் போல் இதிலும் வைத்திருக்கிறார் இயக்குனர்.அதில் 'ரெட்டை வாழைப்பழம்' என்றால் இதில் 'இட்லி சட்னி' மேட்டர்.பசங்களை வைத்து காமெடி பண்ணுகிறேன் பேர்வழினு சொல்லிட்டு 'நம்பர் ஒன்' போவதில் போட்டி வைப்பது,கவுட்டிக்குள் கையை வைத்து சவுண்டு விடுவது என்று ரொம்பவே போரடிக்கிறார். 

      கரைமேல் கடலளவு சோகங்கள் இருக்க,வெறும் கடுகளவு  பிரச்சனைகளை மட்டும் அலசியது இன்னொரு குறை.சுனாமியின் சோகங்கள் கூட அந்த பீச் மணலில் புதைந்திருக்கிறதே.ஒரு பாடல் காட்சியில் விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பது போன்ற கட்சியை வைத்திருக்கிறார்கள்.அதை இன்னும் காட்சிப்படுத்தி எச்சரித்திருக்கலாம்.காதல் ஜோடிகள் செய்யும் அசிங்கங்களை தட்டிக்கேட்பவராக வரும் அந்த சேகுவாரா கெட்டப் மனிதனின் நடிப்பு ரொம்ப செயற்கையாக இருக்கிறது.பீச்சில் காதலர்கள்  பேசும் போது ஒட்டுக்கேட்டு  பின்பு  ரொமான்ஸ் பண்ணும்போது  விசிலை ஊதி அவர்களை துரத்தி விடுவதால் இந்த தவறுகள் குறைந்து விடுமா என்ன? பீச்சில் நடக்கும் தவறுகளை செவிட்டில் அறைந்தால் போல் சுட்டிக்காட்டும் காட்சியமைப்பும் வசனங்களும் இல்லாதது மிகப்பெரிய மைனஸ் . 

    படத்தில் ஆறுதலான விசயங்களில் ஓன்று அந்த போஸ்ட்மேன்.இப்படி ஒரு போஸ்ட்மேன் நம்ம ஊரிலும் இருக்கக் கூடாதா என்று  ஏங்கும் அளவுக்கு சாந்தமான முகம்.அலட்டிக்கொள்ளாத அருமையான நடிப்பு.இன்னொருவர் அந்த நடனமாடும் சிறுமி.பார்ப்பதற்கு 'குட்டி ஸ்ரீதேவி' மாதிரி இருக்கிறார். நளினமாக ஆடும்  நடனமென்ன.....பட படவென்று பேசும் அந்த கண்களென்ன... அவ்வளவு அழகு.

   படத்தின் கதைக்கருவே குழந்தைக்கல்வியின்   அவசியத்தைச் சொல்வதுதான் என்றால் அதையாவது தெளிவாக சொல்லவேண்டாமா?.  எல்லா சிறுவர்களையும் வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டுபோய் ஒரு ரூமில் அடைத்து வைத்து அவர்களுக்கு  விளக்கிச்சொல்வது ஏதோ 'முரட்டுக்கல்வி' போல் உள்ளது.வழக்கம் போல் சசி கம்பெனியின் ஆஸ்தான நடிகர் ஜெயப்ரகாஷ் இதிலும் வந்து புத்திமதி சொல்கிறார்.

   இந்தப்படம் 5 டி கேமரா மூலம் படமாக்கப் பட்டதாம்.பீச்சில் நடக்கும் அந்த குதிரைப்பந்தயம்  அழகாக படம் பிடித்திருக்கிறார்கள். 'காதல் ஒரு தேவதையின் அழகா' பாடல் அருமை.
     
      
      சொந்த காசைப்போட்டு படமெடுக்கிறோமே  என்று ரெண்டு குத்துப்பாட்டு, டபுள்மீனிங் வசனங்கள், லேட்டஸ்ட் நெம்பர் ஒன் காமெடியன், தொப்புள் தெரிய வலம் வரும் ஹீரோயின்,அனல் பறக்கும்  .'.பைட்டு என்று எந்த கமர்சியல் கலவையும் இல்லாமல் தான் சொல்ல வந்ததை எந்த காம்ப்ரமைசும்  பண்ணாமல்  தைரியமாக சொன்ன இயக்குனர் பாண்டிராஜுக்காக  இந்தப்  படத்தை ஒருமுறையாவது  பார்க்கலாம்.                

   --------------------------------------(((((((((((((((((((((())))))))))))))))))))))))))))))))---------------------