Wednesday 11 December 2013

சிங்கப்பூரில் பற்றி எரிகிறது இந்தியர்களின் மானம்...

லவரத்தின் ஆரம்பப்புள்ளி எதுவென்று இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. சிங்கப்பூர் ஊடகங்களில் வெளியாகிக்கொண்டிருக்கும் தகவல்களின் அடிப்படையிலேயே  கலவரத்தின் பின்னணி தெரியவருகிறது.


விபத்துக்கான சூழல்.....

சிங்கப்பூரில் இயங்கும் பேருந்துகளில் விபத்துகள் நடப்பது மிகமிகக் குறைவு.இங்கு இருபெரும் போக்குவரத்து கழகங்கள் உள்ளது.  ஒன்று SBS TRANSIT ,  மற்றொன்று SMRT BUS SERVICES.  இரண்டுமே பாதுகாப்பான பயணத்திற்கு உத்திரவாதம் தரும் நிறுவனம்தான். இந்த இரண்டு நிறுவனங்களில் பேருந்துகள் மோதி பயணிகள் இறந்ததாக இதுவரையில் நான் கேள்விப்பட்டதில்லை. அதேபோல் மற்ற வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளாவதும் மிகக் குறைவே. இவ்வளவுக்கும் இப்பேருந்துகளில்  நடத்துனர் என்று ஒருவர் கிடையவே கிடையாது. ஓட்டுனர் மட்டும்தான். அவர்தான் பேருந்துகளில் பொருத்தப்பட்டிருக்கும் கண்ணாடிகள் வழியாக பயணிகள் இறக்கிவிட்டனரா என்பதை கவனித்துவிட்டு தானியங்கி கதவை மூடுவார்.

ஆனால், அன்று நடந்த விபத்து தனியார் பேருந்தினால் நிகழ்த்தப்பட்டது. சிங்கப்பூரில் கட்டுமானம் மற்றும் கப்பல் கட்டும் துறையில் வேலை பார்ப்பவர்கள் மொத்தமாக Dormitory எனப்படும் விடுதியில் தங்கவைக்கப் படுவர். சிங்கையில் நிறைய  Dormitory உள்ளது. காலையில் லாரிகளில் வேலைக்கு அழைத்துச்செல்லப்படும் இவர்கள், வேலைமுடிந்து இரவுதான் வீடு திரும்புவார்கள். திங்கள் முதல் சனிக்கிழமை வரை இவர்கள் வேறு இடங்களுக்கு செல்வதோ அல்லது சினிமா உள்ளிட்ட மற்ற கேளிக்கை இடங்களுக்கு செல்வதோ சாத்தியமில்லை.

வார இறுதியான ஞாயிறு மட்டும்தான் விடுமுறை. அன்றுதான் எல்லோரும் ' லிட்டில் இந்தியா ' எனப்படும் அப்பகுதியில் கூடுவார்கள். ஒருவேளை ஞாயிறு வேலையிருந்தாலும் மாலை கூடிவிடுவார்கள். இதுதான் அவர்களுக்கு மீட்டிங் பாயிண்ட். ஒருவார உடல்ரீதியான கடுமையான வேலைப்பழுவுக்கு அதுதான் ரிலாக்சிங் ஏரியா.பிறகு சரக்கு,அரட்டை என்று அந்த ஏரியாவே களைகட்டும்.அப்படி அங்கு கூடுபவர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கு மேல் இருக்கும். தீபாவளி நேரங்களில் ரங்கநாதன் தெருவில் நுழைந்து விட்ட உணர்வு ஏற்படும். கடைசியாக அந்த வாரத்திற்கு தேவையான மளிகை, காய்கறிகளை மொத்தமாக வாங்கிக்கொண்டு பிரியா விடைபெறுவார்கள். இது இன்று நேற்றல்ல, பட வருடங்களாக நம்மவர்கள் பின்பற்றும் நடைமுறை.

அவர்கள் தங்கியிருக்கும் Dormitory யிலிருந்து லிட்டில் இந்தியாவுக்கு நேரடி போக்குவரத்து வசதிகள் கிடையாது. அந்த வாய்ப்பை தான் இதுபோன்ற பல தனியார் பேருந்துகள் பயன்படுத்திக்கொள்கின்றன. பெரிய நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாட்களை அழைத்து செல்லும் இப்பேருந்துகளுக்கு வார இறுதியில் வேலையிருக்காது என்பதால் , இதுபோன்ற சேவைகளில் ஈடுபட்டு துட்டு பார்க்கும். தலைக்கு $2 வீதம் வசூலித்து கும்பல் கும்பலாக ஏற்றிச்சென்று லிட்டில் இந்தியா பகுதியில் இறக்கிவிட்டுவிட்டு, மீண்டும் இரவு 9 மணிக்கு மேல் அவர்களை ஏற்றிக்கொண்டு அதே Dormitory யில் விட்டுவிடும்.

இதுபோன்ற ஒரு தனியார் பேருந்தில்தான் அந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

அன்று நடந்தது......

லிட்டில் இந்தியாவின் பரபரப்பான செராங்கூன் சாலைக்கு இணையாக அமைந்திருக்கிறது ரேஸ்கோர்ஸ் சாலை.  இந்தச் சாலையில்தான் அஞ்சப்பர், அப்பல்லோ பனானா லீஃப், முத்து கறீஸ் உள்ளிட்ட புகழ்பெற்ற ஹோட்டல்கள் உள்ளன.

ரேஸ் கோர்ஸ் சாலை,ஹேம்­­­ஷி­­­யர் சாலைச் சந்­­­திப்­­­பில் ஞாயிறு இ­­­ரவு கிட்டத்­­­தட்ட 9.23 மணி அளவில் இந்த விபத்து நடந்தது. அந்தப் பேருந்தை இயக்கியது 55 வயது மதிக்கத்தக்க சிங்கப்பூர் வாசி. பேருந்துக்கு வெளியே கட்டணம் வசூலித்தது ஒரு பெண்மணி என்று சொல்கிறார்கள். அவரும் சிங்கப்பூர் வாசிதான்.

அந்தப் பேருந்தில் சக்திவேல் குமாரவேலு (வயது 33) என்கிற நபரும் ஏற முயன்றுள்ளார். அவர் மிக அதிகமாகக் குடித்திருந்தார் என சொல்லப்படுகிறது. அதனால் அவரை ஏற அனுமதிக்கவில்லை. அப்போது நடந்த தள்ளுமுள்ளில் சக்திவேல் நிலைதடுமாறி கீழே விழுந்திருக்கிறார். அதைக் கவனிக்காத ஓட்டுனர் பேருந்தை எடுக்க முயற்சிக்க, ஏதோ சத்தம் கேட்டு வண்டியை நிறுத்தியிருக்கிறார். பேருந்தின் கீழே சக்கரத்தில் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார் சக்திவேல். உடனடியாக அங்கு கூடியிருந்த தமிழர்கள் குடிமைத் தற்­­­காப்­­­புப் படை­­­யி­­­னருக்கு( Singapore Civil Defence Force ) தகவல் சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் வரும்வரை எந்த அசம்பாவிதமும் அங்கு நடைபெறவில்லை.

 9.31 PM க்கு முதல் ஆம்புலன்ஸ் வருகிறது. 9.37 மணியளவில் குடிமை தற்காப்புப்படை அந்த இடத்திற்கு வந்தடைகிறது. கூடவே தீயணைப்பு வண்டியும். அங்கு கூட்டம் அதிகமாகக் கூடியதால் அசம்பாவிதம் எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக உடனடியாக அதிகமான போலீசார் வரவழைக்கப்படுகிறார்கள். அவர்கள் 9.41 க்கு அங்கு வந்து சேர்கிறார்கள். அப்போது 400 பேருக்கு மேல் கூடிவிடுகிறார்கள். 9.56 க்கு சக்திவேலின் உடல் வெளியே எடுக்கப்படுகிறது. இந்த இடைப்பட்ட தருணத்தில்தான் கலவரத்தின் ஆரம்பப்புள்ளி வைக்கப் பட்டிருக்கவேண்டும்.

முதலில் வாக்குவாதமாக ஆரம்பித்து பிறகுதான் கலவரம் வெடித்திருக்கிறது. முதலில் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். பிறகு அந்தத் தனியார் பேருந்து,  குடிமைத் தற்­­­காப்­­­புப் படை­­­யி­­­னர், அவர்கள் வந்த வாகனம், ஆம்புலன்ஸ் என தாக்குதல் தொடர, பின்பு கலவரமாக வெடித்துள்ளது.

இன்னொரு செய்தி, பேருந்து பின்நோக்கி நகரும்போது முன் சக்கரத்தில் சக்திவேல் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்திருக்கிறார். அந்த ஓட்டுனரும், பெண் நடத்துனரும் சம்பவ இடத்தில் தான் இருந்திருக்கின்றனர். அப்போது அங்கு வந்த குடிமைத் தற்காப்பு படையினர், விபத்தில் சிக்கிய நபர் இறந்துவிட்டார் என்று தெரிவித்ததோடு, சம்மந்தப்பட்ட ஓட்டுனரையும்,நடத்துனரையும் பத்திரமாக மீட்டுக்கொண்டு சென்றதால்தான் கலவரம் வெடித்தது என்றும் சொல்லப்படுகிறது



தாக்குதலில் மொத்தம் 400 பேர் ஈடுபட்டதாக உள்ளூர் செய்திகளில் படிக்க நேர்ந்தது. அடுத்து அங்கு விரைந்த போலீசாரின் 16 வாகனங்கள், 9 சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை வாகனங்கள் என மொத்தம் 25 வாகனங்களை, கான்கிரிட் துண்டுகள், கற்கள், பீர் பாட்டிகள், இரும்புக் கழிகள், குப்பைத் தொட்டிகள் மற்றும் கைகளில் கிடைத்த அனைத்துப் பொருட்களைக் கொண்டும் தாக்க ஆரம்பித்துள்ளனர். இதில் ஆறு போலிஸ் ஆபீசர்களுக்கு கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. கடைசியாக, கலவரத்தின் உச்சகட்டமாக ஐந்து வாகனங்களுக்கு தீவைத்துள்ளனர்.

40 ஆண்டுகளுக்கு மேலான சிங்கப்பூர் வரலாற்றில் இப்படியொரு கலவரம் நடந்ததில்லை. இன்னும் சொல்லப் போனால் சிறு அசம்பாவிதம் கூட நிகழ்ந்ததில்லை. யாருமே எதிர்பார்க்காமல் திடீரென்று நடந்த  இந்தக் கலவரத்தை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் கையைப் பிசைந்து நின்றிருக்கிறது சிங்கப்பூர் போலிஸ்.

இவ்வளவு கலவரத்திலும் அவர்கள் அங்கு குழுமியிருந்த தமிழர்கள் மீது சிறிய லத்தி சார்ஜ் கூட செய்யவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். சிங்கப்பூரை ஓர் அமைதிப் பூங்காவாக மாற்ற நாங்கள் நிறைய இழந்திருக்கிறோம். இதுபோல கலவரங்களை துளிகூட அனுமதிக்க முடியாது என அமைச்சர் ஒருவர் வேதனையுடன் கலந்த வருத்தத்தைத் தெரிவித்திருக்கிறார்.

கலவரத்திற்கான அடிப்படைக் காரணம்...

கலவரத்திற்கு காரணமே நம்மவர்களின் குடிவெறிதான் என்று சமூக ஊடகங்களில் பல தமிழர்கள் பொங்குவதைக் காண முடிகிறது. இத்தனை வருடங்கள் அதே இடத்தில் நம்மவர்கள் குடித்துவிட்டு, பிறகு அமைதியாக தங்கள் இருப்பிடத்துக்கு சென்றார்களே... சிறு அசம்பாவிதம் நடந்ததாக வரலாறு இருக்கிறதா..? சிங்கப்பூரில் இந்தியத்தமிழர்கள் குடித்துவிட்டு ஆட்டம் போட்ட ஒரு சம்பவத்தை குறிப்பிட முடியுமா...?

இந்த இடத்தில் சிங்கப்பூர் தமிழ் அமைச்சர் திரு ஈஸ்வரன் அவர்கள் சுட்டிகாட்டிய ஒரு விஷயத்தை  நினைவு படுத்த விரும்புகிறேன் ..  "இச்சம்பவத்திற்குக் காரணம் நடந்த விபத்தே தவிர, குடிபோதை அல்ல.. அவர்களின் ஆக்ரோசத்தை குடிபோதை இன்னும் அதிகப்படுத்தி கலவரமாக மாற்றியிருக்கிறது." தற்போது சம்பவம் நடந்த ரேஸ்கோர்ஸ் சாலையில் மதுபானங்கள் விற்பதற்கான அனுமதி வார இறுதி நாட்களில் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டதாக தெரியவருகிறது.

தற்போதைய நிலவரம்....

கலவரம் நடந்த அன்று இரவே 27 பேரை சுற்றிவளைத்து கைது செய்தது சிங்கப்பூர் போலிஸ். அதில் 25 பேர் இந்தியத் தமிழர்கள், இருவர் பங்களாதேஷ் ஆடவர்கள். அதில் ஒரு இந்தியர் மற்றும் இரு பங்களாதேஷ் காரர்களும் சம்மந்தப்படவில்லை என தெரிந்ததால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

கலவரம் நடந்த மறுநாள் இறந்துபோன சக்திவேல் குமாரவேலு தங்கியிருந்த விடுதியில், இரவு 10 மணிக்குப் பிறகு வந்தவர்களை தனித்தனியாக விசாரித்தது போலிஸ். பிறகு மற்ற விடுதிகளிலும் விசாரணைகள் மேற்கொண்டு, இன்று(11-12-2013) காலை மேலும் 8 பேரை கைது செய்துள்ளதாக அறிவித்திருந்தது. அதில் மூன்று பேர்கள் மீது குற்றம் நிருபிக்கப்பட்டதால் , தற்போது கலவரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. ஒருவேளை இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகலாம்.

சிங்கப்பூரில் குற்றத்திற்கான தண்டனைகள் மிக வெளிப்படையானவை. இந்தந்த குற்றத்திற்கு இன்னென்ன தண்டனைகள் என வகைப்பிரித்து வைத்திருக்கிறார்கள். இதில் எந்த நெளிவு சுளிவும் இருக்காது. குற்றம் நிரூபணமானால் தயவு தட்சனையின்றி தண்டனை வழங்கப்படும். இந்தியா , பங்களாதேஷ், இலங்கை, தாய்லாந்து, மலேசியா,பிலிப்பைன்ஸ், வியட்நாம், மியான்மார் , சீனா உள்ளிட்ட தெற்காசியாவில் உள்ள அனைத்து நாடுகளிருந்தும் இங்கு வேலை பார்க்கிறார்கள்.இத்தனை விதமான மனிதர்களை வைத்துக்கொண்டு குற்றங்களே இல்லாத நாடாக கட்டமைத்திருக்கிறார்கள் என்றால் அதற்கு முக்கிய காரணம் , சமரசமே செய்யமுடியாத அவர்களின் தண்டனை அமைப்புகள்தான். ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என்பது மட்டுமல்ல, ஒரு குற்றவாளி கூட தப்பித்துவிடக் கூடாது என்பதிலும் கவனமாக இருக்கிறார்கள்.

கடைசியாக குற்றம் சாட்டப்பட்ட 27 தமிழர்களுக்கும் தலா ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்கும் என சொல்கிறார்கள். கலவரத்தில் ஈடுபட்டதால் பிரம்படியும் கிடைக்கலாம். பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்ததற்காக அபராதமும் விதிக்கப்படலாம். கைது செய்யப்பட்டவர்களில் எத்தனைப்பேர் திருமணமானவர்கள் எனத் தெரியவில்லை. ஊரில் லோன் போட்டு வீடு கட்டிக்கொண்டிருக்கலாம். தங்கையின் திருமணத்திற்காக பணம் சேர்த்துக் கொண்டிருக்கலாம். தம்பி, தங்கைகளின் படிப்புக்காக மாதந்தோறும் பணம் அனுப்புபவராக இருக்கலாம். திருமண வயதில் மாமன்பெண் காத்திருக்கலாம்.  குடும்பத்தின் அன்றாட செலவுக்கே இவர்கள் பணம் அனுப்பித்தான் பிழைப்பு நடக்கலாம். எல்லாமே பாழாய்ப் போய்விட்டது. மொத்தத்தில் அவர்களின் எதிர்கால வாழ்க்கை இருண்டு போனதுதான் மிச்சம்.

இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் பட்டியல் கீழே உள்ளது. இதில் 30 வயதிற்கு மேற்பட்டோர் 8 பேர்.. ஒருவேளை இவர்களுக்கு திருமணம் ஆகியிருக்கலாம்... அப்படி இருக்கும் பட்சத்தில், குடும்பத்தின் எதிர்காலம்..?


சன் டிவியின் உள்குத்து....

இக்கலவரம் முழுவதும் இந்திய தமிழர்களால், குறிப்பாக கட்டுமானம் மற்றும் கப்பல் கட்டும்துறையில் வேலை பார்க்கும் ஒப்பந்த தொழிலாளர்களால் நடத்தப்பட்டது. சிங்கப்பூர் தமிழர்களுக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. தவிரவும்,  இது அந்த விபத்தின் எதிரொலியாக நடந்ததே ஒழிய, மத, இன ரீதியான கலவரம் (RACIAL  RIOT) கிடையாது. சீன இன மக்களுக்கும் இதற்கும் துளி அளவுகூட சம்பந்தம் கிடையாது.

இப்படியிருக்க, சன் டிவிக்கு யாரோ தவறான தகவல்கள் கொடுத்திருக்கிறார்கள் போல... இது சீனர்களுக்கும் தமிழர்களுக்கும்  நடந்த இன மோதல் மாதிரியும், இங்கே தமிழர்கள் வெளியேவர அச்சப்பட்டு வீட்டினுள்ளே முடங்கியுள்ள மாதிரியும் தவறான தகவல்களை சன் டிவி தனது செய்தியில் வாசித்திருக்கிறது.


சம்பவம் நடந்த மறுநாளே இங்கே அனைத்தும் கட்டுக்குள் வந்துவிட்டது. இயல்பு வாழ்க்கை துளிகூட பாதிக்கப்படவில்லை.

சன் டிவியின் இந்த தவறான செய்தியை  சட்ட அமைச்சர் திரு சண்முகம் அவர்கள் கண்டித்திருப்பதுடன், ஸ்ட்ரைட் டைம்ஸ் மூலமாக விளக்கமும் கோரப்பட்டிருக்கிறது.

 (டெல்லியில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் சன் டிவிக்கு அனுப்பிய கண்டனக் கடிதம் )
கலவரத்தின் மூல காரணம்...


இக்கலவரத்தின் மூல காரணமான அந்த விபத்தில் இறந்த சக்திவேல் முருகவேலு, புதுக்கோட்டை மாவட்டம், அரிமலத்தில் உள்ள ஓணான்குடி கிராமத்தை சேர்ந்தவர். ITI படிப்பை முடித்துவிட்டு சில வருடங்கள் துபாயில் பணிபுரிந்தவர். கடந்த இரண்டு வருடமாகத்தான் சிங்கையில் பணிபுரிகிறாராம்.

இங்கு வேலைக்கு சேர்ந்த புதிதில், கேரளாவில் தமது கணவருடன் தங்கியிருந்த இவரது தங்கை கொள்ளைக்காரர்களால் கொல்லப்பட்ட துயரமும் நடந்திருக்கிறது. இன்னும் இரண்டு மாதங்களில் வேலையை விட்டுவிட்டு இந்தியா திரும்பப் போவதாக தனது நண்பர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தவர், இன்று காலை சடலமாக சென்னை ஏர்போர்ட் வந்து சேர்ந்திருக்கிறார்.

கலவரத்திலும் மனிதாபிமானம்... 


மேலே இருக்கும் வீடியோ ஒரு முக்கியமான நிகழ்வு. கலவரம் நடந்துக்கொண்டிருந்த பொழுது, அங்கு வந்த போலீசார் தங்களை தற்காத்துக்கொள்ள, அங்கு நின்றிருந்த ஆம்புலன்சில் ஏறி கதவை மூடிக்கொண்டனர். அப்போது அந்த ஆம்புலன்சுக்கு மிக அருகிலே இன்னொரு வாகனம் கொழுந்துவிட்டு எரிந்துக் கொண்டிருந்தது. அடுத்த சில நொடிகளில் அந்த வாகனமும் தீக்கிரையாகும் சூழலில், அங்கு நின்றிருந்த சில தமிழ் நல் உள்ளங்கள் ஓடிச்சென்று ஆம்புலன்சின் கதவைத்திறந்து போலீசாரை விடுவித்துக் காப்பாற்றினார்கள்.

ரோட்டில் கிடக்கும் பர்சை எடுத்துச்சென்று அருகில் உள்ள காவல் நிலையத்தில் கொடுத்தாலே பாராட்டுப் பத்திரம் வழக்கும் சிங்கப்பூர் அரசு, பல போலீசாரின் உயிரைக் காப்பாற்றிய அவர்களை கௌரவிக்காமல் விடுமா...? ஆனால் அவர்களைக் காப்பாற்றியவர்கள் யாரென்று இன்னும் அடையாளம் தெரியவில்லை.

 "If you know any of the men who approached the ambulance to help, we would like to hear from you. Call us at 6319-6397 or e-mail us at stnewsdesk@sph.com.sg " என்று இன்றைய செய்தித்தாளில் அறிவித்திருக்கிறது.

இவ்வளவு கலவரத்திலும் இவர்களை பாராட்டவேண்டும் என்கிற எண்ணம், இந்த அரசின் நேர்மையையும், மனிதாபிமானத்தையும் காட்டுகிறது.

என்னத்த சொல்ல...?

நான் சிங்கை வந்த புதிதில்,வார இறுதியில் என் நண்பன் லிட்டில் இந்தியாவுக்கு என்னை அழைத்துச் சென்றான். அப்போது எனக்கு எல்லாமே புதுசு. தி நகர், ரங்கநாதன் தெரு போல சின்னச் சின்ன வீதிகள். எங்குமே நடக்கக் கூட முடியவில்லை. அவ்வளவு நெரிசல். எல்லோருமே நம்மவர்கள்.

அப்போது ஒரு வீதியில் நடந்து கொண்டிருந்தபொழுது, திடீரென்று ஒரே சலசலப்பு. பார்த்தால், நாங்கள் வந்த வீதியின் இருபுறமும் போலிஸ் ரவுண்டப் பண்ணியிருக்கிறது. இடையில்  இருக்கும் சிறு சிறு சந்துகளைக்கூட மப்டியில் வந்த சிங்கப்பூர் போலிஸ் கவர் செய்துவிட்டது. உடனே, "எல்லோரும் இருந்த இடத்தில் அப்படியே உட்காருங்கள் " என போலிஸ் மைக்கில் அறிவித்துக் கொண்டிருந்தது. எனக்கு அல்லு இல்ல.. என்ன இது என்று நண்பனிடம் கேட்டபோது,"இது சும்மா செக்கப் தான்... யாராவது சட்ட விரோதமா (ILLEGAL ) தங்கி இருந்தா அவர்களை பிடிப்பதற்கு" என்று சொன்னார்.

ஒவ்வொருவரிடமும் ஐசி அல்லது பாஸ்போர்ட் இருக்கிறதா என சோதித்தார்கள். அவர்களின் சோதனை பலனளித்தது. மூன்று பேர் சிக்கினார்கள். அவர்களின் கைகளை பின் பக்கமாக விலங்கிட்டு வேனில் அள்ளிப்போட்டுக்கொண்டு சென்றுவிட்டார்கள்.
 
அப்போதெல்லாம், லிட்டில் இந்தியா அமைந்திருக்கும் செரங்கூன் ரோடில் நடந்து சென்றால், திடீரென்று ஒருவர் எதிர்கொண்டு,"ஐயம் போலிஸ்.. ஷோ மீ யுவர் ஐசி." என்பார்.அவ்வளவு கட்டுப்பாடுகள் முன்பிருந்தது. என்னவோ தெரியவில்லை,சில வருடங்களில் அனைத்துக் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு, எங்கும் சுற்றலாம், தண்ணியடிக்கலாம், கூட்டம் போடலாம் என்று சிங்கப்பூர்வாசிகளைப்போல அனைத்து உரிமைகளையும் இந்தியாவிலிருந்து வேலைபார்க்கும் ஊழியர்களுக்கும் சிங்கப்பூர் அரசாங்கம் வழங்கி யிருந்தது. அச்சுதந்திரத்தை தற்போது மொத்தமாக குழிதோண்டி புதைத்துவிட்டார்கள் நம்மவர்கள்.

எனக்குத்தெரிந்து வெளிநாடுகளில் தமிழர்களுக்கு சம உரிமை கொடுக்கும் நாடு சிங்கப்பூராகத்தான் இருக்கும். இங்கு என்ன இல்லை...? தமிழ்நாட்டில் கிடைக்கும் அனைத்து பொருள்களும் ஒரே இடத்தில் கிடைக்கிறது. கும்பாபிஷேகம் அல்லது கோயில் விசேசம் என்றால்,அதற்காக போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையையே தடுத்து வசதி செய்து கொடுக்கிறது. வேலை வாய்ப்புகளில் கூட பிரித்துப் பார்ப்பதில்லை. பல ஆண்டுகள் இளமையைத் தொலைத்த இளைஞர்களுக்கு ' வடிகால் ' கூட அரசின் அனுமதியோடு நடக்கிறது.

மிக முக்கியமாக தமிழுக்கு இங்கு ஆட்சிமொழி அங்கீகாரம் வழங்கியிருக்கிறது சிங்கப்பூர் அரசாங்கம். எட்டாம் வகுப்பு படித்தவரிலிருந்து, எஞ்சினியரிங் படித்தவர்கள் வரை வேலைக்கு எடுக்கும் ஒரே டாலர் தேசம் சிங்கப்பூர்தான் என்பதை மறுக்க முடியுமா...?

'நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் ஆங்கே புசியுமாம்' என்பதுபோல சிங்கப்பூர் தமிழர் களுக்கு வழக்கப்படும் சலுகைகளை இந்தியத் தமிழர்களும் இதுவரை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். அதற்கும் இனி ஆப்பு...

சம்பவம் நடந்த அன்று சமூக வலைத்தளங்களில் சிங்கப்பூர்வாசிகள் பொங்கிய பொங்கு இருக்கே...! அவர்கள் கோபப்படுவதிலும் நியாயம் இருக்கிறது. பார்த்துப் பார்த்து கண்ணாடி மாளிகை போல செதுக்கி வைத்திருக்கும்  ஓர் அமைதிப் பூங்காவின் மேல் சிறு கல் எறிந்தாலே தாங்க மாட்டார்கள். தமிழர்கள் ஆடியது கொடூர ருத்ரதாண்டவம் அல்லவா...! இனி கடுமையானக் கட்டுப்பாடுகளை இங்கிருக்கும் இந்தியத் தமிழர்கள் எதிர்கொள்ளலாம்.


ஒரு கசப்பான உண்மையை சொல்கிறேன். மனைவியுடன் வெளியே செல்லும்போது, 10 சீனர்களோ அல்லது 10 மலாய்காரர்களோ குழுமியிருக்கும் ஓர் இடத்தை எவ்வித சங்கடமும் இன்றி கடந்து சென்றுவிடலாம். ஆனால் 10 இந்தியத் தமிழர்கள் கூடிநிற்கும் இடத்தை கடந்து செல்வது எவ்வளவு சங்கடமானது என்பதை இங்கு குடும்பத்தோடு வசிக்கும் தமிழர்களிடம் கேட்டுப்பாருங்கள். எனக்கு இந்த அனுபவம் நிறைய...நிறைய... நிறையவே இருக்கிறது.

கூட வரும் நம்மைப் பொருட்படுத்தாமல் உடன் வருபவளை காலிலிருந்து தலைவரை  அளவெடுத்துப் பார்க்கும் அவர்களின் பார்வை அருவருக்கத்தக்கது. இது இனப்பற்றால் பார்க்கும் பார்வை என்றெல்லாம் சொல்ல முடியாது.  எல்லோரையும் அப்படி சொல்லவில்லை. பத்தில் நான்கு பேர் அப்படியிருப்பார்கள். அதிலும் பங்களாதேஷ் பசங்க இன்னும் கொடுமை. ஆனால் இவர்களின் லிமிட் இவ்வளவுதான். அதைத்தாண்டி போகமாட்டார்கள்.

ஊரிலிருந்து கிளம்பும்போதே சாம்பாதிப்பது ஒன்று மட்டுமே நமது குறிக்கோள் என்கிற மனநிலையில்தான் இருக்கிறோம். எவரும் மாட மாளிகையில் சகல வசதிகளுடன் சொகுசாக வாழ்பவர் கிடையாது. வேறு வழியில்லாமல்தான் வெளிநாடுகளுக்கு பணி செய்யவருகிறோம். குடும்பத்தின் மொத்தப் பொறுப்பையும் தன் தலைமேல் சுமந்துகொண்டுதான் சென்னை, திருச்சி ஏர்போர்ட்டில் கால் வைக்கிறோம். எப்போது வெளிநாட்டில் கால் வைக்கிறோமோ அப்போதே நமது கோபம், வீரம், புரட்சி எல்லாவற்றையும் மூட்டைக்கட்டி அந்த ஏர்போர்ட்டின் வாயிலில் வைத்துவிட்டு வரவேண்டும். திரும்பிப் போகும்போது அந்த மூட்டை அப்படியே இருக்கப்போகிறது. அப்போது எடுத்துக்கொள்ள வேண்டியதுதானே... !

   கலவரம் நடந்த மறுநாளே இயல்பு நிலைக்கு திரும்பிய ரேஸ்கோர்ஸ் ரோடு
இக்கலவரத்தின் மூலமாக சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு இரண்டு விசயங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும். ஓன்று,இதுவரை இங்கே போராட்டம் என்றால் சிறு குழுக்களாக நின்று உரிமையை நியாயப்படி கேட்டுப் பெறுவது என்றிருந்த நிலையில், தமிழர்கள் கலவரம் செய்து அதற்கு தவறான வழியைக் காட்டியது . மற்றொன்று, எதிர்காலத்தில் இது போன்ற விபத்துகள் நடத்தால், அதற்காகக் கலவரம் கூட செய்யக்கூடிய மனநிலையில் நிறைய ஊழியர்கள் இங்கே இருக்கிறார்கள் என்பது.

இனி சிங்கப்பூர் அரசாங்கம் என்ன மாதிரியான பாதுகாப்பு மற்றும் தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்கப் போகிறது என்று தெரியவில்லை. குறிப்பாக இந்திய தமிழர்கள் மீதான  கட்டுப்பாடுகள். இங்கிருக்கும் மற்ற இந்தியத் தமிழர்கள் போல நானும் கவலையோடு பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

---------------------------------X--------------------------------
Updated news (12-12-2013)
இன்றைய (12-12-2013) சிங்கப்பூர் ஊடகங்களில் தமிழர்களுக்கு சாதகமான சில செய்திகள் வந்திருக்கிறது. இந்தப்பதிவில் இருக்கும் முதல் கானொளியில் இரண்டு நபர்கள் தனியார் பேருந்தை கண்மூடித்தனமாகத் தாக்கிக்கொண்டிருக்க ஒருவர் அதைத் தடுக்க முயல்கிறார். அவர்தான் அந்த சம்பவத்தின் ஹீரோ... அவரையும் தேடிப்பிடித்து கௌரவிக்க காத்திருக்கிறது சிங்கப்பூர் அரசு.


அவரைப்பற்றிய தகவல்களை அருகில் உள்ள காபி ஷாப் களில் விசாரித்த வகையில் அவருக்கு வயது சுமாராக 35 , இரண்டு வயதில் பெண் குழந்தை இருக்கிறது. மேலும் அவர் சென்னையை சேர்ந்தவர் என்றும், மிகவும் அமைதியானவர், பண்பானவர் என்றும் அங்குள்ளவர்கள் தெரிவித்ததாக இன்றைய CNA -வில் செய்தி வந்திருக்கிறது. அவரை ' Good Samaritan ' என்று பாராட்டியிருக்கிறது அந்த வெகுஜன ஊடகம். அதுமட்டுமல்ல அந்த வீடியோவைப் பார்த்து நிறைய சிங்கப்பூர்வாசிகளே சமூக வலைத்தளங்களில் அந்த நபரை பாராட்டி யிருக்கிறார்கள்.

மேலும், கலவரம் மூளும் சூழலில் அங்கு நின்றிருந்த நிறைய தமிழர்கள் அருகிலிருந்த உணவகங்களின் வெளியே போடப்பட்டிருந்த மேஜை நாற்காலிகளை அவர்கள் சொல்லாமலே தூக்கிச்சென்று உள்ளே பத்திரப் படுத்தினார்களாம். அதையும் இன்றைய செய்தியில் குறிப்பிட்டு அந்நபர்களை பாராட்டியிருக்கிறது சிங்கப்பூர் அரசு.

ஒரு கலவரம் நடந்தால், மொத்த கும்பலையும் கொத்தாக அள்ளிச்சென்று உள்ளே வைத்து குமுற வேண்டும் என்கிற தட்டையான சிந்தனையை தவிர்த்து, அச்சம்பவ இடத்தில் இருந்தவர்களை தனித் தனியாகப் பிரித்து விசாரணையை மேற்கொள்ளும் சிங்கப்பூர் அரசாங்கம் மிக நேர்மையானது என்பதற்கு இதைவிட வேறென்ன உதாரணம் சொல்லவேண்டும்..?

தவிர, இன்னொரு மகிழ்ச்சியான செய்தி. நேற்று சிங்கப்பூர் சட்ட அமைச்சர் திரு சண்முகம் அவர்கள் நேரடியாக தமிழர்கள் தங்கியிருக்கும் அனைத்து Dormitory க்கும் சென்று, அங்கிருக்கும் இந்திய தமிழர்களை நேரில் சந்தித்து, என்ன மாதிரியான பிரச்சனைகள் அவர்களுக்கு இருக்கிறது என விசாரித்திருக்கிறார். அவர்கள், "எங்களுக்கு எந்த சங்கடங்களும் இங்கு இல்லை. மிக்க மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறோம். அவர்களின் செயல்களைக் கண்டு நாங்கள் வெக்கப்படுகிறோம்  " எனத் தெரிவித்திருக்கிறார்கள்...

இதைவிட நமக்கு வேறென்ன வேண்டும்...?

Saturday 7 December 2013

தகராறு...( ரேணிகுண்டா + திமிரு )

துரையை மையக் களமாகக் கொண்ட ஆக்சன் த்ரில்லர் தகராறு. படத்தின் தலைப்பிலே ஓர் சுவாரஸ்யம் இருக்கிறது. திரையில் மட்டுமல்ல திரைக்குப் பின்னாலும் பல தகராறுகளை சந்தித்திருக்கிறது இந்த டீம்..

இயக்குனர் கணேஷ் விநாயக், S.J சூர்யா, சிம்பு, தருண்கோபி ஆகியோருடன் அசோசியேட் டைரக்டராக பணிபுரிந்தவர். முற்பொழுதும் உன் கற்பனைகள் முதலில் இவர்தான் இயக்குவதாக இருந்தது. அந்த வாய்ப்பு ஆரம்பத்திலேயே பறிபோய்விட, பிறகு சிம்புவை வைத்து மடையன் ஆரம்பிக்கப்பட்டது. அதுவும் பூஜை போட்டதோடு சரி. இப்படி முதல் கோணலே முற்றிலும் கோணலாகி, நிறைய தகராறுகளை சந்தித்து இறுதியில் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததாம்.

நாயகன் அருள்நிதி, கரு.பழனியப்பனுடன் 'அசோகமித்திரன் ' செய்வதாக இருந்தது.என்ன தகராறோ தெரியவில்லை, அது கைவிடப்பட்டு பிறகு இதில் ஒப்பந்தமானார்.

நாயகியாக முதலில் ஒப்பந்தமானவர் பூஜா. அவருக்கும் பர்சனலாக ஏதோ தகராறு போல.விலகிவிட்டார். அவர் சிபாரிசு செய்தவர்தான் பூர்ணா .

முதலில் இசையமைக்க ஒப்பந்தமானவர் ரகுநந்தன். அவருக்கும் ஏதோ தகராறு. அவர் விலகவே தருண் ஒப்பந்தமானார். பாடல்கள் மட்டும் முடிந்த நிலையில் அவரும் ஏதோ  தகராறு காரணமாக விலகிவிட, பின்னணி இசையை பிரவீன் சத்யா செய்திருக்கிறார்.

இதைவிட பெரிய தகராறு படத்தலைப்புப் பற்றியது. இந்தப்படத்திற்கு முதலில் நிறைய  தலைப்புகள் வைத்து பின்பு மாற்றப்பட்டது. சம்பவம், கங்கணம், பகல்வேட்டை, பகல் கொள்ளை, அடி உதை குத்து..இப்படி நிறைய. ஒன்று இயக்குனருக்குப் பிடிக்கும் தயாரிப்பாளருக்குப் பிடிக்காது. தயாரிப்பாளர் பரிந்துரை செய்வது இயக்குனரை திருப்தி செய்யாது. ஒருவேளை இருவருக்குமே பிடித்திருந்தால், ஏற்கனவே அத்தலைப்பு பதிவு செய்யப்பட்டிருக்கும். இப்படியாக ஒரு கட்டத்தில் தயாரிப்பாளர் நொந்து போய் , " ச்சே..டைட்டில் பிடிக்கிறதே பெரிய தகராறா இருக்கிறதே" என்று புலம்பியிருக்கிறார். உடனே இயக்குனர், " சார்..தகராறு நல்ல டைட்டிலா இருக்கே .." என்று சொல்ல, அதுவே தலைப்பாகிவிட்டது.


சரி... இனி படத்திற்கு வருவோம்...

இயக்குனர் கணேஷ் விநாயக் ' ரேணிகுண்டா ' படம் பார்த்து நிறைய பாதிக்கப்பட்டிருக்கிறார் போல... கிட்டத்தட்ட அதே சாயலில் கதை.

நான்கு களவாணி நண்பர்கள். சரவணன்(அருள்நிதி), செந்தில்(பவன்), பழனி(தருண் சத்ரியா), ஆறுமுகம் (ஆடுகளம் முருகதாஸ்). சிறுவயதில், அனாதைகள் என்கிற புள்ளியில் நால்வரும் ஒன்றுசேர, அதிலிருந்தே உயிருக்குயிரான நண்பர்கள். மூர்க்கத்தனமும் ஆக்ரோஷமும் கூடவே ஒட்டிக்கொண்டு அலைகிறது. களவாண்டோமா, காதல் பண்ணினோமா ,கட்டிலில் கவுந்தடித்துப் படுத்து கனவு கண்டோமா என்றில்லாமல் ஊரெல்லாம் ஒரண்டை இழுத்துவைக்க, பலரால் கட்டம் கட்டப்பட்டு 'சம்பவம்' பண்ணக் காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் தருண் சத்ரியா மர்மமான முறையில் கொல்லப்பட, தன் நண்பனைக் கொன்றவனை பழிவாங்கத் தேடிப் புறப்படுகிறார்கள் மற்ற மூன்று நண்பர்களும். உண்மையிலேயே  அவரைக் கொன்றது யார் என்பது தான் படத்தின் இறுதியில் வெளிப்படும் அட்டகாசமான ட்விஸ்ட்.

படத்தில் மிக நெருடலான விஷயம், நான்கு நண்பர்கள் மீதும் பார்வையாளனுக்கு கொஞ்சம் கூட பரிதாபமோ, பச்சாதாபமோ வராமல் போனதுதான்.ஆண்டிஹீரோ சப்ஜெக்ட் செய்யும்பொழுது, அரக்க மனம் படைத்தவனாக ஹீரோவோ அல்லது அவரது நண்பர்களோ காட்சிப்படுத்தப்பட்டால், மறுப்பக்கம் அவர்களுக்குக் கொஞ்சம் இறக்க குணம் இருப்பதாகக் காட்டினால்தானே அவர்களின் பாத்திரம் மனதில் ஒட்டும்..!  அருள்நிதியைத்  தவிர மற்றவர்கள் வில்லன்கள் போலவே காட்சிப்படுத்தப் பட்டிருக்கிறார்கள். அவர்கள் செய்யும் சேட்டைகள், தகிடுதித்தங்கள் எல்லாமே அவர்கள்மீது எதிர்மறை பிம்பத்தை ஏற்படுத்துகிறதே தவிர ரசிக்க முடியவில்லை.

அதனால்தான்  தருண் சத்ரியா கொல்லப்பட்ட பின்பு, திரையில் அவரது நண்பர்கள் எவ்வளவு கதறி அழுதாலும் நமக்கென்னவோ எவன் செத்தா எனக்கென்ன என்கிற மனநிலைதான் இருக்கிறது. ரேணிகுண்டா படத்தில் இவர்களைவிட அவர்களை மூர்க்கத்தனமாக காட்டியிருப்பார்கள். இன்ஸ்பெக்டர் வீட்டிலே புகுந்து ரகளை செய்வது, பொது மக்களிடம் கொள்ளையடிப்பது என்று சமூகத்திற்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபடுவது போல் காட்சிப்படுத்தப்பட்டாலும், அவர்கள் ஒவ்வொருவரும் கொல்லப்படும்பொழுது நம் நெஞ்சம் கனத்துப் போகும். அந்த உணர்வு இதில் இல்லாமல்போனதுதான் பெரும் குறை.

அதனால்தான் படம் நெடுக , தவறே இவர்கள் மீது இருக்கும்போது எதற்காக மற்றவர்களை இம்சைப் படுத்துகிறார்கள் என்கிற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை

அதேப்போல் அருள்நிதி மேல் பூர்ணாவுக்கு கொலைவெறிக் காதல் வர என்ன காரணம் என்பதையும் அழுத்தமாக சொல்லவில்லை.


தலைவரின் கலைவாரிசுகளில் தயாநிதி அழகிரியை எந்த அளவுக்குப் பிடிக்காதோ,அந்தளவுக்கு அருள்நிதியை பிடிக்கும். சாந்தமான முகம்.பார்க்க பாவமாக இருப்பார்.அவ்வளவாக அலட்டிக்கொள்ள மாட்டார். ஒருவேளை அவர் நடித்த கேரக்டர்கள் அப்படியோ எனத்தெரியவில்லை. வம்சமும்,மௌனகுருவும் மிகவும் பிடித்திருந்தது. உதயன் இன்னும் பார்க்கவில்லை. நிற்க,  நடிக்க வந்து நான்கு வருடங்கள் ஆகப்போகிறது. ஆனால் நடிப்பும் நடனமும் சுட்டுப்போட்டாலும் வர மாட்டேங்குதே பாஸ்...!

"எக்ஸ்குஸ்மி... நான் உங்களை எங்கேயோ பாத்திருக்கேன்...என்னை நீங்க எங்கேயாவது பாத்திருக்கீங்களா " என்று ராமராஜன் ஸ்டைல் டிரெஸ்சில் அரைகுறை ஆங்கிலத்தில் பூர்ணாவிடம் வழியும் காட்சிகள் மட்டும் செம.. அதேப்போல் ஆரம்பத்தில் வரும் Bureau pulling யுத்தியும் அட போட வைக்கிறது.

ஒரு காட்சியில் அருள்நிதி, பூர்ணாவிடம் சொல்வார், " திருடன் என்றால் அவ்வளவு கேவலமா போச்சா. நாட்ல எவங்க திருடல..? ".(தம்பி.. இந்த டயலாக் வச்சது சகோ தயாநிதிக்கு தெரியுமா..?  )

நான்கு நண்பர்களில் நடிப்பில் ஸ்கோர் பண்ணுபவர் முருகதாஸ் மட்டுமே.. சந்திரமுகிக்குப் பிறகு நான்கு நண்பர்களின் பெயர்கள் எம்பெருமான் முருகனைக் குறிக்கிறது. இதில் ஏதும் குறியீடுகள் இருக்கிறதா ?

கல்லூரிக்குப் போகாத கல்லூரி மாணவியாக பூர்ணா. ஜன்னலோரம் படத்தில் பொம்மை போல வந்தவர், இதில் பட்டையைக் கிளப்புகிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில். இன்னொரு திமிரு ஈஸ்வரி....! (அய்யய்யோ சொல்லிட்டேனா.....).

மயில்சாமி கின்னஸ் சாதனைக்கு முயற்சி ஏதும் செய்கிறாரா..? கடைசியாக மனுசனை 'ஸ்டெடியாக' எந்தப் படத்தில் பார்த்தேன் என்பது நினைவில்லை. 'தள்ளாடும்' காட்சிகளில் இவரளவுக்கு தத்ரூபமாக நடிப்பவர்கள் தமிழ் சினிமாவில் கிடையாது என அடித்துச்சொல்லலாம்.  :-))

கொஞ்சம் தொய்வாகப் போய்க்கொண்டிருக்கும் படத்தை மங்கள்யான் ராக்கெட்டின் வேகத்துக்கு சீறிப்பாயச் செய்வது கடைசி பதினைந்து நிமிடங்கள். படத்தின் அதிமுக்கியமான திருப்பம் அங்குதான் இருக்கிறது. கொட்டும் மழைத்துளிகளின் ஊடாக தெருவின் சந்து பொந்துகளில் புகுந்து ஓடும் கேமரா, தடதடக்கும் பின்னணி இசை, யூகிக்க முடியாத அடுத்தடுத்த திருப்பங்கள் என்று மிரட்டியிருக்கிறார்கள்.இந்த ஒரு இடத்தில் அறிமுக இயக்குனர் கம்பீரமாக நிற்கிறார். இதைக் கழித்துவிட்டுப் பார்த்தால் படத்தில் பெரிதாக எதுவும் இல்லை.


Tuesday 3 December 2013

ஸ்ருதி பாய்ந்த பதினாறு அடியும் சிவாஜிக்கு விழுந்த மரண அடியும் (சும்மா அடிச்சு விடுவோம்-8 )

ந்தியா மார்ஸ்-க்கு மங்கள்யான்  ராக்கெட் விட்டதற்கு அடுத்தப்படியாக மிகப் பரபரப்பாகப் பேசப்பட்ட விஷயம்,ஸ்ருதிஹாசன் வீட்டுக்குள்ள எவனோ கையை விட்டது. அதைப்பற்றிய 'சிறப்புப் பார்வை' யைத்தான் தற்போது காணப்போகிறோம்.

சில நாட்களுக்கு முன்பு மும்பை,பாந்தராவில் உள்ள அபார்ட்மென்ட் ஒன்றில் தங்கியிருந்த நம் தங்கத்தமிழச்சி ஸ்ருதிஹாசனை ஒருவர் கையைப் பிடித்து நையப்புடைத்தார் இல்லையா....!. தன் சொந்தப் பிரச்சனைக்காகத் தான் அவரைத் தாக்கினேன் என்று பிறகு கைதான அந்த நபர் தெரிவித்திருந்தார். ஆனால், அதன் பின்னணியில் வேறொரு சங்கதி இருப்பதாக வட இந்திய ஊடகம் ஒன்றில் சமீபத்தில் படிக்க நேர்ந்தது.

அதற்கு முன், தன் மகள் மீதானத் தாக்குதலைப் பற்றி, பத்துமாசம் சுமந்துப் பெத்தெடுத்த ஆத்தா சரிகா என்ன சொன்னார் என்பதுதான் இங்கே கவனிக்கப்படவேண்டிய விஷயம். அதே மும்பையில், சரிகாவின் இன்னொரு மகளான அக்சராவுடன் சரிகா தங்கியிருக்க, சுருதி மட்டும் ஏன் தனியாக தங்கவேண்டும் என்று சரிகாவிடம் கேட்டபொழுது, வெகு கூலாக அவர் சொன்ன பதில்," ஸ்ருதிக்கு தொழில் முக்கியம். என்னுடன் தங்கமாட்டார்.".

உடனே, இதைத்திரித்து வேறொரு அர்த்தம் எடுத்துக்கொள்வது சரியா என்று நியாயத் தராசை தூக்கிகொண்டு வரப்படாது ஆமா.... முதலில் தாக்குதலுக்கான பின்னணியை டீப்பா ஆராய்ந்துவிட்டு பிற்பாடு எப்படி அர்த்தம் எடுத்துக் கொள்வது என்பதை யோசிப்போம்.

(கமல் எதைப்பார்த்து இப்படி கதறி அழுகிறார் என்பதைத் துல்லியமாக அறிய ஆ.வி 3D கண்ணாடி வழியாகக் காணவும் )
சரி... முதலில் இந்தக் கோணத்தில் யோசிப்போம்.. அந்த நபர் எதற்காக ஸ்ருதிஹாசனைத் தாக்கவேண்டும்...?. ஒருவேளை அவர் சர்வதேச நடிகை(!) என்பதால், பாலியல் ரீதியான அத்துமீறல் அல்லது சில்மிசங்களில் அந்த நபர் ஈடுபட முயற்சித்திருக்கலாம் என்று பார்த்தால், அப்படியெதுவும் நடந்தமாதிரி தெரியவில்லை. திருடும் நோக்கமும் இருந்ததாகத் தெரியவில்லை. பிறகு எதற்கு கலைஞானியின் கலைவாரிசை அந்தாளு கையைப் பிடித்து முறுக்க வேண்டும்....?  இப்போது மைல்டா ஒரு டவுட் வந்திருக்குமே...! அதேதான்.அந்த ரகசியத்தைத் தான் இப்போ சொல்லப்போறேன்.

அதாகப்பட்டது, தனது கலைச்சேவையை இந்தியளவில் விரிவாக்கும் பொருட்டு, இந்தித்திரைப்பட உலகிலும் தன் பரந்த கடையை விரிப்பதற்காக சில இந்தி நடிகர்களுக்கு ஸ்ருதி தூண்டில் போட்டதாக சொல்லப்படுகிறது. பின்னே...பாலிவுட்டில் எந்தவொரு நடிகரின் அரவணைப்பும் இல்லாமல் அங்குலம் அளவுகூட நடிகைகள் வளர முடியாது என்பது உலகறிந்த விசயமாச்சே...அதில் வசமாக அந்த 'கான்' நடிகர் சிக்கியதாக பட்சி சொல்கிறது. இந்தியில் அறிமுகமாகும் நிறைய நடிகைகளை அண்ணன்தான் முதலில் 'அரவணைத்து ' வாழ்த்து சொல்லி ஊக்குவிப்பாராம்.

நம்ம ஸ்ருதி வேற கலைஞானியின் கலை வாரிசு இல்லையா..! அதனால் கொஞ்சம் அதிகமாக அரவணைக்க வேண்டியிருந்ததால், தினமும் இரவு ஸ்ருதி தங்கியிருக்கும் அபார்ட்மென்ட்டில் தங்கி அரவணைத்து சென்றிருக்கிறார் நம்ம கான் நடிகர். இது எப்படியோ அவரது மனைவியின் காதுக்கு எட்ட, வெகுண்டெழுந்த அந்த அம்மையார் போட்ட பிளான்தான் அதுவாம். ஸ்ருதியுடன் கான் நடிகர் தங்கியிருக்கும் தருணத்தில், ஸ்ருதியைத் தாக்கினால் உள்ளேயிருக்கும் 'கான்' வெளியே வருவார்.அபார்ட்மெண்டில் கூட்டம் கூடும்.கையும் களவுமாக மாட்டிக் கொள்வார்கள் என்பதுதான் அவரின் திட்டமாம். அதற்காக அவர் செட்டப் பண்ணின ஆள்தானாம் அது. ஆனால் தாக்குதல் நடத்தும்பொழுது ஸ்ருதி சுதாரித்துக் கதைவை இழுத்து சாத்திவிட, சிறு காயங்களுடன் தப்பித்துக் கொண்டார். கடைசியில அம்மையார் போட்ட திட்டம் பணால் ஆகிவிட்டதாம்.

                                           ( பதினாறு அடி பாயும் குட்டி......! )

தாக்குதல் நடந்த உடனையே ஸ்ருதி தரப்பு போலிசுக்கு போகாததற்கு இதுதான் காரணமாம். பிறகு விஷயம் வெளியே தெரிந்தவுடம், கண்துடைப்புக்காக புகார் கொடுத்துவிட்டு பிற்பாடு பூசுதல், மொழுகுதல் வேலை எல்லாம் நடந்தது ஊரரிந்ததுதான்.

இதிலென்ன இருக்கு.? சினிபீல்டில்,அதுவும் பாலிவுட்டில் இதுபோன்ற சங்கதிகள் நடப்பது ஒன்றும் அதிசயமான நிகழ்வில்லையே..... அப்படினுதான் நீங்க, நான் மட்டுமல்ல....., கமல் கூட நினைத்திருப்பார்..! ஏனெனில், அவருக்குத் தான் திருமணம் என்பதே பழைய பஞ்சாங்கம் போன்றதாச்சே...! லிவிங் டுகெதர், கோயிங் ஸ்டெடி எல்லாம் நம் கலாச்சாரத்தோடு கலந்த ஒன்றுதான் என்று வாதிடுகிறவராச்சே... !

இவ்வளவு ரகளைக்குப் பின், ' பார்த்து ஜாக்கிரதையாக இருக்கவும்' என்கிற ஒரேயொரு அட்வைஸோடு ஒரு அப்பாவாக அவர் கடமை முடிந்துவிட்டது. எனக்கு என்ன தோன்றுகிறதென்றால், ஸ்ருதி எந்தப் பின்புலமும் இல்லாதவரா என்ன...? அல்லது நடித்துதான் தன் குடும்பத்தையும் தன்னை நம்பியிருப்பவர்களையும் காப்பாற்ற வேண்டும் என்கிற நெருக்கடியில் இருப்பவரா என்ன..? . பிறகு எதற்காக வாய்ப்பு வேண்டும் என்று இவ்வளவு தூரத்திற்கு இறங்க வேண்டும். ஒருவேளை மேற்சொன்ன தகவல் உண்மையாகவே இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஹிந்தியில் முன்னணி  நடிகையாக ஒரு பெண் வரவேண்டுமென்றால் 'அட்ஜெஸ்ட்' செய்துகொண்டால் மட்டுமே சாத்தியம் என்கின்ற கசப்பான உண்மையை கமல் அறியாமல் இருப்பாரா என்ன..?

கேட்டால், என் வீட்டு பாத்ரூமை எதற்கு எட்டிப் பார்க்கிறீர்கள் என்று தர்க்க ரீதியாக கேள்வி எழுப்புவார். நாங்கள் சினிமாக்காரர்களை வெறும் பாத்ரூம் சமாச்சாரமாக மட்டும் பார்த்திருந்தால் , நாற்பது ஆண்டுகளுக்கு மேல் எங்கள் தமிழகத்தை சினிமாக்காரர்களின் கைகளில் கொடுத்திருப்போமா...? அடியேன் கலைஞானியின் தீவிர ரசிகன்தான். கலைக்கு ஞானியாக இருப்பவர், கலாச்சாரத்திற்கும் ஞானியாக இருக்க வேண்டிய அவசியமில்லை, குறைந்த பட்சம் அதைக் கெடுக்காமல் இருக்கலாமே.

உலக நாயகன்கள் என்றால் அப்படித்தான் இருப்பார்கள் என்கிற குருட்டு வாதம் இங்கே செல்லாது. இறுதி மூச்சுவரை, தனது மகன்கள்,பேரப்பிள்ளைகள் எல்லோரையும் ஒரேவீட்டில் வைத்து ஒற்றுமையாக குடும்பம் நடத்தி காண்பித்திருக்கிறார் நடிப்புக்கே இலக்கணம் எழுதிய ஒருவர். தன் மகனுக்கு கற்பு நடிகையுடன் கனெக்சன் ஏற்பட்டபோது, கவலையால் நொடிந்து போனார் சிம்மக் குரலோன். அதைக் காரணமாக வைத்தே இருவரையும் பிரித்தார்கள் என்பது கோடம்பாக்க வரலாறு.
டிகர் திலகம் அவர்களின் சிலையை அகற்றப்போவதாக வந்த செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. 12 வருடங்களுக்கு முன்பே மூட்டை முடிச்சி எல்லாம் கட்டிக்கொண்டு சென்னையிலிருந்து கிளம்பிவிட்டதால், அந்தக் கம்பீர சிலையை கண்களால் காணும் பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லை. வருடத்திற்கு ஒருமுறை சென்னையை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும், அது ஏர்போர்ட், தி.நகர், ECR ரோடு என பயணம் திசைமாறி விடுகிறது. ஒருவேளை ஏற்கனவே அச்சிலையை பார்த்திருந்தால் இன்னும் வருத்தம் கூடியிருக்கும்... போகட்டும்...

" கோயிங் ஸ்டெடி பார்ட்னர்.."  (3D)

வெறும் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இதுபோன்ற அக்கிரமங்கள் நடப்பது எவ்வளவு வேதனைக்குரியது..!. போக்குவரத்துக்கு  இடைஞ்சல், விபத்து மிகுதியானப் பகுதி என்பதெல்லாம், என்னைக்கேட்டால் சுத்த Humbug.. அப்படிப் பார்த்தால் அம்மையாரின் கோயிங் ஸ்டெடி பார்ட்னர் சிலை கூடத்தான் நடப்பவர்களுக்கு இடைஞ்சலாக இருக்கிறது. அதை அப்புறப்படுத்தட்டுமே...!

' நாங்கள் என்ன சிலையை மொத்தமாக அகற்றவேண்டும் என்றா சொல்கிறோம்..? கொஞ்சம் தள்ளி(!) மெரினா பீச்சில் வைக்கச் சொல்கிறோம். அவ்வளவுதானே' என்று ஒத்தடம் கொடுப்பவர்கள் கவனத்திற்கு...

ஒருவரை கௌரப்படுத்துவதற்காக வைக்கப்பட்ட சிலையிலிருந்து ஒரு செங்கல் அகற்றப்பட்டாலே, அது சிலையாக நிற்பவருக்கு இழைக்கப்பட்ட அநீதி,அவமானம் போன்றதுதான்.
தற்கு பேசாமல் அந்தச் சிலையை உடைத்தே போட்டு விடலாம். கழுத்தில் கட்டின தாலி உறுத்துகிறது என்பதற்காக அதைக் கழட்டி காலில் கட்ட முடியுமா பாஸ்.....? ( ரொம்ப ஆராயக்கூடாது... :-)) அடுத்த மேட்டருக்கு போகவும்) 
ன் பக்கத்து சீட்ல ஒரு பிலிப்பைன்ஸ்காரன் இருக்கான் என சொல்லியிருந்தேன் அல்லவா..  நேற்று லஞ்ச் பிரேக்குல பேசிகிட்டு இருந்தப்போ, எதேச்சையாக சைனாகாரனுவ பத்தி பேச்சு வந்தது. முக்கியமாக அவனுக யூஸ் பன்ற 'டிஸ்யூ பேப்பர்' பற்றி. 

" இவனுக எப்படித்தான் டாய்லெட்டுக்கு பேப்பர் யூஸ் பன்றானுகளே தெரியில.. என்னதான் இருந்தாலும் தண்ணியை ஊத்தி சும்மா சள சளனு மேட்டர் முடிப்பதில் உள்ள திருப்தி அதில கிடைக்குமா..?.அதுவுமில்லாம, கருமம் புடிச்சவணுக டாய்லெட்ல ஒரு பக்கெட், மக் வைக்கிரானுகளா பாரு. எனக்கெல்லாம் எவ்வளவு அடக்கமுடியா அவசரமாக இருந்தாலும், ஹாஃப் டே லீவ போட்டுட்டு, டாக்சியை புடிச்சாவது வீட்டுக்கு போயி நிம்மதியா போவேனே தவிர, இந்த பப்ளிக் டாய்லட் அல்லது  ஆபிஸ் டாய்லட் யூஸ் பண்ணவே மாட்டேன்.  உனக்கு எப்படி... இந்த பேப்பர் மேட்டர் ரொம்ப சௌகரியமா இருக்கா.." என்று அவனிடம் கேட்டேன்.

" ச்சே...ச்சே...எனக்கும் பேப்பர் யூஸ் பண்ண புடிக்காது.  வேற வழியில்லாம யூஸ் பண்றேன் " என்றான் .

"அப்படியா....?! " என்றேன் ஆச்சர்யமாக.

" ஆமாம். பிலிப்பைன்ஸ் பூராவும் தண்ணிதான் யூஸ் பண்ணுவாங்க.. எனக்கும் சள சளனு தண்ணியை ஊத்தி கிளீன் பன்றதுதான் புடிக்கும்.." என்றான்.

என்னவோ தெரியில... அவன் அப்படி சொன்னதிலிருந்து ஏதோ நம்ம சொந்தக்கார பயலை நேரில் பார்த்த மாதிரி ஒரே  பீலிங்...!

கடைசியா அவன் தோள்மீது கைபோட்டு சொன்னேன், " நீ என் இனமடா.... ! "

கலாட்டூன் கார்னர்...


இது 3D அனிமேசன் . Photoshop மூலம் முயற்சி செய்தேன்... இதையும் ஆ.வி 3D கண்ணாடி வழியாகக் காணவும். இனி இப்படித்தான், வாரம் ஒருத்தர் வாயில கத்தியை வுட்டு ஆட்டலாம்னு இருக்கேன்.. :-))

--------------------------------------------------------------X------------------------------------------------------
 டிச்சி விடுவோம் பகுதியில இனி, தமிழ் சினிமாவில் அற்புதம் நிகழ்த்திய பல நடன அசைவுகளை கண்டெடுத்து உங்கள் பார்வைக்கு விருந்தாக்கலாம் என்றிருக்கிறேன்.

மானாட மயிலாட, ஜோடி நம்பர் -1 போன்ற நடனப்போட்டிகளில் கலந்துகொள்ளும் ஆர்வத்தில் இருப்பவர்கள், முதலில் இதைப் பார்த்துவிட்டு, இதைவிட சிறப்பாக ஆடிவிட முடியுமா என்பதை யோசித்துவிட்டு ,பின்பு போட்டிகளில் கலந்து கொள்வது பற்றி முடிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இது மிகவும் சிக்கலான கொரியோகிராஃப். எல்லோராலும் முடியாது. சிறு வயதில் ஸ்கூல் பெல் அடித்தவுடன், புத்தக மூட்டையை பின்னால் மாட்டிவிட்டு, கைகள் இரண்டையும் அகலமாக வைத்துக்கொண்டு, "டுர்ர்ர்... டொட்..டொட்.. டொட்.. டுர்ர்ர்.....ர்ர்ர்....ர்ர்ர் " என்று காற்றிலே பைக் ஓட்டிய முன் அனுபவம் இருந்தால், இதை சுலபமாக கற்றுக்கொள்ள முடியும். 




                                                                                                        இன்னும் அடிச்சி விடுவோம்..............

Saturday 30 November 2013

ஜன்னல் ஓரம் ...




2012-ல் மலையாளத்தில் வெளியாகி சக்கைப்போடு போட்ட ஆர்டினரி(Ordinary) படத்தை, ஜன்னலோரம் நின்று, பட்டும் படாமல் பார்த்துவிட்டு, தமிழில் முயற்சித்திருக்கிறார் கரு.பழனியப்பன். ஆர்டினரி படத்தின் ஜீவனே கதையோடு பயணிக்கும் நகைச்சுவைதான். அதில் மொத்தமாக கோட்டை விட்டுவிட்டு உப்பு சப்பில்லாத வெகு ஆர்டினரி படத்தைத்தான் கொடுத்திருக்கிறார் இயக்குனர். 

ஆர்டினரி கதைதான்.  பார்த்திபனும், விமலும் முறையே அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள். இவர்கள் தங்கியிருக்கும் பண்ணைக்காடு என்கிற கிராமத்தில் வசிக்கும் ஓய்வு பெற்ற ஆசிரியர் ராஜேசின் மகளுக்கும்( மனிஷா யாதவ் ), விமலுக்கும் ஒரு கட்டத்தில் காதல் மலர்கிறது.இது ஒருபுறமிருக்க, தன் நண்பனின் மகளை(பூர்ணா)த் தத்தெடுத்து வளர்த்து வரும் ராஜேஷ், அவரையே தன் மகனுக்கு மனம் முடிக்க எண்ணுகிறார்.

சூரத்தில் வேலைபார்க்கும் ராஜேசின் மகன்,திருமணத்திற்காக பண்ணைக்காட்டிற்கு வரும்பொழுது பார்த்திபன் & விமல் ஓட்டிவரும் பேருந்தில் அடிபட்டு இறந்துவிடுகிறார். துரதிஷ்டவசமாக அந்த பேருந்தை இயக்கிய 'நடத்துனர்' விமல் மீது கொலைப்பழி விழுந்து சிறைக்கு செல்கிறார். ஆனால் ராஜேசின் மகனை விமல் பேருந்து ஏற்றி கொல்லவில்லை என்பது பிற்பாடு தெரியவர,அவரை உண்மையிலேயே கொன்றது யார்..? எதற்காக கொன்றார் ..? என்பதற்கான பதில்தான் இறுதியில் சொல்லப்படும் ஒரேயொரு டிவிஸ்ட் .

அழுத்தமான கதையில்லைதான்.  வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே மலையாளத்தில் கல்லா கட்டியிருக்க வேண்டும். அதையே தமிழில் எடுக்கும்பொழுது நகைச்சுவைக்கு கொஞ்சமாவது முக்கியத்துவம் கொடுக்க வேண்டாமா...?.  ஒரு இடத்தில்கூட சிரிப்பதற்கான சந்தர்ப்பத்தை கொடுக்கவில்லை இயக்குனர். திரைக்கதை -யிலும் எந்த சிரத்தையும் எடுத்தமாதிரி தெரியவில்லை. `வசனங்களிலாவது கவனம் செலுத்தியிருக்கலாம். எவ்வித சுவாரஸ்யமும் இல்லாமல் நகர்கிறது அடுத்தடுத்த காட்சிகள்.

பார்த்திபன்,விமல், விதார்த், ரமணா, யுவராணி, ராஜேஷ், சிங்கம் புலி, சந்தானபாரதி என பெரிய பட்டாளமே இருந்தும் அவர்களை சரியாகப் பயன்படுத்தாது பெரும் குறை. அதிலும் பார்த்திபனுக்கு ஹீரோவுக்கு இணையான பாத்திரப்படைப்பிருந்தும் அவரது அக்மார்க் நக்கல் பெரிதாக இல்லை. படத்தில் மிக முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறது அந்த அரசுப்பேருந்து. அக்கிராமத்திற்கு வரும் ஒரே பேருந்து என்பதால் அது அவர்களின் செல்லப்பிள்ளையாக இருக்கலாம். அதற்காக சில கேரக்டர்கள் தொடர்ந்து அதே பஸ்ஸில் பயணிப்பதாகக் காட்டுகிறார்களே..அவர்களுக்கு வேறு வேலையே இல்லையா...? குறிப்பாக கிருஷ்ணமூர்த்தி.

பூர்ணாவை மைனா ரேஞ்சுக்கு காதலிப்பதாக விதார்த் கேரக்டர் படைக்கப்பட்டிருக்கிறது. இறுதிக் காட்சியில் அவரைக் கொல்ல மனமில்லாமல்தான் குதித்துத் தற்கொலை செய்துகொள்கிறார். அப்படியிருக்க, ஒரு காட்சியில் பூர்ணா சேலை மாற்றும்பொழுது ஜன்னல் வழியாக அவருக்குத் தெரியாமல் காமப் பார்வையோடு ரசிப்பது ஏன்..?

ராஜேசின் மகனை தாங்கள்தான் பேருந்தை ஏற்றி கொன்றுவிட்டதாக நினைக்கும் பார்த்திபனும் விமலும் அவரது 'பேக்'கை இவ்வளவு அலட்சியமாகவா வீட்டில் வைத்திருப்பார்கள்....?


பூர்ணாவை குழந்தையாக இருக்கும்போதே தத்தெடுத்து ராஜேஷ் வளர்ப்பதாக சொல்கிறார்கள். ராஜேசின் மகன், மகளோடு சிறு வயதிலிருந்தே உடன்பிறந்தவள் போலவே வளர்பவள் எப்படி ராஜேசின் மகனோடு காதல் கொண்டார்..? அதிலும் ராஜேசின் மகன் ஊருக்குக் கிளம்பும்போது பூர்ணாவோடு காதலில் ததும்பி வழிந்து கொஞ்சும் காட்சி ஓவராகத் தெரியவில்லையா...?

இடையில் வெள்ளைகார தம்பதி ஒன்று வருகிறது( ஒரிஜினலிலும் வருகிறார்கள்). எதற்காக வந்தார்கள்... பிறகு எங்கே போனார்கள் என்று தெரியவில்லை.

விமல் தன் காதலை தெரியப்படுத்த,பத்து ரூபாய் நோட்டில் 'சம்மதமா' என்று எழுதி மனிஷா யாதவிடம் கொடுப்பார். அவரும் அடுத்தக் காட்சியிலேயே நேரடியாகவே 'சம்மதம்' என்று சொல்வார். ஆனால் இரண்டு காட்சிகள் கழித்து விமல் அவரிடம்,'நான் சம்மதமானு கேட்டேன் இன்னும் பதில் சொல்லவில்லையே' என்பார். என்னய்யா இது..?

ஒன்று, படம் நகைச்சுவையாக நகர வேண்டும், அல்லது சஸ்பென்ஸ் கலந்து விறுவிறுப்பாக செல்லவேண்டும். இரண்டுமே இல்லாத பட்சத்தில் இதுபோல குறைபாடுகள், இருக்கும் கொஞ்ச நஞ்ச சுவாரஸ்யத்தையும் கெடுத்துவிடுகிறது.

இவர்களின் பேருந்து பழுதடைந்துவிட, அதை சரிபார்க்கும் மெக்கானிக்காக சந்தானபாரதி வருகிறார். டூல் பாக்சை திறக்கிறார். உள்ளே குவார்ட்டரும், சைடு டிஷும். உடன் வந்த உதவியாளரை பேருந்தை சரிசெய்ய சொல்லிவிட்டு பார்த்திபனும் அவரும் நடு ரோட்டில் தண்ணியடிக்கிறார்கள். இது காமெடி சீனாம் .இதற்கு சிரிக்கவேண்டுமாம்... போங்க சார்...

படத்தில் ஆறுதலான சில விசயங்களில் பாடல்களும் ஒன்று. கரு பழனியப்பன்-வித்யாசாகர் கூட்டணி மீண்டும் கலக்கியிருக்கிறது. எல்லாப் பாடல்களும் முதல்முறைக் கேட்கும்பொழுதே ரசிக்க வைக்கிறது.

'பார்த்திபன் கனவு' கொடுத்த கரு. பழனியப்பனின் படைப்பா இது..? மனுஷ்ய புத்திரனை தொலைக்காட்சி விவாதமொன்றில் முதன்முதலில் திணறடித்து, புரட்டியெடுத்த அந்த கரு.பழனியப்பனா இவர்..?  என்னவோ போங்க சார்..!



Friday 29 November 2013

தானாகவே வெட்டிக்கொண்டு செத்துப்போனார் சங்கரராமன்..

(மு.கு: ஆனந்தவிகடனின் 3D கண்ணாடியைப் பயன்படுத்தி 20 வினாடிகள் இந்தப் படத்தை உற்றுப் பார்த்தால் இரண்டு திருடர்கள் திரிடியில் 'எழுந்தருளி' காட்சித் தருவார்கள். அப்படியே காறித்துப்பிவிட்டு அடுத்தப் படத்திற்கு செல்லவும். கடைசியாக சின்னவா-லின் கனவுக்கன்னி உங்களுக்காக கவர்ச்சி விருந்து படைக்கக் காத்திருக்கிறாள். )

மிழ் சினிமாவில் வழமையான ஒரு கிளைமாக்ஸ் காட்சியமைப்பு உண்டு. கொலைக்குற்றம் சாட்டப்பட்ட ஹீரோ, நிரபராதி என்று தெரிந்தவுடன், தீர்ப்பின் முடிவில் "ஜட்ஜ் அய்யா" இப்படித்தான் சொல்வார்,
 "........ .... .....  ஆகவே இந்தக்கொலையை ராஜா செய்யவில்லை என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. மேலும் இந்தக் கொலையை யார் செய்தது என்பதை விரைந்து கண்டுபிடிக்க காவல்துறைக்கு இந்த கோர்ட் உத்தரவிடுகிறது ".

இப்படிக்கூட சொல்லவில்லை.குற்றவாளிகள் எனத்தெரிந்திருந்தும்,மொத்தமாக விடுதலை செய்யப்பட்டிருக் -கிறது ஒரு மொள்ளமாரிக் கும்பல்.

கைப்புள்ள அரிவாளோட கிளம்பிடிச்சி...
ஆக,செத்தவனே நேரில் வந்து, "சத்தியமா இவன்தான் சாமி என்னை வெட்டிக்கொன்றான்" என்று சொன்னாலும் "ஏய்  நீ வாயை மூடுல... நாங்கத்தான் பெரியவங்க சொல்றோம்ல, சரியான சாட்சி இல்லன்னு... எல்லாம் சட்டப்படிதாம்ல செய்யுறோம். உன்னை யார் கொன்னதுனு நீ சொல்லக்கூடாது. பின்ன சட்டம் படிச்ச நாங்க எதுக்கு இருக்கோம் " அப்படின்னு செத்தவன்கிட்டேயே வகுப்பு எடுப்பாய்ங்க நம் நாட்டு சட்ட மேதைகள்.

துருப்பிடித்த, ஓட்டைவிழுந்த, ஒத்தப் பைசாவுக்கு பிரயோசனம் இல்லாத நம் தேசத்து சட்ட அமைப்புகளை வைத்து ஒரு ம#&%*ம் புடுங்க முடியாது. பணம், அதிகாரம், செல்வாக்கு இருந்தால் யாரை வேண்டுமானாலும் கொன்று விட்டு சட்டத்தின் பிடியிலிருந்து சுலபமாக தப்பித்து விடலாம்.

சரி....., வரதராஜ பெருமாள் கோவிலில் உட்கார்ந்திருந்த சங்கரராமனை ஜெயேந்திரன், விஜேயேந்திரன் ( ' ர் ' போடும் அளவுக்கு இவனுளுக்கு தகுதி இல்லீங்க ஆபிசர்) குரூப் கொலை செய்யவில்லை. அதைத்தான் நம் சட்டம் தெளிவுபட சொல்லிவிட்டது. அதனால்தானே எந்தக்குற்றமும் செய்யாத இந்த அப்பாவிகள் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அப்படியானால் சங்கரராமன் எப்படி செத்திருப்பார்..?

இது ஒரு புறமிருக்க, இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக சங்கரராமனின் மகன் அறிவித்திருக்கிறாராம். அந்தத் தம்பிக்கு நம்ம நாட்டு சட்டங்களைப் பற்றிய அடிப்படையறிவும், நீதி அமைப்புகளின் நெளிவு சுளிவுகளும் சரியாகத் தெரியவில்லை போல. தற்போதாவது சங்கரராமன் கொலை செய்யப்பட்டார் என்று சொல்கிறார்கள். ஒருவேளை மேல்முறையீடு செய்தால், அவர்களின் தீர்ப்பு இப்படியாகத்தான் இருக்கும்..

# சங்கரராமனே அரிவாளை எடுத்து தன்னைத்தானே வெட்டிக்கொண்டு செத்துப் போயிருக்க வேண்டும். அதை மறைக்க,செத்துப்போனபிறகு அவர் பயன்படுத்திய அந்த அரிவாளை, யார் கண்ணுக்கும் தெரியாமல் அவரே மறைத்திருக்க வேண்டும்.

#  பூமியிலிருந்து பல்லாயிரக்கணக்கான மைல் தூரத்திலிருக்கும் ஏழாம் உலகத்து மக்களுக்கு அவசரமாக ஒரு அர்ச்சகர் தேவைப்பட்டிருக்கலாம். அங்கு நம்மவூர் சங்கரராமனைப் போல் தோற்றம் உடைய ஒரு மக்கு மட சாம்பிராணிக்கு மந்திரம் சொல்லிக் கொடுக்கும் பொருட்டு, நமது உலகத்தில் இருக்கும் சங்கரராமனை கொன்று அந்த உலகத்திற்கு தெய்வத்தாய் அழைத்து சென்றிருக்கலாம்.

# நடிகர் முத்துக்காளையின் நெருங்கிய உறவினரான சங்கரராமன், ரோட்டில் சென்றுகொண்டிருந்த ஒரு ரவுடிக் கும்பலைக் கூப்பிட்டு அவர்களுடன் 'செத்து செத்து விளையாடும்' விளையாட்டை விளையாடும் பொழுது, ஒருவேளை செத்துப் போயிருக்கலாம்.

# (இது முகநூளில் ஒரு நண்பர் போட்டது) வரதராஜ பெருமாள் கோவிலில் உட்கார்ந்து தக்காளிச் சட்டினியுடன் இட்லி சாப்பிட்டுக்கொண்டிருந்த சங்கரராமன், கால் மேல் கால் போட ஆசைப்பட்டு வலது காலைத் தூக்கிய போது பேலன்ஸ் தவறி, பின் பக்கமாக விழுந்ததில் பின்னந்தலை அடிபட்டு ரத்தம் வெளியேறியிருப்பதாகவும், அவர் முகத்தில் இருப்பது தக்காளி சட்னியே தவிர, ரத்தம் அல்ல என்று 9 வருடங்களுக்குப் பிறகு அதை நக்கிப் பார்த்தவர் சொன்னதாகவும் கேள்விப்பட்டதை ஒட்டி, அப்பாவிகள் 25 பேர் விடுதலை செய்யப்படுகின்றனர்.


இதுபோலத்தான் முன்பு, தா.கிருட்டிணன் ரோட்டில் வாங்கிங் செய்துகொண்டிருந்த பொழுது, முதுகு அரிக்கிறது என்று அரிவாளை எடுத்து சொறியப்போய், அது தவறுதலாக கை, கால், கழுத்து, தலை என்று சரமாரியாக வெட்டிவிட, அந்த இடத்திலேயே அவர் செத்துப்போனார்.

மதுரை தினகரன் அலுவலகத்தில் கொசுவர்த்திச்சுருள் பத்தவைக்கப் போய்,அதிலிருந்து கிளப்பிய தீப்பிழம்பால் மூன்று பேர் உடல்கருகி 'தற்கொலை' செய்து கொண்டார்கள்.

திருச்சி ராமஜெயத்தை கொலை செய்தது பறக்கும் தட்டில் வந்த வேற்றுக்கிரகவாசிகள்தான் என்பதை தமிழக அரசு ஆணித்தரமாக நம்புவதாக அறியநேர்கிறது .

இதுபோல தானாகவே வெட்டிக்கொண்டு செத்துப்போனவர்கள் நம் தேசத்தில் ஏராளம்.முன்பு சாட்சியளித்த -வர்கள் தற்போது பிறழ் சாட்சியாக மாறிவிட்டார்களாம். ஒரு வழக்கை ஒன்பது வருடத்திற்கு இழுத்தடித்தால் ஏன் பிறழ் சாட்சியம் அளிக்க மாட்டார்கள் ?. "செத்துப்போனவன் உசுரோடவா வரப்போறான்... ஆனால் அவன் உசுரோட இருந்தா உங்களுக்கு என்ன செஞ்சியிருப்பானோ அதைவிட பல மடங்கு நாங்க செய்யுறோம்.." என்று ஆரம்பிக்கும் பேரத்தில் முக்கிய சாட்சியே பல்டி அடிக்கும் பொழுது , மற்ற சாட்சிகள் என்ன செய்யும்..?  

ஒரு ஆட்சியில் நெருக்கிப் பிடிக்கப்படும் கழுத்து, அடுத்த ஆட்சியில் தளர்த்தப் படுகிறது. குற்றத்தின் அடிப்படையில் வழக்கின் ஸ்திரத்தன்மை இங்கே பேணப்படுவதில்லை. எந்த ஆட்சியில் போடப்பட்டது என்பதைப் பொறுத்தே அவ்வழக்கின் தீர்ப்பு எழுதப்படுகிறது. ஜெயா ஆட்சியில் போடப்பட்ட இவ்வழக்கு, அடுத்து கலைஞர் ஆட்சியில் நீர்த்துப்போகும்படி செய்யப்பட்டது. எல்லா சாட்சிகளையும் விலைக்கு வாங்கப்பட்ட கொடுமையெல்லாம் அப்போதுதான் நடந்தது. வெறுமனே தீர்ப்பு மட்டும் தற்போது வாசித்திருக்கிறார்கள்.

அடுத்த சில வருடங்களில் நாம் இன்னொரு உண்மையை உணரவேண்டிவரும்..." நமது முன்னாள் பாரதப் பிரதமர், தன்னைத்தானே வெடிகுண்டு வைத்து வெடிக்கச் செய்ததால்தான் செத்துப்போனார் ".


(ஸ்சொர்ணக்கா ......" ச்வீட் எடு..கொண்டாடு..")


Saturday 23 November 2013

இரண்டாம் உலகம்-விமர்சனம்...


ரண்டாம் உலகம் ஒரு mystical லவ் ஸ்டோரி.

"நாம் எவ்வளவு நாள் காதலிக்கிறோம், யாரைக் காதலிக்கிறோம், எப்படிக் காதலிக்கிறோம் என்பது முக்கிய -மில்லை. ஆனால் காதல் மட்டும் பரிசுத்தமாக, உண்மையாக இருக்கவேண்டும். ஏனெனில் உண்மையான காதலுக்குத்தான் இந்த உலகம் அசைந்து வழிவிடும்.நீங்கள் உண்மையாக காதலிக்கும் பொழுது, அப்பெண்ணின் நினைப்பு ரத்தமாக ஓடும் பொழுது, எதைப்பற்றியும் கவலைப் பட தேவையில்லை. உங்கள் காதல் நிச்சயமாக ஜெயிக்கும்". இதுதான் செல்வராகவன் சொல்லவரும் மெசேஜ்.

இதற்காக, காதல் வசப்பட்ட ஒரு கோழை, மாவீரனாகி சரித்திரம் படைத்த கதையைத்தான் இரண்டாம் உலகம் மூலம் கற்பனையாகத் தட்டிவிட்டிருக்கிறார் இயக்குனர். இது முழுக்க முழுக்க பேண்டசி வகை படைப்பு என்பதால் மில்லி கிராம் அளவுக்குக் கூட லாஜிக்கை தேடவேண்டியதில்லை.

நாம் வாழும் உலகத்திலும்,விசித்திரம் நிறைந்த இரண்டாம் உலகத்திலும் தனக்கு ஏற்பட்ட காதல் அனுபவத்தைக் கதையாக ஆர்யா சொல்வதாக விரிகிறது படம். முதல் ஐந்து நிமிடங்களில் அவர் சொல்லும் முன்னோட்டத்தை கவனிக்கத் தவறினால் மொத்தக் கதையும் புரியாமல் போவது நிச்சயம்.

இரண்டாம் உலகத்தை எப்படி நம் உலகத்தோடு முடிச்சு போடுகிறார் என்பதை தெரிந்துகொண்டாலே ஓரளவு கதை புரிந்துவிடும். இரண்டாம் உலகம் என்றால் என்ன என்பதை சிறு வயதில் பாட்டி கதை சொன்னதுபோல் சொன்னால்தான் விளங்கும். விமர்சனம் என்றால் மொத்தக் கதையும் சொல்லக்கூடாது என்கிற நியதி இருக்கிறது. ஆனால் இப்படத்தின் கதையை எப்படி சொன்னாலும் யாருக்கும் விளங்காது என்பதுதான் இங்க விசயமே.. :-))


நாம வாழ்ற பூமியிலிருந்து பல்லாயிரக்கணக்கான மைல் தூரத்தில பூமி மாதிரியே ஒரு கிரகம் இருக்கு.அதுக்கு பேரு இரண்டாம் உலகம். அங்க விசித்திரமான விலங்குகள், பறவைகள் எல்லாம் இருக்கு. ஆனால் அங்க வாழ்கிற மக்கள் நம்ம மாதிரியே இருக்காங்க. நம்ம மாதிரியே தமிழ் பேசுறாங்க..நம்ம மாதிரியே டிரெஸ் போட்டுகிறாங்க... கோவப்படுறாங்க... சிரிக்கிறாங்க...சண்டைப்போடுறாங்க.. அடிச்சிகிறாங்க.. ஆனா நம்ம உலகத்தில இருக்கிற ஒரே ஒரு விஷயம் மட்டும் அங்க இல்ல. அது .. காதல்...!

அங்க பெண்கள் இருக்காங்க. ஆனா அவுங்க ஆண்களுக்கு அடிமையாக இருக்காங்க. அந்த தேசத்தில காதல் இல்லாததால பூக்களே பூப்பதில்லை. எங்கே பெண்கள் மதிக்கப்படலையோ அங்க தேசம் சீக்கிரமா அழிந்து போய்விடும். அங்கயும் அப்படித்தான். நோய்கள் , குற்றங்கள் எல்லாம் பெருகி கிடக்குது.

அந்த தேசத்தை ஒரு ராஜா ஆட்சி செய்யுறார். நம்ம நாட்ல இருந்த மாதிரியே  தளபதி, வீரர்கள் எல்லாம் இருக்காங்க. வர்களுக்கெல்லாம் ராஜகுரு மாதிரியும், மக்களைக் காக்கும் தெய்வம் மாதிரியும் ஒரு அம்மா இருக்காங்க. தம்மையும், தம் நாட்டையும் படைத்தது பெண் ரூபத்தில் இருக்கிற அந்த தெய்வம்தான்னு நம்புறாங்க. 

ராஜானா சண்டை, போர் எல்லாம் இருக்கணுமே...!  ஆமா அதுவும் இருக்கு. பக்கத்து ஊர்ல ஒரு அரக்கன் இருக்கான். அவன் அடிக்கடி தன் ஆட்களுடன் இங்க வந்து சண்டைபோட்டு, கொள்ளையடிச்சி, பெண்களை கடத்திட்டும் போறான். ஆனால் அவனுடைய ஒரே இலக்கு அந்த தெய்வத்தாய்தான். அவரை கடத்திக்கொண்டு போய்விட்டால் அந்த உலகத்தையே தம் காலடியில் கொண்டுவந்து ஒரே ராஜாவாக இருக்கலாம் என்பது அவனது திட்டம்.

அதைத் தடுப்பதற்கும், நாட்டு மக்களை காப்பாற்றுவதற்கும் தன் நாட்டில் ஒரு மாவீரன் உருவாகனும்னு அந்த தெய்வத்தாய் நினைக்கிறாங்க. அப்படி ஒரு மாவீரன் உருவாகுனும்னா அவனுக்கு ஒரு பெண் துணை வேணும். அவனை அவள் காதலிக்க வேண்டும். அவனுக்குள்ளும் காதல் வரவேண்டும். இப்படிப்பட்ட ஒரு சூழலில்தான் அங்கிருக்கும் ஒரு விசித்திர சிங்கத்தைக் கொன்று தான் வீரன் என்பதை உணர்த்துகிறான் ஒருவன். அவன்தான் ஆர்யா. அவன் ஒரு பெண்ணை விரும்புகிறான். திருமணம் செய்ய முயல்கிறான். அவள் அனுஷ்கா. ஆனால் அவர்களுக்குள்  காதல் இல்லை. அவர்களுக்கு காதல் வந்துவிட்டால் அந்த தேசத்தில் பூக்கள் பூத்துக் குலுங்கி நந்தவனமாகிவிடும். அவன் மாவீரனாகிவிடுவான். ஆனால் காதல் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் அந்த தேசத்தில் அவர்களுக்குள்  எப்படி காதலை விதைப்பது ...?

இங்கேதான் நம் உலகத்துக்கும் இரண்டாம் உலகத்துக்கும் முடிச்சுப் போடுகிறார் இயக்குனர். காதலின் தேசமான நம் உலகத்திலிருந்து காதலில் கசிந்துருகும் ஒருவனை இரண்டாம்  உலகத்திற்குக் கொண்டுவந்து அங்கிருக்கும் ஆர்யா-அனுஷ்காவுக்கு காதலைப் போதித்தால்..?

அதற்கு பலிகடா ஆகிறார் நம் உலகத்து மதுபாலகிருஷ்ணன்(ஆர்யா). அவரின் காதலியான அனுஷ்காவை பலியிட்டு, இரண்டாம் உலகத்துக்கு அவனை இழுக்கிறார் தெய்வத்தாய். அங்கே அனுஷ்காவுக்கு காதல், வெட்கம், பீலிங்க்ஸ் என்றால் என்ன என்பதை கிளாஸ் எடுக்க, அனுஷ்காவுக்கு இரண்டாம் உலகத்து ஆர்யா மேல் காதல் தொற்றிக்கொள்கிறது. அதன் மூலம் ஆர்யா மிகப்பெரிய மாவீரனாகி அந்த அரக்கக் கூட்டத்தை கொன்றொழிக்கிறான். அங்கே பூக்கள் பூத்துக்குலுங்கி நந்தவனமாகிறது. இரண்டாம் உலகம் சுபிட்சமடைகிறது.

சரி.. இப்போ நம் உலகத்திலிருந்து அங்கு சென்ற ஆர்யா என்ன ஆவார்..? அவரைக் கொன்று மூன்றாம் உலகத்துக்கு அனுப்பிவிடுகிறார் தெய்வத்தாய். அங்கே இன்னொரு அனுஷ்கா இருக்க....அவர்களுக்கும் காதல்... (சரி..சரி  உங்க நிலைமை புரியுது..அது அடுத்த பார்ட்டாக வரக்கூடும்..)


இதுதான் இரண்டாம் உலகம் மூலம் செல்வராகவன் சொல்லவந்த கற்பனைக் கதை. இந்தக் கதையை நம் குழந்தைகளுக்கு சொன்னால் அவர்கள் கேட்கும் முதல் கேள்வி இதுவாகத்தான் இருக்கும். " அவர்கள் உலகம் சுபிட்சமடையணும்னு நம்ம உலகத்து காதலை பிரித்து,காதலியைக் கொன்று, காதலனை அவுங்க உலகத்துக்கு அவுங்க தெய்வம் கொண்டு போனிச்சி சரி.அப்போ நம்ம உலகத்து கடவுள்களெல்லாம் என்ன பண்ணினாங்க?".  இப்படியாக எந்தக் கேள்வியும் கேட்டுவிடக்கூடாது என்பதற்காக இது ஒரு ஃபேண்டசி ஃபில்ம் என்று ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டார்கள்.

இப்படியொரு கதையை தமிழில் எடுக்க முயற்சி செய்ததற்காக செல்வராகவனை முதலில் பாராட்டியே ஆகவேண்டும். இக்கதையை நமக்குள் அடங்கும் பட்ஜெட்டில் எடுத்தாக வேண்டும் என்கிற பிரச்சனைதான் அவர் சந்தித்த முதல் சவாலாக இருக்கவேண்டும். இரண்டாம் உலகம் சம்மந்தப்பட்ட காட்சிகள் முழுவதுமே CG WORK  செய்துதான் ஒப்பேற்றவேண்டும் என்பதால் பட்ஜெட்டில் முக்கால்வாசி இதுவே விழுங்கியிருக்கும். இரண்டாம் உலகத்தைக் காட்டியவகையில் ஹாலிவுட்டுக்கு இணையாக செதுக்கியிருக்கிறார் என்பதே தமிழில் ஒரு சாதனைதான். எது எப்படியிருந்தாலும் தமிழ் சினிமாவை அடுத்தத் தளத்திற்கு கொண்டுசெல்லும் இயக்குனர்களில் செல்வராகவன் மிக முக்கியமானவர் என்பதில் சந்தேகமில்லை...

ஆனால்........   வெறுமனே இந்த ஜில்பான்சி கதையை வைத்து படமாக எடுத்ததின் மூலம் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது அவருக்கே வெளிச்சம். நம் உலகத்து ஆர்யா-அனுஷ்காவின் ஆரம்ப காதல் காட்சிகள் எல்லாம் செல்வராகவனின் அக்மார்க் முத்திரை. அதிலும் அனுஷ்கா தன் காதலை ஆர்யாவிடம் புரப்போஸ் பண்ணும் காட்சி அருமை. அதன் பின்புதான் வெறுப்பேற்றுகிறார். ஆர்யா தன் தாத்தா சீரியஸாக இருக்கிறார் என்று பொய் சொல்லி அனுஷ்காவுடன் கோவா செல்லும் காட்சியிலிருந்தே போரடிக்க ஆரம்பித்துவிடுகிறது. அனைத்தும் செயற்கைத்தனமாகவே இருக்கிறது. தனது காதலியையோ அல்லது காதலனையோ இம்ப்ரெஸ் பண்ண வேண்டுமென்றால் அவர்களது  பிறந்தநாளின் முதல் நாள் இரவு கேக்,மெழுகுவர்த்தி சகிதமாக "ஹாப்பி பர்த்டே டூ யூ.." என பாடும் காட்சியை இன்னும் எத்தனை வருசத்துக்கு காட்டப்போறீங்க யுவர் ஆனர்..? வேற ஏதாவது யுத்தி யோசிக்கக் கூடாதா...?


இது கற்பனைக்கதை என்பதால் அவர் இஷ்டத்திற்கு கதை விட்டிருக்கிறார். ஜெயமோகனின் டார்த்தீனியம் படிப்பது போல் இருந்தது. இரண்டாம் உலகத்து அனுஷ்கா இறந்து போனதால்தான் ஆர்யா பைத்தியம் மாதிரி திரிந்து அந்த சுவாமி மலையின் மீது ஏறி இன்னொரு ஆர்யாவைக் கூட்டிவருகிறார். பிறகு அனுஷ்கா திடீரென்று தோன்றுகிறார். கேட்டால் அவர் மட்டும் காட்டில் தனியாக வசிக்கிறாராம்.

படத்திற்கு நிச்சயம் வரிவிலக்கு கிடைத்துவிடும். இது நம் கலாச்சாரத்தைப் போற்றும் வகையில் இல்லை என்றாலும், இரண்டாம் உலகத்தில் வரும் அந்தத் தெய்வத்தாய், நமது மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அவர்களின் குறியீடுதான் என்பதைப் பச்சைக் குழந்தைக் கூட சொல்லிவிடும். அதிலும் இடைவேளைக்கு முன் இரட்டை இலை துளிர்ப்பது ஒரு குறியீடே அல்ல. அது, "கொஞ்சம் பார்த்து கவனித்து வரிவிலக்கு கொடுங்க தாயீ " என்பதின் நேரடிக் கெஞ்சல்...!

படத்தில் ஆறுதலான விஷயம் பாடல்கள். "கனிமொழியே...","மன்னவனே என் மன்னவனே..","பழங்கல்ல.."   பாடல்கள் ஏற்கனவே ஹிட் என்பதால் அப்பாடல்கள் வரும் காட்சி மட்டும் கொஞ்சம் உற்சாகப்படுத்தியது. மற்றபடி பின்னணி சிம்பொனி இசை அமைத்திருப்பதாக பீத்திக் கொண்டதெல்லாம் அவ்வளவாக இம்ப்ரெஸ் பண்ணவில்லை.

உலகத்தரம், உலக சினிமா எடுக்கவேண்டுமென்றால் ஹாலிவுட் படங்களைப் போல் கதைப்பின்னவேண்டும் என்கிற அவசியமில்லை. நம் மண் சார்த்த கதைகள் எவ்வளவோ இருக்கிறது. பொன்னியின் செல்வனை திரைக்காவியமாக எடுக்க முயன்றவர்களில் செல்வராகவனும் ஒருவர். அப்படியொரு காவியத்தை எடுத்து வணிக ரீதியாக தோற்றுப் போயிருந்தால் கூட இழப்பு வெறும் பணமாகத்தான் இருந்திருக்கும். ஆனால் தமிழ் திரைப்பட வரலாற்றில் அழுத்தமாகப் பெயர் பதிந்திருக்கும். தன் கற்பனையில் ஓடிய ஒரு கதையை  படமாக எடுத்து ரசிகனை இவ்வளவு அவஸ்தைக்குள்ளாக்க வேண்டுமா..? ஒருவேளை இந்தப்படத்தை 3D யில் முயற்சி செய்திருந்தால் (கொஞ்சம் பட்ஜெட் எகிறினாலும் ) அந்த பரவசத்திற்காகவாவது தியேட்டருக்கு கொஞ்சம் கூட்டம் வந்து போட்ட பணத்தை எடுத்திருக்கலாம்.   இவரது போதைக்கு பாவம் அந்த தயாரிப்பாளர்தான் ஊறுகாய் போல..!

Tuesday 19 November 2013

சத்யத்தின் அயோக்கியத்தனமும் சச்சினின் ஆற்றமுடியா பிரிவின் வலியும் (சும்மா அடிச்சி விடுவோம்..-6 )


ஞ்சையில் எழுப்பப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடிக்கப்பட்டது தொடர்பாக ஒரு டாஸ்மாக் குடிமகன் தமிழக முதல்வரையும், விஜயதரணி அவர்களையும் செம்மொழியில் அர்ச்சனை செய்த சம்பவம் இன்னமும் ஓயவில்லை என்று நினைக்கிறேன்.


நினைவு முற்றம் இடிக்கப்பட்டது பச்சை மொள்ளமாரித்தனம். இதில் மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. ஆனால் ஜெயாவின் ஈழ நிலைப்பாட்டை இன்னமும் புரிந்துகொள்ளாத நெடுமாறன், சீமான், வைகோ போன்றவர்களை நம்பி, பின்னால் இவ்வளவு பெரிய கூட்டம் செல்லத் தயாராக இருக்கிறது என்பதுதான் புரியாத மர்மம்.

கலைஞராவது ஆட்சியில் இருக்கும்போதும், எதிர்கட்சியாக இருக்கும்போதும் வெவ்வேறு நிலைப்பாடுகளை எடுப்பார். ஆனால் ஜெயாவின் நிலைப்பாடு எப்போதும் ஒன்றுதான். ஈழம், பிரபாகரன், விடுதலைப் புலிகள் எல்லாமே எப்போதும் அவருக்கு கசப்பு வார்த்தைகள்தான். ஜெயாவின் அரசியல் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் ஒவ்வொரு பக்கமும் இதைத்தான் சொல்லும். அப்படியிருக்க, ஜெயா என்ன மாதிரியான பிரச்சனையைக் கொடுப்பார் என்று யோசிக்கும் அளவுக்கு சமயோசித புத்தி கூடவா இந்த ஈழ அரசியல்வாதி -களுக்கு இல்லை..?  மட்டுமில்லாமல், சுவர் எழுப்பிய இடம் குத்தகைக்கு விட்டது கலைஞர் ஆட்சியில். முற்றம் அமைந்துள்ளது நடராஜனுக்கு சொந்தமான இடத்தில். இது போதாதா இடிப்பதற்கு..?

தமிழர்களின் வரலாற்று நினைவு சின்னத்தையே இடித்துத் தள்ளும் இந்த ஜெயாதான் முள்ளிவாய்க்கால் சம்பவத்தை தடுத்து நிறுத்தியிருப்பாராம்...ஈழத்தாயாம்...இலை மலர்ந்தால் ஈழம் மலருமாம்...!  அட போங்கப்பு... :-)

சரி... சத்யம் டிவி விவகாரத்துக்கு வருகிறேன். அந்த செம்மொழி ஆசாமி அப்போது குடித்திருந்தாராம். இருக்கட்டும். அம்மையார் ஆட்சியில் இது ஒன்றும் பெருங்குற்றமல்ல.  ஆனால் ஒரு நேரலை நிகழ்ச்சியில் முகம் தெரியாத யாரோ ஒரு நபரிடம் 'லைவ்' ஆக கருத்து கேட்கும் முன்பு அவர் என்ன சொல்லப்போகிறார், எப்படிப்பட்ட மனநிலையில் இருக்கிறார் என்பதைக்கூட அறிந்து கொள்ள மாட்டார்களா என்ன.. ?  பாடல் நிகழ்ச்சிகளில் கூட என்ன பாட்டு வேண்டும், என்ன பேசப்போகிறீர்கள் என்பதை முன்கூட்டியே கேட்டறிந்து கொள்வார்களே..

வெறும் டிஆர்பி ரேட்டுக்காக இவர்கள் செய்யும் அட்டூழியங்களை முடிவு கட்டுவதற்கு ஒரு விதத்தில் இப்படி ஒரு சம்பவம் தேவைதான். சத்யம் டிவியின் அயோக்கியத்தனத்தைப் பற்றி மனுஷ்யப் புத்திரன் தன் முகநூளில் ஒரு செய்தி பகிர்ந்திருக்கிறார். படித்துப் பாருங்கள்.

எனக்கென்னவோ அந்த செம்மொழி ஆசாமியை அவர் பாட்டுக்கு பேசச்சொல்லியிருந்தால் இப்படி நடத்திருக்காது என நினைக்கிறேன். நிகழ்ச்சியை நடத்தும் அரவிந்தன் அவரிடம், "உங்கள் கருத்தை சுருக்கமா சொல்லுங்க...சுருக்கமா சொல்லுங்க... என திரும்பத்திரும்ப சொன்னதால்தான் ரத்தினச் சுருக்கமா அப்படி சொல்லிவிட்டார் போல... :-))

ஆனால் ஒன்னுங்க... அந்த ஆள் இவ்வளவு அசிங்கமாக பேசினப் பிறகும் கொஞ்சம் கூட அவர்மீது கோபப்படாமல் "உங்கள் அழைப்புக்கு நன்றி.." என சொன்னார் பாருங்க... அவரின் கடமையுணர்ச்சியைக் கண்டு நான் இன்னமும் வியக்கேன்..!



வில்லா படத்திற்கு  இணையத்தில் நிறைய விமர்சனங்கள் வந்துவிட்டது. விமர்சனத்திற்கு விமர்சனம் கூட வந்திருக்கிறது. வெறுமனே நுனிப்புல்லை மேய்ந்துவிட்டு விமர்சனம் எழுதியவர்களைப் பற்றி எனக்கு கவலை இல்லை. அழுத்தமான, ஆழமான விமர்சனங்கள் நிறைய வந்திருக்கிறது. நான் நாடிப்பிடித்துப் பார்த்த விசயங்களோடு அவர்களின் விமர்சனமும் ஓரளவு ஒத்துப் போன வகையில் எனக்கு கொஞ்சம் திருப்தி.

நிஜமாகவே சொல்கிறேன், வில்லா என்னுள் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஒருவேளை திரையரங்கின் கடைசி வரிசையில் உட்காந்து பார்த்ததால் அப்படி இருந்திருக்குமோ என்னவோ..! இனிமேல் இதுபோன்ற படங்களை திரைக்கு அருகில் இருந்துதான் பார்க்கவேண்டும் போல... போகட்டும்.

ஒரு பேய் படம் அல்லது திகில் படம் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு தமிழ் சினிமாவிலே நிறைய உதாரணங்களை அடுக்கலாம். முதல் பாதியில் வரும் ஒவ்வொரு மர்ம முடிச்சுகளையும் பிற்பகுதியும் எப்படி லாஜிக்காக அவிழ்க்கிறார்கள் என்பதில்தான் திகில் படங்களின் வெற்றியே அடங்கியிருக்கிறது. அந்த விதத்தில் 'யாவரும் நலம்' தமிழ் சினிமாவில் ஒரு மைல் கல். மூன்று நாட்களுக்கு ஒவ்வொரு காட்சியும் மண்டைக்குள் குடைந்து கொண்டே இருந்தது.

வில்லா படத்தின் முதல் பாதியில் வரும் காட்சிகள் கொஞ்சம் திகிலாகத்தான் இருந்தது. அதன் பின்னணியில் உள்ள மர்மங்களை அறிந்துகொள்ளும்  ஆவலோடுதான் ஒவ்வொரு ரசிகனும் இருந்திருப்பான். அசோக் செல்வனின் நண்பராக வருபவர் வெவ்வேறு இடங்களில் சேகரித்த தகவலின் அடிப்படையில் அவரிடம் இப்படித்தான் விவரிப்பார். "ஐ ஹாவ் சீன் ஒன் பிளாக். அவர் பேரு தேவநேசன்.. தமிழ் ஆளுதான்.அவரு என்ன சொல்றார்னா, இந்த நெகடிவ் எனர்ஜிக்கு பியூச்சரை பிரெடிக்ட் பன்றதுக்கு தூண்டுதல் சக்தி இருக்கிறதா சொல்லியிருக்கார்.."

தேவநேசனிடம் போனபிறகு, அவரும் இப்படித்தான் ஆரம்பிப்பார். " பிளாக்மேஜிக் மூலமா பியூச்சரை பிரெடிக்ட் பண்ண முயற்சி பண்ணியிருக்கான்...  " .  ஒரு சாராசரி ரசிகன் இந்த இடத்தில்தான் பேந்தப் பேந்த முழித்திருப்பான். ஒருவேளை இங்கு எழுதியதால் இதன் அர்த்தம் தற்போது புரிந்திருக்கும். ஆனால் கதையின் அடிநாதமான இந்த விஷயம் படத்தில் போகிற போக்கில் வந்து போகும். எத்தனைப் பேர்  இதைப் புரிந்து கொண்டிருப்பார்கள்..?

ஆரம்பம் படத்தை வெகுவாக ரசித்தவர்கள் ஒரு உண்மையை ஒப்புக்கொள்வார்கள். படத்தில் முக்கியமான ஒரு காட்சியில்,  'தரமில்லாத புல்லட் புரூப்.' என்கிற வார்த்தையை நான்கைந்து தடவை அழுத்தி உச்சரிப்பார் தல. இந்த இடத்தில் 'தரமில்லாத' என்கிற வார்த்தை கொஞ்சம் உறுத்தலாக இருக்கும். தன் மேலதிகாரியிடம் புகார் செய்யும்போது, இதற்குப் பதிலாக வேறு ஆங்கில வார்த்தைகளை உபயோகித்திருக்கலாம். ஆனால் கதைக் கருவின் அடிநாதமே அதுதான் என்பதால் பாமரனுக்கும் விளங்கவேண்டும் என்பதற்காக அந்த வார்த்தையை உபயோகித்திருப்பார்கள்.

வில்லா படத்தில் இதுபோன்ற ஒரு முக்கிய காட்சியைத்தான் புரியாத மொழியில் ஜல்லியடித்திருக்கிரார்கள் என்று விமர்சித்திருந்தேன். அதேப்போல இறுதிக் காட்சி எத்தனைப் பேருக்கு தெளிவாகப் புரிந்திருக்கும் எனத் தெரியவில்லை. இதைத்தான் குறிப்பிட்டிருந்தேனே தவிர, மற்றபடி இந்த புண்ணாக்கு, பருத்திகொட்டை கிண்டுற வேலையெல்லாம் எனக்கு தெரியாது சாமீ....


சச்சின் டெண்டுல்கர்....

இதை எழுதும் போதே கண்களில் நீர் முட்டுகிறது. கடந்த இருபதாண்டுகளுக்கு மேலாக இந்திய இளைஞர்கள் அதிகமாக உச்சரித்த சொல் இதுவாகத்தான் இருக்கும். அது ஏனோ தெரியவில்லை, உடன் பிறந்தவளை திருமணத்திற்குப் பின் பிரியும்போது ஏற்படும் வலிபோல துக்கம் நெஞ்சை அடைக்கிறது. சச்சின் அணியில் இருந்தபோது சரியாக விளையாடவில்லை என்று விமர்சித்த வாய்தான் இன்று வரண்டுபோய் கிடக்கிறது. எனக்கெல்லாம் பன்னிரெண்டாம் வகுப்பு வரை கபடியை விட்டால் வேறு எந்த விளையாட்டும் தெரியாது. எங்கள் கிராமப்புறங்களில் அப்படி ஒரு விளையாட்டு இருப்பதே தெரியாது. நாடே சச்சின்.. சச்சின் என்ற பொழுது நாங்களும் அந்த பொது நீரோட்டத்தில் ஐக்கியமானோம்.   

ஒரு விளையாட்டு வீரனுக்கு இவ்வளவு பில்டப் தேவையா....? சும்மா ஒன்னும் விளையாடவில்லையே, கோடி கோடியாக சம்பாதிக்கதானே செய்தார்.' பாரத் ரத்னா ' கொடுப்பதற்கு இவர் என்ன எல்லையில் போயி சண்டையா போட்டார்..? இப்படி அற்பத்தனமாகக் கேள்வி கேட்கிறது ஒரு பிரிவு.

பல லட்சம் கோடிகளை சர்வ சாதாரணமாக தின்று ஏப்பம் விடும் ஊழல் பெருச்சாளிகள் மலிந்திருக்கும் நம் நாட்டில், நாட்டுக்காக 20 வருடத்திற்கு மேல் விளையாடிய ஒரு வீரர், தன் திறமையின் மூலம் சில கோடிகள் சம்பாதிப்பதில் என்ன பெரிய தவறு இருக்கிறது...?  100 கோடி மக்களின் எதிர்பார்ப்புகளை தன் தலைமீது சுமந்துகொண்டு விளையாடுவது மனரீதியாக எவ்வளவு அழுத்தத்தைக் கொடுத்திருக்கும்..?. அதிலும் இருபது ஆண்டுகளாக இந்தியாவின் 'ஒரே நம்பிக்கை' சச்சின் போன்றவர்களுக்கு..?

நாட்டுக்காக விளையாடுவது ஒன்றும் அவ்வளவு சாதாரணமல்ல. இந்திய அணி வெற்றிபெற்றால், ' INDIA WON THE MATCH ' என்றுதான் சொல்கிறார்களே தவிர, ' INDIAN CRICKET TEAM WON THE MATCH ' என்று செல்வதில்லை. இந்தியா எத்தனை தடவை சச்சின் என்கிற தனிப்பட்ட ஒருவரால் ஜெயித்திருக்கிறது..!

சச்சின் எல்லையில் சென்று சண்டை போடவில்லை. ஆனால் ஒவ்வொரு உலகக் கோப்பை போட்டியின் போது இந்தியா, பாகிஸ்தானை சுருட்டி வீசியெறிந்த காட்சியைக் கண்டு முதலில் சந்தோசக் கூத்தாடுவது நம் எல்லை வீரர்கள்தான் என்பதை மறுக்க முடியுமா..?  இதுவரை நடந்த உலகக் கோப்பை போட்டிகளில் ஒரு தடவை கூட பாகிஸ்தானை இந்தியா ஜெயிக்க விட்டதில்லை என்கிற சாதனையின் பின்னணியில் சச்சினின் பங்களிப்பு    மகத்தானது என்பதை நாம் அறிவோம்தானே...!

ராஜன் பேஸ்புக்கில் ஒரு ஸ்டேடஸ் போட்டிருந்தார்.

"கிரிக்கெட்டை இலக்கண சுத்தமாக விளையாண்ட ப்ளேயர்களெல்லாம் கிளம்பிய பிறகு, அந்த இலக்கணத்தை எழுதியவன் கிளம்புகிறான்..."

Good bye Sachin...!


கலாட்டூன் கார்னர்....

 எவன்டா இந்த வேலையை செஞ்சது...?

------------------------------------------------------X---------------------------------------------------

ஆனா, இது சத்தியமா நான் செஞ்ச வேலைதாங்க...





                                                                                                   - இன்னும் அடிச்சிவிடுவோம்...