Showing posts with label என் பக்கங்கள். Show all posts
Showing posts with label என் பக்கங்கள். Show all posts

Wednesday, 8 January 2014

2013-ல் என்னை உலுக்கிய தமிழ்த் திரைப்படங்கள்...

பத்தாவது இடத்தில் எந்தப்படமும் இல்லாததால் நேரடியாக ஒன்பதாவது இடத்திற்கு செல்வோம்.

 9.சூது கவ்வும்...

சென்ற வருடம் தமிழ்த் திரையுலகை விஜய் சேதுபதி என்கிற சூது செமையாகக் கவ்வியிருந்தது.தொலைக் காட்சித் தொடரில் கூட நடிக்க லாயக்கில்லாத மூஞ்சி என்று ஆரம்பத்தில் சிலரால் புறக்கணிக்கப்பட்டு, பிற்பாடு சிறு வேடங்கள், டப்பிங் ஆர்டிஸ்ட் என்று படிப்படியாக முன்னேறி 2013 ஆம் ஆண்டின் சிறந்த நடிகராகப் பலரால் பாராட்டப்பட்டவர்தான் இந்த விஜய் சேதுபதி.

ஆரம்பத்தில் நிறைய அனுபவப்பட்டதால் என்னவோ, கதை மட்டுமே ஒரு படத்தை வெற்றியாக்கும் என்பது மட்டுமல்ல கடைக்கோடி ரசிகர்களையும் கட்டியிழுத்து திரையரங்குக்குக் கொண்டு வரும் என்கிற சூட்சமத்தைத் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கிறார். பீட்சா, ந.கொ. ப.காணோம், இ.ஆ.பாலகுமாரா.. என்று ஹீரோவாக நிதானமான வெற்றியை பெற்றாலும் வில்லன் கதாபாத்திரத்திலும் சில படங்களில் அசத்தியிருக்கிறார் விஜய் சேதுபதி.

இந்த வருடத்தில் அவர் நடித்ததில் மாஸ் 'சூது கவ்வும்'. 90 களின் ஆரம்பத்தில் திரைப்படக்கல்லூரியில் பயின்று வந்த மாணவர்கள் தமிழ்த்திரையில் கோலோச்சியதைப்போல் கடந்த வருடம் குறும்பட இயக்குனர்களின் கைகளில் தமிழ் சினிமா உலகம் சிக்கி வேறொரு கட்டத்திற்கு நகர்ந்தது. தமிழ் சினிமாவின் திரைக்கதை வடிவம் வேறொரு பரிமாணம் கண்டது. கிளிசே வகைக் காட்சிகள் தமிழ் ரசிகர்களைச் சலிப்படைய வைத்ததால் இப்படியொரு புதிய முயற்சிக்கு ஆரம்பத்திலேயே அமோக வரவேற்பு கிடைத்தது. நிச்சயமாக சூது கவ்வும் தமிழ் சினிமாவில் ஒரு ட்ரென்ட் செட்டர்.

8.ஆதலால் காதல் செய்வீர்..

 
ஆதலால் காதல் செய்யாதீர்கள் என்பதுதான் படத்தின் மையக்கருத்து. நவநாகரிகம் என்கிற பெயரில் வெளிநாட்டுக் கலாச்சாரம் எப்படி நம் கலாச்சாரத்தினுள் ஊடுருவி இளைய சமுதாயத்தை தவறான பாதையில் பயணிக்கச் செய்து படுகுழியில் தள்ளுகிறது என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கிறார் சுசீந்திரன்.

நிச்சயம் பருவம் எய்திய பெண்களைப் பெற்ற பெற்றோர்கள் இப்படத்தைப் பார்த்தால் பதறிப்போவார்கள். கருவைக்கலைக்க டாக்டரிடம் சென்று சமாளிக்கும் காட்சியும், தன் மகள் தவறான முறையில் உண்டாகியிருக்கிறாள் என்பதை அவளது தாய் உணர்த்து துடிக்கும் காட்சியும் சுசீந்திரனின் திறமைக்கு சில சாம்பிள்கள். அதற்காக காதலிப்பவர்கள் எல்லோரும் இப்படித்தான் முடிவெடுப்பார்கள் என்று சொல்லிவிட முடியாது. தன்னால் உருவான பிஞ்சை அப்பா உதாசீனப்படுத்தலாம். அம்மாவும் அப்படி தூக்கி எறிவாரா என்ன..?
 

7.பாண்டிய நாடு..

 
மதுரைக்கும் விஷாலுக்கும் அப்படியொரு பொருத்தம்... ஆறடிக்கும் அதிகமான உயரம், மதுரைக்கே உரித்தான கருப்பு நிறம், சண்டைக்காட்சிகளில் ஜல்லிக்கட்டு காளையாய் சீரும் வேகம் என அப்படியே வீரம் செறிந்த மதுரை வீரனாய் விஷாலைத் தவிர வேறு யாரையும் நினைத்துப் பார்க்க முடியவில்லை.

"நீ அடிச்சா பணம்... நான் அடிச்சா பொணம்..." போன்ற கடுப்பின் உச்சத்திற்குச் சென்று வெறியேற்றும் பன்ச் எதுவுமில்லாமல் சாதாரண இளைஞனாக விஷால் நடித்திருப்பது பெரும் ஆறுதல். எதார்த்த சாமானியன் போல நடித்திருக்கும் விஷால், இந்த வெற்றிக்குப் பிறகு தன் பாதையை மாற்றிக்கொள்வார் என நம்புவோம்.

படத்தில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய மற்ற இரு கேரக்டர்கள் பாரதிராஜாவும், விக்ராந்தும். தாவணிக்கனவுகள் படத்தில் பாக்கியராஜின் நடிப்பைப் பார்த்துக் கண்கள் விரிய இயக்குனர் இமயம் ஒரு ரியாக்சன் கொடுப்பார் பாருங்கள். செம காமெடியாக இருக்கும். இவர் எப்படி மற்றவர்களை நடிக்க வைக்கிறார் என்று ஆச்சர்யப்பட்டுப் போனேன். ஆனால் அவருக்குள் படிமங்களாகப் புதைந்திருந்த நடிப்புத்திறமையை இந்தப்படத்தில் சுரண்டி எடுத்திருக்கிறார் சுசீந்திரன். "எதாவது பண்ணனும்டா.." என்று அர்த்த ராத்திரியில் நண்பனின் வீட்டுக்கதவைத் தட்டி தன் ஆற்றாமையை வெளிப்படுத்தும்போது உண்மையிலேயே நடிப்புச்சிகரமாக மிளிர்கிறார் இயக்குனர் இமயம். விக்கிராந்தும் ஹீரோயிசம் காட்டாமல் இதுபோல சின்னச்சின்ன கேரக்டர்களில் நடித்தாலே போதும். இன்னொரு விக்ரமாக உருவெடுக்கலாம்.

முதல் படத்தில் மட்டும் தன் முழுத்திறமையைக் காட்டிவிட்டு அடுத்தடுத்த படங்களில் சொதப்பும் சமகால இயக்குனர்களில் சுசீந்திரன் வித்தியாசமானவர். அவரின் வெற்றிப்பயணம் இந்த வருடமும் தொடரட்டும்.
 

6.மதயானைக் கூட்டம்

 
மதுரையைக் களமாகக் கொண்ட படங்கள் எல்லாமே தமிழ்ச் சினிமாவில் தனித்துவமான முத்திரையைப் பதித்திருக்கிறது. மதயானைக் கூட்டமும் அவ்வகைப் படைப்பே. மதுரையைக் காட்டி விட்டு சாதிப் பெருமையைப் பேசாமலிருந்தால் எப்படி..?

ஆனால் கவுண்டர் சாதிப்பெருமைப் பேசிய ஆர்.வி. உதயகுமார், கே.எஸ்.ரவிக்குமார், தேவர் பெருமைப் பேசிய மனோஜ்குமார், பாரதிராஜா போன்றோர்களின் படைப்புகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது மதயானைக் கூட்டம்.

ஆண்ட பரம்பரை என சொல்லிக்கொள்பவர்களின் சாதிப்பெருமையை உயர்த்திப் பிடிக்க, ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் அவர்கள்முன் கைகட்டி,வாய்ப்பொத்தி,காலனி மற்றும் மேல் சட்டை அணியாமல், கூழைக் கும்பிடுப் போடும் அடிமைகளாகக் காட்சிப்படுத்தப்பட்டு வந்தனர். தமிழ் சினிமாக் கட்டமைத்து வைத்திருந்த அந்த டெம்பிளேட் வடிவமைப்பை முதலில் உடைத்தெறிந்தது தேவர் மகன். அந்த ஆண்டச் சாதிக்குள்ளேயிருக்கிற அறியாமையையும், அர்த்தமற்ற சாதிப்பெருமிதத்தையும்,காட்டுமிராண்டித்தனமான வன்முறையையும்,அடியாள் கலாச்சாரத்தின் அடிப்படையையும் வெளிச்சம் போட்டுக் காட்டியது அப்படம். தவிரவும், அப்படத்தில் விளிம்புநிலை மக்களிலிருந்து பஞ்சாயத்துத் தலைவர் வரை ஒரே சமூகத்தைச்சார்ந்த மக்களாகக் காட்டியது கமலின் சாமர்த்தியம்.

கதைக்கருவைப் பொறுத்தவரையில் தேவர் மகனுக்கு மிக அருகில் பயணிக்கிறது மதயானைக் கூட்டம். இன்னமும் அச்சமூகத்தில் சாதி வெறிப்பிடித்த, மூடர்க் கூடங்களாக வாழும் ஒரு கூட்டத்தைப் பற்றிய கதைதான் மதயானைக் கூட்டம். ஆனால் கதையை முடித்த விதத்தில்தான் பெரும் ஓட்டை விழுந்துவிட்டது.

ஒரு கலவரம் நடைபெறுகிறது. பலர் சாகிறார்கள் என வைத்துக்கொள்வோம். கலவரத்தின் மூலக் காரணம், அதன் விளைவு, எதிர்காலத்தில் கலவரம் நடைபெறாமல் தடுக்க முன் யோசனைகள் என்று அலசும் போதுதான் அது முழுமையடைகிறது. மாறாக, இவர்கள் அப்படித்தான் அடித்துக்கொள்வார்கள் என்று போகிற போக்கில் சொல்லிவிட்டுப்போவது எப்படித் தீர்வுக்கான முறையாகும்....? அந்த விதத்தில் படம் முடிந்து வெளிவரும்போது ஒரு டாக்குமெண்டரியான அனுபவத்தை உண்டுபண்ணியது படத்தின் மிகப்பெரிய சறுக்கல்..

அதைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், கடந்த வருடத்தில் கடைசியில் வந்தாலும் முக்கியமான இடத்தைப் பெறுகிறது மதயானைக் கூட்டம். இப்படியொரு கதையைத் திரையில் வடித்த தயாரிப்பாளர் ஜி.வி. பிரகாஷின் துணிச்சலுக்குப் பாராட்டுகள்.
 

5.விஸ்வரூபம்...

 
உலக நாயகனின் உச்சபட்ச படைப்பு என்று சொல்ல முடியாவிட்டாலும் ஒட்டு மொத்த உழைப்பிற்காக வெகுவாகப் பாராட்டலாம். ' வேறு தேசம் நோக்கிய நகரல்' இப்படத்திற்கு அதிக பட்ச விளம்பரத்தைத் தேடிக்கொடுத்தது. என்றாலும் அக்கசப்பான சம்பவங்கள், திரைப்படங்கள் சமகால சமூகப் பிரக்ஞை கொண்டதொரு படைப்பாக இருக்கவேண்டும் என்கிற பார்வையை மக்களிடம் விதைத்தது.

படைப்பு ரீதியாகப் பார்த்தால் ஹாலிவுட்டின் நேர்த்திக்கு கொஞ்சமும் சளைத்ததில்லை விஸ்வரூபம். ஆனால் தர்க்க ரீதியாக அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்குச் சப்பைக்கட்டுக் கட்டியதோடு, சிறுபான்மை மக்களின் ஒரு பகுதியினரை தீவிரவாதியாகக் காட்சிப் படுத்தியது இப்படம்.

ஒரு காட்சியின் நம்பகத்தன்மையைக் கூட்ட , அதை மென்மேலும் மெருகூட்டி தத்ரூபமாகப் படைப்பதில் கலைஞானி கமல்ஹாசன் ஒரு விற்பன்னர் என்பதை உலகம் அறியும். அதனால்தான் என்னவோ அக்காட்சிகளின் வீரியத்தன்மை சில நேரங்களில் அவருக்கு எதிராகவே திரும்பிவிடுகிறது. தீவிரவாதிகள் என்றாலே இஸ்லாமியர்கள் என்கிற தட்டையான சிந்தனையை ஏற்கனவே திரையிலகில் பலர் விதைத்து விட்டுப் போனாலும், கமல் சொல்லும்போது அதன் வீச்சு வேறுவித சிந்தனையைத் தூண்டுகிறது. அதுதான் கமலின் பலமும் பலவீனமும்.

மன்மத அம்பு என்கிற மகா மொக்கைக்குப் பிறகு வந்ததால் கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, வியாபார ரீதியாக கமலுக்கும் முழுத் திருப்தியளித்த படம்.
 
4.மூடர் கூடம்...

 

கடந்த வருடம் தமிழ்ச் சினிமாவில் நடந்த அற்புதங்களில் இதுவும் ஒன்று. பிளாக் காமெடி என்ற வகைமைக்குள் வரும் படங்கள் தமிழ் சினிமாவில் அவ்வப்போது தலைகாட்டுவதுண்டு. சூது கவ்வும் படமும் அவ்வகையே. சமூகத்தின் புறக்கணிப்பால் நேர்ந்த வலியின் உச்சம் இளைய சமுதாயத்தை எப்படித் தடம் மாறச்செய்கிறது என்பதை அபத்த நகைச்சுவையின் மூலம் தோலுரித்துக் காட்டிய வகையில் தமிழ் சினிமாவின் கோபுரக் கதவைப் பலமாகத் தட்டியிருக்கிறார் அறிமுக இயக்குனர் நவீன்.

Attack The Gas Station என்ற கொரியப் படத்தின் தழுவல் என்றாலும் தமிழ் வெகுஜன சினிமா பார்வையாளனின் ரசனையின் உச்சமாக மறு உருவாக்கம் செய்திருக்கிறார் நவீன். சமகாலக் கலாச்சார மீறல்களையும் சமூக அவலங்களையும் தன் நேர்த்தியான வசனங்களின் மூலம் நெற்றிப்பொட்டில் அடித்தது போல் நவீன் சொல்லியது படத்தின் மிகப்பெரிய பிளஸ். ஓவியாவின் காதலனிடம் சென்ட்ராயன் பேசும் அந்தப் பன்ச் ஒன்றுபோதும் நவீனின் நவீன யுகத்தின் மீதான அறச்சீற்றத்திற்கு...

பின்புல சுவாரஸ்யத்தை அவிழ்க்கிறேன் என்று வீட்டு நாய் வரைக்கும் ஃபிளாஷ்பேக் வைத்தது கொஞ்சம் புதுமை என்றாலும் எந்த நேரத்தில் யாருக்கு ஃபிளாஷ்பேக் வரப்போகிறதோ என்ற அச்ச உணர்வைத் தூண்டிக் கொஞ்சம் சலிப்பை ஏற்படுத்தியது என்னவோ உண்மைதான். மற்றபடி சில CLICHE வகைக் காட்சிகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், தமிழ்த் திரையுலகம் கண்ட SPOOF வகைத் திரைப்படங்களின் திரைக்கதை வடிவமைப்பில் மூடர்கூடம் ஓர் உச்சம்.

3.விடியும் முன்...

 
ஆரண்ய காண்டம் படத்திற்குப் பிறகு அழுத்தமான, ரசிகனின் ஆழ்மனதை அசைத்துப்பார்க்ககூடிய வகையில், உலகத்தரத்தை உரசிச்செல்கிற எந்தவொரு படைப்பும் தமிழில் வரவில்லையே என்ற கலைத்தாகத்தைப் போக்கிய படம் விடியும் முன். ஆனால் ஆங்கிலப்படத்தின்(London to Brighton ) தழுவல் என்ற ஒற்றைப் புள்ளியில் ஆரண்ய காண்டத்திற்கு ஒரு படி கீழ்.

படத்தின் அசுரபலம் திரைக்கதையும் பின்னணி இசையும். ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் உலகத்தரம். அடுத்தடுத்து என்ன நிகழப்போகிறது என்பதைக் கணிக்க முடியாதது மட்டுமல்ல, இறுதிக் காட்சிவரை படத்தின் கதையை யூகிக்க முடியாத சஸ்பென்ஸ் திரில்லர். இந்தப் படத்திற்காக நிறைய வாய்ப்பை இழந்தாராம் பூஜா. காரணமில்லாமல் இல்லை. அவர் சினிமா கேரியரில் இது மணிமகுடம். பூஜாவின் முந்தைய படங்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் எனக்கு இன்னொரு 'பசி' ஷோபாவாகத் தெரிந்தார்.

அசல் படைப்பில் வெறும் fucking என்ற இலக்கியப் பதத்தை வைத்து மொத்தவசனத்தையும் வடித்திருப்பார்கள். அந்தச் சிறுமி கூட சர்வ சாதாரணமாக அவ்வார்த்தையை உதிர்ப்பாள். நல்லவேளை தமிழில் அப்படியோர் விபரீத முயற்சி எடுக்கவில்லை. கமர்சியலுக்காக எந்த காம்ப்ரமைசும் செய்யாமல் எடுத்ததற்காகச் சிரம் தாழ்த்தி வாழ்த்தலாம் இயக்குனரை. 



"எரியும் பனிக்காடு...."  பரதேசி படத்தின் ஆதார ஸ்ருதி இது தான். 2003 ஆம் ஆண்டில் வெளிவந்த திரைப்படங்களில் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட ஒரே படம் என நினைக்கிறேன்.

ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் நாம் அடிமைப்பட்டு, அடங்கியொடுங்கி வாழ்ந்த காலகட்டமான 1930-ல், ஆனைமலை தேயிலைக் காடுகளில் நடந்த வெவ்வேறு கொடுஞ்சம்பவங்களைத் தொகுத்துப் பின்னிப் பிணைத்து  ரெட் டீ( RED  TEA ) என்ற தலைப்பில் பி.எச்.டேனியல் என்பவர் நாவலாக எழுதியிருந்தார். பல தேயிலைக்காடுகளில் எழுத்தராகப் பணிபுரிந்த அவர், அந்தக் காலகட்டத்தில் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்த பலபேரை பேட்டிக் கண்டு இந்த நாவலை வடிவமைத்திருக்கிறார். பிற்பாடு, இது தமிழில் இரா.முருகவேல் என்பவரால் 'எரியும் பனிக்காடு' என்ற தலைப்பில் மொழியாக்கம் செய்யப்பட்டது.

இந்த நாவலைத்தான் பாலா, பரதேசியாக உருமாற்றம் செய்ய முனைந்திருக்கிறார். எரியும் பனிக்காடு நாவலை முழுமையாக வாசித்தவர்களுக்கு இந்தப்படம் முழுத் திருப்தி அளிக்காமல் போயிருக்கலாம். ஆனால் பாலா தேர்ந்தெடுத்த கதைத்தளமும், கதைக்களமும் தமிழ் சினிமாவை வேறொரு தளத்திற்கு நகர்த்திச்செல்லும் அற்புதமான முயற்சி. நாவலை முழுமையாக உள்வாங்காமல் எடுத்தது , அந்த நாவலின் நாயகனும் அதை எழுதியவருமான பி. எச். டேனியல் கேரக்டரை காமெடியன் போல் படைத்தது, மத ரீதியான விசயங்களை தேவையில்லாமல் திணித்தது போன்ற எதிர்மறை விமர்சனங்கள் நிறைய வந்தாலும், பாலாவின் கிரீடத்தில் பரதேசியும் ஒரு வைரக்கல் என்பதில் சந்தேகமில்லை.
 
1.ஓநாயும் ஆட்டுக்குட்டியும்..


சினிமா ஒரு காட்சி ஊடகம் என்பதைத் தன் நேர்த்தியான இயக்கத் திறமையின் மூலம் நிரூபித்த மகேந்திரன், பாலு மகேந்திரா, 'பசி' துரை, மணிரத்னம் போன்ற ஆளுமைகளின் வரிசையில் மிஸ்கினுக்கும் ஓரிடமுண்டு என்பதைத் தெளிவாக உணர்த்திய படைப்பு ஓநாயும் ஆட்டுக்குட்டியும். மற்றவர்களுக்கு எப்படியோ தெரியவில்லை. ஒருவார காலத்திற்கு மேல் என்னுள் ஏதோ இனம்புரியாத தாக்கத்தை ஏற்படுத்திய படைப்பு.

கதை சொன்ன களமா அல்லது காட்சிப்படுத்திய விதமா அல்லது பின்னியெடுத்த பின்னணி இசையா அல்லது கதாபாத்திரப் படைப்பா அல்லது அக்கதாபாத்திரங்களின் ஆர்பாட்டமில்லாத எதார்த்த நடிப்பா.... எதுவென்று சரியாகத் தெரியவில்லை. ஆனால் என்னைப் பொறுத்த வரையில் 2003 ஆம் ஆண்டின் மிகச்சிறந்த படைப்பு  ஓநாயும் ஆட்டுக்குட்டியும்.



Saturday, 19 October 2013

இஞ்சி இடுப்பழகி - ஒரு தீவிர ஆராய்ச்சி...(சும்மா அடிச்சி விடுவோம்..-4 )

ராஜா ராணி படம் போன வாரம்தான் பார்த்தேன். இப்படியே போனா .... போன வருசந்தான் பாத்தேன்னு எழுதுற நிலைமையில கொண்டு போயி விட்டுடும். என்னங்க பன்றது. எழுதனும்னு உட்கார்ந்தா ஏதாவது ஏழரை வந்து உச்சத்தில உட்கார்ந்து ஊஞ்சல் கட்டி ஆடுது.அதை பைசல் பண்ணிட்டு வர்றதுக்குள்ள எழுத வந்தது மறந்துடுது. ஒரே குஷ்டமப்பா...

சரி.. என்னசொல்ல வந்தேன்...?  ஆங்... ராஜா ராணி படம். இதுக்கு தனியாக விமர்சனம் எழுதி கழுவி ஊத்த இது மொக்கைப் படமோ அல்லது காட்சிப்படிமங்களில் படிந்திருக்கும் குறியீடுகளை தோண்டி எடுத்து தூசிதட்ட சிறந்த கலைப்படைப்போ அல்ல...  கொஞ்சம் சுமாரான படம்.. சாதாரண கதை. ஆனால் நயன்தாரா -ஜெய் போர்சன் எக்ஸலண்ட்..!  இரவுக்காட்சி சென்றதால் கடைசி ரயிலைப்பிடிக்க படம் முடிவதற்கு 15 நிமிடத்திற்கு முன்பே புறப்பட்டு விட்டேன். அதை சமீபத்தில்தான் பார்த்தேன். அதுவரை நெஞ்சில் நின்ற ஜெய் கேரக்டர், மம்மியைப் பார்த்த மினிஸ்டர் மண்டை போல 'டொக்' கென்று விழுந்துவிட்டது. வழக்கம் போல சந்தானம்,  'மச்சி..காதல்ன்றது....' என ஆரம்பிச்சி கழுத்தை அறுக்கிறார். இருவருடைய பிளாஸ்பேக் முடியும்போதும், அதைக்கேட்கும் ஆர்யா, நயன்தாராவின் ரியாக்சனை ஒரே மாதிரியாகத்தான் காண்பிக்கவேண்டுமா அட்லி...? இருவரின் முகமும் ஒரே மாதிரியாக குளோசப்பில் கண்களில் நீர்வடிய எதையே வெறித்துப் பார்த்தபடி இருக்கிறது.

ஆனால் பாருங்க... சிலர் இதை மௌனராகம் படத்தோட லேட்டஸ்ட் வெர்சன் என சொல்றாங்க. அதைத்தான் தாங்க முடியல. அதே கதையமைப்பு,காட்சியமைப்பு இருந்தால் அதற்கு பெயர் ஈயடிச்சாம் காப்பி. அதை முதல்ல புரிஞ்சிக்கணும்.  தம்பி அட்லி, மணிரத்னம் மாதிரி வரணும்னு ஆசைப்படுறாரு போல. அதுக்காக அவர் இயக்கிய  படத்தை ரீமேக் பண்ணக்கூடாது தம்பி. அடுத்த தடவை வித்தியாசமா ஏதாவது ட்ரை பண்ணு.

சரி அதைவிடுங்க.. நான் சொல்ல வந்தது வேற விஷயம். இந்தப்படத்தில நயன்தாரா கூடவே இலவச இணைப்பா ஒன்னு சுத்திகிட்டு இருக்கும். துடைப்ப கட்டைக்கு துப்பட்டா போட்ட மாதிரி. 'வணக்கம்ங்க.. என்ட்ர பேரு புவனாங்க..'.னு ஜெய் கிட்ட ஒரு அம்மணி போனில காலாய்க்குமே. அந்த அம்மணி பெயர்  தன்யா பாலகிருஷ்ணா.. இதைச்சொல்லத்தான் இம்புட்டு பில்டப்பானு குறுக்கால கேள்வி கேட்காதிங்க. அப்புறம் சொல்ல வந்தது மறந்துடும்.

சில நாட்களுக்கு முன்னால ஒரு பெங்களூர் அம்மணி சென்னை மக்களை 'பிச்சைக்காரன்' என்கிற ரீதியில்...  ரீதியில் என்ன... நேரடியாவே பேஸ்புக்கில் ஸ்டேடஸ் போட்டுவிட்டு, நம்ம மக்கள் கிட்ட செமத்தியா வாங்கிக் கட்டிக்கிட்டு இனிமே சென்னை பக்கமே வரமாட்டேன்னு சொன்னதே ஞாபகம் இருக்கா...? அப்படியானு ஆச்சர்யகுரியை மூஞ்சில தொங்க விடமா அந்த ஸ்க்ரீன் ஷாட்டை திரும்பவும் போடுறேன் பாருங்க.
இப்போ என்ன  சந்தேகம்னா, இந்தப்பிரச்சனை வருவதற்கு முன்னால அம்மணி 'ஏழாம் அறிவு' படத்தில முக்கியமான ஒரு ரோல்ல நடிச்சது. பிறகு தான் பிரச்சனை வந்து ஓடிப்போனது.. ஓடிப்போன அம்மணியை திரும்பவும் கூட்டிட்டு வந்து வாய்ப்பு கொடுத்து வாழவைத்திருக்கிறார் நம்ம A.R முருகதாஸ்.

அண்ணா முருகதாஸ்ண்ணா...உங்க கிட்ட ஒரே ஒரு கேள்வி,  'ஏழாம் அறிவு' படத்தில இந்த அம்மணியை பக்கத்தில வச்சிக்கிட்டு சூர்யா ஒரு உணர்ச்சிபூர்வமான டயலாக் பேசுவாப்டி..."தமிழனை மலேசியாவில அடிச்சாங்க....இலங்கையில அடிச்சாங்க.... இப்போ தமிழ்நாட்டுக்கே வந்து அடிக்கிறாங்க.... "

நரம்பு புடைக்க  வசனம் எழுதுன உங்களுக்கு தமிழர்களை பெங்களூர்ல அடிச்சத மறந்து விட்டீங்களா.. அதனாலதான் அந்த துடைப்ப கட்டை அம்மணிக்கு மாஞ்சி மாஞ்சி வாய்ப்பு தருகிறீர்களோ... தமிழ் நாட்ல ஹீரோயினுக்குத்தான் பஞ்சம்னு கேரளா, ஆந்திராவிலிருந்து இம்போர்ட் பண்ணுறீங்க... ஒரு தொப்புளுக்காக கோர்ட் படி கூட ஏறுவீங்க.. இது போன்ற துக்கடா கேரக்டருக்குக் கூடவா தமிழ் நாட்டில் நடிகைங்க இல்ல..? 

என்ன செய்யுறது தமிழர்களில் மறதி குணம் அப்படி... அடுத்த படத்தில 'ஜப்பான்ல ஜாக்கிச்சான் அடிச்சாரு.. அமெரிக்காவில மைக்கேல் ஜாக்சன் அடிச்சாரு'... னு வசனம் எழுதுங்க. நாங்களும் கைதட்டி, விசிலடிச்சி என்ஜாய் பண்றோம்.
அடுத்ததும் வில்லங்கமான மேட்டர்தான். கொஞ்சம் பழைய செய்தி. ஆனால் என் பதிவு சம்மந்தப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு பேஸ்புக்கில், நீக்கப்பட்ட அமைச்சர் ஒருவருடன் புன்னகை நடிகையைத் தொடர்புப் படுத்தி கிசோர் கேசாமி போட்ட ஒரு ஸ்டேடஸ் பெரும் சர்ச்சையானது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

கேப்டன் டிவியில் கிசோர் கேசாமியுடன் நடந்த நேர்காணலை சமீபத்தில்தான் பார்த்தேன். 
http://www.youtube.com/watch?v=jztqrHrf3jY
http://www.youtube.com/watch?v=cPYM926Zt5o

அதில் அவரிடம் திரும்பத் திரும்பக் கேட்கப்பட்ட  கேள்வி அந்த நடிகை சம்மந்தப்பட்டதுதான். உலகம் முழுவதும் அது ஒளிப்பரப்பாகும் என்று தெரிந்திருந்தும்,அதில் அவர் பதிலளித்த விதம் பாராட்டுக்குரியது. கடைசிவரை அது தவறான பதிவு என்றோ, சரியாக விசாரிக்காமல் போடப்பட்ட நிலைத்தகவல் என்றோ தெரிவிக்கவில்லை. மாறாக, அந்த நேரத்தில் திருச்சியில் இருந்ததாகவும்,அதை உறுதிப்படுத்திக்கொண்டுதான் அந்தத் தகவலைப் பதிந்தேன் எனவும் தெரிவித்தார். பிரசன்னா தரப்பு காவல்துறையில் புகார் அளிக்க செல்வதாக இருந்தது. இடையில் அன்பான நண்பர் ஒருவரின் பேச்சுவார்த்தையால் புகார் அளிக்கவில்லை. அதனால் என் பதிவையும் நீக்கிவிட்டேன் எனத் தெரிவித்திருந்தார்.  அது தொடர்பாக எனக்கெழுந்த சந்தேகம் இதுதான்..

புகார் ஏன் அளிக்கவில்லை என்று  ஊடகவியலார்கள் அன்று பிரசன்னாவிடம் கேட்டபோது, அப்படி யாரும் தவறாக எழுதவில்லை.. நான் யாரிடமும் வாதிடவில்லை என்று தெரிவித்திருந்தார். ஆனால் கிசோர் அந்த ஸ்டேடசை பதிந்தபிறகு பலரும் அதை நக்கலடித்து எழுத, பிரசன்னா கமெண்ட் போட்ட பிறகுதான் அந்த விவாதம் வேறு திசை நோக்கி செல்ல ஆரம்பித்தது. அதில் நக்கலடித்தவர்கள் அனைவரின் இன்பாக்சுக்கு சென்று பிரசன்னா கண்டனம் தெரிவித்திருக்கிறார். அதை கிஷோர் தனது அடுத்த நிலைத்தகவலில், ஸ்டேடஸ் போட்ட என்னிடம் வாக்குவாதம் செய்யாமல் கமென்ட் போட்ட நண்பர்களின் இன்பாக்ஸில் சென்று மிரட்டுவது சரியல்ல எனத் தெரிவித்திருந்தார். பிரசன்னாவின் அந்த கமெண்டில் அவர் பெயரைச் சொடுக்கினால் அது அவரின் பேஸ்புக் பக்கத்திற்குத்தான் சென்றது. அதில், அவர் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் 'கல்யாண சமையல் சாதம்' படம் பற்றிய அப்டேட்கள் நிறைய இருந்தது. அது அவரது பேஸ்புக் பக்கம்தான்.

ஆனால் அன்று பத்திரிக்கையாளர்கள் கேள்விகேட்டு குடைந்த போது பிரசன்னா கடைசியாக ஒரு போடுபோட்டார் பாருங்க... 'எனக்கு பேஸ்புக்ல அக்கவுண்டே கிடையாது'னு.. இதிலிருந்து என்ன தெரியுது. ..? உங்களுக்கு என்ன தெரியுதோ அதேத்தான் எனக்கும் தெரியுது. இதெல்லாம் பெரிய இடத்து சமாச்சாரம். நாம வேற வேலையைப் பார்ப்போம்.


அடுத்து அகழ்வாராய்ச்சி(!) ஒன்றில் ஈடுபடலாம்னு இருக்கேன்..

‘இஞ்சி இடுப்பழகி... மஞ்சச் சிவப்பழகி...’ -தேவர்மகன் படத்தில் வரும் இந்தப்பாடலைக் கேட்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. இந்தப்பாடலுக்கு மட்டும் இரண்டு தேசிய விருதுகள் அள்ளிக் கொடுத்தாங்க... இருக்கட்டும்.

அது என்ன ‘இஞ்சி இடுப்பழகி... மஞ்சச் சிவப்பழகி...? அதற்கான ஆராய்ச்சியிலத்தான் இறங்கப்போறோம். ஆமா இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்மந்தம்...?

பழைய பாடல்களுக்கும் புதிய பாடல்களுக்கும் விளக்கம் சொல்லியே கின்னஸ் ரெகார்டு வரை போன திண்டுக்கல் லியோனி ஒரு தடவை சொல்லக் கேட்டிருக்கிறேன். 'அது என்ன இஞ்சி இடுப்பழகி... இஞ்சி பாத்திங்கனா ஒன்னு ஆஸ்திரேலியா மேப் மாதிரி இருக்கும். ஒன்னு ஐரோப்பா மேப் மாதிரி இருக்கும். அதுமாதிரியா இடுப்பு இருக்கும்..? ரெண்டாவது வரி மஞ்சச் சிவப்பழகி  போட்டாச்சி. மொத வரில இடுப்பப் பத்தி சொல்லணும். இடுப்புக்கு இ-ல ஆரம்பிக்கிற மாதிரி ஒன்ன போடனும். போட்டுவுடு ஒரு இஞ்சை-னு போட்டுடாங்க' அப்படினு சொல்வாரு. 

தென்கச்சி சொன்னதா எங்கேயோ படித்திருக்கேன். 'இஞ்சியை தினமும் சாப்பிட்டு வந்தால் இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பெல்லாம் நீங்கி சிக்-னு சிறியதா நச்சுனு இருக்கும். அப்படி உள்ளவர்களைத்தான் இஞ்சி இடுப்பழகினு சொல்றாங்க' என புது விளக்கம் கொடுத்திருந்தார்.

ஆனால் அதற்கு வேறு ஒரு விளக்கம் பேஸ்புக்ல கவிஞர் மகுடேசுவரன் என்பவர் கொடுத்திருக்கார்...

இஞ்சுதல்’ என்று தொழிற்பெயர் உண்டாம். இஞ்சுதல் என்றால் ‘சுண்டுதல், இறுகுதல், வற்றுதல்’ என்று அர்த்தம். ‘சர்க்கரைப் பாகை நல்லா இஞ்சுற அளவுக்குக் காய்ச்சனும்’ என்று பேசக் கேட்டுள்ளோம். இஞ்சிய இடுப்புள்ள அழகிதான் இஞ்சி இடுப்பழகி. அடுத்தவரி மஞ்சச் சிவப்பழகி - மஞ்சள் எப்படிச் சிவப்பாகும் ? திரும்பவும் அதே தவறு. மஞ்சள் இல்லை, மஞ்சம். மஞ்சத்தில் நாணத்தால் சிவக்கும் அழகி !

அடேங்கப்பா... இதுக்கு இப்படியொரு விளக்கம் இருக்கிறதா..?

ஆனால் அந்தப் படத்தையும் பாடலையும் கவனித்தீர்கள் என்றால் இன்னொரு வினா எழுப்பத் தோன்றும். பாடலில் முதலில் பெண் குரல்தான் பாடும். " இஞ்சி இடுப்பழகா... மஞ்சச் சிவப்பழகா.." அப்படி என்றால் இது ஆணுக்கான  வர்ணனை தானே.. ஆணின் இடுப்பை அப்படி வர்ணிக்கலாமா..?  என்றால், இதற்கு பாடல் எழுதிய வாலியே விளக்கம் கொடுத்திருக்கிறார். 'இஞ்சி என்பதற்கு சுவர், மதில் என்ற அர்த்தமும் இருக்கிறது. சுவரைப் போன்ற திடமான இடுப்புடையவன் என்கிற பொருள்கொள்ள வேண்டும்' என சொல்லியிருக்கிறார்.

எனக்கிருக்கும் சந்தேகம் அந்த வரியை உண்மையிலேயே வாலிதான் எழுதியிருப்பாரா என்பதே.பொதுவாகவே இசைஞானி நாட்டுப்புற இசைப்பின்னணியில் பாடல் அமைக்கிறார் என்றால் வேறு பாடலாசிரியர் எழுதினாலும் ராஜாவின் பங்கும் அதில் இருக்கும். ஒரு சில நாட்டுப்புற வரிகளை அதில் கோர்த்து விடுவார். 'ஒத்த ரூவாயும் தாறேன்...' பாடலின் முதல் இரண்டு வரிகள் ஏற்கனவே எங்கள் கிராமப்புற பகுதியில் பாடப்பட்ட பாடல்தான்.

அதேப்போல்  “இஞ்சி இடுப்பழகா, எலுமிச்சங்காய் மாரழகா, மஞ்சச் சிவப்பழகா, மறக்க மனம் கூடுதில்லை” என்ற இவ்வரிகள் நெல்லை ,மதுரைப் பகுதிகளில் பாடப்படும் நாட்டுபுறப் பாடல்களில் இடம்பெற்றதாக ஒரு தமிழர் நாட்டுப்பாடல் தொகுப்பில் கூறப்பட்டுள்ளது. அதைத்தான் இளையராஜா பயன்படுத்தியிருக்க வேண்டும்.

இது முதல் வரியிலேயே ரசிகனை கவர்ந்திழுக்க வேண்டும் என்று ராஜா போன்ற மேதைகள் கையாளும் யுத்தி.

இதனால் நான் சொல்லவருவது என்னவென்றால் இன்னும் சில மாதங்களில் பொதுத் தேர்வு எழுதப்போகும் 10,+2 மாணவர்கள் இதைப் படித்து மனப்பாடம் செய்துகொள்ளும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பிறகு தேர்வில் பதில் தெரியாமல் திண்டாடக்கூடாது ஆமா....(உங்கள் வசதிக்காக சிவப்பு மையால் ஹைலைட் பண்ணியிருக்கேன்..)
 
அரசியல் கலாட்டூன்..  :-)

Wednesday, 16 October 2013

ஒரு போராளியை புறந்தள்ளிய தமிழகம்.


தோழர் தியாகு அவர்களின் உண்ணாவிரதம் வேண்டுமென்றே தமிழக அரசாலும் ஊடகங்களாலும் இருட்டடிப்பு செய்யப்படுகிறதோ என்கிற சந்தேகம் வருகிறது.  சமூக வலைத்தளங்களில் தொப்புளுக்கு கொடுத்த முக்கியத்துவம் கூட தோழரின் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்திற்கு கொடுக்கவில்லை. ஒருவேளை தோழர் கடந்து வந்த போராட்ட பாதையை யாரும் சரிவர அறிந்திருக்கவில்லை போல.

தோழர் தியாகு ஒரு உண்மையான போராளி. காவிரி டெல்டா பகுதிகளில் 60-80 களில் இருந்து வந்த பண்ணை அடிமைமுறையை ஒழிக்க 'அழித்தொழிப்பு ' என்கிற கொள்கை வடிவத்தைக் கட்டமைத்து புரட்சியில் ஈடுபட்டவர். இவரைப்பற்றி அறிந்திராத திருவாரூர்-நாகை பகுதி விவசாய தொழிலாளிகள் யாருமே இருக்க முடியாது. அழித்தொழிப்பு என்பது பயிர்களை அழிப்பது அல்ல. பண்ணையார்களை அழிப்பது. அவர்களைத் தீர்த்துக் கட்டுவது. அது ஒன்றே நிரந்தரத் தீர்வு என்று அன்று ஆயுதத்தை கையிலேந்தியவர். திருவாரூர் பகுதிகளில் ' தோழர் தியாகு பேசுகிறார்' என்கிற சுவரொட்டிகளை பலமுறை பார்த்திருக்கிறேன்.ஆனால் அவர் பேச்சைக் கேட்கும் வாய்ப்பு ஒருமுறை கூட கிட்டவில்லை.அன்றையக் காலகட்டத்தில் திருவாருரை மையமாகக் கொண்டுதான் நிறையப் போராட்டங்கள் நடந்திருக்கிறது.

இந்த நிஜப் போராளியைப் பற்றி தெரியாதவர்கள் கீற்று தளத்தில் அவரின் நேர்காணல் வந்திருக்கிறது. படித்துப் பாருங்கள். இந்த உலகம் தற்போது கொண்டாடும் மற்ற எந்த போராளிக்கும் இவர் சளைத்தவரல்ல என்பதை உணரலாம். இவர் அதில் குறிப்பிடும் ஏ.எம்.கே. என்பது தோழர் ஏ.எம்.கோபு. சிலமாதங்கள் முன்புதான் அவர் காலமானார். என் மூத்த சகோதரரின் திருமணத்திற்கு வந்திருந்து வாழ்த்தினார். அவரும் எங்கள் பகுதி மக்களுக்காக தன் உயிரையே துச்சமெனக் கருதி போராடிய போராளி.

மார்க்சிய சித்தாந்தத்தில் ஊறித்திளைத்த இந்த பொதுவுடமைப் போராளி தற்போது இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கெடுத்துக் கொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்தி “வெற்றி அல்லது வீரச்சாவு” எனும் முழக்கத்துடன் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருக்கிறார். இவரது அனைத்து கோரிக்கைகளையும் மத்திய அரசு எற்றுக்கொள்ளவில்லை என்றாலும் காமல்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை என்கிற பிரதமரில் நம்பிக்கை வார்த்தை, இவரின் உண்ணாவிரதப் போராட்டத்தினை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது.

முதிர்ந்த வயதிலும் இவரது போராட்ட குணத்தைக் கண்டு தமிழகம் முழுவதும் ஏற்பட்ட மாபெரும் எழுச்சி(!?)யினால் இனி போராடி என்ன பயன் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் போல...

தலையில் வெள்ளை நிறக் குல்லாவுடன் காந்தியவாதி என்கிற அடையாளத்துடன் உண்ணாவிரதப்  போராட்டம் நடத்தினால் திரையுலகம்,ஊடகம், அரசியல்வாதிகள் என பலர் வந்து ஆதரவு தெரிவித்துவிட்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு செல்வார்கள். பாவம் இவர்தான் அடித்தள மக்களுக்காக தன் வாழ்க்கையை மொத்தமாக அர்ப்பணித்தவராச்சே... யார் கண்டுகொள்வார்கள்..?
அடுத்து ஒரு சுயபுராணம்... :-)

இது நேற்றைய புதுச்சேரி பதிப்பு, தினத்தந்தியில் வந்த செய்தி.  இவர் எனது மூத்த சகோதரர்.  இப்படி சொல்வதற்கு நான் ஒன்றும் சாதிக்கவில்லை. நான் அவரது இளைய தம்பி. பத்து வருடத்திற்கு முன்பு பாண்டிச்சேரியில் சிறிய நிறுவனமாக தொடங்கியவர், தன் அயராத உழைப்பினாலும் சொந்த முயற்சியாலும் இன்று மிகப்பெரிய தொழிலதிபராக உயர்ந்து நிற்கிறார்.


இவர் கடந்து வந்த பாதை, சந்தித்த நெருக்கடிகள், எதிர்கொண்ட சவால்கள் என எந்த பில்டப்பும் கொடுக்க விரும்பவில்லை... சும்மா சந்தோசத்தை பகிர்ந்துகிட்டேன் அவ்வளவுதான். தொழில் ரீதியாக உதவியோ தகவலோ வேண்டுமென்றால் தொடர்புகொள்ளலாம்.

இவரின் வெப்சைட்.  http://www.metalandtech.com

அண்ணாச்சிக்கு கொஞ்சம் கலைத்துறையிலும் ஆர்வம் உண்டு... கடந்த வருடம் ஒரு குறும்படத்தை இயக்கி கலைஞர் டிவியின் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் பங்கெடுத்துள்ளார்..




Friday, 13 September 2013

சீமானுக்கு வாழ்த்து சொல்வதைவிட வேறு வேலை என்ன நமக்கு...?



      ' தேசிய துணைத்தலைவர் ' என்று எங்களைப்போன்ற தம்பிமார்களால் அன்போடு அழைக்கப்படுகிற செந்தமிழன் அண்ணன் சீமான் அவர்களின் திருமணம் சென்ற வாரம் இனிதே நடந்தேறியது.அண்ணன் சீமான் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

இரு மனங்கள் சங்கமிக்கும் ஒரு திருமண நிகழ்வு என்று கூட கருதாமல் இணையத்தில் உலாவும் சில உடன்பிறப்புக்கள் இதை கிண்டல் செய்து தங்களின் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இந்தா ஒரு உடன்பிறப்பு வந்திருக்காரு பாருங்க...ஒரு நிமிஷம் அப்படியே இருங்க. என்னைய்யா வேணும் உங்களுக்கு...?

அண்ணன் சீமான் அப்படியென்ன தவறிழைத்துவிட்டார் ..? தன் மனதுக்குப் பிடித்த பெண்ணை திருமணம் செய்வது ஒரு குற்றமா....?

அப்படியென்றால்,ஒரு ஈழ அகதிக்குத்தான் வாழ்வு கொடுப்பேன் என  வீரமாக பேசினாரே..என்ன ஆயிற்று?  இதைத்தானே கேட்க வாறீங்க... என்னய்யா விவரம் புரியாத ஆட்களா இருக்கீங்க. அப்போதிருந்த பிரச்சனை உங்களுக்கு தெரியுமா..?

விஜயலட்சுமினு ஒரு பொண்ணு,"என்னை திருமணம் செய்யப்போவதாகக் கூறி இரண்டு வருடங்கள் 'பழகிவிட்டு' இப்போ முடியாதுனு சொல்றாரு" என அண்ணன் மீது காவல் நிலையத்தில புகார் செய்ததே ஞாபகமிருக்கா?. அதைப்பற்றிக் கூட அண்ணனிடம் பலர் கேட்டபோது," த..த..ப..அது..கஷ்டப்படுற பொண்ணுனு கொஞ்சம் ஹெல்ப் பண்ணினேன் " என சமாளித்தாரே. அந்த நேரத்தில தம்பிமார்களின் மனதில் ஏற்பட்ட குழப்பத்தைப் போக்க வேற வழியில்லாம அப்படி சொல்ல வேண்டியதாச்சு.

அதற்காக அதையே பிடித்து தொங்கினால் எப்படிப்பா...?  நாங்களும் கல்யாணம் பண்ணி லைஃ ப்பில் செட்டில் ஆகவேண்டாமா?. அதுமட்டுமில்ல. அப்போ அம்மா ஆட்சிவேற.கலைஞர் அய்யாவா இருந்தா கவிப்பேரரசுடன் சென்று காரியத்தை கச்சிதமா முடிச்சிருக்கலாம். அம்மாவை கூல் பண்ண நாங்க பட்ட பாடு இருக்கே..! மனசாட்சியை கழட்டி தூர எறிந்துவிட்டு அம்மாவுக்கு "வீரமங்கை வேலுநாச்சியார்"  பட்டம் கொடுத்து, 'புரட்சித் தலைவி என ஏன் அழைக்கிறோம்' என்பதற்கு கோனார் நோட்ஸ் எல்லாம் போட வேண்டிய நிலைமையாச்சி....

சரி,அப்போ விஜயலட்சுமி சொன்னதெல்லாம் உண்மையானு கேட்க வாறீங்க. திரும்பவும் உங்களுக்கு விவரம் பத்தல. இதுமட்டுமல்ல,சிங்கள பொண்ணு பூஜாவை எப்படி ஹீரோயினானு கேட்டாலும் நாங்க ஒரே பதில்தான் வச்சிருக்கோம்.அப்போ அண்ணன் டைரக்டருங்க.. இப்போ எழுச்சித் தமிழன்ங்க. " வீழ்ந்து விடாத வீரம்....  மண்டியிடாத மானம் ".. இதெல்லாம் கேள்விபட்டதில்ல நீங்க..

அதற்காக,பிரபாகரனை தூக்கிலிட வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் மாண்புமிகு அம்மையார் அவர்கள் தீர்மானம் நிறைவேற்றிய பொழுது சட்டமன்ற சபாநாயகராக வீற்றிருந்த 'சொல்லின் செல்வர்' காளிமுத்து அவர்களின் புதல்வியை மணப்பது சரியா என கேட்க வாறீங்க..?.

உங்களுக்கு தெரியாது, தமிழ் இனத்திற்கு காளிமுத்து அவர்கள் என்னென்ன செய்திருக்கிறார் என்று. ஆரம்பம் காலந்தொட்டே கட்சியே மாறாமல்(!!!) கண்ணியம் காத்தவர் காளிமுத்து. "கருவாடு மீனாகாது... கறந்தபால் மடி ஏறாது...கழுவிவச்ச பாத்திரம் அழுக்காகாது.." போன்ற உவமைகளை தமிழ் கூறும் நல்லுலகுக்கு அளித்தவர். அதுமட்டுமல்ல... எம்ஜியார், ஜெயலலிதாவுக்கு தெரியாமலே ரகசியமாக புலிகளுக்கு உதவியுள்ளார் அன்னார் காளிமுத்து.( எவன்டா அவன் வண்டலூர் ஜூ-விலானு கேக்குறது...)


போதும்.. போதும்... அடுத்தது என்ன கேட்க வரீங்கன்னு புரியுது. கடந்த தேர்தலில், கலைஞர் ஆட்சியை அகற்ற எவ்வித அழைப்புமில்லாமல் அம்மாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தது எங்க அண்ணனும் அணிலும் தான். "இலை மலர்ந்தால் ஈழம் மலரும்" என ஊர் ஊராக போயி ஓட்டுப்பிச்சை கேட்டதும் நாங்கள்தான்.அப்படிப்பட்ட எங்கள் அண்ணனின் கல்யாணத்துக்கு அதிமுகவிலிருந்து யாருமே வரவில்லைனு கேக்குறீங்க.. அந்த பீலிங் எங்களுக்கும் லைட்டா இருக்கு. அதானால என்ன, சசிகலாவின் மனைவி நடராசன் வந்தாரே.. அண்ணன் கூட டக்குனு காலில விழுந்துட்டாரே..

சரி வேறென்ன...? பெரியாரை தமிழினத் துரோகி என சொல்லிட்டு அவர் படத்தை கல்யாணப் பந்தலில் எப்படி வச்சீங்க... ? இந்த சந்தேகம் வந்திருக்குமே... அதான் எங்க அண்ணன் தெளிவா பேட்டி கொடுத்திட்டாரேப்பா. 'நான் கட்சி ஆரம்பித்ததே முதல்வர் ஆவதற்குத்தான் '. முதல்வர் ஆக வேண்டுமென்றால் கொள்கையிலேயும், நிலைப்பாட்டிலேயும் கொஞ்சம் நெளிவு சுளிவு வேணும்யா... இது என்ன... இன்னும் போகப் போக பார்க்கத்தான போறீங்க..


ஓஹோ...  கல்யாணம் முடிந்த உடனையே தேனிலவுக்கு போகாம,மணம் முடித்த கையோடு நேரா இடிந்தகரை போனாங்களேனு சீன் போடுறீங்களே... தேனிலவு புதுமணத் தம்பதிகளுக்குத்தானே... உங்க அண்ணன் தான் ஒரு வருசமா கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்திக்கிட்டு இருக்கிறாரேனு கேட்க வரீங்க...? அதான..?

" இல்ல..."

"பின்ன..எதுக்குத்தான்யா வந்த ?"

"அரசியல் ரீதியாக ஆயிரம் முரண்பாடுகள் இருந்தாலும் தமிழர் பண்பாடுனு ஒன்னு இருக்கு. அதன் அடிப்படையில உங்கள் அண்ணனுக்கு வாழ்த்து சொல்லிட்டு போவலாம்னு வந்தேன்."

"சீமானுக்கு இனிய திருமண நல்வாழ்த்துக்கள்."




Wednesday, 7 August 2013

சேரனை புரிந்துகொள்ளுங்கள்...!



இயக்குனர் சேரன் மகளின் காதல் சம்மந்தமாக எல்லோரும் கருத்து கந்தசாமியாக மாறி ஆளுக்காளு ஒரு கருத்தை சொல்லிகிட்டே இருக்காங்க.. அப்படினா நம்ம பங்குக்கு ஏதாவது சொல்லித்தானே ஆகணும்.. இல்லனா சமூக அக்கரையற்றவன்(!?) என்ற பழிச்சொல்லை இந்த உலகம் நம்மீது சுமத்திவிடும் அல்லவா....!

இணையத்தில் இருவேறுவிதமான விமர்சனங்கள எழுப்பப்படுகின்றன. ஒரு சாரார் காதலுக்கு ஆதரவாகவும் மற்றவர்கள் பிள்ளையை பெற்ற அப்பா ஸ்தானத்திலிருந்து கருத்துரைக்கின்றனர்.

எனக்கு சேரன் என்கிற தனிப்பட்ட மனிதர் மீது நிறைய விமர்சனங்கள் உண்டு.தன்னை ஒரு புரட்சி இயக்குனராக காதலுக்கு தனி இலக்கணம் வகுத்த படைப்பாளனாக சமூகத்தில் காட்டிக் கொள்ளும் சேரன்,தன் மகளின் காதல் பிரச்சனைக்காக 'என்னைப் புரிந்துகொள்ளுங்கள்' என தொலைக்காட்சி யில் அழுவது எவ்வளவு அபத்தமாக உள்ளது..! அதைக் கண்டு எத்தனை திரைப்பிரமுகர்கள் சேரனுக்கு ஆதரவாக கிளம்பியுள்ளனர்.!.இணையத்தில் கூட அவர் மகளின் காதலனைப்பற்றி தவறான செய்திகள் வந்தவண்ணம் இருக்கிறது. சரி..சேரனை புரிந்து கொள்ளும் அளவுக்கு அவ்வளவு பெரிய உத்தமனா அவர்...? 

15 வருடத்திற்கு முன் திருச்சியில் நிஷா என்கிற இளம்பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட சம்பவத்தில், போலிஸ் விசாரணையில் அந்தப்பெண் வெளியிட்ட இரண்டு பெயர்கள் இயக்குனர் சேரன்,தங்கர் பச்சான். அந்தப்பெண் சொன்ன அதே நேரத்தில் இவர்கள் திருச்சியில் இருந்தது உண்மை என்றாலும் பிறகு எப்படியோ சரி கட்டப்பட்டு மூடி மறைக்கப்பட்டது. அந்தப் பெண்ணின் தந்தை ஐந்து வருடம் கோர்ட்டுக்கு நடையாக நடந்து கடைசியில் வழக்கு ஒன்றுமில்லாமல் போனது. அந்தத் தகப்பனை யார் புரிந்து கொண்டார்கள்...?

ஒருமுறை எழுத்தாளர் பாலகுமாரன்,உதவி இயக்குனர்களின் நிலையைப்பற்றி பத்திரிகையில் ஏதோ சொல்லி வைக்க, நிறைய உதவி இயக்குனர்களைத் திரட்டிக்கொண்டு பாலகுமாரனின் வீட்டின் முன்பு கோசம் போட்டு பொங்கு பொங்குனு பொங்கினார். இதை எதிர்பார்க்காத பாலகுமாரன் எல்லோரின் முன்பும் கைகூப்பி மன்னிப்பு கேட்டுக்கொண்டது எல்லா பத்திரிக்கையிலும் வந்ததே... அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொண்டாரா சேரன்...?

ஒரு நிகழ்ச்சியில் பத்திரிக்கையாளர்களை 'பாடுகளா' என திட்டியவர், இன்று டிவியில் கதறி மக்களிடம் சிம்பதி தேடுகிறார். இருதரப்பிலும் ரகசியமாக பேசித் தீர்க்க வேண்டிய பிரச்னையை இப்படி தமிழகம் முழுவதும் பேச வைத்திருப்பது  'ஒரு வெளம்பரம்....' போலல்லவா தெரிகிறது.

காதலை வெறுக்கும் கதாநாயகியின் தந்தையை வில்லனாகவே நம் தமிழ் சினிமா தொடர்ந்து சித்தரித்து வந்திருக்கிறது.அதற்காக ரவுடியிசம்,கொலை மிரட்டல் என்கிற எந்த எல்லைக்கும் அவர்கள் போவார்கள். அதை அப்படியே ரியல் ஃலைப்பில் செய்துவிட்டு என்னைப் புரிந்துகொள்ளுங்கள் என தொலைக்காட்சியில் அழுதால் நாமும் கண்கலங்கி உருகிவிடுகிறோம்... இந்த சமூகத்தில் சினிமாகாரனின் அழுகைக்குத்தான் எவ்வளவு வலிமை...!!

அதேநேரத்தில் அவரின் தனிப்பட்ட வாழ்க்கையைத் தவிர்த்து,ஒரு சாராசரி தந்தையாக அவர் பக்கம் சில நியாயங்கள் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதை டீலிங் செய்த விதம்தான் தவறு.மகளைப் பெற்ற அப்பாக்களுக்குத்தான் தெரியும் அதன் வலி.இல்லையென்று சொல்லவில்லை.திரையில் காதலின் புனிதத்தைப் பற்றி பாடமெடுத்தவர் தன் சொந்த வாழ்க்கையில் எந்த காதலையும் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்கிற கட்டாயம் கிடையாதுதான். ஆனால் 'முன்பு நல்லவனா தெரிந்தான். இப்ப கெட்டவனா தெரியிறான்' என்கிற வழக்கமான விளக்கத்தை இவரும் கொடுக்கும்போதுதான் கொஞ்சம் சறுக்குகிறார்.

சேரன் அவர்களே.. உங்கள் ஸ்தானத்தில் வைத்துப் பார்த்தால் எங்களுக்கும் அதே படபடப்புதான் வருகிறது. ஆனால் 20 வயது என்பது நல்ல பக்குவப்பட்ட நிலை.மூன்று வருடம் காதலித்தவர் அந்தப் பையனின் செயல்பாடுகளை நன்கு அறிந்திருப்பார். உங்கள் மகள் மீது நம்பிக்கை வையுங்கள். இவ்வளவு கடந்த பின்னும் இந்தக் காதலை பிரித்து வைப்பது சமூகத்தில் உங்கள்மீது தவறான பிம்பத்தை உருவாக்குவதுடன் அது கடைசி வரை உங்கள் ஆழ்மனதை  உறுத்திக்கொண்டே இருக்கும். "இந்தியா காதலின் பூமி தான்..காதலர் பூமியல்ல.!" என்று கவிப்பேரரசு சொன்னதை மீண்டும் நிருபித்துவிடாதீர்கள். 

ஓகே..கருத்து முடிந்தது.