ஜூன் 4 -1994 ஆம் ஆண்டு.திருவாரூர் எத்திராஜ் திருமண மண்டபம்.எங்கள் இல்லத்திருமணவிழா.என் மூத்த சகோதரர் அவர்களின் திருமணவிழாவை தலைமையேற்று நடத்த வந்திருந்தார் அந்த எளிமையான மாமனிதர்.அது வரையில் அவரைப்பற்றியும் அவரின் அரசியல் பின்புலம் பற்றியும் அறிந்ததில்லை. ஏனென்றால் அவர் எம்.எல் ஏ.,எம்.பி.,அமைச்சர் என்ற எந்த சொகுசான பதவியிலும் இருந்ததில்லை.அதற்கு அவர் ஆசைப்பட்டதுமில்லை.
1942 ஆம் வருடம் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதையடுத்து மகாத்மா காந்தி,ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் நாடு முழுவதும் கைது செய்யப்பட,இந்தியா முழுவதிலும் கிளர்ச்சியும் போராட்டங்களும் வெடித்தது.தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூரிலுள்ள அந்த பள்ளியிலும் முழக்கங்கள் எழுப்பி ஊர்வலமாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.அதை முன்னின்று தலைமையேற்று நடத்தியதற்காக கோவிந்தராஜன் என்ற மாணவனை போலீஸ் கைது செய்தது.அப்போது அந்த மாணவனுக்கு வயது 12.அந்த சிறுவன்தான் பின்னாளில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தன் 70 வருட வாழ்க்கையை அர்பணித்த மூத்த கம்யூனிஸ்ட் தோழரான ஏ.எம். கோபு.
திருவாரூர்,நாகை மாவட்டங்கள் உள்ளிட்ட அப்போதைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட பகுதிகளில் பண்ணையார்களும்,நிலச்சுவான்தார்களும் கோலேச்சியிருந்த காலகட்டம்.பண்ணையடிமைமுறை வழக்கிலிருந்த நேரம்.அவர்களை எதிர்ப்பது என்பது மரணத்திற்கு மனு போட்டுவிட்டு செய்கின்ற வேலை.சில பகுதிகளில் விவசாயப் பண்ணையார்களின் அடிமைகளாக இருக்கும் தாழ்த்தப்பட்ட, ஏழை விவசாயிகளின் வீடுகளில் திருமணம் நடந்தால் மணமகளுக்கு முதல் இரவு பண்ணையாருடன்தான்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்களுக்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்களை ஒன்றுதிரட்டி போராடி தாழ்த்தப்பட்டவர்களின் அடிமைச்சங்கிலியை சுக்கு நூறாக உடைத்தெறிந்து அவர்கள் இன்று சுயமரியாதையோடு வாழ்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள்,அன்று உயிரை பணயம் வைத்து போராடிய கம்யூனிஸ்டுகள்தான் என்பதை அந்தப்பகுதி மக்கள் நன்கு அறிவார்கள்.அதை முன்னின்று நடத்திய தலைவர்களில் தோழர் ஏ.எம்.கோபுவும் ஒருவர்.
பண்ணையாருக்கு எதிரான தாக்குதல் சம்பவங்கள்,போராட்டங்கள்,ஒரு சில கொலைக்குற்றங்கள் என்று போலிஸ் கட்டம் கட்டி தேட ஆரம்பிக்க தலைமறைவு வாழ்க்கை நடத்தினார் தோழர் ஏ.எம்.கோபு. இந்நிலையில் போலீசாருக்கு துப்பு கிடைத்து,திருவாரூரில் ஒரு வீட்டுத் திண்ணையில் இரவில் படுத்திருந்த கோபுவை சுற்றி வளைத்து அந்த இடத்திலே 'என்கவுண்டர்' நடத்தியது போலீஸ்.கோபுவின் இறப்பை உடனடியாக அறிவிக்கக் கூடாது என்று காலையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதுதான் அவர் உடலில் உயிர் இழையோடிக் கொண்டிருப்பது தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து சிகிச்சை,கைது,வழக்கு,விசாரணை,சிறை.திருச்சி மத்திய சிறையிலும் சேலம் மத்திய சிறையிலும் 4 ஆண்டுகள்.சிறைத் தண்டனை முடிந்து 1954-ல் வெளியே வந்தபோது கோபுவின் வயது 24..!!!. அவரின் வலது கையில் பாய்ந்த துப்பாக்கி ரவைகள் இன்னமும் அகற்றப்படாமல்தான் இருக்கின்றன.
1968-ல் திருவாருக்கு அருகிலுள்ள கீழ வெண்மணியில் மேல்சாதி பண்ணையார்களால் சம்பள உயர்வு கேட்ட கூலித்தொழிலாளிகளின் குடும்பங்கள் உயிருடன் வைத்து எரித்து கொல்லப்பட்டபோது, கொளுத்தப் பட்டவர்களின் எண்ணிக்கை,43 அல்ல,44 என்பதை உறுதி செய்யக் காரணமாக இருந்தவர் கோபுதான்.கருகிப் போய்க் கிடந்த ஒரு பெண்,ஒரு சிறுவனையும் அணைத்துக் கொண்டு இறந்துபோயிருந்ததைப் பார்த்துச் சொன்னவர் இவர்தான்.
தனது இறுதி மூச்சுவரை ஒரு கண்ணியமிக்க தன்மானமுள்ள கம்யூனிஸ்டாகவே வாழ்ந்திருக்கிறார் தோழர் ஏ.எம்.கோபு அவர்கள்.
எந்த சொகுசான அரசியல் பதவியையும் விரும்பாதவர்.கடைசி காலம் வரை ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத் தலைவராக இருந்து தொழிலாளர் வர்க்கத்துக்காக போராடியவர்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கவுன்சில் உறுப்பினராகவும் இருந்தார்.அடக்குமுறைக்கு அஞ்சாமல் ஆளுங்கட்சியினருக்கு அடிவருடாமல் தன் கொள்கை சித்தாத்தங்களில் கொஞ்சம் கூட அடி பிறழாமல் வாழ்ந்த பொதுவுடமைக் கட்சியின் ஒப்பற்ற தலைவர்களில் தோழர் ஏ.எம்.கோபுவும் ஒருவர்.
தற்போது அரசியல் கோமாளிகளின் கூடாரமாகவும்,ரவுடிகளின் சத்திரமாகவும் மாறிவிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தன்மானமிக்க ஆரம்பகால தூண்களில் ஒருவரான தோழர் ஏ.எம்.கோபுவின் மறைவு அந்தக்கட்சியின் தற்போதைய ஆளுங்கட்சி ஜால்ராக்களுக்கு பெரிய இழப்பு இல்லையென்றாலும்,அவரின் போராட்ட களமான தஞ்சை டெல்டா பகுதியிலுள்ள விவசாயிகளுக்கு ஒரு தாங்க முடியாத பேரிழப்பு..
துயரங்களுடன்....
மணிமாறன்.
-----------------------------------------------------------(((((((((((((((()))))))))))))))))))))---------------------------------------
இவரை நல்ல அரசியல்வாதி என்று சொல்வதை விட நல்ல மனிதர் என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன்!
ReplyDeleteஇப்போதைய கம்யூனிஸ்ட் பற்றி நினைத்தாலே எனக்கு கோபம் தான் வருகிறது!
இவரின் கடந்த கால வரலாறு நிறைய பேருக்கு தெரியாது பாஸ்... நினைத்திருந்தால் எம்.எல்.ஏ,எம்.பி ஆகியிருக்கலாம்.எந்த பதவிக்கும் ஆசைப்படாதவர்...
Deletenalla thakaval!
ReplyDeletenantri!
thanks for ur comment MR.Seeni
Deleteதோழர் கோப்பு அவர்களுக்கு ஒரு காந்தி பக்தனின் "laal salaam .
ReplyDeleteமிக்க நன்றி...
DeleteRED SALUTE TO GREAT LEADER....oru unmayana thalaivanai thantha intha pathivukku spl thanks.
ReplyDeleteTHANKS FOR YOUR VALUABLE COMMENT SATHISH...
Deleteநல்ல தகவலை இணையத்தளத்தில் சொல்லியிருக்கிறீர்கள்.. நன்றி.. நான் ராஜ்குமார் தாங்கள் பெருமைப்படுத்திய தோழர்.ஏ.எம்.கோபு ஐயா ஏற்றுகொண்ட கொள்கையையும், அவர் ஏற்றுக்கொண்ட கட்சியைச்சார்ந்தவன். தங்கள் சகோதரர் திருமணம் வரை தோழர்.ஏ.எம்.கோபு ஐயா அவர்களை பற்றி உங்களுக்கு தெரியாது. அவரின் அறிமுகத்திற்கு பின்பு அவரை ஆராய்ந்திருக்கிறீர்கள் அவரைத்தெரிந்துகொண்டுள்ளீர்கள். கம்யூனிச இயக்கத்தைச் சார்ந்த தலைவர்கள் வரலாறுகளை அறியுங்கள் அவர்கள் இந்நாட்டின் தியாகிகள் என்று உணர்வீர்கள். கம்யூனிஸ்ட்டுகளை ஆளுங்கட்சி ஜால்ராக்கள் என்ற தங்களுடைய கருத்தை உறுதியோடு கண்டிக்கிறேன். எங்களுக்கு அவருடைய இழப்பு ஈடற்றது. தோழர்.ஏ.எம்.கோபு அவர்களை தெரிந்து விமர்சித்துள்ளீர்கள். ஆனால் அவர் சார்ந்த கட்சியை நீங்கள் அறியவில்லை, அறிய முற்படுங்கள். மாநில செயலாளர் தோழர்.தா.பாண்டியன் அவர்கள் வரலாறு படியுங்கள், தோழர்.நல்லக்கண்ணு அவர்கள் வரலாறு படியுங்கள் அக்கட்சியின் தலைவர்கள் அனைவரும் மக்கள் போராளிகள் , தியாகிகள் என்றுணர்வீர்கள்..
ReplyDeleteதங்களின் கருத்துக்கு மிக்க நன்றி... தோழர் கோபு அவர்கள் எங்கள் இல்லத்திருமண நிகழ்வுக்கு வந்த போது எனக்கு 17 வயது. அவரைப்பற்றி அவ்வளவாக அறிந்திருக்கவில்லை. ஆனால் வலது இடது கம்யுனிஸ்டுகளின் வேர்கள் ஆழமாக ஊடுருவியுள்ள காவிரி டெல்டா பகுதியைச் சேர்ந்தவன் மட்டுமல்ல அந்தக் கட்ச்யைச் சேர்ந்தவர்களுடன் நெருங்கிய நட்பு வைத்திருந்தவன் என்கிற முறையில் என் ஆதங்கத்தை சொல்லியிருந்தேன்.. கம்யுனிஸ்டுகளுக்கென்று ஒரு மரியாதை தஞ்சை -திருவாரூர் பகுதிகளில் முன்பிருந்தது. ஆனால் அது நல்லகண்ணு என்கிற நல்ல மனுசனோடு முடிந்துவிட்டது. கட்சியின் கொள்கைகளுக்கு எப்போதும் முரன்பட்டிருக்கிற தா.ப. வை என்று தலைவராக பொறுப்பேற்றாரோ அன்று அது தன்மானம் இழந்த கட்சியாக மாறிப்போனது..
Deleteதா.ப. அவர்கள் எப்போதுமே ஜெயா ஆதரவு நிலைபாடுடையவர்..அதற்காக கட்சியை ஜெயாவிடம் அடகு வைத்தது போல் நடந்துகொள்வது இப்படியொரு புரட்சிகர பின்புலமுள்ள ஒரு கட்சிக்கு அழகா... தா.ப பொறுப்பேற்றப் பிறகு தஞ்சை பகுதிகளில் எத்தனைப் போராட்டம் நடத்தினார்கள் என சொல்ல முடியுமா...
பக்கா ரவுடிபோல் செயல்படும் தளி எம் எல் ஏ மீது இன்னும் கட்சித்தலைமை நடவடிக்கை எடுக்காதது ஏன்..? கொலைக்குற்றம் சாட்டப்பட்டு சிறையிலிருந்து சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்த அவர் பணத்தில்தான் கட்சியே நடப்பதாக குற்றச்சாட்டு பலமாக உள்ளதே...? அவரைப்பற்றி நான் கூட ஒரு பதிவிட்டிருந்தேன்... முடிந்தால் படித்துப் பாருங்கள்.