Saturday 14 November 2015

வேதாளம்...சும்மா தெறிக்க விட்ட தல....!



டத்தில் கதையென்று பெரிதாக எதுவும் இல்லை. சொல்லப்போனால் ஏற்கனவே பார்த்துப் பார்த்து புளித்துப் போன பாட்சா சாயலில் உள்ள கதைதான். அரைத்த மாவையே திரும்பவும் அரைத்திருக்கிறார்கள். காமெடி சுத்த மோசம். பாடல்கள் அவ்வளவாக ஈர்க்கவில்லை. புதுமைகள் எதுவும் இல்லை. புதிதாக எதுவும் சொல்லவுமில்லை.

ஆனால்......

இரண்டு மணிநேரம் தெறிக்க விட்டிருக்கிறார்கள்...  ரசிகர்களை தெளிய வைத்து தெளிய வைத்து சூடேற்றி அடித்திருக்கிறார்கள். தியேட்டரையே திருவிழாக்கோலமாக்கியிருக்கிறார்கள்.

அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட ஊக்க மருந்தின் பெயர் அஜித்குமார்.

என்னா ஸ்க்ரீன் பிரஸென்ஸ் ..! இந்த வார்த்தையை கடந்த ஐந்து அஜித் படங்களின் விமர்சனங்களில் அடித்து அடித்து எனது விசைப் பலகையே தேய்ந்துவிட்டது. சூப்பர் ஸ்டாருக்குப் பிறகு ஒத்த ஆளாக மொத்தப் படத்தையும் தூக்கி சுமக்கும் சக்திமான் திறன் அஜித்துக்குத்தான் இருக்கிறது.

அந்த 'பல்க்'கான உடம்பை வைத்து அஜித் பறந்து பறந்து அடிக்கவில்லை. ஆனால் சண்டைக் காட்சியில் பொறி பறக்கிறது. கோபப்படும் பொழுது கண்களில் தெரியும் தீ எரிமலையைவிட உக்கிரமாக இருக்கிறது. அந்த இண்டர்வெல் பிளாக்குக்கு முன்பு வரும் சண்டைக் காட்சிக்காக மட்டும் ஸ்டண்ட் சில்வாவின் கையில் அஜித் தங்கக்காப்பு மாட்ட வேண்டும்.

பெரிய எதிர்பார்ப்பில் போகவில்லை. சிவா- அஜித் - ஸ்டண்ட் சில்வா கூட்டணி எப்படி இருக்கும் என்பதை ஏற்கனவே ரத கஜ துரக பதாதிகள் எதிர்ப்பினும் அதகளம் புரிந்து நிரூபித்து விட்டார்கள். நிச்சயம் அறிவுஜீவித் தனமான கதையாகவோ அல்லது உலக சினிமாவாகவோ இருக்கப்போவதில்லை. நூறு சதவிகித மசாலா என்டர்டெயின்மென்டாக இருக்கும் என நினைத்துதான் போயிருந்தேன். அதை முழுமையாகப் பூர்த்தி செய்திருக்கிறது வேதாளம்.

கரணம் தப்பினாலும் இன்னொரு ஜனா, ரெட் படமாக வேதாளம் வந்திருக்கும். தனிநபர் துதியை கொஞ்சம் ஓரங்கட்டிவிட்டு திரைக்கதை என்கிற மந்திரக்கோலை கையிலெடுத்து மிகத் தந்திரமாக சுழற்றி புகுந்து விளையாடியிருக்கார் இயக்குனர் சிவா. அஜித் ரசிகர்களின் நாடித்துடிப்பை மைக்ரான் அளவு கூட தவறவிடாமல் உள்வாங்கி அவர்களின் யானைப் பசிக்கு சோளக் கொல்லையையே தீனியாக்கியிருக்கிறார்.

தமிழ் சினிமா ஹீரோயிசத்தை பாட்சாவுக்கு முன், பாட்சாவுக்கு பின் என வகைப்படுத்தலாம். பாட்சாவுக்கு முன்பு பெரும்பாலும் வில்லன்கள்தான் ரவுடி. அவர்களை அடக்கி வெல்லும் இடத்தில்தான் தமிழ் சினிமா ஹீரோக்கள் இருப்பார்கள். பாட்சாவுக்குப் பின்புதான் கல்லுக்குள் ஈரம் போல ரவுடிக்குள்ளும் ஒரு பாசமான மென்மையான ஃபிளாஷ்பேக் இருக்கும் என்கிற புது ட்ரென்ட் உருவானது.  அந்த வகைமைக்குள் வேதாளமும், ஏய் படமும் வருமே ஒழிய, எந்தவிதத்திலும் வேதாளம் பாட்சா , ஏய் படத்தின் ரீமேக் என்று சொல்லிவிட முடியாது.

தல-க்கு அடுத்து நினைவில் நிற்பது லக்ஷ்மி மேனனும் தம்பி ராமையாவும். ஆக்சன் என்கிற அசைவம் திகட்டாமல் இருக்க, கொஞ்சம் சைவ செண்டிமெண்ட்டாக தங்கச்சி மற்றும் பார்வை குறைபாடுடைய  அவளது பெற்றோர்கள் என்கிற பாத்திரங்களை உள் நுழைத்திருக்கிறார் இயக்குனர். கதையின் ஜீவனே இவர்கள்தான். ஒரு ஃபேமிலி என்டர்டெயினராகவும் வேதாளம் விஸ்வரூபமெடுத்து நிற்பதற்கு இதுவும் காரணம்.

வேதாளம் படத்தின் மிகப்பெரிய நெருடல் காமெடி. கடந்த ஒரு வருடமாக சூரி நடிக்கும் படங்களின் விமர்சனம் எழுதும்பொழுது தொடர்ந்து புலம்பித் தீர்த்திருக்கிறேன். சூரி எல்லாம் சோலோ காமெடியனாக போடும் அளவுக்கு 'வொர்த்' கிடையாது என்று. காமெடி நடிகர்களுக்கு வாய்ஸ் மாடுலேஷன் மிக முக்கியம். டைமிங் சென்ஸ் அதைவிட முக்கியம். இயக்குனர் சொல்வதை மட்டும் செய்யாமல் சொந்த சரக்கையும் அவ்வப்போது அவிழ்த்து விடவேண்டும். ஆனால் இது எதுவுமே சுட்டுபோட்டாலும் வராத சூரி, வையாபுரி அளவுக்குக் கூட வொர்த் கிடையாது. சந்தானமும் வடிவேலும் ஒதுங்கிப் போனதால் இங்கே வண்டி ஓடுகிறது. சூரிக்குப் பதில் சந்தானமோ விவேக்கோ நடித்திருந்தால் முதல் முக்கால்மணி நேரம் இவ்வளவு தொய்வு விழுந்திருக்காது.

அடுத்து ஸ்ருதி ஹாசன். தமிழ் சினிமாவில் ஹீரோயினுக்கா பஞ்சம்..? நல்லவேளை அஜித்தோட டூயட் எதுவும் இல்லை.  இருந்திருந்தா நாங்க தெறிச்சி ஓடியிருப்போம்.

அனிருத் பாடல்களில் ஒன்றும் பெரிதாகக் கவரவில்லை என்றாலும் பின்னணி இசையில் பட்டையை கிளப்பியிருக்கிறார். அதேப்போல் ஒளிப்பதிவும்.

எதை எல்லாம் எதிர்பார்த்து சென்றேனோ அவை எல்லாம் ஓரளவு எமக்குப் படைக்கப்பட்டதால் திருப்தியோடு தியேட்டரிலிருந்து எழுந்து வந்தேன்.

டிஸ்கி.

ஒலக படமாக வந்திருக்கும் தூங்காவனத்தை அடித்து துவைத்துவிட்டு பக்கா மசாலாவாக வந்திருக்கும் வேதாளத்தை எப்படி தூக்கி வைத்து எழுதலாம் என கொதிக்கும் என்னைபோன்ற உலக நாயகனில் உயிர் ரசிகர்களுக்கு, தூங்காவனம் எப்படி எனக்கு தாங்காவனமாக இருந்தது என்பதை அடுத்தப் பதிவில் எழுதுகிறேன்.

Tuesday 10 November 2015

தூங்காவனம் ..(விமர்சனம் )



தாவது ஒரு நைட் கிளப் இருக்கு. அதன் ஓனர் பிரகாஷ் ராஜ். அவர் கமல் மூஞ்சில ஒரு டிச் விடுறாரு. அடுத்ததா கமல், மூக்குல வழியிற ரத்தத்தை நடுவிரல்ல தொட்டு அப்படியே கையை திருப்பி ஆடியன்ஸ் கிட்ட காமிக்கிற சீன் கண்டிப்பாக வந்திருக்க வேண்டும். சென்ஸார்ல கடுப்பாகி கட் பண்ணிட்டாங்க போல... 

அப்புறம் அதே நைட் கிளப்புல கமலும் திரிஷாவும் கட்டிப்புடிச்சி, உருண்டு புரண்டு, தூக்கி அடிச்சி, பல்டியடிச்சி சண்டைப் போட்டுகிறாங்க.அதுக்கப்புறம் கிஷோரும் கமலும் மாறி மாறி குத்து விட்டுக்கிறாங்க... முதல்ல கமல் சுருண்டு கீழ விழுந்திடுறாரு.. அவர் ஹீரோ என்பதால் திரும்பவும் எழுந்துவந்து ஒரே குத்துல கிஷோர சுருண்டு விழ வச்சிடுராறு..

இந்த கேப்புல ஒரு பொண்ணுகிட்ட தப்பா நடக்க முயற்சி செய்யும் அவ பாய் ஃபிரண்டை  பாத்ரூம்ல வச்சி நங்கு நங்குன்னு போட்டு மிதிச்சி வக்கிறாரு ஹீரோ கமலு. பிறகு அடுத்த சீனிலே பேத்தி வயசு இருக்கிற அந்த பாப்பாவுக்கு ஃபிரெஞ்சு கிஸ் கொடுக்கிறாரு நம்ம ஹீரோ.அந்த பாப்பாவும் வஞ்சனையில்லாம வட்டியும் முதலுமா திருப்பிக் கொடுக்குது..( என்ன கருமம்டா இது..)

அப்புறம் கமல் நடந்து போறப்போ ஒருத்தன் மேல இடிச்சிடுறாரு. அப்படினா லாஜிக்படி அவனும் கமல் மூஞ்சியில ஒரு குத்து விட்டுருக்கனுமே..? இல்லாம பின்ன.. ! அப்புறம் லாஜிக் ஓட்டை அது இதுன்னு ஏதாவது சொல்லிட்டீங்கனா..

இப்படி படத்துல வர்ற எல்லா கேரக்டரும் கமல்கிட்ட குத்து வாங்குது இல்லனா மிதி வாங்குது. சும்மா வந்துபோற சந்தான பாரதி, ஜெகன், உமா ரியாஸ் கூட..

எதுக்காக இப்படி மாறி மாறி குத்துவிட்டுக்கிறாங்க..? அதன் பின்னணிதான் படத்தில் கதை. இது எல்லாம் நடப்பது ஒரு நாள் இரவில். அதுவும் அந்த நைட் கிளப்பில்..

sleepless night என்கிற ஃபிரெஞ்ச் படத்தை பார்த்தவர்கள் டோமர் சிஸ்லேவுக்குப் பதில் கமலையும், Serge Riaboukine க்கு பதில் பிரகாஷ்ராஜையும்,Joeystarr க்குப் பதில் சம்பத்தையும் , Julien Boisselier  க்குப் பதில் கிஷோரையும் , Lizzie Brocheré க்குப் பதில் திரிஷாவையும் கற்பனை செய்து பார்த்தால் போதும். ஏன்னா , சீன் பை சீன் அப்படியே ரீமேக் செய்திருக்கிறார்கள்.

கதைன்னு பார்தீங்கனா... கமல் ஒரு அன்டர்கவர் போலிஸ் ஆபீசர்...  தனது டிபார்ட்மெண்டில் இருக்கும் ஒரு கருப்பு ஆடைக் கண்டுபிடிக்க அவரும் கடத்தல் செய்வது போல் நாடகம் ஆடுகிறார். போதைப் பொருள் கடத்தல் செய்யும் பிரகாஷ் ராஜுக்கு சொந்தமான 10 கிலோ கோகைனை கமலும் யூகிசேதுவும் சேர்ந்து ஆட்டையை போடுகின்றனர். அதைத் தெரிந்துகொண்ட பிரகாஷ்ராஜ், கமலின் மகனைக் கடத்தி பிளாக் மெயில் செய்கிறார்.

கோகைனை விட மகனே முக்கியம் என முடிவெடுத்து அந்த கோகைன் உள்ள  பையைக் கொடுத்து மகனை மீட்பதற்காக பிரகாஷ்ராஜுக்கு சொந்தமான நைட் கிளப்புக்கு செல்கிறார் கமல் .. கமலை சக அதிகாரிகளான திரிஷாவும் கிஷோரும் பின் தொடர்ந்து அந்த கோகைன் அடங்கிய பையை கமலுக்குத் தெரியாமல் ஆட்டையை போடுகின்றனர்.

கோகைன் கடத்தல் கும்பலின் தலைவனான சம்பத், 'பேக் ' எங்கே என்று பிரகாஷ் ராஜை டார்ச்சர் பண்ண, கோகைன் கொடு... இல்லனா உன் பிள்ளையை கொன்று விடுவேன் என்று பிரகாஷ்ராஜ் கமலை மிரட்ட, தொலைந்து போன கோகைனை கமல் அந்த நைட் கிளப்புக்குள் தேட, அவரை திரிஷாவும் கிஷோரும் பின் தொடர .. அடுத்தடுத்து என்ன நடக்கும் என்று கொஞ்சம் பிபியை எகிற விட்டிருக்கிறார்கள்.

கமலுக்கு நடிப்பதற்கு பெரிய வாய்ப்பு எதுவும் இல்லை.. தன் மகன் கடத்தப்பட்ட செய்தி கேட்டவுடன் முகத்தில் அதிர்ச்சியை அவ்வளவாக காட்டாததால் நமக்கும் பெரிய வருத்தமும் ஒட்டுதலும் இல்லாமல் போய்விடுகிறது. அதனால் கமலும் அவரது மகனும் தங்களது அன்பை  ஃபோனில் பரிமாறிக்கொள்ளும் அந்தக் காட்சி அழுத்தம் இல்லாமல் போய்விடுகிறது.

பிரகாஷ்ராஜ், சம்பத், கிஷோர்  மூவருமே நடிப்புத் திமிங்கிலங்கள். இவர்களுக்கு நீந்தவா சொல்லிக் கொடுக்கவேண்டும்...? திரிஷாவுக்கு போலிஸ் ஆபிஷருக்கான மிடுக்கு அப்படியே இருக்கிறது.. ஆனால் கமலுடன் அவர் போடும் 'கட்டிப்புடி' சண்டை தமிழ் சினிமாவுக்கு ஒத்துவருமா என்பது தெரியவில்லை.

மகனைக் காணாமல் தவிக்கும் அதே அம்மாவின் பாத்திரம் ஆஷா சரத்- க்கு..  பாபநாசம் படத்தில் வரும் இரண்டு வசனங்களை இதிலும் பேசிவிட்டு போகிறார்.

ஸ்லீப்லெஸ் நைட் படத்தில் வரும் அனைத்து காட்சிகளும் பல வசனங்களும் அப்படியே வருவது படத்தின் முக்கிய மைனஸ். ஒருவேளை மாற்றி எடுத்திருந்தால் இன்னமும் கேவலமாக போயிருக்கும் என நினைத்திருக்கக்கூடும். படத்தில் மைய இழையே போலிஸ் அதிகாரியின் மகனைக் கடத்தும் நிகழ்வுதான். அதை இன்னும் அழுத்தமாக, கொஞ்சம் உணர்ச்சிகரமாக  சொல்லியிருக்கலாம்..  யாரை பார்த்தாலும் ஒன்னு மூஞ்சியில குத்துறது.. இல்லனா அடியில உதைக்கிறது. இதெல்லாம் புதுமையாக தெரியவில்லை. பொறுமையை சோதிக்கிறது.

ஆனால் இதையெல்லாம் மீறி, நம்மை இரண்டு மணிநேரம் தியேட்டரில் கட்டிப்போடுகிறது இதன் விறுவிறுப்பான திரைக்கதை. டைட்டிலில் திரைக்கதை கமல்ஹாசன் எனப் போடுகிறார்கள்.. சீன் பை சீன் காப்பியடித்துவிட்டு எதற்கு இந்த டைட்டில்..?

டைட்டிலை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டு வரும்போது மைக்ரோ செகண்டில் எதோ ஒன்று வந்து செல்கிறது  . அனேகமாக அது sleepless night படத்திற்கான கிரெடிட்டாக இருக்கலாம்.

தூங்காவனம் - ஒரிஜினலைப் பார்க்காதவர்கள் ஒருமுறைப் பார்க்கலாம்..