Saturday, 26 November 2011

கபடி.... கபடி..... கண்டுபிடி..

வாழ்த்துவோம் ;


காணாமல் போன கபடி விளையாட்டைக் கண்டெடுக்கும் ஓர் முயற்சி :-

நமது இந்திய விளையாட்டுச் சரித்திரத்தில் மேலும் ஒரு மைல் கல்லாக  நம் மண்ணின் வீரம் செறிந்த கபடி விளையாட்டின் உலகக்கோப்பையை இந்திய அணி வென்றெடுத்திருக்கிறது. இதற்கு முதலில் சிரம் தாழ்த்தி வாழ்த்துச் சொல்வோம்.
    
சமீபத்தில் நடந்த உலகக்கோப்பை கபடிப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், கனடா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஈரான், இலங்கை, தாய்லாந்து, சீனா, இத்தாலி,ஆப்கனிஸ்தான், மலேசியா, ஜப்பான், ஜெர்மனி, ஆஸ்திரேலியா,  நேபால், நார்வே, ஸ்பெயின்  மற்றும் அர்ஜென்டினா ஆகிய  நாடுகள் பங்கேற்றது. போட்டி மிகக்கடுமையாக இருந்தும் 'இப்படைத் தோற்கின் எப்படை வெல்லும் ' என்று மீண்டும் நிரூபித்து வாகை சூடியிருக்கிறது  நம் இந்திய அணி.

ஆனால், இந்தியா கிரிக்கெட் சாம்பியன் ஆனபோது சமூக வலைத்தளங்களில் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்ட நம்மவர்கள், இவ்வெற்றியைப்பற்றி சிலாகித்து ஒரு வார்த்தைக்கூட தெரிவிக்காதது வியப்பாகவும், ஆச்சர்யமாகவும் இருக்கிறது.

கபடி விளையாட்டு என்றால் என்ன...? ஏதோ ரோட்டோரத்தில் டவுசர், பனியனோடு குஸ்தி சண்டைப் போல சகதியில் கட்டிப்புரண்டு உருள்வார்களே அதுவா...? கபடி விளையாட்டைப் பற்றிய புரிதல் நிறைய பேருக்கு இப்படித்தான் இருக்கும்...

இந்தியா, கபடி விளையாட்டில்  பெரிய அளவில்  என்ன  சாதித்துவிட்டது..? நிறையப்பேருக்கு தெரிந்திருக்காது. காலரை தூக்கிவிட்டுக்கொள்ளுங்கள்...

இதோ இந்தியாவின் வெற்றி வரலாறு..





(தகவல்கள் -நன்றி விக்கிப்பீடியா)

கண்ணைக்கட்டுமே.....! குழப்பிக் கொள்ள வேண்டாம்... இதன் மூலம் என்ன சொல்ல வருகிறோம் என்றால், கபடி விளையாட்டில் இந்தியா யாராலும் வெல்லவே முடியாத சாம்பியானாக தொடர்ந்து இருந்து வருகிறது என்பதின் ஆதாரம்தான் மேலே உள்ள தகவல்கள்.

கபடி விளையாட்டு தமிழர்களின்  பாரம்பரியத்தோடு பின்னிப் பிணைந்தது. வீரத்தோடு தொடர்புடையது. நம் கலாச்சாரத்தின் உயிர் செல்கள் ஒவ்வொன்றாய் மரித்து போய் உதிர்ந்து கொண்டிருக்கும் காலக்கட்டத்தில், கபடியும் அப்படிப்பட்ட கோமா நிலையில்தான்  ஊசலாடிக்கொண்டிருக்கிறது. இன்னும் சில வருடங்கள்... அல்லது அடுத்தத் தலைமுறையில் கபடி நம் பாடப்புத்தகத்தோடு அதன் வரலாற்றை முடித்துக்கொள்ளும்.

கபடியைப் பற்றி ஓர் தவறான புரிதல் நம் சமூகத்தில் நிலவுகிறது. இது நாட்டுப்புறங்களில் விளையாடப்படும் விளையாட்டு போலவும், ஜல்லிக்கட்டுப் போன்ற ஆபத்தான விளையாட்டு போலவும் இதற்கு கட்டுமஸ்தான உடலமைப்பு வேண்டும் எனவும் மேலெழுந்தவாரியாக ஓர் எண்ணம் சமகால நகரப்புற மக்களிடம் இருக்கிறது. குறிப்பாக படித்தவர்கள் மத்தியில்... 

முன்பெல்லாம் கிராமப்புறங்களில் சினிமா போஸ்டர்களுக்கு இணையாக கபடிப்போட்டியின் போஸ்டரும் ஒட்டப்பட்டிருக்கும்.முதல் பரிசு ரூ 555.. இரண்டாம் பரிசு ரூ 333..  மூன்றாம் பரிசு ரூ111. ஆனால் இங்கே பரிசுத்தொகை முக்கியமில்லை. விளையாடவேண்டும். ஜெயிக்கவேண்டும். அவ்வளவுதான்.

சிறுவயதில் கபடி எனக்கு உயிர் மூச்சு. எனக்கு தெரிந்த ஒரே விளையாட்டும் அதுதான். பள்ளி முடிந்து வீடு வந்து சேர்வதற்குள் பள்ளியின் விளையாட்டு களத்தில் ஒரு ஆட்டம், ஆற்று மணலில் ஒரு ஆட்டம் என்று இரண்டு ஆட்டம் போட்டுவிடுவோம். இரண்டும் பக்கத்து ஊர் பசங்களுடன். பிறகு வீட்டில் புத்தகப் பையை தூக்கி எறிந்துவிட்டு பக்கத்து தெரு பசங்களுடன் ஒரு ஆட்டம்.

சில நேரங்களில் கால் முட்டி பெயர்ந்து விடும். கைகளில் நெஞ்சில் சிராய்ப்புகள் ஏற்படும். சில நேரங்களில் மண்டை கூட உடையும். அடுத்த நாள் குளத்து தண்ணீரில் குளிக்கும்போது ஏற்படும் எரிச்சலை வைத்துதான் எங்கெங்கு அடிபட்டிருக்கிறது என்பது தெரியவரும். அதற்காக ஒருபோதும் கவலைப் பட்டதும் இல்லை.  

புழுதி பறக்கும் களத்தில் குருதிச்சொட்ட விளையாடிய நினைவுகள் இன்னும் இருக்கிறது. கோடைக் காலங்களில் இதுதான் எங்கள் பொழுதுப்போக்கு. நாலு பேரு ஒன்னா சேந்தா, நடுவுல ஒரு கோடு  போட்டு , அணிக்கு ரெண்டா பிரிச்சி ஆசையோடு விளையாடிய ஞாபகங்கள்......
            
மண்ணோட வாசமும் ருசியும் ஒன்னா கலந்ததால சோறு தண்ணியும் மறந்து விடும்..சுகமும் துக்கமும் மறத்து  போகும். மட்டையும்  பந்தும் தேவையில்ல..அரைக்கால் சட்டையும் அழுக்கு பனியனும் இருந்தாலே போதும் எங்களுக்கு.. புல்தரையும் போர்க்களமாகும்...வயல்வெளியும் மைதானமாகும்..   

பள்ளிக்கூடத்தில் அரை பெல் அடிச்சா, அந்த அரை மணி நேரத்திலும் அணி பிரிச்சி  ஒரு ஆட்டம் போடுவோம். முழுப் பரிட்சை  முடிஞ்சா முழுமூச்சா இறங்கிடுவோம்..ஊர் ஊராச்  சுத்தி ஒரு போட்டியும் விடாம களம் கண்டு வெறியோடு வெல்வோம்.
               
இதில் எடைப்பிரிவு இருக்கு." நாங்க விதிமுறையில சொன்ன எடையைவிட இரண்டு கிலோ அதிகம் " னு நடுவர் சொல்வார். விடமாட்டோம். ஒரு வாரம் ஓடினாலும் ரெண்டு கிலோ குறையாது. ஆனாலும் ஏதோ நம்பிக்கையில நாத்து வயல்களுக்கு நடுவே மூச்சிரைக்க ஓடுவோம். ஒரு கிலோ கூடயிருக்குனு நடுவர் சொன்னப்ப, வாய்க்குள்ள  விரலைவிட்டு வாந்தி எடுத்த கதையும் இன்னும் நினைவிலிருக்கு ...  
                   
வெற்றியோ தோல்வியோ ..அதைப்பற்றியெல்லாம் கவலையில்ல.. களமிறங்கி விளையாடுனும். இதுல கிடைக்கும் ஆத்மதிருப்தி  வேறெதிலும் அப்போ கிடைக்காது. கபடியைப் பொருத்தவரையில் மண்ணைக் கவ்வுவதும், மீசையில் மண் ஓட்டுவதும் ,தோல்விக்கான அடையாளம் அல்ல .
 
இப்போதெல்லாம் ஊர்ப்பக்கம் சென்றால், சின்னப்பசங்க எல்லாம் கையில பேட் பந்தோட சுத்துறாங்க. கேட்டால், லை.'.ப்  ஸ்டைல் மாறிப்போச்சாம்... சொல்றாய்ங்க..
'டென்னிஸ் பந்தில் கிரிக்கெட் போட்டி ...முதல் பரிசு 5001 ' அப்படின்னுதான் இப்பெல்லாம் போஸ்டர் பார்க்க முடியுது. அதிலும் சினிமாவில கபடியைக் காட்டும் விதம் அதைவிடக்கொடுமை. ஹீரோ ஹீரோயினோட மன்மத விளையாட்டுபோலவும், வில்லனுக்கும் ஹீரோவுக்கும் நடக்கும் கொடுரமான சண்டை போலவும் (அதுவும் விரலிடுக்குள்ள பிளேடு வச்செல்லாம்......@ கில்லி ) காட்டப்படுகிறது. விதிவிலக்கு 'வெண்ணிலா கபடிக்குழு' ...

கபடியின் பூர்விகம் என்ன ? அதன் விதி முறைகள் என்ன ? கபடி எவ்வாறு விளையாடப்படுகிறது ? என்பதைப்பற்றி(நீங்க விரும்பாவிட்டாலும்) உங்களோட பகிர்ந்துக்கொள்ளப்போகிறேன்..

கபடியைப்பற்றி அறியாதவர்களுக்கு  எனக்குத்தெரிந்த தகவல்கள் ..

இது தெற்காசியாவில் தோன்றிய விளையாட்டு...இதன் வயது 4000  வருடங்களுக்கு மேல். அண்டை நாடான பங்களாதேஷின் தேசிய விளையாட்டுவ என்பது கூடுதல் தகவல். கபடி தெற்காசியாவில் மட்டுமல்லாது அமெரிக்க ஐரோப்பிய நாடுகளிலும் விளையாடப்படுகிறது. கபடி 65 நாடுகளில் விளையாடப்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

கபடி விளையாட பேட், பந்து, நெட் எதுவும் தேவை இல்ல. நம்ம கட்டுடல் மேனி தான் இதற்கு மூலதனம். மற்ற விளையாட்டுகளில் கை, கால், தலை என்று உடல் உறுப்புகளுக்கு மட்டும் வேலை இருக்கும்.ஆனால் கபடியில் இவைகளோடு சேர்த்து மூச்சுப்பயிற்சியும் தேவை. உடற்பயிற்சியும் யோகாசனமும் செய்வதற்குப்பதில் கபடி விளையாடிவிட்டுப் போகலாம்

கபடி என்ற சொல் தமிழிலிருந்து வந்தது என்று சொல்லப்படுகிறது. கை +பிடி தான் கபடியாகியது. அதாவது,அணியினர் தங்கள் கைகளை கோர்த்துக்கொண்டு விளையாடுவது என்று பொருள்.

ஆனால் இது ஹிந்தி வார்த்தை எனவும் KABBADI என்றால் மூச்சை விடாமல்  நிறுத்திப்பிடித்தல் (HOLDING THE BREATH)எனவும் கூறுவார்கள்.

இந்த விளையாட்டு வெவ்வேறு நாடுகளில் அவர்களது அமைப்புக்கேற்ப  விளையாடப்படுகிறது என்றாலும்  இதன் ஆட்ட முறை ஒன்றுதான். கபடி விளையாடும் போது அவரவர் மொழிக்கேற்ப பாடும் முறை (chant word ) வேறுபடும் .
 
             கபடி        (kabbadi)             ---------------  இந்தியா ,பாகிஸ்தான் 
             ஹடுடு  (hadudu)              ----------------- பங்களாதேஷ் 
            டூ-டூ          (do-do)                ----------------- நேபாளம் 
            குடு           (guddo)               -----------------  ஸ்ரீ லங்கா 
            சடு-குடு   (chado-guddo)   -----------------   மலேசியா 
            டெசிப்      (techib)                 ----------------- இந்தோனேசியா

கபடியின்  வகைகள் ; 

         இந்தியாவில் கபடி மூன்று முறைகளில் விளையாடப்படுகிறது.
     1 . சர்ஜீவ்னி 
     2 . காமினி 
     3 . அமர் (பஞ்சாப் ஸ்டைல்)

சர்ஜீவ்னி :
                       தென்னிந்தியாவில் ,குறிப்பாக தமிழ் நாட்டில் விளையாடும் விளையாட்டு.இது கபடி அல்லது சடுகுடுஅல்லது பலிஞ்சடுகுடு என்று அழைக்கப்படும் இதன் விதிமுறைகள் யாவும் இந்திய கபடி வாரியத்தால் வகுக்கப்பட்டவை.
  •  பாடிச்செல்லும்போது  கபடிக்கபடிக்கபடி......என்று ஒரே மூச்சில  பாடனும்னு    அவசியம் இல்லை.கபடி ..கபடி...கபடி...என்று ஒரே சீரான இடைவெளியில் மூச்சுவிட்டும் பாடலாம்  . எதிரணியினர் பிடித்தால் மட்டுமே ஒரே மூச்சில்  தப்பித்து வரவேண்டும்.
  • ஒவ்வோர் அணியிலும் அதிகபட்சம் 12  பேர் இருப்பார்கள்.ஆனால் களத்தினுள் இருப்பவர்கள் 7 பேர் மட்டுமே.மீதி ஐவரும் ரிசர்வ் .
  • ஆட்டக்காரர்களில் ஒருவர் எதிரணியினரின்   களத்தினுள் நுழைந்து 'கபடி ...கபடி...' என்று பாடியபடி செல்வார்.எதிரணியினரில் யாராவது ஒருவரைத் தொட்டு விட்டு ,மூச்சு விடாமல்,உச்சரிப்பதையும் நிறுத்தாமல் தன்னுடைய களத்திற்கு திரும்பி வந்தால் ,தொடப்பட்ட நபர் 'அவுட் 'ஆகிவிடுவார்.
  • பாடி வருபவரை ஒருவரோ அல்லது ஒட்டுமொத்தமாகவோச் சேர்ந்து  பிடிக்கலாம்.இதை மீறி அவர் தப்பிச் சென்று விட்டால் ,பிடிக்க முயற்சித்த அனைவருமே 'அவுட்' தான்.ஒருவேளை பாடி வருபவரைப் பிடிக்க முயற்சி செய்யும்போது ,பிடிக்க முயல்வோர் யாராவது நடுக்    கோட்டைத் தொட்டாலும் பிடித்தவர் அனைவரும் அவுட் டாக நேரிடும்.
  • எதிரணியில் ஒருவர் வெளியேறும்போது அதற்குக் காரணமாயிருந்த அணிக்கு ஒரு புள்ளி (Point )   வழங்கப்படும்.ஆட முடிவில் அதிக புள்ளிகளைப்பெற்ற அணி வென்றதாக அறிவிக்கப்படும்.
  •  'டாஸ்'வென்ற அணி 'சைடு 'அல்லது 'ரைடு ' தேர்ந்தெடுக்கலாம்   .ஆனால் இரண்டாம்பகுதியில்     மாற்றி எடுக்க வேண்டும்.
  •  ஆட்டத்தின் பொது கோட்டுக்கு வெளியே செல்லும் ஆட்டக்காரர் 'அவுட் 'ஆக நேரிடும். எல்லைக்கோட்டுக்கு வெளியே உடம்பின் எந்தப்பகுதி தரையைத்தொட்டாலும் 'அவுட் 'தான்.
  •  பாடி வருபவரின் கை,கால்,இடுப்புப்பகுதிகளை மட்டும் தான் பிடிக்கவேண்டும் .அவர் வாயையும் பொத்தக்கூடாது.மீறிச் செய்தால் அது '.'.பவுல் 'ஆக எடுத்துக்கொள்ளப்படும்.  
  • ஒருவர் ,பல முறை ரைடு போகலாம்.ரைடு போகிறவர் ஏறு கோட்டை தொடாமல் வந்தாலும் அவுட்.
  • எதிரணியில் உள்ள அனைவரையும் அவுட் செய்தால்,இரண்டு புள்ளிகள் கூடுதலாகக் கிடைக்கும்.இதற்கு 'லோனா' என்று கூறுவார்கள் 
   இப்படி நிறைய ரூல்ஸ் இருக்குங்க...   
   
       மொத்த விளையாட்டு நேரம் 40 மணித்துளிகள் . இவ்வாட்டம் விளையாட வெறும் நீள்சதுரமான (ஆடுகளம்) இடம் இருந்தால் போதும். இந்த ஆடுகளத்தை ஒரு நடுக்கோட்டால் இரண்டாக பிரித்து ஒருபக்கத்துக்கு ஒரு அணியாக இரு அணியினரும் இருப்பர். ஆட்டக்காரர்கள் எப்பொழுதும் புற எல்லைக்கோடுகளைத் தாண்டி செல்லலாகாது. இவ்விளையாட்டுக்கு இரு  நடுவர்கள்  தேவை.

ஆடுகளம்:
       ஆடுகளம், மேடு பள்ளம் இல்லாத ஒரு சமதளமாக இருக்க வேண்டும். ஆட்கள் கீழே விழுவதும், இழுக்கப்படுவதும் நிகழ்வதால், தரை மண் அல்லது மரத்தூள், மணல்,பஞ்சு மெத்தை பரப்பியதாக இருக்கவேண்டும். கட்டாந்தரையாக (காங்க்கிரீட்டாக) இருப்பது நல்லதல்ல. ஆண்கள் ஆடும் களம் 12.5 மீ x 10 மீ பரப்பு கொண்டதாகும். பெண்கள் ஆடும் களம் 11 மீ x 8 மீ ஆகும். ஆடுகளத்தின் எல்லைகளக் குறிக்கும், கோடுகளும் மற்றும் களத்தைப் பிரிக்கும் கோடுகளும் 2 அங்குல (5 செ.மீ) அளவினதாக இருக்க வேண்டும்.
இதுதான் கபடியின் ஆடுகளம்......



சர்ஜீவனி முறையில் விளையாடப்படும்  தமிழ்நாட்டுக் கபடி..(வீடியோ)



ஆண்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல...தூள் கிளப்பும் பெண்கள்.....(வீடியோ)




அமர் (பஞ்சாப் ஸ்டைல்):
                   
                                    இது கிட்டத்தட்ட மல்யுத்தம் போன்ற போட்டிதான்.இந்த வித விளையாட்டில்தான் இந்தியா  தற்போது   உலகக்கோப்பையை  வென்றது.    நம்ம  ஊரில்  விளையாடப்படும்  சர்ஜீவினி  முறை கபடிக்கு எல்லா  வீரர்களும் பலசாலியாக இருக்க வேண்டும்  என்றஅவசியம் கிடையாது.  ஏனென்றல் இதில் பாடி வருபவரை எல்லோரும் பிடிக்கலாம்.( மேலே  நான்காவதாக குறிப்பிட்ட விதிமுறைப்படி).ஆனால் அமர் முறை ஆட்டத்தில் பாடி வருபவரை ஒருவர்  மட்டுமே பிடிக்கவேண்டும். மற்றவர்கள் எல்லோரும் 'தேமே' ன்னு நின்னு வேடிக்கை பார்க்க வேண்டியதுதான். தொடப்பட்டநபர் உடனே மைதானத்தை விட்டு  வெளியே  செல்லவேண்டும்  என்ற அவசியம் கிடையாது. பாடி  வருபவர்  திரும்பிப்  போகும்     வரை   பிடிக்க முயற்சி செய்யலாம். இந்த விதிமுறைதான் இரண்டிற்கும் உள்ள முக்கிய வேறுபாடு.
         மேலும், இதன் ஆடுகளம் வட்ட வடிவில் இருக்கும்.இந்த விளையாட்டு முறை அதிகமாக பஞ்சாப்பில் தான் விளையாடப்படுகிறது. இதற்கு வட்டக்கபடி (CIRCLE KABBADI) என்ற பெயரும் உண்டு.

ஆடுகளம்.....

அமர் முறையில் விளையாடப்படும் பஞ்சாப் ஸ்டைல் கபடி


 பஞ்சாப்பில் நடந்த உலகக் கோப்பையின்  இறுதிப்போட்டி 
                 

நம்ம ஊர் சர்ஜீவ்னி கபடியின் உயிரோட்டமான விசயங்கள் இதில் (அமர்) இல்லாமல் போனது கொஞ்சம் வருத்தமே ... ஏதோ  WWE விளையாட்டு பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை..ஒருவேளை இதுதான் கபடியின் பரிணாம வளர்ச்சியோ..  ?

-------------------------------((((((((((((((((((((((((((())))))))))))))))))))))))))))))))))---------------------------

11 comments:

  1. காலை வாருவதில் இந்தியாக் காரன் நம்பர் 1, அண்டை நாடு பாகிஸ்தான் இரண்டாவது. ஹா...ஹா...ஹா...

    ReplyDelete
  2. @Jayadev Das ஒரு விதத்தில் நீங்கள் சொல்வதும் சரிதான்....

    ReplyDelete
  3. கபடி விளையாட்டைப் பற்றி நிறைய -
    அதிலும் பாதிக்கு மேல் அறியாத தகவல்கள்.
    விளையாட்டைப் போலவே உற்சாகமான பதிவு.
    நன்று.. நன்று..

    ReplyDelete
  4. அருமையானதொரு பதிவு,,,நன்றியும் வாழ்த்துக்களும்!

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. Nellai kings sports club friends & Sri iyyappan

    ReplyDelete
  7. ஸ்ரீ நெல்லை கிங்ஸ் கபடி குழு நண்பர்கள். திருநெல்வேலி மாவட்டம் 84 389 777 54

    ReplyDelete
    Replies
    1. நாங்கல் நாமக்கல் மாவட்டம் எங்க ஊர் கபாடிக்கு வருவீர்களா

      Delete
  8. நெல்லை கிங்ஸ் கபடி குழு நண்பர்கள் திருநெல்வேலி மாவட்டம் 84 389 777 54

    ReplyDelete
  9. எனக்கு பிடித்த விளையாட்டு

    ReplyDelete