Thursday, 25 July 2013

என் முதல் கணினி அனுபவமும் என் முதல் மனைவியும்.... (தொடர் பதிவு)


சகோ.."காணாமல் போன கனவுகள்" ராஜி அவர்கள் முதல் கணினி அனுபவத்தைப் பற்றிய தொடர்பதிவை ஆரம்பித்து வைத்தார். அதற்காக இரண்டாவது ரவுண்டிலே நான் வருவேன் என எதிர்பார்க்கவில்லை.தொடர் பதிவுக்கு அழைத்த தமிழ்வாசி பிரகாசுக்கு கோடானுகோடி நன்றிகள் சொல்லி என் அனுபவத்தை இங்கே பகிர்கிறேன்.

( கொஞ்சம் பெரிய பதிவு...உங்களின் பொறுமைக்கு நன்றி)

1993-ல திருச்சி மண்டல பொறியியல் கல்லூரியில இஞ்சினியரிங் சேர்ந்தேன்.அதுக்கு முன்னால கம்ப்யூட்டரை கண்ணால கூட பாத்தது இல்ல.நகர்ப்புறங்களிலேயே அவ்வளவாக பயன்பாட்டுக்கு வராத கம்ப்யூட்டரை கிராமத்திலிருந்து வந்த எனக்கு எப்படி தெரியும்..?

முதல் வருசத்தில் ஃபோர்ட்டான் 77 என்கிற சப்ஜெக்ட்.அதன் மூலம்தான் எனக்கு கம்ப்யூட்டர் பரிச்சயம் ஆனது. அப்போதெல்லாம் MS-DOS மட்டுமே இருந்ததால்(அப்படித்தான் நெனைக்கிறேன்) இப்ப இருக்கிற மாதிரி கலர்ஃபுல் கவர்ச்சி எல்லாம் கிடையாது.இணையமும் கிடையாது. புரோக்ராம், AUTOCAD போன்ற மேல்மாடி சமாச்சாரங்களுக்கு மட்டுமே உபயோகப் படுத்துவதால் இயற்பியல் லேபில் உள்ளதுபோல் கம்ப்யூட்டரும் ஏதோ ஒரு இன்ஸ்ட்ருமென்ட்/எக்யுப்மென்ட் அவ்வளவுதான் .

எனக்கு கணிதம் கொஞ்சம் நல்லா வந்தாலும்( நம்பித்தான் ஆகணும்) இந்த கம்ப்யூட்டர் புரோக்ராம் என்றாலே கொஞ்சம் உதறல்தான். எங்க காலேஜ்ல ஆக்டகன்(Octagon) என்கிற மிகப்பெரிய கம்ப்யூட்டர் சென்டர் இருக்கு. அப்பவே 500 கம்ப்யூட்டருக்கு மேல் இருக்கும்.ஆசியாவிலேயே இதுதான் ரொம்பப் பெருசுனு சொல்வாங்க. அங்கதான் ரெகுலரா எங்களுக்கு கம்ப்யூட்டர் வகுப்பு நடக்கும்.

தமிழ் மீடியம் என்பதால்,சேர்ந்த புதிதில் சாதாரணமாவே எல்லா வகுப்பிலேயும் பேந்தபேந்த முழிக்கும் எனக்கு கம்ப்யூட்டர் கிளாஸ் என்பது கண்ணை கட்டி காட்ல விட்டது போலதான்.அந்த பயத்தாலேயே முதல் ரெண்டு மூணு வகுப்பை கட்டடிச்சுட்டேன்.கூடவே இன்னும் ரெண்டு பேரும்(எங்க போனாலும் நமக்குனே இப்படி ஒரு செட் சேரும்). அதுக்குள்ளே எப்படி லாக்இன் செய்வது ,பேசிக் புரோகிராம் எழுவது எல்லாம் நடத்திட்டாங்க. அடுத்த கிளாசுக்கு நான் போனப்போ, என்னைத்தவிர எல்லோரும் ஏதோ டைப்பிகிட்டு இருந்தாங்க.எனக்கு ஒன்னுமே புரியில. இருந்தாலும் AC ரூம்..எதிர்ல தனி கம்ப்யூட்டர்...வேறு ஒரு உலகத்ல இருக்கிற ஃபீலிங்..!

நமக்கு எப்போதும் எதையாவது நோண்டிகிட்டு இருக்கணும். மெக்கானிகல் எஞ்சினியர்(!) இல்லையா..? அது ஒத்த பைசாவுக்கு பிரயோசம் இல்லன்னாலும் எதையாவது கழட்டி உள்ள என்ன இருக்குனு பாக்குற ஆர்வம். அப்படியொரு ஆர்வக் கோளாறுல ஒரு தப்பு செஞ்சுட்டேன்.

எனக்கு கம்ப்யூட்டரே ஆச்சர்யம் என்றால் அதைவிட பெரிய ஆச்சர்யம் மவுஸ். இது எப்படி டேபிள்ள வச்சு தேய்ச்சா ஸ்க்ரீன்ல வேலை செய்யுது...? என் மூளை பரபரன்னு வேலை செய்ய ஆரம்பிச்சது. உடனே திருப்பி பாத்தேன்.  உள்ள ஏதோ பால் சுத்திகிட்டு இருந்தது.  இந்த பால் சுத்தறதால தான் கம்ப்யூட்டரே வேலை செய்யுதுனு நெனச்சிட்டு எதையோ திருகி என்னவோ பண்ணிட்டேன் போல.பால் கையோட வந்துடிச்சி...! ஆகா இந்த பாலுக்கும் மவுசுக்கும் எதோ கனெக்சன் இருக்கு போல. இப்ப கட்டயிடுச்சி.அடுத்து என்ன பன்றதுனு தெரியாம முழிச்சிகிட்டு இருந்தேன்.

மத்தவிங்க எல்லாம் புரோகிராம் எழுதறதுல வந்த டவுட்ட கேட்கிறதுக்காக மாஸ்டரை அங்கயும் இங்கயும் கூப்பிட்டுகிட்டு இருந்தாங்க. இப்போ நான் என்ன சொல்லி அவர கூப்பிடறதுனு தெரியாம முழிக்க,அதை மாஸ்டர் எப்படியோ நோட் பண்ணிட்டாரு. நான் ஏதோ ப்ரோக்ராம் எழுதுற சந்தேகத்தில உட்காந்திருக்கேனு வேகவேகமா என்கிட்டே வந்து, எஸ்...எனி டவுட்..? னு கேட்டுட்டு கீழ பாத்தாரு..அங்க ஒரு கையில மவுஸ்.. இன்னொரு கையில பால்.. அவ்வளவுதான்.. @#$&^&%#%^^&%&% ஸ்டுபிட்... #&*&*^^^%$%^%$#$%^^ இடியட்..  நல்லவேளை இங்கிலிஸ்ல திட்டினதால பொறுத்துகிட்டேன்.மவனே தமிழ்ல மட்டும் திட்டி இருந்தாரு........ அழுதிருப்பேன்.  :-(

ஆக்டகன் 24 மணி நேரமும் திறந்திருக்கும்.அதனால் எப்போ வேண்டுமானாலும் உள்ளே போய் பிராக்டிஸ் செய்யலாம். மொத வருஷம் பூரா, விழுந்த அரியரை கிளியர் பன்றதுக்குள்ள தாவு தீர்ந்து போச்சு. இதுல எங்க பிராக்டிஸ் செய்யுறது..? ஒரு வருஷம் கழிச்சி போனா அவனவன் எங்கேயோ போய்கிட்டு இருந்தானுவ. இப்ப போயி எப்படி லாக்இன் பன்றதுன்னு கேக்க முடியுமா..சரி நாம தான் மெக்கானிகல் பிராஞ்ச் ஆச்சே. நமக்கு எதுக்கு கம்ப்யூட்டர்னு விட்டுடேன்.

ஆக்டகன் முன்பு நான்... வலப்பக்க படத்தில் இடமிருந்து வலமாக கீழே முதலில் உட்காந்திருக்கேன்.(1994 ல எடுத்தது)
ஆனா சில பக்கிக நைட்டு பத்து மணிக்கு நோட்டும் கையுமா கிளம்பி போவானுக. எங்கடா மாப்ள போறனு கேட்டா ஆக்டகன்னு சொல்லி வெறுப்பேத்துவானுவ.கடைசில வேற வழியில்லாம நானும் போக ஆரம்பிச்சி ட்டேன். போயி பிராக்டிஸ் பன்றதுக்கு தானேனு கேட்கிறீங்களா..அதுதான் இல்ல. அங்க ஒரு வாட்டர் கூலர் இருக்கும்.காலேஜ்லே அங்கதான் சில்ல்டு வாட்டர் கிடைக்கும். அப்படியே குருப்பா போயி தண்ணி குடிச்சிட்டு திரும்பி வந்துடுவோம்.

அதிலும் அந்த செக்யூரிட்டி இருக்கானே.உள்ள போறதுக்கு எல்லோரும் ஐடி கார்டு காமிச்சிட்டுதான் போகணும். நாங்க வந்தாலே,'தண்ணி குடிக்க தான வந்தீங்க.அதுக்கெல்லாம் ஐடிகார்டு தேவையில்ல.குடிச்சுட்டு போங்க'னு நக்கலடிப்பான்.

காலேஜ் முடிக்கிறப்போ,என்கிட்ட இருந்த அறிவுக்கும் திறமைக்கும் ஆஃப்ட்ரால் இந்த கேம்பஸ் இன்டர்வியூவ் -ல செலக்ட் பண்ணிதான் எனக்கு வேலை கொடுக்குனுமான்னு என்னை யாருமே எடுக்கல.அப்புறம் அம்பத்தூர் வந்து CNC பீல்டுல முட்டி மோதி செட்டிலானேன்..

ஆனா எந்த அளவுக்கு கணினியை வெறுக்க ஆரம்பிச்சேனோ,பின்பு அதைவிட அதிகமாக அதை காதலிக்க ஆரம்பித்தேன். சிங்கப்பூருக்கு தேர்வாகி விசா கூட வந்துட்டு. நான் கிளம்பு இரண்டு வாரம் இருக்கையில் செப்-11 தாக்குதல் நடத்தது( பில்லேடனுக்கே பொறுக்கல போல). அதனால கிளம்புற டேட் தள்ளிப் போயிட்டே இருந்தது. அந்த நேரத்தில ஏற்பட்ட மன உளைச்சலைப் போக்க ' MASTERCAM ' படிச்சேன். படிச்சி முடிச்சுட்டு நானே மாஸ்டரா ஆயிட்டேன். அப்ப தொட்டதுதான். இப்ப தூங்கிற,திங்கிற,குளிக்கிற நேரம் மட்டும்தான் கணினியை தொடல.

 அடுத்து என் முதல் மனைவியைப் பற்றி...

ணினி மீது அதீத காதல் ஏற்பட்டவுடன் எனக்குள்ள ஒரு வெறி(!?) என்னையறியாமலே பரவ ஆரம்பிச்சுட்டு. அது சொந்தமாக கம்ப்யூட்டர் வாங்கியாகனும் என்று. அந்த நேரத்தில நம்ம ஊரில் அது சாத்தியமில்லை என்பதால் சிங்கை வந்த பின்பு முதல் மாத சம்பளத்தில் கம்ப்யூட்டர் வாங்கியே தீருவது என முடிவு செய்தேன். பொதுவாக வெளிநாடு வருபவர்கள் முதலில் எஜென்ட்டுக்கு கொடுக்க வாங்கிய கடனை செட்டில் பண்ண முயற்சிப்பார்கள்..நானோ வீட்டில், 'மொத மாச சம்பளம் அனுப்ப முடியாது,எங்க கம்பெனியில வேலை செய்யுறவங்க எல்லோரும் சொந்தமா கம்ப்யூட்டர் வச்சிருக்கனுமாம். இல்லனா ஊருக்கு திருப்பி அனுப்பிடு வாங்கலாம்'னு ஒரு பொய்யை அடிச்சிவிட்டேன்.

2002 ஆம் வருஷம் மே மாதம் எனது கனவான கம்ப்யூட்டர் சொந்தமாக வாங்கப்பட்டது.ஸ்பீக்கர்,பிரிண்டரோடு சேர்த்து 1200 டாலர் ஆனது.

என் வாழ்கையில மிக சந்தோசமான தருணங்கள் அப்படினு ரெண்டு நிகழ்வை சொல்லுவேன்.ஒன்னு,இரண்டு வருசத்துக்கு முன்னால என் மகன் பிறந்த அடுத்த நொடியில் நர்ஸ் அந்த பிஞ்சுப் பூவை என் கைகளில் தவழ விட்ட தருணம். இன்னொன்று சிங்கையில் உள்ள Sim Lim Square -ல் அந்த கடைக்காரன் என் முதல் கம்ப்யூட்டரைத் தூக்கி என் கையில் கொடுத்த தருணம்.

என் முதல் மனைவியுடன் நான்.... (2004 ல எடுத்தது  )
கிட்டத்தட்ட அஞ்சு வருஷம் என்கூட அது இருந்தது.WINDOWS -XP தான் இன்ஸ்டால் செய்திருந்தேன். கொஞ்சம் ஸ்லோ ஆனாலும் உடனே ஃபார்மட் செய்திடுவேன். எந்த நண்பனும் அதைத் தொட அனுமதி கிடையாது.அதில் தான் நான்கு வருடமாக MASTERCAM கிளாஸும் எடுத்தேன். பிறகு லேப்டாப் வாங்கியும் அதைத் தூக்கிப்போட மனசு வரல. வீடு மாறும் போது கூட அது எக்ஸ்ட்ரா வெயிட்டாக தெரியவில்லை.2008ல மானிட்டர் படுத்த படுக்கையா ஆயிட்டு. கடையில கொடுத்தா ஒன்னுமே பண்ண முடியாதுனு சொல்லிட்டான். கடைசில மனசே வறாம தூக்கிப் போட்டேன். அடுத்த சில மாதங்களில் பிரிண்டரும் வேலை செய்யவில்லை.சர்வீஸ் செய்யிற காசுக்கு புதுசா வாங்குங்க சார்னு அதே ஆளு கடுப்பேத்திட்டான் . ஆனா CPU மட்டும் ஓடிகிட்டு இருந்தது. பிறகு அதுவும் SMPS ,ஹார்ட் டிஸ்க்,CDROM  எல்லாம் வரிசையா புட்டுகிச்சி.

ஆனாலும் அதைத் தூக்கிப் போடாம உள்ளே உள்ள எல்லா பார்ட்ஸ்-யும் மாற்றி,இப்ப பிளாக் அதில்தான் எழுதிகிட்டு இருக்கேன். என் முதல் கம்ப்யூட்டரில் தற்போது என்னிடம் இருப்பது CPU வெளிப்புற ஃபிரேம் மட்டும்தான்.. :-(

தொடர் பதிவை கொஞ்சம் பொறுமையாக எழுதலாம்னா ,நாம அடுத்து அழைக்க நினைத்த நபர்களை வேறு யாராவது அழைத்து விடுவார்களோ என்கிற பரபரப்பு பதிவை அவசர அவசரமாக எழுத வைத்திருக்கிறது. அப்படியும் இருவரை ஏற்கனவே அழைத்து விட்டார்கள்.

தற்போது தொடர் பதிவு எழுத நான் அழைப்பது...

டெர்ரர் கும்மியில் ஒருகாலத்தில் செம கும்மு கும்மியவர், எந்த மொக்கையும் போடாமல் வரலாற்று நாயகர்களைப் பற்றி தொடர்ந்து எழுதி வரும் 'மாணவன்' சிம்பு அவர்களையும் ( சமீபத்தில்தான் தொலைபேசியில் உரையாடினோம்..)

சிங்கையில் இருக்கும் மற்றொரு நண்பர் சொற்"க்"குற்றம் ராவணன்

ஆரம்பத்தில் தொடர்ந்து எனக்கு பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்திய (தற்போது ஏனோ ஒதுங்கியிருக்கிறார்)  மனசாட்சி முத்தரசு 

நவரசமாக தொடர்ந்து எழுதிவரும் நண்பர்  பாலாவின்-பக்கங்கள் பாலா....

தமிழ் கூறும் வலையுலகில் இவர் அளவுக்கு நீ..ண்ட பதிவு யாரும் போடுவது கிடையாது. அவ்வளவு பெரிய பதிவாக  போடாமல் நூறு வார்த்தைக்குள் சுருக்கி போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.. 'தினசிரி ஜோக்' Bagawanjee KA






31 comments:

  1. ம்... கம்ப்யூட்டர உங்க மனைவியா நினைச்சு வாழறீங்க...

    ReplyDelete
    Replies

    1. ஹா.ஹா.. எதை நாம் அதிகம் வெறுக்கிறோமோ அதன்மீதுதான் அதிக அன்பு ஏற்படும்...நன்றி நண்பா..

      Delete
  2. உங்க மனைவிக்கு பூவெல்லாம் வாங்கி வைச்சு விட்டுருக்கீங்க போல....

    ReplyDelete
    Replies
    1. வேற..அப்படி இப்படி தாஜா பண்ணிதான் அதை கரக்ட் பண்ணியாகணும்.. :-)
      நன்றி பாஸ்..

      Delete
  3. என்னவொரு ஈடுபாடு...! ரசித்தேன்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி திண்டுக்கல் தனபாலன்

      Delete
  4. முதல் மனைவி அப்படி இப்படி என்றெல்லாம் தலைப்பைப் பார்த்தவுடன் ஓடோடி வந்தேன் ஏதோ நல்ல சுவாரஸ்ய கதை கிடைத்துவிட்டதென்று, பார்த்தால் கணினிதான் முதல் மனைவியாம்.. ஹுக்கும்!.
    நீண்ட பதிவை வசிப்பதைப்போல் தெரியவில்லை. சுவராஸ்யமாகவே இருந்தது.. அருமையான அனுபவம்.

    தொடர் பதிவை கொஞ்சம் பொறுமையாக எழுதலாம்னா ,நாம அடுத்து அழைக்க நினைத்த நபர்களை வேறு யாராவது அழைத்து விடுவார்களோ என்கிற பரபரப்பு பதிவை அவசர அவசரமாக எழுத வைத்திருக்கிறது. அப்படியும் இருவரை ஏற்கனவே அழைத்து விட்டார்கள்.// ஹாஹாஹா

    ReplyDelete
    Replies
    1. ஹா.ஹா.. அதுக்காக இப்படி பொதுவெளியிலயா சொல்வோம்....நன்றி சகோ..

      Delete
  5. கணனியை முதல் மனைவி என நீங்கள் சொல்லிக் கொண்டு இருப்பது உண்மையில் உங்கள் மனைவிக்கு தெரியுமா?! தெரிஞ்சா என்னவெல்லாம் பூகம்பம் வெடிக்குமோ? ஐயய்யோ..

    ReplyDelete
    Replies
    1. அத ஏன் கேக்குறீங்க...நான் எப்போதும் கம்ப்யூட்டர்லே உக்காந்திருந்தால்,எப்பப் பாத்தாலும் அதைக் கட்டிகிட்டே அழுவுரீங்களேனு திட்டுவா...ஒரு விதத்தில என் வைஃபுக்கு அது சக்களத்தி....

      Delete
  6. முதல் மனைவி கலக்கல்.. அனுபவம் சுவாரஸ்யம்...

    ReplyDelete
  7. கல்லூரியில் தொடங்கி சிங்கப்பூர் வரை சென்று விட்டீர்... நல்ல அனுபவம்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ரூபக் ராம்..

      Delete
  8. முதல் கணினியை நீங்க பணம் போட்டு வாங்கினீங்க. ஆனா மனைவி உங்கள பணம் போட்டு வாங்கினாங்க. சரிதானே? நீங்க மட்டும் இல்ல... நானும்தான்... எல்லாருந்தான்.. ஆனா ஒன்னு. நாம பணம் போட்டு வாங்கினத பழசாயிருச்சின்னா தூக்கிப் போடற மாதிரி நம்மள பணம் குடுத்து வாங்கினவங்களும் நினைச்சா? நம்ம கதி அதோகதிதான்.

    ReplyDelete
    Replies
    1. என்ன ஒரு தத்துவம்.. கலக்கிடீங்க...சூப்பர்.

      Delete
    2. உங்கள் வலைப்பூ ஜம்பாகி ஓட்டிகிட்டு இருக்கு என்னாச்சுனு பாருங்க தல.

      Delete
  9. ஹாஹா ஒரு கம்ப்யூட்டர் வாங்க பொய் எல்லாம் சொல்ல வேண்டி இருக்கு

    ReplyDelete
    Replies

    1. ஆமா தல...சில பல பொய்களை அவிழ்த்து விடலனா சில காரியங்களை சாதிக்க முடியாது.

      Delete
  10. 2002 ஆம் வருஷம் மே மாதம் எனது கனவான கம்ப்யூட்டர் சொந்தமாக வாங்கப்பட்டது.///

    2012 ஆம் வருசமா? டவுட்???

    ReplyDelete
  11. அனுபவம் நல்லா அனுபவிச்சி எழுதியிருகிங்க...

    ReplyDelete
    Replies

    1. நன்றி பிரகாஷ்... என்னுள் பொதிந்திருந்த நினைவலைகளை சலசலக்க வைத்ததற்கு நன்றி.

      Delete
  12. //என் வாழ்கையில மிக சந்தோசமான தருணங்கள் // அப்போ கல்யாணம் ஆனா தருணம்...? இருங்க இருங்க உங்க மனைவிகிட்ட சொல்றேன்... :-)

    கணினி பதிவில் எவ்வளவு அனுபவங்கள் சுவாரசியங்கள் :-) பெரிய பாதிவாக இருந்தாலும் போர் அடிக்கவில்லை சார்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி சீனு..!

      Delete

    2. //அப்போ கல்யாணம் ஆனா தருணம்...?// அத ஏன் இந்த சந்தோசமான நேரத்தில ஞாபகப்படுத்துறீங்க சீனு... :-) ... ஆனா அந்த ஐயிரு நல்ல நேரம் முடியப்போகுது சீக்கிரம் தாலியைக் கட்டுங்கன்னு சொன்னான். அதோட உள்ளர்த்தம் பிறகுதான் விளங்கியது.

      Delete
  13. முதல் கணினி அனுபவத்தை மிகவும் சுவாரசியமாகவும், ரசனையாகவும் எழுதியுள்ளீர்கள்... அந்த மவுஸ் மேட்டர் செம்ம.... :-)

    தொடர்பதிவுக்கு அழைத்துள்ளீர்கள்... நேரம் கிடைக்கும்போது எழுத முயல்கிறேன் நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சிம்பு.... விரைவில் எழுதுவீங்கன்னு எதிர்பார்க்கிறேன்.

      Delete
  14. என்னாது முதல் மனைவியா ? அடடா எப்பிடியெல்லாம் செல்லப் பெயர் வச்சிருக்காரு பாருங்க ம்ம்ம்ம்ம் சுவாரஸ்ய அனுபவம்தான்....!

    ReplyDelete
    Replies
    1. பின்ன..? அம்புட்டு பிரியம் அதுமேல... ஆனா என்ன பன்றது தல...உலகத்தில் எல்லாவற்றுக்கும் இறுதி நாளை குறிச்சி வச்சிருக்கான் ஆண்டவன்...

      Delete
  15. என்னக்கூட....அட....என்னக்கூட தொடர் பதிவு எழுத அழைத்தமைக்கு நன்றிகள். என் பேரைக் கேட்டவுடன் அரியலூருக்கு டிக்கெட் வாங்காமல் அரிதாக என்னையும் தொடர் பதிவு எழுத அழைத்ததற்கு நன்றிகள்.

    ReplyDelete