என் மனைவி வழி நண்பர் ஒருத்தர் இங்க(சிங்கப்பூர்) குடும்பத்தோடு இருக்காரு. நான்கு வருடத்திற்கு முன்பு தான் திருமணம் நடந்தது.குழந்தைகள் கிடையாது.ஆனால் சொந்த வீடு ,நல்ல கம்பெனி என ஓரளவு செட்டில்டு லைப் தான். அவர் மனைவியும் வேலை பார்கிறார்.சமீபத்தில் அவர்களைப் பற்றி அதிர்ச்சியான செய்தி ஓன்று கேள்விப்பட்டேன். இருவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்திருப்பதாக அவர்களின் உறவினர் மூலம் தகவல் கிடைத்தது.
ஒருவரின் சொந்த விவகாரங்களில் தலையிடுவது நாகரிகமற்ற செயல்தான் என்றாலும் இதற்கான அடிப்படை காரணம் என்னவாக இருக்கும் என்பதை கொஞ்சம் யோசித்துப் பார்த்தேன்..
ஒருவேளை முடிவை மாற்றிக்கொண்டு சேர்ந்து வாழ அவர்களின் குடும்பத்தினர் முயற்சி எடுக்கலாம்.அது வெற்றியும் பெறலாம். ஆனால் எதற்காக இந்த எல்லை வரை செல்லவேண்டும். இவர்கள் மட்டுமல்ல வெளிநாட்டுச் சூழலில் வாழும் பல பேர் டைவர்ஸ் என்ற எல்லையை தொடாவிட்டாலும் அதை நெருங்கி மீண்டும் திரும்பியவர்கள்தான். இப்படிப்பட்ட மனநிலைக்கு ஏன் அவர்கள் தள்ளப் படுகிறார்கள்..?
இதற்கான முக்கிய காரணம் 'ஓவர் பில்ட் அப்'. அதாவது வெளிநாட்டில் வேலை செய்பவர்களில் 90 சதவிகிதத் திற்கு மேற்பட்டவர்கள் தங்களின் உண்மையான நிலையை பெண் வீட்டாரிடம் சொல்வதில்லை. குறிப்பாக மனைவியாக வரப்போகிறவளிடமே மறைத்து விடுகிறார்கள். எதையும் சமாளித்து விடலாம் என்கிற குருட்டு தைரியம் இதற்கு காரணமாக இருக்கலாம்.
ஊரில், சில ஆயிரங்களில் சம்பளம் வாங்கும் போது ,ஓரளவு படிச்ச, சுமாரா இருக்கிற,ஓரளவு வசதி உள்ள பெண் இருந்தால் போதும் என்கிற மனது, அந்நிய மண்ணில் கால் வைத்தவுடன் 'ஐஸ்வர்யா' ரேஞ்சுக்கு தேடுகிறது. வசதி வாய்ப்புகள் நல்ல படியாக இருப்பவர்கள் தங்கள் ஸ்டேடஸ்-க்கு தகுந்த பெண்ணை தேடுவது தவறில்லைதான்.ஆனால் ஃபிளைட்டை விட்டு இறங்கி,வெளிநாட்டில் கால் பதித்த உடனையே தன்னை பில்கேட்ஸ் அளவுக்கு பீத்திக் கொள்பவர்களை என்ன செய்வது....?
இதில் இன்னொரு வகை இருக்கிறது. வெளிநாட்டுக்கு செல்பவர்கள் எல்லாம் ஒரே மாதிரியான வேலைக்கு செல்வதில்லை.குறிப்பாக வளைகுடா மற்றும் சிங்கப்பூர்-மலேசியா போன்ற நாடுகளுக்குச் செல்பவர்களில் ஐ.டி மென் பொறியாளர்களிலிருந்து புல் வெட்டும் தொழிலாளர்கள் வரை இருக்கிறார்கள்.ஆனால் ஊரில் இவர்களை பொத்தாம் பொதுவாக அழைப்பது 'வெளிநாட்டு மாப்பிள்ளை'.
அதற்கேற்றார்போல், இரண்டு வருடத்திற்கு ஒரு முறை ஊருக்குச் செல்லும் போது LED TV ,லேட்டஸ்ட் மொபைல், கையில் பிரேஸ்லெட்,கழுத்தில் பட்டையாக செயின் சகிதமாக இறங்கி ஊரையே கலக்கிவிட்டு வருவார்கள். அதற்காக இவர்கள் வெளிநாடுகளில் கொடுக்கும் விலை கொஞ்ச நஞ்சமல்ல. இங்கே சரியான தங்கும் வசதி,சாப்பாடு,வெளியுலகத் தொடர்புகள் கூட இல்லாமல் பல புதுக்கோட்டை சரவணன்கள் படும் கஷ்டங்கள் ஊரில் உள்ளவர்களுக்குத் தெரிவதில்லை.
சிங்கப்பூருக்கு சுற்றுலா வருபவர்கள் ஒரு விஷயத்தை கவனிக்கலாம். அழுக்கு படிந்த ஆடை, தலையில் அழுக்குத் தொப்பி, முகம் முழுவதும் அழுக்குத் துணியால் மூடி, முதுகில் புல் வெட்டும் இயந்திரத்தை சுமந்து கொண்டு ஒருவர் ரோட்டோரங்களில் புல்வெட்டிக் கொண்டிருப்பார்.அது மிகக் கடினமான வேலை. அவர் யாரோ ஒருவர் என இதுவரை நீங்கள் கடந்து சென்றிருக்கலாம். அதை செய்பவர் நிச்சயமாக மேலே குறிப்பிட்டவர் களில் ஒருவராக இருப்பார். நான் பார்த்தவகையில் அனைவருமே நம் மாநிலத்தவர்.
என் நெருங்கிய நண்பர் ஒருவர்,CNC (MECHANICAL )துறையில் உள்ளார். பொறியியல் பட்டம் பெற்றிருந்தாலும் MECHINIST ஆகத்தான் இருந்தார். நம்மூர் பணத்திற்கு ஒரு லட்சத்திற்குக் குறையாத சம்பளம். பெண் தேடும் போது 'டாக்டர் ரேஞ்சில்' பார்த்ததால், பல் மருத்துவர் சம்மந்தம் ஓன்று செட்டாகியது. நம்ம நண்பரும் சொந்த வீடு இருக்கு,கார் இருக்கு என அளந்துவிட, நல்ல குடும்பம் என்பதால் அதை ஒரு பொருட்டாக எடுக்கவில்லை பெண் வீட்டார்கள்.ஆனால் பெண்ணோ , வேறு ஒரு கற்பனை உலகத்தில் இருந்திருக்கிறார். நம்ம நண்பரோ, கல்யாணம் முடிந்த பிறகு வாங்கத்தான போறோம்.இது ஒன்றும் பெரிய தப்பில்லை என இருந்திருக்கிறார். திருமணம் முடிந்து வந்தபோது தான் எதிர்பார்த்தது எதுவுமே இல்லையென்று கோபமாகி,தினமும் சண்டைவர கடைசியில் விவகாரத்துவரை சென்றிருக்கிறது. விளைவு நண்பரின் நிரந்தர குடியுரிமையே ரத்தாகிவிட்டது.
இன்னொரு நண்பர், வீடு ஒப்பந்தம் எல்லாம் முடிந்தது.திருமணம் முடிந்து சில மாதங்களில் இவளுக்கும் நிரந்தர குடியுரிமை கிடைத்துவிடும்.அடுத்த மாதமே வீடு எங்கள் கைக்கு வந்துவிடும்.கிரகப்பிரவேசத்துக்கு எல்லோரும் பாஸ்போர்ட் எடுத்து வையுங்கள்.நான் டிக்கெட் எடுத்து அனுப்புகிறேன் என்று பெண் பார்க்க செல்லும்போதே ஏகபோகமாக அள்ளி விட்டுருக்கிறார். திருமணம் முடிந்து மூன்று வருடங்கள் ஆகிறது. இன்னமும் வாடகை வீடுதான்.அவர்களுக்குள்ளும் ஏதோ பிரச்சனை என்று கேள்விப்பட்டேன். அது வீட்டுப் பிரச்சனைக்காக என்று உறுதியாக சொல்ல முடியாவிட்டாலும்,மணமாகி ஆறு வருசமாகியும் இன்னும் குழந்தைப் பாக்கியம் இல்லை.
நண்பரின் நண்பர் கதை வேறு.பெண்பார்க்கும் போது WORK PERMIT என்கிற ஒப்பந்த அடிப்படையில்தான் இருந்திருக்கிறார்.ஆனால் அவர்களிடம், நான் எத்தனை வருடம் வேண்டுமானாலும் மனைவியுடன் தங்கும் அனுமதி உள்ளது.திருமணம் முடிந்த கையோடு அழைத்து சென்றுவிடுவேன்.அவளும் வேலைப் பார்க்கலாம் என சொல்லியிருக்கிறார்.ஆனால் இவரின் உண்மையான நிலை பிறகு தெரியவர , நிச்சயதார்த்ததோடு நின்றுவிட்டது.
இப்படி நிறைய சம்பவங்கள் உதாரணமாக சொல்லலாம். வெளிநாட்டில்தானே இருக்கிறோம். யாருக்கு என்ன தெரியப் போகிறது. திருமணத்திற்குப் பிறகு சமாளித்துக் கொள்ளலாம் என்கிற அலட்சிய சிந்தனைகளால் பாதிக்கப்படுவது ஏனோ பெண்கள்தான்.
மற்ற நாடுகள் எப்படியென்று தெரியவில்லை.சிங்கப்பூரில் தனி ஃபிளாட் வாடகைக்கு எடுத்தால் மினிமம் ரெண்ட் 80 ஆயிரம் ரூபாய். கேபிள் டிவி,இன்டர்நெட்,வாட்டர்,எலெக்ட்ரிசிட்டி இதில் வராது. ஒரு அறை மட்டும் வாடகை எடுத்தால் 40 ஆயிரம் ரூபாய். அது என்ன ஒரு அறை ..?
உதாரணமாக இரண்டு பெட்ரூம் உள்ள ஒரு ஃபிளாட்டில், டாய்லட் இணைப்புள்ள அறையில் ஹவுஸ் ஓனர் குடும்பம் தங்கிக் கொண்டு மற்றொரு அறை வாடகைக்கு விடப்படும். அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட நேரம் மட்டுமே சமையல் செய்ய அனுமதிக்கப்படும். ஹாலை உபயோகப் படுத்தக் கூடாது. தவிர,ஏசி போடக்கூடாது, நண்பர்கள் வரக்கூடாது, சத்தம் போட்டுப் பேசக்கூடாது...etc என ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். ஹவுஸ் ஓனர் கூடவே வசிப்பதால் இதில் எதையும் மீறவும் முடியாது.இது மாதிரியான ஒரு அமைப்பில்தான் இந்தியாவி லிருந்து திருமணமாகி வரும் நிறையப் பெண்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதில் நண்பர்கள் வீட்டில் தங்குபவர்களுக்கு ஓரளவு சலுகைகள் கிடைக்கும்.என் வீட்டில் உள்ள மூன்று பெட்ரூமில் ஒன்றை மட்டும் வாடகைக்கு விட்டுள்ளேன்.அதில் ஆந்திரா குடும்பம் ஓன்று குடியிருக்கிறது. கணவன் மனைவி இருவரும் வேலைக்குச்செல்ல அவர்களின் குழந்தையைப் பார்த்துக்கொள்ள நண்பரின் பெற்றோரும் உடன் இருக்கிறார்கள். ஆக மொத்தம் ஐந்து பேர் அந்த அறையில். இருப்பினும் எந்தவிதக் கட்டுப்படும் விதிக்காமல் ஓரளவு மனிதாபிமானத்தோடு நடந்து கொள்வதால் அவர்களும் சிரமமில்லாமல் இருக்கிறார்கள்.
ஆனால் எல்லா இடங்களிலும் இதுபோல் இருப்பதில்லை.சீனன் வீட்டில் குடியிருந்தால் சமைப்பதில் கெடுபிடி, மலாய் வீட்டில் ஏற்கனவோ கும்பலாக இருப்பதால் பிரைவேசி இருக்காது, பூர்வீக தமிழர்களின் வீட்டில் தங்கும் போது இன்னும் அதிக சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும். இப்படி பல சிக்கல்கள் வெளிநாட்டு வாழ்க்கையில்...
ஆனால்...இதையெல்லாம் நன்றாகத் தெரிந்து வைத்துக் கொண்டு,பெண் வீட்டாரிடம் உண்மையான நிலைமையை எடுத்துச் சொல்லாமல் மறைத்துவிடுகின்றனர் நிறைய வெளிநாடு வாழ் நண்பர்கள். பெண் பார்க்கும் சமயத்தில் நம் உறவினர்கள் நம்மைப் பற்றி கொஞ்சம் மிகைப்படுத்திதான் சொல்வார்கள். திருமணத்திற்குப் பிறகு நடக்கும் எந்த பிரச்சனைகளையும் அவர்கள் கண்டுகொள்ளமாட்டார்கள். ஆனால் பிரச்சனைகளை சந்திக்கப் போகும் நாம் தான் உஷாராக இருக்கவேண்டும்.இதுதான் சம்பளம்,மாதத்திற்கு இவ்வளவு செலவாகும்,இது மாதிரி இடத்தில்தான் தங்கப் போகிறோம், இன்னென்ன கட்டுபாடுகள் இருக்கிறது, ஆபிசில் என் பொறுப்பு இதுதான்,தினமும் இத்தனை மணிக்குத்தான் வருவேன்,சனி ஞாயிறுகளில் வேலை இருந்தால் செய்துதான் ஆகவேண்டும்...போன்ற முக்கியமான சில விசயங்களை மனைவியாக வரப்போறவளிடம் திருமணத்திற்கு முன்பே தெரிவித்து விடுவது நல்லது. குறைந்த பட்சம் அழைத்து வரும் முன்பாகவாவது தெரிவித்து,தெளிய வைத்து விடுவது சாலச்சிறந்தது.
இது, நண்பர்கள் மத்தியில் உள்ள பிரச்சனைகளை ஓரளவு அறிந்தவன் என்ற வகையில் என் மனதில் பட்டதை ஏதோ சொல்லனும்னு தோணிச்சிஅவ்வளவுதான்....
பாஸ்.... வெளிநாட்டு மாப்பிளை கனவு பெண்களுக்கு விழிப்புணர்வு தரும் பதிவு....
ReplyDeleteதலைப்பில் கட்டுரை சம்பந்தமா ஏதாச்சும் வார்த்தை சேர்த்திருக்கலாம்னு தோணுது.... வெளிநாடு, மாப்பிளை என...
கரெக்டுதான் பிரகாஷ்...தமிழ்மணத்தில சேத்தாச்சு...இனி தலைப்பை மாத்தினாலும் பழைய தலைப்பேதான் இருக்கும்னு நினைக்கிறேன்..
Deleteநீங்கள் சொல்வது போல் தலைக்கு பின்னால் தனி ஒரு ஒளி வட்டத்துடன் தான் இருக்கிறார்கள்...! பெற்றோர்கள் (பலவற்றிக்கு ஆசைப்படாமல்) பலமுறை விசாரித்து விட்டு, நன்றாக யோசித்துவிட்டு கல்யாண ஏற்பாடு செய்வது நல்லது...
ReplyDeleteநிச்சயமாக...! உங்கள் கருத்தை நானும் ஏற்கிறேன்.
Deleteமணிமாறன், என் வலைப்பூவிற்கு வந்து சிறப்பிததற்கு நன்றி !!!!
ReplyDeleteஇதுக்கெல்லாம் எதுக்கு பாஸ் நன்றி... நல்ல தகவல்,எழுத்துநடை இருந்தால் கண்டிப்பாக எல்லோரும் வருகைபுரிவார்கள்
Deleteஇங்கே [[பஹ்ரைனில்]] வெயிட்டராக வேலை செய்து கொண்டு பெண் வீட்டில் அக்கவுண்டண்ட் என்று பொய் சொல்ல....கல்யாணத்திற்கு முன்பே அவர்கள் விசாரிக்கும் போது இவன் உண்மை நிலை தெரியவர போன் போட்டு திட்டு வாங்கினான் நண்பன் ஒருவன். கல்யாணம் நடந்திருந்தால் நீங்கள் சொன்ன நிலைமைதான்.
ReplyDeleteஇன்னும் நிறைய சொல்லலாம் தல... ஆனால் கல்யாணத்துக்குப் பிற்பாடு தான் சங்கதியே இருக்கு... நன்றி..
Deleteமணிமாறன் நீங்கள் சிங்கப்பூரின் நிரந்தரகுடியிருப்பு வாசியா? என்ன.! ஒரு அறையின் வாடகை மட்டும் 40ஆயிரம் ரூபாய்? கன்வர்ட் பண்ணினால், தற்போதைய மலேசிய ரிங்கிட் இரண்டாயிரம் ரிங்கிட்? என்ன இவ்வளவு விலை? அப்படியென்றால் வீடே வாங்கமுடியாதோ அங்கே.! நல்ல பதிவு. நிலவரங்களை தெளிவாகச் சொல்லியிருக்கின்றீர்கள். உண்மைதான்.
ReplyDeleteஆமாம் சகோ... இங்கு வாடகை அதிகம் தான். சொந்த வீடு வைத்திருப்பவர்கள் வாடகை விட்டே சம்பாதித்து விடுவார்கள். ஒரு ரூமுக்கே எனக்கு $950 கிடைக்கிறது. ஒரு சிலர் இரண்டையுமே வாடகைக்கு விடுவார்கள். மொத்த வீட்டையும் வாடகைக்கு விட்டால் $2500 கிடைக்கும்.
Deleteஅதனால் தான் நிறையப்பேர் குடும்பத்தை ஊரில் விட்டுவிட்டு நண்பர்களோடு சேர்ந்து வசிக்கிறார்கள். ஒரு வீட்டில் 15 பேர் கூட தங்குவதால், தலைக்கு கணக்கெடுத்தால் குறைவாகத்தான் வருகிறது. பேரு வேண்டுமானால் சிங்கபூர் என பெருமையாக சொல்லிக் கொள்ளலாம்... ஆனால் நிறையப்பேர் படும் கஷ்டங்கள் ஊரில் உள்ளவர்கள் யாருக்கும் தெரியாது.