Tuesday, 21 February 2012

எய்ட்ஸ் -சிதைந்து போன குடும்பம்...சிந்திக்குமா அரசாங்கம்?.....

         மீபத்தில் நான் ஊருக்கே சென்று திரும்பியபோது என் மனதை பாதித்த சம்பவம்........ இதை ஹிட்ஸ்காகவோ, யாரையும் காயப்படுத்த வேண்டும் என்பதற்காகவோ அல்லது  ஏதோ எழுதவேண்டும் என்றோ எழுதவில்லை. என்னால் முடிந்த விழிப்புணர்வை ஏற்படுத்தலாமே என்ற எண்ணத்தில் தான் இந்தப் (கொஞ்சம் சீரியசான) பதிவு......


         திருவாரூருக்கு  மிக அருகில் உள்ள ஊர் (ஊர், பெயரெல்லாம் சொல்லி அந்தக் குடும்பத்தை மேலும் காயப்படுத்த விரும்பவில்லை..).அங்கிருந்து ஒரு துக்கச்செய்தி வந்திருந்தது.ஏதோ வயதானவர் இறந்து விட்டார் போல என நினைத்து சாதாரணமாகத்தான் விசாரித்தேன்.

     "பாவம் நாப்பது  வயசுதான் இருக்கும்.....குடும்பத்தப்பத்தி இப்படி யோசிக்காம பண்ணினதால  அல்ப ஆயுசுல போயிட்டாரு " னு அந்த ஊருக்குள்ள பேசிக் கொள்ள, என்ன ஆச்சுனு விசாரிச்ச எனக்கு அதிர்ச்சி. அவர் எய்ட்ஸ் நோய் தாக்கி இறந்திருக்கிறார். கிட்டத்தட்ட அந்த ஊரில் உள்ள எல்லோருக்கும் இந்த விஷயம் தெரிந்திருக்கிறது.

    அடப்பாவமே....படிப்பறிவு இல்லாதவர் போல.இப்படி பண்ணிட்டாரேன்னு நான் நினைத்துக்கொண்டு அவரைப்பற்றி விசாரித்த எனக்கு மேலும் ஒரு அதிர்ச்சி.அவர் படிக்காதவரோ விவரம் அறியாதவரோ அல்ல. நம் நாட்டின் பெருமை மிக்க வேலையில் இருந்தவர்.தான் செய்யும் வேலையில்  நூறு சதவித JOB SATISFACTION இருப்பதாக இந்தப் பணியில் உள்ள  ஒவ்வொரு இந்தியனும் எண்ணும்  வேலை.... நம் ராணுவத்தில் எல்லை பாதுகாப்புப் படை வீரராக இருந்தவராம்.

          நிறைய சொத்து,சொந்த வீடு,அரிசி மில்,ஆசைக்கு ஆஸ்திக்கு என்று இரண்டு குழந்தைகள்,அன்பான மனைவி என்று சகல வசதியோடு வாழ்ந்தவருக்கு இப்படி ஒரு சாவு.
   
      ராணுவத்திலிருந்து ஒய்வு பெற்று ஊருக்கு வந்தவருக்கு சில ஆண்டுகளில் உடல் நலம் சுகமில்லாமல் போகவே டாக்டரிடன் சென்றிருக்கிறார். அவர் பரிசோதித்தப் பின்பு தான் தெரியவந்தது, இவருக்கு இப்படி ஒரு நோய் தாக்கியிருக்கிறது என்று. உடனடியாக இவரின் மனைவியை சோதித்த டாக்டர் அடுத்ததாக சொன்ன செய்தி இடி போல் இறங்கியதுஅவர்களது குடும்பத்தில். கணவருக்காக காலமெல்லாம் காத்திருந்த அந்த அப்பாவி பெண்மணிக்கு அவர் கணவன் கொடுத்த பரிசு எய்ட்ஸ்..... நல்லவேளை அந்த இரண்டு சின்னஞ்சிறு பிஞ்சு உள்ளங்கள் தப்பியது.
   
      இந்த விஷயம் எப்படியோ லீக் ஆகி சொந்த பந்தங்களுக்கும் ஊராருக்கும் தெரிய வர, செல்வ செழிப்போடு வாழ்ந்த அந்தக் குடும்பத்தை கிட்டத்தட்ட தள்ளியே வைத்து விட்டார்கள். அவமானம் தாங்காத அந்த பெண்மணி இரண்டு மறை தன்னை மாய்த்துக்கொள்ள முயற்சி செய்தாராம்.அவமானத்தால் அணு அணுவாக செத்துக்கொண்டிருந்த இருவரில்,அந்த ராணுவ வீரர் இரண்டு வாரங்களுக்கு முன்னே நோய் முற்றி இறந்துவிட, ஒரு பாவமும் செய்யாத அவர் மனைவி தனது நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கிறார்.அவர் சொந்தக்காரர்கள், இது ஆரம்ப கட்டம் தான்...எப்படியும் சரியாக்கிவிடலாம் என்று தேற்றிக்கொண்டிருக்கிறார்கள்......

   நன்மையையும் தீமையும்  நாம் தேடிக்கொள்வதுதான். வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பது போல....இது போல் நிறைய சோகங்கள் நம் நாட்டில் ஆனால் இதில் சம்மந்தப்படாதவர்கள்  தண்டிக்கப்படுவது தான் மிகப்பெரிய கொடுமை.

          மீபத்தில் பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா ஒரு நிகழ்ச்சியில் சம்பவம் ஓன்று சொன்னார். இரண்டாம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுமிக்கு எய்ட்ஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாம்.அவளின் பெற்றோரை சோதித்துப் பார்த்ததில் அவர்களுக்கு ரிசல்ட் நெகடிவ் என்றே வந்ததாம்.குழம்பிப் போன டாக்டர்கள் அவளுக்கு ஏதோனும் ஊசி போடப்பட்டதா அல்லது ஆபரேஷன் நடந்ததா என்று துருவ ...எதுவுமே இல்லையென்று பதில் வர அவர்களுக்கே ஆச்சர்யமாக இருந்ததாம்.பிறகு அவளுக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டதா என்று விசாரிக்க..சில மாதங்களுக்கு முன்பு ரோட்டில் நடந்து செல்லும் போது ஒரு பிளேடு கிடந்ததாம்.அதை எடுத்து பென்சில் சீவும் போது இவளின் கை விரலில் வெட்டிவிட்டதாம்.பிறகு கொஞ்ச நாட்களில் அந்த காயம் சரியாகிவிட்டதாக  சொல்லியிருக்கிறார்கள். அதன் பிறகு விசாரித்தபோது தான்  தெரிந்தது அது ஒரு எய்ட்ஸ் நோயாளி சேவ் செய்துவிட்டு அந்த பிளேடை ரோட்டோரத்தில் வீசிவிட்டு சென்றதின் விளைவு என்று. எவ்வளவு அலட்சியம்!. அந்தச் சிறுமி என்ன பாவம் செய்தாள்?

       எய்ட்ஸ் பற்றி நம் மக்களுக்கு எந்த அளவு விழிப்புணர்வு இருக்கிறது? உலகில் மனித வளத்தில் நாம் தான் முதலில் இருக்கிறோம்.வளர்ந்த நாடுகள் எல்லாம் இந்தியர்களைத்தான் போட்டி போட்டுக்கொண்டு வேலைக்கு ஆள் எடுக்கிறார்கள்.ஆனால் எய்ட்ஸ் நோயாளிகள் எண்ணிக்கையில் நாம் எத்தனாவது இடம்?   2009  ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வு கீழே....


 
     எய்ட்ஸ்-யை உலகுக்குப் பரப்பிய ஆப்பிரிக்க நாடுகளுடன் நாம் போட்டிப் போட  வேண்டிய அவல நிலை..இந்தியாவில் மட்டும்  24லட்சம் பேருக்கு எய்ட்ஸ் உள்ளது. இது 2009 -ல் எடுக்கப்பட்ட சர்வே.  இன்று?

     இந்த எண்ணிக்கைகள் எல்லாமே எய்ட்ஸ் இருப்பது கண்டிப்பாக உறுதி செய்யப்பட்ட அறிக்கை. இதில் சந்தேக கேஸ்,மற்ற பால்வினை  நோய்கள்  என்று பார்த்தால் கோடியை தாண்டும் என்று சொல்கிறது ஒரு ஆய்வு.

   அப்படிஎன்றால் இவர்களுக்கு எய்ட்ஸ்யைப்பற்றி எதுவுமே தெரியாதா? அல்லது பாதுகாப்பான முறை பற்றி  விழிப்புணர்வு இல்லையா? பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை விடுங்கள்...இது அவர்கள் தலைவிதி ... ஆனால்  தெரிந்தே தவறு செய்யும் ஆண்கள்?

    தகாதஉறவை தடுக்கமுடியாது என்பதை அரசாங்கமே அறியும்.. அதனால் தான் பாதுகாப்பு முறையை பின்பற்ற சொல்லி அறிவுறுத்துகிறது. அதை கடைபிடிக்காததின் காரணம் என்ன? ஒருவேளை இப்படி இருக்கலாம்.   ஓன்று.. தப்பு செய்யும் எல்லோருக்குமா இந்த நோய் வருகிறது என்ற அலட்சியப்போக்கு ....இன்னொன்று ..எய்ட்ஸ் வந்து செத்தாலும் பரவாயில்லை என்று  'அந்தத் தருணத்தில்' தோன்றும் மனமாற்றம். இதை எவ்வாறு தடுக்கப் போகிறது நம் அரசாங்கம்...?
  
        தமிழ் நாட்டில் எய்ட்ஸ்-ல் முதலிடம் பிடிப்பது,தொழில் வளர்ச்சியில் முன்னணியில் இருக்கும் நாமக்கல்.இங்கு அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பது லாரி ட்ரைவர்கள் தானாம்.சரக்கு போக்குவரத்திற்காக குடும்பத்தை பிரிந்து தொலைதூரம் செல்வதால் இந்தத் தவறு நடப்பதாக சொல்கிறார்கள். இவர்களுக்கு பாதுகாப்பான முறை பற்றி விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதை விட்டு விட்டு, செக்ஸ் பற்றி சரிவரத் தெரியாத பள்ளிச் சிறுவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் 'எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம்' நடத்தி என்ன பயன்?



        இந்த நோயுக்கு மருந்தில்லை என்பது யாவரும் அறிந்ததே. ஆனால் இதைக்கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்திருக்கும் முயற்சி போதுமானதாக உள்ளதா?

    
----------------------------------((((((((((((((((((((((((((((((((((((())))))))))))))))))))))))))))))))))))))------------------    

2 comments:

  1. முதலில் குடும்பங்களை பிரிக்கும் இந்த பன்னாட்டு சூறையாடலை வெரடினலே 90% சதவீதம் பிரச்னை தீர்ந்து விடும் !

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி. நீங்கள் சொல்வதும் சரிதான்....

    ReplyDelete