Friday, 17 February 2012

மெரினா-கொஞ்சம் லேட்டான விமர்சனம்      சங்களின் சேட்டைகளை பசங்களை வைத்தே  பக்காவாக செல்லி,அந்த பசங்களுக்கு தேசிய விருது வாங்கிக்குடுத்து தானும் விருது வாங்கி தமிழ் ரசிகர்களின் மனசில் 'பச்சக்' என்று ஒட்டிக்கொண்ட 'பசங்க' பாண்டிராஜின் படமாச்சேன்னு படபடப்பு கலந்த ஆவலோடு தியோட்டருக்குப் போனா....... உள்ளே லைட்டா பொசுங்குன வாடை.

                சரி...படம் ஆரம்பத்தில அப்படித்தான் இருக்கும்.போகப் போகப் பாருங்க பாண்டிராஜ் பட்டையக் கெளப்புவாருன்னு  நெனச்சுக்கிட்டு பக்கத்து சீட்ல உள்ளவர்கிட்ட "படம் போட்டு ரொம்ப நேரமாச்சோ?.....படம் எப்படிங்க இருக்கு ? '-னு  கேட்க அவர் எந்த பதிலும் சொல்லாம முறைச்சுப் பார்க்க...அப்பறம்தான் தெரிந்தது பொசுங்குன வாடைக்கு காரணம்.

         சின்னப் பசங்கள வச்சே சிக்ஸ்சர் அடிச்சவராச்சே..சிவகார்த்திகேயன் கெடச்சிருக்க சிங்கிலாவா அடிப்பார்?- னு நான் நெனச்சது தப்பா போச்சே.... அதுக்குன்னு காமெடி னு சொல்லிட்டு அவங்க போடுற மொக்கையில ஏசி தியேட்டருலேயும் ஒரே வெக்கை...

    'பசங்க' படத்தில் புது ஹீரோ,புது ஹீரோயின்,பால்குடி மறவாத பொடிப் பசங்க,புது டெக்னிசியன் -னு புதிய டீமை  வைத்து பின்னி எடுத்தவராச்சே.... 'வம்சம்' படத்தில நாம எதிர்பாக்காத நேரத்தில இடுப்பிலிருந்து 'சுனைனா' சைக்கிள் செயினை உருவும்போது நம் ஈரகுலையே நடுங்கிப் போகுமே..... அந்தமாதிரி இதுலேயும் ஏதாவது இருக்கும்னு நெனைச்சிகிட்டு உட்காந்திருந்தா..கடைசியில படமே முடிஞ்சுபோச்சு....
 
            நீ வேணா பாரு மெரீனா படத்திற்குப்பிறகு 'பசங்க பாண்டிராஜ்'-னு பேரை 'மெரீனா பாண்டிராஜு'-னு  மாத்தி வச்சுக்க போறாருனு என் .'.பிரண்டு கிட்ட  சவால் விட்டது தப்பா போச்சே...சரி பழைய மேட்டரயெல்லாம்  விட்டுத் தள்ளுவோம்...இது அவரோட முதல் படம்னு வச்சுப்பாத்தா உண்மையிலே மனுஷன் கலக்கிட்டாருனுதான் சொல்லணும். 

   டலுக்கும் கரைக்கும் உள்ள பாசப்பிணைப்பை பல  தமிழ்படங்கள் ( எம் ஜி யாரின்  படகோட்டியிலிருந்து ஒரே வாரத்தில் படுத்துக்கொண்ட விஜயின்   சுறா  வரை)  ஏற்கனவே  பல கோணத்தில் சொல்லியிருந்தாலும் கரைமேல் உள்ள சிறுவர்களின் நெஞ்சில் உள்ள  சோகங்களை  அந்த ஈர மணலின் வாசத்தோடு சொல்லிய இயக்குனர் பாண்டிராஜுக்கு தாராளமாக ஒரு கோடி பூங்கொத்துக்கள் கொடுக்கலாம்.

     
   50 க்கும் அதிகமான புதுமுகங்களை நடிக்க வைத்து வேலைவாங்குவது ஒன்றும் சாதாரணமான விஷயம் அல்ல.எல்லோரையும் நடிக்க வைத்து சாதித்து காட்டியிருக்கிறார் இயக்குனர்.

     சுண்டல்,சங்கு,காத்தாடி விற்கும் சிறுவர்கள்,பிச்சைக்கார தாத்தா,குதிரை சவாரி ஏற்றுபவர்,பெட்ரோல் திருடுபவன்,பாட்டுப்பாடி வித்தைக்காட்டி காசு கேட்கும் அப்பாவும் மகளும்,சேகுவாரா கெட்டப்பில் வரும் கீழ்பாக்கத்து இளைஞர், இவர்களுக்கு உதவும் போஸ்ட்மேன் என நாம் அன்றாடம் பீச்சில் பார்க்கும் கேரக்டர்களை அப்படியே நம் கண் முன் நிறுத்துகிறார்.

      ஆனால் இவர்களுக்குப் பின்னால் மறைந்திருக்கும் சோகங்களை சொன்ன விதத்தில்தான் இயக்குனர் கொஞ்சம் சறுக்கியிருக்கிறார்.மருமகளின்   கொடுமை தாங்காமல் வீட்டை விட்டு வெளியே வந்து பிச்சை எடுக்கும் அந்த பிச்சைக்கார தாத்தாவின் கேரக்டர்தான் படத்தில் அழுத்தமாக சொல்லப் பட்டிருக்கிறது.அப்படிஎன்றால் பிச்சை எடுத்து வாழத் துணிந்ததற்கான காரணத்தை அழுத்தமாக சொல்ல வேண்டாமா? வெறும் ஐந்து நொடிகளில் முடிந்து விடுகிறது அவரது பிளாஷ் பேக்.

   பசங்க படத்தில் கலக்கிய பக்கடா பாண்டிதான் இதில் ஹீரோ.ஆனால் அவருக்கு ஒரேயடியா  செண்டிமெண்ட் சீன வச்சி வெறுப்பேற்றி இருக்கிறார்கள்.அவரோட நண்பனா வரும் கைலாஷ் பக்கத்து வீட்டு பையன்  போல இருக்கிறார்.அவர் வீட்டை விட்டு ஓடிவந்த காரணம் அவ்வளவு சுவாரஸ்யம் இல்லையென்றாலும் கொஞ்சம் நடிக்கவும் செய்திருக்கிறார்.

   படத்தின் இன்னொரு நெருடல் திரைக்கதை.மொத்தப்பேரும் கயிறு கட்டி இழுத்தாலும் நகராத திரைக்கதையை,இன்ஸ்பெக்டர் மகனை கைலாஷ் கல்லால் அடித்துவிட அவனை  இரண்டு சிரிப்பு போலிசை வைத்து தேடவைத்து ஏதோ சஸ்பென்ஸ் கதை போல் நகர்த்த முயற்சி செய்திருக்கிறார்கள்.கடைசியில் 'சப்' பென்று முடிந்ததுதான் சிரிப்பே வராத கொடுமை. 
   
    டிவி இன்டர்வியில் படபடவென்று பொரிந்துதள்ளும் பசங்களின் பயோடேட்டா,கொரியரில் அனுப்பும் ஆப்பு,ரிவெட் ஐடியா இரண்டும் புதுமையான கவிதை.    

  காம்பெயரிங்கில் கலக்கும் சிவகார்த்திகேயன்,பக்கடா பாண்டி இருந்தும் காமெடிக்கு அப்படியொரு  பஞ்சம்.வெறும் எஸ் எம் எஸ் ஜோக்கை வைத்துதான் ஒப்பேற்ற வேண்டுமா? சிவாவுக்கு மாடுலேஷன் நெறைய மிஸ்ஸிங்.இழுத்து இழுத்து பேசுகிறார்.பசங்க படத்தில் வரும் .'.போன் மேட்டர் போல் இதிலும் வைத்திருக்கிறார் இயக்குனர்.அதில் 'ரெட்டை வாழைப்பழம்' என்றால் இதில் 'இட்லி சட்னி' மேட்டர்.பசங்களை வைத்து காமெடி பண்ணுகிறேன் பேர்வழினு சொல்லிட்டு 'நம்பர் ஒன்' போவதில் போட்டி வைப்பது,கவுட்டிக்குள் கையை வைத்து சவுண்டு விடுவது என்று ரொம்பவே போரடிக்கிறார். 

      கரைமேல் கடலளவு சோகங்கள் இருக்க,வெறும் கடுகளவு  பிரச்சனைகளை மட்டும் அலசியது இன்னொரு குறை.சுனாமியின் சோகங்கள் கூட அந்த பீச் மணலில் புதைந்திருக்கிறதே.ஒரு பாடல் காட்சியில் விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பது போன்ற கட்சியை வைத்திருக்கிறார்கள்.அதை இன்னும் காட்சிப்படுத்தி எச்சரித்திருக்கலாம்.காதல் ஜோடிகள் செய்யும் அசிங்கங்களை தட்டிக்கேட்பவராக வரும் அந்த சேகுவாரா கெட்டப் மனிதனின் நடிப்பு ரொம்ப செயற்கையாக இருக்கிறது.பீச்சில் காதலர்கள்  பேசும் போது ஒட்டுக்கேட்டு  பின்பு  ரொமான்ஸ் பண்ணும்போது  விசிலை ஊதி அவர்களை துரத்தி விடுவதால் இந்த தவறுகள் குறைந்து விடுமா என்ன? பீச்சில் நடக்கும் தவறுகளை செவிட்டில் அறைந்தால் போல் சுட்டிக்காட்டும் காட்சியமைப்பும் வசனங்களும் இல்லாதது மிகப்பெரிய மைனஸ் . 

    படத்தில் ஆறுதலான விசயங்களில் ஓன்று அந்த போஸ்ட்மேன்.இப்படி ஒரு போஸ்ட்மேன் நம்ம ஊரிலும் இருக்கக் கூடாதா என்று  ஏங்கும் அளவுக்கு சாந்தமான முகம்.அலட்டிக்கொள்ளாத அருமையான நடிப்பு.இன்னொருவர் அந்த நடனமாடும் சிறுமி.பார்ப்பதற்கு 'குட்டி ஸ்ரீதேவி' மாதிரி இருக்கிறார். நளினமாக ஆடும்  நடனமென்ன.....பட படவென்று பேசும் அந்த கண்களென்ன... அவ்வளவு அழகு.

   படத்தின் கதைக்கருவே குழந்தைக்கல்வியின்   அவசியத்தைச் சொல்வதுதான் என்றால் அதையாவது தெளிவாக சொல்லவேண்டாமா?.  எல்லா சிறுவர்களையும் வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டுபோய் ஒரு ரூமில் அடைத்து வைத்து அவர்களுக்கு  விளக்கிச்சொல்வது ஏதோ 'முரட்டுக்கல்வி' போல் உள்ளது.வழக்கம் போல் சசி கம்பெனியின் ஆஸ்தான நடிகர் ஜெயப்ரகாஷ் இதிலும் வந்து புத்திமதி சொல்கிறார்.

   இந்தப்படம் 5 டி கேமரா மூலம் படமாக்கப் பட்டதாம்.பீச்சில் நடக்கும் அந்த குதிரைப்பந்தயம்  அழகாக படம் பிடித்திருக்கிறார்கள். 'காதல் ஒரு தேவதையின் அழகா' பாடல் அருமை.
     
      
      சொந்த காசைப்போட்டு படமெடுக்கிறோமே  என்று ரெண்டு குத்துப்பாட்டு, டபுள்மீனிங் வசனங்கள், லேட்டஸ்ட் நெம்பர் ஒன் காமெடியன், தொப்புள் தெரிய வலம் வரும் ஹீரோயின்,அனல் பறக்கும்  .'.பைட்டு என்று எந்த கமர்சியல் கலவையும் இல்லாமல் தான் சொல்ல வந்ததை எந்த காம்ப்ரமைசும்  பண்ணாமல்  தைரியமாக சொன்ன இயக்குனர் பாண்டிராஜுக்காக  இந்தப்  படத்தை ஒருமுறையாவது  பார்க்கலாம்.                

   --------------------------------------(((((((((((((((((((((())))))))))))))))))))))))))))))))---------------------              
 

        

2 comments:

  1. லேட்டா சொன்னாலும் அழகாக சொல்லியிருக்கீங்க. நன்றி.

    ReplyDelete
  2. ரொம்ப ரொம்ப நன்றி நண்பரே....

    ReplyDelete