Wednesday, 4 April 2012

அண்ணா பல்கலைக்கழக மாணவர் தற்கொலை...திடுக்கிடும் பின்னணி

    கடந்த வாரம் இணையத்தில் படித்த ஒரு செய்தி என் பழைய நினைவுகளை கனத்த இதயத்தோடு அசைபோட வைத்தது.பள்ளிப் படிப்பை தமிழில் பயின்று பின் கல்லூரி சென்று ஆங்கிலத்தில் படிக்கும் போது ஏற்படும் சிரமங்கள், எத்தனை பேர் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டிருக்கிறது என்று பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

   முதல்ல... அந்த சோகமான செய்தியை சொல்லிடுறேன்.

மணிவண்ணன் 
   தர்மபுரி பாப்பிரெட்டிப்பட்டி அருகே தேவராசபாளையத்தை சேர்ந்தவர்  மணிவண்ணன்(21).இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் எலெக்ட்ரானிக்  கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் 3ம் ஆண்டு படித்து வந்தார்.கடந்த மார்ச்-27ம் தேதி பல்கலைக்கழக விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்திருக்கிறார். இவரைப் பற்றிய மற்ற விவரங்களை அறிந்த போது கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

     இறந்து போன மாணவன் மணிவண்ணன், வசதி வாய்ப்பான குடும்பத்தைச் சேர்ந்தவர் கிடையாது. இவரின் தந்தை செல்வம் இவர்களை விட்டுவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு சென்றுவிட,தாயார் காஞ்சனா கூலி வேலை செய்து மணிவண்ணனையும், அவரது தம்பி மதிவாணனையும், தங்கை சர்மிளாவையும் காப்பாற்றி வந்தார்.

     ஏழ்மை காரணமாக மணிவண்ணன் தனது 12-வது வயதிலேயே படிப்பை நிறுத்திவிட்டு,தனது தாய் காஞ்சனாவுடன் செங்கல் சூளையில் கூலி வேலை பார்த்தார்.2008-ம் ஆண்டு,தர்மபுரி மாவட்ட கலெக்டராக இருந்த அபூர்வா ஐ.ஏ.எஸ். கொத்தடிமைகளை மீட்கும் பணிக்காக,மணிவண்ணன் வேலை பார்த்த செங்கல் சூளைக்கு சென்றிருக்கிறார்.அப்போது மணிவண்ணனின் படிப்புத் திறமையையும்,ஏழ்மை அவனது படிப்புக்கு தடையாக இருப்பதையும் கலெக்டர் அபூர்வா கேட்டறிந்தார்.உடனடியாக மணிவண்ணன் தொடர்ந்து படிப்பதற்கு அபூர்வா உதவி செய்தார்.அவரது உதவியால்தான்,மணிவண்ணன் நன்றாக படித்து,சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தாராம்.

District Collector, Ms. Apoorva, IAS
    மாணவர் மணிவண்ணன் ஏழ்மையில் இருந்தபோதிலும், படிப்பில் மிகவும் கெட்டிக்காரராக இருந்தாராம். அவர் பிளஸ்-2 தேர்வில் 1159 மார்க் வாங்கி மாநிலத்தில் 13-வது இடத்தைப் பிடித்தார்.அவர் இந்த அளவுக்கு படிப்பதற்கு காரணகர்த்தாவாக இருந்தவர் ஐ.ஏ.எஸ்.அதிகாரி அபூர்வா என்று சொன்னால் அதுமிகையாகாது.ஆனால்,அவரது கனவு முழுவதுமாக  நிறைவேறவில்லை. இடையிலேயே முடிந்துபோனது.

   மணிவண்ணன் பிளஸ்-2 தேர்வில், நல்ல மதிப்பெண் எடுத்திருந்தபோதிலும்,அவருக்கு ஆங்கில அறிவில் குறைபாடு இருந்தது. தமிழில் அவர் நல்ல புலமை பெற்றவர்.அவர் 8-வது வகுப்பு படிக்கும்போதே, தமிழில் கவிதை எழுதினார்.தற்போது கூட"தாய்ப்பால் வாசம்''என்ற கவிதை புத்தகத்தை எழுதி வெளியிட இருந்தாராம்.

         ஐ.ஏ.எஸ்.அதிகாரி அபூர்வாவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அந்த புத்தகத்தை,'அபூர்வா செந்தமிழன்'என்ற புனைப்பெயரில் எழுதி இருக்கிறார். மணிவண்ணனை,தமிழை அடிப்படையாக வைத்து பட்டப்படிப்பு படிக்க வைத்திருந்தால்,அவர் பெரிய ஆளாகியிருப்பார்.அவர் என்ஜினீயரிங் படிப்பை, ஆங்கில வழியில் படிக்க மிகவும் கஷ்டப்பட்டுள்ளார்.

 கடந்த 3ஆண்டுகளில் அவர் 26 பாடங்களில் பெயிலாகி உள்ளார்.இந்த ஆண்டு இன்னும் 8 பாடங்களில் பரீட்சை எழுத வேண்டியுள்ளது. 4-வது ஆண்டு பரீட்சை வேறு உள்ளது.படிப்பில்,தேர்வாக முடியாததால்,மன அழுத்தம் காரணமாகத்தான்  மணிவண்ணன் தற்கொலை செய்து இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
 
     அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மன்னர் ஜவகர் கூறுகையில், “மாணவன் மணிவண்ணனின் சாவுக்கான உண்மையான காரணம் தெரியவில்லை. அவர் இறந்தது துரதிர்ஷ்டவசமானது, இன்றுதான் அவரது அகடமிக் கல்வி பட்டியலை முழுமையாக பரிசோதித்தேன். முதல் செமஸ்டரில் அதிக மதிப்பெண் பெற்று அனைத்து பாடங்களிலும் தேர்ச்சியடைந்துள்ளார். அதேநேரத்தில், தொடர்ந்து நடைபெற்ற 2, 3, 4, 5ம் செமஸ்டர் தேர்வுகளில் எழுதிய 32 பாடங்களில் 26 பாடங்களில் தோல்வியடைந்துள்ளார்.நன்றாக படிக்கக் கூடிய மாணவர் இப்படி தோல்வியடைந்தது எதனால் என்பது தெரியவில்லை.


      தோல்வியடைந்த பாடங்களுக்கான அரியர் தேர்வு கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. அதில் சரியாக தேர்வு எழுதவில்லை என்று தெரிகிறது. அடுத்த நாள் நடைபெற இருந்த தேர்வை எழுதாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.அவர் எழுதிய கவிதை புத்தகம் ஏப்ரல் 4ம் தேதி பல்கலைக்கழகத்தில் வைத்து வெளியிடப்பட இருந்தது.அதற்குள் மணிவண்ணன் தற்கொலை செய்து கொண்டார். மணிவண்ணன் தைரியமான மாணவன்,அவர் தற்கொலை செய்து கொள்வார் என்று நான் எதிர் பார்க்கவில்லை" என்றாராம்.

         பொதுவாகவே..  +2 ல தமிழ் மீடியத்தில் படிச்சி ஆயிரம் மார்க்குக்கு மேல வாங்கினவங்க கூட மெடிகல் அல்லது இஞ்சினியரிங்-ல சேர்ந்து படிக்கிரப்போ இங்கிலீஷ் மீடியத்தில படிச்சுட்டு வந்த பசங்க கூட போட்டிப் போட முடியாமல் சோர்ந்து போயிடுறாங்க. அதுவே பின்பு அவர்களுக்கு மன அழுத்தத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தி விடுகிறது.ஸ்கூல படிக்கும் போது பெற்றோர், ஆசிரியர்கள் கிட்டேருந்து கிடைக்கும் ஊக்கம் தான் நமக்கு  உற்சாகத்தைக் கொடுத்து அதிக மார்க் எடுக்க தூண்டுது.ஆனால் காலேஜில படிக்கிறப்ப ந்த ஊக்கம் நமக்கு கிடைக்கிறதில்ல.

      தமிழில் அறிவியல் பாடம் படிக்கும் போது விசை,வேலை, திசைவேகம்,திருப்புத்திறன்,நியூட்டன் விதி,பாயில் விதி இப்படி நிறைய விசயங்கள் தமிழ்ல தெளிவா விளக்கத்தோட படிச்சிருப்போம். எப்போ கேட்டாலும் உடனே சொல்ற மாதிரி நம்ம மனசுல அப்படியே பதிஞ்சிருக்கும். ஆனால் தமிழ்ல படிச்ச இதே விசயத்த காலேஜில ஆங்கிலத்தில் படிச்சா.. படிக்கிறப்போ புரியும் அப்பறம் மறந்துடும்.தமிழ் மீடியத்தில படிச்சுட்டு போற நெறைய பேருக்கு இந்த வியாதி இருக்கும்.சில நேரங்களில தெரிஞ்ச ஒரு விசயத்த தெரியாமலே படிச்சிருப்போம்.

புரியலயா?..... என்ன நோகடிச்ச அந்த ஒரு வார்த்தை....

    நான் காலேஜில படிக்கிறப்போ கெமிஸ்ட்ரியில'Sublimation'னு ஒரு வார்த்தை அடிக்கடி வந்துகிட்டே இருந்துச்சி.அடிக்கடி வந்ததாலையோ என்னவோ அந்த வார்த்தை மனசுல பதிஞ்சி போச்சி.இதுக்கு அர்த்தம் கேட்டா இது கூட தெரியாதான்னு பசங்க கிண்டலடிச்சா என்ன பன்றதுன்னு யோசிச்சுட்டு அப்படியே விட்டுட்டேன்.அப்பறம் ஒரு வழியா பார்டர்ல பாஸ் பண்ணி அடுத்த செமஸ்டர் போயாச்சி.பாத்தா...அடுத்த செமஸ்டர்லேயும் அதே வார்த்தை திரும்ப வருது.சரி இதுக்கு மேல தாமதிச்சா படிக்கிறதுக்கே ஒரு அர்த்தம்(?!) இல்லாமல் போய்டும்னு நேரா போயி இங்கிலீஸ் மீடியம் படிச்ச நண்பன் கிட்டே போயி கேட்டுட்டேன்.அவன் ஓரக்கண்ணால மேலேயும் கீழேயும் பாத்துட்டு விளக்கத்தச் சொன்னான். 'சாலிட் ஸ்டேட்லேருந்து லிக்யுடு ஸ்டேட்க்கு போகாம டைரக்டா கேசியஸ் ஸ்டேட் க்கு மாறுறதுக்கு பேருதான் சப்ளிமேசன்' அப்படீன்னு சொன்னான். அட வென்ட்ரு..இதுக்கு பேரு பதங்கமாதல்.இத நான் எட்டாம் வகுப்பிலே படிச்சுட்டேனே.எங்க சயின்ஸ் வாத்தியாரு சூடத்த கொளுத்தி எல்லாம் வேற காமிச்சாரே..இதுக்கு அர்த்தம் புரியாமலே ஒரு செமஸ்டர் தாண்டி வந்துட்டேனே.சரி.. சரி.. இந்த விஷயம் நமக்குள்ள இருக்கட்டும்னு டீலிங்க  முடிச்சுட்டு நடைய கட்டிட்டேன்.இது போல எத்தன வார்த்தை தெரிஞ்சும் தெரியாம படிச்சிருக்கேன்.இப்படி எல்லாத்துக்கும் அர்த்தம் தேடிகிட்டே இருந்தா என்னைக்கு டிகிரி வாங்குறது?.

     பொதுவாகவே அண்ணா யுனிவர்சிடி,ஆர்.இ.சி.உள்ளிட்ட டாப் லெவல் இன்ஜினியரிங் காலேஜ்-ல உள்ள சிலபஸ் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும்.சி பி எஸ் சி-ல படிச்சுட்டு வர்றவங்களுக்கு கூட கஷ்டமா இருக்கிற இந்த பாடத்திட்டங்கள் கிராமப்புறத்திலிருந்து வர்ற மாணவர்களுக்கு மயித்தக்கட்டி மலைய இழுக்கிற மாதிரிதான்.அதிலேயும் பாடம் நடத்துற புரொபசர் எல்லாமே அவங்க லெவெலுக்கு நடத்துவாங்களே தவிர கடைக்கோடி மாணவர்களுக்கும் புரியும் படி நடத்துவது இல்ல. இன்ஜினியரிங் காலேஜ்-ல முதல் ரெண்டு செமஸ்டர்ல உள்ள எல்லா பாடமும் +1,+2 ல படிச்ச  விசயங்கள் தான்.இங்கிலீஷ் மீடியத்தில படித்தவர்களுக்கு இது ரொம்ப சுலபமா இருக்கும்.ஆனால் தமிழ் மீடியத்துல படிச்சிட்டு வர்றவங்க எல்லாமே புதுசா படிக்கிற மாதிரி இருக்கும்.இதப் புரிஞ்சுகிட்டு படிக்கிறதுக்குள்ள எக்சாமே வந்துடும்.இதுல அரியர் விழும் போதுதான் நல்லா படிக்கிற பையன் கூட சோர்த்து போயி படிப்பில ஆர்வமே இல்லாம போற சூழ்நிலை வந்திடும்.பிறகு இந்த அரியர்ஸ் எல்லாத்தையும் முடிக்குறதுக்குள்ள அடுத்தடுத்து நிறைய அரியர்ஸ் தலை மேல இடி மாதிரி விழும்.பத்து அரியர்ஸ் எழுதி பாஸ் பன்றது...பத்து பொட்ட புள்ளைங்கள பெத்து கல்யாணம் பண்ணி குடுக்கிற மாதிரி.

       நான் படிச்ச காலேஜில 'இயர் பேக்'-னு ஒரு சிஸ்டம் இருந்துச்சி.ஒரு அரியருக்கு மூணு வாய்ப்பு தான் தரப்படும்.அதுலேயும் பாஸ் பண்ணலைனா, ஸ்கூல்ல பெயில் ஆக்குற மாதிரி இதுலேயும் பெயிலாக்கி ஜூனியர் செட்ல தூக்கி போட்டுடுவாங்க.அந்த மூணாவது அட்டம்ப்டுக்கு போறவுங்க  தாடி மீசையோட சைக்கோ மாதிரி திரிவாய்ங்க.என் நண்பன் ஒருத்தன் எக்ஸாம் அன்னிக்கு முதல் நாள் நைட்டு டீ குடிக்க போனவன் திரும்பியே வரல.சரி வேற பிரண்டு ரூமுக்கு போயிருப்பான்னு அசால்டா விட்டுட்டோம்.அடுத்த நாள் எக்சாமுக்கும் வரல.காலேஜ் எல்லாம் தேடிப்பாத்துட்டு ஊருக்கு போன்  பண்ணிக் கேட்டா,நைட்டு டீ குடிக்க போனவன் கட்டுன லுங்கியோட பஸ் ஏறி திருச்சியிலிருந்து விருதுநகருக்கு போயிருக்கான்.அங்க அவன பெத்தவங்க அந்தக் கோலத்துல பாத்துட்டு குழம்பி போயி,"என்னப்பா இந்த நேரத்தில"-னு கேட்டிருக்காங்க."இல்ல சும்மா டீ குடிச்சிட்டு போகலாம்னு வந்தேன்-னு சொல்லியிருக்கான்.அவன் சொன்னத கேட்டதும் அவங்களுக்கு  மயக்கமே வந்துடுச்சாம்.பின்ன...பெரிய இன்ஜினியர் ஆவான் நம்ம பையன்னு நெனச்சிகிட்டு இருந்தவங்க முன்னாடி போயி இவன் இப்படி நின்னா? இது போல மன அழுத்தத்தில நானும் கொஞ்சம் பாதிக்கப்பட்டேன் என்பதனால (ஹலோ...அப்பறம் தெளிஞ்சிருச்சி) இவ்வளவு சொல்ல வேண்டியிருக்கு.

   சரி இதற்கு என்னதான் தீர்வு?..தொழில்நுட்ப படிப்புகளை தமிழ்ல கொண்டு வந்துட்டா..?அது முதலுக்கே மோசமாயிடும்.இன்ஜினியரிங் முடிச்சிட்டு வேலைக்கு போனா முதல்ல 'பீட்டர்ரு' எப்படி இருக்குனு தான் பாக்குறாங்க.அல்லது 'ஸ்டேட் போர்ட்' பாடத்திட்டதில மாற்றம் கொண்டு வரலாமா? பிறகு கண்டிப்பாக இது அரசியலாக்கப்படும்.....பிறகு என்னதான் தீர்வு?

         

தகவல்கள்;தமிழ் குறிஞ்சி.        
----------------------------------------------------------X---------------------------------------------------
 
 

14 comments:

  1. அடிப்படை கல்வியில் மாற்றம் வேண்டும். பள்ளித்தருவாயிலேயே தமிழோடு சேர்ந்து ஆங்கிலம் மற்றும் ஹிந்தியை பயிற்விக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. இந்தி ஒரு திணிப்பு மொழியா இருக்கலாம்.ஆனால் ஆங்கிலம் ஒரு வியாபார மொழி.இன்றைய கால கட்டத்திற்கு இது அவசியம் தேவைப்படுகிறது.வருகைக்கு மிக்க நன்றி.

      Delete
  2. மணிமாறன்,

    மிகவும் வருத்தமான விஷயம், நானும் செய்தித்தாளில்ப்படித்தேன் வேறு ஏதேனும் காரணமாக இருக்கலாம் என நினைத்தேன்.

    இப்போதெல்லாம் அரியர்ஸுக்காக மாணவர்கள் பெரும்பாலும் கவலைப்படுவதில்லை என்பதால் அப்படி நினைத்தேன். ஆனால் மாணவரின் குடும்பம் ஏழ்மையானது என்பதை நினைக்கும் போது ,அவருக்கு அரியர்ஸ் நினைத்து இன்னும் கவலை அதிகமாகி இருக்கும். வேலை கிடைத்தால் குடும்பத்தை நன்றாக வைத்திருக்கலாம்,இனிமே எப்போ முடித்து குடும்பத்தை காப்பாற்ற என்ன செய்வது என்பது போன்ற பொருளாதாரக்கவலைகள் மனதை அழுத்தி இப்படி செய்து வைக்க தூண்டி இருக்கலாம்.மேலும் சக மாணவர்கள் வேறு நக்கல் அடிப்பார்கள்.

    மேலும் அண்ணா பல்கலையில் பல விதிகள் தமிழ் நாட்டில் எங்கும் இல்லாதது போல எல்லாம் இருக்கு. ஒரு செமெஸ்டரில் இரண்டு அரியர்ஸ் தான் எழுத முடியும், ஆட் செமஸ்டர்,ஈவன் செமஸ்டர் என்று வேறு இருக்கு, பின்னர் தனியாக ஆண்டு இறுதியில் சப்ளிமெண்ட் எக்ஸாம் என்று ஒன்று வேறு உண்டு.3 தடவை பெயில் ஆனால் மீண்டும் வகுப்புக்கு சென்று படிக்க வேண்டும். நீங்கள் சொன்னது போல ஒட்டு மொத்தமாக ஒரு வருடம் பின்னால் போக வேண்டாம் அந்த பாடத்திற்கு மட்டும் பின்னால் போக வேண்டும்.

    இது போல கிரடிட் ஹவர்ஸ், மினிமம் ஒஜிபி என்று படுத்துவார்கள்.பாடம் நடத்தி எல்லாம் புரிய வைக்க மாட்டார்கள் புத்தகத்தை மனப்பாடம் செய்து தான் மார்க் எடுக்க வேண்டும் அங்கு.

    அம்மாணவனே வேறு ஏதேனும் ஒரு தனியார் கல்லூரியில் படித்திருந்தால் எளிதாக படித்திருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. கேட்டா...காலேஜின் ஸ்டாண்டர்ட மெய்ண்டைன் பண்ணுறோம்னு சொல்லுவாய்ங்க.ஒரு புத்திசாலி பையன் மொழிப் பிரச்சனையால இப்படி இறந்து போறது மிகக் கொடுமையான விஷயம்.இத"பெரிய பெரிய காலேஜ்" எல்லாம் எப்போ புரிந்துக்கொள்ளும்னு தெரியல... பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே.

      Delete
  3. நந்து, பாஸ்டன்5 April 2012 at 01:24

    நானும் தமிழ்மீடியத்தில் படித்து இன்னமும் அமெரிக்கா வந்தும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கேன். இதற்கு முழுகாரணமும் தமிழ்வழிக்கல்வி என புலம்பி நம் மீது திணிக்கும் நாசமாப் போறவனுங்கதான். இவனுங்க வீட்டு குழந்தைகளை மட்டும் ஆங்கில மீடியத்தில் விட்டுவிட்டு வெளிய வந்து நம்ம தாலி அறுப்பானுக. இதற்கு உதாரணம் கருணாநிதி மற்றும் ராமதாஸ் வீட்டு புள்ளைகதான். ராமதாஸ் தனது மகனை மட்டும் மான்ஸ்போர்டு ஸ்கூலில் படிக்க வைத்துவிட்டு நம்மிடம் தமிழ்யாவாரம் செய்கிறார்.அவரது பேரனுவகளும் ஆங்கில மீடியத்தில்தான் படிக்கிறானுவ.

    கல்லூரி படிப்பு ஆங்கிலத்தில் எனும் போது பள்ளியில் மட்டும் தமிழில் படித்து என்ன உபயோகம்? அரசு தனது பள்ளிகளில் உடனடியாக கணிதம் அறிவியல் இரண்டையும் ஆங்கிலத்திலேயே கற்று தரவேண்டும். இளமையில் ஒரு மொழியை (அறிவியல் ஆங்கிலம்) கற்பது மிகவும் எளிது.

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொல்வதும் சரிதான் நந்து.பத்து வருசத்துக்கு முன்னால வெறும் ஐம்பது இன்ஜினியரிங் காலேஜ் தான் இருந்தது.இப்ப ஐந்நூறுக்கு மேல போயிட்டது.பிளஸ் டு ல பர்ஸ்ட் குருப் எடுக்கிறவங்க எல்லாருமே இப்ப இன்ஜினியரிங் படிக்கதான் விரும்புறாங்க.அப்ப... பிளஸ் ஒன் லிருந்தே ஆங்கிலத்தையும் கொஞ்சம் புகுத்தனும்.பாடத்திட்டத்தில மாற்றம் செய்துதான் ஆகணும்.பின்னூடத்திற்கு நன்றி நந்து.

      Delete
  4. இந்தப் பிரச்சினை மிகவும் ஆழமானது. இதில் மேலும் பல ம்சங்கள் விவாதிக்கபப்டவேண்டும். மாநிலத்தில் 13வது இடத்தில் ப்ளஸ் டூவில் வந்த மாணவன் 2வது செமஸ்டரில் பெயிலானால், அதை ஏன் என்று அவனிடம் கேட்டு அவன் பிரச்சினையைப் புரிந்துகொண்டு தீர்வைச் சொல்லும் வேலையை செய்ய அங்கே ஆசிரியர்களே இல்லை என்று தெரிகிறது.

    தொழில்நுட்பச் சொற்களைப் பொறுத்த மட்டில் சப்ளிமேஷன் என்றால் பதங்கமாதல் என்பது எளிய விஷயம். ஆனால் அது தன்னை எப்படி அலைக்கழித்தது என்று சொல்லியிருக்கிறீர்கள்.இதற்கெல்லாம் எளிய தீர்வுகளை உருவாக்க்விடமுடியும். பொறியியல் பாடத்திட்ட அடிப்படையில் எல்லா தொழில்நுட்பக் கலை சொற்களுக்கும் ஆங்கிலம்- தமிழ் அகராதி ஒன்றைத் தயாரித்து அதை முதலாண்டு சேரும்போதே மாணவர்களுக்குத் தந்துவிடலாம்.

    ReplyDelete
    Replies
    1. என் பதிவைப் படிச்சி பின்னூட்டம் இட்டதற்கு ரொம்ப நன்றி சார்.உங்களின் 'ஓ பக்கங்களை'தவறாமல் படிப்பவன் நான்.மாநிலத்தில் பதிமூனாவதாக வந்தவன்,இத்தனை பாடங்களில் தேர்ச்சி பெறாமல் போனது எதனால் என்று எல்லோருமே யோசிக்காமல் விட்டு விட்டனர்.

      இந்தப் பிரச்சனையைப் பற்றி உங்களின் ஓ பக்கங்களில் தயவுசெய்து எழுதுங்கள் சார். என் 'சப்ளிமேசன்' பிரச்னைக்கு நீங்கள் சொன்ன தீர்வு ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான். வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் ரொம்ப நன்றி சார்.

      Delete
  5. Sir neenga Trichy REC ya.... Year back -ala pshycova thirinthu, pothiya help kidaikaamal padipai ninathu bayanthu bayanthu seeralizhintha payalkalil nanum oruvan... ippo nenaikum pothu ellam abathamaga therikirathu. Analum antha kalakattathil ithanal erpatta mana vadukkal innum aaravillai..Antha tharunangalil erpatta nerukkadigal engal mana amaithiyai kulaithathodu engal pothuvana iyalbugalaiyum, gunangalaiyum maatri vittana....12-il 95% mel eduthu vittu kalloriyil sobikka mudiyamal ponathu ennul azhamaana kutra unarvaiyum, thazhuvu manappanmaiyaiyum, theeratha mana valiyaiyum erpaduthi vittathu. Kallori padippu mudintha naal muthal indru varai ithai ninaithu naan varunthatha naale illai. Etho satharana kalloriyil enaku pidaitha padipai padithirukkalam endru thonri konde irukirathu.Potti unarvu athigam ulla,athanal erpadum mana azhuthathai thodarnthu maanavar meethu thinikum intha kalvi soozhalil (petror,asiriyargal ellarukkum ithil pangundu)padipathai vida oru peria thandanai ethuvum illai. 12 vil 95% mel petru, kalloriyil poi 26 arrear vanguvathu manavanin tholvi mattum alla. Avanai Antha nilaiku thalliya kalvi thittam matrum karpikkum muraigalin tholvium aagum. Aaanal intha veezhchikku maanavanai thavira yaarum poruperka povathillai enpathu mattum uruthi. Finally he will be made 100% accountable and responsible for his debacle.

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க....நன் திருச்சி ஆர்.இ.சி தான்.நான் படிக்கிற காலத்தில ரொம்ப கஷ்டமான சிலபஸ்.இப்ப எப்படியிருக்குன்னு தெரியில.உங்கள் பின்னூட்டத்திற்கும் வருகைக்கும் ரொம்ப நன்றி

      Delete
  6. மிகவும் வருத்தத்திற்க்கு உரிய விடயம்.

    அவரது துன்பங்களை ஒரு நல்ல நண்பரிடம் மனம் விட்டு பேசியிருக்கலாம்.
    கிராமபுற மாணவர்கள் பலரும் இதுபோன்ற சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

    இதில் வருத்தத்திற்க்குரிய விடயம் இவரது பின்புலம்.
    எவ்வளவு கடினமான சூழலில் இருந்து வந்தபோதும்,எல்லாவற்றிலும் முயன்றிருக்கிறார்.நீ குறிப்பிட்டது போல இவர் தமிழ் சார்ந்த படிப்பை தேர்ந்தெடுத்திருந்தால்,இந்த முடிவு வந்திருக்காது.

    நான் கல்லூரியில் சேர்ந்தபோது இதுபோல் நடந்தது.ஆனால் நான் மிகவும் கஷ்டப்பட்டது முதல் வேலையில் தான்.

    அவரது ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி பாலாஜி.இந்த செய்தியை படித்த போது எனக்கு கல்லூரியின் பழைய ஞாபகங்கள் வந்தது.என் நண்பன் ஒருத்தன் பாதியிலேயே படிப்பை நிறுத்திட்டு போய்ட்டான்.அதைத் தான் இப்படி எழுதினேன்.முன்னாடி உள்ள பின்னூட்டத்தை படிச்சியா? ஞாநி சார் படிச்சுட்டு கமெண்ட் போட்டிருக்காரு.

      Delete
  7. தாய்மொழிவழிக் கல்வி வேண்டுமென்றால் அந்நாடு தன்னிறைவு பெற்ற நாடாக, வேலைவாய்ப்புகளுக்கு அடுத்த நாடுகளை எதிர்பார்க்காத நாடாக இருக்க வேண்டும். மேலும் ஆராய்ச்சித் துறையில் சிறந்து விளங்க வேண்டும். இந்தியாவோ, தமிழ்நாடோ இதில் எந்த வரையறைக்குள்ளும் அடங்காது.

    அனைவரையும் தமிழ்வழிக் கல்விக்கு மாற்றுவது வேலைவாய்ப்பு பிரச்சனைகளை
    உருவாக்கும்.

    குறைந்தபட்சம் தமிழ் வழியில் பயில்வோருக்கு முதல் வகுப்பிலிருந்தே அறிவியல் மற்றும் கணிதம் ஆகியவற்றை ஆங்கிலத்தில் கற்பிக்க வேண்டும். இப்பாடங்களை தமிழில் படிப்பதால் பெரிய பயன் ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜெகநாத்.உங்கள் யோசனைதான் எனக்கும் இருக்கு.பின்னூட்டதிற்கு நன்றி.

      Delete