Thursday, 19 April 2012

ஒய் திஸ் கொலைவெறிக்கு OK OK.....OK OK வுக்கு ஒய் திஸ் கொலைவெறி?

     இந்தப் பதிவின் தலைப்பில் உள்ள தமிழின் செழுமையையும் அதன் வளமையும் கண்டு கடுமையான அறச்சீற்றம் அடைந்திருப்பீர்கள் என்பது உங்கள் கண்களில் நான் காணும் கொலைவெறியே சாட்சி!!...தடுக்கி விழப் போகும் தமிழை தாங்கிப் பிடிக்கிறோம் என்று தானாகவே வளரும் தமிழை தன் கரங்களால் கசக்கிப் பிழியும் நம் நாட்டு அரசியல் (தறு)தலைவர்களின் பிடியிலிருந்து காப்பாற்றும் காலம் கண்கெட்டும் தூரத்தில் கூட தெரியவில்லை என்பதே உண்மை.இந்தத் தலைப்பு இன்னும் புரியவில்லை என்று நீங்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகுமுன் விஷயத்தை சொல்லிவிடுகிறேன். 

          சமீபத்தில் வெளிவந்து திரையிலும்,பர்மாபஜார்,இணையம் மற்றும் பதிவுலக திரை விமர்சனத்திலும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ஒரு கல் ஒரு கண்ணாடி(OK OK).உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பு மற்றும் நடிப்பில் வெளிவந்திருக்கும் இந்தப் படம் வசூலில் சக்கைப் போடு போடுகிறது என்பது ஊடகங்களின் ஊர்ஜிதமானத் தகவல்.ஆனால் சமீபத்தில் கிடைத்தத் தகவல், இந்தப் படத்திற்கு கேளிக்கை வரிவிலக்கு கிடைக்க வில்லையாம்.

என்ன சார் நியாயம்  இது?

          இந்தப்படம் நம் கலாச்சாரப் பின்னணியில் எடுக்கப்பட்டப் படமோ அல்லது தமிழ் மொழியின் பெருமையைப் பறைசாற்றும் படமோ கிடையாதுதான். வரிவிலக்கு கட்டாயம் கொடுத்தே ஆக வேண்டுமென்று அடித்துக் கேட்பதற்கு இந்தப்படத்தில் ஒன்றுமே இல்லைதான்,இது ஒரு ஜனரஞ்சகமானப் படம் என்பதைத்  தவிர.

       ஆனால் தற்போது எழுப்பபட்டிருக்கும் விவாதம் வரிவிலக்கு அளிக்கப் பட்டிருக்கும் படங்கள் அனைத்தும் உண்மையிலேயே தரமானப் படங்களா? அவைகள் நிபந்தனைகளுக்கு உட்பட்டுதான் விலக்களிக்கப்படுகிறதா? இந்த வினாவைத் தொடுத்திருப்பவர் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி  ஸ்டாலின்.இதற்கு அவர் சொல்லும் உதாரணம் உலகப் புகழ்பெற்ற செம்மொழிப் பாடலான 'ஒய் திஸ் கொலைவெறி' பாடல் இடம்பெற்ற 'மூணு' படம்.

  "சமீபத்தில் கேளிக்கை வரிவிலக்கு கொடுக்கப்பட்ட ஒரு திரைப்படத்தில் ஆங்கிலம் கலந்த தமிழ் பாடல் உள்ளது.பாரில் வைத்து திருமணம் நடப்பது போல் காட்சி வருகிறது.இதுபோன்ற திரைப்படத்துக்கு வரிவிலக்கு அளித்து விட்டு,எந்தவித ஆபாச காட்சிகளும்,கலாச்சார சீரழிவு விஷயங்களும் இல்லாத, எங்கள் படத்துக்கு வரிவிலக்கு அளிக்க மறுப்பது எந்த வகையில் நியாயம்? வன்முறை அதிகமாக உள்ள மற்றும் ஆங்கில கலப்பு அதிகமாக உள்ள படத்துக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.அனைத்து மக்களையும் கவர்ந்த, ஆங்கிலக் கலப்பில்லாத 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்துக்கு வரிவிலக்கு அளிக்க மறுப்பது என்ன நியாயம்? இதனால் எனக்கு மட்டும் பாதிப்பு இல்லை. என்னை நம்பி படத்தை வாங்கிய வினியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்று ஒரு தயாரிப்பாளர் ஸ்தானத்திலிருந்து புலம்பி இருக்கிறார்.அவர் குறிப்பிடும் அந்தப்படம் 'மூணு'தான் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

                

     கடந்த திமுக ஆட்சியில் தமிழில் பெயர் வைக்கும் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரிவிலக்கு அளிக்கப்பட்டது நாம் அறிந்ததே.தமிழில் பெயர் இருந்தால் மட்டும் போதாது அது தமிழ் கலாச்சாரத்துக்கு உகந்ததாக இருக்க வேண்டும் என்ற அடிப்படை விதியைக் கொண்டு ஒரு குழு அமைக்கப்பட்டு,அது பரிந்துரைக்கும் திரைப்படங்களுக்கு மட்டுமே இந்தவரிவிலக்கு அளிக்கப்பட்டது. கோடிகளில் கொழிக்கும் தமிழ்
த் திரைப் படத்துறையினருக்கு,கலைஞர் வஞ்சனை  இல்லாமல்  வாரி வழங்கியது,அடித்தட்டு மக்களின் நெஞ்சினில் சிறு சலனத்தை ஏற்படுத்தியது என்பது நாமறிந்த நிதர்சன உண்மை.திரைப்பட வசனகர்த்தாக்கள் ஹோட்டலில் ரூம் போட்டு யோசிக்கும் அளவுக்கு பாசத்தலைவனுக்கு பாராட்டு மழை பொழிந்தனர்.ஆனால் இந்த கேளிக்கை வரிவிலக்கு தமிழ்த் திரையுலகில் கண்டிப்பாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது என்பது மட்டும் நிச்சயம். தமிழ்க்குடிதாங்கியும் சிறுத்தைகளும் தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்று பல போராட்டங்கள் நடத்தினாலும் அதற்கு யாரும் செவிசாய்க்கவில்லை. 'மும்பைஎக்ஸ்பிரஸ்' படம் வந்தபோது தியேட்டர் வாசலிலே ரகளையில் ஈடுபட்டனர்.கடைசியில் அது இத்துப்போன சட்டைக்கு இஸ்திரி போட்ட கதையாயிடுச்சு.ஆனால் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அறிவிக்கப்பட்டப் பின்னர்தான் தமிழ்ப்படங்களின் தலைப்பு தமிழில் வர ஆரம்பித்தது.'ரோபோ' கூட 'எந்திரன்' ஆனது ஊரரிந்ததே. தற்போதைய நிலையை வைத்துப்பார்த்தால் கடந்த ஆட்சிக்காலத்தில் தமிழ்த்திரைத் துறையினர் 'நல்லா வாழ்ந்தனர்' என்றே கூறலாம்.

   ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு ஏற்பட்ட அதிரடி ஆக்சனில் திரைத்துறையும் தப்பவில்லை.சிறிது காலத்திற்கு கேளிக்கை வரிவிலக்கு பற்றி எந்த அறிவிப்பும் தமிழக அரசிடமிருந்து வரவில்லை.இதனால் கோடம்பாக்கத்தில் சிறு சலசலப்பு ஏற்படவே,கடந்த மார்ச் மாதம் தமிழக அரசிடமிருந்து கேளிக்கை வரிவிலக்குப் பற்றி ஒரு உத்தரவு வந்தது.

     அதில் பழைய விதிமுறையான திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என்ற நிபந்தனையுடன்,சில கூடுதல் தகுதிகளையும் நிர்ணயித்து, தமிழக அரசு அப்போது உத்தரவிட்டுள்ளது.

* திரைப்படம், திரைப்பட தணிக்கை வாரியத்திடம் இருந்து, 'யு' சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

* திரைப்படத்தின் கதையின் கருவானது, தமிழ் மொழி மற்றும் பண்பாட்டின் வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்க வேண்டும்.

* திரைப்படத்தின் தேவையை கருதி, பிறமொழிகளை பயன்படுத்தும் காட்சிகளைத் தவிர, பெருமளவில் திரைப்படத்தின் வசனங்கள் தமிழ் மொழியில் இருக்க வேண்டும்.

* திரைப்படத்தில் வன்முறை மற்றும் ஆபாசங்கள் அதிகளவில் இடம்பெற்றால், அத்திரைப்படம் வரிவிலக்கு பெறுவதற்கான தகுதியை இழக்கும்.

இது கிட்டத்தட்ட வரிவிலக்கு ரத்து என்பதின் தெளிவுரை விளக்கம் தான்.நல்ல மெசேஜ் உள்ள படங்களுக்குக் கூட U/A சான்றிதல் கிடைக்கும் இந்தக் காலக் கட்டத்தில் மேலே சொல்லப்பட்ட அனைத்து தகுதிகளையும் ஒரு படம் பெற வேண்டும் என்றால் வி.சேகரும்,விசுவும் மீண்டும் களத்தில் இறங்கினால் மட்டுமே சாத்தியம்.

  ஆனால்,இந்த அறிவிப்புக்கு தமிழ் திரைப்பட உலகில் எதிர்ப்பு இருந்தாலும் யாருமே அதை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.மாறாக ஒளிஓவியர் உட்பட ஒரு சிலர் இதற்குத் துதிபாடவே செய்தனர்.

சரி....இதில் எந்தத் தகுதியின் அடிப்படையில் 'மூணு' படம் வரிவிலக்குப் பெற்றது?
 
 

9 comments:

  1. உங்கள் வார்த்தைகளின் முடிச்சுகளில் கட்டுண்டேன். சிந்திக்க வைக்கக் கூடிய கொலைவெறியான பதிவுக்கு ஓகே ஓகே புரியவில்லையா டபுள் ஓகே பாஸ்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு ரொம்ப நன்றி நண்பா

      Delete
  2. சந்திக்க வேண்டிய நல்ல பகிர்வு.
    ok ok நேற்றுத்தான் எனக்கு ஓகே ஆச்சு பட் அது என்ன
    கதையெண்டு ராஜேஸ் அங்கிளிட்ட கொஞ்சம்
    கேளுங்க மணிமாறன் அங்கிள்.

    ReplyDelete
    Replies
    1. என்னது கதையா?..அது எந்த கடையில விக்குது? பின்னூட்டதிற்கு நன்றி சகோ..

      Delete
  3. Replies
    1. நன்றி பாலாஜி...அம்மாவுக்கு இன்னும் நாலு வருசத்துக்கு உரைக்காது.

      Delete