Monday, 16 January 2012

வீரம் வெளஞ்ச மண்ணு....


              தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டாலும் தமிழர்களின்  வீரத்தை உலகுக்கே வெளிச்சம் போட்டுக் காட்டும் ஜல்லிக்கட்டு நம் தென் மாவட்டங்களில் தான் வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது...

        ஜல்லிக்கட்டு என்ற விளையாட்டின் பின்னால் தமிழகத்தின் தென்மாவட்ட கிராமப்புறக் கலாச்சாரத்தின் வேர்கள் மிக ஆழமாக ஊடுருவியிருக்கிறது  என்பதை யாரும் மறுக்கமுடியாது....

 
           

       ஜல்லிக்கட்டுக்கு காளைகளை தயார் செய்வதை ஒரு கலையாகவே நினைத்து செய்கின்றனர்.இதற்கு பச்சரிசி ஊறவைத்து அரைத்து கொடுப்பது , குளிப்பாட்டுவது,போட்டிக்கு தயார் செய்வது என்று ஆண்களுக்கு இணையாக வீட்டுப் பெண்களும் ஈடுபடுவது ஆச்சர்யமான விஷயம்.இதன் கொம்புகளும் மிக கூர்மையாக தீட்டப்பட்டு ராணுவத்திற்கு தயார் செய்வது  போல பார்த்துப் பார்த்து வளர்க்கிறார்கள்.

      ஜல்லிக்கட்டில் இரண்டு வகை உள்ளது.ஒன்று வாடிவாசல் வழியாக ஒன்றன்பின் ஒன்றாக காளைகள் திறந்து விடப்படும்.வெளியில் காத்திருக்கும் வீரர்கள் இதை பாய்ந்து  சென்று பிடிப்பார்கள்.மற்றது வெளிவிரட்டு எனப்படும் திறந்தவெளியில் மாடுகள் அவிழ்த்துவிடப்படும். இதில் மாடு எந்தப் பக்கம் இருந்து வரும் யாரைத் தூக்கும் என்று தெரியாது. 

       தென்தமிழகத்தில்  அலங்காநல்லூர், கொடிக்குளம், வேந்தன்பட்டி, அவனியாபுரம்,சிறாவயல், பாலமேடு, கண்டுபட்டி,  மேட்டுபட்டி என்று மதுரை சிவகங்கை புதுக்கோட்டை பகுதிகளில் இந்த ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.


          
         

        காளையை அடக்குவது ஒன்றும் சாதாரமான விஷயம் அல்ல.நாம.... துள்ளி வரும் கன்னுக்குட்டியைப் பார்த்தே பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடுவோம்.செம்மண் புழுதியில் சீறிவரும் காளைகளை நம் மண்ணின் சிங்கக் குட்டிகள்  எப்படி அடக்குகிறார்கள் என்று பாருங்கள்.இதில் ஜெயித்தால் இவர்களுக்கு கிடைப்பதென்னவோ சோப்பு டப்பாவும்,பிளாஸ்டிக் குடமும் தான். ஆனால் இவர்களுக்கு பரிசு ஒரு பொருட்டு அல்ல.நாலு காளைய அடக்கினோம்  என்ற பெருமையோடு வீட்டுக்கு போகணும்னு விரும்புவாங்க. கை,கால்,மார்பு,முதுகு என்று தழும்பு இல்லாத இளைஞர்களை பார்ப்பதே அபூர்வம். புதுப்படம் ரிலீஸ் ஆகும்போது  தியேட்டர் வாசலில் டிக்கெட் வாங்க முண்டியடித்து சண்டை போடும் இளைஞர் கூட்டத்தை பார்த்திருக்கலாம். இங்கே வாடிவாசல் வெளியே...திமிறி வரும் காளையை  அடக்க திரண்டிருக்கும்   நம் மண்ணின் மைந்தர்களைப் பாருங்கள்.......



  

இவர்களின்  செங்குருதி இம்மண்ணில்  சிந்திதான் செம்மண் ஆனதோ?



-------------------------------((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))))------------------


   

No comments:

Post a Comment