Tuesday, 11 June 2013

என்ன நடந்தது இளவரசன்-திவ்யா காதல் வாழ்க்கையில்..?




 2012 நவம்பர்  7.    மறக்க முடியுமா அந்த நாள்....!

வட தமிழகத்தையே புரட்டிப் போட்ட கடந்த வருடத்தின் கருப்பு நாள்.! கடந்த 9 மாதங்களாக காதல் திருமணங்கள் பற்றியும் கலப்புத் திருமணங்கள் பற்றியும் பெரும் விவாதங்களை உருவாக்கிய சம்பவம். சமாதியாகிவிட்ட சாதீய உணர்வுகளை மீண்டும் தோண்டியெடுத்து அதில் நஞ்சைக் கலந்து நடுவீதியில் போட்டு சில பிணந்தின்னிகள் வெறியாட்டம் போட்ட  நிகழ்வு..முற்றிலுமாக மூன்று தலித் கிராமங்கள் தீக்கிரையாக தங்கள் வாழ்வாதாரத்தை தொலைத்து விட்டு நாதியற்று நிற்க வைத்தது அந்த சம்பவம்.


சாதி வன்முறைக்கு பகடைக்காய்களாக பயன்படுத்தப்பட்ட திவ்யா- இளவரசன் தம்பதிகள் இன்று பிரிந்து விட்டனர்.

இந்த காதல் சம்பவம்தான், தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்த பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாசுக்கு கிடைத்த துருப்புச்சீட்டு.தலித்  மக்களுக்கு எதிரான குள்ளநரி தாக்குதல்களுக்கு ஆரம்பப்புள்ளி வைக்கப்பட்டது இங்கிருந்துதான்.

வட மாவட்டங்களில் தலித் இன மக்களின் வில்லனாக தற்போது அறியப்படுகிற ராமதாஸ் ஆரம்பத்தில் அவர்களோடு கை கோர்த்துக் கொண்டு இணக்கமாகத்தான் இருந்தார்.தமிழ்க்குடிதாங்கி என திருமாவளவ- னால் பாராட்டுப் பெரும் அளவுக்கு நெருக்கம் இருந்தது.

தன் இன மக்களுக்காக தன்னலம் பாராமல் களப் போராட்டம் கண்ட ராமதாஸ், ஒரு காலத்தில் ஒட்டு மொத்த வன்னியர்களின் நம்பிக்கைக்கு
ப் பாத்திரமான காட்பாதராக  இருந்தார். அவரின் ஒரு சொல் அசைவில் வட மாவட்டங்களே கட்டுப்பட்டன. 'பந்த்' என்கிற சொல்லின் வீரியம் வன்னியர் இயக்கம் நடத்திய போதுதான் நிதர்சனமாக உணரமுடிந்தது.கிட்டத்தட்ட ஆறு மாவட்டங்களுக்கு மேல் இவரின் செல்வாக்கு கொடி கட்டி பறந்தது..இது எல்லாமே தன் இன மக்களின்  உரிமைக்காக போராடும் ஒரே தலைவன் என்கிற அடிப்படையில் தான்.

காலப் போக்கில் வாரிசு அரசியல் என்கிற எழுதப்படாத விதியால் ராமதாசின் அரசியல் தலையெழுத்தே மாறிப் போனது. எந்த வாய் தன் குடும்ப உறுப்பினர்கள் சட்டமன்ற வாசலில் காலடி எடுத்து வைத்தால் செருப்பால் அடியுங்கள் என சொன்னதே அதே நார வாய்தான் ஐந்தாண்டுக்கு ஒரு முறை அம்மாவிடமும் அய்யாவிடமும் தன் மகனின் எம்பி சீட்டுக்காக கைகட்டி பல்லிளிக்க செய்தது.

தேர்தலுக்கு சில மாதங்கள் முன்புவரை,'தனித்து நிற்போம்','வன்னியனே முதல்வர்' என முழங்குவார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் கோபாலபுரத்திற்கு ஒரு குரூப்பையும்.போயஸ் தோட்டத்திற்கு ஒரு குரூப்பையும் அனுப்பி கூட்டணி பேரம் நடத்துவார்.பேரம் படியும் கட்சியுடன்  'இது கொள்கைக் கூட்டணி, வெற்றிக் கூட்டணி,எங்கள் தயவில்லாமல் யாரும் ஆட்சியமைக்க முடியாது' என தோட்டத்து வாசலிலோ அல்லது அறிவாலய கேட்டுக்கு முன்னே நின்று வெக்கமில்லாமல் முழங்குவார்.அதாவது ஐந்து வருடத்திற்கு ஒரு முறை அம்மாவின் சேலையையும்,அய்யாவின் வேஷ்டியையும் கூச்ச நாச்சமில்லாமல் துவைப்பார்.


சரி இந்த கன்றாவி எல்லாம் இப்போ எதுக்குன்னு கேக்கிறீங்களா... குரங்கு மரத்துக்கு மரம் தாவுகிற மாதிரி ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணியை மாற்றிவிட்டு, சமீபத்திய தோல்விக்கு தலித்களோடு இணக்கமாக போனதுதான் காரணம் என்று இந்த அறிவு ஜீவிகள் கண்டுபிடித்திரு
க்கிறது. கடந்த இரண்டு தேர்தலில்களிலும் இவருக்கு மக்கள் கொடுத்த மரணஅடிக்கான  பின்புலம் என்னவென்பதை அரசியல் ஞானிகளை வைத்து அலசத் தேவையில்லை... கொஞ்சம் திரும்பிப் பார்த்தாலே புரிந்துவிடும்.

தன் அரசியல் செல்வாக்கு சரிந்து போனதற்கு என்ன காரணம் என்பதை மங்குனி மணிகள்,வெட்டி குருக்கள் முன்னிலையில் தைலாபுர தோட்டத்தில் வைத்து ஆலோசித்திருப்பார். அந்த சமூக நல்லிணக்க சிகாமணிகள் என்ன சொல்லியிருக்கப் போகிறது..? திருமாவுடன் கைகோர்த்தது தவறு..,தலித்களுடன் நெருக்கிப் போவது ஆபத்து... , அவர்கள் நமக்கு எதிராக இல்லை என்றாலும் எதிரியாக்கிக் கொள்வதுதான் எதிர்கால அரசியல் முன்னெடுப்புக்கு நல்லது என தெளியவைத்து தெளியவைத்து டாக்டருக்கே ஏற்றியிருப்பார்கள்.

இந்த சந்தர்ப்பத்தில்தான்
இளவரசன்-திவ்யா காதல் சம்பவம் மருத்துவர் ஐயாவுக்கு துருப்புச் சீட்டாக அமைந்து போனது.

இரண்டு குடும்பங்களுக்குள்ளான காதல் பிரச்னையை இரு சமூகங்களுக்கிடையேயான சாதி பிரச்சனையாக மாற்றி,மூன்று தலித் கிராமங்களை எரித்து,அந்த சுவாலையின் வெப்பத்தை வைத்துதான் தன் கட்சியின- ருக்கு சூடேற்றி இருக்கிறார். மது ஒழிப்பு போராட்டங்களை ஒரு புறம் நடத்தினாலும் இது தன் கட்சியினரை உத்வேகப்படுத்தாது என்பதை
த் தெளிவாகப் புரிந்து கொண்டு தான் தலித் எதிர்ப்பரசியலை மீண்டும் தூசி தட்டியிருக்கிறார்.

காதல் திருமணத்தில் மட்டுமல்ல நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில் கூட ஒரு வருடத்தில் தாம்பத்திய வாழ்க்கை சலித்து போய்  நிறைய பிரச்சனைகள் தலை தூக்குகிறது. பல பேர் உயிருக்கும் உடமைக்கும் உலைவைத்த அந்த சம்பவத்திற்குப் பிறகு இவர்களது காதல் வாழ்க்கை கடுமையான மன உளைச்சலை அளித்திருக்கும். தந்தை தற்கொலை செய்துகொண்டது திவ்யாவுக்கு பேரிழப்பாக இருக்கும் சூழலில் தன் தாயாரின் அன்பை நோக்கி அவரது மனம் அலை பாய்ந்திருக்கும். அந்த சந்தர்பத்திற்கு காத்திருந்தது போல் திவ்யாவின் உறவினர்கள் கலங்கிய அவரது மனக் குட்டையில் மீன் பிடித்திருக்கிறார்கள்.

இளவரசனை பிரியும்படி யார் மூலம் நெருக்கடி வந்திருக்கும் என்பதெல்லாம் மர்மமான விசயமல்ல.சாதி என்கிற சாணியை தன்  உடல்முழுவதும் பூசிக்கொண்டே திரியும் சாக்கடை நாய்களுக்கு மத்தியில் நம் சமூகம் சுழலுவதால் யார் மூலம் நெருக்கடி வந்திருக்கும் என்பதை சொல்லவா வேண்டும்..?

ஆனால் இதுவரை திவ்யா இளவரசனைப் பற்றி எந்தத் தவறான அபிப்பிராயமும் சொல்லவில்லை. இளவரசனை நிரந்தரமாகப் பிரிகிறேன் என்றும் கூறவில்லை. "இப்போதைக்கு என் மனம் அம்மாவோடு இருக்க விரும்புகிறது” என்று மட்டுமே கூறியிருக்கிறார்.அதற்கு தன் அம்மா தம்பியின் உயிர் குறித்த கவலை அந்த பெண்ணை இந்த முடிவு எடுக்க செய்திருக்கலாம். கடந்தமாதம் தனது கர்ப்பம் கலைந்துபோன மன உளைச்சல் காரணமாகக் கூட திவ்யாவுக்கு அம்மாவின் அருகாமை தேவைப்பட்டிருக்கலாம்.

இளவரசனும் , "தன்னுடைய குடும்பத்திற்கு ஏதும் ஆபத்து நேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக என்னை விட்டு பிரிந்து சென்றுள்ளார் திவ்யா. அவளுடைய தாய்க்கும் எங்களை பிரிப்பதில் உடன்பாடில்லை. ஏதோ ஒரு அழுத்தத்தின் காரணமாகத்தான் உயர்நீதிமன்றத்தில் மனு போட்டிருக்கிறார் "  என கூறியிருக்கிறார்.

திவ்யாவின் தந்தையின் மரணம் ஏற்கனவே பல சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கையில்,தற்போதைய கவலை திவ்யா உயிர் குறித்ததே.. கொலை செய்துவிட்டு, "மன உளைச்சல் காரணமாக திவ்யா தற்கொலை செய்து கொண்டார்.. ” என்று செய்தியை வெளியிடுவது ஒன்றும் சாதிவெறியர்களுக்கு பெரிய விசயமாக இருக்காது என்கிற எதார்த்தமே அந்த பயத்திற்கு காரணம்.. இப்போது திவ்யா எடுத்திருக்கும் முடிவைப் பார்க்கையில் தன் அம்மா தம்பியின் பாதுகாப்பு குறித்து அந்த
ப்பெண் எவ்வளவு மன உளைச்சலுக்கும் பயத்திற்கும் உள்ளாகியிருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

இந்தப் பிரச்னைக்கு தீர்வு திவ்யா கையில்தான் உள்ளது. தருமபுரி சம்பவத்திற்கு சில மாதங்களுக்குப் பின் இவர்களை பிரபல கார்டூனிஸ்ட் ஒருவர் சந்தித்துப் பேட்டியெடுத்த போது மிக தைரியமாக திவ்யா பேசியதைக் குறிப்பிட்டார்.அவர்களின் வாழ்க்கையை அவர்கள் தெளிவாக முடிவெடுத்துள்ளதாக அவரிடம் தெரிவித்தாராம்.அப்படியொரு தைரியமான திவ்யாவை மிரட்டியது யார்...? பாசத்துக்குக் கட்டுப்பட்டவரை பாசத்தை வைத்தே மிரட்டியிருக்கிறார்கள். இளவரசன் தரப்போ மிகத் தெளிவாக உள்ளது. ஆனால் முடிவு திவ்யா கையில்தான் உள்ளது....சாதியெனும் சாக்கடையில் உழலும் புழுக்களுக்கு  திவ்யாவின் முடிவு எந்த விதத்திலும் தீனி போடும்படி இருக்கக் கூடாது.


காதல் திருமணம் செய்பவர்கள் மட்டுமல்ல கலப்புத் திருமணம் செய்பவர்களும் இச்சமூகத்தில் வெற்றிகர மாகவும் சந்தோசமாகவும் வாழ்க்கை நடத்துகிறார்களா என்கிற சமூக அடிப்படையிலான விவாதங்களுக்கும் சாதியை மீறி திருமணம் செய்ய முயலும் பலருக்கும் இளவரசன்-திவ்யாவில் காதல் வாழ்க்கைதான் எதிர்காலத்தில் உதாரணமாக எடுத்துக்கொள்ளப்படும் என்பதில் சந்தேகமில்லை.அதை சாத்தியப் படுத்தக் கூடிய பொறுப்பு திவ்யாவிடம்தான் உள்ளது.  அவர் நல்ல முடிவை எடுப்பார் என நம்புவோம்.

எப்படியோ இவர்களின் பிரிவு மருத்துவர் அய்யா அவர்களின் அரசியல் வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனை என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. தன் இனப்பெண்ணை ஒரு தலித்  திருமணம் செய்துகொள்வதற்கு எதிராக இவ்வளவு பெரிய தர்ம(புரி) யுத்தம் நடத்திய அவர் தற்போதுதான் நிம்மதியாக தூங்குவார்.

யாரோ சொன்னது நினைவில் வருகிறது. "சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்.."


---------------------------------(((((((((((((((((((())))))))))))))))))))----------------------------

13 comments:

  1. ஜாதி ஜாதி என்று அலையும், அந்த அரை லூசுப் பதிவர், இன்னும் உங்கள் பதிவின் பக்கம் வரவில்லை போலிருக்கிறது.



    ReplyDelete
    Replies
    1. வரட்டும்..வரட்டும்...

      Delete
  2. பாவம் அந்த ப்புளாளிங்க இதைத்தவிர வேறென்ன சொல்ல?!

    ReplyDelete
  3. அவர்கள் சேர்ந்து வாழ பிராத்தனை செய்வதைத்தவிர வேறு என்ன செய்ய முடியும் ராஜி..?

    ReplyDelete
  4. கலப்பு திருமணம் என்பது மனிதனும் மிருகமும் செய்வது .இது சாதி மறுப்பு திருமணம் .

    ReplyDelete
    Replies
    1. அப்போ பெரியார் சொன்ன கலப்பு திருமணம் இது இல்லையா...? பாவம் அவரு 96 வயசு வரை மனுசனுக்கும் மிருகத்திற்கும் தான் கல்யாணம் பண்ண போராடிட்டு இருந்திருக்கார் போல... நாம தப்பா நினைச்சிகிட்டு சாதி விட்டு சாதி கல்யாணம் பண்ணலாம்னு நெனச்சுகிட்டு இருந்திருக்கோம்.... கண்ணன் அண்ணே உங்க மூளையை அப்படியே பிரிஜ்ல பத்திரமா பாதுகாத்து வையுங்க...எதிர்கால சந்ததிக்கு யுஸ் ஆகும்.

      Delete
    2. அப்போ கலப்பு திருமணம் செய்து கொண்டோருக்கு உதவித்தொகை வழங்கப்படும்னு அரசாங்கம் அறிவித்தது கூட அதுக்குத்தானா.... :-)

      Delete
  5. கடைசி பஞ்சும் படமும் டாப் கிளாஸ்... பிரிந்த்ததைக் கொண்டும் அரசியல் செய்ய இவர்களால் மட்டும் தான் முடியும்

    ReplyDelete
  6. "சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்.."
    நிதர்பமான உண்மை

    ReplyDelete
  7. "சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்.."
    - மாமேதை அம்பேத்கர் அவர்கள்

    ReplyDelete
  8. சுதந்திரன்7 July 2013 at 18:29

    போனா போகுது யாராவது ஒரு திராவிட கட்சி இவரை கூட்டு சேத்துக்கோங்க இல்லைனா இவருக்கு இதைவிட்டா பொழைக்கிறதுக்கு வேற வழியில்ல.

    ReplyDelete
  9. நல்லா கதை எழுதி இருக்கீங்க

    ReplyDelete