Saturday 7 December 2013

தகராறு...( ரேணிகுண்டா + திமிரு )

துரையை மையக் களமாகக் கொண்ட ஆக்சன் த்ரில்லர் தகராறு. படத்தின் தலைப்பிலே ஓர் சுவாரஸ்யம் இருக்கிறது. திரையில் மட்டுமல்ல திரைக்குப் பின்னாலும் பல தகராறுகளை சந்தித்திருக்கிறது இந்த டீம்..

இயக்குனர் கணேஷ் விநாயக், S.J சூர்யா, சிம்பு, தருண்கோபி ஆகியோருடன் அசோசியேட் டைரக்டராக பணிபுரிந்தவர். முற்பொழுதும் உன் கற்பனைகள் முதலில் இவர்தான் இயக்குவதாக இருந்தது. அந்த வாய்ப்பு ஆரம்பத்திலேயே பறிபோய்விட, பிறகு சிம்புவை வைத்து மடையன் ஆரம்பிக்கப்பட்டது. அதுவும் பூஜை போட்டதோடு சரி. இப்படி முதல் கோணலே முற்றிலும் கோணலாகி, நிறைய தகராறுகளை சந்தித்து இறுதியில் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததாம்.

நாயகன் அருள்நிதி, கரு.பழனியப்பனுடன் 'அசோகமித்திரன் ' செய்வதாக இருந்தது.என்ன தகராறோ தெரியவில்லை, அது கைவிடப்பட்டு பிறகு இதில் ஒப்பந்தமானார்.

நாயகியாக முதலில் ஒப்பந்தமானவர் பூஜா. அவருக்கும் பர்சனலாக ஏதோ தகராறு போல.விலகிவிட்டார். அவர் சிபாரிசு செய்தவர்தான் பூர்ணா .

முதலில் இசையமைக்க ஒப்பந்தமானவர் ரகுநந்தன். அவருக்கும் ஏதோ தகராறு. அவர் விலகவே தருண் ஒப்பந்தமானார். பாடல்கள் மட்டும் முடிந்த நிலையில் அவரும் ஏதோ  தகராறு காரணமாக விலகிவிட, பின்னணி இசையை பிரவீன் சத்யா செய்திருக்கிறார்.

இதைவிட பெரிய தகராறு படத்தலைப்புப் பற்றியது. இந்தப்படத்திற்கு முதலில் நிறைய  தலைப்புகள் வைத்து பின்பு மாற்றப்பட்டது. சம்பவம், கங்கணம், பகல்வேட்டை, பகல் கொள்ளை, அடி உதை குத்து..இப்படி நிறைய. ஒன்று இயக்குனருக்குப் பிடிக்கும் தயாரிப்பாளருக்குப் பிடிக்காது. தயாரிப்பாளர் பரிந்துரை செய்வது இயக்குனரை திருப்தி செய்யாது. ஒருவேளை இருவருக்குமே பிடித்திருந்தால், ஏற்கனவே அத்தலைப்பு பதிவு செய்யப்பட்டிருக்கும். இப்படியாக ஒரு கட்டத்தில் தயாரிப்பாளர் நொந்து போய் , " ச்சே..டைட்டில் பிடிக்கிறதே பெரிய தகராறா இருக்கிறதே" என்று புலம்பியிருக்கிறார். உடனே இயக்குனர், " சார்..தகராறு நல்ல டைட்டிலா இருக்கே .." என்று சொல்ல, அதுவே தலைப்பாகிவிட்டது.


சரி... இனி படத்திற்கு வருவோம்...

இயக்குனர் கணேஷ் விநாயக் ' ரேணிகுண்டா ' படம் பார்த்து நிறைய பாதிக்கப்பட்டிருக்கிறார் போல... கிட்டத்தட்ட அதே சாயலில் கதை.

நான்கு களவாணி நண்பர்கள். சரவணன்(அருள்நிதி), செந்தில்(பவன்), பழனி(தருண் சத்ரியா), ஆறுமுகம் (ஆடுகளம் முருகதாஸ்). சிறுவயதில், அனாதைகள் என்கிற புள்ளியில் நால்வரும் ஒன்றுசேர, அதிலிருந்தே உயிருக்குயிரான நண்பர்கள். மூர்க்கத்தனமும் ஆக்ரோஷமும் கூடவே ஒட்டிக்கொண்டு அலைகிறது. களவாண்டோமா, காதல் பண்ணினோமா ,கட்டிலில் கவுந்தடித்துப் படுத்து கனவு கண்டோமா என்றில்லாமல் ஊரெல்லாம் ஒரண்டை இழுத்துவைக்க, பலரால் கட்டம் கட்டப்பட்டு 'சம்பவம்' பண்ணக் காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் தருண் சத்ரியா மர்மமான முறையில் கொல்லப்பட, தன் நண்பனைக் கொன்றவனை பழிவாங்கத் தேடிப் புறப்படுகிறார்கள் மற்ற மூன்று நண்பர்களும். உண்மையிலேயே  அவரைக் கொன்றது யார் என்பது தான் படத்தின் இறுதியில் வெளிப்படும் அட்டகாசமான ட்விஸ்ட்.

படத்தில் மிக நெருடலான விஷயம், நான்கு நண்பர்கள் மீதும் பார்வையாளனுக்கு கொஞ்சம் கூட பரிதாபமோ, பச்சாதாபமோ வராமல் போனதுதான்.ஆண்டிஹீரோ சப்ஜெக்ட் செய்யும்பொழுது, அரக்க மனம் படைத்தவனாக ஹீரோவோ அல்லது அவரது நண்பர்களோ காட்சிப்படுத்தப்பட்டால், மறுப்பக்கம் அவர்களுக்குக் கொஞ்சம் இறக்க குணம் இருப்பதாகக் காட்டினால்தானே அவர்களின் பாத்திரம் மனதில் ஒட்டும்..!  அருள்நிதியைத்  தவிர மற்றவர்கள் வில்லன்கள் போலவே காட்சிப்படுத்தப் பட்டிருக்கிறார்கள். அவர்கள் செய்யும் சேட்டைகள், தகிடுதித்தங்கள் எல்லாமே அவர்கள்மீது எதிர்மறை பிம்பத்தை ஏற்படுத்துகிறதே தவிர ரசிக்க முடியவில்லை.

அதனால்தான்  தருண் சத்ரியா கொல்லப்பட்ட பின்பு, திரையில் அவரது நண்பர்கள் எவ்வளவு கதறி அழுதாலும் நமக்கென்னவோ எவன் செத்தா எனக்கென்ன என்கிற மனநிலைதான் இருக்கிறது. ரேணிகுண்டா படத்தில் இவர்களைவிட அவர்களை மூர்க்கத்தனமாக காட்டியிருப்பார்கள். இன்ஸ்பெக்டர் வீட்டிலே புகுந்து ரகளை செய்வது, பொது மக்களிடம் கொள்ளையடிப்பது என்று சமூகத்திற்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபடுவது போல் காட்சிப்படுத்தப்பட்டாலும், அவர்கள் ஒவ்வொருவரும் கொல்லப்படும்பொழுது நம் நெஞ்சம் கனத்துப் போகும். அந்த உணர்வு இதில் இல்லாமல்போனதுதான் பெரும் குறை.

அதனால்தான் படம் நெடுக , தவறே இவர்கள் மீது இருக்கும்போது எதற்காக மற்றவர்களை இம்சைப் படுத்துகிறார்கள் என்கிற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை

அதேப்போல் அருள்நிதி மேல் பூர்ணாவுக்கு கொலைவெறிக் காதல் வர என்ன காரணம் என்பதையும் அழுத்தமாக சொல்லவில்லை.


தலைவரின் கலைவாரிசுகளில் தயாநிதி அழகிரியை எந்த அளவுக்குப் பிடிக்காதோ,அந்தளவுக்கு அருள்நிதியை பிடிக்கும். சாந்தமான முகம்.பார்க்க பாவமாக இருப்பார்.அவ்வளவாக அலட்டிக்கொள்ள மாட்டார். ஒருவேளை அவர் நடித்த கேரக்டர்கள் அப்படியோ எனத்தெரியவில்லை. வம்சமும்,மௌனகுருவும் மிகவும் பிடித்திருந்தது. உதயன் இன்னும் பார்க்கவில்லை. நிற்க,  நடிக்க வந்து நான்கு வருடங்கள் ஆகப்போகிறது. ஆனால் நடிப்பும் நடனமும் சுட்டுப்போட்டாலும் வர மாட்டேங்குதே பாஸ்...!

"எக்ஸ்குஸ்மி... நான் உங்களை எங்கேயோ பாத்திருக்கேன்...என்னை நீங்க எங்கேயாவது பாத்திருக்கீங்களா " என்று ராமராஜன் ஸ்டைல் டிரெஸ்சில் அரைகுறை ஆங்கிலத்தில் பூர்ணாவிடம் வழியும் காட்சிகள் மட்டும் செம.. அதேப்போல் ஆரம்பத்தில் வரும் Bureau pulling யுத்தியும் அட போட வைக்கிறது.

ஒரு காட்சியில் அருள்நிதி, பூர்ணாவிடம் சொல்வார், " திருடன் என்றால் அவ்வளவு கேவலமா போச்சா. நாட்ல எவங்க திருடல..? ".(தம்பி.. இந்த டயலாக் வச்சது சகோ தயாநிதிக்கு தெரியுமா..?  )

நான்கு நண்பர்களில் நடிப்பில் ஸ்கோர் பண்ணுபவர் முருகதாஸ் மட்டுமே.. சந்திரமுகிக்குப் பிறகு நான்கு நண்பர்களின் பெயர்கள் எம்பெருமான் முருகனைக் குறிக்கிறது. இதில் ஏதும் குறியீடுகள் இருக்கிறதா ?

கல்லூரிக்குப் போகாத கல்லூரி மாணவியாக பூர்ணா. ஜன்னலோரம் படத்தில் பொம்மை போல வந்தவர், இதில் பட்டையைக் கிளப்புகிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில். இன்னொரு திமிரு ஈஸ்வரி....! (அய்யய்யோ சொல்லிட்டேனா.....).

மயில்சாமி கின்னஸ் சாதனைக்கு முயற்சி ஏதும் செய்கிறாரா..? கடைசியாக மனுசனை 'ஸ்டெடியாக' எந்தப் படத்தில் பார்த்தேன் என்பது நினைவில்லை. 'தள்ளாடும்' காட்சிகளில் இவரளவுக்கு தத்ரூபமாக நடிப்பவர்கள் தமிழ் சினிமாவில் கிடையாது என அடித்துச்சொல்லலாம்.  :-))

கொஞ்சம் தொய்வாகப் போய்க்கொண்டிருக்கும் படத்தை மங்கள்யான் ராக்கெட்டின் வேகத்துக்கு சீறிப்பாயச் செய்வது கடைசி பதினைந்து நிமிடங்கள். படத்தின் அதிமுக்கியமான திருப்பம் அங்குதான் இருக்கிறது. கொட்டும் மழைத்துளிகளின் ஊடாக தெருவின் சந்து பொந்துகளில் புகுந்து ஓடும் கேமரா, தடதடக்கும் பின்னணி இசை, யூகிக்க முடியாத அடுத்தடுத்த திருப்பங்கள் என்று மிரட்டியிருக்கிறார்கள்.இந்த ஒரு இடத்தில் அறிமுக இயக்குனர் கம்பீரமாக நிற்கிறார். இதைக் கழித்துவிட்டுப் பார்த்தால் படத்தில் பெரிதாக எதுவும் இல்லை.


13 comments:

  1. படத்தலைப்பிற்கே தகறாரா...? பதிவின் தலைப்பில் எல்லாம் தெரிந்து "போச்சு..."

    ReplyDelete
  2. நன்றி DD . அடடா...சஸ்பென்ஸ் உடைந்துவிட்டதா... :-)

    ReplyDelete
  3. நேற்று நானும் படம் பார்த்தேன்
    அருமையாக விமர்சனம் செய்துள்ளீர்கள்
    வித்தியாசமாக என்ச் சொல்லிச் சொல்லி வெறுப்பேற்றி
    காணாமல் போன பார்த்திபனின் நினைவு ஏனோ
    சம்பந்தமில்லாத டுவிஸ்டை பார்த்து ஏற்பட்டது
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்..

      Delete
  5. ஒரு தகராறுக்கு பின் இவ்ளோ தகராறா ஹாஹாஹா

    ReplyDelete
    Replies

    1. நன்றி சக்கரகட்டி... படம் பிக்கப் ஆகுவதிலும் தகராறுதான்

      Delete
  6. தகராறு பெயர்க்காரணம் செம.... விமர்சனம் படிக்கவில்லை, படம் பார்க்கணும்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தம்பி

      Delete
  7. செமயான விமர்சனம்யா..ரேணிகுன்டா+திமிரு என்று சொன்னது கலக்கல்.

    ReplyDelete
  8. //நான்கு நண்பர்களில் நடிப்பில் ஸ்கோர் பண்ணுபவர் முருகதாஸ் மட்டுமே.. சந்திரமுகிக்குப் பிறகு நான்கு நண்பர்களின் பெயர்கள் எம்பெருமான் முருகனைக் குறிக்கிறது. இதில் ஏதும் குறியீடுகள் இருக்கிறதா ?//

    ஆமா, படத்தை குறை சொன்னா முருகர் வேலால் கண்ணை குத்துவாராம்.

    ReplyDelete
    Replies
    1. ஹா.ஹா.. ஒருவேளை அதனால இருக்குமோ...?

      Delete