Friday, 23 November 2012

அதிமுக கவுன்சிலரின் கந்துவட்டி அடாவடி...உயிரை மாய்த்துக்கொண்ட கொடூரம்.....!

டந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவைப் படுதோல்வி அடையச்செய்த காரணிகளில், கொடநாட்டிலிருந்து  கடைசி பஸ்ஸைப் பிடித்து, கடைசி நேரத்தில்,கடைசிக் கட்டப் பிரச்சாரங்களில் காவியத்தலைவிப் பேசிய நெஞ்சுருகும் வசனம்தான் மிக முக்கியமானது.அதிலும் ஓவ்வொரு ஊரில் பேசும் போதும் அங்குள்ள திமுக பெரும்புள்ளிகளும் கவுன்சிலர்களும் செய்த அடாவடித்தனத்தையும் அத்துமீறல்களையும் பட்டியலிட்டு, அவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டுப் பேசியபோது கேட்டுக்கொண்டிருந்த மக்கள் அகமகிழ்ந்துப் போனார்கள்.அம்மாவின் ஆஸ்தான பினாமி தா.பா. தினம்தோறும் உச்சரிக்கும் மந்திரமான 'இந்தியாவைக் காக்கும் சக்தியின் வடிவமே...' என்பதை மக்களும் அன்று ஓரளவு நம்பத்தான் செய்தனர்.

ஆட்சியில் அமர்ந்தவுடன் அதை ஓரளவு நிருபிக்கவும் செய்தார்.மீட்டுக் கொடுத்த நிலங்களின் மொத்த மதிப்பு பலநூறு கோடிகள் என ஊடகங்களில் வந்த செய்தியைப் படித்தபோது சாட்டையைச் சுழற்றும் ரிங் மாஸ்டரின் வடிவமாகத்தான் அன்று தெரிந்தார்.அந்தச் சாட்டை இன்றுவரை சுழன்றுக் கொண்டுதான் இருக்கிறது, உடன்பிறப்புகளுக்கு எதிராக மட்டும்.

இடைத்தேர்தல் வெற்றியை மட்டுமே வைத்து தனக்குத் தானே நற்சான்றிதல் கொடுத்துக் கொண்டு அடித்தள மக்களின் அடிப்படைத் தேவைகளில் கோட்டைவிட்ட திமுகவின் அதே தவறை அதிமுக அரசும் செய்கிறது.ஒட்டுமொத்த நடுத்தர மக்களின் கோபங்கள் திமுக பக்கம் திரும்பியதற்கு அந்தக் கட்சியின் கவுன்சிலர்களின் அடாவடி-அடிதடி அரசியல்தான் காரணம் என்பது யதார்த்த உண்மை.அவர்களுக்கு எந்த விதத்திலும் இவர்கள் சளைத்தவர்களல்ல என்பதைப் பட்டவர்த்தனமாக  நிரூபித்திருக்கிறது திருச்சியில் நடந்த அந்த சம்பவம்.  



தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி,சமூக விரோதிகளைக் கூட்டு சேர்ந்துக் கொண்டு கட்டப் பஞ்சாயத்து,கந்துவட்டி போன்ற விரோத செயல்களில் ஈடுபட்டு வந்த  திருச்சி 25 வது வார்டு கவுன்சிலர் ஜெரால்டு மில்டன்-னின் கொலை மிரட்டலுக்குப் பயந்து தொழில் அதிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.அவரின் கடைசிகட்ட நிமிடங்கள் மரண வாக்குமூலம் போல் செல்போனில் வீடியோவாகப் பதியப்பட்டு வெளிவந்ததைப் பார்க்கும் போது நெஞ்சே வெடித்துவிடுவது போல் உள்ளது.

"வாங்கினது நாங்க அஞ்சு லட்சம்தான்....இன்னிக்கி 25  லட்ச ரூபாய் என்னை கட்டு..கட்டு... கட்டு...கட்டு...கட்டு...கட்டு...கட்டுனு தொந்தரவு பண்றாய்ங்க...எவ்வளவோ வெத்து பேப்பர்ல எழுதி வாங்கினாங்க ...இதை வச்சி உங்களை என்ன வேணும்னாலும் செய்வோம் அப்படீன்னு மிரட்டுராய்ங்க.. கலக்டரம்மா...முதல்வரம்மா..நீங்கதான் என் பொண்டாட்டியை இவங்க கிட்டேருந்து காப்பாத்தணும்.." இது அவரின்  மூச்சு மொத்தமாக அடங்குவதற்கு சில நொடிகளுக்கு முன் பேசியது.



  கொஞ்சம் நேரம் ஒதுக்கி இந்த வீடியோவைப் பாருங்க...இப்படியொரு நிகழ்வு என் பரம எதிரிக்குக் கூட வரக்கூடாது...  :-((((((

கந்துவட்டியைப் பற்றி சினிமாவில்தான் பார்த்திருக்கேன். கனாகண்டேன்,தடையறதாக்க போன்ற திரைப்படங்களில் கந்துவட்டியின் உக்கிரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியபோது மிகைப்படுத்தப்பட்ட காட்சியமைப்பு போல் தோன்றியது.ஆனால் இந்த வீடியோவைப் பார்க்கும் போதுதான் அது எந்த அளவுக்கு உளவியல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை உணர முடிகிறது. 

தன் சாவு கந்துவட்டி கலாச்சாரத்துக்கு ஒரு முற்றுபுள்ளியாக இருக்கவேண்டும் என்பது அவர் பேச்சில் தெரிகிறது.இது முதல்வர் அவர்களுக்கு வைக்கும் வேண்டுகோளாகவே அமையவேண்டும் என்பதில் அவர் தீர்மானமாக இருந்ததும் உணரமுடிகிறது. முதல்வர் இந்த 'கந்துவட்டி கோயிந்தன்கள்' மீது நடவடிக்கை எடுப்பார..?அல்லது இது திமுகவின் திட்டமிட்ட சதியென்று அலட்சியப் படுத்துவார..?  




வணக்கங்களுடன் ...
மணிமாறன்  

-----------------------------------------------------(((((((((((((((((())))))))))))))))))))))))))))))------------------------------------------ 

6 comments:

  1. ரொம்ப கொடுமைங்க...

    இவையெல்லாம் மாற வேண்டும்...
    tm2

    ReplyDelete
    Replies
    1. நன்றி..திண்டுக்கல் தனபாலன் சார்..

      Delete
  2. வீடியோவைப் பார்த்தேன் சார் என்ன உலகம் இது !.... ஒரு மனிதனின் புலம்பல்கள் இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டுள்ளது

    ReplyDelete
    Replies
    1. நன்றி சீனு..அந்தத் தாக்கத்திலிருந்து வெளிவருவதற்கு எனக்கு ஒரு நாள் ஆயிட்டுது...

      Delete
  3. கந்துவட்டிக் கொடுமை... எனக்கு ஒரு டவுட் சார்... பணத்த அப்புடியே சேர்த்து வைத்து என்ன பண்ண போகிறார்கள், கடைசியில்...

    காலக் கொடுமை... துணிந்து எழுதிய தங்களுக்கு பாராட்டுகள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி..இரவின் புன்னகை

      Delete