Wednesday, 26 December 2012

சச்சின்...கிரிக்கெட் சாம்ராஜ்யத்தின் பேரரசன்..!



மனம் ஒப்புக்கொள்ளவே மறுக்கிறது,சச்சின் இல்லாத நம் இந்திய கிரிக்கெட் அணியை நினைத்துப் பார்க்க  ...!

சச்சின் டெண்டுல்கர்...சுமார் இருபது ஆண்டுகளுக்கு மேலாக உலக கிரிக்கெட் ரசிகர்களால் உச்சரிக்கப்பட்ட மந்திரச்சொல்.....
கிரிக்கெட் என்ற உலகமகா சாம்ராஜ்யத்தின் பேரரசன்.. பறந்து விரிந்த கிரிக்கெட் என்ற பிரபஞ்ச வான்வெளியின்  சூரியன்.... இப்படி உலகத்தின் ஒட்டுமொத்த சக்திகளோடு நெஞ்சை நிமிர்த்தி ஒப்பிடலாம் அந்தக் கிரிக்கெட் கடவுளை..!.இதை மறுதலித்துக் கூட பேச முடியாது.ஏனென்றால் சச்சினின் கடந்த கால சாதனைகள் அப்படி...

சச்சினை சில நேரங்களில் நான் இசைஞானியோடு ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்வதுண்டு.உயரத்திலும் தொழில் மீது கொண்ட அர்ப்பணிப்பிலும் அல்ல.அசர வைக்கும் சாதனைகளில்.

 பதினைந்து வருடங்களுக்கு மேல் இசைத்துறையில் எப்படி ஒரு அசைக்க முடியாத சக்தியாக இசைஞானி இருந்தாரோ அதே போலத்தான் கிரிக்கெட்டில் சச்சின். பிற மொழிப்பாடல்களில் லயித்துப் போயிருந்த தமிழ் ரசிகர்களை,மொத்தமாக தன் பக்கம் ஈர்த்து தமிழ் பாடல்களை ரசிக்க வைத்தவர் இசைஞானி. அதே போலத்தான் சச்சினும்.சச்சின் கிரிக்கெட்டில் தன் கணக்கைத் தொடங்குவதற்கு முன் வரை இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் ஹீரோ யார் என யோசித்துப் பார்த்தால் விவியன் ரிச்சர்ட்,டொனால்ட் பிராட்மேன், இம்ரான்கான், கவாஸ்கர், ரவிஷாஸ்திரி ..என பட்டியல் நீளும்.ஆனால் அத்தனை ரசிகர்களையும் தனது ' பேட்டிங் ஸ்டைலால்'  தன் பக்கம் ஈர்த்துக் கொண்டவர் சச்சின் என்றால் அது மிகையல்ல.

மியூசிகல் கடைகளின் போர்டுகளில் பல ஆண்டுகளாக இசைஞானியின் படம் மட்டுமே இடம்பெற்ற சாதனையைப் போல்,ஒரு காலத்தில் பள்ளி நோட்டு புத்தகங்களின் அட்டையில் லாரா,கபில்தேவ் படங்களுடன் கடைகளில் விற்ற காலம் போய்,மொத்தமாக சச்சின் படம் மட்டுமே இடம்பிடித்ததும் ஒரு சாதனையே.

இருவருமே பந்தயக் குதிரைகள்தான்.இளையராஜா கோலேச்சியிருந்த காலகட்டத்தில் அவரை முந்த பல குதிரைகள் களமிறக்கப்பட்டது.இன்னும் பத்தே படங்களில் இளையராஜாவை வீழ்த்திக் காட்டுகிறேன் என சபதமிட்டார் சந்திரபோஸ்.சொன்ன படியே பத்துப் படங்களின் பாடல்களும் ஹிட்டானது.ஆனால் அதற்குள் இளையாராஜா ஐம்பது படங்களை சூப்பர் டூப்பர் ஹிட்டாக்கியிருந்தார்.பல பிரபலமான இயக்குனர்கள், வெளி மாநில இசையமைப்பாளர்களைக் கூட களமிறக்கிப் பார்த்தார்கள்.அவர்கள் வந்த சுவடுகள் கூட இல்லாமல் போனார்கள்... 

ச்சினின் கிரிக்கெட் பயணமும் அப்படித்தான்.ஒரு நாள் போட்டிகளில் சச்சின் தனது சதங்களின் எண்ணிக்கையில் இரட்டை இலக்கத்தைத் தொட்டபோது,அவருக்கு வெகு அருகில் பாகிஸ்தானின் சயீத் அன்வர் வந்துகொண்டிருந்தார்.எங்கே தொட்டுவிடுவாரோ என்ற அச்சம்,அடுத்தடுத்த அவரின் 'அவுட் ஆப் .'.பார்ம்'-னால் சிறிது நாட்களிலேயோ தகர்ந்து போனது.அதற்கடுத்து கங்குலி,மார்க் வாவ்,ஜெயசூர்யா,லாரா என சச்சினைத் துரத்திய ஜாம்பவான்கள் ஏராளம்.ஆனால் எல்லோருமே அவரைத் துரத்த முடிந்ததேத் தவிர,தொடக்கூடமுடியவில்லை என்பதுதான் நிதர்சனம். கடைசியாக எதிர் பார்க்கப்பட்ட ரிக்கி பாண்டிங்கும் சமீபத்தில் தன் ஓய்வை அறிவித்து விட்டார். இனி சச்சினின் சாதனைகள் அனைத்துமே முறியடிக்கப்படாமல் கிரிக்கெட் வரலாற்றின் கல்வெட்டுகளில் செதுக்கப்படப் போகின்றது...

கட்டைப்போடும் டெஸ்ட் மேட்சிலிருந்து வேறு ஒரு பரிணாமமாக ஒரு நாள் போட்டிகள் தோன்றியபோது, டெஸ்ட் போட்டிகளிலிருந்த அதே பேட்டிங் முறையையே பின்பற்றி நிறைய பேட்ஸ்மேன்கள் மந்தமாக ஆடினார்கள்.ஒருநாள் போட்டிகளை விறுவிறுப்பாக்கிய வீரர்களில் சச்சின் மிக முக்கியமானவர்.முதல் பதினைந்து ஓவர்களில் அடித்து ஆடும் முறையை கையாண்டது முதலில் சச்சின்தான் என்று சொல்லப்படுகிறது.பிறகுதான் ஜெயசூர்யாவும்,அப்ரிடியும் மற்றவர்களும்.

உலகில் பவுலிங்கில் பல பேருக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த நிறைய பவுலர்கள் சச்சினிடம் டவுசர் கிழிந்துதான் போனார்கள்.ஷேர்ன் வார்னேயிடமும், முத்தையா முரளிதரனிடமும் கேட்டால் ரூம் போட்டு விலாவாரியாக விளக்குவார்கள். 

கிராமங்களில் முன்பெல்லாம் கபடி விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள்  தற்போது அவர்களின் வசதிற்கேற்ப கிடைத்த பொருள்களை பேட்டுகளாக்கி,வயல்வெளிகளை மைதானமாக்கி கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.அவர்கள் ஒவ்வொருவருக்குமே சச்சின்தான் ' ரோல் மாடல் ' என்பதை மறுக்க முடியுமா.?அவர்களின் இந்த மாற்றத்திற்கு சச்சினும் ஒரு காரணம் என்பதை ஒத்
துக்கொள்ளத்தானே வேண்டும். 

சச்சின் சதமடித்த நூறு போட்டிகளும்.

எல்லா விளையாட்டு வீரர்களுக்குமே ஒய்வு என்பது தவிர்க்க முடியாத ஒன்றுதான்.கால ஓட்டத்தில் கடவுள்,சச்சினுக்கு மட்டும் விலக்கு அளிப்பாரா என்ன...?ஆனால் சமீப காலத்தில் அவரின் ரன் குவிப்பில் ஏற்பட்ட சறுக்கள் கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டது. நன்றாக விளையாடும்போது தலைமேல் தூக்கிவைத்து ஆடுவதும் சரியாக விளையாடவில்லை என்றால் கடுமையாக விமர்சிப்பதும், இந்திய ரசிகர்கள் கிரிக்கெட் மீது வைத்திருக்கும் ஆர்வத்தின் வெளிப்பாடுதானே தவிர பக்குவமற்றத் தன்மை அல்ல.

எதிர்காலத்தில் கிரிக்கெட்டைப் பற்றி நான்கு வரியில் ஒரு குறிப்பு வரைக என்றால் அதில் ஒரு வரி கண்டிப்பாக சச்சின் டெண்டுல்கரைப் பற்றி இருக்கும் எ
ன்பது மட்டும் நிதர்சன உண்மை.


வணக்கங்களுடன்...
மணிமாறன்.

------------------------------------------------------------------------------((((((((((((())))))))))))))))))))------------------------------------------------

4 comments:

  1. படம் எங்க கிடைச்சது. மணிமாறன்?சூப்பர்.
    நன்றாக எழுதி இருக்கிறீர்கள்
    சச்சின் ஒரு சகாப்தம் என்பதில் ஐயமில்லை.ஆனால் துவக்க ஆட்டக்காரர்களில் அதிரடி காட்டியது முதலில் ஸ்ரீகாந்த் என்று நினைக்கிறேன்.அப்போது அவர் ஆடியதற்கு பல விமர்சனங்கள் எழுந்தது.ஆனனல் பின்னர் அதுவே நடைமுறையாக மாறிவிட்டது.முதன் முதலில் இந்த தந்திரத்தை இலங்கை தன உத்தியாக மாற்றிக்கொண்டு உலகக் கோப்பையை கைப்பற்றியது.பின்னர் எல்லா நாடுகளும் அப்படி ஆட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டன என்று நான் கருதுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே...ஸ்ரீகாந்த் ஆரம்ப ஓவர்களில் அடித்து ஆடினாலும் அவரால் நிலைத்து ஆடமுடியவில்லை.96 உலகக்கோப்பையில் தான் ஜெயசூர்யாவும் கலுவித்ரனாவும் இந்த முறையைப் பின்பற்றினார்கள்.சச்சின் அதற்கு முன்பே ஒபெனிங்கில் அடித்து ஆடியதாக நினைவு.

      Delete
  2. சச்சின் எனக்கு மிகவும் பிடிக்கும் சார்.. இருந்தும் சமீப்ன காலமாக கிரிக்கெட் பிடிக்காமல் போகவே, ஒரு போட்டியும் பார்ப்பது இல்லை. இருந்து சச்சின் இல்லாத கிரிகெட் நியூஸ் வருத்தமே

    //இளையராஜாவை வீழ்த்திக் காட்டுகிறேன் என சபதமிட்டார் சந்திரபோஸ்.// தமிழ் சினிமாவில் இப்படி எல்லாம் கூட நடந்து இருக்கிறதா ... அருமையான ஒப்பீடல் சார்

    ReplyDelete