நேற்றுதான் தங்கமீன்கள் பார்த்தேன். மொக்கைப் படங்களை முதல்நாளே பார்க்கவும் சில நல்ல படங்களை பல நாட்கள் கழித்து பார்க்கும்படியும் சபிக்கப்பட்டிருக்கிறேன் போல. தங்கமீன்கள் தமிழ்சினிமாவின் மைல்கல் இல்லை என்றாலும் இந்த வருடத்தின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்று.
"மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்குத்தான் தெரியும்...." என்கிற மொண்ணை தத்துவத்தோடு விளம்பரப் படுத்தப்பட்டதால் என்னவோ படத்தின் மீது அவ்வளவு ஈர்ப்பு இல்லை. நாடகத்தனமாக இருக்கிறது என்கிற விமர்சனமும் படத்தின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் ஒரு விஷயம் தெளிவாகப் புலப்பட்டது. சமூக வலைத்தளங்களில் சிறந்தப் படமாக கொண்டாடியவர்கள் எல்லோருமே மகளைப் பெற்ற அப்பாக்கள்..! முகநூலில் மழலையின் சேட்டைகளை படமெடுத்து அதில் கவித்துவமான சினிமா வரிகளைக் கோர்த்து மகளோடு தன்னையும் விளம்பரப் படுத்திக்கொள்ளும் சில அப்பாக்களுக்கு இந்தப்படம் நிறையவே பிடித்திருந்தது.
நான் மகனைப் பெற்ற அப்பா. ஒருவேளை மகளைப் பெற்றிருந்தால் அந்த செண்டிமெண்ட் வளையத்துக்குள் நானும் சிக்கியிருப்பேன் போல.. :-)
நிற்க,
சென்றவாரம் விகடனில் வெளிவந்த விமர்சனத்தால் பாதிக்கப்பட்ட(?!) தங்கமீன்கள் படத்தில் இயக்குனர் ராம், விகடன் அலுவலகத்திற்கே சென்று வாதிட்டதாக அறிந்தேன். அவர்கள் வழங்கிய மார்க், விமர்சனக்குழுவை நேரில் சந்தித்து வாக்குவாதம் செய்யத்தயார் என அறிவிக்கும் அளவுக்கு அவரின் மனதைக் காயப்படுத்தியிருக் -கிறது. விகடனில் ராமின் ஆதங்கக் கட்டுரையும் இந்தவாரம் வெளிவந்திருக்கிறது. விமர்சன குழுவினரை சட்டையைப் பிடித்து கேள்விகேட்கும் அளவுக்கு தங்கமீன்கள் ஒன்றும் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத படைப்பல்ல.
அதேவேளையில் தலைவா போன்ற படு மொக்கைப் படத்துக்கு 42 மார்க் போட்டுவிட்டு, வணிக ரீதியாக எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் மானிட உணர்வுகளை ஓரளவு நுட்பமாக பதிவுசெய்திருக்கும் தங்கமீன்களுக்கு 44 மார்க் கொடுப்பது சரியா என்கிற கேள்வியும் எழாமல் இல்லை.
அடுத்து எழும்பும் கேள்வி , ஆனந்தவிகடனின் மார்க்குக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தருகிறார்கள்...? என்னதான் விமர்சனத்தில் வானளவு புகழ்ந்தாலும் அல்லது கழுவி ஊற்றினாலும் மனது என்னவோ மார்க்-ன் அடிப்படையில்தான் படத்தின் தரத்தை பதிவு செய்கிறது. ஏனெனில் மார்க் என்பது பிழிந்தெடுத்த எஸ்சென்ஸ் மாதிரி. ஒருகாலத்தில் விகடனைப்போல் ராணி வாரஇதழும் மதிப்பெண் கொடுத்து வந்தது ( தற்போது தெரிய வில்லை.படித்தே பல வருடங்கள் ஆகிறது). ராணி நிர்ணயித்த அதிக பட்ச மார்க் 100. 'நாயகன்' வாங்கியதாக ஞாபகம். இப்படி வாரி வழங்கியதால் என்னவோ, அவ்வளவாக எடுபடாமல் போய்விட்டது.
ஆனால் விகடன், மார்க்-ல் காட்டும் கஞ்சத்தனம்தான் இன்னமும் அதை பேசவைக்கிறது. விகடனில் அதிக பட்சமாக 63 மார்க் ' பதினாறு வயதினிலே ' வாங்கியிருக்கிறது என நினைக்கிறேன். அதன் பிற்பாடு அது நிர்ணயித்த உச்சபட்ச மார்க் 60. இந்த பவுண்டரியை அவ்வப்போது தொடுவது கமல் படங்கள் மட்டுமே. இதற்குக் காரணம் விமர்சனக் குழுவில் நீண்ட காலமாக இருந்து வந்த கார்டூனிஸ்ட் மதனாக இருக்கலாம். மகாநதி ,ஹேராம் உட்பட சில படங்கள் 60 மார்க் வாங்கியதாக ஞாபகம்.
மதன் விமர்சனக்குழுவில் இருந்த போது நல்ல படங்களே 40 மார்க் வாங்குவது கடினம். பாபாவுக்கு 38 / 39 என நினைக்கிறேன்.ரமணா,முத்து போன்ற பிளாக்பஸ்டர் படங்களே 45-ஐ தாண்டவில்லை.அந்தக் காலக்கட்டத்தில் ஒரு படம் விகடனில் 40 மார்க்கை தாண்டிவிட்டால் அது சிறந்த படமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால் மகாநதியைவிட அதிகமாக இன்றளவும் கொண்டாடப்படும் 'அன்பே சிவம்' படத்திற்கு 46 மார்க்கு மட்டுமே விகடன் வழங்கியிருந்தது. இவ்வளவுக்கும் விமர்சனத்தில், சிவாஜிக்குப் பிறகு நடிப்பு சிம்மாசனம் கமலுக்குத் தான் என்கிற ரீதியில் புகழ்ந்திருந்தது. ஒருவேளை, மார்க் குறைவாகப் போடப்பட்டதற்குக் காரணம் இதுவாக இருக்கலாம்,-'வசனம் -மதன் '.
அன்பே சிவம் படத்திற்கு மதனின் மதிநுட்பமான வசனங்கள் எந்தளவுக்கு தரத்தை உயர்த்திப் பிடித்தது என்பதை படம் பார்த்தவர்கள் அறிவார்கள். அவர் வசனத்தில் வந்த முதல்படம் என்பதால், கணிசமான மார்க் போட்டால் தேவையில்லாத சர்ச்சை வந்துவிடுமோ என்று மார்க்கைக் குறைத்ததாக அப்போது பேசப்பட்டது. அப்படியொரு நேர்மை மதனுக்குப் பிறகு விகடனில் கடைப்பிடிக்கப்படவில்லை என்பதே தற்போதைய நிதர்சனம்.
சரி.. அப்படியென்றால் ராம் எதிர்பார்ப்பது விகடனின் உச்ச வரம்பான 60 மார்க்கா...? அந்த லாண்ட்மார்க்கை தொடுவதற்கு அப்படியென்ன யதார்த்தமான குறியீடுகள் தங்க மீன்கள் படத்தில் இருக்கு..?
பொதுவாகவே நாம் எளிதில் உணர்ச்சிவசப்படுகிற முட்டாள்கள்.அதை மூலதனமாக வைத்துதான் 'தமிழ் சினிமா' பல ஆண்டுகளாக நம்மை ஏமாற்றி பிழைப்பு நடத்திக்கொண்டுவருகிறது.ஒரே டெம்பிளேட் கதையோடு தங்கை செண்டிமெண்டை வைத்து T.ராஜேந்தரும்,தாலி செண்டிமெண்டை வைத்து பாக்கியராஜும் 80களில் நிலைத்து நின்று அடித்த சிக்சர்களை மறக்கமுடியாது.
தாய் செண்டிமெண்ட் இல்லாத சூப்பர் ஸ்டார் படங்களையும், குழந்தைகள் செண்டிமெண்ட் இல்லாத கமல் படங்களையும் விரல்விட்டு எண்ணிவிடலாம்.இப்படி உணர்வுகளுக்கு அடிமையாகிப் போன நம் தமிழ்ச் சமூகத்தில்,தந்தை-மகள் செண்டிமெண்டை மையப்படுத்தி எடுத்தப் படத்தை எப்படி குற்றம் சொல்லமுடியும்?. படத்தை குறை சொன்னால் உறவையே கொச்சைப்படுத்தின மாதிரி கொதிக்கிறார்கள் செண்டிமெண்ட் வியாபாரிகள்.
பிரச்சனை என்னவென்றால்...ஒரு குழந்தை (பத்து வயது தோற்றத்தில் இருப்பதால் சிறுமி என்றே வைத்துக் கொள்வோம் ), ஒரு சிறுமி பொதுவெளியில் இயல்பாக நடந்துகொள்ளும் விதத்தை எப்படிவேண்டுமானாலும் படம் பிடிக்கலாம். தர்க்க ரீதியாக அதில் குறை காணமுடியாத அளவுக்கு நாம் பழக்கப்பட்டிருக்கிறோம். கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இவர் வயதிலிருக்கும் ஒரு சிறுமிக்கு 'தத்தெடுத்தல்' என்பது தெளிவாகத் தெரிகிறது. அதுவும் முதல்முறை கேட்கும்போதே 25 வயது முதிர்ச்சியோடு முகபாவனையை காட்டுகிறது. நிறைய படங்களில் பேபி ஷாலினியும், பேபி ஷாமிலியும் பல பயில்வான்களை சிறு கழியைக் கொண்டே அடித்து வீழ்த்துவதைத் தர்க்க ரீதியாக சிந்திக்காமல் கைதட்டி ரசித்திருக்கிறோம். அதே மனோபாவத்துடன் தங்கமீன்கள் செல்லம்மாவையும் ரசித்தாக வேண்டும் (?!).
சினிமாவில் குழந்தைகள் என்றாலே சமூக வாழ்வியல் நடைமுறையிலிருந்து விலகி நிற்கும் மனப்பான்மை உடையவையாகத்தான் காட்டப்படுகிறது. இதிலும் அப்படித்தான். செல்லம்மா ஆட்டிசம் பாதிக்கப்பட்டவளா அல்லது மந்தமான அறிவுடையவளா அல்லது மனநலம் பாதிக்கப்பட்டவளா என கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. அதிலும் செல்லம்மாவுக்கு இருக்கும் அதேப்பிரச்சனை அப்பாவான கல்யாண சுந்தரத்திற்கும் இருக்கிறதோ என்கிற சந்தேகமும் வருகிறது. 'அவன்தான் கல்யாணி...அப்படித்தான் இருப்பான்' என இந்தவார விகடனில் சர்வாதிகார விளக்கம் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ராம். அதே விளக்கத்தை செல்லம்மாவுக்கும் எடுத்துக் கொள்வோம்.
ஒரு உணர்வுப்பூர்வமான படைப்பு என்றால் அது பார்வையாளனை அழவைக்க வேண்டும். குறைந்தபட்சம் இனம்புரியாத ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இதில் பல இடங்களில் வாய்விட்டு கதறி அழுகிறார் ராம். நம்மால் அதை வேடிக்கைத்தான் பார்க்க முடிகிறது. மகாநதியில் கமல் ஒரு காட்சியில்தான் உடைந்து அழுவார். அதனால்தான் அந்த அழுகைக்கு அவ்வளவு வலிமை...!
சரி... இதில் செண்டிமெண்டை தவிர்த்து வேறு ஏதோ குறியீடுகள் இருப்பதாக சொல்கிறார் இயக்குனர் ராம்...
தனியார் கல்வி நிலையங்களுக்கு எதிராக தன் படைப்பில் பதிவு செய்திருப்பதாகக் கூறும் ராம் அப்படி என்ன சொல்லிவிட்டார் எனத் தெரியவில்லை. உங்கிட்டதான் பீஸ் கட்ட வசதி இல்லையே பேசாம கவர்மென்ட் ஸ்கூலில் படிக்க வைக்க வேண்டியதுதானே என நண்பன் அட்வைஸ் செய்யும்போது பொங்கி எழுகிறார். நல்லாசிரியராக இருந்த தன் அப்பா சொல்லும்போதும் பொங்குகிறார்.. தனியார் பள்ளியில்தான் நல்ல படிப்பு கிடைக்கும் என்று கடைசிக் காட்சிவரை தனியார் பள்ளி நிலையங்களை தூக்கிப் பிடித்துவிட்டு , ஒரே காட்சியில் அரசுப் பள்ளியின் சிறப்பை பதிவு செய்வதுதான் சிறந்த குறியீடா...? மந்தமான நிலையிலிருக்கும் ஒரு சிறுமி, அரசு பள்ளியில் அட்மிசன் போட்ட உடனையே முதல் மாணவியாக வந்துவிடுமா.....? எந்த விதத்தில் தனியார் கல்வி நிலையங்களைவிட அரசு பள்ளிகள் சிறந்தது என்பதை ஒரு காட்சியிலாவது விளக்க வேண்டாமா..?
மாதம் வெறும் 2000 ஆயிரம் ரூபாய் கல்விக்கட்டணம் செலுத்த முடியாத அப்பாவை சினிமாவில்தான் பார்க்க முடியும். இந்தக் காலக்கட்டத்தில் மளிகைக்கடையில் வேலைப் பார்த்தால் கூட மாதம் குறைந்தது 5000 ரூபாய் அசால்ட்டாக கிடைக்கும். கட்டுமானத்துறையில் இருக்கும் கடைநிலை தொழிலாளிக்கே நாள் ஒன்றுக்கு 400 ரூபாய் கிடைக்கும்போது மாதம் 2000 ரூபாய்க்கு அல்லோகலப்படுவதாகக் காண்பித்திருப்பது அபத்தமாகத் தெரிகிறது. ஆனால் இதற்கும் ஒரு குறியீடு சொல்கிறார் ராம். உலகமயமாக்கலின் விளைவாக தொழில்கள் நலிவடைந்து போய்விட்டது என்பதை உணர்த்தவே அவ்வாறு காண்பித்தாராம். தவமாய் தவமிருந்து படத்தில் கூட பொறியியல் படித்த சேரன் சென்னையில் தள்ளுவண்டி இழுத்து கஷ்டப்படுவதாக காண்பித்ததை விமர்சகர்கள் சுட்டிக்காட்டியபோது, சேரனும் இப்படித்தான் பொங்கினார்... இவர்களின் குறியீடுகளை புரிந்துகொள்ள தனி மூளை வேண்டும் போல....
தன் மகள் விருப்பப்பட்டுக் கேட்ட ' வோடோஃபோன் ' நாய்க்குட்டியை வாங்குவதற்கு பணம் இல்லாததால், ரெயின் மேக்கர் என்ற கருவியை தேடிக் கண்டுபிடித்துக் கொடுத்தால் அதற்குரிய பணம் கிடைக்கும் என்பதால், தனிஆளாக பல மலைகளைத் தண்டி உயிரை பணயம் வைத்து மீட்டு வருகிறார். அவ்வளவு கஷ்டப்பட வேண்டுமா என்றால், அதற்கும் ஒரு குறியீடு வைத்திருக்கிறாராம். அதாவது மேற்கு தொடர்ச்சி மலையின் இந்தப்பக்கம் மகள் இருக்கிறாளாம். அந்தப்பக்கம் தந்தை இருக்கிறாராம். ' மேற்கு' என்கிற சொல் வெஸ்டர்ன் கலாச்சாரத்தின் குறியீடாம். இப்படி பல்வேறுப்பட்ட குறியீடுகள் பொதிந்த காட்சிப் படிமங்களாக தக தகவென ஜொலிக்கிறது தங்கமீன்கள்...! இனிமேல் இதுபோன்ற கலைப்படைப்புகளை காணும்போது அது என்ன வகையான குறியீடுகளை குறிக்கிறது என்பதை வேறு கவனிக்க வேண்டியிருக்கிறது.
எப்படிப்பார்த்தாலும் தங்கமீன்கள் சிறந்த படைப்புதான், சில நாடகத்தனமான காட்சிகளை நீக்கிவிட்டுப் பார்த்தால்...! ஆனால் இந்த குறியீடுகள்தான் என் மரமண்டைக்கு விளங்காமல் போய்விட்டது.
டிஸ்கி.
விகடன் விமர்சனம் தொடர்பாக பிரச்சனை எழுந்தபோது 'லக்கிலுக் யுவா' தன் முகநூலில் ஒரு செய்தியைப் பகிர்ந்திருந்தார். மிருதங்க சக்ரவர்த்தி படம் வெளிவந்தபோது விகடனின் விமர்சனத்தில் சிவாஜியை கடுமையாக சாடியிருந்தார்களாம். கிளைமாக்ஸ் காட்சியில் 'காக்கா வலிப்பு' வந்ததுபோல் அவரது நடிப்பு இருந்ததாக எழுதியிருக்கிறார்கள். உடனே சிவாஜி ரசிகர்கள் கொந்தளித்துபோய் விகடனுக்கு எதிராக கண்டனங்களை எழுப்பவே, உடனடியாக நிஜ மிருதங்க வித்வான்களை அழைத்து கருத்து கேட்டிருக்கிறது விகடன் தரப்பு. அவர்கள், மிக கைத்தேர்ந்த வித்வான்களின் எக்ஸ்பிரஸன் இப்படித்தான் இருக்கும் என்று சொல்லவே, உடனே மன்னிப்பு கேட்டதும் இல்லாமல் அடுத்த ஒரு வருடத்திற்கு எந்த படத்திற்கும் விமர்சனம் எழுதுவதில்லை என அறிவித்துவிட்டதாம்...
அந்த கிளைமாக்சை தற்போது பார்த்தால் ஒருவேளை விகடன் எழுதியது உண்மையோ என தோன்றுகிறது.. படம் 83-ல் வெளியாகியிருக்கிறது. மூன்றாம்பிறை கூட அந்தக் காலக்கட்டத்தில்தான் வெளியாகி கமலின் எதார்த்த நடிப்புக்கு தேசியவிருது பெற்றுத்தந்தது. மகேந்திரன், பாலு மகேந்திரா போன்ற மனித உறவுகளின் எதார்த்தத்தை திரைக்காவியங்களாகப் படைத்த இயக்குனர்கள் கோலோச்சிய காலகட்டம் வேறு.அப்போது கூட சிவாஜி அவர்கள் தன் பழைய நடிப்பு பாணியிலிருந்து வெளிவரவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது.
( தேவர்மகனுக்கு முன்பு சிவாஜிக்கு ஏன் தேசியவிருது கொடுக்கப்படவில்லை என்பதற்கு இப்படியும் ஒரு காரணம் இருக்கலாம். அதற்காக ரிக்ஷாகாரன் எம்ஜியாருக்கு கொடுத்ததெல்லாம் கொஞ்சம் ஓவருங்ண்ணா.. அப்படிப்பார்த்தால் சிவாஜிக்கு குறைந்தது பத்து விருதாவது கொடுத்திருக்கணும்.)
nice brother...ரொம்ப நாளைக்கி அப்புறம் ரசிச்சி படிச்சேன்...படத்தையோ, விமர்சணத்தையோ விடுங்க..உங்க எழுத்து நடை நல்லாருக்கு...வாழ்த்துகள்..தொடருங்கள்,....
ReplyDeleteபின்னூட்டத்திற்கும் ஊக்கத்திற்கும் நன்றி சக்தி முருகேசன் அவர்களே..
Deleteதங்கமீன்கள் படத்தில் நிறைய ப்ளஸ் பாய்ன்டுகள் இருப்பது உண்மைதான். ரோகினி போன்றவர்களுடைய யதார்த்தமான நடிப்பு. அழகான காட்சிகள், சுருக்கமான வசனம் என பல உண்டு. ஆனால் அதில் இயக்குனர் ராமின் ஓவர் நடிப்புதான் சில சமயங்களில் சலிப்படைய வைத்தது. மற்றபடி விகடன் விமர்சனத்தில் அளித்திருந்த மதிப்பெண் ஒக்கே என்றுதான் நினைக்கிறேன். அதற்குப் போய் அலட்டிக்கொள்வதைப் பார்த்தால் ராம் நிஜவாழ்க்கையிலும் ஓவராகத்தான் ரியாக்ட் செய்வார் போலிருக்கிறது.
ReplyDeleteபின்னூட்டத்திற்கும் ஊக்கத்திற்கும் நன்றி அவர்களே..
Deleteநன்றி பாஸ்... படத்தில் எதார்த்தமான விசயங்கள் நிறைய உண்டு... ஆனால் சில இடங்களில் வரும் மிகை நடிப்புகள் அவற்றை மழுங்கடித்து விடுகிறது.
அன்பே சிவம் படத்தை ஒப்பிடும்போது எனக்கும் அந்த மதிப்பெண் சரிதான் எனத் தோன்றுகிறது. ஆனால் தலைவாவை விட பல மடங்கு தரமான இந்தப்படத்திற்கு அந்த மதிப்பெண் குறைவு என ராம் பீல் பண்ணுகிறார் போல...( இந்த வார விகடனில் மூடர் கூடம் படத்திற்கு 50 மார்க் வேறு போட்டிருக்கிறார்கள்..அடுத்து என்ன ஆகப்போகுதோ.. :-))
டிஸ்கி : கொடூரம்... உங்கள் பதிவிற்கு தேவை இல்லாதது...
ReplyDeleteநன்றி...
நன்றி DD,
Deleteகடந்த வாரம் விகடன் விமர்சனம் தொடர்பான விவாதங்கள் நடந்தபோது, ராம் தான் முதன்முதலாக விகடன் ஆபிசுக்கே சென்று தன் எதிர்ப்புகளை தெரிவித்தார் என எல்லோரும் நினைத்திருக்கையில், யாரோ ஒரு நண்பர் தான் யுவாவுக்கு அந்த செய்தியைத் தெரிவித்திருக்கிறார். ஊடகத்துறையில் இருக்கும் அவருக்கும் தெரியவில்லை. விவரம் தெரிந்த நாளிலிருந்து தொடர்ந்து விகடன் படித்து வருகிறேன். எனக்கும் அந்த செய்தி புதிதுதான். அது உண்மைதான் என்று ஒரு நண்பர் உறுதி செய்தார்.
காலங்காலமாக சினிமா விமர்சனம் என்றாலே அது விகடன்தான் என்று நம் பொதுப்புத்தியில் ஆழமாகப் பதிந்திருக்கையில், ஒரு வருட காலத்திற்க்கு விமர்சனமே எழுதாமல் தமிழின் முன்னணிப் பத்திரிகை ஓன்று தனக்கே தண்டனை கொடுத்துக்கொண்டது எவ்வளவு பெரிய விஷயம்...! அந்த வரலாற்று நிகழ்வை(?!)த்தான் இங்கே பதிவு செய்தேன்.
விமர்சனத்தை ரசித்தேன்.
ReplyDeleteடிஸ்கி - ஹாஹாஹா
மிக்க நன்றி சகோ...
Delete//மதன் விமர்சனக்குழுவில் இருந்த போது நல்ல படங்களே 40 மார்க் வாங்குவது கடினம். //
ReplyDelete//பாபாவுக்கு 38 / 39 என நினைக்கிறேன்.//
முரணான வாக்கியங்கள். நல்ல படத்துக்கு 40, பாபா போன்ற குப்பைக்கு 38-அ. வேண்டுமானால் 5-6 போட்டு இருக்கலாம்.
//ரமணா,முத்து போன்ற பிளாக்பஸ்டர் படங்களே 45-ஐ தாண்டவில்லை.//
விகடன் மார்க் எப்படி நிர்ணயம் செய்யப்படுகிறது எனத் தெரியவில்லை. படத்தின் தரமா? வசூலா? கதையின் ஒரிஜினாலிட்டியா?
//அப்போது கூட சிவாஜி அவர்கள் தன் பழைய நடிப்பு பாணியிலிருந்து வெளிவரவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது.//
சிவாஜியின் நடிப்பு, கமலின் நடிப்பு அவரை இயக்கும் இயக்குநரைப் பொருத்து அமையும். ஒழுங்க இல்லாட்டி ஓவரா இருக்கும்.
//முரணான வாக்கியங்கள். நல்ல படத்துக்கு 40, பாபா போன்ற குப்பைக்கு 38-அ. வேண்டுமானால் 5-6 போட்டு இருக்கலாம்.//
Deleteகுட்டிபிசாசு.. நிச்சயம் பாபா ஒரு குப்பைதான்.... ஆனால் தலைவாவுக்கு 42 என்கிறபோதுதான் எங்கேயோ இடிக்கிற மாதிரி இருக்கு...
//விகடன் மார்க் எப்படி நிர்ணயம் செய்யப்படுகிறது எனத் தெரியவில்லை. படத்தின் தரமா? வசூலா? கதையின் ஒரிஜினாலிட்டியா?//
இது கொஞ்சம் சிக்கல்தான்... ஆனால் முன்பு ஒரு தெளிவான நடைமுறை இருந்தது.கமர்சியலா எஸ்கேப்பாகும் படங்களுக்கு 40 க்கு குறைவாகக் கொடுத்தது கிடையாது... கொண்டாடப்படும் படங்களுக்கு 50 க்கு மேல் கொடுப்பார்கள். தற்போது விகடனின் தரம், நாணயம் எல்லாம் மங்கிப்போய் விட்டது.
//சிவாஜியின் நடிப்பு, கமலின் நடிப்பு அவரை இயக்கும் இயக்குநரைப் பொருத்து அமையும். ஒழுங்க இல்லாட்டி ஓவரா இருக்கும். //
நீங்கள் சொல்வது ஓரளவு சரிதான்... சிவாஜி என்கிற சிங்கத்துக்கு நிறைய நேரங்களில் நாம் தயிர்சாதம்தான் போட்டிருக்கிறோம் என கமல் சொன்னது ஞாபகம் வருகிறது. அதேவேளையில், சிவாஜியை யாரும் 'இயக்குவது' கிடையாது. தேவர் மகன் படத்தில் கூட காட்சியமைப்பையும் வசனத்தையும் சிவாஜியிடம் விளக்கிவிட்டு கமலும் பரதனும் ஓரமாக ஒதுங்கி நிற்பார்களாம். சிவாஜியே தன்னை இயக்கி நடித்த அந்த பெரியசாமித்தேவருக்குத்தான் தேசியவிருது கொடுத்தார்கள். முதல் மரியாதையில் கூட பாரதிராஜா சிவாஜிக்கு நடிப்பு சொல்லியா கொடுத்திருப்பார்..? அந்த மகா கலைஞனை குறை சொல்லவில்லை. ஆனால் சில படங்களில் 'ஓவர் ஆக்டிங்' இருப்பதை மறுக்க முடியாதல்லவா..?
முதல் மரியாதையும்...தேவர் மகனும்...இயக்குனர் விருப்பப்படி சிவாஜி நடித்து கொடுத்தார்.
Deleteசிவாஜி ஓவர் ஆக்டிங் அனைத்துமே...இயக்குனர்களின் தவறுதான்.
சிவாஜி என்றுமே இயக்குனர்களின் நடிகன்.
படத்திற்கு விமர்சனம் எழுதுவது விமர்சகர்களின் தனிப்பட்ட உரிமை! எல்லா படங்களையும் புகழ்ந்து எழுத வேண்டியது அவசியம் இல்லை! அவரவர்க்கு அவரது படைப்பு தங்கம் என்றாலும் ராம் நடந்து கொண்டது சரியில்லைதான்! நன்றி!
ReplyDeleteமிக்க நன்றி சுரேஷ்...உங்கள் கருத்தை வழிமொழிகின்றேன்
Deleteசெம ரைட்டப்...
ReplyDeleteமிக்க நன்றி கருண்..
Deleteஎல்லோரும் தங்க மீன்கள் பற்றி தூக்கி வைத்து பேசுகையில் தங்களின் பதிவு சிந்திக்க வைத்தது . நன்றி
ReplyDeleteநன்றி Deepak...
Deleteநீங்க குறிப்பிட்ட படங்கள் தங்கமீன் உட்பட நான் பார்க்கல்ல.அந்த படங்கள் பற்றி அறிவு இல்லாவிட்டாலும் எங்க ஆட்களது அப்பா செண்டிமெண்ட், அம்மா செண்டிமெண்ட்,தாலி செண்டிமெண்ட் பற்றிய அறிவு நிறைய இருப்பதால் உங்க கட்டுரையை இரசித்து படித்தேன்.
ReplyDeleteநீங்க தந்த வீடியோவில் சிவாஜி மிருதங்கம் செய்யும் காட்சி உண்மையிலேயே காக்கா வலிப்பு வந்தவர் மாதிரி தான் இருக்கு.
நன்றி வேகநரி
Deleteமிக தேர்ந்த ஒரு எழுத்தாளரின் எழுத்தாளுமை தெரிகிறது சார் உங்கள் இந்தப் பதிவில்.. சமீப காலமாகவே உங்கள் எழுத்தில் மிக நல்ல மாற்றம்...
ReplyDeleteவிழுமியம், குறியீடு என்ற பல வார்த்தைகளை பயன்படுத்துவதைப் பார்த்தால் எதோ ஒரு இலக்கியவாதியிடம் பலமாக சிக்கியுலீர்கள் என்று மட்டும் தெரிகிறது :-)
மகளைப் பெற்ற அப்பாவாக அவர் படம் எடுத்ததால் அந்த வார்த்தை எவ்வித வித்தியாசத்தையும் என்னிடம் ஏற்படுத்தவில்லை சார்..
படம் என்னை வெகுவாய்க் கவர்ந்திருந்தது...
மதிப்பெண் வழங்குவது விகடன் கருத்துச் சுதந்திரம்.. அதை பரிசீலிக்கச் சொல்வது ராமின் படைப்புச் சுதந்திரம்.. தன்னுள் கிரகித்து தன்னுடைய பார்வையை பதிவு செய்வது பார்வையாளனின் சுதந்திரம்.. உங்கள் பார்வையில் இது ஒரு சிறந்த படம்.. என்னுடைய பார்வையில் மிகச் சிறந்த படம்.. காரணம் நீங்கள் மகாநதி காலத்தில் வாழ்ந்தவர்கள்.. நாங்கள் வருத்தபடாத வாலிபர் சங்கக் காலத்தில் வாழ்பவர்கள் என்ற ஒரு குறியீடு ஒன்றே அதற்குக் கட்டியம் :-))))))))
இந்த எழுத்து நடையை விட்டுவிடாதீர்கள் சார்.. அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
///மிக தேர்ந்த ஒரு எழுத்தாளரின் எழுத்தாளுமை தெரிகிறது சார் உங்கள் இந்தப் பதிவில்.. சமீப காலமாகவே உங்கள் எழுத்தில் மிக நல்ல மாற்றம்...
Deleteவிழுமியம், குறியீடு என்ற பல வார்த்தைகளை பயன்படுத்துவதைப் பார்த்தால் எதோ ஒரு இலக்கியவாதியிடம் பலமாக சிக்கியுலீர்கள் என்று மட்டும் தெரிகிறது :-)//
ஹா...ஹா... ஏன் சீனு இப்படி... :-) எப்போதும் எழுதுவதுதான்... நான் கூட ஏதாவது இலக்கியவாதியின் வாசகனாக மாறிடலாம்னு பாக்குறேன்... இருக்கவே இருக்கார் நாம்ம சாரு. :-)
படம் சிறந்த படம்தான்... ஆனால் கொடுத்த பில்டப்தான் ஓவர்.. மார்க்கு கம்மியாயிருக்குனு எந்த படைப்பாளியாவது கோபப்படுவானா...?
நன்றி..நன்றி..நன்றி...
Deleteரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க.
ReplyDeleteஎனக்கும் ராமின் தங்க மீன்கள் பிடிக்கவில்லை. இல்ல இவரோட படங்களை புரிந்துகொள்ள ஏதாவது ஸ்பெஷல் கோர்ஸ் படித்து இருக்க வேண்டுமா, தெரியவில்லை.
கோனார் நோட்ஸில் அவர் சொல்லுற மாதிரி "உலகமயாமாக்கல்", "நலிந்து வரும் சிறுதொழில்கள்", குழந்தைகளின் உலகம் பற்றி தான் படம் பிடிக்க வேண்டும் என்று ராம் ஆசை பட்டு இருக்கலாம், ஆனா யாருக்குமே புரியாத மாதிரி, இல்லாட்டி முத பார்வையிலே புரிந்து கொள்ள முடியாத படி படம் எடுபதால் என்ன பிரயோஜனம். அவர் சொல்லணும் என்று நினைச்ச எந்த குறியீடும் படத்துல இருக்கிற மாதிரி எனக்கு தெரியல. பெருன்பான்மை மக்களுக்கும் புரியவில்லை. 7 கோடி மக்களில் வெறும் 4 ஆயிரம் பேருக்கு மட்டும் பிடிப்பது போல் எடுப்பது தான் நல்ல சினிமானா, நான் அந்த நல்ல சினிமாவை பார்க்காமலே இருந்து விடுகிறேன்
ஆவி நல்ல தரமான படத்துக்கு நல்ல விமர்சனம் தான் குடுப்பார்கள். "வழக்கு என்" விமர்சனம் நல்ல உதாரணம்.
தங்க மீன்கள் படத்துல ஸ்கூல் மதிப்பெண்களின் முரண்களை பேசி விட்டு, ராமே தன்னோட படத்துக்கு நல்ல மதிப்பெண் ஆவி குடுகலன்னு கோனார் நோட்ஸ் எழுதிகிட்டு இருக்கார். காமெடியா இருக்கு பாஸ்.
நன்றி ராஜ்...
Deleteபடம் மோசமான படைப்பு என்று சொல்ல முடியாது. ஆனால் விகடன் சொல்லியது போல இடைவேளைக்குப் பிறகு படம் வேறொரு தளத்திற்கு சென்றுவிட்டது. இது தந்தை- மகள் உறவைப்பற்றிய படம் என்றுதான் ஆரம்பத்தில் சொல்லியிருந்தார். எதிர்மறையான விமர்சனம் வந்த பிறகு இது உலகமயமாக்களைப் பற்றிய குறியீடுன்னு பிளேட்டை திருப்பி போடுகிறார். நூல் பிடித்த மாதிரு திரைக்கதையை கொண்டுசென்றிருந்தால் நிச்சயம் மிகச்சிறந்த படைப்பாக வந்திருக்கும்.
உங்கள் விமர்சனமும் படித்தேன்... உங்களின் பார்வையும் சரியாகத்தான் எனக்கு பட்டது.
Sir...Sivaji has never won a national award.....
ReplyDeleteஇல்லை. அவருக்கு ஒரே ஒரு தடவை மட்டும் கிடைத்திருக்கிறது தேவர் மகன் படத்திற்காக Best Supporting Actor award.
DeleteEnakum indha padam avlo pidikalai.. I agree with u brother..
ReplyDelete