Monday, 1 December 2014

சார்லஸ் டார்வினுக்கே சவால்விடும் தமிழக மங்குனிகள் (சும்மா அடிச்சு விடுவோம்..)

நான் ஆறாம் வகுப்பு படிக்கிறப்போ சயன்ஸ் வாத்தியார் பரிணாம வளர்ச்சியைப் பற்றி பாடம் நடத்திட்டு இருந்தாரு. குரங்கிலிருந்து பிறந்தவன்தான் மனிதன் என்பதற்கு விளக்கம் சொல்லிக்கிட்டு இருந்தாரு.

உடனே நான் எழுந்திருச்சி, 'குரங்கிலிருந்து மனிதன் தோன்றியதா சொல்றீங்களே சார்.. இப்போது ஏன் எந்த குரங்கிலிருந்தும் மனிதன் தோன்றவில்லை' என்று கேட்டேன். உடனே அடி பின்னி எடுத்திருப்பாருன்னு தானே நினைக்கிறீங்க.அதுதான் இல்லை. இதுபோல கிறுக்குத்தனமா கேள்வி கேட்டாலும் வாத்தியார் பையன் என்பதால் மன்னிச்சு விட்டுடுவாங்க.

" அது வந்து... அப்படியெல்லாம் யார் சொன்னது...நம்ம ஊர்ல இல்ல.. ஆனா ஆப்ரிக்கானு ஒரு நாடு இருக்கு. அங்க எல்லாம் குரங்கிலிருந்து மனிதன் தோன்றிகிட்டுதான் இருக்கான்.." என்று அளந்து விட்டாரு. அப்போ எல்லாம் கேரளாவே வெளிநாடுனு நம்பிகிட்டு இருந்த நேரம். நானும் 'அப்படியா சார்' என்று கேட்டுவிட்டு அமர்ந்துவிட்டேன்.

இப்போ அந்த வாத்தியாரை நேரில் பார்த்தேனா, 'சார்.. ஆறாப்பு படிக்கிறப்போ  குரங்கிலிருந்து ஏன் மனிதன் தோன்றவில்லை என கேள்வி கேட்டேன் தெரியுமா சார். அதுக்கான பதில் கிடைச்சிட்டு சார். வர்ற வழியில உங்க பையனை பார்த்தேன். என் சந்தேகம் தீர்ந்திடுச்சி' என சொல்லலாம்னு இருக்கேன்.

பிளஸ் 2 படிக்கும்போது விலங்கியல் ஆசிரியர் சரியான விளக்கம் கொடுத்தாரு. சிம்பன்ஸி, கொரில்லா, உராங் உடான் உட்பட அனைத்து குரங்கு வகைகளுக்கும் மனித இனத்திற்கும் சேர்த்து ஒரே மூதாதையர்தான். அந்த மூதாதையரிடமிருந்து வெவ்வேறு கிளைகளாக பிரிந்ததுதான் இவைகள். அதனால் பல நூற்றாண்டுகளு க்கு பிறகு வேண்டுமானால் தற்போதைய குரங்கிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வேறொரு அமைப்புடைய குரங்கு உருவாகுமே தவிர மனிதன் உருவாக மாட்டான் என்றார்.

அன்று அவர் சொன்ன விஷயத்தை முகநூலில் பாபு என்கிற நண்பர் படம் வரைந்து எளிமையாக விளக்கியிருந்தார்.
 
அப்படியானால் மனிதனோடு பரிணாம வளர்ச்சி நின்றுவிட்டதா..? அப்போது அடைந்த பரிணாம மாற்றங்கள் தற்போது ஏன் நிகழவில்லை. ஆதலால்,குரங்கிலிருந்து மனிதன் தோன்றியது என்பதெல்லாம் கட்டுக்கதை என்று ஆதாம் ஏவாள் கோஷ்டி ஓன்று சண்டைக்கு வரும். இது எப்படி இருக்கிறது என்றால் உலகம் ஒரு உருண்டை. அதன் மேல்பரப்பில்தான் நாம் இருக்கிறோம் என்று முதலில் கேள்விப்பட்டபோது, "ஹை .. அப்படினா நாம வழுக்கி விழுந்துவிட மாட்டோமா.." என்று கேட்க தோன்றியது போல் இருக்கிறது.

பரிணாம மாற்றம் என்பது ஒரே இரவில் நடப்பது அல்ல. ஆயிரம் வருடங்கள் ஆகலாம் . பல மில்லியன் வருடங்கள் கூட ஆகலாம்.சுற்றுச்சூழல் மாற்றத்திற்கு ஏற்ப படிப்படியாக மாற்றங்கள் நிகழும். ஒரு உயிரினத்தின் பண்புகள் தலைமுறை தலைமுறையாக மரபணுக்கள் மூலமாக கடத்திச்செல்லும் போது தேவை கருதியோ, சூழல் கருதியோ அல்லது மரபணுப் பிழைகள் மூலமாகவோ காலப்போக்கில் மாறுதல் ஏற்படும்.

பொதுவாக பரிணாம மாற்றம் என்பது இயற்கைத் தெரிவமைப்பு (Natural Selection), தகவமைவு (Adaptation) மரபணுக்களில் ஏற்படும் திடீர் மாற்றம்(Mutation), மரபணுப் பிறழ்வு நகர்வு (Genetic Drift) மூலமாகவும் அமைவதாக சொல்கிறார்கள்.

ஒருவேளை செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறு இருந்து இங்குள்ள சில விலங்கினங் களை ராக்கெட் மூலம் அங்கே விட்டுவிட்டு வந்தால் சில நூறு வருடங்களில் வேறொரு வடிவத்தில் பரிணாம மாற்றம் அடையலாம். ஆனால் மனித இனத்துக்கு சாத்தியம் மிகக்குறைவு. ஏனென்றால் மனிதன் எப்போதும் சுற்றுச்சூழல் மாற்றத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ள மாட்டான்.மாறாக,அந்தச் சுற்றுச்சூழலையே தனக்கேற்ற மாதிரி மாற்றிக்கொள்வான்.

அது கிடக்கட்டும். உலகம் முழுதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்கிற டார்வினின் பரிணாமக் கொள்கை தமிழ் நாட்டில் மட்டும் ரிவேர்சாகிப் போனதாக பேசிக்கொள்கிறார்களே.. அது உண்மைதானா...?

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Tribute to Maestro Ilayaraja

இப்படி ஒரு தலைப்பில் சென்னையில் உள்ள Muzik Lounge School Of Audio Technology என்ற இசைப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் இணைந்து இளையராஜாவின் சில பாடல்களை ரீமிக்ஸ் செய்து YOUTUBE -ல் பதிவேற்றியுள்ளனர். முத்துமணி மாலை..., கண்ணன் வந்து பாடுகிறான்.. என்று இரு பாடல்களைத்தான் கேட்டேன். கடந்த ஒருவாரத்தில் மட்டும் நூறு தடவையாவது கேட்டிருப்பேன் ..Wow..! Really it was mesmerising...! இசை, காலம் கடந்து நிற்கும் என்பார்கள். ராகதேவன் இளையராஜா பல யுகங்கள் கடந்து நிற்பார்.





$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


"எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா....

"எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல..."

இந்த இரு பாடல்களையும் கேட்டிருக்கிறீர்களா என எழுதினால் அட்ரஸை தேடிக்கண்டுபிடித்து வந்து உதைத்துவிட்டு போவீர்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். இரண்டுமே ராகதேவனின் மாஸ்டர் பீஸ். 

ஒன்று வாலி மற்றொன்று பஞ்சு அருணாசலம் எழுதியது என நினைக்கிறேன். இரண்டுமே மெலடிகளின் உச்சம். நான் இங்கே சொல்ல வருவது இசையைப் பற்றியல்ல. பாடல் வரிகளைப் பற்றியது.

இந்த வரிகளுக்கு இசையோடு சேர்ந்து அழகு சேர்ப்பது எந்தன் என்கிற வார்த்தை. எந்தன் என்றால் என்ன..? 

'எனது'.. 'என்னுடைய' என்று அர்த்தமா..? 

அதுதான் இல்லை. 'எந்தன்' என்ற வார்த்தையே தமிழில் கிடையாது என்கிறார்கள் தெரியுமா..? எனக்கும் தெரியாது. சமீபத்தில்தான் தெரிந்துகொண்டேன். அது எந்தன் கிடையாது. என்றன் என்பதே சரியான வார்த்தை.  

என் + தன் = என்றன்.
உன் + தன் = உன்றன்.  

"என்றன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா...." என்று பாடினால் அவ்வளவு மென்மையாக இருக்காது அல்லவா.. அதனால் என்றன் என்பதை எந்தன் என்று மாற்றிவிட்டார்கள் போலும்.  

காலங்காலமாக தமிழ் சினிமாவில் நமது மொழியை வளர்க்க(!) பாடலாசியர்கள் செய்துவரும் தமிழ்த் தொண்டுக்கு ஒரு சிறிய உதாரணம் து.  உடனே அதற்குக் காரணம் இளையராஜாதான்.  அவர்தான் பாடலாசிரியரை மெட்டுக்கு தகுந்த மாதிரி வார்த்தையை மாற்றச்சொல்லியிருக்கிறார் என்று பேஸ்புக் பேக் ஐடி மாதிரி திடீர் அறச்சீற்றம் அடைய வேண்டாம்.

 "இதோ எந்தன் தெய்வம் முன்னாலே.." என்று எம்.எஸ்.வி இசையில் வாலியும்,   "என் வாழ்வில் நீ வந்தது விதியானால்.. நீ எந்தன் உயிர் அன்றோ...!" என்று கண்ணதாசனும்,'எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி ..'என்று  T.ராஜேந்தரும்,  " நீ தானே எந்தன் பொன்வசந்தம்......" என்று வைரமுத்துவும் ஏற்கனவே எழுதிவிட்டு போயிருக்கிறார்கள். 

சரி..அதுக்கு இப்போ என்னனு கேட்கிறீங்களா.. ஒன்னுமில்ல.. ஆனா ஒரு விஷயம்.

" என்ற வீட்டு பொண்ணு உன்ற வீட்டு மருமவளா வர கொடுத்து வச்சிருக்கனும்ங்க...." என்று கோயம்பத்தூர் காரங்க பேசும் பாசையை இனி யாரும் கிண்டல் பண்ணாதீங்க.

" என்றன் வீட்டு பொண்ணு உன்றன் வீட்டு மருமவளா வர கொடுத்து
வச்சிருக்கனும்ங்க...." என்று சுத்தமான தமிழில்தான் அவர்கள் பேசுகிறார்கள்.




5 comments:

  1. அது நீங்கள் சொல்வது போல் எந்தன் என்று அர்த்தப்பட மாட்டாது .
    இங்கு, என்ற அல்லது என்ர என் கிற பதம் என்னுடைய என்ற பதத்தின் சுருக்கமாக அல்லது திரிபாக கொள்ளப்படும்.
    உதாரணமாக என்ற வீடு என்றால் என்னுடைய வீடு என்று அர்த்தப்படும்

    ReplyDelete
  2. //என்ற வீடு என்றால் என்னுடைய வீடு என்று அர்த்தப்படும்// அதைத்தான் பாஸ் சொல்லியிருக்கேன்..நல்லா படியுங்கள். என்றன் வீடு என்பதைத்தான் என்ற வீடு என்கிறார்கள்

    ReplyDelete
  3. அறிவியல் விளக்கமும் சரி! மொழி விளக்கமும் சரி! உங்கள் பாணியில் அசத்திவிட்டீர்கள்! அருமை! நன்றி!

    ReplyDelete
  4. # பாபு என்கிற நண்பர் #போட்டிருக்கும் படம் நல்ல விளக்கம் !
    பாபு படத்தில் வந்த , "இதோ எந்தன் தெய்வம் முன்னாலே.பாடல் வரி தவறுதான் !
    த ம 3

    ReplyDelete
  5. # பாபு என்கிற நண்பர் #போட்டிருக்கும் படம் நல்ல விளக்கம் !
    பாபு படத்தில் வந்த , "இதோ எந்தன் தெய்வம் முன்னாலே.பாடல் வரி தவறுதான் !
    த ம 3

    ReplyDelete