அதற்கு முன், மாற்று சினிமா எடுக்கிறேன் என்று கதை சொல்லவரும் உதவி இயக்குனர்களின் உழைப்பைத் திருடி ,கொரியன் படத்திலிருந்து ஒரு சீன், ஈரானிய படத்திலிருந்து ஒரு சீன், ஹாலிவுட் படத்திலிருந்து ஒரு சீன் என காட்சிகளை உருவி காவியம் படைத்ததாகப் பீற்றிக்கொள்ளும் சமகால இயக்குனர்கள் மத்தியில் நம் மண்ணின் வாசம் நிறைந்த கதைக்களத்தில் காவியம் படைக்க முயற்சித்திருக்கும் இயக்குனர் வசந்தபாலன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
முழுக்கதையும் இந்திய சுதந்திரத்திற்கு முன்பு சினிமா அறிமுகமாகாத,மேடை நாடகங்கள் பிரபலமாக இருந்த காலகட்டத்தில் நடக்கிறது.
நாசரின் ஸ்ரீலஸ்ரீ பாலசண்முகானந்தா நாடக சபாவில் அனாதைகளாக கோமதி நாயகமும் (பிருத்விராஜ்), காளியப்பனும்(சித்தார்த்தும்) சிறுவயதில் சேர்கிறார்கள். நாசரிடம் நடிப்புக்கலையைக் கற்று சிறுசிறு வேடங்களில் நடிக்கிறார்கள். அதே நாடக குரூப்பில் ராஜபார்ட்டாக பொன்வண்ணன் நடிக்கிறார். நாசருக்கும் பொன்வண்ணனுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பொன்வண்ணன் அக்குழுவை விட்டு வெளியேறிவிட அடுத்த ராஜபார்ட் யார் என்பதில் சித்தார்த்துக்கும் பிருத்விராஜுக்கும் போட்டி நிலவுகிறது .
குருசாமி சிவதாஸ் சுவாமி(நாசர்)யின் சாய்ஸ் சித்தார்த்தாக இருக்க, அதுவரை உடன்பிறவா தம்பியாக பழகி வந்த சித்தார்த்தை பகையாளியாகப் பார்க்க ஆரம்பிக்கிறார் பிருத்வி. இதற்கிடையில் ஜமீன்தாரின் பெண்ணுக்கும் சித்தார்த்துக்கும் காதல் மலர, அதை நாசரிடம் சமயம் பார்த்து வத்தி வைக்கிறார் பிருத்வி. அதனால் நாடக சபாவை விட்டே சித்தார்த்தை விலக்கி வைப்பதாக நாசர் முடிவெடுக்க, வேற வழி தெரியாமல் அப்பெண்ணை மறந்துவிடுவதாக நாசரிடம் சத்தியம் செய்து திரும்பவும் அக்குழுவில் இணைந்தது எடுபிடி வேலைகள் செய்கிறார் சித்தார்த். தன் இத்தனை நாள் கனவான ராஜபார்ட் வேடம் நயவஞ்சகத்தின் மூலம் பிருத்விக்கு கிடைக்கிறது.
சித்தார்த் காதலால் களங்கப்பட்ட(!) நாசரின் நாடகசபா அவ்வூரைக் காலி செய்துவிட்டு வேறு ஊருக்கு கிளம்புகிறது.காதலனைப் பிரிந்த ஜமீன்தார் மகள் தற்கொலை செய்துகொள்ள, வெகுண்டெழுகிறார் சித்தார்த். தன் குருவான நாசர் மீது சினம் கொண்டு சாபம் விட அவர் இறந்துவிடுகிறார். அச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நாடக சபாவை பிருத்விராஜ் 'டேக்ஓவர்' செய்கிறார். அதன்பின்பு, அதுநாள் வரை உதட்டில் சகோதரனாகவும் உள்ளத்தில் எதிரியாகவும் பாவித்து வந்த சித்தார்த்தை, அந்நாடக சபாவை விட்டே துரத்துகிறார் பிருத்வி. இப்படி நாடக சபாவினுள் நடக்கும் அரசியலைப் பேசிச் செல்கிறது முதல் பாதி.
பிறகு இருவரும் சேர்ந்தார்களா என்பதை இரண்டாம்பாதியில் இன்னும் இழுவையாக இழுத்து சொல்லியிருக்கிறார்கள்.
முக்கால்வாசி படம் வரை ஒரு நாடகக் கம்பெனிக்குள் நடக்கும் அரசியலையே அரைத்துக் கொண்டேயிருக்க, இப்போ இந்தப்படம் மூலம் இயக்குனர் என்னதான் சொல்ல வருகிறார் என்று நாம் குழம்பும் நேரத்தில், சுதேசி இயக்கம், விடுதலைப் போராட்டம் என்று வேறு ஒரு ட்ராக்கில் கதையை நகர்த்துகிறார் இயக்குனர்.
ராஜபார்ட்டாக வரும் பொன்வண்ணன் கனகச்சிதம்.ஆனால் அவருக்கடுத்து அமுல்பேபியான சித்தார்த்துக்குத் தான் அவ்வேடம் மிகச்சரியாக பொருந்துகிறது என நாசர் கண்டுபிடிப்பது மிகப்பெரிய நெருடல். ஆனால் ரசிகனின் தேர்வு என்னவோ பிரித்விராஜாகத்தான் இருக்கும். ராஜபார்ட் வேடத்திற்கு உடல்மொழியைவிட, வசன உச்சரிப்பை விட கம்பீரமான தோற்றம் மிக முக்கியம் அல்லவா..? வட்டமுகம், பெருத்த விழிகள் முக்கிய பிளஸ் பாய்ன்ட் அல்லவா..? ஒட்டுமீசை வைத்து,லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டு சித்தார்த் வரும்போது பெண்ணுக்கு ஆண்வேடம் போட்ட மாதிரியே தெரிகிறார். ஆனால் காதலியிடம் ரொமான்ஸ் செய்வது, அவர் இறந்தவுடன் துடித்தழுவது, நாசரிடம் கெஞ்சுவது, இறுதிக் காட்சியில் சுடவந்த பிருத்வியின் மனதை மாற்றுவது என்று நிறையக் காட்சிகளில் செம்மையாக ஸ்கோர் செய்கிறார் சித்தார்த். தமிழில் அவருக்கு இது முக்கியமான படம்.
அனைத்து தகுதிகளிருந்தும் தான் புறக்கணிக்கப்படுகிறோமே என்கிற ஆதங்கத்தை தன் கண்களாலே பதிவு செய்யும் பிரித்விராஜ் அட்டகாசம். வசன உச்சரிப்பு கம்பீரமாகத்தான் இருக்கிறது. ஆனால் அதோடு இலவச இணைப்பாக ஒட்டிக்கொண்டு வரும் மலையாள வாடைதான் நெருடுகிறது.வேதிகாவுக்கு இடைவேளைக்குப் பிறகுதான் நடிக்க வாய்ப்புக் கிடைக்கிறது. அதில் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை.
சிங்கம்புலியும் தம்பி ராமையாவும் இருந்தும் காமெடிக்கு ஏன் இப்படியொரு பஞ்சம்...? இடைவேளைக்குப் பிறகு கிருஷ்ணன் வேடத்திலிருக்கும் பிருத்வி,மன்சூர்அலிகானை அடிக்கும்போது 'நானும் உன்னை அடிச்சிடுவேன். ஆனா நீ என் கண்ணுக்கு கிருஷ்ணர் மாதிரி தெரிகிற' என்று திருப்பி சொல்லும்போது தியேட்டரில் சிரிப்பலை கேட்கிறது. அப்பாடா இப்பயாவது எங்களை சிரிக்க விட்டீங்களே என்கிற பெருமூச்சின் வெளிப்பாடுதான் போல.
நீண்ட இடைவேளைக்குப் பின் நாசர் என்கிற சிங்கத்துக்கு கறிவிருந்து வைத்திருக்கிறார்கள். அளவான, நேர்த்தியான நடிப்பு..!. சிவதாஸ் ஸ்வாமியாகவே வாழ்ந்திருக்கிறார்.முன்பாதி முழுவதும் நாசர் ராஜாங்கமே நடப்பதால் மற்றவர்களுக்கு பின்பாதியில்தான் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.
பாடல்கள் ஏற்கனவே விஜய் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடி பிரபலமடைத்துவிட்டதால் பாடல் காட்சிகளின் போது வெளியே பாப்கார்ன் விற்பனை கொஞ்சம் மந்தம்தான். 'ஏய் மிஸ்டர் மைனர்' ,'யாருமில்லா' பாடல்கள் திரும்ப கேட்க வைப்பவை.
ஒரு நாடக சபாவுக்குள் நடக்கும் அரசியலை நுட்பமாக அலசியிருப்பதால் இயக்குனருக்கு ஒரு சபாஷ் போடலாம். நாடகம் என்கிற கலை வடிவத்தில் நாட்டுப்பற்றையும் விடுதலை வேட்கையும் எவ்வாறு அக்காலத்தில் புகுத்தி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள் என்பதை நம் கண்முன்னே காட்சிப்படுத்திய விதத்தில் வசந்தபாலனுக்கு பெரிய பொக்கேயே பரிசளிக்கலாம். ஆனால் இரண்டரை மணி நேரம் ரசிகனுக்கு ஒரு நாடகக் கொட்டகைக்குள் உட்காந்திருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியிருப்பது எவ்வகையில் நியாயம்...? இது ஒரு பீரியட் படம் போலதான். அதில் சராசரி ரசிகனை உள்ளிழுக்க வேண்டுமென்றால் திரைக்கதையை விறுவிறுப்பாக அமைக்க வேண்டும் அல்லவா.. ஆமை வேகத்தில் நகருகிறது. அதிலும் இடைவேளைக்குப் பிறகு சுதேசி நாடகம்,விடுதலைப் போராட்டம் அன்று அவிழ்த்துவிட்ட காளைபோல தறிகெட்டு ஓடுகிறது திரைக்கதை.
கதை நடக்கின்ற காலகட்டத்தில் உள்ள வாகனங்கள், ஆடைகள், வசிப்பிடங்கள் என அத்தனையும் பார்த்துப் பார்த்து செதுக்கியிருக்கிறார்கள்.மின்சாரமில்லாத காலகட்டம் என்பதால் மின்சாரக்கம்பிகள்,தெருவிளக்குகள் எதுவுமே கேமரா வளையத்துக்குள் சிக்கிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்திருக்கிறார்கள். கலை இயக்குனருக்கு பாராட்டுகள். இதையெல்லாம் விட சவாலான விஷயம் மின்சார விளக்கு வெளிச்சம் இல்லாமல் வெறும் ஹரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் மட்டும் நடந்த அக்கால நாடகத்தை திரையில் கொண்டுவருவது. துல்லியம்மாக பதிவு செய்த ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவின் உழைப்பு பாராட்டப்பட வேண்டியது. அதேபோல் 40 களில் வந்த திரைப்படங்களில் பயன்படுத்திய இசைக்கருவிகளைக்கொண்டு பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்கோர்ப்பை செய்து நம்மை அந்த காலகட்டத்திற்கு அழைத்து சென்ற இசைப்புயலும் இப்படத்திற்கு மிகப்பெரிய பலம்.
ஆனால் இவையெல்லாம் ஒரு சராசரி ரசிகனை திருப்திப் படுத்திவிடுமா என்பதுதான் இங்கு எழும் கேள்வி. எப்படியிருந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனை மீது நம்பிக்கை வைத்து ஒரு வித்தியாசமான கதைக்களத்தில் பயணித்திருக்கும் இயக்குனர் வசந்தபாலனை ஒரு முறை கைதட்டி ஊக்கப்படுத்தலாம்...!
ப்ளஸ் | மைனஸ் |
நாசரின் நடிப்பு | ஆமை வேகத்தில் நகரும் திரைக்கதை |
கிளைமாக்ஸ் | நாடகத்தன்மை |
இசை | நகைச்சவை வறட்சி |
ஒளிப்பதிவு | அழுத்தமில்லாத கதை |
நம்ம பார்வையில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்கள்...
வணக்கம்
ReplyDeleteஅருமையான விளக்கம் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Deleteமுதல் கமெண்டுக்கு மிக்க நன்றி ரூபன்
ஆமை ஜெயிக்கும்... இந்த வாரம் செல்ல வேண்டும்...
ReplyDeleteதமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் மிக அரிதாக வரும் இது போன்ற படங்கள் பாராட்டப் படவேண்டியதுதான்...ஆனால் வியாபார ரீதியாக வெல்லாது என்பதே நிதர்சனம் .மிக்க நன்றி DD
Deleteபகிர்வுக்கு நன்றி
ReplyDeleteமிக்க நன்றி சார்.
DeletePUDHU VARUDA THIRAIPADAM, SUN TV THIRAIKKU VANDHU SILA NATKALE ANA PUTHAMPUTHU
ReplyDeleteTAMIL THIRAIPADAM KAVIYATHALAIVAN KAANTHAVARATHEERGAL.