Saturday, 15 November 2014

திருடன் - போலிஸ்

 
ன் அப்பாவை கொலை செய்தவர்களை பழிவாங்கும் ஒரு ஹீரோவின் கதைதான்  திருடன் போலிஸ். அப்படியானால் துப்பாக்கி,அரிவாள், ரத்தம் ,வெறி ,பழிக்கு பழி என படம் முழுவதும் சீரியஸாக போகும் என்று நினைத்தால் அது முற்றிலும் தவறு. இது வேறு மாதிரி. சீரியசான விசயத்தை  நகைச்சுவை கலந்து  சொல்லியிருக்கிறார்கள்.

கடமை தவறாத, கண்ணியமான,நேர்மையான ஹெட் கான்ஸ்டபில் ராஜேஷ்-ரேணுகா தம்பதியின் ஒரே மகன் தினேஷ். படித்து முடித்துவிட்டு வேலைக்கு போகாத வெட்டி ஆபிசர். இவர்கள் குடியிருக்கும் போலிஸ் காலனியில் ராஜேசின் உயர் அதிகாரியான ஏ.சி யின் குடும்பமும் வசிக்கிறது. அவர்களின் ஒரே மகன் நிதின் சத்யா. இவரும் வெட்டி ஆபிசர்தான். ஆனால் கடத்தல், ரேப் என அத்தனை பொரிக்கித்தனத்தையும் தன் அப்பாவின் அதிகாரத்தை பயன்படுத்தி செய்து வருபவர்.

இரண்டு வெட்டி ஆபிசர்களும் அடிக்கடி மோதிக்கொள்கிறார்கள். அதனால் அப்பாக்களுக்குள்ளும் மோதல் வருகிறது. ஒரு கட்டத்தில் நிதின் சத்யாவின் அப்பா, ராஜேசை மோசமாக திட்டிவிட, பதிலுக்கு அவரும் நிதின் சத்யாவின் அனைத்து குற்றங்களுக்கும் தன்னிடம் ஆதாரம் இருப்பதாகவும் அதை வெளியிடப்போவதாகவும் மிரட்டுகிறார்.

அதனால் தனக்கு கீழே வேலைப்பார்க்கும் ராஜேசை கூலிப்படையை வைத்து கொலை செய்துவிடுகிறார் ஏ.சி. கொலையுண்ட ராஜேசின் வேலை, மகனான தினேசுக்கு கிடைக்கிறது. ஆரம்பத்தில் விருப்பமே இல்லாமல் வேலைபார்க்கும் தினேஷ் ஒரு கட்டத்தில் தன் அப்பாவின் அருமையை உணர்கிறார். தன் அப்பாவை கொலை செய்தவர்களை பழிவாங்க துடிக்கிறார். அதுவும் கத்தியின்றி ரத்தமின்றி அவர் எப்படி பழிவாங்கினார் என்பதே படத்தின் முடிவு.

ஒரு காலனி குடியிருப்பு ,ஒரு போலிஸ் நிலையம், இரண்டு வீதிகள், கொடைக்கானலில் ஒருபாட்டு, VGP யில் ஒரு பாட்டு  என முடிந்தவரை அடக்கி வாசித்திருக்கிறார் தயாரிப்பாளர் SP.சரண். கலைப்படங்கள் எடுத்து கையை சுட்டுக்கொண்ட அனுபவம் போல ..:-)

ஹீரோவின் கேரக்டர் அரட்டல், உருட்டல், மிரட்டல் எதுவும் இல்லாததால் அப்படியே அட்டகத்தி தினேசுக்கு ஒத்துப் போகிறது. இன்னும் குக்கூ படத்தின் தாக்கம் அவரிடமிருந்து போகவில்லை போல.. சில இடங்களில் அதே மேனரிசம். கோபம், சோகம், சந்தோசம் என்பதற்கான முகபாவனைகள் இன்னும் அவருக்கு தெளிவாக வரவில்லை. ஆனால் இந்தப்படத்தில் அதற்கான அவசியங்கள் அவ்வளவாக இல்லாததால் அது அவ்வளவு பெரிய குறையாக தெரியவில்லை.

தினேசின் நண்பனாக கனா காணும் காலங்கள் பால சரவணன். இவர்தான் இந்தப்படத்தில் காமெடியனா என ஆரம்பத்தில் நினைக்கத் தோன்றினாலும் போகப்போக நம்மோடு ஒன்றிவிடுகிறார். உண்மையிலேயே ஓவர் சவுண்டு விடாமல், மொக்கைப் போடாமல் இயல்பாக இருக்கிறது இவரது காமெடி.( ஆத்தாடி...  நல்லவேளை இந்தப் படத்தில் சூரி இல்லை...).    ஒரு டிபிகல் கான்ஸ்டபில் மேலதிகாரிகளால் என்னவெல்லாம் கொடுமை அனுபவிக்க வேண்டியிருக்கியது என்பதை இவர் மூலம் நகைச்சுவையாக காட்டியிருப்பது அருமை.


படத்தில் எல்லோரையும் ஓவர் டேக் செய்பவர்  நான் கடவுள் ராஜேந்திரன் (இனி இவர் திருடன் போலிஸ் ராஜேந்திரன் என அழைக்கப்படுபவராக.!). பொதுவாக வில்லனை காமெடியனாக காட்டும் விபரீத முயற்சியை சுந்தர்.சி. தான் செய்வார். இதில் இதுவரை கொடூர வில்லனாக நடித்து வந்த ராஜேந்திரனை காமெடியனாக காட்ட முயற்சித்து அதில் முழு வெற்றியும் அடைந்திருக்கிறார்கள். இவர் வரும் ஒவ்வொரு காட்சிக்கும், பேசும் வசனத்திற்கும் தியேட்டரே குலுங்குவது அதற்கு சாட்சி. அதிலும் பெண் வேடமிட்டு வரும் சில காட்சிகளில் எந்த ஓவர் ஆக்டிங் இல்லாமல் இயல்பாக நடித்திருப்பது சிறப்பு.

ஐஸ்வர்யாவுக்கு அவ்வளவாக வாய்ப்பு இல்லை. 'என்னோடு வா' பாடலுக்கு திடீரென்று விஜய் சேதுபதி வந்து செம ஆட்டம் போடுகிறார். கமிசனராக ஆடுகளம் நரேன். மிடுக்கான போலிஸ் அதிகாரி வேடம் அப்படியே பொருந்துகிறது.

என்கவுண்டர் செய்வதை ஏதோ டிபன் ஆர்டர் பண்ணுவது போல் பேசிக்கொள்வது, அதிலும் இறுதியில் கமிசனர்,ஏ.சி யையே அசால்டாக என்கவுண்டர் பண்ண சொல்வது என்று ஒரு சில அபத்தங்கள் இருந்தாலும் அதையெல்லாம் மறக்கடித்து விடுகிறது படம் நெடுக விரவியிருக்கும் மெல்லிய நகைச்சுவை.


ராஜேந்திரன் சகாக்கள் செல்லும் இடமெல்லாம் எதேச்சையாக தினேஷ் என்ட்ரி கொடுப்பது, அதை அவர்கள் தங்களைத்தான் பாலோ பண்ணி வருகிறான் என்று ஓடி ஒளிவது, இரவானால் அப்பாவின் நினைவால் தினேஷ் புலப்புவது அதனால் பாலா தெறித்து ஓடுவது, க்ளைமாக்சில் மூவரையும் கட்டிவைத்துவிட்டு தினேஷ் செய்யும் அலப்பரைகள் என்று சிரிப்பதற்கு நிறைய கட்சிகள் இருக்கிறது.

லாஜிக் எல்லாவற்றையும் ஓரங்கட்டி வைத்துவிட்டு  ஒரு முறை பார்த்து சிரித்துவிட்டு வரலாம்.   



6 comments:

  1. முதல் பாரா மட்டும்தான் படிச்சேன்... படம் பார்த்துட்டு மீதியைப் படிக்கிறேன்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்கூல் பையன்..

      Delete
  2. சிறப்பான விமர்சனம்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ‘தளிர்’ சுரேஷ்

      Delete
  3. sathiyama solra BIG STARS movie la logic pakuringa..but intha movie la logic pakkathinga nu solringa... climax la ungaluku antha comedy ku la siripu varutha?.. ippa than theriyuthu KOWNDAMANI,SENTHIL ah miss pandrom nu..

    seriously 1st half okay--2nd half am sleeping..... logic la pakkave kudathu,,..appedi patha movie pakka mudiyathu

    ReplyDelete
  4. NAIGAL JAKIRATHAI ku avlo logic soli irunthinga..ithula simple logic " arrear irukavanuku yaru work thara" appediye 12th certificate vaichi thanathalu..entha training illama next day posting na..... he he he

    ReplyDelete