Wednesday, 14 January 2015

ஐ - அதுக்கும் மேல..(விமர்சனம்)

னது உடலில் வைரஸை செலுத்தி அகோரமாக மாற்றிய ஒரு கும்பலை அதே பாணியில் தண்டிக்கும் ஒரு ஹீரோவின் கதைதான் ஐ.

அரதப் பழசான கதைதான். ஆனால் மேக்கிங்கில் சிகரம் தொட்டிருக்கிறார் ஷங்கர். படத்தில் மொத்தம் ஐந்து வில்லன்கள்.

ஆணழகன் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்வதற்கு கடினமாக உழைக்கும் லிங்கேசனாக சீயான் விக்ரம். பட்டத்தை குறிவைக்கும் சக போட்டியாளர் ரவி (வில்லன் நம்பர்-1), விக்ரமை மிரட்டி வாபஸ் வாங்கச் சொல்கிறார். இருவருக்குமான மோதலில் விக்ரம் ஜெயிக்கிறார்.

மாடலிங் துறையில் இந்திய அளவில் முன்னனியில் இருக்கும் தியா (எமி ஜாக்சன்) மீது விக்ரமுக்கு செம கிரேஸ். தியாவுடன் நடிக்கும் ஆண் மாடல் ஜான் என்பவரால் (உபன் பட்டேல் -வில்லன் நம்பர்-2) பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகிறார். அவருடன் 'ஒத்துழைப்புக்கு' மறுப்பதால் பல விளம்பரப் படங்களிலிருந்து தியா கழட்டி விடப்படுகிறார். அந்த இடத்திற்கு விக்ரமை கொண்டு வருகிறார் தியா. சீனாவில் நடைபெறும் விளம்பரப் போட்டியில் லோக்கல் லிங்கேசனை ' லீ ' யாக மாற்றியதுடன், தன் இதயத்திலும் இடம் கொடுக்கிறார் தியா. லீ-தியா ஜோடி இந்திய விளம்பர உலகில் கொடிகட்டி பறக்கிறது. ஜான் அனைத்து விளம்பர ஒப்பந்தத்திலிருந்தும் நீக்கப்படுகிறார். அதுதான் அவரை  ' நம்பர் 2 ' வில்லனாக மாற வைக்கிறது.

விக்ரமின் மேக்கப் ஆர்டிஸ்ட் ஓஜஸ் ரஜானிக்கு விக்ரம் மீது ஒருதலைக்காதல். இந்தியாவின் லீடிங் மேக்கப் ஆர்டிஸ்டுக்கு விக்ரம் மீது எதற்காக காதல் வருகிறது என்றெல்லாம் கேட்கக்கூடாது. விக்ரம் தியாவைக் காதலிப்பதால் அந்த 'நயன்'தாராவை உதாசீனப்படுத்துகிறார். தவிர ஒரு திருநங்கை மீது யாருக்குத்தான் காதல்வரும்..?. காதல் தோல்வி அடைந்த அவர்(ள்) ' வில்லன் நம்பர்- 3 ' இடத்துக்கு மூர்க்கமாக முன்னேறுகிறார். 

விளம்பரப் படத்தில் நடித்தாலும் தனக்கென்று ஒரு பாலிசியை வைத்திருக்கிறார் விக்ரம். அதாவது கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த பொருட்களின் விம்பரங்களிலும் நடிக்க மாட்டேன் என்பதுதான் அப்பாலிசி. அதனால் தன்னை வளர்த்து ஆளாக்கிய விளம்பர நிறுவனத்தின் ஒனராகிய ராம்குமார் (நடிகர் திலகத்தின் மூத்த புதல்வன்) உடன் பகை வருகிறது. அதன்மூலம் வில்லன் நம்பர் -4 வது இடத்துக்கு அவர் போட்டியின்றி தேர்வாகிறார்.

ஐந்தாவதாக, கூட இருந்தே ஒருவர் குழி பறிக்கிறார். படத்தில் இருக்கும் ஒரே ஒரு ட்விஸ்ட் அது என்பதால் ஐந்தாவது வில்லனை தியேட்டரில் சென்று பாருங்கள். ' சைடு வாகு எடுத்து சாஃப்டா பேசினா சரத்பாபுனு நெனச்சியா..'  என்று அவரை அறிமுகப்படுத்தும் அந்த இடம் செம்ம.

இப்படி வில்லனாகிப் போன ஐந்து பேரும் தமிழ் சினிமா திரைக்கதைப்படி கடைசியில் ஒன்று சேர்கிறார்கள். விக்ரமை பொட்டுனு தீர்த்து விடக்கூடாது. அதுக்கும் மேல..அதுக்கும் மேல..அதுக்கும் மேல..ஏதாவது செய்யணும் என்று திட்டம் போடுகிறார்கள். அதுதான் விக்ரம் உடம்பில் ' I ' வைரஸை செலுத்தி அவரை உருக்குலைப்பது. அசத்தலாக இருக்கும் விக்ரம் அகோரமாக மாறுகிறார். அதனால் தியாவுடன் அவருக்கு நடக்கவிருந்த கல்யாணமும் நின்றுவிடுகிறது. அந்த ஐந்தாவது வில்லன் தியாவுக்கு மாப்பிள்ளையாக மாறுகிறார் ( அதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா...!).

கடைசியில் அவர்கள்  மூலமாகவே தனக்கு நடந்த கொடூரத்தை அறியும் விக்ரம், அதே பாணியில் ஒவ்வொரு வரையும் சாகடிக்காமல் 'அதுக்கும் மேல' அந்நியனை விட கொடூர தண்டனை வழங்குகிறார்.

சரி. கடைசியில் எமி ஜாக்சனுக்கு இந்த உண்மை தெரியுமா..அவர் விக்ரமை ஏற்றுக் கொண்டாரா என்றுதானே கேட்கிறீர்கள்.திரையில் காண்க என முடிப்பதற்கு ஏதாவது விட்டு வைக்க வேண்டாமா ....?


சுஜாதா மறைந்த பிறகு கதைப் பஞ்சத்தால் ஷங்கர் கஷ்டப்படுகிறார் என்பதற்கு ஐ ஒன்றே உதாரணம். கதை சுபா. பாவம்.. அவரிடமிருந்து  இதுக்கு மேலே எதுவும் எதிர்பார்க்க முடியாது.

பாடல் காட்சிகள் அனைத்தும் விஷுவல் ட்ரீட்.  ' பூக்களே சற்று ஓய்வெடுங்கள்..' பாடலில் பி.சி. ஸ்ரீராமின் உழைப்பு பிரமிக்க வைக்கிறது. ஆஸ்கார் விருதுகள் வாங்கிய ஹாலிவுட் மேக்கப் ஆர்டிஸ்டுகளின் உழைப்பு மற்றொரு பிரும்மாண்டம். பாடல் வெளியீட்டின் போது ரியலாக மிரட்டிய அந்த தோற்றத்தை ஒரு மெலடியான பாட்டுக்கு வைத்து வெறுப்பேற்றி விட்டார்கள். ஒரேயொரு பாடலுக்கு மட்டும் வரும் அந்த மேக்கப்புக்கு எதற்கு இத்தனை பில்டப்..?.

வழக்கமாக தன் படங்களில் கிளைமாக்ஸுக்கு சற்று முன்பு செம குத்து பாடல் ஒன்று இருக்கும்படி பார்த்துக் கொள்வார் ஷங்கர். இதில் ஏனோ அது மிஸ்ஸிங்..

ஷங்கர்- விக்ரம் காம்பினேசனில் அந்நியனுக்குப் பிறகு சண்டைக்காட்சிகள் அதிரடி. சீனாவில் படமாக்கப்பட்ட அந்த பைட் உண்மையிலேயே திரில். அவர்களோடு எப்படி விக்ரமும் சைக்கிளில் பறக்கிறார் என்பது மட்டும் புலப்படவே இல்லை.

படத்தில் அசுர பலம் விக்ரம்தான். தமிழில் கமலைத்தவிர வேறு எவரும் உடல்வருத்தி நடிக்க மாட்டார்கள் என்று யாரும் இனி சொல்ல முடியாது. ஏன், கமலே இந்தளவுக்கு ரிஸ்க் எடுக்க  மாட்டார் என்பதுதான் உண்மை. படம் முடிந்து வெளிவரும்போது விக்ரம் மட்டுமே கண்ணில் நின்று நெஞ்சில் நிறைகிறார். சென்னைத் தமிழ் ஸ்லாங் லிங்கேசனாக, மாடலிங் ஸ்மார்ட் லீயாக, அகோர அரக்கனாக மூன்று வேடங்களிலும் நூற்றுக்கு நூறு வாங்குகிறார். அவரது உழைப்புக்கு ராயல் சல்யூட்..

எமி ஜாக்சனை செம அழகாகக்  காட்டியிருக்கிறார்கள்(ஏற்கனவே அழகுதானே..!). மாடலிங் சம்மந்தப்பட்ட படம் என்பதால் அதே துறையில் இருக்கும் எமியை தேர்ந்தெடுத்தது சரியான முடிவு. அம்மணிக்கு டூ பீஸ் காட்சிகள்  இருக்கிறது. லிப் லாக் சீன் கூட இருக்கிறது. பார்த்த நான்தான் மெர்சலாகிவிட்டேன்.

சந்தானத்தின் காமெடி உண்மையிலேயே ரசிக்க வைக்கிறது. கடைசியில் உருக்குலைந்து கிடக்கும் வில்லன்களிடம்  சென்று தனித்தனியாக பேட்டி எடுப்பது செம ரகளை. பவர் ஸ்டார் கூட சில காட்சிகளில் வந்து பன்ச் டயலாக் அடித்து பரவசப் படுத்துகிறார்.

அறுவடை நாள் படத்திற்குப் பிறகு நடிகர் திலகத்தின் மூத்த புதல்வனை இப்பொழுதுதான் திரையில் காண்கிறேன். கம்பன் வீட்டு கட்டுத்தறி கவிபாடுமென்பதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.. இவ்வளவு நாட்கள்  நடிப்புலகை விட்டு ஏன் ஒதுங்கி இருந்தார் ..?


முதல் பாதி ஏனோ ஜவ்வாக இழுக்கிறது. ஓரிரு நாட்களில் நீளம் குறைக்கப்படலாம். பாடல்களிலும் காட்சிகளிலும்  ஃபேர் அண்ட் லவ்லி , கில்லட் உள்ளிட்ட நிறைய அழகு சாதனப் பொருட்கள் வருவதால் விளம்பரப் படம் பார்ப்பது போன்று உணர்வு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

பொதுவாக ஷங்கர் படங்களில் சமகால சமூகப் பிரச்சனைகளுக்கு சாட்டையடி தீர்வு ஏதாவது இருக்குமே என்று தானே கேட்கிறீர்கள்?. இருக்கே..!. அழகு சாதனப் பொருட்களை உபயோகப்படுத்தும் பொழுது  நமக்கு வேண்டாதவர்கள் அதில் எதையாவது கலந்து வைத்து நம்மை அகோரமாக மாற்றி விடுவார்கள். ஆகையால் இறைவன் கொடுத்த இயற்கை அழகு மட்டுமே நமக்கு போதும். செயற்கையான கிரீம்கள் வேண்டாம்  ( இப்படி ஏதாவது நாமளா கண்டுபிடித்தால்தான் உண்டு).

யோசித்துப் பார்த்தால் , பாதிக்கப்பட்ட அனைவரும் ஒன்று சேர்ந்து  ஹீரோவைப் பழிவாங்கும் கதை தமிழில் நிறைய வந்திருக்கிறது. அபூர்வ சகோதரர்கள் கூட அதுபோன்ற ஒரு கதைதான். அதில் வில்லன்கள் ஒன்று சேர்ந்து கருவிலிருக்கும் குழந்தைக்கு விஷம் கொடுக்கிறார்கள். இதில் வைரஸை ஹீரோவின் உடலுக்குள் செலுத்துகிறார்கள். விசத்தன்மையால் குள்ளமான அப்பு அதற்குக் காரணமான ஒவ்வொருவரையும் தனித்தனியாகப் பழிவாங்குகிறார். இதில் வைரஸால் பாதிக்கப்பட்ட விக்ரம் அதற்குக் காரணமானவர்களை பழிதீர்க்கிறார். அதில் கமல் குள்ள அப்புவாக நடிக்க கால்களை பின்பக்கமாகக் கட்டிக்கொண்டு கஷ்டப்பட்டு நடித்தது அப்போது பலரால் வெகுவாகப் பாராட்டப்பட்டது. இதில் விக்ரம் உடல் இளைத்து வித்தியாசமான தோற்றத்தில் வந்து அசத்துகிறார். ஆனால் கமலுடன் ஒப்பிடும்போது விக்ரமின் உழைப்பு நூறு மடங்கு உயர்ந்தது . கதையில் இன்னும் இயக்குனர் கவனம் செலுத்தியிருக்கலாம் என்றே தோன்றுகிறது.

சுபா, ஜெயமோகன் போன்ற சமகால ஆளுமைகளை இயக்குனர்கள் தேடிச்சென்றாலும் திரைமொழிக்கு அவர்கள் சரிபட்டு வரமாட்டார்கள் என்பதைத்தான் சமீபத்திய தோல்விகள் உணர்த்துகிறது. தமிழ் சினிமாவின் உச்ச இயக்குனர்களான ஷங்கரும் மணிரத்னமும் இவ்வளவு நாட்களாக சுஜாதாவின் முதுகில் ஏறி பயணம் செய்திருக்கிறார்கள் என்பதையும் அவர்களின் சமீபத்திய தடுமாற்றம் உணர்த்துகிறது. சுஜாதா விட்டுச்சென்ற வெற்றிடம் இன்னும் அப்படியேத்தான் இருக்கிறது.   

தமிழ் சினிமாவின் பொக்கிஷமான விக்ரம் என்ற மகா கலைஞனின் உழைப்புக்காக ஒருமுறை அல்ல.. இருமுறை பார்க்கலாம்.


                        ப்ளஸ்                   மைனஸ்

விக்ரம்..

வலுவில்லாத கதை...

விக்ரம்..

மெதுவாக நகரும் முதல் பாதி...

விக்ரம்..

ஓவர் பில்டப்..

ஒளிப்பதிவு.. பாடல்கள்..

விளம்பரப் படம் பார்ப்பது போன்ற உணர்வு ..

சண்டைக் காட்சிகள், மேக்கப்

திரைக்கதை...

எமி ஜாக்சன்




18 comments:

  1. Thalivare en manasula pattatha apdiye eluthirukinga . Ithu veliya sonna ne thala fan ah ? Thalapathy fan ah ? apdinu kekranga . And padam pakamale nalla than irukumnu solranga :(

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. ரை..ரைட்டு..

    தொலைகாட்சியில் வரும் போது பாக்குறேங்க

    ReplyDelete
    Replies
    1. ஹா..ஹா.. வாங்க நண்பா.. அடுத்த தீபாவளிக்கு ஜெயாவில் போடப்படலாம்.

      Delete
  4. விமர்சனம் சூப்பர் சார்.
    படம் பார்த்தாச்சு இங்க.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி மகேஷ்

      Delete
  5. அப்போ ஐ எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லையா...?
    விக்ரமுக்காக பார்க்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை. ஆனால் விக்ரமுக்காக ஹிட் ஆகலாம்

      Delete
  6. தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி 'பரிவை' சே.குமார்...பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

      Delete
  7. காதல் காட்சிகள் சவ சவ. அந்த திருநங்கை விக்ரமை காதலிப்பது பிறகு அது நிறைவேறாமல் போவதில் அவரும் வில்லனாக மாறுவது எல்லாம் தேவை இல்லாத திணிக்கப்பட்ட கேரக்டர்.சந்தானம் பவர் ஸ்டாரை கலாய்த்து காமெடி செய்வதெல்லாம் சலிப்பு தட்டுகிறது.விக்ரம் நடிப்பு நன்றாக இருந்தாலும் திரைக்கதையில் மிகப்பெரிய ஓட்டை இருப்பது வருத்தத்துக்குரியது . ஈசியாக அடுத்த காட்சி என்ன என்பதை யூகிக்க முடிவதால் பெரிய சுவாரஸ்யம் எல்லாம் ஒன்றும் இல்லை . பாவம் விக்ரம் அந்நியனுக்கு பிறகு அவரால் பெஸ்ட் பிலிம் கொடுக்க முடியவில்லை என்பது வருத்தமாக உள்ளது . இந்த திரைக்கதைக்கு போய் விக்ரம் 3 வருடத்தை வீணடித்து விட்டாரே? ஷங்கருக்கு என்ன ஆச்சு ? அந்நியனுக்கு பிறகு ஷங்கரின் இயக்கத்திலும் தோய்வு ஏற்பட்டு உள்ளது. விக்ரம் பெரிய உழைப்பை கொடுத்து இருந்தும் ஷங்கரின் திரைக்கதை ஓட்டையினால் எல்லாம் விழலுக்கு இறைத்த நீராகி விட்டது . அந்நியன் பிதாமகன் போன்ற படங்களை தான் விக்ரம் இடம் இருந்து நாம் எதிர்பார்க்கிறோம் . ஆனால் ஒவ்வொரு முறையும் அவர் முயற்சி செய்து அது நிறைவேறாமல் போனதில் அவரை போலவே அவர் ரசிகனாக எனக்கும் மிகப்பெரிய வருத்தமாக இருக்கிறது .

    ReplyDelete
  8. கமலே திகைப்பது உறுதி...

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி DD.. பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

      Delete
  9. உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!///நல்ல விமர்சனம்!

    ReplyDelete
  10. பொங்கல் வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  11. ஏதோ நடிப்பிற்காக பார்க்கலாம். ஆனால் பெண்மை மேல் கொண்ட வன்மையான ப்டம் இது.

    ReplyDelete