Sunday 5 April 2015

கூர் மழுங்கிய கொம்பன்...


னிமேல் ' படத்தை முதலில் எனக்கு போட்டுக் காட்டு அல்லது  தடைசெய்' என யாராவது கிளம்பினால் நாம் உஷாராகிவிடவேண்டும்...!

படத்தை தயாரித்தவனுக்கு ஒத்த பைசா செலவில்லாமல் ஓசியில் விளம்பரம் கிடைத்துவிடுகிறது. தடை போட சொன்ன ஆளுக்கு சமூகத்தில் இமேஜ் பிளஸ் துட்டு என ஒரே கல்லில் இரண்டு மாங்காய். ஆனால் இவனுக அடிக்கிற கூத்தை சீரியஸாக எடுத்துக்கொண்டு அதிக எதிர்பார்ப்போடு படம் பார்க்க செல்லும் நம் நிலைமைதான் இஞ்சி தின்ன குரங்குமாதிரி ஆயிடுது. நல்ல படத்திற்கு சர்ச்சை மூலம் கிடைக்கும் விளம்பரம் தேவையில்லை. இது போன்ற மொக்கைப் படங்களுக்குத்தான் கட்டாயம் தேவைப்படுகிறது.

ஜென்டில்மேன் படத்தின் ஆரம்பக் காட்சியில், காடுகளில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு உள்ளே ஏலம் நடந்து கொண்டிருக்கும். வெளியே ஒரு கும்பல் ' வெட்டாதே.. வெட்டாதே.. மரங்களை வெட்டாதே....' என கோஷம் போட்டுக்கொண்டிருக்கும். ஏலம் முடிந்தவுடன் உள்ளிருந்து ஒருவர் வந்து ' சரி..சரி.. ஏலம் முடிஞ்சிடுச்சி..எல்லாரும் கெளம்புங்க... ' என்பார். வேலை முடிந்த திருப்தியில் அக்கும்பல் அமைதியாக கலைந்து செல்லும். அன்றைய சூழலில் அக்காட்சியின் அர்த்தம் எனக்கு சரியாக விளங்கவில்லை. இதன் மூலம் இயக்குனர் என்ன சொல்லவருகிறார் என்பதைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு முதிர்ச்சி அப்போது இல்லை. ஆனால் அது மக்களை திசைதிருப்பும் அரசியலின் நவீன வடிவம் என்பதை தற்போது புரிந்துகொள்ள முடிகிறது. இனி படத்திற்கு பட்ஜெட் போடும்போது ' சர்ச்சையை உருவாக்கி விளம்பரம் செய்ய இவ்வளவு தொகை ' என தனியாக ஒதுக்கி வைத்துக் கொள்ளும் கோடம்பாக்கத் தயாரிப்புத் தரப்பு.

தமிழர்களின் பாரம்பரிய பெருமையை எடுத்துச்சொல்லும் மண்வாசனை வீசும் படங்கள் அவ்வப்போது தமிழ் சினிமாவில் தலையெடுப்பது நல்ல விசயம்தான். அதற்காக தமிழர்களின் கிராமிய வாழ்வியல் எதார்த்தத்தை படம்பிடிக்கிறேன் என சொல்லிக்கொண்டு அரிவாள், வெட்டுக்குத்து, பஞ்சாயத்து, ஏலம், ஊர்ப்பகை, சாதிப்பெருமிதம் என்று காலங்காலமாக அரைத்து அரைத்துப் புளித்துப்போன அதே மாவில் தோசை ஊற்றி பரிமாறும் நம் தமிழ் சினிமா படைப்பாளிகளை நினைத்தால்தான் அச்சமாக இருக்கிறது.

தெரியாமத்தான் கேட்கிறேன், கொம்பன் படத்தில் அப்படி என்ன இருக்கிறது என்று இந்த கிருஷ்ணசாமி இந்த குதி குதிக்கிறார்?. சொல்லப்போனால் இப்படம் முக்குலத்தோர் சமூகத்தின் அழுக்குப் படித்த இன்னொரு முகத்தைக் காட்டி அவர்களை சிறுமைப்படுத்தும் முயற்சியை செய்திருக்கிறதே தவிர, சாதிப்பெருமை பேசி அச்சமூகத்தை உயர்த்திப் பிடித்தோ அல்லது தலித் சமூகத்தை இழிவு படுத்தியோ எடுக்கப்பட்ட படமல்ல.

உண்மையிலேயே டாக்டர்.கிருஷ்ணசாமி போராட்டம் நடத்த வேண்டுமென்றால் 90-களில் வெளிவந்த கே.எஸ்.ரவிக்குமார், ஆர்.வி.உதயகுமார் படங்களுக்கு எதிராகத்தான் போராடியிருக்க வேண்டும். அவர்களது படங்களில்தான் ஆண்ட பெருமை பேசும் கவுண்டர்கள் மிகமிக நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் கண்ணியமிக்க ஜமீன்தாராகவும் பஞ்சாயத்து தலைவராகவும் இருப்பார்கள். தலித் மக்கள் மேல் சட்டை போடாமல் அவர்களுக்குக் கூனிக்குறுகி கும்பிடு போடும் அடிமைபோல சித்தரிக்கப்படுவார்கள். சில படங்களில் கெட்டவனாகவும், வில்லனாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இவர் போராடிய விருமாண்டியும் கொம்பனும் ஒரே சமூகத்தைச் சார்ந்த இரு இனக்குழுவுக்கிடையே நடக்கும் மோதல்களைக் காண்பித்து அதன்மூலம் அவர்களின் அறியாமையையும் மூடத்தனத்தையும் வெளிக்கொணர்ந்த படங்கள்.  நியாயப்படி பார்த்தால் இவ்விரு படங்களையும் டாக்டர் கிருஷ்ணசாமி பாராட்டி வரவேற்றிருக்க வேண்டும்.

இதில் காட்டப்படும் செம்ம நாடு, ஆப்பநாடு, வெள்ளலூர் இம்மூன்று பகுதிகளிலும் வசித்த முக்குலத்தோர் சமூகத்தின் இனக்குழுவுக்குள் நடந்த மோதல்களை தவிர்த்துவிட்டு அவர்களின் வரலாற்றை நிறைவாக எழுதிவிடமுடியாது. செம்ம நாடும் ஆப்ப நாடும் மறவர் நாடு. வெள்ளலூர் கள்ளர் நாடு. மறவர் இனத்தில் மிகவும் தொன்மையானவர்கள் செம்ம நாட்டு மறவர்கள். வெள்ளையர்களை முதன்முதலில் எதிர்த்த மன்னர் புலித்தேவன் இந்த இனக்குழுவை சேர்ந்தவர்தான்.

ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு முன்பு ராமநாதபுரத்தை தலைமை இடமாகக் கொண்டு ஆட்சி செய்த மன்னர்கள் சேதுபதிகள் என அழைக்கப்பட்டனர். பிறகு கிழக்கிந்தியக் கம்பெனியின் கட்டுப்பாட்டிற்குள் சேதுபதி பரம்பரை கொண்டுவரப்பட்டது. 1803 -ல் ஆங்கிலேயர்களால் மன்னர் என்கிற தகுதி அகற்றப்பட்டு ஜமீன்தார் என்ற நிலைக்குத் தாழ்த்தப்பட்டது. பிறகு 'இராமநாதபுரம் ஜமீன்' என்று சேதுபதிகள் ஆளுகைக்குட்பட்ட பகுதிகள் அழைக்கப்படலாயிற்று. இவர்கள் வழிவந்தவர்கள்தான் செம்ம நாட்டு மறவர்கள்.

மறவர் சமூகத்தில் கொஞ்சம் உயர்வாகக் கருதப்பட்டது ஆப்ப நாட்டு மறவர் இனக்குழு. முத்துராமலிங்க தேவர் ஆப்ப நாட்டு மறவர் இனக்குழுவை சேர்ந்தவர். அரசியல், அதிகாரம் உள்ளிட்ட அனைத்திலும் இவ்விரு இனக்குழுவுக்குள்ளும் தொடர்ந்து மோதல்கள் இருந்துகொண்டே வந்திருக்கிறது. இதை அடிப்படையாகக் கொண்டுதான் கொம்பன் படத்தின் கதையை செதுக்கியிருக்கவேண்டும். அம்மூன்று பகுதிகளையும் ஊர்களாக சுருக்கி பஞ்சாயத்து தேர்தல்,முன்பகை, ரவுடிசம், ஆட்கடத்தல் என்று சினிமாவுக்காக கதையை மாற்றி சாதிப் பெருமிதம் பேசியிருக்கிறார் இயக்குனர். ஆனால் இதில் தலித் இனமக்கள் எங்கே வருகிறார்கள் என்பது டாக்டர் கிருஷ்ணசாமிக்கே வெளிச்சம்.

இணையத்தில் சிலர் மெட்ராஸ் படத்தையும் கொம்பன் படத்தையும் ஒப்பிட்டு எழுதிக் கொண்டிருக்கிறார்கள். மெட்ராஸ் என்கிற அற்புதமான கலைப்படைப்பின் தரத்தை கால்வாசி கூட தொடவில்லை கொம்பன். வடசென்னை தலித் மக்களின் வாழ்வியல் எதார்த்தத்தை மிக நேர்த்தியாக சொன்னது மெட்ராஸ். அந்தப் படத்தில் ஒரு இடத்தில் கூட தலித் சமூகத்தைப் பற்றிய படம் என்பதற்கான வெளிப்படையான குறியீடு எதுவும் இருக்காது. ஆனால் ஒட்டுமொத்தப் படமும் அவர்களின் வாழ்வியல் சிக்கல்களை அலசியது.


ஆனால் கொம்பன் ஒரு அமெச்சூர்த்தனமான சினிமா. படத்தில் எதுவுமே நிறைவாக இல்லை. மறவர் இனக்குழுக்களின் மோதல்களை பதிவு செய்வதற்கு இதைவிட மொக்கையானக் கதை எதையும் தேர்ந்தெடுக்க முடியாது. ஆப்பநாடு, செம்ம நாடு என்று இரு ஊர்களை மையப்படுத்துகிறார்கள். யார் யார் எந்தெந்த ஊர் மக்கள் என்பதைப் புரிந்துகொள்வதற்குள் பாதிப்படம் நகர்ந்துவிடுகிறது. அதைத் தெளிவாக ஆரம்பத்திலேயே சொல்லியிருக்க வேண்டும். அவ்விரு ஊர்களையும் தத்தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் இரு சண்டியர்களுக்குள்  நடக்கும் யுத்தம்தான் கொம்பன். அதில் கொஞ்சம் காதல், அப்பா செண்டிமென்ட், அம்மா செண்டிமெண்ட், மாமனார் செண்டிமெண்ட் என்கிற மசாலா தடவி, வீரம் செறிந்த கதையைக் காவியமாக்கியிருக்கிறேன் என்று சொல்லி, தமிழ் ரசிகர்களைக் கூப்பிட்டுக் குமட்டிலே குத்தியிருக்கிறது கொம்பன் டீம்.

ஒரு வருடத்திற்கு முன்பு மதயானைக் கூட்டம் என்ற ஒரு படம் வந்தது. கிட்டத்தட்ட இதே கதையமைப்பு. ஆனால் சொல்லிய விதம் அருமையாக இருந்தது. திரைக்கதையும் வசனமும் அப்படத்திற்கு மிருக பலம். ஆனால் வித்தியாசமான கிளைமாக்ஸ் வைக்கிறேன் என்று ஒட்டு மொத்த உழைப்புக்கும் அவர்களே உலை வைத்துக் கொண்டார்கள். அப்படமும் முக்குலத்தோர் பெருமிதம் பேசும் படம் என்று ஆரம்பத்தில் சொல்லப் பட்டது. ஆனால் அதுவும் அச்சமூக மக்களை காட்டுமிராண்டிகள் போல சித்தரித்தப் படம்தான்.

கார்த்திக்குக்கு சமீபத்திய படங்கள் எல்லாம் படுதோல்வியடைந்ததால் பருத்திவீரன் போன்ற ஒரு மெகாஹிட் படம் கொடுக்க வேண்டும் என்கிற முனைப்பில் கொம்பன் எடுக்கப்பட்டிருக்கலாம். தமிழ் சினிமாவின் அடுத்தக் கட்டமாக பருத்திவீரன் பேசப்பட்டது அதன் திரைக்கதைக்காகவும் வசனத்திற்காகவும் மட்டுமே. அதுவே இப்படத்தின் பெரிய பலவீனம்.

' மாமனாரு இன்னொரு அப்பாவுக்கு சமம்..'  என்பது போன்ற வசனங்களை வைத்து பின்பாதியில் நெஞ்சை நக்குகிறார்கள். ஆனால், அதற்கு முன்பு ஒரு ஹீரோவே கட்டையால் தனது மாமனாரின் மண்டையை உடைக்கும் அற்புத காட்சியை தமிழ் சினிமாவில் முதன்முதலில் காண்பிக்கிறார்கள். அதிலும் ராஜ்கிரண் போன்ற பெரிய நடிகருக்கு அப்படியொரு காட்சி  வந்தபோதே வெறுப்பில் தியேட்டரைவிட்டு வெளியேறி விடலாம் எனத் தோன்றியது. அக்கொடுமையான காட்சிக்குப் பிற்பாடு அச்செயலுக்காக  ஹீரோ வருந்துவது போன்ற அழுத்தமான காட்சிகள் எதுவும் காண்பிக்கப்படாதது மிகப்பெரிய மைனஸ். முக்குலத்து சிங்கமாக இதே ராஜ்கிரனை சண்டைக்கோழி படத்தில் லிங்குசாமி காண்பித்திருப்பார். அது தேவர்மகன் சிவாஜிக்கு இணையான பாத்திரம்.

ராஜ்கிரண் என்கிற முதியவர் ஊரே நடுங்கும் ஒரு ரவுடியை தனி ஆளாக அடித்துக் கையை உடைக்கிறார் என்பதே அபத்தமாக இருந்தாலும் அவரைத் தீர்த்துக்கட்ட வெளியில் சுலபமான வழிகள் இருக்கும் போது, அவரை ஜெயிலுக்கு வரவழைத்து... ஆள் செட்டப் செய்து... கரண்ட் கட் பண்ணி....  ஜெயிலர்களையும் துணைக்கு அழைத்துக்கொண்டு....   இவ்வளவு பெரிய சம்பவம் தேவையா...?

தென் மாவட்டக் கலவரம் என்றாலே கையெறிகுண்டும் துப்பாக்கியும் தவிர்க்க முடியாத ஆயுதமாகிவிட்ட காலத்தில் அவ்வளவு பெரிய ரவுடிகளிடம் அதிக பட்ச ஆயுதமாக காய்கறி நறுக்கும் அளவில் கத்தி மட்டும் இருப்பது ஆச்சர்யம்தான்.

நேசனல் அவார்டு கண்டிப்பாக உண்டு என சொல்லி லட்சுமி மேனனை நடிக்க வைத்திருப்பார்கள் போல. வர வர அவரது முகம் மொக்கையாகிக்கொண்டே போகிறது.  ' மேல கையை வையுங்கடா பார்க்கலாம்..' என சீரும் அந்த ஒரு காட்சியில் மட்டும் கம்பீரமாகத் தெரிகிறார். கிளைமாக்சில் தனியாக வில்லன் ஆட்களிடம் மாட்டிக்கொள்ளும்போது ஏதோ வீரமாக செய்யப்போகிறார் என்றால், சப்பென்று போய்விட்டது.

செண்டிமெண்ட் காட்சிகளில் கோவை சரளாவின் முகத்தில் நான்கு சிவாஜி , ஐந்து சாவித்திரி தெரிகிறார்கள். அதற்கு குளோசப் காட்சிகள் வேறு வைக்கிறார்கள். ஆனால் ஒரு பெண்ணைப் பெற்ற அப்பாவாக ராஜ்கிரண் கலங்கி நிற்கும் காட்சிகள் உண்மையிலேயே நெஞ்சை வருடுகிறது.

மண்மணம் வீசும் திரைப்படங்களை எடுத்து தமிழர்களின் வீரம் செறிந்த வாழ்வியலை உலகுக்கு காட்ட உங்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை. அதன் பாரம்பரிய பெருமைகளை சிதைக்காமல் இருந்தாலே போதும்.

கொம்பன் கூர் மழுங்கி நிற்கிறான்.

14 comments:

  1. ஜென்டில்மேன் காட்சியின் அர்த்தம் உண்மை போலவே தோன்றுகிறது...

    4 சிவாஜி, 5 சாவித்திரி... ஹா... ஹா...

    ReplyDelete
  2. வாந்தி பேதி வருணின் சினிமா விமர்சனம்.
    பவர் ஸ்டார் தம்பி வருண் அவர்கள் இந்த கொம்பன் பற்றிய விமர்சனம் என்ன?

    http://payanakatturai.blogspot.com/2015/04/blog-post_17.html

    ReplyDelete
    Replies
    1. நன்றி.. ஒவ்வொருவருக்கும் தனித்தனி ரசனை இருக்கும். அவருக்கு காவியம் போல தெரிந்திருக்கிறது போல..

      Delete
  3. அடேயப்பா! காரமான விமர்சனம்தான்.
    தெளிவான அலசல்

    ReplyDelete
  4. உங்களுக்கு என்னதான் வேணும்?

    ReplyDelete
    Replies
    1. முதல்ல உங்களுக்கு என்ன வேணும் பாஸ்

      Delete
  5. நீங்கள் ஒரு உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும் , நிறைய காட்சிகளை கத்தரித்த பின்பே இவ்வளவு வன்முறை காட்சிகள் இருக்கிறது என்றால் முன்பு எப்படி இருந்திருக்கும் . தென் மாவட்டங்களில் ஒரு பாட்டுக்கே வெட்டு குத்து நடக்கிறது , அதனாலேயே இந்த போராட்டம்

    ReplyDelete
    Replies
    1. படத்தில் உள்ள வன்முறைக் காட்சிகளுக்கு எதிராகவா டாக்டர் கிருஷ்ணசாமி போராடினார்....? இதற்கு முன்பு வன்முறை காட்சிகள் நிறைந்த படம் எதுவும் வரவில்லையா..? மதயானைக் கூட்டத்தை விடவா இந்தப் படத்தில் வன்முறைக் காட்சிகள் அதிகமாக இருக்கிறது..?

      Delete
  6. Registrace na webu, bonus na první vklad až do výše 500% - SazkaHry

    ReplyDelete