முதலில் தாலி அறுப்புக்கும், அகற்றுதலுக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளுங்கள். சாலையில் சென்று கொண்டிருப்பவர்களை வலுக்கட்டாயமாக இழுத்துவந்து முச்சந்தியின் நிற்க வைத்து தாலியை அறுக்கவில்லை. அவர்கள் அவர்களது இயக்கத்தில் உள்ள சில பெண்கள் அணிந்துள்ள தாலியை அவர்களின் சம்மதத்தோடு அகற்றுகிறார்கள். சரி.. அறுக்கிறார்கள் என்றே வைத்துக்கொள்ளுங்கள். யார் தாலியை எவன் அறுத்தால் உங்களுக்கு என்ன வந்தது..? எதற்காக இந்த இந்து வெறியர்கள் இப்படி கூச்சல் போடுகிறார்கள்...?
இதற்கு சில இந்துத்வா அமைப்புகள் கண்டனம் தெரிவிக்கிறது. அது அவர்களின் பிழைப்பு, விட்டுவிடுவோம். ஆனால் இந்த டம்ளர் பாய்ஸ் எதற்கு சந்தில் சிந்து பாடுகிறார்கள்..?.
தாலி அகற்றும் நிகழ்வுக்கு ஆதரவாக பேசினால் உடனே இவர்கள் வைக்கும் முதல் கேள்வி, உன் வீட்டுக் குடும்பப் பெண்களின் தாலியை நீ அறுப்பாயா..? அதை முதலில் செய்துவிட்டு பிறகு இதற்கு அதரவு கொடு என்கிறார்கள். இதை இந்துத்வா ஆதரவாளர்கள் சொன்னால் பரவாயில்லை. இந்துத்வா கொள்கைகளையும் மோடியின் முகமூடியையும் சமூக வலைத்தளங்களில் கிழித்தெடுக்கும் டம்ளர் பாய்ஸ் சொல்வதுதான் வேதனை ..!
தாலி அகற்றும் இந்த நிகழ்வுக்கு ஆதரவாக நான் மட்டுமல்ல, முற்போக்கு சிந்தனையுடைய அனைவரும் தத்தமது குடும்பப் பெண்களின் கழுத்தில் கட்டியிருக்கும் தாலியை கண்டிப்பாக அகற்றுவார்கள். ஆனால் அதற்கு முன்பு பெண்ணடிமைத் தளை என்கிற தாலியின் மீதான புனிதப் பிம்பம் உடைத்தெறியப்பட்ட வேண்டும். அதற்கான ஆரம்பப் புள்ளியைத்தான் திராவிடக் கழகம் வைத்திருக்கிறது.
எதற்காக கி.வீரமணி இந்த 'தாலி அகற்றுதல் மற்றும் 'மாட்டுக்கறி உண்ணும்' போராட்டத்தை முன்னெடுத்தார் என்பது உங்களுக்குத் தெரியாதா..? புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நடந்த 'தாலி அவசியமா' என்கிற விவாதத்திற்கு எதிர்வினையாக அந்த நிறுவன அலுவலகம் மீது வெடிகுண்டு வீசப்பட்டது. அதைச் செய்தது இந்துத்வா கும்பல். இந்தியாவின் ஒரு மாநிலத்தில் மாட்டுக்கறி உண்ண தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. காரணம், அது இந்துக்களின் புனிதமாம். அதனால் அது கொல்லப்படவோ உண்ணப்படவோ கூடாதாம். இச்சட்டத்தை கொண்டுவந்ததும் ஒரு இந்துத்வா அரசுதான். நாம் என்ன சாப்பிடவேண்டும், சாப்பிடக்கூடாது என்பதை முடிவு செய்ய அவர்கள் யார்..? ஒருவேளை உயிர்களைத் துன்புறுத்தக்கூடாது என்கிற அக்கரையில் சொல்கிறார்கள் என்றால் ஆடு, கோழி போன்றவைகளைச் சாப்பிடுவதற்கும் தடை விதிப்பார்களா..?.
ஆனால், சமூக வலைத்தளங்களிலும், சில ஊடகங்களிலும் மற்ற நிகழ்வுகள் போல ஒருநாள் மட்டும் இது விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, சில எதிர்ப்புகளை பதிவு செய்துவிட்டு தன் கடமையை முடித்துக் கொண்டார்களே தவிர, எந்த இயக்கமும் அதற்கு எதிரான களப்போராட்டத்தை முன்னெடுக்கவில்லை. காரணம் ஓட்டரசியல். இந்துக்கள் காலங்காலமாக பின்பற்றிவரும் ஒரு நம்பிக்கையில் கைவைத்தால் அது எதிர்ப்பு அலையாக மாறி தேர்தல் வரை எதிரொலிக்கும் என்கிற பயம். ஆனால் ஓட்டரசியலில் துளியும் நம்பிக்கை இல்லாத திராவிடர் கழகம் தைரியமாக களத்தில் குதித்தது.
தாலி என்பது பெண்ணடிமைத்தனம் என்கிற பிரச்சாரத்தை முதலில் முன்னெடுத்தது பெரியார்தான். அன்றைய காலக்கட்டத்தில் நிறைய சுயமரியாதைத் திருமணங்கள் தி.க வினரால் நடத்தப்பட்டது. தாலி அணியாமலே நிறைய திருமணங்கள் நடந்தது. அது ஒன்றே தி.க வின் கொள்கை இல்லை என்பதால் என்னவோ பெரியார் மறைவுக்குப் பிறகு அவரது தொண்டர்களே அதைப் பின்பற்றவில்லை.
திரும்பவும் கி.வீரமணி எதற்காக அதைக் கிளறவேண்டும்...? ஒன்றைத் தெளிவு பெறுங்கள். தி.க ஒரு அரசியல் கட்சி கிடையாது. அது ஒரு இயக்கம். இந்த நிகழ்வை வைத்து அடுத்தத் தேர்தலில் நின்று அரசியல் ஆதாயம் அடைவது அதன் இலக்கல்ல. பரபரப்பாக ஏதாவது ஒன்றைச் செய்து மக்கள் மத்தியில் தங்களைப் பிரபலப்படுத்திக்கொள்ளவேண்டிய அவசியமும் அவர்களுக்குக் கிடையாது. மக்கள் விடாப்பிடியாகப் பிடித்திருக்கும் ஒரு மூட நம்பிக்கையை அவர்களிடமிருந்து அகற்ற வேண்டுமானால் அதற்கு எதிரான முதல் போராட்டப் புள்ளியை நம்மிடமிருந்து தான் ஆரம்பிக்கவேண்டும் என்று பெரியார் பின்பற்றிய அதே முறையைத்தான் கி.வீரமணியும் வழிமொழிந்திருக்கிறார்.
எதற்காக பெரியார் தனது தோட்டத்தில் இருந்த நானூறு தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார்..? யோசித்துப் பார்த்தீர்களேயானால், அது சுத்த மடத்தனமான செயல்போல தோன்றும். மதுவிலக்கு பிரச்சாரம் செய்ய மரத்தை ஏன் வெட்டி சாய்க்கவேண்டும்..? தனது பிரச்சாரத்தின் ஆரம்பமே மக்களால் பரவலாக கவனிக்கப்படவேண்டும்.. அதுவே விழிப்புணர்வுக்கான முதல் விதையாக இருக்கும் என்று நம்பினார் தந்தை பெரியார். இன்று வரை மதுவிலக்கு என்றால் பெரியார் தனது தோட்டத்தில் வெட்டி சாய்த்த மரங்கள் அல்லவா நமக்கு ஞாபகம் வருகிறது. அதே நடைமுறையைத்தான் கி.வீரமணியும் பின்பற்றியிருக்கிறார்.
உடன்கட்டை ஏறுவது மிருகத்தனமான, அறிவீனமான செயல் என்று தற்போது எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்படுகிறது. அந்நடைமுறையே முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஆனால் முன்னொரு காலத்தில் மக்கள் மீது கட்டாயமாகத் திணிக்கப்பட்ட மத நம்பிக்கையாக அது பார்க்கப்பட்டது. அதற்கெதிராக பிரச்சாரம் செய்பவர்களை இப்படித்தான் விரோதிகள் போல தூற்றினார்கள். அதன்பிறகு கணவன் இறந்துபோனால் மனைவிமார்கள் கண்டிப்பாக வெள்ளுடை அணியவேண்டும், பொட்டுவைக்கக் கூடாது, பூச்சூடக் கூடாது என்பது போன்ற கொடூர தண்டனைகள் இச்சமூகத்தால் கணவனை இழந்தப் பெண்களுக்கு விதிக்கப்பட்டது. அப்படி செய்யாதவர்களை விபச்சாரிகள் என்று சொன்னார்கள். ஆனால் காலபோக்கில் அது மாறவில்லையா..? அந்த மூடத்தனத்தின் கடைசி எச்சம்தான் இந்தத் 'தாலி'.
இந்து மதத்தில் கணவனை இழந்தப் பெண்ணுக்கு தாலி அறுக்கும் சடங்கு என்ற ஒன்றை தற்போது நடத்துகிறார்கள். பதினாறாவது நாள் என நினைக்கிறேன். தன் கணவனை பறிகொடுத்து சிதையின் தணலில் ஏற்றிய அந்த நாளைவிட, பிற்பாடு தாலி அகற்றும் நாள்தான் பெண்களுக்கு கொடூரமானது. கணவன் இறந்த நாளிலிருந்து எல்லோரும் ஆறுதல் சொல்லி கொஞ்சம் கொஞ்சமாக அவளைத் தேற்றி வருவார்கள். அவளும் ஓரளவு தேறிவரும் சமயத்தில்தான் இந்த தாலி அறுக்கும் சடங்கு நடக்கும். ஏதோ அவள் இனி இந்த உலகத்திலேயே வாழத் தகுதியில்லாதவள் போலவும், அவளது வாழ்க்கையே சூனியமாகி விட்டது போலவும் சுற்றியிருக்கும் பெண்கள் எல்லாம் அவளைக் கட்டிபிடித்து அழ ஆரம்பிப்பார்கள். தலையில் பூச்சூடி, நுதலில் திலகமிட்டு, கைகள் நிறைய வளையலிட்டு சுற்றிலும் பெண்கள் சூழ அமர வைப்பார்கள். பிறகு ஒவ்வொரு அடையாளத்தையும் அழிக்க ஆரம்பிப்பார்கள். கூடவே எழவு விழுந்த ஒப்பாரி சத்தமும் சேர்ந்துக்கொள்ளும். யோசித்துப் பாருங்கள். கணவனை இழந்தத் துயரத்தில் இருக்கும் ஒரு பெண்ணுக்கு உளவியல் ரீதியாக இது எவ்வளவு பெரிய மன அழுத்தத்தை உண்டாக்கும்..! எந்தத் துணையுமில்லாமல் தன்னால் இந்த உலகத்தில் வாழமுடியும் என்ற என்ற நம்பிக்கையில் மீண்டு வருபவளை அப்படியே புரட்டிப்போடும் சம்பவம் அல்லவா அது..! உடன்கட்டை ஏறுவதை விட கொடூரமான நிகழ்வு அல்லவா இந்தச் சடங்கு...! தாலி இல்லாத பெண்களை வெறும் முண்டமாக சித்தரிக்கும் மத நம்பிக்கை நமக்கு தேவையா..?
அதற்காக எல்லோரும் தாலியை அறுத்தெறியுங்கள் என சொல்லவில்லை. இச்சமூகத்தில் தாலி மீதான புனிதப்பிம்பம் மெல்ல மெல்ல குறையவேண்டும்.. எப்படி மேட்டுக்குடி மக்களிடம் 'மெட்டி' என்கிற வஸ்து மீதான ஆர்வம் தற்போது குறையத் தொடங்கியுள்ளதோ அதேப்போல தாலி மீதான புனிதப் பிம்பமும் இன்னும் ஐம்பது அல்லது நூறுவருடங்களில் உடைத்தெறியப்பட்டு, 'தாலி' என்பது கழுத்தில் அணியப்படும் ஒரு அணிகலன் என்று சொல்லும் நிலைமை கண்டிப்பாக வரும். ஒருவேளை இன்று நடந்த தாலி அகற்றும் நிகழ்வு ஒரு வரலாற்று சம்பவமாக அப்போது பதிவு செய்யப்பட்டிருக்கலாம்...!
இன்று தாலியை அகற்றிய தோழர்களை விபச்சாரிகள் என்று ஒரு இந்துத்வா தலைவர் சொல்கிறார். அதற்கு இணையப் போராளிகள் ஒத்தூதிக் கொண்டிருக்கிறார்கள். இதைவொரு விழிப்புணர்வு சார்ந்த நிகழ்வாக உங்களால் எடுத்துக் கொள்ள முடியவில்லை என்றால் விட்டுவிடுங்கள். அவர்கள் உங்கள் வீட்டு பெண்களின் தாலியை அகற்றவில்லை...!
இச்சமூகத்தில் அனைத்து மூடநம்பிக்கைகளும் கடும் போராட்டத்திற்குப் பின்புதான் களையப்பட்டன. இந்துக்களின் மனதில் சிலரால் புனிதப் பிம்பமாகக் கட்டமைக்கப்பட்டிருக்கும் தாலி என்கிற மூடநம்பிக்கையும் அவ்வாறு கலையப்படவேண்டுமெனில் எதிர்வினைகளை கண்டு அஞ்சாமல் சிலபல போராட்டங்களை செய்துதான் ஆகவேண்டும்.
thelivaana alasal sir!
ReplyDeleteThanks mahesh..
Deleteவிலங்கை அகற்ற விலங்குகளால் முடியாது...!
ReplyDeleteநன்றி DD
Deleteஅருமையான பதிவு
ReplyDeleteநன்றி சகோ..
Deleteகடவுள்,மதம்,சாஸ்திரம் மீதான நம்பிக்கைகள்தான் இவற்றின் பலம். அசைத்து பார்க்கவும் பதட்டப்படுகிறார்கள்.நல்லதொரு தெளிவான பதிவு
ReplyDeleteநன்றி தம்பி..
Deleteபலர் புனிதமானதாக உருவாக்க முயற்சிக்கும் தாலிக்கு எதிராக நீங்க துணிந்து எழுதியது அருமையான பதிவு.
ReplyDeleteதாலிக்காக போட்டி கூட நடக்கிறது! தமிழினத்தின் புனிதமான தாலி பாதுகாக்கபட வேண்டியது என்று தமிழின பாதுகாவலர்களும், மத தரப்பினர் மதத்தின் புனிதமானது தாலி பாதுகாக்கபட வேண்டியது என்றும்.
நான் சில நண்பர்களுடன் பேசி பார்த்துவிட்டேன், மேற்க்கு நாடுகளில் வசிக்கின்ற தமிழர்கள் மிக பெரும்பான்மையோர் வெட்கம் காரணாக தாலி அணிவதில்லை. இந்தியா செல்லும் போது மட்டும் தூசு தட்டி எடுத்து அணிந்து தாலியுடன் விமான நிலையத்தில் தரை இறங்குவார்கள்.