Saturday, 13 June 2015

சந்தானம் இனிமேல் இப்படித்தானா..? இனிமேல் இப்படித்தான் படத்தின் ஒலித்தகடு வெளியீட்டு விழாவில் அப்படத்தின் கதையை எப்படி தேர்வு செய்தார்கள் என்பதை சுவாரஸ்யமாக சொன்னார் சந்தானம். அவரது லொள்ளு சபா சகாக்கள் அவரிடம் ' ஒன் லைன் ' ஒன்றை சொன்னார்களாம். 'எந்த விசயத்திற்கும்' ஆப்ஷன் வேண்டுமென்று கேட்கும் சந்தானம் இதற்கும் ஆப்ஷன் கேட்க, நிறைய ஒன் லைன்களை ஊதித் தள்ளினார்களாம் அவரது அடிபொடிகள் . இறுதியில் இக்கதையத்தான் தேர்வு செய்தாராம் சந்தானம்.

ஹீரோ ஒரு பெண்ணை உயிருக்குயிராக காதலிக்கிறான்; அவளும் கூட. சந்தர்ப்ப சூழலால் வீட்டில் பார்க்கும் பெண்ணை நிச்சயம் செய்யும்படி ஆகிறது. காதலியா.. அல்லது நிச்சயம் செய்த பெண்ணா.. என்கிற இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்படுகிறான் ஹீரோ. ஒருபுறம் காதலனாகவும் மறுபுறம் மாப்பிள்ளையாகவும் நடிக்கிறான். ஒருகட்டத்தில் குட்டு வெளிப்படுகிறது. இறுதியில் யாருடன் சேர்கிறான் என்பதை ஒரு திருப்பத்துடன் சொல்லவேண்டும்.

அவ்வளவு கதைகளை அலசி ஆராய்ந்து இறுதியில் தமிழ் கூறும் திரையுலகில் இதுவரை சொல்லப்படாத(!) இக்கதையைத்தான் தேர்ந்தெடுத்தார்களாம். ஆனால் இதே கதையமைப்பில் 'வீரா' என்ற ஒரு படம் வந்தது அவர்களுக்கு நினைவில்லை போலும்.  அதுசரி... 'இன்று போய் நாளை வா..' படத்தை அப்படியே சுட்டு க.ல.தி.ஆசையா என்று பெயரில் திருட்டு ரீமேக் செய்து உண்மையான படைப்பாளி கே.பாக்யராஜ்-க்கு எந்த கிரடிட்டும் கொடுக்காதவராச்சே நம்ம சந்தானம்..!

வளர்ந்து வரும் இளம் நாயகர்களின் படங்களில் அவர்களுக்கு இணையான பாத்திரம் வேண்டுமென்று அடம்பிடித்து, தன்னையையும் ஒரு ஹீரோவாக 'பில்டப்' செய்துகொண்ட சந்தானம், வ.பு.ஆயுதம் படம் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்தார். முதல் அடியே சறுக்கியது. அதில் கற்ற பாடத்தை முன் அனுபவமாகக் கொண்டு அடுத்தப் படத்தில் பட்டையைக் கிளப்புவார் எனப் பார்த்தால், நான் இனிமே அப்படித்தான் என்று குழப்பிய அதே குட்டையில் மீன் பிடித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவின் ஒரு முன்னணி நகைச்சுவை நடிகரை... திரையில் பார்த்தாலே சிரிக்கத்தோன்றும் முக அமைப்பு உடைய ஒரு நடிகரை..  ஒரு ரொமான்ஸ் அமுல் பேபியாகக் காண்பித்தால் எப்படியிருக்கும்..?  நாயகி பின்னால் காதலைச் சொல்ல அலைவது.... காதலை நிரூபித்து அவளைக் கவர விபரீத செயல்களை செய்வது... காதல் கை கூடியவுடன் விதவிதமான காஸ்டியூமில் டூயட் பாடுவது... தமிழ்சினிமாவின் இது போன்ற  கிளிசே வகை காட்சிகளில் நடிக்க சந்தானம் எதற்கு..? இளம் ஹீரோக்கள் யாரையாவது போட்டு எடுத்திருக்கலாமே..

படம் முழுக்க கலர்கலரான டீஷர்ட்' , விதவிதமான ஜீன்ஸ் பேன்ட், உயர்ரக சப்பாத்து என ஒரு 'ஹைகிளாஸ்' இளைஞனாக வருகிறார் சந்தானம். சமையலறைக்குக் கூட அதே 'ஷு ' வுடன்தான் செல்கிறார். தன் காதலி கொடுத்த பரிசைத் தேடும்போது அதே 'ஷு 'வுடன் தான் படுக்கும் கட்டிலின் மேலே ஏறித் தேடுகிறார். தனது தாய் மாமாவை(தம்பி ராமையா) சர்வ சாதாரணமாக வாடா போடா என அழைக்கிறார். வழக்கமான நக்கலும் உடல்மொழியும் அவரிடம் இல்லை. அவர் பேச்சில் அந்தத் தொனியும் இல்லை. ரொமான்ஸ் காட்சிகளில் வழிகிறார். மொத்தத்தில் 'நம்ம சந்தானம்' நம்மிடமிருந்து கொஞ்சம் விலகியே நிற்கிறார் . எங்கு தேடினாலும் நல்லதம்பியும் பார்த்தசாரதியும் கிடைக்கவே இல்லை.

ஒரு நகைச்சுவை நடிகர் ஒரே பாய்ச்சலில் நாயகனாக பதவி உயர்வு அடையும் போது தனது பழைய பாணியை கைவிட்டு புதிய பாணியில் நடிப்பதில் என்ன தவறு.?. நல்ல கேள்விதான். ஆரம்பத்தில் வில்லனாக தனது கலைப்பயணத்தைத் தொடங்கிய நிறைய நடிகர்கள் பிற்காலத்தில் ஹீரோவாக சக்கைப்போடு போடுவது நிகழ்கால தமிழ்ச்சினிமா வரலாறு. ஆனால் ஒன்றை யோசித்துக் பாருங்கள். நகைச்சுவை நாயகர்களுக்கு மட்டும் ஏன் இந்த விதிவிலக்கு..?. அவர்களை ஹீரோவாக ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் நம்மிடம் இல்லையா..?.  காரணம் அதுவல்ல.

வில்லனாக அறிமுகமாகி முத்திரைப் பதித்து பின்பு கதாநாயக அந்தஸ்தை அடைந்தவர்களைப் பட்டியலிட்டு பாருங்கள்; புரியும். வில்லனாக நடிக்கும்பொழுது தனக்கென்று ஒரு தனி ஸ்டைலை உருவாக்கிக் கொண்டவர்கள் ஹீரோவான பின்பும் அதே ஸ்டைலை பின்பற்ற செய்வார்கள். நிரம்ப கெட்டவனாக நடித்த ஒரு நடிகர், திடீரென்று நிரம்ப நல்லவனாக நடித்தால் நமது சினிமா புத்தி ஏற்றுக்கொள்ளாது. சத்யராஜ், ரஜினி,கமல்,பிரபு போன்ற நடிகர்கள் வில்லனிலிருந்து ஹீரோவாக அவதாரம் எடுத்தப் போதும் தனது பழைய வில்லத்தனம் அடுத்தடுத்து வந்தப் படங்களில் சிறிதளவாவது இருக்கும்படிப் பார்த்துக் கொண்டார்கள்.

அதேப்போல நகைச்சுவை நடிகர்கள் ஹீரோவாக அவதாரம் எடுக்கும்பொழுது  தனது பழைய பாணியை மொத்தமாக மாற்றாமல் நகைச்சுவையோடு பின்னிப் பிணைந்த கதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். கதையில் காமெடி வரக் கூடாது. காமெடியில் கதைவர வேண்டும். இம்சை அரசனின் மெகா வெற்றியும், நான் தான் பாலாவின் படுதோல்வியும் அதைத்தான் உணர்த்துகிறது.  தனது காமெடி இமேஜை மொத்தமாக தூக்கி எறிந்துவிட்டு ரொமான்ஸ் அல்லது ஆக்சன் ஹீரோவாக மட்டும்தான் இனிமேல் நடிப்பேன் என்கிற முடிவுக்கு சந்தானம் வருவார் எனில் , அவரது சீட்டின் அடியில் அவரே வெடிவைத்துக் கொள்கிறார் என்று அர்த்தம்.

இப்போ முடிவா என்ன சொல்ல வரீங்க என கேட்பது புரியுது. சந்தானத்தை ஒரு ரொமான்ஸ் ஹீரோவா ஏத்துக்க முடியல பாஸ்.. அவர் டூயட் ஆடுவதையும் பைட் பண்ணுவதையும் பார்க்கவா நாங்க தியேட்டருக்கு போறோம்..?அதைத்தான் இப்போ வருகிற எல்லா ஹீரோக்களும் செய்கிறார்களே...!


அதெல்லாம் விடுங்க.. படம் எப்படி இருக்கு...?
டத்தில் மொக்கை காமெடியா சொல்லி வெறுப்பேத்துவது ஒருபக்கம் என்றால் இன்னொரு பக்கம் பத்து நிமிடத்திற்கு ஒரு பாட்டை போட்டு கொலையா கொல்றாங்க. அத்தனைப் பாட்டுக்கும் சந்தானம் டான்ஸ் பெர்பாமன்ஸ் பண்ணுகிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அடுத்த பிரபுதேவா ஆவதுதான் அவரது அடுத்த இலக்கு போல..

" டே.... ய். மெகா சீரியல் பாத்து அழுவாத பொம்பளையும் கிடையாது.. மேரேஜ் சிடி பாத்து அழுவாத ஆம்பளையும் கிடையாது.."

"பொண்ணு லட்டு மாதிரி இருக்கும் தம்பி.." ..  "லட்டு மாதிரினா.. மூஞ்சில திராட்சை, முந்திரி எல்லாம் ஒட்டியிருக்குமா.."

இதற்கெல்லாம் நம்மை சிரிக்க சொல்றாங்க பாஸ். கட்டாயம் சிரித்தே ஆகவேண்டும் என்றால், விஜய் டிவி சிரிச்சா போச்சி ரவுண்டுல இப்போ நேரா வந்து கிச்சு கிச்சு மூட்டி சிரிக்க வைக்கிறாங்களாம். அதுமாதிரி யாராவது ஒரு ஆளை செட் பண்ணி படம் பார்க்க வருகிறவர்களை கிச்சு கிச்சு மூட்டினால் தான் உண்டு. என்னை விட்டால் இதே மாதிரி மொக்கை வசனங்கள் பக்கம் பக்கமா எழுதுவேன். இதைத் தவிர்த்து காட்சியமைப்பில் நகைச்சுவை வைத்திருக்கலாம்.

இதில என்ன கொடுமை என்றால் இந்த மொக்கை ஜோக்குக்கு எல்லாம் பின்னாடி உட்கார்ந்திருந்த ஒருத்தர் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தார். படம் முடிந்த பிறகு, கள்ளங்கபடமில்லா அந்த பிஞ்சு முகத்தை பார்த்தே ஆகவேண்டும் என்ற ஆவலில் இருந்தேன். படம் முடிந்து பார்த்தால் அவர் கொஞ்சம் வயதான ஆள். அவருக்கு உடம்பு சரியில்லை போல. ஏசி காற்று ஒத்துக் கொள்ளாமல் இருமிக்கிட்டு இருந்திருக்காரு.

படத்தில் இரண்டு ஹீரோயின்கள். சந்தானத்துக்கு மாறி மாறி முத்தம் கொடுப்பதற்கே இருவருக்கும் நேரம் போதவில்லை. VTV கணேஷ் மற்றும் தம்பி ராமையா இருக்கிறார்கள்... இருக்கிறார்கள்...! தவளை புகுந்த தொண்டையை வச்சி இவர் பேசுறத கேட்பதற்கு இனிமேல் நமக்கு சக்தி கிடையாது. "இங்க என்ன சொல்லுது.." என்கிற ஒற்றை டயலாக்கில் நம் நெஞ்சாங்கூட்டை தொட்டவர், இதில் தொட்டதுக்கெல்லாம் பேசிக்கொண்டே இருக்கிறார். 'தம்பி' ராமையா.. மொதல்ல உங்க பெயரை 'அண்ணன்' ராமையா என மாற்றுங்கள். இந்த வயசான காலத்துல பேரன் வயதில் இருக்கும் ஒருவர் உங்களை 'வாடா.. போடா..' என்று அழைப்பது எங்களுக்கே ஒரு மாதிரியாக இருக்கிறது. " நேசனல் அவார்டு எல்லாம் வாங்கியிருக்கேன். வாங்கடா..போங்கடானாவது பேசுயா.." என சொல்லியிருக்க வேண்டாமா..?

லாஜிக் மிஸ்டேக் பத்தியெல்லாம் எதுவும் சொல்லப் போறதில்லை. ஹீரோயின் எத்தனை நைட்டீஸ் வச்சிருக்கார்... எத்தனை பேண்டீஸ் வச்சியிருக்கார்.. அதை இப்போ யார்யார் போட்டிருக்காங்க என்பதை பற்றியெல்லாம் ரமணா விஜயகாந்த் மாதிரி புள்ளிவிவரம் சொல்கிறவர், 'அவளுக்கு ஒரு அக்கா இருக்கா..' என அவளது தோழியிடம் அப்பாவியாய் கேட்கும்போது லாஜிக் பல்லிளிக்கிறது.

படத்துக்கு பட்ஜெட் எவ்வளவு என்று தெரியவில்லை. ஆனால் பட்ஜெட்ல பாதி சந்தானத்துக்கு டீஷர்ட் வாங்குவதிலே செலவாகியிருக்கும். ஒரு ஃபிரேமுக்கு ஒரு டீஷர்ட்-ல் வருகிறார். ஆர்யா இடத்தை பிடிக்காமல் விடமாட்டார் போல.. :​- ).

முன்பாதி மசமச வென்று நகர்கிறது. பின்பாதி சவசவ என என்று செல்கிறது. கடைசி 15 நிமிடங்களில் வரும் திருப்பங்கள் ஓரளவு படத்தைக் காப்பற்றுகிறது. அந்த கிளைமாக்ஸ் எதிர்பாராதுதான். இரண்டே கால் மணிநேர படத்தில் அது ஒன்று மட்டுமே ரசிகர்களுக்கு திருப்தியைக் கொடுத்துவிடுமா..?  

வீக் எண்டுல வீட்ல இருந்தா வேலை செய்ய சொல்லிடுவாங்களா என்கிற அச்சத்தில் இருப்பவர்களும், அக்னி வெய்யிலின் அனலை தாங்க முடியாம 2 மணி நேரம் ஏசியில் உக்கார்ந்தா தேவல.. என்று ஃபீல் பண்ணுகிறவர்களும் இந்தப் படத்திற்கு போய்விட்டு வரலாம்.


6 comments:

 1. // கதையில் காமெடி வரக் கூடாது. காமெடியில் கதைவர வேண்டும். // அப்படிச் சொல்லுங்க...

  அக்னியே போதும் என்று நினைக்கிறேன்...!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் நன்றி DD.. :-)

   Delete
 2. நீங்கள் சொல்வது போல நகைச்சுவை நடிகர்களை கதாநாயகனாக ரசிகர்கள் ஏற்றுக் கொண்டதில்லை.கொஞ்சம் கொஞ்சமாகத் தான் மார் வேண்டும். காமெடியனாக வந்தாலும் சில காட்சிகளிலாவது நடிப்பதற்கான வாய்ப்பை உருவாக்கிக் கொண்டு நடிக்க வேண்டும்.
  விமர்சனம் அருமை . சந்தானம் பற்றிய அலசல் முன்னுரை சூப்பர்.

  ReplyDelete
 3. நீங்கள் சொல்வது போல நகைச்சுவை நடிகர்களை கதாநாயகனாக ரசிகர்கள் ஏற்றுக் கொண்டதில்லை.கொஞ்சம் கொஞ்சமாகத் தான் மார் வேண்டும். காமெடியனாக வந்தாலும் சில காட்சிகளிலாவது நடிப்பதற்கான வாய்ப்பை உருவாக்கிக் கொண்டு நடிக்க வேண்டும்.
  விமர்சனம் அருமை . சந்தானம் பற்றிய அலசல் முன்னுரை சூப்பர்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி டி.என்.முரளிதரன்.. :-)

   Delete
 4. படத்துல பொண்ணுங்களுக்கென ஒரு வசனம் சொல்றாங்க "உங்கள நம்பித்தான படமெடுக்காங்க, பாய் ப்ரண்ட கூட்டிட்டு போங்க" என்ற ரீதியில். இவருக்கு அதான் சரி, ரசிகர்களை இப்படி புரிந்து கொண்ட மொண்ணைகள், அதை ரசித்து சிரிக்கும் மொண்ணைகளுக்கான படம்.

  நான் எதிர்பாக்கல நீங்க விமர்சனம் எழுதுவீங்கன்னு!!

  ReplyDelete