Wednesday, 1 July 2015

இன்று நேற்று நாளை - கொண்டாடும் இணையவாசிகள்..!



 சமீப காலங்களில் இணையவாசிகளால் அதிகம் புகழப்பட்ட, கொண்டாடப்பட்ட தமிழ்த் திரைப்படங்கள் என்றால் தொட்டால் தொடரும், காக்கா முட்டை, மற்றும் இன்று நேற்று நாளை ஆகிய மூன்று படங்களை சொல்லலாம்.

இதில் காக்கா முட்டை, ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களால் மட்டுமல்ல திரையுலக ஜாம்பவான்களாலும்  மெச்சப்பட்ட படைப்பு.. அதனால் அதை விட்டுவிடுவோம்.

'தொட்டால் தொடரும்' படம் தமிழ் கூறும் இணைய வாசிப்பாளர்கள் நன்கறிந்த பிரபல சினிமா விமர்சகர் கேபிள் சங்கரின் முதல் படைப்பு. தவிரவும், வலைப்பூ சினிமா விமர்சகர் வட்டத்திலிருந்து வெளிவந்த முதல் திரைப்படம். படம் வெளிவந்த நாளில் பேஸ்புக்கில் வாழ்த்துகள் நிரம்பி வழிந்தன. சிலர் FDFS பார்த்து விட்டு 'கலக்கிவிட்டார் காப்பி' என்கிற ரீதியில் அண்ணன் கேபிளாருக்கு ஜன்னியே வருமளவுக்கு ஐஸ் வைக்கும் வைபோகத்தை நடத்தினர். ஆனால் அடுத்தடுத்த நாட்களில் படம் பப்பரப்பா ஆன சங்கதி கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வர ஆரம்பித்தது.

கடந்த வாரம் வெளியான 'இன்று நேற்று நாளை' படத்திற்கும் செம ஒப்பனிங் பேஸ்புக்கில். சினிமா வாடையே ஆகாதவர்கள் எல்லாம் சினிமா விமர்சனம் எழுதினர். சிலர் தியேட்டரிலிருந்து இடைவேளையின் போது 'லைவ் ரிவியூ' எல்லாம் கொடுத்தனர். எல்லா பேஸ்புக் விமரிசனங்களுக்கும் ஓர் ஒற்றுமை இருந்தது. படத்தை ஆகா..ஓகோ..என்று புகழ்ந்துவிட்டு கடைசியில் 'with Rajesh Da Scorp.'  என்று 'டாக்' கை தட்டி விட்டிருந்தனர். பொதுவாக யாருக்கும் லைக் போடும் பழக்கமில்லாத கருந்தேள் ராஜேஷ், வளைச்சி வளைச்சி எல்லோருக்கும் லைக் போட்டுக் கொண்டிருந்தார். பார்க்கவே சந்தோசமாக இருந்தது.

அதில் ஒரு பெரியவர், படத்தையும் கருந்தேளையும் வானளாவ புகழ்ந்துவிட்டு, படத்தில் ஒரே ஒரு குறை இருக்கிறது என கொஞ்சம் இழுத்திருந்தார்.. அடேங்கப்பா.. TAG போட்டு குறையை சுட்டிக்காட்டும் அளவுக்கு பேஸ்புக் சமூகம் வளர்ந்து விட்டதா என்று ஆச்சர்யம் கொண்டேன்.  படத்தில் டைம் மெசினை வைத்துக் கொண்டு தங்கம் வாங்க செல்வார்கள் விஷ்ணுவும் கருணாகரனும். அங்கே கடைக்காரரிடம் பேசும்போது எனக்குப் பிடித்த நடிகர் 'சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்' என்பார்.  அதெப்படி லிங்கா படம் வெளிவந்து படு தோல்வியடைந்த நிலையில் ரஜினி சூப்பர் ஸ்டாராக இருக்க முடியும்..? விஜய் அல்லது அஜித்தை அல்லவா அவர் சொல்லியிருக்க வேண்டும்... இதை எப்படி வசனம் எழுதுபவர்கள் கவனிக்காமல் விட்டார்கள் என்று அறிவுப்பூர்வமான வினாவை எழுப்பி, அது ஒன்றே படத்தில் உள்ள குறையென சுட்டிக் காட்டியிருந்தார்.

அதைவிட பெரிய ஆச்சர்யம் என்னவென்றால், அதற்கு மெனக்கெட்டு கருந்தேள் சொன்ன பதில்தான். 'ஐயா நாங்கள் கதை டிஸ்கஷன் செய்யும் போது லிங்கா படம் வெளிவரவில்லை. அப்போதே எடுக்கப்பட்ட காட்சியது. அதற்குப் பிறகுதான் லிங்கா படம் வெளியானது' என்கிற தர்க்க ரீதியான பதிலை அவரது பதிவில் எழுதியிருந்தார். அதாவது லிங்கா படம் தோல்வியடைந்ததால் சூப்பர் ஸ்டார் என்கிற 'பதவி'யிலிருந்து ரஜினிகாந்த் தூக்கியடிக்கப்பட்டாராம். அய்யா... சூப்பர் ஸ்டார் என்பது பதவியல்ல..; பட்டம்..!.  ரஜினிக்கென்றே உருவாக்கப்பட்ட பட்டம். எப்படி மக்கள் திலகம் என்றால் எம்ஜியாரை மட்டும் குறிக்கிறதோ.. எப்படி நடிகர் திலகம் என்றால் சிவாஜியை மட்டும் குறிக்கிறதோ.. அதேப்போல சூப்பர் ஸ்டார் என்றால் இந்தியாவில் ரஜினியை மட்டும் தான் குறிக்கும். அவர் காலத்திற்குப் பிறகும் கூட...

பரவாயில்லை.. எனக்குத் தெரிந்து கே.என்.சிவராமன், யுவாவை அடுத்து படத்தில் உள்ள 'குறை' என்கிற வார்த்தையை தமிழ் பேஸ்புக் உலகில் அவர்தான் உபயோகித்திருந்தார். அந்த நேர்மையை பாராட்டுகிறேன்...!

படத்தைப் பார்த்த சிலர் தமிழ் சினிமாவையே புரட்டிப்போடும் புதிய யுத்தி என்கிற ரீதியில் பாராட்டி எழுதியிருந்தார்கள். அவர்களின் உணர்ச்சிப் பீறிடலுக்கு 'TAG ' க்கும் ஒரு காரணமாக இருக்கலாம். 'சினிமாவா... வீக் எண்டில் குடும்பத்துடன் சென்று பார்த்து மகிழ்வோம் அவ்வளவுதான்...' என்கிற அளவிலே இருப்பவர்களுக்கு இணையத்தில் சினிமாவின் நுணுக்கங்களை பலர் அலசுவதைப் படித்தவுடன் ஆச்சர்யம். குறிப்பாக 'திரைக்கதை' என்கிற வார்த்தையும் சினிமாவில் அது குறித்த அவசியத்தையும் மாறி மாறி வகுப்பெடுத்தவர்களில் கருந்தேள் ராஜேசும் ஒருவர். அதிலும் ஏதாவதொரு ஆங்கில சினிமாவை எடுத்துக் கொண்டு சினிமாவின் இலக்கணமே இதுதான் என்று புரியாத படத்தைப் பற்றி புரியாத மொழியில் புரியாத ஒன்றை அவர் விளக்கும்போது ஸ்கூலில் இங்கிலீஸ் டீச்சர் வகுப்பெடுக்கும்போது 'பேந்த பேந்த முழிக்கும்' மாணவனின் நிலைதான் நமக்கு.

பொதுவாக, சினிமாவுக்கான சூத்திரங்கள் வெற்றிபெற்ற படங்களிலிருந்துதான் உருவப்படுகிறது. கதை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அதற்கு எந்த வரையறையும் கிடையாது. ஆனால் அதன் திரைக்கதைக்கு வரையறை, அளவுகோல், வடிவமைப்பு எல்லாம் இருக்கிறது. கதையை நகர்த்தும் சம்பவங்களின் கோர்வையே திரைக்கதை. திரைக்கதையைப் பற்றி வகுப்பெடுக்கும் ஜாம்பவான்கள் எல்லாம் ஹாலிவுட் படங்களைத்தான் அளவுகோலாக எடுக்கிறார்கள். ஏன் இந்திய சினிமாவுக்கு அந்தத் தகுதி இல்லையா..?

பொறியியல்,மருத்துவம் மாதிரி சினிமாவும் ஒரு துறை. மற்றத் துறைகளில் எப்படி ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாதோ அதேப்போலதான் திரைப்படத்துறையிலும். இங்கும் அனுபவமே சிறந்த ஆசான். வெளிநாடு- களில் கட்டடம் கட்டும் முறைக்கும் இங்குள்ள முறைக்கும் நிறைய வேறுபாடுள்ளது. மண், தட்பவெட்பம் இதையெல்லாம் பொறுத்து மாறுபடும். சினிமாவும் அப்படித்தான். எந்த வெளிநாட்டு படங்களையும் ஒப்பிட்டு இந்திய சினிமா, குறிப்பாக தமிழ் சினிமாவை குப்பை என்று சொல்லிவிட முடியாது. தொழில்நுட்பத்தில் வேண்டுமானால் ஹாலிவுட் படங்கள் முன்மாதிரியாக இருக்கலாம். அதற்காக சினிமாவின் இலக்கணத்தையே அந்தப் படங்களைப் பார்த்துதான் கற்றுக்கொள்ளவேண்டும் என சொல்வது அபத்தம்.

தமிழில் சக்கைப்போடு போட்ட கரகாட்டக்காரனும் சின்னதம்பியும் எந்த இலக்கணத்தை பின்பற்றி எடுக்கப்பட்டது..? வேண்டுமானால் இதுபோன்ற படங்களிலிருந்து தமிழ் சினிமாவுக்கான சூத்திரத்தையும் இலக்கணத்தையும் வகுத்துக் கொள்ளலாம். இந்தியாவின் சிறந்த திரைக்கதையாளர் என்று புகழப்படும் கே.பாக்யராஜ் எந்த ஹாலிவுட் படத்தைப் பார்த்து திரைக்கதை சூத்திரத்தைக் கற்றுக்கொண்டார்..?



இன்று நேற்று நாளை படத்திற்கு வருவோம்..

மூன்று நாட்களில் மூன்று கோடி.. திரையரங்குகள் அதிகரிப்பு... வசூலில் சாதனை.. போன்ற செய்திகள் உண்மையிலேயே மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றன. வித்தியாசமான முயற்சிகள் எல்லாமே தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றிபெற்றிருக்கிறது. கால இயந்திரம் என்னும் விஷயம் தமிழ் சினிமாவில் புதிதுதான். அதை வைத்து எப்படி சுவாரஸ்யமான, விறுவிறுப்பான, குழப்பமில்லாத ஒரு திரைக்கதையை உருவாக்குவது என்பதில் திரையனுபவமே இல்லாத இந்த 'டீம்' சவாலான வெற்றியைப் பெற்றிருக்கிறது.

அட்டக்கத்தி, பீட்சா, சூதுகவ்வும்,தெகிடி, முண்டாசுபட்டி, எனக்குள் ஒருவன் போன்ற வித்தியாசமானப் படங்களை மட்டுமே தயாரிக்கும் பிடிவாத தயாரிப்பாளர் சி.வி. குமாருடன் இணைத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ரவிக்குமார். இயக்குநருக்கு முதல்படம். குறும்பட அனுபவம் இருந்தாலும் வெண்திரை என வருகிறபோது வணிக வெற்றிக்காக நிறைய உழைக்க வேண்டும். புதிய சிந்தனை.. வித்தியாசமான கதைக் களம் என்று நிறைய மெனக்கெட வேண்டியிருக்கும்.. தன் ஒருவனின் கையில் மட்டும் வண்டியின் 'ஸ்டீரிங்' இருக்கக்கூடாது என்பதையுணர்ந்து, அனுபவம் வாய்ந்த தயாரிப்பாளரோடு ராஜன், கருந்தேள் போன்ற தியரிடிகல் ஜாம்பவன்களுடன் இணைந்தது படத்தின் முதல் வெற்றி.. கேபிள் சங்கர் இந்த இடத்தில்தான் தோற்றுப்போனார். தன்னைச் சுற்றி சினிமாவை ஆர்வமாக பயிலும் நண்பர்கள் இருந்தும், தனது விநியோக அனுபவம் மட்டுமே போதும் என நினைத்த கேபிளாரின் எண்ணத்தில் விழுந்த அடிதான் தொட்டால் தொடரும்.

தமிழ்த்திரையில் முதன்முதலாக டைம் மெசினை அறிமுகப்படுத்தியுள்ளதால் அதைப்பற்றிய விளக்கத்தை ஆரம்ப பாடசாலையில் வகுப்பெடுப்பது போல் விளக்க வேண்டிய கட்டாயம் இயக்குநருக்கு. ஆனால் 'ஏ' செண்டர் ரசிகனுக்கு மட்டும் புரியும்படி சொல்லியிருப்பது முதல் சறுக்கல்.

படத்தின் ஹீரோ டைம் மெசின். அதைச்சுற்றித்தான் கதைப் பின்னப்படவேண்டும். முதல் பாதியில் ஹீரோவாக  ராஜநடைபோடும் டைம் மெசின் பிறகு காமடிப் பீசாக மாறிவிடுகிறது. பிற்பாதியில் டைம் மெசினை வைத்து விறுவிறுப்பாக பின்னப்படவேண்டிய திரைக்கதை 'கொழந்த' என்கிற வில்லனை சுற்றி நொண்டியடிக்கிறது. அதனால் ' ஆர்யா ஒரு டைம் மெசினைக் கண்டுபிடிக்கிறார்.... என ஆரம்பிக்க வேண்டிய இந்தப் படத்தின் கதையை,"விஷ்ணு ஒரு பெண்ணைக் காதலிக்கிறார். பொறுப்பில்லாமல் அவன் ஊரைச் சுற்றிக் கொண்டிருப்பதால் அப்பெண்ணின் அப்பா ஜெயபிரகாஷ் அவர்களது காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்நிலையில் அவனுக்கு ஒரு டைம் மெசின் கிடைக்கிறது. அதைவைத்து தான் புத்திசாலி என்று அவளது அப்பாவை நம்பவைத்து கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கிறான். இதற்கிடையில் அவளது அப்பாவுக்கு தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்த ஒரு ரவுடியை போலீஸ் என்கவுண்டர் செய்கிறது. விஷ்ணு, வேற ஒரு சம்பவத்துக்காக அந்த டைம் மெசினின் மூலம் இறந்தகாலம் செல்லும்போது, தவறுதலாக  அந்த ரவுடியை காப்பாற்றிவிடுகிறான். பிறகு அந்த ரவுடி ஜெயபிரகாஷையும் அவரது குடும்பத்தையும் கொலை செய்ய துரத்த, அவர்களை விஷ்ணு எப்படி காப்பாற்றுகிறான் என்பதே இப்படத்தில் கதை.." என முடிக்க வேண்டியதாயிற்று. இதில் டைம் மெசின் ஒரு கேரக்டராக வந்து செல்கிறது. ஒருவேளை தமிழ் சினிமா என்பதால் வணிக வெற்றிக்காக திரைக்கதையை இப்படி மாற்றம் செய்திருப்பார்கள்.

படத்தின் திரைக்கதையை செதுக்குவதற்கு இரண்டு வருடங்கள் எடுத்துக் கொண்டார்களாம். நிறைய காட்சிகளில் அவர்களின் உழைப்பு பளிச்சிடுகிறது. முக்கியமான திருப்பங்களை வசனங்களில் சொன்னால் அழுத்தம் இருக்காது என்பதால் காட்சிகளால் உணர்த்தியிருக்கிறார்கள். உதாரணமாக, காணாமல் போன அம்மாவின் கண்ணாடியை கண்டுபிடிக்கும் காட்சி. டைம் மெசினை வைத்துக்கொண்டு காணாமல் போன பொருட்களை கண்டுபிடிக்கலாம் என்பதை வெறும் வசனங்களால் விளக்காமல், டைம் மெசினில் தவறுதலாக ஒரு மாதத்திற்கு முன்பான நேரத்தை செட் பண்ணிவிட, அந்த நேரத்தில் ஒரு சிறுவன் அம்மாவின் கண்ணாடியை எடுத்துக்கொண்டு ஓடுவதாகவும்,அதை விஷ்ணு பிடுங்கி வைத்துக்கொண்டு நிகழ்காலத்துக்கு வரும்போது,' ஒரு மாதத்துக்கு முன்பே காணாமல் போன கண்ணாடியை நீதான் வச்சிருக்கியா..' என விஷ்ணுவின் அம்மா கேட்கும் காட்சி.

படத்தில் செம்மையான ஒரு காட்சி இருக்கிறது. டைம் மெசினில் தனது காதலியை அவளது பிரசவிக்கும் காலத்திற்கு அழைத்து செல்கிறார் விஷ்ணு. தன்னை பிரசவிக்க தன் அம்மா படும் வேதனையை நேரில் பார்க்கிறாள் அவள். தன் அம்மாவுக்கு பிரசவ வலி வந்தவுடன் தானே அவளைக் கூட்டிக்கொண்டு மருத்துவமனை செல்ல நேருகிறது. அங்கு அவள் பிறக்கிறாள். அவள் பிறந்த பொழுது எப்படி இருந்தாள் என்பதை நேரில் பார்க்கிறாள். அந்தக் காட்சியின் உச்சமாக, அவளே அவளைத் தன் கைகளில் தாங்கி உச்சி முகந்து பூரிப்படைகிறாள். அதை செல்ஃபோனில் போட்டோவும் எடுத்துக் கொள்கிறார்கள். என்னவொரு அட்டகாசமாக கற்பனை..!!! ஹாட்ஸ் ஆஃப் டு யூ கைஸ் ....! 

எனக்கிருக்கும் சில சந்தேகங்கள்....

2065 ஆம் ஆண்டில் மிகப்பெரிய கண்டுபிடிப்பாக காண்பிக்கப்படும் டைம் மெசினைப்பற்றி, 2015-ல் ஒரு சாதாரண எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமெண்டெஷன் படித்த ஒரு எஞ்சினியர் தெள்ளத் தெளிவாக தெரிந்து வைத்திருப்பது எப்படி..? அதை ஏதோ மிக்சி கிரைண்டர் ரிபேர் பண்ணுவது போல சரி செய்கிறாரே எப்படி..?

டைம் மெசினை முதன்முதலாக பார்க்கும் அந்த விஞ்ஞானி(!) அதில் ஏறி பயணம் செய்து, அது டைம் மெசின் தான் என்பதை நொடிப்பொழிதில் உறுதி செய்கிறார் சரி... பிறகு அவருக்கு கரண்ட் ஷாக் ஆகி கோமா நிலையிலிருந்து திரும்பும் போது பழைய நினைவுகள் அனைத்தையும் மறந்து விடுகிறார். அந்த நேரத்தில் விஷ்ணுவும் கருணாவும் கொடுக்கும் அந்த கருப்பு பெட்டியை மட்டும் வைத்துக் கொண்டு இது 'டைம் டிராவல் டிவைஸ்' என்கிறாரே... அது எப்படி..?

ஷேர் மார்கெட்டைப் பற்றி துளியும் அறியாத ஒருவனால், எந்த ஷேர் எவ்வளவு போகும் என்கிற எதிர்கால முடிவை மட்டும் வைத்துக் கொண்டு அத்தனை தொழில் வல்லுனர்களையும் ஏமாற்றுவது சாத்தியமா..? ஒருவருக்குக் கூட அவன் மேல் சந்தேகம் வரவில்லையே ஏன்..?

ருணாகரன் ஜோதிடனாக வருகிறார். அந்தத் தொழிலுக்கான உடல்மொழி, பேச்சு வழக்கு என எதுவுமே அவரிடம் இல்லை. அவர் போலியான ஜோதிடர் என நம்ப வைப்பதற்காக காண்பிக்கப்படும் அந்த தேர்வு முறை கொட்டாவியை வரவைக்கிறது.

வில்லனை, டைம் மெசினை விட பலசாலியாக பில்டப் செய்தது எதற்காக என்பது விளங்கவில்லை. அவரை சிக்க வைக்கத்தான் ஜெயபிரகாஷ் மூலமாக போலீஸ் கன்னி வைக்கிறது. ஆனால் அந்த சம்பவத்துப் பிறகு சர்வ சாதாரணமாக வெளியில் சுற்றுகிறார்.... ஜவுளிக்கடையில் என்கவுண்டர் செய்கிறார்... காரில் துரத்துகிறார்.

டைம் மெசினை வைத்து எதிர்காலத்துக்கும் பயணிக்க முடியும். அப்படியானால் அந்த ரவுடியால் அந்தக் குடும்பத்துக்கு என்ன ஆகும்... ஒருவேளை திரும்பவும் அவன் என்கவுண்டர் செய்யப்படுவானா என்பதையும் அறிந்துகொள்ள முடியும்தானே..அதையேன் அவர்கள் முயற்சி செய்து பார்க்கவில்லை...(ஒருவேளை டைம் மெசினில் பயணம் செய்பவர் எதிர்காலத்தில் இறக்க நேரிட்டால், திரும்பவும் நிகழ்காலத்திற்கு திரும்ப முடியாது என்பதால் இருக்குமோ..?)

டைம் மெசினை வைத்துக் கொண்டு காணாமல் போன பொருட்களை கண்டுபிடித்துத் தருவதின் மூலம் ஹீரோவும் அவனது நண்பனும் பணம் சம்பாதிப்பதாக காட்டப்படுவது கொஞ்சம் திராபையான கற்பனைதான். வேறு ஏதாவது யோசித்திருக்கலாம். காணாமல் போன இடம், நேரத்தைக் கேட்டுக்கொண்டு, அந்தக் காலகட்டத்திற்குப் போய், அது தவறும் பொழுது எடுத்து ஒளித்து வைத்துவிட்டு, இந்த இடத்தில் உங்கள் பொருள் இருக்கிறது என்று சொல்வார்களாம். எடுத்து ஒளித்து வைக்கும் பொழுது யாரும் பார்க்காமலா இருப்பார்கள்..?  உதாரணமாக, காணாமல் போன குழந்தையை கண்டுபிடித்துத் தரும் காட்சி.. அந்தக் குழந்தை காணாமல் போன காலகட்டத்திற்குச் சென்று அக்குழந்தையை மீட்டு அநாதை இல்லத்தில் சேர்த்துவிட்டு நிகழ் காலத்திற்கு வந்து விடுவார் விஷ்ணு. பிறகு அக்குழந்தையின் பெற்றோர் அங்கு சென்று மீட்டுக் கொள்வார்களாம். அந்த இல்லக் காப்பாளர், 'அந்த ஜோசியக்காரனோட ஒருத்தன் சுத்திகிட்டு இருந்தானே... அவன்தான் வந்து குழந்தையை விட்டுட்டு போனான்..' என சொல்லிவிட்டால், இவர்களே கடத்தி இவர்களே கண்டுபிடித்துத் தருவது போல ஆகாதா..?

இப்படியாக சிலருக்கு நிறைய கேள்விகள் எழலாம்.. டைம் மெசின் என்பதே கற்பனைக் கதாபாத்திரம் என்பதால் நமக்கிருக்கும் சந்தேகங்களை டீலில் விட்டுவிடலாம்.

எப்படிப் பார்த்தாலும் இனி தமிழில் வரப்போகும் பல ' சயின்ஸ் ஃபிக்‌ஷன் ' படங்களுக்கு இந்தப்படம் ஒரு முன்னோடி என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. பொதுவாக டைம் ட்ராவல் கதை என்பதே ஒரு குழப்பமான விசயம்தான். திரைக்கதையும், எடிட்டிங்கும் நேர்த்தியாக இல்லை என்றால் படம் பார்ப்பவர்களை குழப்பமடையச் செய்துவிடும். இதில் இரண்டுமே மிகச்சரியாக அமைந்திருப்பது வெற்றிக்கான அடித்தளம்.

அடுத்தப் படைப்பை இன்னும் நேர்த்தியாகக் கொடுப்பார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது...


12 comments:

  1. வணக்கம்
    விரிவான விளக்கம் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு ரூபன் அவர்களே..

      Delete
  2. பேந்த பேந்த முழிக்க வேண்டிய விசயங்கள் பல உள்ளன... அதையும் சேர்த்து எல்லாத்தையும் டீலில் விட்டுடுங்க... அது தான் நல்லது...!

    ReplyDelete
  3. ஒவ்வொரு விமர்சனத்துக்கும் நீங்கள் எழுதும் முன்னுரை அருமை .எல்லோரும் எழுதும் விமர்சன நடையில் இருந்து மாறுபட்டு எழுதும் உத்தி விமர்சனத்திற்கு சிறப்பு சேர்க்கிறது.
    நேர்த்தியான விமர்சனம்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி பாஸ்..

      Delete
  4. இடைவேளை விடும் போது எனக்கே படத்தின் மீது அதிக ஆர்வம் வந்தது. ஆகா இனி செமையாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் நான் கூட ஸ்டேடஸ் போட்டேன். டைம் மிசன் இருந்தால் இடைவேளை நேரத்தையும் (விழுங்கி) கடந்து படம் பார்க்கலாமே என்ற ஆர்வம் வருகிறது என்று ஆனால் அந்த எதிர்பார்ப்பு பூர்த்தியாகவில்லை. இருந்தும் சுவாரஸ்ய திரைக்கதை படம் பார்க்க வைத்திருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்... சுவாரஸ்யமான திரைக்கதையால் சில குறைகள் அடிபட்டு போயின.. மிக்க நன்றி..

      Delete
  5. அனுபவம் வாய்ந்த தயாரிப்பாளரோடு ராஜன், கருந்தேள் போன்ற தியரிடிகல் ஜாம்பவன்களுடன் இணைந்தது


    haiyo haiyo.comedy

    ReplyDelete
    Replies
    1. ஹி..ஹி... அப்படித்தான் சொல்லிகிறாங்கோ...

      Delete
  6. வெறும் பொழுதுபோக்கிலிருந்து தமிழ் சினிமா நகருமா நகராதா?

    இது சயின்ஸ் பிக்சன் படமா இருப்பது மகிழ்ச்சி

    ReplyDelete
  7. Rehash of "Back to the future" ??

    ReplyDelete