நீரின்றி அமையாது உலகு என்று சொன்னாலும் சொன்னார் வள்ளுவர், தமிழகம் தற்போது தண்ணீருக்காக அண்டை மாநிலங்களிடம் கையேந்தி நிற்கும் சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறது. ஒருவேளை எதிர்கால தமிழகத்தை நினைத்துதான் எழுதியிருப்பார் போலும். தமிழ் நாட்டிற்கு மட்டும் தண்ணீருக்காக ஏன் இப்படியொரு பிரச்சனை?
தமிழ் நாட்டின் தலையாயப் பிரச்சனை காவிரி நீர்ப் பிரச்சனைதான். தமிழகத்தின் நெற்களஞ்சியங்கள் செழிக்க தண்ணீரை வேண்டி இன்றுவரை போராடிக் கொண்டுதான் இருக்கிறோம்.. ஆனால் காவிரிப் பிரச்சனை தற்போது ஒய்ந்து இருப்பது கொஞ்சம் ஆறுதலான விஷயம் .கடந்த நான்கு வருடங்களாக காவிரி டெல்டா பகுதியில் கடுமையான மழை. வெள்ள நிவாரண நிதி வாங்கும் அளவுக்கு நெற்பயிர்கள் நீரில் மூழ்கி கடும் சேதத்தை ஏற்படுத்தியது. விவசாயிகளின் கஷ்டங்களை நினைத்து அந்த வருண பகவானே கண்ணீர் விட்டுக் கதறி அழுதிருக்கிறான் போல!.
காவிரி பிரச்சனைக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. காவிரியாறு, கர்நாடக மாநிலத்திலுள்ள மேற்குதொடர்ச்சி மலையில் உள்ள குடகு மாவட்டத்தைச் சேர்ந்த தலைக்காவேரி என்ற இடத்தில் தோன்றி அங்கிருந்து கிருஷ்ணராஜ சாகர் நீர்த்தேக்கத்தை அடைந்து, பல்வேறு பயன்பாட்டிற்குப்பின் தமிழகத்தின் மேட்டூர் நீர் தேக்கத்தில் வந்து சேர்கிறது. கர்நாடக மக்கள் பயன்படுத்தியப் பிறகு அதன் உபரி நீர் தான் தமிழகத்திற்கு கிடைக்கிறது.
ஆனால் முல்லைப் பெரியாறு உற்பத்தியாவது தமிழ்நாட்டில் உள்ள சிவகிரிமலையில் தான். பிறகு என்ன பிரச்சனை ? தமிழத்தில் உருவானாலும் அதன் நீரோட்டத்தை மேற்கு நோக்கி திருப்பி விட்டானே அங்குதான் இருக்கிறது ஆண்டவனின் சூட்சமம். தமிழர்களின் மீது உனக்கு கூடவா ஓரவஞ்சனை ?
அப்படி என்னதான் பிரச்சனை முல்லைப் பெரியாறு அணையில் ?
அணையின் நீர்மட்டத்தை உயர்த்தவேண்டும் என்று நாம் சொல்ல,இருக்கிற அளவைவிட இன்னும் குறைக்க வேண்டுமென அவர்கள் அடம்பிடித்து இன்னும் ஒரு படி மேலே போய் அணை உடையும் நிலைமையில் உள்ளது அதனால் புது அணை கட்டப்போறோம் என்று எதிவாதம் செய்ய,புது அணை கூடவே கூடாது என்று நாம் மல்லுக்க நிக்க...சற்று குழப்பமடைந்தவர்களுக்கு சிறிய விளக்கம்.
மேற்குத் தொடர்ச்சிமலையில்(சிவகிரி மலை) உருவாகி,மேற்கு நோக்கிப் பாயும் முல்லைப் பெரியாற்றின் அபரிமிதமான நீரோட்டத்தைத் தடுத்து, கிழக்கே(தென் தமிழகத்திற்கு) திருப்பி விடுவதற்காக குறுக்கேக் கட்டப்பட்ட ஒரு தடுப்பு சுவர் தான் இந்த முல்லைப் பெரியாறு அணை. இது நீரியல் விதிப்படிதான் செயல்படுகிறது. மேட்டூர்அணை, கல்லணை போன்று நீரோட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக கட்டப்பட்டது அல்ல. அதன் நீரோட்டத்தைத் திருப்பிவிடுவதற்காக கட்டப்பட்டது. இந்த அணையின் நீர் மட்டம் 104அடி வரும் வரை 'ஒரு சொட்டுத் தண்ணீர்' கூட நமக்குக் கிடைக்காது. இதற்கு மேலே உயரும் போது,திருப்பிவிடப்படும் தண்ணீர் வெட்டப்பட்ட கால்வாய் மூலம் தமிழகத்தின் சுருளி ஆற்றில் கலக்கிறது. இதைக்கருத்தில் கொண்டுதான், 152அடி வரையில் தண்ணீரைத் தேக்கிவைப்பதற்கு ஏதுவாக இந்த அணைக்கட்டப்பட்டது. பிறகு அவர்களின் சூழ்ச்சியால் 136 அடியாகக் குறைக்கப் பட்டது.
தற்போது இதை 120அடியாக மீண்டும் குறைக்கவேண்டும் என்பதுதான் அவர்களின் சுயநலமான வாதம். இதை ஏற்க நீதிமன்றம் மறுத்ததால் அணைக்கு அடியில் நில அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக புரளியைக் கிளப்பி,அணை உடைந்து விடும், இதனால் பாதி கேரளாவே அழிந்து விடும் என்பது போல மாயையை உருவாக்க ஒரு 'டுபாக்கூர்' படத்தை எடுத்து, மக்களைத் தூண்டி விட்டிருக்கிரார்கள்.அதான் புது அணை கட்டித் தருகிறேன் என்கிறார்களே என்று வெகுளியாக கேட்பவரா நீங்கள்?.அப்படியென்றால் அவர்களின் சாதூர்யத்தையும்,சூட்சமயத்தையும் நீங்கள் சரிவர புரிந்து கொள்ளவில்லை என்றுதான் சொல்வேன்.
முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ள இடுக்கியில் சுமார் 50 கிலோமீட்டர் கீழே, 1976ஆம் ஆண்டு கேரளஅரசு மிகப்பெரிய இடுக்கிஅணை யைக் கட்டியது. இது முழுவதுமாக நீர்மின்சக்தியை தயாரிப்பதற்காக கட்டப்பட்ட அணை. இது முல்லைப் பெரியாறு அணையை வேட்டுவைக்க கட்டப்பட்ட அணை என்று அப்போது யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
பெரியாறு அணையின் மொத்த கொள்ளளவே 15.66 டிஎம்சி தான்.அதிலும் சுமார் 10 டிஎம்சியை தான் நாம் பயன்படுத்த முடியும். (104 அடி வரை டெட் ஸ்டோரேஜ் .) ஆனால் இடுக்கி இதைப் போல் 7 மடங்கு பெரியது. கொள்ளளவு 70 டிஎம்சி. ஆனால் "கடை விரித்தேன் கொள்வாரில்லை” என்பது போல் பெரிய அணையைக் கட்டி விட்டார்களே தவிர அது நிரம்பும் வழியாகக் காணோம்.
3 வருடங்கள் பொறுத்துப் பார்த்தார்கள். பெரியாறு அணை வருடாவருடம் நிரம்பிக் கொண்டு இருந்தது. ஆனால் இடுக்கி நிரம்பவே இல்லை.அப்போது அவர்கள் மூளை (??)யில் உதித்தது 'ஒரு தில்லாலங்கடி யோசனை' அதனால் போடப்பட்ட சதித்திட்டம் தான் - பெரியாறு அணைக்கு ஆபத்து என்கிற கூக்குரல்-சுயநலக் குரல். சுண்ணாம்பு அணை உடைந்து விடும். அதிலிருந்து வெளிவரும் நீரால் 35லட்சம் மக்கள் செத்துப்போவார்கள். எனவே உடனடியாக புதிய அணை கட்டுவதே தீர்வு! என்று புதிய திரைக்கதை எழுத ஆரம்பித்தார்கள்.
சரி....புதிய அணையினால் அவர்களுக்கு என்ன லாபம் ? மேலே இருக்கும் பழைய அணையை இடிப்பதால், நீர்பிடிப்பு பகுதியிலிருந்து அத்தனை நீரும் நேராக இடுக்கிக்கு வந்து அதை நிரப்பும். 'சரி நிரம்பட்டுமே. நல்லது தானே ! அதான் தமிழ்நாட்டுக்கு இதே அளவு தண்ணீர் தருகிறேன் என்று சொல்கிறார்களே'என்று மீண்டும் நீங்கள் அப்பாவியானால்......அங்கே தான் இருக்கிறது அவர்கள் சாமர்த்தியம். பெரியாறு அணை இருப்பது கடல் மட்டத்திலிருந்து 2709 முதல் 2861 அடி உயரம் வரை. இதிலிருந்து மலையைக் குடைந்து குகைப்பாதை வழியாக தண்ணீர் தமிழ் நாட்டை நோக்கி கொண்டு வரப்படுகிறது. புதிய அணையை கட்டப்போவது 1853அடி உயரத்தில். இந்த அணை கட்டப்படும் உயரத்திலிருந்து தமிழ் நாட்டிற்கு தண்ணீரைத் திருப்பி விட சாத்தியமே இல்லை.நமக்கு பெரியாறு அணையிலிருந்து நீர் எடுத்து வரும் பாதை இதை விட உயரத்தில் ஆரம்பித்து, ஒரு கிலோ மீட்டர் பயணத்திற்கு பிறகு 5704அடி நீளமுள்ள - மலையைக் குடைந்த குகை வழியாக திசை மாறி சுருளி ஆற்றில் விடப்பட்டு பின்னர் கீழே வைகையில் கலக்கிறது. அணையைக் கட்டியபிறகு, இவர்கள் உண்மையாகவே(??) விரும்பினாலும் நீரைத் திருப்ப முடியாது.மேலும் புதிய அணையிலிருந்து ஆண்டு முழுவதும் நீர்மின்சாரம் உற்பத்தி செய்ய நீரை வெளியேற்றிக் கொண்டே இருக்கப் போகிறார்கள். எனவே அணை எப்போதுமே முழுவதுமாக நிரம்பி இருக்காது.தமிழ் நாட்டிற்கு தண்ணீர் நிச்சயமாக கிடைக்காது. புதிய அணையினால் தமிழ் நாட்டிற்கு பயன் இல்லை.இப்பப் புரியுதா?அவர்களது சுயநலமும் சூட்சமமும்!!!.இதனால் தென் தமிழகம் பாலைவனமாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது.
சரி... தமிழகம் பாலைவனமாகும் என்கிறீர்கள்...ஆனால் அணை உடைந்து பலலட்சம் பேர் மாண்டு போவார்கள் என்று அவர்கள் சொல்கிறார்களே? என்று நீங்கள் வினா எழுப்பும் பட்சத்தில், அதற்கான விளக்கத்தை அளிக்குமுன் முல்லைப் பெரியாறு அணையின் வரலாறு,அது யாருக்குச் சொந்தம் என்பதை முதலில் பார்க்கலாம்.
முல்லைப் பெரியாறு அணையின் வரலாறு :
அணையும் ஆறும் கேரளாவில் உள்ளது.அதில் நமக்கு என்ன உரிமை இருக்கிறது ? என்பதை அறிய அதன் பழைய வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் நமக்கு தெளிவு பெறும்.
17 ஆம் நூற்றாண்டின் முடிவில் தமிழத்தின் தென்பகுதிகளில் கடுமையான வறட்சியும் பஞ்சமும் தலைவிரித்துத் தாண்டவமாட, அப்போதைய ராமநாதபுரத்து அரசருக்கு தோன்றிய யோசனை தான் இதற்கு முதல் வித்து.கேரளாவில் 44வற்றாத ஜீவநதிகள் மேற்கு நோக்கிப்பாய்ந்து வீணாக அரபிக்கடலில் கலந்தது. இதில் முல்லை, பெரியாறு நதிகளை ஒன்றாக இணைத்து அணைகட்டி தண்ணீர் முழுவதையும் மதுரை,ராமநாதபுர பகுதிக்குத் திருப்பிவிட எதாவது சாத்தியக்கூறு இருக்கிறதா என்பதைப்பற்றி ஆராய 1778ஆம் ஆண்டு ஒரு நிபுணர் குழுவை அனுப்பினார். அவர்களும் சாத்தியமே என்று சொல்ல ,பிறகு பண நெருக்கடியால் தற்காலிகமாக கைவிடப்பட்டது.இதில் இன்னொரு முக்கியமான விஷயம்,அன்றைய மதுரை நாடு என்பது மதுரை ராமநாதபுரம், சேலம், திருச்சி, நெல்லை, தேனி மாவட்டங்களும் மற்றும் திருவாங்கூர் சமஸ்தானம் உள்ளடக்கிய பகுதியே ஆகும்
பிறகு 1882 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அறுபது லட்சரூபாயில் தொடங்கப்பட்டதுதான் முல்லைப் பெரியாறு அணை.1887ல் தொடங்கி 1895ஆம் ஆண்டு கர்னல் பென்னி குயிக் என்பவரால் கட்டி முடிக்கப்பட்டது. ('ஓவர் நைட்'ல உலகப் புகழ்ஆயிட்டியேதலைவா!!!! உன் சொத்து பத்து எல்லாத்தையும் வித்துக் கட்டினீயாமே?... பின்ன ஏன் உங்களை துரத்தி விட்டார்கள்?..)
இவரைப்பற்றி இன்னொரு சுவாரஸ்யமான விஷயம்!. இந்த அணை கட்டும் சமயத்தில் இவர் அங்குள்ள மக்களோடு நெருக்கமாக அன்போடு பழகியதால்,இன்று கூட தேனி மாவட்டத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு சிலர் பென்னி குயிக் என்றுதான் பெயர் வைக்கிறார்களாம்.
கர்னல் பென்னி குயிக் தென் தமிழ் நாட்டின் கடவுளாக வணங்கப் படுகிறார்.பொங்கல் முடிந்து மறு நாளில் அவருடைய படத்திற்கு இப்போதும் தேனி மாவட்டங்களில் பூஜை செய்கின்றனர்.இவரைப்பற்றி ஒருநெகிழ்ச்சியான செய்தி..........பென்னிகுயிக் அவர்களின் 6வயது பெண் குழந்தை, கட்டுமான பணியில் வெடி வைத்து பாறையை தகர்க்கும் போது கல் விழுந்து அங்கேயே இறந்து விட்டது. இறந்த மகளை புதைத்து விட்டு கம்பீரத்துடன் கட்டுமான பணியை ஆரம்பித்து விட்டார் அன்று அந்த மாமனிதர் பென்னி குயிக் அவர்கள்.
இந்த அணை கேரளா மாநிலம்,இடுக்கி மாவட்டத்தில் தேவிகுளம், பீளமேடு தாலுக்காவில் உள்ளது.ஆனால் இந்தப் பகுதி கிபி 12 ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனின் கட்டுப்பாட்டிலும் பிறகு சேர மன்னனின் ஆட்சியின் கீழும் இருந்தது. முல்லைப் பெரியாறு அமைந்திருக்கும் இடம் பூஞ்சார் சமஸ்தானம் - பூனையாற்று தம்பிரானுக்குச் சொந்தமானது எனக் கூறப்படுகிறது..இதில் இன்னொரு சுவாரஸ்யம் இவர் ஒரு தமிழர். (A.R.முருகதாஸ் -சூர்யா கவனிக்க......'எட்டாவது அறிவு'க்கு கதை ரெடி )
ஆனால் அப்போதைய ஆங்கிலேய அரசு, இது திருவாங்கூர் சமஸ்தானத்துக்கு சொந்தமானது எனக் கருதி அவர்களுடன் அணை கட்டுமுன் 1886 ஆம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் போட்டுக்கொண்டது. இது ஓன்று தான் நம்மிடம் இருக்கும் ஒரே பிரம்மாஸ்திரம்....அந்த ஒப்பந்தத்தில்,
1. ஒப்பந்தக் காலம் 999 வருடங்கள் .
2. 8000 ஏக்கர் நிலத்திற்கு, ஏக்கருக்கு 5 ரூபாய் வீதம் வருடத்திற்கு ரூபாய் 40,000 அளிக்கப்படும்
3. நிலத்தின் வழியாக வரக்கூடிய அனைத்து நீருக்கும் உரிமை.
4 . அணை மற்றும் பாசனவேலை செய்ய உரிமை.
5 . நீர் பிடி பகுதியில் மீன் பிடிக்க உரிமை,அங்குள்ள கல்,மரம்,செடி அனைத்திற்கும் உரிமை
6. அணை பராமரிப்பு வேலை செய்ய சுமார் 100 ஏக்கர் நிலத்தின் உரிமை
என்று கூறப்பட்டுள்ளது.
( பிறகு ,கேரளாவின் வேண்டுகோளின்படி1970-ம் வருடம் அந்த ஒப்பந்தத்தைத் திருத்தி,ஆண்டிற்கு 5ரூபாய் என்றிருந்த குத்தகைத் தொகையை 30ரூபாய் என்று உயர்த்தப்பட்டது.அணையிலும் அதைச் சார்ந்த நீர்ப்பிடிப்பு மற்றும் குளம் குட்டை போன்ற நீர் நிலைகளிலும் வளரும் மீன்களை பிடிக்கும் உரிமையும் தமிழகத்திடம் இருந்து கேரள எழுதி வாங்கிக் கொண்டது.இது ஒரு தனிக்கதை...)
முல்லை பெரியாரில் தேக்கிவைக்கப்படும் நீர் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு வெட்டப்பட்ட கால்வாய் மூலம் தேக்கடி கொண்டுவரப்பட்டு பின் மேற்குத் தொடர்ச்சி மலையைக் குடைந்து கட்டப்பட்ட குகை (TUNNEL) மூலம் தமிழ்நாட்டுக்கு கொண்டு வரப்பட்டு பின் சுருளி ஆற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் மதுரை, தேனீ, திண்டுக்கல் மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இரண்டு லட்சம் ஹெக்டேர் நிலத்தில் விவசாயம் செய்யப் படுகிறது.
1956ஆம் ஆண்டு மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப் பட்டபோது ,திருவாங்கூர் சமஸ்தானமும்,முல்லைப் பெரியாறு அணையும் கேரளாவோடு சேர்க்கப்பட்டது. தமிழக எல்லை கம்பம் குமிழியோடு முடிவடைந்து விடுகிறது.ஆனால் குமிழியிலிருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் தான் இந்த அணை உள்ளது.இதன் இயக்கமும் பராமரிப்பும் தமிழக பொறியாளர்களால் தான் மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் சுமார் பத்து லட்சம் விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாகவும், அறுபது லட்சம் மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. அணை கட்டி 85வருடமாக எந்த பிரச்சனையும் இல்லை.பிறகு தான் ஆரம்பித்தது இவர்களின திருவிளையாடல்.. அது இடுக்கி அணை கட்டி முடிக்கப்பட்டு சுமார் மூன்றாண்டுக்குப் பிறகு......
இந்த அணை இருக்கும் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதாக மலையாள மனோரமா('ஆச்சி'பேர வச்சுகிட்டு சூழ்ச்சி பண்றீங்களே) பத்திரிகை 1979ஆம் ஆண்டு ஒரு பீதியைக் கிளப்புகிறது.பிறகு தமிழக அரசு இந்த அணையைப் பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டது.பல்வேறு புதிய தொழில்நுட்பங்களுடன் 1981ல் ஆரம்பிக்கப்பட்டு 1994ஆம் ஆண்டுவரை இந்த அணை புதுப்பிக்கப்பட்டது.ஆனால் அணைப் புதிப்பிக்கப்பட்டால் மீண்டும் 152 அடிக்கே தண்ணீர் உயர்த்தப்படநேரிடலாம் என்று, முடியும் தருவாயில் அவர்கள் பிரச்சனை செய்ய, கடைசியில் இது உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
இந்த அணை இருக்கும் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதாக மலையாள மனோரமா('ஆச்சி'பேர வச்சுகிட்டு சூழ்ச்சி பண்றீங்களே) பத்திரிகை 1979ஆம் ஆண்டு ஒரு பீதியைக் கிளப்புகிறது.பிறகு தமிழக அரசு இந்த அணையைப் பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டது.பல்வேறு புதிய தொழில்நுட்பங்களுடன் 1981ல் ஆரம்பிக்கப்பட்டு 1994ஆம் ஆண்டுவரை இந்த அணை புதுப்பிக்கப்பட்டது.ஆனால் அணைப் புதிப்பிக்கப்பட்டால் மீண்டும் 152 அடிக்கே தண்ணீர் உயர்த்தப்படநேரிடலாம் என்று, முடியும் தருவாயில் அவர்கள் பிரச்சனை செய்ய, கடைசியில் இது உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
2000ஆவது ஆண்டு சுப்ரீம் கோர்ட் நிபுணர் குழுவை அமைத்தது. பல்வேறு சோதனைக்குப் பின் தன் அறிக்கையை இந்தக்குழு சமர்ப்பித்தது. உச்ச நீதி மன்றம் 27 -02 -2006 அன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்ப்பை அளித்தது.அது கண்ணீரோடு காத்திருந்த நம் மக்களின் வாயில் கற்கண்டைப் போட்ட மாதிரி இருந்தது.
அந்தத் தீர்ப்பில்,
. தமிழக அரசு நீரின் மட்டத்தினை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம்.
. இந்த அணை புதுப்பிக்கும் பணி முடியும் வரையில் யாரும் எந்த இடையூறும் செய்யக் கூடாது.
. மேலும் இந்த அணை புதிப்பிக்கப்பட்டவுடன்,இதன் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்திக்கொள்ளவும் அனுமதி.
என்று தெரிவிக்க...விடுவார்களா?...உடனே கேரள சட்டமன்றத்தைக் கூட்டி, கேரளாவில் உள்ள 22அணைகளின் கொள்ளளவை தீர்மானிக்கும் அதிகாரம் கேரள அரசுக்குத்தான் உள்ளது,இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றதுடன்,இதில் முதல் அணையாக முல்லைப்பெரியாறு அணையைச் சேர்த்து ஒரு சட்டம் இயற்றினார்கள்.இது உச்சநீதிமன்ற தீர்ப்பையே கேலிக்கூத்தாக்கிய விஷயம்தான்.
இதற்குப்பிறகு ஒவ்வொரு ஆட்சி மாற்றத்தின்போதும் இரு மாநிலங்களும்,பேச்சுவார்த்தை -நிபுணர் குழு -உச்ச நீதிமன்றம் என்று பிரச்சனை நீண்டு கொண்டேதான் செல்கிறது.
அணையின் நம்பகத்தன்மை
“116 வருட சுண்ணாம்பு அணை – இன்னும் எவ்வளவு நாள் தாங்கும் ? இந்த அணையின் அடியில் நில அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது,இது உடைந்தால் கேரளாவின் ஒரு பகுதியே அழிந்துவிடும் என்ற புரளியை நம்புகிறவர்களுக்கு, அணையின் உறுதியைப் பற்றி சில தகவல்கள்........
கேரளா சொல்வது போல் இது வெறும் சுண்ணாம்பு அணை அல்ல. ஏற்கெனவேயே முதல் தடவையாக 1933ல் 40டன் சிமெண்ட் கலவை சுவரில் துளையிட்டு உள்ளே செலுத்தப்பட்டது. மீண்டும் 1960ல் 500டன் சிமெண்ட் உள் செலுத்தப்பட்டது. 2000ஆவது ஆண்டு சுப்ரீம் கோர்ட்சென்ற பிறகு நிபுணர் குழுவின் ஆலோசனைப்படி லேடஸ்ட் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, கேபிள் ஆன்கரிங் முறையில் அணையுள் கான்க்ரீட் கலவை செலுத்தப்பட்டது. வெளிப்புறமாக - ஒரு கவசம் போல், கிட்டத்தட்ட புது அணையே போல், கான்க்ரீட் போடப்பட்டு, ஒரு புத்தம்புதிய கான்க்ரீட் அணையே உருவாக்கப்பட்டு விட்டது. இந்த அணை, நீரின் அழுத்தம்,நில அதிர்வு ஆகியவற்றைத் தன் எடையால் தாங்கும் ஒரு புவிஈர்ப்பு அணை (Gravity Dam ). இந்த RCC கான்க்ரீட்டால் சுமார் 12,000டன் இதன் எடை கூட்டப்பட்டுள்ளது.சுமார் 150வருடம் பழமை வாய்ந்த கரிகாற்சோழன் கட்டிய கல்லணையே இப்போதும் கம்பீரமாகத்தான் காட்சி அளிக்கிறது. அதனால் முல்லைப் பெரியாறு அணை உடைவதற்கு சாத்தியமே இல்லை.
முதலாவதாக, பெரியாறு அணை உடைந்தால் தண்ணீர் மலைப் பள்ளத்தாக்குகள் வழியாகப் பாய்ந்து,நேராக கீழே உள்ள இடுக்கி அணையைத் தான் வந்தடையும். பெரியாறு அணையிலிருந்து அதன் முழு நீரும் (10 டிஎம்சி) ஒரே நேரத்தில் வெளியேறினாலும், நேராக அதைப்போல் 7 மடங்கு கொள்ளளவு உடைய இடுக்கி அணையைத் தான் வந்தடைய போகிறது. இடையில் எந்த நாடு, நகரமும் இல்லை. வாதத்திற்காக இடுக்கி அணை ஏற்கெனவே நிரம்பி இருந்தாலும்,வெளியேறும் நீர் பெரியாறு அணை யிலிருந்து இடுக்கி வந்து சேர 4மணி நேரம் ஆகும்.அதற்குள்ளாக இடுக்கியிலிருந்து தேவையான நீரை வெளியேற்றி விட முடியும்! எனவே வெள்ளத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்கிற பேச்சே அபத்தமானது.
கேரள அரசின் பித்தலாட்டங்கள்
அணையும் தமிழ் நாட்டிற்கு சொந்தமானது. அதை நிர்வகிப்பதும் தமிழ் நாடு தான். ஆனால் இடம் மட்டும் கேரளாவிற்கு சொந்தம். அதிகாரம் செலுத்துவதும் அவர்களே !
அணைக்குஆபத்து-புதியஅணை கட்ட வேண்டும் என்று பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கிறார்கள்.பிரதமரை போய்ப் பார்க்கிறார்கள். உண்ணாவிரதம் இருக்கிறார்கள். பந்த் நடத்துகிறார்கள். இப்போதைக்கு அவர்கள் குரல் தான் பலமாகக் கேட்கிறது.
தமிழகத்துக்குத் தண்ணீர் தருவோம் என்று ஒருபுறம் கூறும் கேரள அரசு நீதியரசர் ஆனந்த் தலைமையிலான உயர்மட்டக் குழுவிடம் செப்டம்பர் மாதம் அளித்துள்ள மனுவின் 37-ம் பக்கத்தில் "முல்லைப் பெரியாறு ஆறு கேரளத்துக்கு மட்டுமே சொந்தமானது ஆகும். இது இரு மாநிலங்களுக்கு இடையே ஓடும் ஆறு அல்ல. எனவே, அந்த ஆற்று நீரில் தமிழகம் உரிமை கோர முடியாது'' என்றும், அந்த அறிக்கையின் 23-ம் பக்கத்தில் ""தமிழகத்துக்குத் தண்ணீர் தருவது என்பது கிடைக்கும் நீரின் அளவைப் பொறுத்தது ஆகும்''என்று தன் வஞ்சகத்தன்மையை அள்ளித்தெளித்துள்ளது. அதாவது கர்நாடக அணைகளில் தண்ணீரைத் தேக்கி வைத்துக்கொண்டு நமக்கு உரிமையான நீரை கர்நாடகம் எப்படித் தர மறுக்கிறதோ அதைப்போல கேரளமும் எதிர்காலத்தில் செய்யும் என்பதுதான் இதன் உட்கருத்து.
திருவாங்கூர் சமஸ்தானமாக இருந்த போது அதில் குமரி மாவட்டம் இணைந்திருந்தது. அப்போது நெய்யாறு என்ற ஆற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டது.இந்த அணையின் இடதுபுற கால்வாயின் மூலம் திருவாங்கூர் பகுதிக்கு 19,100ஏக்கர் நிலத்துக்குப் பாசன வசதி அளிக்கப்பட்டது. இதில் 9,200 ஏக்கர் நிலம் 1956-ம் ஆண்டு குமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்ட போது தமிழகத்தின் பகுதியாயிற்று. ஆனால்,இது தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக இந்த நிலத்துக்கு அளிக்க வேண்டிய நீரைத் தர கேரள அரசு பிடிவாதமாக மறுக்கிறது.இந்தக் கேரளமா புதிய அணைகட்டி பெரியாற்று நீரை நமக்குத் தரப்போகிறது?
முல்லைப் பெரியாறு பிரச்னையை தற்போது கேரள அரசியல்வாதிகள் கையில் எடுப்பதற்கான காரணம் என்ன ?.
அரசியல் எனும் சாக்கடை சகதியில் புரளுபவர்களில் அவர்கள் மட்டும் என்ன விதிவிலக்கா?
அரசியல் எனும் சாக்கடை சகதியில் புரளுபவர்களில் அவர்கள் மட்டும் என்ன விதிவிலக்கா?
பொதுவாகவே இந்தியாவில் இடைத்தேர்தல் என்றால் ஏதோ இடையில் ஒரு தேர்தல் என்றுதான் எண்ணுவோம்.ஆனால் கேரளாவில் அடுத்து நடக்கப்போகும் இடைத்தேர்தல்,ஆளும் காங்கிரஸ் தலைமையிலான UDF க்கும் CPM தலைமையிலான LDF இடதுசாரிகளுக்கும் வாழ்வா சாவா போட்டி !!
140 இடங்களைக்கொண்ட கேரள சட்டமன்றத்தில், தற்போது UDF(காங்கிரஸ்)ல்- 71 MLA வும், இடது சாரிகளிடம் 68 MLA வும் உள்ளனர். சட்டமன்றத்தில் ஏதேனும் ஒரு வாக்கெடுப்பு என்றால்...இதில் ஆளும் கட்சியின் சட்டசபைத் தலைவர் ஒருவர் போக காங்கிரஸ் கூட்டணியின் ஓட்டு பலம் இப்போது 70 என்றாகிறது அல்லவா..?
வரக்கூடிய இடைத்தேர்தலில் ஒருவேளை காங்கிரஸ் தோற்றுவிட்டால், இடதுசாரிகளின் பலம் சட்டமன்றத்தில் 69ஆகிவிடும். ஆளும் கூட்டணியில் யாராவது ஒருத்தர் லீவு போட்டாலும் எதிரணியினர் சமபலம் பெற்றுவிடுவார்கள். அதனால் எப்படியும் இந்த இடைத்தேர்தலில் ஜெயித்தே ஆகவேண்டும் என்ற இக்கட்டான நிலையில் இருக்கிறார் கேரள முதல்வர் உம்மண் சாண்டி. DAM-999 படத்தில் "அணை உடைந்தால் கேரளாவின் ஒரு பகுதியே கடலில் மூழ்கி அழிந்துவிடும்"என்று எந்தப்பகுதியை காட்டி மக்களை பயமுறுத்துகிறார்களோ அந்த பகுதியில் தான் இந்த இடைத்தேர்தல் நடைபெறும் பிரவோம் (PIRAVOM) தொகுதியும் இருக்கிறது.
கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்காக எப்படி ஒக்கேனக்கல் பிரச்சனை அரசியலாக்கப்பட்டு, 'எடியுரப்பா' நமக்கு 'இடையுரப்பா'வாக மாறினாரோ (மனுஷன் இப்ப ஊழல் வழக்குல மாட்டி,"குருவாயுரப்பா,புள்ளையாரப்பா என்னக்காப்பாத்துப்பா"னு புலம்பிகிட்டிருக்கிறார் )அதேபோல் இந்த உம்மன் சண்டி முல்லைப் பெரியாறு பிரச்சனையக் கையில் எடுத்திருக்கிறார்.
இந்தியா ஜனநாயக நாடுதான் . உலகில் நம் அளவுக்கு வேறு எவரும் சுதந்திரக் காற்றை சுவாசிப்பது கிடையாது. நம் தேசத்தில் மண்,மலை, வனம்,நீர்,ஆறு உட்பட அனைத்துமே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தான். எந்தஒரு மாநிலஅரசும் தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது.மத்தியில் ஆட்சியில் இருப்பது எப்போதும் தேசியக் கட்சிதான் அல்லது அவர்களின் ஆதரவில்.இதில் எந்த மாநிலத்துக்கும் சாதகமாக முடிவு எடுக்க முடியாது .ஒரு கண்ணில் வெண்ணையும் மறுகண்ணில் சுண்ணாம்பையும் வைக்க முடியாது. இதை மக்களும் அறிவர்.
ஆனால் என்று இது அரசியல்வாதிகளின் கையில் அகப்பட்டதோ அன்று ஆரம்பித்ததுதான் மக்களிடையே பகை உணர்வு. தன் அரசியல் சுய லாபத்துக்காக மக்களைத் தூண்டிவிட்டு அந்தச்சூட்டில் குளிர்காய நினைக்கிறார்கள்.
தமிழத்தில் அனைத்துக்கட்சிகளும் இந்தப் பிரச்சனைக்காக கடுமையாக போராடிவரும் நிலையில்,காங்கிரசும் மார்க்சிஸ்ட்களும் மௌனம் சாதிக்கிறார்கள்.அவர்களுக்கு தமிழக அரசியலை விட தேசிய அரசியல் ரொம்ப முக்கியம் போல.(நேற்று (18 -12 -2011 )நம் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ,'கேரள அரசு இடைத் தேர்தலுக்காகத்தான் இப்படி பிரச்சனை செய்கிறது என்று உண்மையை உளறிவிட்டு, இன்று 'நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை அது வேற வாய்,இது நாற வாய்'னு டகால்டி அடிக்கிறார்.)
மற்ற மாநிலத்தினரைவிட மலையாளிகள் நம்மோடு சகோதர உணர்வோடு பழகக் கூடியவர்கள் தான்.வெளிநாட்டில் வாழும் தமிழர்களும் மலையாளிகளும் 'நாம்இந்தியர்கள்' என்ற ஒரே உணர்வோடு தான் பழகுகிறார்கள். கேரளாவின் பெரும்பாலான எல்லைப் பகுதி தமிழ் நாட்டை ஒட்டியே வருகிறது. தொழில், விவசாயம், வியாபாரம், சினிமா உள்பட அனைத்திலுமே இருவருக்குள்ளும் ஒரு பரஸ்பர புரிந்துணர்வு உண்டு. தெற்கே குமரியும் வடக்கே அம்பத்தூரும் 'குட்டிக் கேரளா' என்றுதான் சொல்கிறார்கள். டீகடை சேட்டாவும், இட்லிக்கடை நாயரும் இன்றும் நமக்கு நண்பர்கள்தான். அங்குள்ள நயன்தாராக்களும்,அசின்களும் இங்கு வந்துதான் கொடிகட்டிப்பறக்கிறார்கள்.... ('அதுக்குதான் உங்க ஊரு 'ஷகீலா'வ அனுப்பி இங்குள்ள மொத்த சூப்பர் ஸ்டார்களையும் காலி பண்ணிடீங்களே' னு ஒரு குரல் அங்கிருந்து கேட்குது ....)
ஆனால்இன்று....கேரள எல்லையிலே நம் பஸ் தடுத்து நிறுத்தப்படுகிறது. மீறினால், அதன் கண்ணாடி அடித்து உடைக்கப்படுகிறது. அய்யப்பனுக்கு இருமுடி கட்டிச் சென்றவர்களுக்கு அங்கே தடியடி அபிஷேகம் நடக்கிறது. கூழித்தொழிலாளர்கள் அடித்து விரட்டப் படுகிறார்கள்.
இங்கே அவர்களது .'.பைனான்ஸ்கம்பெனி, ஜுவல்லர்ஸ் கடை,ஹோட்டல் என்று தேடிப்பிடித்து அடிக்கிறார்கள்.கேரளாவை நோக்கி ஆயிரம் பேர் சென்ற பேரணி பின்பு பத்தாயிரமாகி... இப்போது லட்சத்தை தாண்டுகிறது. போதாக்குறைக்கு 'இடுக்கி' மாவட்டத்தை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என கிடுக்கிபிடி போடுகிறார்கள்.
அரசியல்வாதிகள் எல்லோரும் 'ஆண்டிகள்'தான் (முழுசாக்கேளுங்க.)....சும்மாக் கிடக்கும் சங்கை ஊதிக்கெடுப்பார்கள்................
நேசத்தோடு பழகிய இருவர்களது நெஞ்சிலும் நஞ்சை கலந்து விட்டார்கள் நயவஞ்சகக்காரர்கள்... நாசமாப் போவார்கள் (ஒரு .'.ப்ளோவுல வந்திடுச்சி விடுங்க..)
நேசத்தோடு பழகிய இருவர்களது நெஞ்சிலும் நஞ்சை கலந்து விட்டார்கள் நயவஞ்சகக்காரர்கள்... நாசமாப் போவார்கள் (ஒரு .'.ப்ளோவுல வந்திடுச்சி விடுங்க..)
-----------------------(((((((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))))))))))))))-------------------------
hello,unga katturai romba nalla irrunthathu.periyar dam pattri periya story super.nan padiththa varai unga katturai best.vazhthugal.
ReplyDeleteABISHEK.AKI...
நண்பர் அபிஷேக் கு மிகவும் நன்றி..... உங்கள் பாராட்டும் ,ஊக்குவிப்பும்தான் எனது உற்சாகமும் உந்துதலும் ..
ReplyDeleteமுல்லைப் பெரியாறு ,பென்னி குக் பற்றிய தகவல் அருமை.நீங்கள் சொல்வதுபோல் இவ்வளவு பிரச்சனைக்கும் இந்த அரசியல்வாதிகள் தான் காரணம்.
ReplyDelete''அரசியல் எனும் சாக்கடை சகதியில் புரளுபவர்களில் அவர்கள் மட்டும் என்ன விதிவிலக்கா?''
இது உண்மை