Friday 23 January 2015

'ஐ' திரைப்படம் திருநங்கைகளுக்கு எதிரானதா..?

(ஒரு முன் எச்சரிக்கை..:இந்தக் கட்டுரையில் 'சமூகம் ' என்கிற வார்த்தை ஆங்காங்கே வருவதால் அறச்சீற்றம் அடையாமல் அதைக் கடந்து செல்லுமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.)


'ஐ' திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும்தான் மந்தம். வெளிநாடுகளில் செம ரெஸ்பான்ஸ். ஐந்தாவது நாள் குடும்பத்துடன் சென்றேன். எனக்கு இரண்டாவது முறை. அம்மணியின் வற்புறுத்தல் வேறு. தவிரவும் எனது விமர்சனத்தில் ' விக்ரமின் உழைப்புக்காக இருமுறை பார்க்கலாம் ' என்று எழுதியிருந்தேன். எழுதிய நானே பார்க்காமல் போனால் எப்படி..? 'எனக்கு நானே தண்டனை'  திட்டத்தில் தியேட்டரில் இரண்டு முறை பார்த்த படம் இதுவாகத்தான் இருக்கும். 

ஆங்கிலப் படங்களைக் காட்டிலும் இரண்டு மடங்கு கட்டணம் வசூலித்தாலும், ஹவுஸ்புல்..!. ஆனால்.., படம் முடிந்து வீடு வரும் வரை கடும் அர்ச்சனை. ' ஒன்னுமே இல்லாத கதையை மூணு மணி நேரம் இழுத்து சோதிச்சிட்டாங்களே..' என்று அம்மணி புலம்பியதைக்கூட சட்டை செய்யவில்லை. ஆனால்  ' ஆம்பள இதுக்கு எவ்வளவோ பராவாயில்லை ' என்று சொன்தைத்தான் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை...!

போகட்டும்..சொல்ல வந்த விஷயம் வேறு.

'ஐ' படத்தில் திருநங்கை காதாபாத்திரம் மூலம் அச்சமூகத்தை கேவல
ப்படுத்தி விட்டார்கள் என்று மூன்றாம் பாலினத்தவர்களான திருநங்கை சமூகத்திடமிருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இந்தவாரம் புதுப்படம் எதுவும் இங்கே ரிலீஸ் ஆகாததால் வேறுவழியில்லாமல் இந்தப் பிரச்சனையைக் கொஞ்சம் கிளறி இந்தவார போஸ்டை தேத்திவிடலாம் என்று கம்பெனி முடிவு செய்திருக்கிறது.

இப்பிரச்சனையை முதலில் கிளப்பியது பேஸ்புக்கில் பலரால் அறியப்பட்ட 'லிவிங் ஸ்மைல் வித்யா' என்கிற திருநங்கை. அவருடைய பதிவில் இயக்குனர் ஷங்கரை கடுமையாக சாடிவிட்டு, ஐ படத்திற்கு விமர்சனம் எழுதியவர்களையும் குட்டு வைத்திருந்தார். 

"படத்திற்கு இணையத்தில் விமர்சனம் எழுதியவர்கள் எவரும் அதைக் கண்டிக்கவில்லை, ஒருவர் ' நயன்'தாரா கூட ஒரு வில்லன் என எழுதியிருந்தார் "என்று அவர் குறிப்பிட்டதைப் படித்த பொழுது எனக்கு 'சுருக்' கென்றது. அந்த ' நயன் 'தாரா என்கிற வார்த்தையை என் விமர்சனத்தில் பயன்படுத்தி இருந்தேன். ஒருவேளை என்னைத் தான் சொல்கிறாரோ என்கிற குற்ற உணர்வு என்னைக் குடைந்தது. நானே ஏதோ அமெச்சூர்தனமாக சினிமாப் பற்றிய அடிப்படை அறிவு எதுவுமில்லாமல், எண்ணத்தில் தோன்றியதைக் கிறுக்கிக் கொண்டிருக்கிறேன். அது எப்படி இவர் கண்ணில் பட்டிருக்கும். உண்மையிலேயே அவர் குறிப்பிட்டது என்னைத்தான் என்றால் அப்படி நான் எழுதியதற்காக என்னை 'மன்னிச்சு.......'

ஏனெனில் வலி, வேதனை எல்லாம் பாதிக்கப் பட்டவர்களுக்குத்தான். வெளியிலிருந்து ரசிக்கும் நமக்கு அது வெறும் நகைச்சுவை. நானும் அப்படித்தான் ரசித்தேன். ' நயன் 'தாரா என்கிற வர்ணனை அப்படத்தில் சந்தானத்தின் திருவாயால் உதிர்க்கப்பட்டது. அதை அப்படியே எனது விமர்சனத்தில் பயன்படுத்திவிட்டேன். என்ன செய்வது FDFS விமர்சனம் எழுதும்பொழுது இதுபோன்ற சவால்(!)களை எதிர்கொள்ளத்தான் வேண்டும்.

இந்தச் சர்ச்சையைத் தொடர்ந்து அவர்கள் பொதுவாக முன்வைக்கும் குற்றச்சாட்டு என்னவென்றால் தமிழ் சினிமாவில் தொடர்ந்து திருநங்கை சமூகத்தை கீழ்த்தரமாக சித்தரித்து வருகிறார்கள், உதாரணமாக பொட்டை என்கிற வார்த்தை..!

எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது. பொட்டை என்கிற வார்த்தை திருநங்கைகளையா குறிக்கிறது...? கிராமப்புறங்களில் பெண் குழந்தை பிறந்தால் ' பொட்டப் புள்ள பொறந்திருக்கு' என்பார்கள். பொட்டை என்பது பெண் சமூகத்தை குறிக்கும் ஓர் வட்டாரச்சொல். 'வாடிப் பொட்டப் புள்ள வெளியே..' என்று வடிவேல் பாடுவது திருநங்கையைப் பார்த்து அல்ல. கோவை சரளா என்கிற பெண்ணைப் பார்த்து.

ஆண் இனம் வீரம் நிறைந்தது போலவும், பெண் இனம் பயந்த சுபாவம் உடையது போலவும் ஏற்கனவே பொதுப்புத்தியில் நமது முன்னோர்கள் பதியவைத்து சென்றிருக்கிறார்கள். அதற்கு மாறாக பயந்த சுபாவம் கொண்ட ஆண் யாராவது இருந்தால் அவனை ' பொட்டை ' என்று கிராமப் புறங்களில் பகடி செய்வார்கள். சண்டைக்கு பயந்த ஒருவனை, ' பொட்ட போல பயப்படுறாண்டா...' என்று நண்பர்கள் கேலி பேசுவார்கள். இந்த இடத்தில் பொட்டை என்கிற வார்த்தை திருநங்கையைக் குறிக்க சொல்லவில்லை. அவர்களைக் குறிக்க நிறைய வார்த்தைகள் கிராமப்புறங்களில் இருக்கிறது.

ஆதலால், பெண் தன்மையுள்ள ஆண் என்பதற்கும், பயந்த சுபாவம் உடைய ஆண் என்பதற்கும் வேறுபாடுகள் நிறைய இருக்கிறது. முன்னால் சொல்லப்பட்டது திருநங்கை. பின்னால் சொன்னது 'பொட்டை'.  தவிரவும், திருநங்கைகள் பயந்த சுபாவம் உடையவர்களா என்ன..? பிறகு எதற்கு பொட்டை என்கிற வார்த்தைக்கு 'பேட்டன்ட் ரைட்' எல்லாம் எடுக்கிறார்கள்...? கிட்டத்தட்ட இதே அர்த்தத்தில் சொங்கி, சோப்ளாங்கி ,சப்பை போன்ற வார்த்தைகள் கூட கிராமப் புறங்களில் பயன்படுத்தப் படுகிறது. இதற்கும் ஒட்டுமொத்த 'ரைட்ஸ்' எடுப்பார்கள் போலும்...

மற்றொரு குற்றச்சாட்டு, ஓரினச் சேர்க்கையாளர்களை தவறாகக் காண்பித்து நக்கல் செய்கிறார்கள்... அதற்கு வேட்டையாடு விளையாடு படத்தை இழுக்கிறார்கள். தெரியாமத்தான் கேட்கிறேன். ஒரு பால் ஈர்ப்பினருக்கும் திருநங்கைகளுக்கும் என்ன சம்மந்தம்..?.

பள்ளிப் பருவத்தில் தவறான நட்புகளினால் ஓரினச்சேர்க்கையில் சிலர் ஈடுபடுவதுண்டு. பிறகு வாலிபப் பருவத்தை அடைந்தவுடன் பெரும்பான்மையானவர்கள் அதை விட்டுவிடுவார்கள். அப்போதும் விடமுடியாத வர்கள் திருமணத்திற்குப் பின் தகுந்த கவுன்சலிங் மூலம் ஓரினச்சேர்க்கை பழக்கத்திலிருந்து விடுபட்டு தாம்பத்திய வாழ்க்கைக்கு செல்வதாக சேலம் சித்த வைத்திய டாக்டர் டிவியில் தோன்றி சொல்வதைக் கேட்டிருக்கிறோம். அவர்களுக்கும் திருநங்கைகளுக்கும் என்ன சம்மந்தம்..? திருநங்கைகள் எல்லோரும் ஓரினச்சேர்கையாளர்கள் கிடையாது. ஓரினச் சேர்க்கையாளர்கள் எல்லோரும் திருநங்கைகளும் கிடையாது.


அடுத்து ஐ படத்திற்கு வருவோம்.

இந்தப் படம் தொடர்பாக அவர்கள் முன்வைக்கும் அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் நான் உடன்படுகிறேன். காரணம் மிகத் தெளிவானது.

படத்தில் மொத்தம் ஐந்து வில்லன்கள். அதில் ஒருவராக திருநங்கையை இயக்குனர் தேர்ந்தெடுத்ததில் எந்த தவறும் இல்லை. ஆனால் மற்ற நான்கு பேரும் எப்படி வில்லனாகிப் போனார்கள் என்பதற்கு தர்க்க ரீதியான காரணங்களை  இயக்குனர் சொல்லியிருக்கிறார்.அதில் ஒரு நியாயமிருப்பதை நாமும் ஏற்றுக்கொள்கிறோம்.

ஆனால் மேக்கப் ஆர்டிஸ்டாக வரும் ஒரு திருநங்கை, வில்லனாக மாறியதற்கு இயக்குனர் வைத்திருக்கும் காரணம் 'காம வெறி' . நன்றாகக் கவனியுங்கள் காதல் வெறியல்ல.. காம வெறி. அதற்கான குறியீடுகளை அவர் அறிமுகமாகும் முதல் காட்சியிலிருந்தே வைத்திருப்பார் இயக்குனர். " கொய்ட் இன்டரஸ்டிங் " என்று ஒஜாஸ் ரஜானி விக்ரமை பார்க்கும் முதல் பார்வையிலேயே அவ்வளவு காமத்தைப் பதிவு செய்திருப்பார். அவர் விக்ரமோடு நெருங்கும் அத்தனைக் காட்சிகளிலும் காமம்தான் துருத்திக்கொண்டு இருக்குமே தவிர, துளி கூட காதல் இருக்காது.

விக்ரமைத் தடவுவது, முத்தமிடுவது , வலுக்கட்டாயமாக படுக்கைக்கு அழைப்பது என்று ஆபாசமாகவே காட்சிப்படுத்திய இயக்குனர் ஒரு காட்சியில் வக்கிரத்தின் உச்சிக்கு சென்றிருப்பார். விக்ரம் மீது எமி வைத்திருந்த காதல் உண்மையானதல்ல, தான் வைத்திருக்கும் (காம)காதலே உண்மையானது என்பதை ஒஜாஸ் சொல்லும் போது, தட்டில் இருக்கும் 'ஹாட் டாக்' கை எடுத்து அவர் லாவகமாக கடிப்பது போன்ற காட்சியை வைத்திருப்பார். எவ்வளவு வக்கிரமான சிந்தனை இயக்குனர் ஷங்கருக்கு. ஏன் திருநங்கைகளின் மனதில் காதலே அரும்பாதா..?

இவ்வளவும் செய்துவிட்டு கடைசியில், " என் லவ்வ இன்சல்ட் பண்ணினியில்ல.. என் ட்ரூ லவ் உனக்கு அருவருப்பா இருந்துச்சு இல்ல" என அவர் சொல்வது போல டயலாக் வைத்திருப்பார்.

இதன்மூலம், விக்ரம் போன்ற புஜபல பராக்கிரம இளைஞன் எப்படி ஒரு திருநங்கையுடன் உடலுறவில் ஈடுபடமுடியும் என்கிற கேள்வி, படம் பார்க்கும் சாமானிய ரசிகர்களின் மனதில் எழுந்து, அவர் மீது, குறிப்பாக அவர் சார்ந்த சமூகத்தின் மீது வெறுப்பு வரக் காரணமாக இருக்காதா...?.  ஏன் ஆரம்பத்தில் இயல்பாகப் பழகி பிறகு விக்ரம் மீது காதல்(காமமல்ல) கொள்வது போல காட்சியமைத்தால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்களா..? இங்கே இயக்குனரின் நோக்கம் ஒரு திருநங்கையின் காதலைப் புனிதப் படுத்துவதல்ல. கொச்சைப் படுத்துவது...!  வக்கிரமாகக் காண்பிப்பது..!.

ஷங்கரின் படங்களைத் தொடர்ந்து பார்த்து வந்தால் ஒரு உண்மைப் புரியும். ஆபாசத்திற்கும் கவர்ச்சிக்கும் இடையேயான வித்தியாசத்தை உணராதவர் ஷங்கர். கவர்ச்சியான காட்சி என்று வக்கிரத்தைத் திணிப்பவர். ஜென்டில்மேன் படத்தில் சுபஸ்ரீ முறுக்கு பிழியும் போது கவுண்டருக்கு ஒரு டபுள் மீனிங் டயலாக் வைத்திருப்பார். படத்தின் மற்ற பகுதிகள் சிறப்பாக அமைந்ததால் இதை யாரும் பெரிதாக கண்டுகொள்ள வில்லை. காதலன் படத்தில் நக்மா தடுக்கி விழுவது போல ஒரு சீன். அவரை பிரபுதேவா தாங்கிப் பிடிக்க வேண்டும். மலையாளப் பிட்டுப் படத்தில் கூட இப்படி ஒரு கற்பனை செய்திருக்க மாட்டார்கள். இவற்றின் ஒட்டுமொத்த உச்சமாகத்தான் பாய்ஸ் படம் அமைந்தது. அதில் சூடுபட்டவர் திரும்பவும் காமெடி என்ற பெயரில் வக்கிரத்தை கையில் எடுத்திருக்கிறார்.

இதில் சில அரவேக்காடுகள் கேள்வி எழுப்புகிறது. இதற்கு முன் பிரகாஷ்ராஜ், லிவிங்க்ஸ்டன் போன்றவர்கள் திருநங்கையாக நடிக்க வில்லையா..? அப்போது வராத எதிர்ப்பு இப்போது மட்டும் ஏன் வருகிறது. அட லூசுகளா... பிரகாஷ்ராஜும்,லிவிங்க்ஸ்டனும் என்ன வேடம் போட்டு நடித்தாலும் அதில் அந்த நடிகர்கள்தான் தெரிவார்களே தவிர அவர்களின் கேரக்டர்கள் தெரியாது.இன்னும் புரியும்படி சொல்கிறேன்.அதே பிரகாஷ்ராஜ் ஒரு பெண் வேடத்தில் நடிக்கிறார். படம் முழுக்க சிகரெட், தண்ணி அடிக்கிறார் என வைத்துக் கொள்வோம். இன்னொரு படத்தில் உண்மையான கதாநாயகியே படம் முழுக்க அவர் செய்ததையே செய்கிறார் என வைத்துக் கொண்டால், இந்தச் சமூகம் எந்தப் படத்திற்கு எதிராக பொங்கும்...? ஒரு ஆணை திருநங்கையாக நடிக்க வைப்பதற்கும், ஒரு திருநங்கையையே  நடிக்க வைத்து அவர்கள் மூலமாக அச்சமூகத்தைக் கேவலப் படுத்துவதற்கும் வித்தியாசம் நிறைய இருக்கிறது.


ஒரு படத்தின் கதாநாயகன் என்பவன் ஒட்டுமொத்த ஆண் சமூகத்தின் பிரதிநிதியல்ல. சமூகத்தில் ஒருவன். அதே போல் கதாநாயகி என்பவள் ஒட்டுமொத்த பெண் சமூகத்தின் பிரதிநிதியல்ல. அவளும் இச்சமூகத்தில் ஒருத்தி. இவர்களைக் கொச்சைப் படுத்தினால், பாதிப்பு தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு மட்டும்தானே ஒழிய அவர்கள் சார்ந்த ஒட்டுமொத்த சமூகத்துக்கு அல்ல.. ஆனால் ஒடுக்கப்பட்ட , ஒதுக்கப்பட்ட சமூகத்திலிருந்து, இனத்திலிருந்து ஒருவரைத் தேர்ந்தெடுத்து சினிமா போன்ற ஒரு பவர்புல் மீடியத்தில் வைத்து வக்கிரமாக காட்சிப்படுத்தினால் அது அச்சமூகத்தையே கொச்சைப் படுத்தியது போல் ஒரு பிம்பத்தை ஏற்படுத்திவிடும் என்கிற அடிப்படை உண்மை கூடவா இத்தனை வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குனர் ஷங்கருக்குத் தெரியாது..?

ஒடுக்கப்பட்ட தலித் சமூகத்தினரை சினிமாவில் கொச்சைப்படுத்திவிட்டு, நாங்கள் கவுண்டர்களைக் கூடத்தான் கலாய்த்திருக்கிறோம் என்று வியாக்கியானம் பேசமுடியுமா..?  அதை எவ்வளவு சென்சிடிவாகப் பார்க்கிறோமோ அதே அளவு திருநங்கைகளைக் காட்சிப்படுத்தும் போதும் கவனம் வேண்டாமா..?

இன்னும் ஒருசிலர் ரயிலில் செல்லும்போது எங்களை தொந்தரவு செய்தார்கள், மிரட்டி பணம் வாங்கினார்கள். அதனால் அப்படி காண்பித்ததில் தவறு இல்லை என்கிறார்கள். இது ஒன்றும் திருநங்கைகளைப் பற்றிய ஆவணப் படம் கிடையாது. அவர்களின் அகம்,புறம், பிளஸ் ,மைனஸ் எல்லாவற்றையும் சொல்வதற்கு. ஒட்டுமொத்த தமிழ் உலகமே பார்க்கும் கமர்சியல் படம். இந்தப் படத்தின் மூலம் அச்சமூகத்தின் மீது தவறான ஒரு அபிப்ராயம் உருவாகுகிறது என்றால் அதற்கான விலையை படைப்பாளி என்கிற வகையில் இயக்குனர் ஷங்கர் கொடுத்தே ஆகவேண்டும்.அதற்கு திருநங்கைகள் போராட்டத்தை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும்.  


21 comments:

  1. கவிதா என்பவர் இது குறித்து ஒரு தெளிவான பதிவு எழுதியிருக்கிறார். படித்துப்பார்க்கவும். எனது கருத்தும் அதுவே.

    http://kavithavinpaarvaiyil.blogspot.in/2015/01/blog-post_22.html

    இப்படியெல்லாம் கிளர்ச்சி செய்ய ,ஆரம்பித்தால் பிறகு படங்களில் எதையுமே குறியீடாகத்தான் காண்பிக்க முடியும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி காரிகன் .அந்தப் பதிவை தற்பொழுதுதான் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். தெளிவான பதிலை அடுத்த பதிவில் சொல்கிறேன்

      Delete
  2. அடேங்கப்பா...! இது பெரிய சவால் தான்...! ஹிஹி...

    கம்பெனி விளக்கமாகவே விவரித்து உள்ளது...

    ReplyDelete
  3. sema sema.. innum nalla usupeathi vidunga..DOCTORS ungala thappa kati irukanga so porratam panunga.. GIRLS ungala romba sexy ah kati irukanga poratam panunga, MODELS unga profession pathi thappa peasi irukanaga poratam panunga...

    vera innum ena iruku sir.. neenga solrathu crtu.. unga block la neenga oru movie pathi kurai solringa antha rights yaru kudutha? keata karuthu sudandiram nu solringa.. unga karutha oru 10000 mem padipanaga.. avanag athe pola ninachikalama?

    same as oru director movie eadukurar athu avanga sudandiram.. ippadi ellathuku patha..tho ANEGAN ku salaavi thzilalar poratam panuranga.. next ellarum panunga..tamil cinema ah eaduka kudathu.....

    sir innum nalla usupeathi vidunga

    ReplyDelete
    Replies
    1. நான் உசுப்பேத்தி விடுறேனா.. ஒரு சமூகத்தின் வலியைத்தான் இங்கே பதிவு செய்திருக்கிறேன்.

      Delete
    2. chill sir.. SAMUGAM na avanga marttum thana?????

      Delete
    3. மன்னிக்கவும் .அதற்கு(சமூகம்) முன்னால் ஒடுக்கப்பட்ட, சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட , இறைவானால் வஞ்சிக்கப் பட்ட இன்னும் என்னவெல்லாம் வலிமிகுந்த வார்த்தைகள் இருக்கிறதோ எல்லாவற்றையும் போட்டுக் கொள்ளுங்கள் . இன்னும் தெளிவாக அடுத்தப் பதிவில் எழுதியிருக்கிறேன் .

      Delete
    4. hello sir.., yeah i read ur recent post.. nanum avargalai mathikuren.. enaku job kidachathum oru thirunangai kite blessings vangi iruka..bcoz avanga bless panina nallathe nadakum.. nanum avargali thappaga sola villai. avargalai nan eppothum mathipen... but ippadiye ellarum paninal movie edauka mudiyathe..athu than en point... thappa irunthalum thats my opinion .......

      Delete
  4. திருநங்கையினை இவ்விதம் காட்டியிருக்க வேண்டியதில்லை என்பதே என் கருத்தும் நண்பரே

    ReplyDelete
  5. Replies
    1. மிக்க நன்றி சார்..

      Delete
  6. வணக்கம் நண்பரே, இதுபோல் தெளிவாக எழுதப் பொறுமையில்லாமால் சகோதரி வித்யா எழுதியதையே மறுபதிவு செய்திருந்தேன் என் தளத்தில். அருமையான அலசல் நண்பரே. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி சார்... திருநங்கைகளை பகடி செய்தால் ஆர்வமுடன் நிறைய பேர் படிப்பார்கள். ஆனால் அவர்கள் பக்கம் உள்ள நியாயங்களை ஒத்துக்கொள்ள உங்களைப் போல் சிலர் இருப்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

      Delete
  7. தொட்டால் தொடரும் விமர்சனம் என்ன ஆச்சு?

    ReplyDelete
    Replies
    1. தல.. போஸ்டர் ஒட்டியிருக்காங்க.. ஆனால் படம்தான் ரிலீஸ் ஆகல... தயாரிப்பாளர் வேறு சிங்கப்பூர் வாசியாம். திருட்டு விசிடியில பாத்துக்கோங்கனு சொல்றாங்க போல..

      Delete
  8. சினிமாவில் நல்ல விதமாகவும் காட்டுவார்கள் ,கெட்டவிதமாகவும் காட்டுவார்கள் ,இதெல்லாம் ஒரு பிரச்சினையா ?கற்பனைதானே ?
    த ம 4

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார்.... அதை ஒரு கற்பனை என்று பார்த்தால் பிரச்சனையே இல்லையே.. அதைவைத்து அச்சமூகத்தை பகடி செய்வதுதான் பிரச்சனையே

      Delete
  9. இப்படி மாறி மாறி அலசி ஆராய்வதை வாசிக்க வாசிக்க படம் அறவே பிடிக்காமல் போகிறது. உங்களின் விளக்கம் அருமை சகோ.

    ReplyDelete