Friday, 1 March 2013

உண்மையான காவிரி நாயகன்...!



1990 ஆம் ஆண்டு என நினைக்கிறேன்..மத்தியில் வி.பி சிங் பிரதமராகவும் தமிழகத்தில் கலைஞர் முதல்வராகவும் இருந்த காலகட்டம்.அப்போதிருந்த வி.பி.சிங் அமைச்சவையில் திமுகவும் இடம் பெற்றிருந்தது.

நடுநிலைப் பள்ளிப் பருவம்.மனித சங்கிலி போராட்டம் என்றால் என்னவென்பதை
அப்போதுதான் முதன் முதலில் அறிந்து கொண்டேன்.ரோட்டோரங்களில் அவ்வப்போது மேடைபோட்டு முழங்கும் செஞ்சட்டை தோழர்கள் சிலமுறை சொல்லக் கேட்டிருக்கிறேன்.சங்கிலியின் இருபுறங்களையும் பிடித்துக் கொண்டு போராட்டம் நடத்துவார்களோ என அதற்கு முன்பு வரை நினைத்துக் கொண்டிருந்தேன்.

சிறுவர்கள்,பெரியவர்கள்,பெண்கள்,சாதி, மதம், கட்சி என எந்தவித பாகுபா
டுமின்றி எல்லோரும் ஒன்றாகக் கூடியது அந்தத் தருணத்தில்தான்.அதற்குக் காரணமில்லாமல் இல்லை.எங்களின் ஒரே வாழ்வாதாரமான விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்காமல் காவிரி டெல்டா விவாசாயிகள் கொஞ்சம் கொஞ்சமாக வறுமையின் பிடியில் சிக்கிக்கொண்டிருந்தனர்.

விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாகவும்,காவிரி தண்ணீர் கிடைத்தால் மட்டுமே எங்கள் பகுதிகளில் வாழும் விவசாயத் தொழிலாளிகள் வயிறு பாதியாவது நிரம்பும் நிலையிலிருந்த மோசமான சூழ்நிலை. நிலத்தடி நீரைப் பயன்படுத்த ' போர்செட் பம்புகள்' கூட அரிதாகத்தான் இருந்தது.இப்போதிருந்த தொழில் வளர்ச்சியும், வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ள நகரத்தை நோக்கி நகரும் முயற்சியும் அவ்வளவாக கிடையாது.

விளைநிலங்களை விலை நிலங்களாக மாற்றி ' பிளாட்' போடும் வியாபார சூட்சமம் யாருக்கும் அப்போது தெரிந்திருக்கவில்லை.எல்லாவற்றிற்கும் விவசாயத் தொழில் மட்டுமே ஒரேத் தீர்வாக இருந்தது.ஆனால் விவசாயத்தின் பிரதான மூலதனமான தண்ணீர்.....? 

 கம்யுனிஸ்ட் தோழர்களின் தொடர் போராட்டங்கள்...மாறி மாறி ஆட்சியமைத்த திராவிடக் கட்சிகளும் அவர்களோடு ஒட்டிக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியும் இதைப் பெரிதாகக் கண்டுகொள்ளவுமில்லை.50 ஆண்டுகளுக்கு மேலான பிரச்சனை,எங்கே தீர்வு கிடைக்கப் போகிறது என்று சோர்ந்து போயிருந்த எம் மக்களின் கண்களில் நம்பிக்கை ஒளியைக் காட்டியது காவிரி நடுவர் மன்றம்.

காவிரி டெல்டா பகுதிகளைப் பார்வையிடுவதற்காக வந்த நடுவர் மன்றக் குழுவினரின் கவனத்தை   ஈர்ப்பதற்காகத்தான் அப்போது அப்படியொரு மனித சங்கிலி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அப்போது தஞ்சை,நாகை,திருவாரூர் மாவட்டங்கள் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டமாக இருந்தது.அவர்கள் பார்வையிட வந்த அனைத்து பகுதிகளிலும் மனித சங்கிலி அறப்போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.

நாங்கள் வசிக்கும் திருவாரூர்- திருத்துறைப்பூண்டி சாலை சுமார் 25 கிலோமீட்டர்.காலையிலிருந்தே சாலைகளில் குவிந்து விட்டோம்.இதற்கான ஒருங்கிணைப்பை அந்தந்த ஊர் கிராம அலுவலர்கள் பொறுப்பெடுத்துக் கொண்டனர்.தொலை
த்தொடர்பு வசதி அவ்வளவாக இல்லாத காரணத்தால் எப்போது வருவார்கள் என தெரிந்துகொள்ள முடியவில்லை.பத்து நிமிடத்திற்கு ஒரு முறை , " இதோ புறப்பட்டு விட்டார்கள்...இன்னும் பத்து நிமிடத்தில் வந்து விடுவார்கள்..." என கட்சிக் கொடி பறந்த காரில் அறிவித்துக் கொண்டே சென்றனர்.

சுமார் மூன்று மணிநேர காத்திருப்புக்குப் பின் வந்தார்கள்.முழுவதும் கறுப்புக் கண்ணாடியால் மூடப்பட்ட ஐந்தாறு ஏசி கார்கள்  மின்னல் வேகத்தில் வந்தது. எங்களின் வாழ்வாதாரத்தைக் காக்க வந்த கடவுளாக அவர்கள் தெரிந்தனர்.ஒவ்வொருவரும் அருகிலிருந்தவரின் கைகளை இறுகப்பற்றிக் கொண்டோம்.நெஞ்சில் உள்ள வலிகளை தங்களில் கைகளை அழுத்திக் கோர்ப்பதில் வெளிக்காட்டினர் எங்கள் விவசாயத் தோழர்கள்.

அன்று மாலை செய்திதாள்களில் நடுவர்மன்றக் குழு அளித்தப் பேட்டி வெளியானது. ' இது மனித சங்கிலியல்ல...மனித சுவர்கள்..' என வர்ணித்திருந்தனர்.உலகத்திலேயே மிகப்பெரிய மனித சங்கிலி போராட்டமாக அப்போது ஆச்சர்யமாகப் பேசப்பட்டது.வறட்சியால் வெடித்துப் போயிருந்த விளைநிலங்களைப் பார்த்தபோது எங்கள் இதயமும் வெடித்துப் போனது என வேதனையுடன் பேட்டியளித்திருந்தனர்.அதுவே டெல்டா பகுதி விவசாயிகளுக்கு நீதி கிடைத்த சந்தோசத்தை அப்போது அளித்தது. 

1991 ஆம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு 205 டி.எம்.சி. தண்ணீர் தர வேண்டுமென்று ஒரு இடைக்கால ஆணையை நடுவர் மன்றம் வழங்கியது. அது வரண்டு போயிருந்த விவசாயிகளின் வயிற்றில் பாலை வார்த்தது போலிருந்தது.

அறுவடைக்குத் தயாராக வகை தொகையில்லாமல் வெளைஞ்சு கிடக்குது எங்கள் வயல்...(படம்..நானே..)

ஆனால் அதை கர்நாடகம் கொடுக்க மறுக்க அதிலிருந்து போராட்டங்கள்.. உண்ணாவிரதங்கள்...அரசியல் நாடகங்கள் என அரங்கேறிக்கொண்டே இருந்தது.முழுமையான நீதி கிடைக்க எந்த கட்சியுமே மத்திய அரசுக்கு போதுமான அழுத்தங்கள் கொடுக்கவில்லை.தமிழக கட்சிகளின் தயவை மத்திய அரசு எதிர்நோக்கியிருந்த காலகட்டங்களிலும் தன் சொந்தத் தேவைகளை அந்தக் கட்சிகள் நிறைவேற்றிக் கொண்டதேத் தவிர,காவிரி விசயத்தில் ரெண்டாம் பட்சமாகவே நடந்துக் கொண்டது.

தற்போது நடுவர் மன்ற தீர்ப்பு தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக வந்தது.நீதிபதி என்.பி. சிங் தலைமையிலான நடுவர் மன்றம் தற்போது வழங்கியுள்ள தீர்ப்பில் காவிரியின் மொத்த நீர் 740 டி.எம்.சி. என கணக்கிடப்பட்டு அதில் தமிழ்நாட்டுக்கு மட்டும்  419 டி.எம்.சி. வழங்கவேண்டும் என கூறியிருக்கிறது.
 

 இந்தத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட மத்திய காங்கிரஸ் அரசு தயங்கிக் கொண்டிருக்க, உச்ச நீதிமன்றம் கொடுத்த கடும் நெருக்கடியால் வேறு வழியில்லாமல் மத்தியஅரசு இதை கெசட்டில் பதித்தது. காவிரி நதிநீர் வழக்கில் இது மிகப்பெரிய வரலாற்று நிகழ்வு...!

ஆனால் ' காக்கா உட்கார பனம்பழம் விழுந்த ' கதையாக இதை தமிழகத்தின் ஆளுங்கட்சி கொண்டாடுவது மிகவும் வேடிக்கையாக உள்ளது.ஜெயலலிதாவின் ஒரு பக்க அறிக்கையில் " எனது ஆணையின்படி..என் உத்தரவு படி..நான் பெற்றுத்தந்தேன்." என ஆறேழ இடங்களில் குறிப்பிடும் அளவுக்கு இந்த வெற்றியை தனதாக்கிக் கொள்ளும் பதட்டம் அவரிடம் தெரிகிறது.
 

காவிரி நடுவர் மன்றம் அமைத்தபோது ஒவ்வொரு டெல்டா விவசாயியின் வாயில் உச்சரிக்கப்பட்ட ஒரே பெயர் வி.பி.சிங் தான்.இரண்டு மாநிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனை என்று ஒவ்வொரு அரசும் மெத்தனமாக இருக்க,தீர்ப்பு ஒரு மாநிலத்திற்குதான் சாதகமாக வரும் என தெரிந்தே தைரியமாக நடுவர் மன்றத்தை அமைத்தவர் வி.பி.சிங். இவ்வளவுக்கும் அவர் சார்ந்த ஜனதா தளம் அப்போது கர்நாடகத்தில் மிகப்பெரிய சக்தியாக இருந்தது.

இன்று தமிழக விவசாயிகளுக்கு கிடைத்த இந்த நீதிக்கு யார் காரணம் என்று தஞ்சை,திருவாரூர்,நாகை மாவட்ட விவசாயிகளிடம் கேட்டுப் பாருங்கள்.ஒருமித்தக் குரலில் சொல்வார்கள் ' உண்மையான காவிரி நாயகன் வி.பி.சிங் ' தான் என்று...! 



வணக்கங்களுடன்......
மணிமாறன். 
-------------------------------------------------((((((((((((((((((()))))))))))))))))))))---------------------------------------------------

4 comments:

  1. நல்ல நினைவூட்டல். எப்படியோ கெசட்டில் வெளிட்டாகி விட்டது. இதானல் பெரிய மாற்றம் வந்துவிடும் என்ற நம்பிக்கை எனக்கில்லை.

    ReplyDelete
  2. பொறுத்திருந்து பார்ப்போம்... நன்றி...

    ReplyDelete
  3. //சங்கிலியின் இருபுறங்களையும் பிடித்துக் கொண்டு போராட்டம் நடத்துவார்களோ// ஹா ஹா நானும் அப்படியே

    இதற்க்கு பின் இவ்வளவு பெரிய கதை இருக்கிறதா

    ReplyDelete
  4. நண்பர்கள் T.N.MURALIDHARAN,திண்டுக்கல் தனபாலன்,சீனு.....பின்னூடத்திற்கு மிக்க நன்றி..

    ReplyDelete