Saturday 8 November 2014

ஒரு ஊர்ல ரெண்டு கூஜா

க்சுவலா என்ன நடந்திருக்கும் என்றால், இயக்குநர் ஆர்.கண்ணன் கிண்டி அல்லது அம்பத்தூர் இன்டஸ்டிரியல் எஸ்டேட் பக்கமா போயிருப்பார் . அங்கே யாரோ ஒருத்தர் அழுக்கு சட்டையோடு சொறிபிடித்த கையோடு எதிரில் வந்திருப்பார். என்ன ஆச்சு.. எங்க வேலை பாக்குறீங்க என கேட்டிருப்பார் . அதற்கு அவர் பிளேட்டிங் பன்ற கம்பெனியில வேலை பார்க்கிறேன் என்று சொல்லியிருப்பார் . அப்படி என்றால் உன் கரங்கள் சொறிபிடிக்க காரணம் அந்த பிளேட்டிங் ப்ராசஸ் தானா.. இது போதும் எனக்கு. இதை வச்சு கதையை டெவலப் பண்ணி சமூகத்தில மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்துறேன் பார் என்று கிளம்பி கடைசியில் நம்மை வெறிபிடிக்க வைத்திருக்கார் இயக்குநர் .

'ஒரு ஊர்ல ரெண்டு ராஜா' என்கிற டைட்டிலுக்கு கீழே விமலும் சூரியும் கைக்கோர்த்து போஸ் கொடுக்கும் போதே உசாராயிருக்கணும். அதில் ரெண்டாவது ராஜா சூரியாகத்தான் இருக்கும் என்கிற டவுட் மைல்டா ஆரம்பத்திலேயே இருக்கத்தான் செய்தது. ஏற்கனவே பட்டையை கெளப்பனும் பாண்டியாவில் சட்டையைக் கிழிக்காத குறையாக வெளியே வந்த அனுபவம் இருந்தாலும், போஸ்டரின் மொத்தப் பிரதேசத்தையும்  பிரியா ஆனந்தின் மத்திய பிரதேசம் கவர் பண்ணியிருந்ததால் அதைப்பற்றியெல்லாம் யோசிக்க நேரமில்லை.

ஒரு ஹீரோவுக்கு இணையாக சூரியை களமிறக்கும் அளவுக்கு தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டதா என்ன ..? வடிவேலுவும் சந்தானமும் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று அடம்பிடித்து தொலைவதனால் என்னவோ கூட்டத்தோடு வருபவர்கள் எல்லாம் சோலோ காமெடி பண்ணுவதை பார்த்து தொலைக்க வேண்டியிருக்கிறது. வடிவேல்,சந்தானம் அளவுக்கு படத்தின் மொத்த காமெடியையும் சுமக்கும் அளவுக்கு சூரி எல்லாம் ஒர்த் கிடையாதுய்யா.. அதிலும் அவர் பேசுவது மதுரை பாசையாம்( யார் சொன்னா..? பூஜை படத்தில் அவரே சொல்லிக்கொள்வார்). கஞ்சா கருப்பு அளவுக்கு கூட பேசவரவில்லை. நகைச்சுவை நடிகர்களுக்கு பாடி லாங்குவேஜ் மிக முக்கியம். அல்லது டைமிங் காமடியாவது வரவேண்டும். எதுவேமே இல்லாமல் எந்த தைரியத்தில் இதுபோன்ற காமெடியன்களை நம்பி களம் இறங்குகிறார்களோ தெரியவில்லை..

தூத்துக்குடி மாவட்டம், மணப்பாடு கிராமத்தில் சமகால தமிழ் சினிமாவின் டெம்பிளேட்  வெட்டி ஆபிசர்களாக விமலும் சூரியும். சூரியின் காதலியை ரயிலில் கடத்திக்கொண்டு செல்ல விமலும் சூரியும் திட்டம் போடுகிறார்கள். கடைசியில் கடத்தல் கைகூடாமல் இருவர் மட்டும் ரயிலில் தப்பிக்கிறார்கள். டாக்டரான பிரியா ஆனந்தை ரயில் பயணத்தில் சந்தித்து காதல் கொள்கிறார் விமல். எதிர்பாராத விதமாக பிரியா ஆனந்தை ஒருவன் கொல்ல முயற்சிக்க, விமல் அவரைக் காப்பாற்றுகிறார்.

அவன் எதற்காக கொல்ல வந்தான் என்பது பிளாஸ்பேக்காக விரிகிறது. மருத்துவ முகாமிற்காக கிராமத்திற்கு செல்லும் டாக்டர் பிரியா ஆனந்த், அவரது தோழி வேலைபார்க்கும் ஸ்டீல் இண்டஸ்ட்ரியில் போதுமான பாதுகாப்பு, தற்காப்பு வசதிகள் இல்லாமல் அங்கு வேலைபார்ப்பவர்கள் ஒவ்வொருவராக நோய் தாக்கி இறந்து போகின்றனர் என்பதை கண்டறிகிறார். அதில் உச்சமாக தன் தோழியே அத்தொழிற்சாலையில் நடக்கும் விபத்து ஒன்றில் இறந்துவிட வெகுண்டெழுகிறார் பிரியா ஆனந்த். தனி மனுசியாக அனைத்து ஆதாரங்களையும் திரட்டி அத்தொழிற்சாலையின் முதலாளி நாசருக்கு எதிராக வழக்கு தொடுக்கிறார். இறுதியில் யார் வென்றார்கள்...தொழிலாளிகளுக்கு நீதி கிடைத்ததா ... என்பதே முடிவு.  

ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை படங்களை இயக்கியவரா இந்த கண்ணன்...? இரண்டு படங்களிலும் சந்தானம் காமெடி செமையாக ஒர்க் அவுட் ஆகியிருக்குமே.. ஏன் இந்தப் படத்தில் இப்படியொரு வறட்சி..? காட்சியமைப்பு, வசனம், நடிப்பு எதிலுமே காமெடி எடுபடவில்லை சாரே.. அதிலும் முதல் பாதி முழுவதும் சூரியை நம்பியே நகர்கிறது .அவர் முகத்திலோ காமடிக்கான எந்த ரியாக்சனையும் காணோம். இவர் காமெடியாக எதையாவது முயற்சி பண்ணும்போது சும்மா இருடா என்று அதையும் தடுத்து விடுகிறார் விமல். தம்பி ராமையா , சிங்கமுத்து இருந்தும் கூட காமெடிப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

இந்தப்படத்தில் இயக்குனர் சொல்ல வந்த விஷயம் என்னவோ சமூக அக்கறை நிறைந்ததுதான். ஆனால் அதை எப்படி சொல்வது என்பதில்தான் குழம்பியிருக்கிறார். தொழிற்சாலையால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு, மாசுபடும் சுற்றுச்சூழல் இவைகளைப் பற்றிப் பேச நம் கண் முன்னே கூடங்குளம் அணுமின் நிலையம் என்கிற உயிர்ப்பறிக்கும் உதாரணம் இருக்கிறதே. மீத்தேன் எதிர்ப்பு அரசியலை விட அணுமின் எதிர்ப்பு பல மடங்கு வீரியம் உள்ள விசயமாச்சே..

அதைவிட்டுவிட்டு ஸ்டீல் ரோல் மில்லை காண்பிக்கிறார்கள் . நாலைந்து துருப்பிடித்த லேத் மெசினை காண்பிக்கிறார்கள். அதில் எதிலும் நம்பகத் தன்மை இல்லை. துருப்பிடித்த ஒரு மேனுவல் லேத் மெசின் கோடி ரூபாய்க்கு மேல் மதிப்பு என்கிறார்கள். பிரியா ஆனந்தின் தோழியின் கை ஒரு பழைய லேத் மெசினுள் மாட்டிக் கொள்கிறது. உடனே பிரியா ஆனந்து அந்த மெசினை உடைத்து எடுங்கள் என்கிறார். உடைப்பதற்கு எங்களுக்கு அனுமதி இல்லை. ஒவ்வொன்றாக கழட்டித்தான் எடுக்க முடியும் என்கிறார் மேனேஜர். ஏனுங்க உடைத்தெடுப்பதற்கு  அது என்ன மரத்திலேயா செய்திருக்கிறார்கள்...?

கெமிக்கல் பாக்டரியினால் மனித குலத்திற்கு ஏற்படும் பாதிப்பைப் பற்றி பேச முயன்றிருக்கிறார்கள். போபால் விசவாயு தாக்குதல்களை எல்லாம் அலசுபவர்கள் அதேப்போல் ரசாயன சம்மந்தப்பட்ட விசயங்களை அலசியிருந்தால் இன்னும் வீரியமாக இருந்திருக்கும். அதைவிடுத்து உலோகங்களுக்கு எவர்சில்வர் முலாம் பூசும் குரோம் பிளேட்டிங்-கை ஏதோ அணுஉலை அளவுக்கு சீரியசாக காண்பித்திருப்பது ஏற்கமுடியவில்லை.

சில வகை தொழிற்சாலைகளில் இயந்திர சப்தங்களை தவிர்க்கவே முடியாது. அப்படிப்பட்ட சூழல் உள்ள இடங்களில் அதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள சில பாதுகாப்பு சாதங்களை அணிந்துகொள்ள தொழிலாளர்கள் கட்டாயப் படுத்தப்படுவார்கள். இங்கு அதைப்பற்றிப் பேசக் காணோம். முதலில் ஸ்டீல் ரோல் மில்லைக் காண்பித்து விட்டு கடைசியில் CNC லேத் மெசினைக் காண்பிக்கிறார்கள். அப்படியானால் ஸ்டீல்ரோல் இண்டஸ்ட்ரியே இருக்கக்கூடாதா..? இப்படி தொழிற்சாலைகளைப் பற்றி அடிப்படை புரிதலும் அறிவும் இல்லாமல் எப்படி இந்த சப்ஜெக்ட்டுக்குள் நுழைந்தார்களோ தெரியவில்லை.

கதைக்கருவில் கோட்டைவிட்டாலும் திரைக்கதையிலாவது புதுமை புகுத்தி சுவாரஸ்யப் படுத்தியிருக்கலாம். விறுவிறுப்பே இல்லாமல் நகர்கிறது அடுத்தடுத்த காட்சிகள். இவ்வளவு சொத்தையான கூலிப்படையை இந்தப் படத்தில்தான் பார்க்கிறேன். அவர்கள் பிரியா ஆனந்தை மிரட்டும்போது சிரிப்புதான் வருகிறது.ஸ்டன்ட் சில்வா கூட ஆரம்பத்தில் அதிரடியாக அறிமுகமாகி கடைசியில் சப்பையாகிவிடுகிறார்.


பிரியா ஆனந்தை இந்தப் படத்தில் செம அழகாக காட்டியிருப்பது இவ்வளவு ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு. அவரது தோழியுடன் கருப்புப் பாவாடை தாவணியில் கடல் தண்ணீரில் போடும் ஆட்டம் ஜூப்பரு. அதேப்போல் குக்குரு குக்குரு பாடல். லட்சுமிமேனன் குரலில் செம கிக் ஆட்டம் அது.

அது சரி ரெண்டு ராஜான்னாங்களே..அது யாரு...? பிரியா ஆனந்தை காப்பாற்றுகிறேன் என்று சொல்லிவிட்டு ஒவ்வொரு காட்சியிலும் பயந்து சாகிறார் ஹீரோ விமல். ஸ்டன்ட் சில்வாவிடம் மாறி மாறி அடிவாங்கு கிறார்கள் விமலும் சூரியும். கூலிப்படைக்கு பயந்து ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். பேசாம ஒரு ஊர்ல ரெண்டு கூஜான்னு பெயர் வைத்திருக்கலாம். 


12 comments:

  1. முடிவில் சொன்னது சரி தான்...

    ReplyDelete
  2. ஹா ஹா... கொலையா கொன்னுட்டாங்களா? மத்தியப்பிரதேசத்தை நம்பி ஏமாந்துட்டீங்களே.... அடிக்கடி அடி வாங்கினதில நான் முக்கியமான படங்களை மட்டம் பாக்கிறதுன்னு முடிவு பண்ணியிருக்கேன்....

    ReplyDelete
    Replies
    1. ஹா...ஹா.. எப்பவோ ஒருதடவ பாக்குற எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது..? நன்றி ஸ்பை

      Delete
  3. செம விமர்சனம் அண்ணே

    ReplyDelete
  4. ஊத்திக்கிச்சா... விமர்சனம் அருமை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி பரிவை' சே.குமார்

      Delete
  5. இந்தப் பேரு நல்லாருக்கே!

    ReplyDelete
    Replies

    1. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சார்..

      Delete
  6. நேத்துப் பாக்க(ஓசியில்)கெடைச்சுது.போதும்டா சாமி ன்னு ஆயிடுச்சு.கிளுகிளுப்பு..............அச்சா,அச்சா.....ஹி!ஹி!!ஹீ!!!

    ReplyDelete
    Replies
    1. ஹி..ஹி.. அத ஓசியில் கூட பாக்க முடியாது பாஸ்... :-)

      Delete