Monday 17 November 2014

விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களா தலித் சமூகத்தினர்...?


சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டின் புரட்சி கார்டூனிஸ்ட் என்று தன்னைத்தானே மெச்சிக்கொண்டு இணைய ரவுடியாக வலம்வரும் கார்டூனிஸ்ட் பாலா என்பவர் விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் அவர்கள் கலைஞரின் காலைப் பிடித்துத் தொங்குவது போல கார்ட்டூன் ஒன்றை வரைந்திருந்தார்...

இங்கு 'இணைய ரவுடி' என்கிற பதத்தை எதற்காக பயன்படுத்தியிருக்கிறேன் என்பது  அவரின் பேஸ்புக் டைம்லைனோடு தொடர்பில் இருப்பவர்களுக்கு நன்றாகத் தெரியும்.  பேஸ்புக் உள்ளிட்ட இணைய சமூக ஊடகங்களில் அரசியல் தலைவர்களை நக்கடித்து நிறைய நிலைத்தகவல்கள், போர்ட்டூன்கள், கார்ட்டூன்கள் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது. அது இணையம் உருவாக்கிக் கொடுத்திருக்கும் கட்டற்ற எழுத்து சுதந்திரத்தின் வெளிப்பாடு.  

வெளிநாட்டில் இருந்துகொண்டு தன் சுய விவரங்கள் எதையும் வெளிப்படுத்தாத இணையப் போராளிகள்  இதில் கைத்தேர்ந்தவர்கள். இந்திய அரசியல் தலைவர்களை 'மிக மிக நாகரிகமான' முறையில் அவர்கள் விமர்சிக்கும் முறை, எதையும் கண்டுக்கொள்ளாமல் கடந்து செல்லும் நம்மையே சில நேரங்களில் சூடேற்றிவிடும். அவர்களுக்கென்று தனி கூட்டமே இருக்கும். " நெத்தியடி... அருமை நண்பரே... எவ்வளவு கழுவி ஊத்தினாலும் அவங்களுக்கு புத்தி வராது தலைவா ...." இது மாதிரி கமெண்டுகள் பொங்கி வழியும். சரி நம் தரப்பு நியாயங்களை சொல்லலாம் என்று சில நாகரிகமான எதிர்வினைகளை மேற்கொண்டால் அவ்வளவுதான். ஏழு தலைமுறையை இழுத்து திட்டுவார்கள். அந்தக் கூட்டமும் நம்மை சூழ்ந்து கொள்ளும். அதையும் சமாளித்துத் தொடர்ந்தால் உடனே நம்மை பிளாக் செய்து விடுவார்கள். எதிர்கருத்துகளை ஏற்றுக்கொள்ள, சகித்துக்கொள்ளத் தயங்கும் அவ்வகையான இணையப் போராளிகளுக்கு கொஞ்சமும் சளைத்தவரில்லை இந்த கார்டூனிஸ்ட் பாலா .

தமிழ் பேஸ்புக்கை பொறுத்த வரையில் அதிகம் பேரை பிளாக் செய்தவர்களில் முதலில் இருப்பவர் இந்த பாலாவாகத்தான் இருக்கும். பிளாக் செய்யப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் நியாயமான எதிர்கருத்துகளை நாகரிகமான முறையில் மேற்கொண்டவர்கள். பிளாக் செய்யப்பட பிறகு " இதைத்தான் பாலாவிடம் கேட்டேன்.. உடனே என்னை பிளாக் செய்துவிட்டார்.." என்று பலர் நிலைத்தகவல் பதிந்ததை ஆரம்பத்திலிருந்து பேஸ்புக்கை கவனித்து வருபவர்கள் உணரமுடியும். அவர் பணிபுரியும் ஊடகத்துறையைச் சார்ந்தவர்களும் அந்த பிளாக் லிஸ்டில் உள்ளடக்கம் என்பது பாலாவின் நேர்மைக்கு மற்றொரு சான்று.

ஊடக செய்தி வடிவங்களில் கார்ட்டூன் மிகப் பலம் வாய்ந்தது. நூறு பேர் சேர்ந்து உரக்கச்சொல்லி புரியவைக்கும் ஓர் செய்தியை ஒரே ஒரு கார்ட்டூன் தெளிவாகச் சொல்லிவிடும். அதன் பலமே இவரை இணைய ரவுடியாக வளம் வர செய்திருக்கிறது. ஊடகங்களில் பணிபுரிபவர்களுக்கு என்று ஒரு அடிப்படை நாகரிகம் இருக்கிறது. அதை தனக்கான எல்லையாக அவர்கள் தவறாக புரிந்துகொண்டுள்ளார்கள். என்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது, என் எல்லையை யாரும் நிர்ணயிக்க முடியாது என்கிற திமிர்த்தனத்தில் நாகரிகத்தின் எல்லையை கடந்துவிடுபவர்களைத்தான் இணைய ரவுடி என குறிப்பிட்டுள்ளேன்.

சரி விசயத்திற்கு வருவோம்.

திருமாவை கலைஞரின் காலைப்பிடித்துத் தொங்குவது போல் கார்ட்டூன் போட்டு கேவலப் படுத்துகிறார் இந்த பாலா. உடனே அவர் நட்பில் இருக்கும் சிலர் கண்டனங்களை தெரிவிக்கின்றனர். அதற்கெல்லாம் மதிப்பளிப்பவாரா இந்த பாலா..? பிறகு விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் மாநில பொறுப்பில் இருக்கும், பேஸ்புக்கிலும் ஊடகங்களிலும் இயங்கி வரும் ஆளூர் ஷானவாஸ் என்பவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு அந்த கார்ட்டூனை நீக்கும்படி கேட்கிறார். இணைய ரவுடியாக ஃபார்ம் ஆகியிருக்கும் பாலா இதெற்கெல்லாம் செவி சாய்ப்பவரா என்ன .? உடனே அவர் டைம் லைனில் ஆளூர் ஷானவாஸ்-சை தன் வழக்கமான நக்கல் பாணியில் கண்டித்து ஒரு நிலைத்தகவல் பதிகிறார். அதனைத் தொடர்ந்து கண்டனங்களும் வசவுகளும் அவர் டைம்லைனில் வரிசை கட்டுகிறது.



அதன் பிறகுதான் அவருள்ளே ஒளிந்திருக்கும் சாதிப்பூனை எட்டிப் பார்க்கிறது. "தலித் என்றால் விமர்சனம் செய்யக்கூடாதா..தலித்தை விமர்சனம் செய்தால் மட்டும் இவர்களுக்கு எதற்கு கோபம் வருகிறது...  தலித் கேடயத்துக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் இவர்கள் என்ன தவறு செய்தாலும் கண்டுக்கப்படாதா .." என்று வரிசையாக நிலைத்தகவல்கள் பதிந்து ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மீதான தன் வக்கிர கணைகளை வீசிக்கொண்டிருக்கிறார்.

அய்யா இணைய ரவுடியே... தலித் மக்களை விமர்சனம் செய்யக்கூடாது என்று யார் சொன்னது...?  தலித் சமூகத்தினர் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள்  என்று ஏதாவது சட்டம் இருக்கிறதா..? அல்லது எதிர்வினையாற்றுபவர்கள் யாராவது ஒருவர், ஒரு தலித்தை எப்படி விமர்சனம் செய்யலாம் என்று கேட்டார்களா..? அப்படி இல்லாதபோது தலித் தலித் என்று வரிக்கு வரி எழுதி எதற்காக அச்சமூகத்தின் வெந்த புண்களில் வேல் பாய்ச்ச வேண்டும்..?

உங்கள் வழிக்கே வருகிறேன்.  ஸ்பெக்ட்ரம் வழக்கில் தொடர்புடைய முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவும் ஒரு தலித் தான். தலைவர் கூட ராசா தலித் என்பதால் தான் அவர்மீது வழக்கு போடுகிறார்கள் என்று அறிக்கைவிட்டு பின்பு வாங்கிக் கட்டிக்கொண்டது நாடே அறியும். அப்படிப்பட்ட ராசாவுக்கு எதிராக இணையத்தில் எவ்வளவு கேவலமான விமர்சனங்கள் வந்தன..!. அருவருக்கத்தக்க போர்ட்டூன்கள், கார்ட்டூன்கள் வந்தன...! ஏன் நீங்களே எவ்வளவு நக்கலடித்து கார்ட்டூன்கள் வரைந்து கலைஞர் எதிர்ப்பாளர்களின் லைக்கை லம்பாக அள்ளினீர்கள். அப்போது எவராவது வந்து ஒரு தலித்தை எப்படி விமர்சனம் செய்யலாம் என்று உங்களுடன் வாதம் செய்தார்கள்..?

இதே திருமாவளவன் மீது அரசியல் ரீதியான விமர்சனங்கள் இணையத்தில் வரவில்லையா..? கலைஞரின் வற்புறுத்தலின் பேரில் இலங்கை சென்று ராஜபக்சேவுடன் கைக்குலுக்கிவிட்டு பிறகு தமிழ்நாடு திரும்பியவுடன் ராஜபக்சேவை எதிர்த்து அறிக்கை விட்டபோது இணையத்தில் திருமாவளவனை துவைத்து எடுக்கவில்லையா...? அப்போதெல்லாம் ஒரு தலித்தை எப்படி விமர்சனம் செய்யலாம் என்று யாராவது வரிந்துக் கட்டிக்கொண்டு வந்தார்களா...?

அதற்கெல்லாம் வராத எதிர்வினைகள் இந்தக் கார்ட்டூனுக்கு வருகிறது என்றால், அச்சமூகத்தின் வலியை புரிந்துக் கொள்ளும் மனப்பக்குவம் இல்லாத நீயெல்லாம் என்னய்யா பிரபல கார்டூனிஸ்ட்.?.

அவர்கள் எதிர்வினையாற்றிய விதம் தவறுதான். ஆனால் அவர்கள் கோபத்தின் பின்னால் உள்ள வலியைப் புரிந்துகொள்ளாத உம்மைப் போன்றவர்கள் சமூகக் கருத்தைப் பரப்புகிறேன் என கிளம்புவது வேடிக்கையாக இல்லையா..? குறைந்த பட்சம், நான் சொல்ல வந்த விஷயம் வேறு. ஆனால் அது தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டிருக்கிறது என்று ஒரு விளக்கப் பதிவாவது உன்னால் போடமுடிகிறதா...?

தலித்தையோ அல்லது சிறுபார்மையினரையோ விமர்சிக்கும் முன்,கொஞ்சம் சென்சிடிவான விசயமாச்சே.. அரசியல் ரீதியான விமர்சனமாக மட்டுமே இருக்கவேண்டும் என்பதை உணராத நீயெல்லாம் என்னய்யா ஜெர்னலிஸ்ட்..?

ஒரு தலைமுறைக்கு முன்பு விழிப்புணர்வும் படிப்பறிவும் மட்டுமல்லாது  அதற்கான வழிகாட்டுதலும் தலைவனும் இல்லாமல் ஒடுங்கி வாழ்ந்த சமூகம் அது. பெரியார், அம்பேத்கார் போன்ற சமூக சிந்தனையாளர்களின் சீரிய முயற்சியினால் ஏதோ இப்போதுதான் சமூகத்தில் அவர்களுக்கு சம அந்தஸ்து கிடைத்து உயரிய பதவிகளுக்கு வர ஆரம்பித்துள்ளனர். இருப்பினும் அவர்களில் பெரும்பகுதியினர் இன்னமும் ஆதிக்கசாதியினரின் அச்சுறுத்தலுக்கு அடங்கித்தான் வாழவேண்டிய சூழலில் இருக்கின்றனர். அவர்களுக்கென்று ஓர் இயக்கத்தை உருவாக்கி அதற்கு தலைவனாக திருமாவளவன் இருக்கிறார். அவரின் தலைமையை ஒட்டுமொத்த தலித் சமூகத்தினர் ஏற்றுக்கொள்ளா விட்டாலும் சில அரசியல் நிலைப்பாடுகளைத் தாண்டி அவர் மீதுள்ள மரியாதை எவரிடத்திலும் குறையவில்லை.

மீண்டும் அந்த இணைய ரவுடியைப் பார்த்து கேட்கிறேன். திருமாவளவன் கலைஞரின் காலைப் பிடிப்பது போல வரைந்த உனது கார்ட்டூன் எந்த உள்நோக்கமும் இல்லாதது என்றால், அதற்கு வரும் எதிர்வினைகளை அவரது கட்சி சார்ந்த கண்டனங்களாக எடுத்துக் கொள்ள வேண்டியதுதானே.. அதை விடுத்து தலித் என்றால் விமர்சனம் செய்யக் கூடாதா... தலித் என்றால் பெரிய கொம்பா என்கிற ரீதியில் தொடரும் உமது பதிவுகள், உண்மையிலேயே அச்சமூகத்தினரை கேவலப்படுத்தும் நோக்கிலே அந்தக் கார்ட்டூன் வரையப்பட்டது என்பதை உறுதிப்படுத்துகிறதே..!

இன்னமும் அவர்களின் உணர்வுகள் உங்களுக்கு புரியவில்லை என்றால் அடுத்த ஜென்மத்தில் ஒரு தலித்தாகப் பிறந்து பாருங்கள். அப்போதாவது அவர்களின் வலி உங்களுக்குப் புரியும்.

ஒரு பின் குறிப்பு.

பிரபல கார்டூனிஸ்ட் பாலா அவர்கள் புலம்பித்தள்ளிய அந்தப் பதிவில் சென்று.." தலித்..தலித் என்று வரிக்கு இரண்டுதடவை நீங்கதானே சார் சொல்றீங்க..தலித் என்றால் விமர்சனம் செய்யக் கூடாது என்று யார் சொன்னது.. ஆ. ராசா மீது வராத விமர்சனமா..? அப்போது எத்தனை தலித்துகள் கண்டனம் தெரிவித்தனர்....." என்கிற ரீதியில் மிகுந்த மரியாதையாக ஒரு கமெண்ட் போட்டிருந்தேன். இந்தப் பதிவு எழுதுவதற்கு முன்பு வரை அவருடன் தொடர்பில் இருந்தேன். எழுதி முடிக்கும் தருவாயில் சென்று பார்த்தால் அன்போடு என்னை பிளாக் செய்திருக்கிறார். மிகுந்த மரியாதையுடன் கமெண்ட் போட்டால் அவருக்கு பிடிக்காது போல.. என்னை எல்லாம் அடிச்சி நீங்க இணைய ரவுடியாக ஃபார்ம் ஆகுற அளவுக்கு நான் ஒன்னும் பெரிய ஆள் கிடையாது பாலா சார்.

2 comments:

  1. இவரின் பக்கத்தை நான் தொடர்கிறேன்! நீங்கள் சொன்னபடித்தான் இருக்கிறது. மிக அருமையாக உங்கள் கருத்துக்களைஎடுத்துரைத்த விதம் சிறப்பு! நன்றி!

    ReplyDelete
  2. மிக்க நன்றி தளிர் சுரேஷ்

    ReplyDelete