Monday 22 July 2013

'மரியான்..' இப்ப என்ன சொல்ல வர்றியான்..?


ரோஜா படத்தை வேறு ஒரு கோணத்தில் வைத்து சிந்தித்திருக்கிறார் பரத்பாலா.. அங்கே வயலும் வயல் சார்ந்த இடம். இதில் கடலும் கடல் சார்ந்த இடம். அங்கே பசுமையான காஷ்மீர் என்றால் இதில் வறண்ட சூடான் பாலைவனம். மற்றபடி ஃபீலிங்க்ஸ் எல்லாம் அதேதான்.

தன் காதலியின் தந்தை பட்ட கடனையடைக்க சூடான் செல்லும் நாயகன்,தீவிரவாதிகளால் கடத்தப்படுகிறார். அங்கிருந்து த..ப்..பி...த்...து எப்படி தன் காதலியை சேர்கிறார் என்பதுதான் கதை.

தனுஷ்...

கதைக்கு இருநூறு சதவிகிதம் நச்சென பொருத்துகிறார் மீனவ இளைஞனாக வரும் தனுஷ்.ஆரம்பத்தில் 'சுறா' ரேஞ்சுக்கு கொடுக்கப்படும் பில்டப் கொஞ்சம் ஓவர்தான் என்றாலும் பிற்பகுதியில் தீவிரவாதிகளிடம் மாட்டிக் கொள்ளும்போது,பறந்து அடிச்சா பதினாறு டன் வெயிட்டுடா பாக்குறியா..என ஒரே அடியில் பத்துபேரை சாய்த்துவிட்டு, துப்பாக்கி ரவைகளை பல்லால் கடித்து துப்பிவிட்டு,பாலைவன பூமியை பொளந்து கொண்டு தப்பித்து வரும் ஹீரோயிசம் எதுவும் இல்லாதது வியக்கத்தக்க விஷயம்.

நிச்சயம் ஆடுகளத்திற்குப் பிறகு தனுசின் இயல்பான நடிப்பை இதில் காணலாம்.மரியான் சாவே வராதவன் என்று ஆரம்பத்தில் விளக்கம் கொடுக்கப்படுவதால் தனுசுக்கு எதுவும் ஆகாது என முன்னமே தெரிந்து விடுகிறது.

சில காட்சிகளில் அழுத்தமான முத்திரையை பதித்திருக்கிறார். லிப் டு லிப் ரொமான்ஸ் காட்சி, நண்பனின் சாமாதியில் உடைந்துபோய் உட்காந்திருக்க அங்கு வரும் பார்வதியிடம் காட்டும் கோபம், தீவிரவாதிகளின் பிடியில் இருக்கும்போது கம்பெனிக்கு பேசுவதாக சொல்லிவிட்டு தன் காதலிடம் பேசும்போது இருக்கும் தவிப்பு  என ஆங்காங்கே எதார்த்த நடிப்பில் பின்னியெடுக்கிறார் தனுஷ். கமல், விக்கிரமுக்கு பிறகு அந்த சீட் உனக்குதாம்ல...!

ஆனால் தீவிரவாதிகள் துப்பாக்கி முனையில் கடத்தும்போது ஏனோ முகத்தில் ஒரு சலனமும் இல்லாமல் இயல்பாக இருக்கிறார்.

பார்வதிமேனன்..

பனிமலாரக வரும் பார்வதிமேனன் ஏற்கனவே பூ படத்தில் ஜொலித்தவர் என்பதால் சிரமமில்லாமல் நிறைய காட்சிகளில் வாழ்த்திருக்கிறார். அந்த 'லிப் டு லிப்' காட்சி ஓன்று போதும். மிக எதார்த்தமாக அமைந்திருக்கிறது. அதன்பிறகு வரும் நெருக்கமான காட்சிகளில் நம் எதிர்பார்ப்பை தூண்டிவிட்டு கடைசி வரை ஏமாற்றி விடுகிறார். கடைசி வரை இவரை டாப் ஆங்கிளில் காட்டி ஏதோ உணர்த்த முற்படுகிறார் இயக்குனர். நம்ம மரமண்டைக்குத்தான் ஒன்னும் விளங்கல.. :-)

பிற்பகுதியில், ' மரியான் கண்டிப்பா வருவான்..இதோ வந்துகிட்டு இருக்கான்... ' என பினாத்துவது கொஞ்சம் ஓவர். சரி எதற்காக இவர் தனுசை இந்த அளவுக்கு லவ்வி வருகிறார்..? அழுத்தமான காரணம் எதுவும் இல்லாததால் 'அபிராமி..அபிராமி' குழப்பம் இதிலும் வருகிறது.


ஏ.ஆர். ரகுமான்..

படத்தின் ஒரே பலம். ஒத்த ஆளாக நின்று போராடியிருக்கிறார். படத்தின் ஒவ்வொரு பிரேமையையும் உயர்த்திப் பிடிக்கிறது இசைப்புயலின் பிரமாண்டமான பின்னணி இசை. 'சோனா பிரியா தானா வறியா..',  'இன்னும் கொஞ்சம் நேரம்..' பாடல்கள் பரவாயில்லை. தாய் மண்ணே வணக்கம்.. பாடலை மனதில் கொண்டு 'நெஞ்சே எழு..! காதல் அழிவதில்லை..!' பாடலை உருவாக்கியிருக்கிறார்கள் போல.வருங்கால சந்ததியினருக்கு காதலர்களின் தேசிய கீதமாக ஆனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை..

படத்தில் குறிப்பிட்டு சொல்லவேண்டிய இன்னொருவர் வசனம் எழுதிய ஜே.டி.குரூஸ். 'வாழ்க்கையில சாதிக்க நினைக்கிறவனுக்கு எல்லாம் பொம்பளையோட மூச்சுக் காத்து பட்டுகிட்டே இருக்கணும்..' என்கிற வரி வேறு ஒரு அர்த்தம் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. 'ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்.....' என்பதைத் தான் அப்படி சொல்லியிருக்கணும்.

அடடே.. கமலா காமேஷ் திரும்பவும் நடிக்க வந்தாச்சே என நினைத்தால் அது உமா ரியாஸ்... நடிப்பில் குட்டி பதினாறு அடி பாய்கிறது.. (அப்புறம் என்ன விசு சார்..ஜோடி கிடைச்சாச்சு.சம்சாரம் அது மின்சாரம் பார்ட் -2 எப்போ எடுக்க போறீங்க..?)

காமெடிக்காக சேர்க்கப்பட்ட ஜெகனும் அப்புக்குட்டியும் அப்பாவியாய் செத்துப் போகிறார்கள்.முற்பகுதியில் மீனவ குப்பத்தை சுற்றியே கதை நகர்கிறது. மீனவர் என்றாலே இலங்கையின் அத்துமீறலையும் காட்சிப் படுத்தவேண்டும் என்கிற சமீபத்திய தமிழ் சினிமாவின் மரபு இதிலும் கடைப்பிடிக்கப் படுகிறது. அதற்காக நடுக்கடலில் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே பிணமாக ஒதுங்குவது சாத்தியமா..?

'அண்ணே நீ எந்தப் பொண்ணை பாத்தாலும் ஒன்னு குத்தகைக்கு எடுத்திடுவ...இல்ல கொள்முதல் செஞ்சிருவ..இந்த பனிமலர் கிட்ட மட்டும் ஏன் இப்படி இறங்கி போகணும்'

' டேய்...மத்தப் பொண்ணுங்க மாதிரி இல்லைடா , பனிமலரை நெஞ்சுக்குள்ள வச்சிருக்கேன்.கல்யாணம் பண்ணினா அது பனிமலரைத்தான்..'

டேய் தமிழ்நாட்டு வில்லன்களா நீங்க அம்புட்டு நல்லவிங்களாடா..? இன்னும் எத்தனைப் படத்திலடா இந்த டயலாக் பேசுவீங்க...?

அனுப்பி வைக்கிறது மட்டும்தான் என் வேலை.. மத்ததுக்கெல்லாம் நான் பொறுப்பாக முடியாது என சர்வ சாதாரணமாக சொல்லும் வெளிநாட்டு ஏஜென்டின் மற்றொரு முகத்தை அற்புதமாய் படம்பிடித்திருக்கிறார்கள். சிங்கைக்கு இரண்டு லட்சம் பணம் கட்டி அழைத்து வந்து,இரண்டே மாதத்தில் வேலையில்லாமல் திருப்பி அனுப்பப்பட்ட நண்பருக்காக ஒரு ஏஜென்டிடம் நான் வாதாடிய போதும் இதே டயலாக்தான்.

சூடானில் எங்கேயோ ரெகார்ட் டான்ஸ் ஆடின கும்பலை கூட்டியாந்து தீவிரவாதியாக நடிக்க வைத்திருக் கிறார்கள் போல. ஒண்ணுக்கும் நடிப்பு வரல. அதாவது பரவாயில்ல..சின்ன வயசில தீபாவளிக்கு அப்பா வாங்கிக் கொடுத்த துப்பாக்கியில் கேப்பை நிரப்பி தெருவெல்லாம் டப் டப்னு மேலே நோக்கி சுடுற மாதிரி அடிக்கடி வானத்தை நோக்கி சுட்டுகிட்டே இருக்காங்க. கடத்தினவர்கள் எவ்வளவு ரகசியமா இருக்கணும்..?  இப்படித்தான் போற வழியெல்லாம் வானத்தைப் பார்த்து சுட்டுகிட்டே இருக்கணுமா.? பணம் பறிப்பது மட்டுமே அவர்களின் நோக்கமாக இருக்கும் போது எதற்காக பார்வதியின் போட்டோவை சிகரெட்டால் சுட்டு சிற்றின்பம் அடையவேண்டும்..?


இரண்டாம் பாதி செம இழுவை.பத்து நிமிடத்தில் முடித்திருக்க வேண்டிய படத்தை  ஜவ்வு போல இழுத்தது மிகப்பெரிய மைனஸ். பசி தாங்க முடியாமல் ஜெகன் புலம்ப, அந்த நேரத்தில் வறுமையின் நிறம் சிவப்பு காட்சி தேவையா..? நெஞ்சைப் பிழியவேண்டிய காட்சி நம்மை பொறுமையின் எல்லைக்கே கொண்டு செல்கிறது.

தனுசை துப்பாக்கியால் வில்லன் கடுமையாக தாக்குவதை பின்னாலிருந்து காட்டுகிறார்கள். அடுத்தநாள் குருதிப்புனல் கமல் போல் குத்துயிரும் கொலையுருமாய் இருப்பார் என நினைத்தால் கன்னத்தில் சிறு கீறலோடு மட்டும் காட்சி தருகிறார். ஒருவேளை ரப்பர் துப்பாக்கி போல. 

சூடான் தீவிரவாதிகளிடமிருந்து தனுஷ் தப்புவது பு.கோ.சரவணன் படத்தில் பார்டரை தாண்டுவதை விட காமெடியாக இருக்கிறது.தப்பித்து வருபவர் பட்டினியால் சோர்ந்து, சாவை வென்று, அடுத்தடுத்த கடுமையான சோதனைகளைத் தாண்டி இறுதியில் கடல் மாதாவை அடைகிறார். ஆனால் அப்போதுதான் ஃபுல் மீல்ஸை செம கட்டு கட்டியவர் போல் ஃபிரசாக காட்சியளிக்கிறார்.இறுதியில் கடல் ராசாவாக வில்லனை சாகடிக்கும் உத்தி அருமை.

அப்பாடா ஒரு வழியாக படத்தை முடிச்சுட்டாங்கப்பா..சீக்கிரம் கதவை திறங்கடா..என எழும்ப முற்படுகையில், "இன்னும் கொஞ்சநேரம் இருந்தாதான் என்ன...ஏன் அவசரம்..என்ன அவசரம்.." என திரையில் பாடல் ஒலிக்க., கால்கள் EXIT -ஐ நோக்கி ஓட்டம் பிடிக்கிறது...! 

தனுசுக்காக ஒரு தடவை பார்க்கலாம்..!

1 comment:

  1. இன்னும் ஆப்பிரிக்கா மட்டும்தான் போகலை தமிழ் சினிமா. அங்கேயும் போயிட்டாங்களா?

    ReplyDelete