Friday 16 March 2012

அரவான் ஒரு அலசல்....





                   தமிழ் திரையுலகில் அத்திபூத்தாற்போல் வரும் இது போன்ற படங்களை விமர்சனம் என்ற பெயரில் வரிந்து கட்டிக்கொண்டு வசைபாட எனக்கு விருப்பமில்லை.
   
   "களவில் இருந்து தான் காவல் பிறக்கிறது" என்ற ஒரு வரியில் படத்தின் மொத்தக்கதையும் அடங்கியிருக்கிறது.பதினெட்டாம் நூற்றாண்டில் நடந்ததை  நம் கண்முன் நிறுத்தி,வலுவான திரைக்கதையையும் அழுத்தமான காட்சியமைப்பையும் அமைத்து தமிழ்த்திரையில் முத்திரை பதித்த இயக்குனர்களில் நானும் ஒருவன் என்பதை நிருபித்திருக்கிறார் இயக்குனர் வசந்த பாலன்.       

   சாகித்திய அகாடமி விருது பெறுவதற்கு முன்பே சு.வெங்கடேசனின் காவல்கோட்டம் நாவலை படமாக்கத் துணிந்த இயக்குனரை மனதார பாராட்டலாம்!!!.

     அரவான் என்பவர் யார்? எதற்காக இந்தப்படத்திற்கு இந்தப்பெயர்?.இது படம் பார்த்த நிறைய பேருக்கு சாதாரணமாகவே தோன்றும் சந்தேகம்தான் இது.ஒரு சிலர் அரவான் என்றால் திருநங்கையோ என்று கூட நினைத்திருக்கின்றனர். இந்தப்படத்தில் நாயகனான ஆதியை நரபலிக்கு தேர்ந்தெடுக்கும் முன்னே ஒரு வசனம் வரும்."மகாபாரதத்தில பாண்டவர்கள் போருக்கு போகும் முன் அரவானை பலி கொடுக்கலையா அதுபோலதான் இதுவும்" என்று அந்த ஊர் பெரியவர் சொல்வார்.

அந்த அரவான் யார்?

மகாபாரதத்தில் அரவானின் பாத்திரம் என்ன?

                   மகாபாரதத்தில் 'குருக்ஷேத்திரப்போர்' என்று அழைக்கப்பட்ட பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே நடந்த பாரதப் போரில் பாண்டவர்கள் வெற்றி பெற்றதுக்கு மூல காரணமே அரவானின் தியாகம்தான் என்று சொல்லப்படுகிறது.

  பாரதப்போரில் எப்படியாவது வென்றே தீரவேண்டும் என வைராக்கியத்துடன்  இருந்த 'சேலை புகழ்' துயில் துரியோதனம் ஜோதிடத்தில் வல்லவனான 'ஜோதிட சிகாமணி' சகாதேவனிடம் ஆலோசனை கேட்டான்.அவன் வாயிலிருந்து உதிர்ந்த அந்த வார்த்தை தான் களப்பலி..உயிர்ப்பலி...நரபலி..(எல்லாம் ஒண்ணு தான்).அதாவது இந்த உலகில் '32 லட்சணங்கள்' பொருந்திய ஒருவனை இந்தப் போர் தொடங்கும் முன் அமாவாசையன்று காளிக்கு  களப்பலியிடவேண்டும்(ஒரே அக்கப்போராக இருக்கிறது).உடனே துளி கணம் கூட தயங்காமல் 'சிண்டு முடிக்கும்' சகுனியிடம் சென்று ஆலோசனையில் ஈடுபட்டான் துரியோதனன்.அவள் சொன்ன யோசனைதான் அரவானை களப்பலியிட வேண்டும் என்பது.    

   சரி..அரவான் யார்? ஒரு சின்ன .'.பிளாஷ்பேக்...

 பாண்டவர்களில் ஒருவரான அர்ச்சுனன் தீர்த்த யாத்திரை செல்லும் பொது வழியில் கங்கையை கண்டான்.பிறகு நீரோடும் அந்த நதியில் நீராட விரும்பினான் அர்ச்சுனன்.அந்த நேரத்தில் அங்கு குளித்துக் கொண்டிருந்த பாதாள மங்கையர்கள் சிலர் இவரின் கவனத்தை திசைதிருப்பினர்.அந்த மங்கையரில் ஒரு பேரழகி இருந்தாள்.அவள் தான் உலூபி என்னும் நாகக்கன்னி.சரி..வந்தோமா....நதியில் குளித்தோமா.......உடைகளை மாற்றி சென்றோமா  என்றில்லாமல் அவளின் அழகில் மயங்கிய அர்ச்சுனன் அவளை விரும்பத் தொடங்கினான்.அவளும் அர்ச்சுனனின் காதல் வலையில் விழ இருவரும் சில காலங்கள் சேர்ந்து வாழத் தொடங்கினர்.பிறகு என்ன...? வழக்கம் போல அதன் விழைவாக இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.ந்தக் குழந்தை அரவப் பெண்ணின் மகன் என்பதால் இவனுக்கு அரவான் எனப் பெயரிட்டனர். அரவான் பிறப்பிலே 32 லட்சணங்கள் அமையப் பெற்றவன்.மிகச்சிறந்த வீரன். பேரழகன்....மகாபாரதத்தில் மொத்தம் மூன்று பேருக்கு மட்டுமே இந்தச் சிறப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அது... அர்ச்சுனன்,அவர் மகன் அரவான் மற்றும் கண்ணன்.  
        
  .'.பிளாஷ்பேக் ஓவர்......

 இப்பப் புரியுதா சகுனியின் சித்து விளையாட்டு. உண்மையில் அரவானுக்கு துரியோதனன் பெரியப்பா முறை."நிச்சயம் நீ கேட்டால் அரவான் மறுக்க மாட்டான்" என்று சகுனி சொல்ல,அரவானை சந்திக்க புறப்பட்டான் துரியோதனன்.தன் பெரிய தந்தை தன்னைத் தேடிவருவதை அறிந்த அரவான் சந்தோசக் கூத்தாடினான்(குத்தாட்டம் அல்ல..)."வாருங்கள் தந்தையே என்னைத்தேடி வந்ததன் நோக்கமென்ன?" என்று அரவான் வினவ,"உன்னால் எனக்கு ஒரு உதவி தேவைப்படுகிறது" என்று தயக்கத்துடன் சொன்னான் துரியோதனன்.இவர் என்ன என் உயிரையா கேட்டுவிடப் போகிறார் என்ற துணிச்சலுடன்  "என்ன வேண்டும் தந்தையே.. என் உயிர் வேண்டுமா" என்று எதோச்சையாக கேட்டு வைக்க...உடனே துரியோதனிடமிருந்து "ஆம்" என்ற பதில் வர அதிர்ந்து போனான் அரவான்.பாண்டவர்களை போரில் வெல்ல வேண்டுமானால் நீ வரும் அமாவாசை அன்று காலி முன் களப்பலியாக வேண்டும் என்று துரியோதனன் விளக்க,வாயைக்கொடுத்து வம்பில் மாட்டிக் கொண்ட அரவான் வேறு வழியில்லாமல் இதற்கு ஒப்புக்கொண்டார். 

    இந்த விஷயத்தை எப்படியோ தெரிந்து கொண்ட கண்ணன்( இதானே நம்ம வேலையே...),இதைத் தனக்கு சாதகமாக பயன்படுத்த திட்டம் போட்டார். அதன்படி,அமாவாசை அன்றுதானே களப்பலியிடுவதாக துரியோதனன் கூறினான்.அந்த அமாவாசையையே ஒரு நாள் முன்னதாகவே கொண்டுவந்து அந்தக் களப்பலியை நாம் செய்தால் என்ன?(அடங்கப்பா..)  என யோசித்து அதை செயல் படுத்தவும் தொடங்கினார்.(ஆக....சண்டை போட்டு ஜெயிக்கிற ஐடியா யாருக்குமே கிடையாது) 

      உடனே முனிவர்களை அழைத்து அமாவாசைக்கு முன்தினமான சதுர்த்தசி அன்று அமாவாசை வரும்படி செய்யவேண்டும் என கட்டளையிட்டார் கண்ணன்.இதைக் கேள்விப்பட்ட சந்திரனும் சூரியனும் பதறியடித்துக் கொண்டு கண்ணனிடம் ஓடி வந்தனர்.நாங்கள் இருவரும் எதிரெதிரே வந்தால் தானே அமாவசை.இதை நீங்களே முடிவு செய்தால் எப்படி என்று இருவரும் சின்னப் புள்ளத்தனமாக கேள்வி கேட்க, "ஹி.. ஹி..இதோ இருவரும் எதிரெதிரே வந்து விட்டீர்களே..இப்ப என்ன செய்வீங்க...என்று கண்ணன் தன் அறிவுக்கண்ணைத் திறந்து அள்ளிவிட ஸ்தம்பித்து போனார்கள் இருவரும்.இப்போது சதுர்த்தசி அமாவாசை ஆனது.
  
            “இன்று கௌரவர்களுக்கு முன்பு நாம் எவரையாவது களபலி கொடுத்து விட வேண்டும். இல்லையேல் போர்க்களத்தில்அவர்களை நாம் வெல்ல முடியாது. 32 லட்சணங்கள் கொண்டவர்கள்  இந்த உலகில் மூவரே உள்ளனர்.ஒன்று நான். மற்றவர்கள் அர்ச்சுனன்,அரவான்" என்ற கண்ணன், எங்கே தன் தலை உருண்டுவிடுமோ என்று எண்ணி சமயோசிதமாக,வீரர்கள் ஆகிய அவர்கள் இருவரும் போருக்கு அவசியம்... என்னை பலியிடுங்கள்’ என்று கண்ணன் சொல்ல...,“தங்களை பலி கொடுத்து அதனால் கிடைக்கும் வெற்றி எங்களுக்கு தேவையில்லை"என்று மறுத்துவிட்டார் தருமர்.அப்பாடா என் தலை தப்பியது என்று நிம்மதி பெருமூச்சு விட்டார் கண்ணன்.அப்போது அவர்கள் உடன் இருந்த அரவான்,முன் வந்தான்.கண்ணனின் சூழ்ச்சி தெரியாத அரவான்,“துரியோதனன் கேட்டதால் அமாவாசை அன்று அவருக்காக பலியாக சம்மதித்தேன்.அமாவாசை வந்த பின்பும் அவரைக் காணோம். எனவே என்னை பலியிடுங்கள்" எனக் கூற அனைவரும் சம்மதித்தனர்.

           நான் பலியாவதற்கு முன் எனக்கு மூன்று வரங்கள் தரவேண்டும் என்று அரவான் கேட்க,”கேள் தருகிறேன்’ என்றார் கண்ணன்.“என்னை பலியிட்டாலும் என் தலைக்கு எப்போதும் உயிர் இருக்க வேண்டும்.பாரதப் போரை நான் காண வேண்டும். சாகும்முன் நான் ஒரு பெண்ணை மணம் முடிக்க வேண்டும்"என்று அரவான் கேட்க,சாகும் நேரத்தில சல்லாபமா என்று நொந்துபோன கண்ணனும் சரி என்றார்.

சிங்கப்பூரில் உள்ள அரவான் சிலை.

       சரி...மறுநாள் இறக்கக் கூடியவனை எந்தப் பெண் மணப்பாள்? சிறிது நேரம் யோசித்த கண்ணனின் மூளையில் 'அந்த' யோசனை உதித்தது.. தனது வாக்கினை நிறைவேற்ற, கண்ணன் தானே பெண் உருவம் கொண்டு அரவானை மணந்தார்.

       அரவான் காளியின் முன் பலியிடப் பட்டான். தலை துண்டிக்கப்பட்டும் சிறிதும்  துன்பம் இல்லாமல் மலர்ந்த முகத்துடன் காட்சியளித்தான்.அரவான் பலியானதும் கண்ணன் விதவைக் கோலம் பூண்டு பின் தன் உண்மை உருவைப் பெற்றார்.கண்ணன் பெண்ணாக மாறியதால் திருநங்கையர் தங்களை கண்ணனின் அவதாரம் என்றே கருதுகிறார்கள். அரவானை தங்கள் கணவனாக நினைத்த வழிபடுகிறார்கள்.அரவானின் மனைவி தாங்கள் தான் என்று கருதுவதால் தங்களை "அரவானி" என்று அழைத்துக் கொள்கின்றனர்.

              முழு உருவில் இருந்த போது நின்ற நிலையிலே இறந்தான்அரவான். பலியாகி உடல் கீழே சாய்ந்ததும் தலை மட்டும் தரையில் விழுந்து குதித்து குதித்து ஆடியதால் அரவான் "கூத்தாண்டவர்" என்ற பெயரில் அழைக்கப் படலானான்.இவர் பெயரில்தான் கூத்தாண்டவர் திருவிழா நடைபெறுகிறது.
கூவாகம் திருவிழா..
     இந்தியாவிலுள்ள அனைத்து திருநங்கைகள் மத்தியில் புகழ் பெற்ற புண்ணியத்தலமாக விளங்குகிறது விழுப்புரம் மாவட்டம், கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோயில். சித்திரா பௌர்ணமியன்று கூத்தாண்டவராகிய அரவானைக் கணவனாக நினைத்துக் கொண்டு கோயில் அர்ச்சகர் கையால் திருநங்கைகள் அனைவரும் தாலி கட்டிக் கொள்கின்றனர். இரவு முழுவதும் தங்களது கணவனான அரவானை வாழ்த்திப் பொங்கல் வைத்து கும்மியடித்து ஆட்டமும் பாட்டமுமாக மகிழ்ச்சியாயிருக்கின்றனர். பொழுது விடிந்ததும் அரவானின் இரவு களியாட்டம் முடிவடைகிறது. நன்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் மரத்தால் ஆன அரவான் சிற்பம் வைக்கப்பட்டு, கூத்தாண்டவர் கோயிலிலிருந்து நான்கு கி.மீ தூரத்தில் உள்ள கொலைக் களமான அமுதகளம் கொண்டு செல்லப்படுகிறான். வடக்கே உயிர் விடப்போகும் அரவானைப் பார்த்து திருநங்கைகள் ஒப்பாரி வைக்கின்றனர். அமுதகளத்தில் அரவான் தலை இறக்கப் படுகின்றது. திருநங்கைகள் அனைவரும் முதல்நாள் தாங்கள் கட்டிக்கொண்ட தாலி அறுத்து, பூ எடுத்து, வளையல் உடைத்து பின் வெள்ளைப் புடவை உடுத்தி மகாபாரதித்தில் கண்ணன் விதவைக் கோலத்திற்கு மாறியதைப் போல் இவர்களும் விதவைக் கோலம் பூணுகின்றனர்.

    அரவான் படத்தில்...நாயகன் ஆதி அரவானைப் போல்  ஒரு பலியாடு.ஆனால் அவருக்கு கெடு முப்பது நாள். மற்றபடி அரவான் படத்திற்கும் மகாபாரதக் கதைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

நன்றி.கூகுள் படங்கள்,சின்ன வயசுல என்ன தூங்க விடாம இந்தக் கதையைச் சொல்லி பாடாபடுத்துன எங்க பாட்டி..
   -------------------------------------------------(((((((((((((((((((((()))))))))))))))))))))))))--------------------------------

No comments:

Post a Comment