Friday 29 March 2013

நவீனத்துவ போராளி... (சிறுகதை)

   

              ப்பொழுதுதான் கவனித்தான்.அவனையறியாமலே அவன் விரல்கள் லேசாக நடுக்கம் எடுக்க ஆரம்பித்திருந்தது. இருந்தாலும்,அந்தப் பரபரப்பான சாலையில் வேகத்தை அதிகப்படுத்தி வண்டியை மிகக் கவனமாக செலுத்தினான்.

நீண்ட நாட்களாக அவன் நெஞ்சாங்கூட்டில் அழுத்திக் கொண்டிருந்த பாரம்..... அக்னிக் குழம்பாய் உள்ளுக்குள் கொதித்த புரட்சிகர வேட்கை இன்று எரிமலையாய் வெடிக்கப் போவதற்கான அறிகுறிகள் லேசாகத் தென்பட்டது.

இன்று  தன்னைப் போராளியாக அடையாளபடுத்திக் கொள்ளப் போகிறான் என்பது மட்டும் தெளிவாக
ப் புரிந்தது.

ஒன்றல்ல.. இரண்டல்ல... கிட்டத்தட்ட முப்பது நாட்கள் இதற்கான தீவிர பயிற்சி எடுத்துக் கொண்டான். அதுவும் தன் வீட்டுக்கே தெரியாமல்..! தன் நெருங்கிய நண்பன் மூலம் தான் அவர்களின் நட்பு கிடைத்தது. அதிலும் தன் எண்ணத்தோடு அவர்களும் ஒத்துப் போயிருந்தனர். அவர்களும் ஏற்கனவே போராளிகளாக இருந்தனர்.தன் நண்பனும் சமீபத்தில்தான் போராளியாக மாறினான்.நண்பன் தேர்ந்தெடுத்த அதே வழியைத் தான் இவனும் தேர்ந்தெடுத்தான்.

தீவிரவாத தாக்குதல்களை நடத்திவிட்டு அதற்கு ஏதோ ஒரு அமைப்பு பொறுப்பேற்றுக் கொள்ளுமே அதேப் போல் நாம் எதையாவது செய்துதான் போராளியாக மாறவேண்டும் என நண்பன் நெற்றிப் பொட்டில் அடித்துச் சொன்னது ஞாபகம் வந்தது. காரல் மார்க்ஸ்,சேகுவாரா,பிடல் காஸ்ட்ரோ சமீபத்தில் மறைந்த சாவேஸ் உட்பட அனைவரின் வாழ்க்கை வரலாற்றை வரி விடாமல் படித்து முடித்தாயிற்று.அவர்கள் லேசாக தட்டி எழுப்பியதை விட நண்பன் ஒரு பக்கெட் தண்ணீர் ஊற்றி மொத்தமாக எழுப்பிவிட்டான்.

" நம் நிலைப்பாடோடு ஒத்துப் போகாதார் யாரா இருந்தாலும் அவர்களுக்கு இதுதான் கதி..." கழுத்து நரம்பு
ப் புடைக்கப் பேசினான் நண்பன்.

" சரிடா.. போலிஸ்...கேஸ்...ஏதாச்சும் ஆயிட்டா ...."

" எதானா என்ன ..? " இடைமறித்தான் நண்பன்..."எல்லாத்தையும் நம் போராளி குழுக்கள் பார்த்துக்கும். அப்படியே ஏதாச்சும் நடந்தா..... நம் போராட்டக் களத்தில் போராளிகளின் போராட்டம் மிகக் கடுமையாக இருக்கும்..." 


நண்பனின் வார்த்தை வீச்சு, இவன் நெஞ்சை நிஜமாகவே  பதம் பார்த்திருந்தது.

இதற்காகத்தான் சனி, ஞாயிறுகளில் நண்பன் வீட்டுக்கு செல்வதாக வீட்டில் பொய் கூறிவிட்டு ஒரு மாதமாக பயிற்சி எடுத்துக் கொண்டான்.

அதை செயல்படுத்தும் நாளாக இன்றையத் தேதியை ஏற்கனவே குறித்து வைத்திருந்தான்.

யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க என்னென்ன செய்யவேண்டும் என்ற புரட்சிக் குழுவின் யோசனைகளை கவனமாகப் பின்பற்றினான்.குறிப்பாக தான் புரட்சி செய்யப்போகும் அந்த இடத்திற்கு தினமும் வந்து போனான். அங்குள்ளவர்களிடம் சந்தேகம் வராதவாறு தினமும் பழகினான்.குறிப்பாக தன் சொந்தப் பெயரை மறைத்து விட்டான்.ஒருவேளை மாட்டிகொண்டால் தப்பிப்பதற்கு.

ந்த இடத்தை நெருங்க..நெருங்க..கொஞ்சம்
பயம் கலந்த பீதி ஒருபுறம் தொற்றிக் கொண்டாலும்,மறுபுறம் புரட்சி...போராளி...திருப்பி அடி...நையப்புடை... ங்கொய்யால பொளந்து கட்டு... தக்காளி எட்டி உதை...சாய்ந்து விடாத சாரம்... கிண்டிவிடாத சாதம் ... என மனது உத்தரவிட்டுக் கொண்டிருந்தது.

போன் சத்தமாக ஒலிக்க, வெளியே எடுத்து பார்த்தான். போராளி நண்பன்.

" சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்குல.... பேணிக் ஆகாத... இது ஆரம்ப கட்டம்.கொஞ்சம் பயமாத்தான் இருக்கும். உன்னை நீ போராளியா காட்டிக்கணும்னா வேற வழியில்ல..இத செஞ்சிதான் ஆகணும்.."  நண்பனின் தைரியம் அவன் தயக்கத்தை முற்றிலுமாகப் போக்கியது.

பரபரப்புடன் களத்தில் இறங்கிவிட்டான்.

ரோட்டோரத்தில் இருந்த அந்த பிரவுசிங் சென்டருக்குள் நுழைந்து கணினியைத் திறந்தான்.
தான் பயிற்சி எடுத்த PHOTOSHOP -ஐ திறந்து அதில் அந்த மூத்த தலைவரையும்,அந்தக் கட்சியில் சமீபத்தில் இணைந்த நடிகையையும் இணைத்து அதன் கீழே அவர்களின் உறவைக் கொச்சைப் படுத்தி அசிங்கமாக எழுதினான்.  பிறகு பேக் ஐடியைப் பயன்படுத்தி தன் போராட்ட களமான FACEBOOK -ஐ லாக்கின் செய்து அந்தப் படத்தை அப்லோடு செய்தான்.

அவ்வளவுதான். அடுத்த சில நிமிடங்களில் லைக்குகளும்,கமெண்டுகளும்,ஷேர்களும் குவியத் தொடங்கின. குறிப்பாக ஏற்கனவே இப்படி போராளியான நண்பர்களிடமிருந்து..lol, non stop rofl,haa..haa...,  :-)))), இன துரொகி,  இதோல்லாம் ஒரு பொலப்பா .., தலீவருக்கு இந்த வாயசுல இப்பாடி ஒரு அசை, தொலைவரே இது ஞாயாம.., மானாட மர்பாட பார்த்தது பெல் இருந்தது...., கிழவானுக்கு இது எத்திநியவாது ...? தாமில் நட்டை விட்டு தோரதுனும்..  என புரட்சி வாசகங்களை அள்ளித் தெளிக்கலாயினர்.

அவன் நண்பன் கூட பேக் ஐடியில் வந்து " டேய்...நீ போரளியா அயிட்ட.. வழ்த்துக்காள்..!  " என வாழ்த்தினான்.   

அவனின் உணர்ச்சித் தீ எரிமலையாக வெடிக்க ஆரம்பித்திருப்பதை உணர்ந்தான். அங்கிருந்து வெளியேறி பின்னால் உள்ள மூத்திர சந்துக்கு ஓடினான். " நான் போராளியா ஆயிட்டேன்...நான் போராளியாயிட்டேன்..." எனக் கத்தத் தொடங்கினான்,பின்னால் 'நம்பர் ஒன்' போயிட்டிருந்த இஸ்திரிக் கடை அண்ணாச்சி ஏழு தலைமுறையை இழுத்து வச்சி அசிங்க அசிங்கமா திட்டுவதைக் கூட பொருள்படுத்தாமல். 
--------------------------------------(((((((((((((((((((())))))))))))))-------------------------------------- 

Monday 25 March 2013

தொடரும் பரதேசித் தாக்குதல்கள்...(ஏதோ சொல்லனும்னு தோணிச்சி...)


ள்ளியள்ளி கொடுப்பாங்கனு நெனைச்சிருந்தேன்...ஆனா இவ்வளவு பெரிசா தூக்கி வைப்பாங்கனு எதிர் பார்க்கல...

பரதேசி படத்தைதான் சொல்றேன்.. 

அது என்னவோ தெரியில..பாலாவின் படங்களுக்கு எல்லாம் சொல்லி வச்ச மாதிரி ஒத்த அவார்டு மட்டும் கொடுத்து சோலிய முடிச்சிடுறாங்க... ஏன் அதற்கு மேல கொடுத்தா வாங்கமாட்டேனா சொல்லப்போறாரு ...? 

ஒருவேளை மணிரத்னம்,கமல் படங்களுக்கு மட்டுமே அந்தத் தகுதி இருப்பதாக தேர்வுக்குழுவுக்கு யாரோ சொல்லியிருப்பாங்க போல...சரி இவ்வளவு அவசரமாக படத்தை தேசிய விருதுக்கு பாலா ஏன் அனுப்பினார்? ஒருவேளை நிறைய  விருதுகள் கிடைக்கும் பட்சத்தில் அதுவே படத்திற்கு எதிர்பார்ப்பை உருவாக்கி நல்ல ஓபனிங் கிடைத்துவிடும் என நினைத்திருப்பார் போல..படத்திற்கு இவ்வளவு பாராட்டுக்கள குவியும் இந்த நேரத்தில், இந்த ஒரே ஒரு அவார்டு... அதுவும் ஆடை வடைவமைப்புக்கு என்பது படத்திற்கு பெரும் பின்னடைவு  மட்டுமில்லாமல் படம் குப்பை என இங்கே விமர்சனம் எழுதி, தான் ஒரு அறிவு ஜீவியென தம்பட்டம் அடிக்கும் பல இலக்கிய சிகாமணிகளின் வாய்-க்கு அவல் போட்டது போல ஆகிவிட்ட
து.

பொதுவாகவே ஒரு படத்தை தேசிய விருதுக்கு அனுப்பும் போது திரையில் ஓட்டிய படத்தை அப்படியே   அனுப்புவதில்லை.  கொஞ்சம் டிங்கரிங், பட்டி,  பெயிண்டிங்  எல்லாம்  செய்து  தேசியத் தரத்தில்(?!) அனுப்புவார்கள். சப்-டைட்டில்,ஒரிஜினல் வாய்ஸ் ரெக்கார்டிங் போன்ற வேலைகள் எல்லாம் நடக்கும். பிதாமகன் படத்தில் கூட லைலாவுக்கு விருது கிடைக்க வாய்ப்பிருப்பதாக பேச்சு அடிபட்டபோது அவரது சொந்தக்குரலில் திரும்பவும் மாற்றியமைத்துதான் விருதுக்கு அனுப்பிவைத்தார் பாலா...ஆனால் பரதேசி படத்தில் அவர் காட்டிய இந்த அவசரம்தான் இந்த ஒத்த விருதுக்கு காரணம் என்று நினைக்கிறேன். தவிர, ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ் கூட தேர்வுக் குழுவினரின் பார்வையை திரும்ப வைக்கும்.

விகடனும் குமுதமும் கூட வரிந்துக் கட்டிக்கொண்டு பரதேசியை புகழ்ந்துத் தள்ளியிருக்கிறது.அதேப்போல வழக்கமாக எல்லாப் படத்தையும் தயவு தாட்சண்யமின்றி அடித்துத் துவைத்தெடுக்கும் வலைப்பூ நண்பர்களும் வானளாவப் புகழ்ந்திருக்கிறார்கள்.இந்தி சினிமாவில் தேவ்.டி, கேங்க்ஸ் ஆஃப் வாஸேபூர் போன்ற அற்புதமான
படங்களை எடுத்த அனுராக் காஷ்யப்பே பரதேசி ஒரு காவியம் என்கிறார்.

இவ்வளவு பாசிடிவாக ரெஸ்பான்ஸ் இருக்கும்போது ஏன் அவசரப்பட்டு தேசிய விருதுக்கு அனுப்பினார் எனத்தெரியவில்லை.எனக்கென்னவோ அடுத்த வருடத்திற்கான பரிந்துரைக்கு அனுப்பியிருந்தால் குறைந்தது ஐந்து விருதாவது கிடைத்திருக்கும்.பாலா,வேதிகா,நாஞ்சில் நாடன்,சி.எஸ்.பாலச்சந்தர் என விருதுப் பட்டியல் நீண்டிருக்கும்.....


இதில் கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு விஷயம்... இந்தப் படத்திற்கு எதிராகக் கிளம்பிய விமர்சனத் தாக்குதல்கள்...

படத்தில் பரிசுத்தம் கேரக்டர் அபத்தம் என்பதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை.ஆனால் இது மதம் சார்ந்தப் பிரச்சனையாகப் போனதுதான் எதிர்பாராதது.சற்று உன்னிப்பாக நோக்கினால் வேறொரு உண்மை புலப்படும். விளிம்புநிலை மக்களின் அறியாமையையும்,அடிமைத்தனத்தையும் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு ஆன்மிகப் போர்வையில் இருக்கும் சிலர் எவ்வாறு அவர்களை தன்வயப்படுத்துகிறார்கள் என்பதைத்தான் அவர் படம்பிடிக்க முனைந்திருப்பார் என நினைக்கிறேன். தவிர, அவர் இங்கே கிருஸ்துவத்தை மட்டும் சாடவில்லை.  'தாயத்து கட்டனும், ,சாமிக்கு ரெண்டு சேவல் வேண்டிக்கணும்' என வேறு சில விசக்கிருமிகள் அவர்களை ஏமாற்றி பணம் பறிப்பதையும் கூட பாலா இதில் படம் பிடித்திருக்கிறார்.

சரி.. இதைப் பற்றி என்னிடம் யாரா
து வாதிட வந்தால் கிறிஸ்துவர்களின் மனதை புன்படுத்தியிருக்கிறார் என நிஜத்தை ஒப்புக் கொள்வேன்.ஏனென்றால் 'பரிசுத்தம்' மூலமாக உருவாகியிருக்கும் பிம்பம் அப்படி...!

இதையும் தாண்டி இந்தப் படத்திற்கு வேறொரு எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. அது சமகாலத்திய
இலக்கியவாதிகளிடமிருந்து.


விஸ்வரூபம் படத்தை குப்பை என விமர்சித்த  மனுஷ்யபுத்திரனுக்கு கிடைத்த விளம்பரம் போல, தமக்கும் கிடைக்கனும்னு, 'எனக்கு ஏன் பரதேசியைப் பிடிக்கவில்லை' என்ற ரீதியில் பல இலக்கிய சிகாமணிகள் இணையத்தில் விமர்சனம் எழுதிகிட்டு இருக்கு.

இதை விமர்சனங்கள் என்பதைவிட அவர்கள் மனதில் பொதிந்திருக்கும் வன்மங்கள் நிறைந்த ஈகோவின் வெளிப்பாடுனுதான் சொல்லணும்.குறிப்பாக சாருவின் விமர்சனம்.

எனக்குத் தெரிந்து எந்தப் படத்தையும் இந்த அளவுக்கு சாரு விமர்சித்திருக்கமாட்டார் என்றே நினைக்கிறேன். அதிலும் பகுதி பகுதியாக பிரித்து தன் முகநூலில் விமர்சனம் என்ற பெயரில் விளாசியிருக்கிறார்  சாரு. அராத்து,கருந்தேள் உட்பட அவரின் அடிபொடிகளின் விமர்சனமும் அப்படியே.எரியும் பனிக்காடு நாவலை சரிவர படமாக்கவில்லை என சாரு தன் விமர்சனத்தில் சாடியிருந்தாலும் அவரின் வன்மத்திற்கு காரணம் வேறு.

ஜெயமோகனுக்கும் சாருவுக்கும் ஆகாது என்பது இலக்கிய உலகில் யாவரும் அறிந்ததுதான்.பரதேசி படத்தில் வசனம் எழுதிய நாஞ்சில் நாடன்,ஜெயமோகனின் நெடுநாளைய நண்பர் என்பதால்தான் இந்த வன்மம். தவிர, தான் வசனம் எழுதிய கடல் படத்தையே காட்சிப் படிமங்கள்,கன்றாவி விழுமியங்கள் என விமர்சித்து தன்னையே
தன் கையால் குத்திக்கொண்ட ஜெயமோகன்,பரதேசி படத்தை ஆகா ஓகோ என புகழ்ந்து தள்ளியிருந்தார். இதுதான் சாருவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கும் போல...
ஞாநியின் விமர்சனம் கொஞ்சம் சரியெனப் பட்டாலும் அவர் விமர்சிக்க எடுத்துக்கொண்ட சாராம்சம் மிக வேடிக்கையாக இருக்கிறது. அவரும் அதே இத்துப் போன காரணத்தைதான் சொல்கிறார்...எரியும் பனிக்காடு நாவலை சிதைத்து விட்டாராம் பாலா...

எனக்கு இந்த அறிவுக் கொழுத்துகளிடன் கேட்க விரும்புவது இதுதான்...

Red Tea நாவல் P.H.டேனியல் என்பவரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு,முதல் பிரதி வெளியானது 1969-ல்.பிறகு இது தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது 2007-ல்.கிட்டத்தட்ட நாற்பது வருடங்கள்,அதுவும் தென்தமிழ் நாட்டில் நடந்த ஒரு உண்மைச்சம்பவத்தை,ரத்தம் தோய்ந்த வரலாற்றை தமிழில் மொழிபெயர்க்க எந்த இலக்கியவாதிகளும் முன்வரவில்லை. அதாவது இந்த நாவலை கண்டுகொள்ளவில்லை.

மரியோ பர்கஸ் யோசா,போர்ஹெஸ்,அருந்ததி ராய் நாவல்களை தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடும்  சாருவுக்கு இந்த Red Tea நாவல் அவரின் கண்ணில் படாமால் ஜெயமோகனின் அடிப்பொடி யாரோ மறைத்து விட்டார் போல..உலகத்தில் சிறந்த கதைகளை தமிழில் மொழிபெயர்த்து புத்தகமாக போட்டிருக்கிறேன் என பெருமைப் பீத்திக்கொள்ளும் சாருவுக்கு இந்த நாவலை மொழி பெயர்க்க அலுப்பாக இருந்திருக்கும் போல... அதேப்போல் ஞாநி எத்தனை மேடையில் இந்த நாவலைப் பற்றி சிலாகித்து பேசியிருப்பார் எனத் தெரியவில்லை.

எனக்கென்னவோ ஏதோ ஒரு பழைய புத்தகக்கடையில் எடைக்குப் போடப்பட்டு,காராசேவ் போண்டா மடிக்க டீக்கடைக்கு செல்லும் இடைப்பட்ட நொடிப்பொழுதில்தான் Red Tea நாவல் இரா.முருகவேளின் கண்ணில் பட்டிருக்கும் என நினைக்கிறேன்.எரியும் பனிக்காடும் திரும்பவும் எடைக்குப் போடும் முன் பாலா கண்ணில் பட்டிருக்கிறது.

இன்று தமிழ் சினிமாவில் மட்டுமல்ல,எழுத்தாளர்கள்,வாசகர்கள்,விமர்சனர்கள் என எல்லோர் வாயாலும் உச்சரிக்கப்படுகிறது எரியும் பனிக்காடு. தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் அவல வாழ்வை,எரியும் பனிக்காடு நாவலில் சொல்லப்பட்டது போல பாலா எடுக்கவில்லை என சிலர் குமுறுகிறார்கள்.அவர்களுக்குப் பின்னால் ஒரு அவல வாழ்வு இருந்ததே எங்களுக்கு பரதேசி படம் மூலம் தானே தெரியும்.அதன் பின்பு தானே அப்படியொரு நாவல் இருந்த விஷயம் பல பேருக்குத் தெரிந்திருக்கிறது.

பொன்னியின் செல்வனை திரைக்காவியமாக எடுக்க எத்தனைப் பேர் முயன்றார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்தானே..எம்ஜியார்,மணிரத்னம்,செல்வராகவன் என மூன்று தலைமுறைகள் முயன்று தோற்றுதானே போனார்கள்....எரியும் பனிக்காடு நாவலை திரைப்படமாக எடுக்கும் தைரியம் எத்தனைப் பேருக்கு வரும்..? தனது முந்தையப் படம் அட்டர்பிளாப் ஆன நிலையில்,அடுத்தப் படத்தில் வணிக ரீதியாகத்தான் எல்லா இயக்குனர்களும் எஸ்கேப் ஆகவேண்டுமென நினைப்பார்கள்.கமர்சியல் ரீதியாகப் பார்த்தால் இது ஒரு வறண்ட கதைக்களம். அதையும் மீறி இதை எடுக்கத் துணிந்த பாலாவை வாயார பாராட்ட வேண்டாம்... நாற்றம் பிடித்த உங்கள் இலக்கிய வாயை மூடிக்கொண்டிருந்தாலே போதும்...


 இதை பாலாவின் விசிறியாக சொல்லவில்லை...நல்ல தரமான தமிழ்படங்களை கைதட்டி வரவேற்கும் ஒரு சராசரி ரசிகனாக என் மனதில் பட்டதை சொல்லனும்னு தோணிச்சி...அவ்வளவுதான்...! 


வணக்கங்களுடன்.....
மணிமாறன் 

-------------------------------------------------------------((((((((((((((()))))))))))))))))-------------------------------------------

Sunday 17 March 2013

பாலாவின் பரதேசி -விமர்சனம்

மர்சியல் மசாலா கலவைக்குள் கட்டுப்படாமல் சமகால தமிழ் சினிமாவிற்கு வேறொரு பரிமாணம் கொடுக்கும் மிகச்சிறந்த ஆளுமைகளில் தானும் ஒருவன் என 'அடித்து'ச் சொல்லியிருக்கும் இயக்குனர் பாலாவின் மற்றுமொரு காவியம் 'பரதேசி'.

இந்தப்படத்தின் 'டீசர்' வெளியானபோது கடுமையான ஆட்சோபங்கள் தமிழ் ரசிகர்களால் முன்வைக்கப் பட்டது. என்னதான் தான் ஒரு தத்ரூபமான ஆளுமையாக இருந்தாலும் சக கலைஞர்களை அவர் நடத்திய விதம் மனித உரிமை மீறல் என விமர்சனம் எழுப்பப் பட்டது. ஆனால் அந்த ஆக்ரோஷ மெனக்கெடல் ஒவ்வொருக் காட்சிப் படிமங்களிலும் எந்த அளவுக்கு வீரியத்தை விதைத்திருக்கிறது என்பதை  திரையில் காணும் போது உணர முடிகிறது.

'எரியும் பனிக்காடு' இந்த நாவலைத் தழுவிதான் கதைக் களத்தையும் தளத்தையும் இயக்குனர் பாலா அமைத்திருக்கிறார் என்பதை எனது முந்தையப் பதிவில் விளக்கியிருந்தேன்.முழுக் கதையையும் தழுவாமல் தன் கதை சொல்லும் பாணியோடு அதில் சொல்லப்பட்ட காட்சிகளை உள்வாங்கி சம காலத்திய ரசிகர்களின் புரிதலுக்கேற்ப திரைக் கதையை அமைத்திருக்கிறார்.

1939 காலக்கட்டத்தில் நடந்த நிகழ்வாக படம் தொடங்குகிறது.படத்தின் கதைச் சுருக்கம் இதுதான்..


வறுமையின்  பிடியில் சிக்கித்தவிக்கும் சாலூர் கிராமம்தான் முதல் பாதி கதைத்தளம்.வறுமை இருந்தாலும் நிம்மதியான சந்தோஷ சிலிர்ப்புகளுடன் நகர்கிறது அவர்களது வாழ்க்கை.'ஒட்டுப் பெ(பொ)றுக்கி என்கிற சாலூர் ராசா ' வாக டமக்கு அடிச்சி ஊருக்கு தகவல் சொல்லும் பாத்திரத்தில் நாயகன் அதர்வா.அவனுடன் 'நான் உன்னை நெனைக்கிறேன்' என வழியும் நாயகியாக வேதிகா.ஒரு கட்டத்தில் தன்னையே அவனிடம் இழக்கிறாள் திருமணம் ஆகாமலே.

அதர்வா பக்கத்து ஊருக்கு வேலை
த் தேடிச் செல்லும் போது அவனுக்கு அறிமுகமாகிறார் தேயிலைத் தோட்ட கங்காணி(மேஸ்திரி).அவர்களது இருண்ட வாழ்க்கைக்கான ஆரம்பப்புள்ளி அங்குதான்  இடப்படுகிறது. கங்காணியின் பசப்பு வார்த்தைகளில் மயங்கி அந்த கிராமத்தின் பெரும்பகுதி மக்கள், தேயிலைத் தோட்ட பணிக்காக எதிர்காலக் கனவுகளோடு நீண்ட பயணம் மேற்கொள்கின்றனர்.

கிட்டத்தட்ட ஒன்றரை மாத நடைப் பயணம்.வந்தடைகிறது அந்த நரகக் குழி. தான் எதிர்பார்த்த எந்த வித அமைப்பும் அங்கு இல்லை.கங்காணி சொன்ன எந்த வார்த்தையும் உண்மையில்லை என உணர்ந்து,தாம் கொத்தடிமைகளாக ஆக்கப்பட்டுவிட்டோமே என ஒவ்வொருவரும் நெஞ்சு வெடிக்கக் குமுறகிறார்கள். கங்காணியின் அடியாள் பலம் எதிர்த்துப் பேச முடியாதவாறு அவர்களின் கரங்களையும் வாய்களையும் கட்டிப் போடுகிறது.

மர்ம நோயால் கொத்து
க் கொத்தாக செத்து விழும் தொழிலாளர்கள்,பாழடைந்த மருத்துவமனை,மாட்டுக் கொட்டகை போல் குடிசைகள்,வெள்ளைக்கார துரையின் பாலியல் அத்து மீறல்கள்,கங்காணி ஆட்களின் வன்முறை வெறியாட்டங்கள்,அட்டைப் பூச்சிகளின் தாக்குதல்கள்,சுகாதாரமற்ற உணவுகள் என நரகத்ததை விட கொடிய வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் கழிகிறது.

வருடக் கடைசியில் கணக்கு முடிக்கும்போது 'அப்பாடா இத்தோட ஊருக்கு கிளம்பிவிடலாம்' என்கிற அவ
ர்களது நம்பிக்கையில் இடியை இறக்குகிறான் கங்காணி.பொய்க் கணக்குகளை சொல்லி,வாங்கின அட்வான்ஸ் முடிய இன்னும் இரண்டு வருஷம், நான்கு வருஷம் என ஒவ்வொருவரையும் அந்த நரகக் குழிக்குள் மீண்டும் தள்ள, படம் பார்க்கும் நமக்கே நெஞ்சு கனக்கிறது.

இதற்கிடையில் அந்த தேயிலை எஸ்டேட்டில் ஏற்கனவே ஓடிப்போன தன் கணவனின் கணக்கையும் தீர்ப்பதற்காக தன் பிஞ்சு மகளுடன் போராடி
க்கொண்டிருக்கிறார் தன்சிகா.அவருடன் அதர்வாவும் தங்க வைக்கப் டுகிறார்.ஒரு கட்டத்தில் தன்சிகாவும்  மர்ம நோய்க்கு பலியாக மூன்று பேர் கடனும் அதர்வா மேல் விழுகிறது. மீண்டும் அதே எஸ்டேட்டில் ஒன்பது வருடம் பணிசெய்ய பணிக்கப்படுகிறார்.

பிறந்த தன் மகனையும் மனைவியும் பார்க்க முடியவில்லையே என்கிற வெறுமை,இன்னும் ஒன்பது வருடம் இந்த நரகத்தில் வாழ்ந்து சாகவேண்டுமா என்கிற ஆற்றாமை எல்லாம் ஓன்று சேர, மலை உச்சியின் மேல் அமர்ந்துக் கொண்டு நெஞ்சு வெடித்து கதறுகிறார்.அதன் பின் தான் கிளைமாக்ஸ். கங்காணியின் அடுத்த ஆள் பிடித்தலில், தன் கணவனைப் பார்க்கும் ஆசைகளோடு அப்பாவியாய் அங்கு வந்து சேர்கிறார் வேதிகா.  யாரை இவ்வளவு நாளாகப் பார்க்க
த் துடித்துக் கொண்டிருந்தாரோ அவர்கள் நேரில் வந்த சந்தோசத்தை அனுபவிக்க முடியாமல்,"இந்த நரகக் குழியில் நீயும் வந்து விழுந்திட்டியே அங்கம்மா..."  என அந்தக் காடே நடுங்கும் அளவுக்கு அதர்வா கதற, a film by bala என படம் முடிகிறது. 

படம் முடிந்து வெளிவரும் போது நம்மையும்  ஏதோ ஒரு இனம் புரியாத ஆற்றாமை ஆட்கொள்கிறது. கிளைமாக்சில் பக்கத்து சீட்டில் யாரும் இல்லை என்றால் கொஞ்சம் வாய் விட்டு அழுதுவிடலாம் என்று கூட தோன்றியது. இது தான் பாலா....!

 "ஆனைமலைக் காடுகளில் தழைத்திருக்கும்
 ஆங்கிலேயர்களின் தேயிலைத் தோட்டங்களில்
 அடியுரமாய் இடப்பட்டவை எமது உயிர்கள்.…
 நீங்கள் கதகதப்பாய் உறிஞ்சிக் கொண்டிருக்கும்
 ஒவ்வொரு துளி தேநீரிலும்
 கலந்திருக்கிறது எமது உதிரம்…"
  
ஆதவன் தீட்சண்யா-வின் இந்த கவிதை எப்படிப்பட்ட வலிகளோடு எழுதப்பட்டது என்பது படம் பார்த்தவர்களுக்கு மட்டுமே புரியும்...!

செம்மண் சுவர்கள்,பனை ஓலையால் வேயப்பட்ட கூரைகள், முன் பக்க வாசலில் மூங்கில் தட்டியால் செய்யப்பட்ட தடுப்புகள் என அப்போதைய தெருக்களை அச்சு பிசகாமல் அப்படியே நம் முன் நிறுத்துகிறார் ஆர்ட் டைரக்டர் சி.எஸ்.பாலச்சந்தர்.பஞ்சாயத்து நடக்கும்  இடத்தில் தரையோடு சாய்ந்து கிடக்கும் அந்த பெரிய மரம் உண்மையானதா அல்லது செட் செய்யப்பட்டதா எனத் தெரியவில்லை.தேசிய விருதுக்கு பலமாகப் பரிந்துரைக்கப்படுவார்.

இது ஒரு பீரியட் படம் என்பதால் திரையில் இவர்கள் பயன்படுத்தியிருக்கும் அந்த 'கலர் டோன்' கண்களைக் கவர்கிறது.தேயிலைக் காடுகளையும்
சாலூர் கிராமத்தையும் வளைத்து வளைத்து 'சுட்ட' செழியனும் விருது வளையத்துள் வருகிறார்.

முதற்பாதி முழுவதும் நாஞ்சில் நாடனின் 'கலகல' வசனங்கள் பட்டையைக் கிளப்புகிறது.அவர்களின் வழக்கு மொழியை அப்படியே பிரதிபலிக்கவேண்டும் என்கிற சிரத்தை தெரிகிறது. அவர்கள் பேசும் பாசையை தெளிவாக புரிந்துகொள்ள பத்து நிமிடமாவது எடுக்கிறது.

அதர்வாவும் வேதிகாவும்
பாலாவின் கற்பனை.அந்த நாவலில் இருவருமே கிடையாது.விக்ரமுக்கு ஒரு சேது போல அதர்வாவுக்கு பரதேசி.ஒன்றிரண்டு படம் மட்டுமே நடித்திருக்கும் அதர்வா-க்குள் இப்படியொரு நடிகனா....! படத்தில் பாராட்டப்பட வேண்டிய முக்கியமானவர் வேதிகா.அதர்வாவை ஒட்டுப் பெறுக்கி...குச்சிப் பெறுக்கி...கு..பெறுக்கி என நையாண்டி செய்வதாகட்டும்,கடைசியில் அதர்வாவைப் பார்க்கும் போது உணர்ச்சிப் பெருக்கெடுத்து ஓடி வருவதாகட்டும்... கடைசி வரை ஸ்கோர் பண்ணுவது இவர் ஒருவரே..." அங்கம்மாவுக்கு ஒரு நேசனல் அவார்டு பார்ஸ...ல்ல்ல்...!"

எரியும் பனிக்காடு நாவலில் வரும் பிரதான கதாப்பாத்திரமான கருப்பன்-வள்ளியாக இதில் தங்கராசு-கருத்தக் கன்னியாக வரும் உதயகார்த்திக்கும்,ரித்விகாவும்.வெள்ளைக்கார துரையின் கொழுப்பெடுத்த குறிக்கு தன் மனைவியை இரையாக்கும் கொடூரத்தைக் கண்டு எதுவும் செய்யமுடியாமல் இடிந்துபோய் வெதும்பிய முகத்தோடு அப்பாவியாய் பார்க்கும் அந்தப் பார்வையில் எவ்வளவு ஆற்றாமை..! இருவருமே மிகச் சரியானத் தேர்வு.அதர்வாவின் அப்பத்தாவாக வரும் அந்தப் பாட்டி யாருப்பா..?. மகாநதி ஸ்டைலில் சொல்லணும்னா செம பாட்டி...!  வாயைத் திறந்தா இப்படியா பச்சை பச்சையா வர்றது....?!?1

இப்படியொரு உயிரோட்டமான காவியத்திற்கு ஏன் பாலா இளையராஜாவைத் தவிர்த்தார் எனத் தெரியவில்லை. 'செந்நீர் தானா' பாடலை கங்கை அமரனைப் பாடவைத்து இசைஞானியின் எ.'.பக்டு கொண்டு வர முயற்சி செய்திருக்கிறார்
கள். சாரி...ஜி.வி.பிரகாஷ்.


ரி....எரியும் பனிக்காடு  நாவலை எந்த அளவுக்கு பாலா உள்வாங்கி திரைக் காவியமாக செதுக்கியிருக்கிறார் என்பதை இங்கே அலச வேண்டியுள்ளது. இது இந்தப் படத்தில் உள்ள குறைகள் என்று கூட எடுத்துக் கொள்ளலாம்.

1.கங்காணியாக வரும் தேயிலைத் தோட்ட மேஸ்திரி ஒரு ஊரையே எப்படி நம்ப வைக்கிறார் என்பதை அழுத்தமாக சொல்லவில்லை. சூலூர் கிராமத்தில் உள்ளவர்கள் எல்லோரும் சந்தோசமாக இருப்பதாகக் காட்டிவிட்டு,கங்காணி பணப் பெட்டியைத் திறந்து காண்பித்தவுடன் மொத்த ஊர் மக்களும் நம்புவதாகக் காண்பிக்கும் காட்சி நம்பும்படி இல்லை.

2. பாலா சொல்லாமல் விட்ட இன்னொரு விஷயம்..
சாலூர் கிராமம் ஒரு ஒடுக்கப்பட்ட- தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் வசிக்கும் பகுதி. டீக்கடையில் வெளியில் போட்டிருந்த பெஞ்சில் அதர்வா உட்காரும் போது டீக்கடை ஓனர்  பிரம்பால் நையப் புடைப்பார்.இந்த ஒரு காட்சியோடு அன்றைய ஒடுக்கப்பட்ட சமூகத்தின் அவல நிலையை உணர்த்தி விட்டதாக திருப்திப் பட்டுவிட்டார் போல...இன்னும் ஒரு சில காட்சிகளை அழுத்தமாக அமைத்திருக்க வேண்டாமா...என்னவொரு கதைக்களம் .! புகுந்து விளையாட வேண்டாமா...?

3. அவர்களின் வறுமையைப் போக்குவதாகச் சொல்லித்தானே கங்காணி ஆசைக் காட்டினார்.ஆனால்
சாலூர் கிராம மக்கள் யாரும் வறுமையில் அடிபட்டு இருப்பதாகத் தெரியவில்லையே. குறிப்பாக வேதிகாவின் அம்மாவாக வருபவர் நல்ல 'செழுமை'யாகவே இருக்கிறார்.ஒருவேளை அன்றைய வறுமையான வாழ்க்கை முறை இப்படித்தான் இருக்கும் என்றால், வளமையான வேறொரு சமூகத்தை ஒப்பீடு செய்வதற்காவது காண்பித்திருக்கலாமே.

3. நாவலில், டீ
க் கடையில் அழுது கொண்டிருக்கும் நாயகனை அழைத்து நெஞ்சுருகப் பேசி மூளைச் சலவை செய்வார் கங்காணி.இந்தக் கதைக்கு முக்கியமானக் காட்சி அது.இன்றைய வெளிநாட்டு ஏஜெண்டுகளை குட்டியது போலவும் அந்த காட்சியை அமைத்திருக்கலாம்.பாலா சறுக்கிய முதல் இடம்.

4. நல்ல கலகலப்புடன் நகரும் படத்தில் அதர்வாவை அவர்கள் ஏன் கல்யாணப் பந்தியில் வெறுப்பேற்ற வேண்டும்.அதற்குப் பிறகு லேசான தொய்வு விழும்படி ஆகிவிட்டது.

5. நாற்பத்தியேழு நாட்கள் நடை பயணம் என்பதும், வரும் வழியில் யாருமே மனது மாறி திரும்பிச் செல்லவில்லை என்பதும் ஆச்சர்யம்.அதுவும் அந்த திறந்த வண்டியில் கங்காணியும் பயணித்திருப்பது நெருடல்.நாவலில் ரயிலில் பயணம் செய்வது போல் எழுதியிருப்பார்கள்.அந்தகால ரயிலை வடிவமைப்பது பட்ஜெட்டில் சூடு வைத்துவிடும் என்பதால் தவிர்த்திருக்கிறார்கள் போல...

6.நாவலில் ஒரு முக்கியமான கேரக்டர் வரும்.ஏற்கனவே அங்கு வேலைப்பார்க்கும் ஒருவர் அவ்வப்போது எஸ்டேட்டில் நடக்கும் கொடுமைகளைப் பற்றி புதிதாக வந்தவர்களுக்கு சொல்லிக் கொண்டே வருவார். அதைக் கேட்கும் போது அவர்களுக்கு மட்டுமல்ல நமக்கும் திகிலாக இருக்கும்.எதற்காக சங்கு ஊதுகிறார்கள்? அங்குள்ள சட்ட திட்டங்கள் என்ன...? இதற்கு முன் நடந்த கொடுமைகள் என்ன...? எதற்காக வருட சம்பளம்..? ஏன் மக்கள் தப்பித்துப் போக முடியவில்லை..? முன் பணம் எதற்காகக் கொடுக்கிறார்கள்...? கங்காணியின் பின்புலம் என்ன..? துரையுடன் பாலியல் ரீதியான உடன்பாட்டுக்கு ஒத்துப் போகாதவர்களுக்கு என்ன தண்டனை...? தேயிலை எடை போடும்போது நடக்கும் ஒருதலைப் பட்சம்.. மற்ற எஸ்டேட்டுகள் எப்படி இருக்கும்? இப்படி நிறைய கேள்விகளுக்கு அந்த கேரக்டர் மூலம் தெளிவாக நாவலில் விளக்கியிருப்பார்கள். அடுத்து என்ன நடக்கும் என்று திரைக்கதையில் கொஞ்சம் வேகத்தைக் கூட்ட இது உதவியிருக்கும்.


அனேகமாக தன்சிகாவின் கேரக்டர் அதுதான்.தன்சிகா டம்மியாக்கப் பட்டதால்தான் இதற்கு விடை கிடைக்கவில்லை. இதையெல்லாம் காட்சிப்படுத்திவிடலாம் என பாலா நினைத்திருப்பார் போல.ஆனால் எதுவுமே நெஞ்சில் ஒட்டவில்லை.

இதெல்லாம் தேவையா என்று கூட இங்கே கேள்வி எழலாம்.உண்மைச்  சம்பவங்களை அடிப்படையாக வைத்து படம் எடுக்கும்போது காட்சிப் படிமங்களுக்கு உணர்வுப் பூர்வமான அழுத்தம் கொடுக்க இவை தேவை தானே..!.

7. அதர்வாவுக்கு ஊரிலிருந்து கடிதம் வரும்போது...எஸ்டேட்டில் இருக்கும் யாராவது ஒருவர் இங்கிருக்கும் நிலைமையை அவர்களுக்குத் தெரியப்படுத்தியிருந்தால்,வேதிகா வருவது தவிர்க்கப் பட்டிருக்குமே என்ற கேள்விக்கு நாவலில் விடை இருக்கும்.

8. மர்ம நோயால் கொத்துக் கொத்தாக உயிர்கள் மடிந்து விழும் விஷயத்தை ஒரு தண்ணி பார்ட்டியில் வெள்ளைகார துரைகள் ஜாலியாகப் பேசிக்கொண்டிருப்பது நம் நெஞ்சில் அறைகிறது. இந்திய உயிர்களை எவ்வளவு கீழ்த்தரமாக நினைத்திருக்கிறார்கள் என்பது இது ஒன்றே போதும். எத்தனைப் பேர் செத்தாலும் அவர்களுக்கு கொடுத்த முன்பணத்தை கங்காணியின் கமிசனில் தான் கை வைப்பார்கள் எனத் தெரிந்தும் சாவு செய்தியை கங்காணியும் அலட்சியப் படுத்துவது போல் காண்பித்திருப்பது நெருடலான விஷயம்.

9.கதை முடியும் தருவாய் 1940 களில்.அந்த காலகட்டத்தில் காங்கிரஸ் இயக்கம் காந்தியடிகள் தலைமையில் கடுமையாகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது.தேயிலை எஸ்டேட்டில் உள்ள நிலைமையை ஆராய எத்தனித்திருப்பதாக செய்தி வந்தவுடன் தான் நல்ல டாக்டரை நியமிக்க நிர்வாகம் முடிவு செய்திருக்கும். அவரை மிக நல்லவராகக் காட்டியிருப்பார்கள்.அவர் மூலம்தான் எஸ்டேட் தொழிலாளிகளுக்கு விடிவுகாலம் பிறக்கும்.ஆனால் இதில் ஒரு சோப்ளாங்கி சிவசங்கரைப் போட்டு அவரை ஒரு மத போஷகராகக் காட்டி இருக்கிறார்கள்.

10.  1939-45 காலகட்டத்தில் நடந்த சம்வங்கள்தான் படம். இப்போது கண்டிப்பாக அப்படியொரு அடிமைமுறை கிடையாது.அப்படியிருக்கும் போது கிளைமாக்சில் ஏன் இப்படியொரு சோகக்காட்சி வைக்க வேண்டும்...? கொஞ்சம் பாசிடிவாக கிளைமாக்ஸ் வைத்திருக்கலாமே...அட்லீஸ்ட் அந்த டாக்டர் மூலமாகவாவது அவர்களுக்கு விடிவுகாலம் பிறந்திருக்கும் என நிம்மதியாக தியேட்டரைவிட்டு வெளியே வந்திருப்போமே... எரியும் பனிக்காடு நாவலின் முடிவும் அதுதானே...!


( இது எல்லாமே அந்த நாவலைப் படித்ததால் வந்த விளைவுன்னு நினைக்கிறேன்.இனி இது மாதிரி ஒரு தப்பு செய்யவேக் கூடாது..)

இந்தப் படத்தில் பெருங்கூட்டத்தையே நடிக்க வைத்திருக்கிறார் பாலா...அந்தக் கூட்டத்தை விட...   பாலா.. அதர்வா..வேதிகா...செழியன்... சி.எஸ்.பாலச்சந்தர்...வைரமுத்து....அப்பத்தா....என விருது வாங்கிக் குவிக்கப்போகும் கூட்டம் அதிகம் போல...(வழக்கம்போல தமிழ் சினிமா புறக்கணிக்கப் படாமல் இருந்தால்..)

இதைத் தவிர்த்துப் பார்த்தால்,தமிழ் இலக்கியம் மிக அரிதாகவே தீண்டிய இந்த இருண்ட பக்கத்தை,தமிழ் சினிமா தொடத் தயங்கும் இந்த ரத்தம் தோய்ந்த வரலாற்றை,நம் கற்பனைக்கெட்டாத சோகங்களை, அம்மக்களின் அவல வாழ்வை நம் கண் முன் நிறுத்திய இயக்குனர் பாலாவுக்கு ரா......யல் சல்யுட்.. !!!வணக்கங்களுடன்....  
மணிமாறன்.  

--------------------------------------------------------(((((((((((((((())))))))))))))))))))))-------------------------------------------

Wednesday 13 March 2013

எரியும் பனிக்காடாக பாலாவின் பரதேசி....தேநீரில் கலந்திருக்கும் உதிரம்...!வ்வொரு முறையும் நூலகம் செல்லும்போது வலியமாக என் கண்ணில் தென்படும் அந்த நாவல். அப்போது அதை எடுத்துப் படிக்க அவ்வளவு ஆர்வமில்லை.ஆனால் அதன் தலைப்பு ஏனோ ஒருவித ஈர்ப்பை ஏற்படுத்தியது.

"எரியும் பனிக்காடு '' இதுதான் அந்த நாவலின் தலைப்பு.இலக்கியரசம் சொட்டச்சொட்ட எழுதியிருப்பார்களோ என்ற அச்சத்தில் அதைப் புரட்டிப் பார்க்கக் கூட விருப்பமில்லாமல் ஒருவித மிரட்சியோடு அந்த இடத்தை கடந்து செல்வேன்.சமீபத்தில் பாலாவின் பரதேசிப் படத்தைப் பற்றிய செய்தி படிக்க நேர்ந்த போது அது எரியும் பனிக்காடு என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது என்று அறிய நேரிட்டது.


சாமி கும்பிடும் போது பிரசாதம் தீர்ந்து போயிடுமோனு ஒரு பரபரப்பு இருக்கும் பாருங்க...அப்படியொரு பரபரப்பு.அந்த புத்தகத்தை யாரும் எடுத்திரக்கூடாதுடா ஆண்டாவா...அதை வச்சி ரெண்டு பதிவாவது தேத்திடனும்டா... என்கிற வெறியோடு நூலகத்தை நோக்கி ஓடினேன். நல்லவேளை அதே இடத்தில பத்திரமா இருந்தது. ஏன்னா இது படிக்கிற மேட்டராச்சே....!


ஆனைமலை தேயிலைக் காடுகளில் 1920 லிருந்து 1930 வரை நடந்த வெவ்வேறு சம்பவங்களை பின்னிப் பிணைத்து  இந்தக் கதையை ரெட் டீ( RED  TEA ) என்ற தலைப்பில் (ரெட் லேபில் டீ அல்ல..) பி.எச்.டேனியல் என்பவர்  எழுதியிருக்கிறார்.இவர் 1945 முதல் சுமார் 25 ஆண்டுகள் தேயிலைத் தோட்டங்களில் எழுத்தராக வேலைப் பார்த்திருக்கிறார்.இந்தக் காலகட்டத்தில் 1900-லிருந்து 1930 வரை தேயிலைத் தோட்டங்களில் வேலைசெய்த பலபேரை பேட்டிக் கண்டு இந்த நாவலை வடிவமைத்திருக்கிறார். பிற்பாடு இது தமிழில் இரா.முருகவேல் என்பவரால் 'எரியும் பனிக்காடு' என்ற தலைப்பில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

 இந்த நாவலின் கதைச்சுருக்கம் இதுதான்...

1925 -ஆம் ஆண்டுதான் இந்த சம்பவங்கள் நடக்கும் காலகட்டம். திருநெல்வேலி மாவட்டம், மயிலோடை கிராமத்தில் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்த கருப்பன்-வள்ளி என்கிற புதுமணத்தம்பதிகள்தான் கதையின் நாயகன் -நாயகி.அன்றைய காலகட்டத்தில் நிகழ்ந்த கடுமையான பஞ்சம்,வறட்சியால் ஒரு வேலை உணவுக்குக் கூட வழியில்லாத சூழ்நிலை.இவர்களின் வறுமையை வாய்ப்பாகப் பயன்படுத்தி ஒரு குரூப் இவர்களுக்கு நல்ல வேலையும், தங்குவதற்கு சொகுசான இடமும் அமைத்துத் தருகிறேன் என ஆசை காட்டி தேயிலைத் தோட்டத்தில் தள்ளிவிடுகின்றனர்.அங்கு ஏற்கனவே நிறையப் பேர் இவர்களைப் போல கொத்தடிமைகளாக வேலை செய்கின்றனர்.அங்கு இவர்கள் படும் துன்பங்களும்,பாலியல் வன்முறைகளும், தினந்தோறும் அனுபவிக்கும் கொடுமைகளையும் பட்டவர்த்தனமாக தோலுரித்துக் காண்பிக்கிறது இந்த நாவல்.

ஒருபுறம் ஆங்கிலேயர்களின் அடக்குமுறை மறுபுறம் தாழ்த்தப்பட்ட மக்கள் என்பதால் அவர்கள் மீது நடத்தப்படும் மனித உரிமை மீறல்கள் என அன்றைய ஒடுக்கப்பட்ட சமூகத்தின் அவலங்களை அப்படியே நம் கண் முன் நிறுத்துகிறார் இந்த நாவலில் ஆசிரியர்.

ஆங்கிலேய துரைகளுக்கு ஜால்ரா தூக்கும் கூட்டம்,காரியம் ஆவதற்காக தன் மனைவியையே வெள்ளைக் காரனுக்குக் கூட்டிக்கொடுக்கும் குமாஸ்தாக்கள், மிருகத்தை விட கொடிய குணம் படைத்த மேஸ்திரிகள், மர்ம நோய்க்கு கொத்து கொத்தாக மடிந்து விழும் தொழிலாளிகள்,சுகாதாரமற்ற குடியிருப்புகள்,போதிய வசதிகள் இல்லாத மருத்துவமனைகள் என நாம் கண்டிராத வேறொரு இருண்ட பக்கத்தை தைரியமாக  படம்பிடிக்க முனைந்திருக்கும் இயக்குனர் பாலாவை வகை தொகை இல்லாமல் பாராட்டலாம்.


உயிருக்குள் புதையுண்ட உணர்ச்சிகளை உடலிலிருந்து உருவி எடுக்கும் இயக்குனர் பாலாவின் மற்றுமொரு கதைக்களம்.

ரோட்டோர டீக்கடையில் சாவகாசமாக தினசரிகளைப் புரட்டிக்கொண்டே தேனீரை உறிஞ்சும் ஒவ்வொருவரும் இனி அதில் கலந்திருக்கும் ஒரு சொட்டு உதிர வாசனையும் உணர்வார்கள்.தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வரலாற்றில் மிக இருண்ட பக்கத்தை இந்த நூல் அலசுகிறது.

நான் சென்னையில் வேலைப் பார்த்த போது அங்குள்ள மிகப்பெரிய ஒரு நிறுவனத்தைக் குறிப்பிட்டு, "இவரோட பொண்டாட்டிய அந்த காலத்தில வெள்ளைக்கார தொரை ஒருத்தரு வப்பாட்டியா வச்சிருந்தாராம். அதை வச்சிதான் இவ்வளவு நெலத்தையும் வாங்கி குமிச்சிருக்கிராறு.."  என நண்பன் ஒருவன் சொன்னபோது அதை மறுத்து கண்டித்தேன்.இந்தக்கதையை முழுவதுமாகப் படித்து முடித்த போது அப்படி நடந்திருக்க வாய்ப்பிருக்கிறதோ என்ற எண்ணம் வருகிறது.

இந்தக்கதையில் முக்கியமான ஹைலைட்...அவர்கள் எப்படி ஏஜெண்டுகளிடம் சிக்கி மாட்டிக்கொள்கிறார்கள் என்பதே.இந்தக் கொடுமையை தயவு செய்து படியுங்கள்..கடைசியில் ஒரு விஷயம் இருக்கிறது.

மிக ஏழ்மையான நிலையில் இருக்கும் அதிலும் சமூகத்தால் ஒதுக்கப்பட்ட-ஒடுக்கப்பட்ட மக்கள்தான் இவர்களின் குறி.மூணு வேலை சாப்பாடு ,ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனியாக வீடு,இலவச மருத்துவ வசதி,மளிகைக் கடை அக்கவுண்டு,வருடத்திற்கு ஒரு முறை ஊருக்கு வந்து செல்லலாம் என இப்படி பசப்பு வார்த்தைகளை பேசி மயக்குகிறார்கள்.இதை உண்மையா என அவர்கள் யோசிக்கும் முன்பே ஒரு பெருந்தொகையை அவர்களின் கையில் அட்வான்சாகத் திணிக்கிறார்கள்.குடும்பத்திற்கு நாற்பது ரூபாயாம். இன்றைய காலக் கட்டத்திற்கு நாற்பதாயிரத்துக்கு சமம் போல..

பசி பட்டினியில் வாழும் குடும்பங்களுக்கு இவ்வளவு பெரிய தொகை கிடைத்தால் என்ன செய்வார்கள்..? இது நாள் வரை இருந்த கடன்களை அடைத்து அத்தியாவசியப் பொருட்களை வாங்கி செலவழிப்பார்கள்.பணம் செலவாகியவுடன், ஒருவேளை மனது மாறி வர மறுத்தால் கொடுத்த அட்வான்சை திருப்பி வசூலிக்க அதிகார பலத்தை உபயோகிப்பார்கள்.

அவர்களின் அடிமை வாழ்க்கை இதிலிருந்துதான் ஆரம்பிக்கிறது.இவர்கள் எதிர்பார்த்த வசிப்பிடமும், சம்பளமும் பெருத்த ஏமாற்றத்தையே கொடுக்கிறது.பாடி எனப்படும் அந்த குடியிருப்புப் பகுதிகள் மாட்டுக் கொட்டகையை விட கேவலமானதாக இருக்குமாம். ஒரு படுக்கையறை மற்றும் ஒரு சமையலறை உடைய தகரத்தில் வேயப்பட்ட அந்த குடிசையில் இரண்டு மூன்று குடும்பங்கள் ஒன்றாக இருக்க வேண்டுமாம்.

இவர்களுக்கு வருடாந்திர சம்பளம்.அதற்கு ஒரு பின்புலம் இருக்கிறது.இந்த தேயிலைக் காடுகளின் உரிமையாளர்கள் ஐரோப்பாவில் பெரும் செல்வந்தர்கள்.தொழிலாளிகளுக்குக் மாதம்தோறும் கொடுக்க வேண்டிய சம்பளத்தை சேமித்து வருடக்கடைசியில் கொடுப்பதால் அதுவரை அந்தத் தொகையை வட்டிக்கு விட்டு அதில் ஒரு அமவுண்ட் பார்ப்பார்களாம்.

எவ்வளவு கடுமையாக உழைத்தாலும் வருடத்திற்கு அவர்களால் 70 ரூபாய்க்கு மேல சம்பாதிக்க முடியாது. அதில் மளிகைக் கடை அக்கவுண்டுக்கு 20 ரூபாய்,கம்பளி, துணிமணிகள்,இதர செலவுகளுக்கு அட்வான்ஸ் 20 ரூபாய் என கழித்துப் பார்த்தால் வருடக் கடைசியில் 20 ரூபாய் கூட தேறாது.மீதமிருக்கும் பணத்தை அப்படியே மேஸ்திரியிடம் ஆரம்பத்தில் பெற்ற அட்வான்சுக்காகக் கொடுப்பார்கள்.

ஆக..முதல் இரண்டு வருடத்திற்கு அவர்களால் சேமித்து எதுவுமே வீட்டிற்கு அனுப்ப முடியாது. மேஸ்திரிகளுக்கு இதில் கமிசன் கிடைக்கும்.அவர் அழைத்து வந்த தொழிலாளிகள் வருடத்திற்கு எவ்வளவு சம்பாதிக்கிறார்களோ அதில்10 பெர்சென்ட் கமிசனாக நிர்வாகம் கொடுக்கும். கமிசன் குறைந்துவிடுமோ என்பதற்காக தொழிலாளிகளை அடித்து உதைத்து வேலை வாங்குவார்களாம். கடுமையானக் காய்ச்சல் அடிக்கும் காலகட்டங்களிலும் உடல்வருத்தி வேலை செய்யப் பணிக்கப்படுவார்களாம். அதற்காக இவர்களிடம் அடியாள் குரூப் ஓன்று இருக்கும். தப்பித்துப் ஓடும் சிலரை அடித்தே கொல்வார்களாம். அதுவும் மற்ற தொழிலாளிகளின் முன்னால். ஏனென்றால் அப்போதுதான் மற்றவர்களுக்கு தப்பிக்கும் எண்ணம் வராதாம்.

சரி..இப்போது மேலே சொன்ன விசயங்களில் தேயிலைத் தோட்டத்தொழிலாளர்களுக்குப் பதில் வெளிநாட்டு மோகத்தில் கிராமப்புறத்திலிருந்து வெளிநாடு செல்லும் அப்பாவிகளைப் போட்டுக் கொள்ளுங்கள். மேஸ்திரிக்குப் பதில் நம்மூர் எஜெண்டுகளைப் போடுங்கள்.மறுபடியும் இந்தக் கதையைப் படித்துப் பாருங்கள்.

எந்தவித பட்டப்படிப்பும்,தொழில்நுட்பப் பின்புலமும் இல்லாமல்' நானும் வெளிநாட்டுக்குப் போறேன்' என கிளம்பிய பல பேருடைய வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது.இதை நான் கண் கூடாக பார்த்தவன் என்கிற முறையில் இரண்டையும் ஒப்பிடுகிறேன்.

ஒரே ஒரு உண்மையை மட்டும் இங்கே சொல்கிறேன்.நான் வசிக்கும் சிங்கப்பூரில் நடப்பதை சொல்கிறேன். ஊரில் எல்லா ஏஜெண்டுகளும் நெஞ்சுருக பேசுவார்கள்.ஆனால் அவர்களின் இன்னொரு முகத்தை இங்கே காணலாம்.  தங்குமிடமும்,டிரான்ஸ்போர்ட்டும் இலவசம் என பசப்பு வார்த்தைகள் பேசுவார்கள்.அது நூறு சதவித உண்மை.ஆனால் அது எப்படியிருக்கும் என்பதுதான் இங்கே யோசிக்கவேண்டிய விஷயம்.Shipyard & Construction துறையில் வேலை பார்ப்பவர்களை அழைத்து செல்லும் விதம் கொடுமையானது.மேலே மட்டும் மூடப்பட்ட ஒரு டெம்போவேனின் பின்புறம் ஆட்டு மந்தைகளை அடைப்பதுபோல் அடைத்துக் கூட்டிச் செல்வார்கள்.இருக்கை எல்லாம் கிடையாது.அப்படியே சம்மணமிட்டு உட்கார வேண்டியதுதான்.அதிலும் மழைக் காலங்களில் கடும் சாரலில் அவர்கள் நனைந்து சாக்கு பைகளை தலைக்கு மேல் தூக்கிப் பிடித்துக் கொண்டு பயணித்ததைப் பல முறைப் பார்த்து நொந்து போயிருக்கிறேன்.  என் நண்பன் ஒருவனுக்கு இலவச தங்குமிடம் என்று சொல்லி கண்டைனரில் தங்க சொல்லியிருக்கிறார்கள். ஏஜென்டிடம் கேட்டதற்கு ' உனக்கு என்ன ஸ்விம்மிங் பூலோடு ஏசி வச்ச அபார்ட்மென்ட்லயா வீடு குடுப்பாங்க'-னு கடுப்படிச்சிருக்கான்.சரி..இப்போ பரதேசி படத்துக்கு வருவோம்.சில நாட்களுக்கு முன் பரதேசி பட சம்மந்தமாக ஒரு காணொளி (TEASER) வெளியாகியது.அதில் இயக்குனர் பாலா பலபேரை கண்முன் தெரியாமல் அடிப்பதாக காட்சிகள் உள்ளது.இதற்காக பல இணையதள பெருசுகள் கடுமையான கண்டனத்தை முன் வைத்திருக்கிறது. ஆனால் எனக்கென்னவோ இது காட்சிக்காக எடுக்கப்பட்ட 'ரிகர்சல்' என்று தான் தோனுகிறது. எரியும் பனிக்காடு நாவலை முழுமையாகப் படித்தவர்களுக்கு அந்த காட்சிப் படிமங்களின் அர்த்தம் தெளிவாகப் புரியும். அங்குள்ள மேஸ்திரிகளும்,வெள்ளைக்காரத் துரைகளுக்கு சொம்பு தூக்கும் சிலரும் தொழிலாளிகளை அடித்துத் துன்புறுத்தும் கொடுமை அந்த நாவலின் ஒவ்வொரு பக்கத்திலும் விவரிக்கப் பட்டுள்ளது. ஆனால் திரையில் இதைவிட இன்னும் கொடுமையான சம்பவங்களை பாலா காட்சிப்படுத்தியிருப்பார் என நினைக்கிறேன்.....   

நிச்சயமாக இப்படியொரு கதைத்தளத்தையும் கதைக்களத்தையும் கையாளும் திறன் தமிழ் சினிமாவில் பாலாவைத் தவிர வேறு யாருக்கு உண்டு...?

வணக்கங்களுடன்....
மணிமாறன்.


------------------------------------------------------((((((((((((((((((((()))))))))))))))))))))))--------------------------------

Saturday 9 March 2013

பொதுத்தேர்வு வினாக்களில் குளறுபடி ஏன்..?ன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கிவிட்டது.வழக்கம் போல தேர்வு எழுதும் உறவினர் வீட்டுக் குழந்தைகளுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக ஊருக்கு போன் செய்து 'ஆல் தி பெஸ்ட்' சொல்லி பரீட்சை எவ்வாறு இருந்து என வினவினேன்.

தமிழ் முதல்தாள் மிகவும் எளிதாக இருந்ததாகவும் சென்ற வருடம் பொதுத் தேர்வில் கேட்கப்பட்ட நிறைய கேள்விகள் இந்
வருடமும் கேட்கப்பட்டது என தெரிவித்தார்கள்.பொதுவாகவே கடந்த ஐந்து வருடங்களில் கேட்கப்படும் கேள்விகளை படித்தாலே போதும் அதிலிருந்துதான் கேள்விகள் கேட்கப்படும் என எனது ஆசிரியர்கள் சொன்ன பழைய அட்வைஸை இப்போதும் உதிர்த்துவிட்டு போனை துண்டித்தேன்.

சில நாட்களுக்கு முன்  ஊடக செய்திகளைப் படிக்கும் போது இது பூதாகரமான பிரச்சினையாக்கப்பட்டது தெரியவந்தது.கடந்த 2012 மார்ச் மாதம் நடந்த தமிழ் முதல் கேள்வித்தாள், அப்படியே இந்த ஆண்டும், "ரிப்பீட்' ஆகியுள்ளதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டியிருக்கிறார்கள்.மொத்தம் 10 பகுதிகளில், 50 கேள்விகளுக்கு விடை அளிக்கும் வகையில் கேள்வித்தாள் அமைக்கப்பட்டிருந்தது. இதில் மொத்தம் உள்ள 100 மதிப்பெண்களில், 63 மதிப்பெண்களுக்கான 29 கேள்விகள், அப்படியே வரி பிசகாமல், இந்த ஆண்டு கேள்வித்தாளிலும் இடம் பெற்றுள்ளன.

சரி.. நம் கல்வியாளர்களிடம் ஏன் இந்த மெத்தனப் போக்கு.. ? சமச்சீர் கல்வி என்றெல்லாம் பெருமை பீத்திக்கொள்ளும் நம் கல்வி முறையில் இது பின்னடைவு இல்லையா...? சில நேரங்களில் அவுட் ஆப் சிலபஸில் கேள்விகள் கேட்டு எக்ஸாம் ஹாலில் ஏகப்பட்ட டென்சனை ஏற்றிவிடுவார்கள்.

உங்களுக்கும் கோபம் வருகிறது தானே...பின்ன வாழ்க்கையில எழுதும் ஒரே ஒரு பொதுத் தேர்வில் இப்படி அலட்சியப் போக்கில் வினாக்கள் கேட்பது சரியா...? எனக்கும் அப்படித்தான் ஆனது.

நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது கணிதத்தில் சென்டம் அடித்தே ஆகவேண்டும் என்கிற வெறி காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளின் ஒரு மார்க்கில் என்னை வெறுப்பேற்றியது.அதுவே பொதுத் தேர்வில் 'ஏக டென்சனாக' மாறிப்போனது.பத்தாம் வகுப்புக்கு சம்மந்தமே இல்லாத sec,cosec,cot என முக்கோனவியலில் கேள்விகள் கேட்கப்பட,எக்ஸாம் ஹாலில் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டேன்.அந்த டென்சனில் ஒரு இரண்டு மார்க் கேள்வியை விட்டுவிட்டு வந்துவிட்டேன் என்பதை வெளியில் வந்துதான் அறிந்தேன். சிலபஸைத் தாண்டி கேட்கப்படும் கேள்விகளுக்கு அட்டெண்ட் செய்தாலே முழு மதிப்பெண்ணும் வழங்கப்படும் என்ற விதிமுறை இருந்த போதிலும் அது எக்ஸாம் எழுதும் ஹாலிலேயே உறுதி செய்யப் படாததால் அந்த நேரத்தில் ஏற்படும் மன அழுத்தத்தினால் நிகழும் தவறுகளுக்கு யார் பொறுப்பேற்பார்கள் ...?

ஒவ்வொரு மாணவரின் எதிர்காலத்தையே தீர்மானிக்கக் கூடிய இந்த பத்தாம் / பன்னிரெண்டாம் வகுப்பின் பொதுத்தேர்வில் ஏன் இந்த குளறுபடி ஏற்படுகிறது..?

பொதுவாகவே 10 வது மற்றும் 12 வது பொதுத் தேர்வுக்கு வினாத்தாள்கள் எவ்வாறு தயார் செய்யப்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா..?

வினாக்களின் தரத்தை விட பாதுகாப்பு அம்சமே இது போன்ற தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள். இதற்கு முழு பொறுப்பு அரசுத் தேர்வுகள் இயக்குனரகத்தையே சாரும்(Directorate of Government Examination ).வினாத்தாட்களை தேர்வுசெய்யும் பொறுப்பு இவர்களிடம்தான் உள்ளது.'கொஸ்டின் பேப்பர் அவுட்' ஆகாமல் பாதுகாக்கும் மிகப்பெரிய கடமையும் இந்த இயக்குநரகத்திடம் உள்ளது.


உதாரணமாக... 12 ஆம் வகுப்பு கணிதப் பாடத்தின் பொதுத்தேர்வு வினாத்தாள் தயார் செய்கிறார்கள் என வைத்துக் கொள்வோம்.இவர்களின் முதல் நோக்கமே எந்த விதத்திலும் வினாத்தாள்கள் அவுட் ஆகிவிடக் கூடாது என்பதே.இதற்காக தனிக்குழு எதுவும் கிடையாது. இதற்காக  வெவ்வேறு பதவிகளில் உள்ள, ஒருவருக்கொருவர் தொடர்பில்லாத ஐந்து பேரைத் தேர்ந்தெடுப்பார்கள்.அந்த ஐந்து பேரும் யார் என்பது இயக்குனருக்கு மட்டுமே தெரியும்.அந்த ஐந்து பேரில் ஒருவர் பனிரெண்டாம் வகுப்பு எடுக்கும் ஆசிரியர்,ஒருவர் ஓய்வு பெற்ற ஆசிரியர், ஒருவர் பல்கலைக் கழக கணித பேராசிரியர் என வெவ்வேறு நிலையில் உள்ளவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு முந்தைய வருடங்களில் கேட்கப்பட்ட வினாத்தா
ள்களைக் கொடுத்து இதே போன்ற வினாத்தாளை அமைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுவார்கள்.

அவர்கள் அமைத்த ஐந்து வினாத்தாள்களும் தனித்தனியாக பாதுகாப்புடன் இயக்குனரகத்திடம் வரும்.அந்த ஐந்து வினாத்தாள்களில் எந்த வினாத்தாள் எனபதை இயக்குனர்தான் தேர்ந்தெடுப்பார்.ஒருவேளை இந்த ஐவரில் யாரேனும் 'லீக்' செய்துவிட்டால் வினாத்தாள் அவுட் ஆவதற்கு நிகழ்தகவு குறைவுதான்.அப்படி அவுட் ஆகும் பட்சத்தில் மற்றொரு வினாத்தாளையும் உபயோகப் படுத்தவும் முடியும்.

முதலில் ஐந்து  வினாத்தாளிலும் சரியாக இருநூறு மார்க்குக்குதான் கேட்கப்பட்டிருக்கிறதா என்பதை மட்டும் இயக்குனர் சோதிப்பார். கேள்விகள் அவுட் ஆப் சிலபஸில் இருந்தாலோ அல்லது தவறான வினாவாக இருந்தாலோ அவரால் இனம் காண முடியாது.

பின்பு அவை தனித்தனியாக சீல் செய்யப்படும். இப்போது எந்த வினாத்தாள் யார் எடுத்தது என்பது அவருக்கும் தெரியாது. இந்த ஐந்து வினாத்தாளில் ஏதாவது ஒன்றை ராண்டமாக தேர்ந்தெடுப்பார்.

பிறகு அது சிவகாசியிலோ அல்லது சென்னையிலோ அச்சிடப்படுவதில்லை.தமிழ்த் தெரிந்தவர்கள் இல்லாத அச்சகமாக இருக்கவேண்டும் என்பது முதல் நோக்கம்.அதற்காக பீகார்,மகாராஷ்டிரா போன்ற தமிழர்கள் வேலைசெய்யாத அச்சகமாக அதைக் கொண்டு செல்வர்.எந்த அச்சகம் என்பதும் ரகசியமாக வைக்கப்படும். ஒரே அச்சகத்திலும் கொடுக்க மாட்டார்கள். அச்சிடப்பட்டவுடன் இறுதியாக அது சீல் செய்யப்பட்டு இயக்குனரகத்திடம் வந்து சேரும்.

சரி.. இப்போது யோசிப்போம்.தவறு எதனால் ஏற்படுகிறது? பொதுவாகவே பாடப்புத்தகங்கள் தயார் செய்வதற்கு கல்வித்துறையில் உயர்பதவியில் இருப்பவர்கள் ஒரு குழுவாக இணைந்து வேலை செய்வார்கள். ஆனால் வினாத்தா
ள்களை குழுவாக இணைந்து தயார் செய்ய முடியாது.அச்சிடப்பட்ட வினாத்தாள்களை சரிபார்ப்பதற்கும் குழு அமைக்க முடியாது.இரண்டுமே ரிஸ்க்கான விசயம்தான்.ஏதோ ஒரு ஓட்டை வழியாக வினாத்தாள் அவுட் ஆவதற்கு வாய்ப்பு இருக்கிறது.அதேபோல் தமிழ்நாட்டில் உள்ள அச்சகத்திலும் அச்சிட முடியாது.இது அதைவிட பாதுகாப்பற்ற விஷயம்.வேறு வழியில்லாமல்தான் இந்த பழைய நடைமுறையையே பின்பற்றி வருகிறார்கள்.

தற்போது நமக்கு நிறைய கேள்விகள் எழலாம்.அச்சகத்திற்கு செல்லும் முன்பே சரிபார்க்கலாமே...அட்லீஸ்ட் அச்சிட்டு வந்த பிறகாவது அனுபவமுள்ள ஒருவரை வைத்து இறுதி ஆய்வு செய்யலாமே...  இதுபோன்ற கேள்விகள் அவர்களுக்கும் எழாமல் இருக்காது.எவ்வளவோ தொழில்நுட்பம் வளர்ந்த சூழலில் வேறு ஏதாவது புதிய யுத்தியைப் பயன்படுத்தினால் மட்டுமே இதுபோன்ற குறைகளை சரி செய்யமுடியும். --------------------------------------------(((((((((((((((((())))))))))))))))))))))----------------------------------------


Friday 1 March 2013

உண்மையான காவிரி நாயகன்...!1990 ஆம் ஆண்டு என நினைக்கிறேன்..மத்தியில் வி.பி சிங் பிரதமராகவும் தமிழகத்தில் கலைஞர் முதல்வராகவும் இருந்த காலகட்டம்.அப்போதிருந்த வி.பி.சிங் அமைச்சவையில் திமுகவும் இடம் பெற்றிருந்தது.

நடுநிலைப் பள்ளிப் பருவம்.மனித சங்கிலி போராட்டம் என்றால் என்னவென்பதை
அப்போதுதான் முதன் முதலில் அறிந்து கொண்டேன்.ரோட்டோரங்களில் அவ்வப்போது மேடைபோட்டு முழங்கும் செஞ்சட்டை தோழர்கள் சிலமுறை சொல்லக் கேட்டிருக்கிறேன்.சங்கிலியின் இருபுறங்களையும் பிடித்துக் கொண்டு போராட்டம் நடத்துவார்களோ என அதற்கு முன்பு வரை நினைத்துக் கொண்டிருந்தேன்.

சிறுவர்கள்,பெரியவர்கள்,பெண்கள்,சாதி, மதம், கட்சி என எந்தவித பாகுபா
டுமின்றி எல்லோரும் ஒன்றாகக் கூடியது அந்தத் தருணத்தில்தான்.அதற்குக் காரணமில்லாமல் இல்லை.எங்களின் ஒரே வாழ்வாதாரமான விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்காமல் காவிரி டெல்டா விவாசாயிகள் கொஞ்சம் கொஞ்சமாக வறுமையின் பிடியில் சிக்கிக்கொண்டிருந்தனர்.

விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாகவும்,காவிரி தண்ணீர் கிடைத்தால் மட்டுமே எங்கள் பகுதிகளில் வாழும் விவசாயத் தொழிலாளிகள் வயிறு பாதியாவது நிரம்பும் நிலையிலிருந்த மோசமான சூழ்நிலை. நிலத்தடி நீரைப் பயன்படுத்த ' போர்செட் பம்புகள்' கூட அரிதாகத்தான் இருந்தது.இப்போதிருந்த தொழில் வளர்ச்சியும், வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ள நகரத்தை நோக்கி நகரும் முயற்சியும் அவ்வளவாக கிடையாது.

விளைநிலங்களை விலை நிலங்களாக மாற்றி ' பிளாட்' போடும் வியாபார சூட்சமம் யாருக்கும் அப்போது தெரிந்திருக்கவில்லை.எல்லாவற்றிற்கும் விவசாயத் தொழில் மட்டுமே ஒரேத் தீர்வாக இருந்தது.ஆனால் விவசாயத்தின் பிரதான மூலதனமான தண்ணீர்.....? 

 கம்யுனிஸ்ட் தோழர்களின் தொடர் போராட்டங்கள்...மாறி மாறி ஆட்சியமைத்த திராவிடக் கட்சிகளும் அவர்களோடு ஒட்டிக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியும் இதைப் பெரிதாகக் கண்டுகொள்ளவுமில்லை.50 ஆண்டுகளுக்கு மேலான பிரச்சனை,எங்கே தீர்வு கிடைக்கப் போகிறது என்று சோர்ந்து போயிருந்த எம் மக்களின் கண்களில் நம்பிக்கை ஒளியைக் காட்டியது காவிரி நடுவர் மன்றம்.

காவிரி டெல்டா பகுதிகளைப் பார்வையிடுவதற்காக வந்த நடுவர் மன்றக் குழுவினரின் கவனத்தை   ஈர்ப்பதற்காகத்தான் அப்போது அப்படியொரு மனித சங்கிலி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அப்போது தஞ்சை,நாகை,திருவாரூர் மாவட்டங்கள் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டமாக இருந்தது.அவர்கள் பார்வையிட வந்த அனைத்து பகுதிகளிலும் மனித சங்கிலி அறப்போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.

நாங்கள் வசிக்கும் திருவாரூர்- திருத்துறைப்பூண்டி சாலை சுமார் 25 கிலோமீட்டர்.காலையிலிருந்தே சாலைகளில் குவிந்து விட்டோம்.இதற்கான ஒருங்கிணைப்பை அந்தந்த ஊர் கிராம அலுவலர்கள் பொறுப்பெடுத்துக் கொண்டனர்.தொலை
த்தொடர்பு வசதி அவ்வளவாக இல்லாத காரணத்தால் எப்போது வருவார்கள் என தெரிந்துகொள்ள முடியவில்லை.பத்து நிமிடத்திற்கு ஒரு முறை , " இதோ புறப்பட்டு விட்டார்கள்...இன்னும் பத்து நிமிடத்தில் வந்து விடுவார்கள்..." என கட்சிக் கொடி பறந்த காரில் அறிவித்துக் கொண்டே சென்றனர்.

சுமார் மூன்று மணிநேர காத்திருப்புக்குப் பின் வந்தார்கள்.முழுவதும் கறுப்புக் கண்ணாடியால் மூடப்பட்ட ஐந்தாறு ஏசி கார்கள்  மின்னல் வேகத்தில் வந்தது. எங்களின் வாழ்வாதாரத்தைக் காக்க வந்த கடவுளாக அவர்கள் தெரிந்தனர்.ஒவ்வொருவரும் அருகிலிருந்தவரின் கைகளை இறுகப்பற்றிக் கொண்டோம்.நெஞ்சில் உள்ள வலிகளை தங்களில் கைகளை அழுத்திக் கோர்ப்பதில் வெளிக்காட்டினர் எங்கள் விவசாயத் தோழர்கள்.

அன்று மாலை செய்திதாள்களில் நடுவர்மன்றக் குழு அளித்தப் பேட்டி வெளியானது. ' இது மனித சங்கிலியல்ல...மனித சுவர்கள்..' என வர்ணித்திருந்தனர்.உலகத்திலேயே மிகப்பெரிய மனித சங்கிலி போராட்டமாக அப்போது ஆச்சர்யமாகப் பேசப்பட்டது.வறட்சியால் வெடித்துப் போயிருந்த விளைநிலங்களைப் பார்த்தபோது எங்கள் இதயமும் வெடித்துப் போனது என வேதனையுடன் பேட்டியளித்திருந்தனர்.அதுவே டெல்டா பகுதி விவசாயிகளுக்கு நீதி கிடைத்த சந்தோசத்தை அப்போது அளித்தது. 

1991 ஆம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு 205 டி.எம்.சி. தண்ணீர் தர வேண்டுமென்று ஒரு இடைக்கால ஆணையை நடுவர் மன்றம் வழங்கியது. அது வரண்டு போயிருந்த விவசாயிகளின் வயிற்றில் பாலை வார்த்தது போலிருந்தது.

அறுவடைக்குத் தயாராக வகை தொகையில்லாமல் வெளைஞ்சு கிடக்குது எங்கள் வயல்...(படம்..நானே..)

ஆனால் அதை கர்நாடகம் கொடுக்க மறுக்க அதிலிருந்து போராட்டங்கள்.. உண்ணாவிரதங்கள்...அரசியல் நாடகங்கள் என அரங்கேறிக்கொண்டே இருந்தது.முழுமையான நீதி கிடைக்க எந்த கட்சியுமே மத்திய அரசுக்கு போதுமான அழுத்தங்கள் கொடுக்கவில்லை.தமிழக கட்சிகளின் தயவை மத்திய அரசு எதிர்நோக்கியிருந்த காலகட்டங்களிலும் தன் சொந்தத் தேவைகளை அந்தக் கட்சிகள் நிறைவேற்றிக் கொண்டதேத் தவிர,காவிரி விசயத்தில் ரெண்டாம் பட்சமாகவே நடந்துக் கொண்டது.

தற்போது நடுவர் மன்ற தீர்ப்பு தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக வந்தது.நீதிபதி என்.பி. சிங் தலைமையிலான நடுவர் மன்றம் தற்போது வழங்கியுள்ள தீர்ப்பில் காவிரியின் மொத்த நீர் 740 டி.எம்.சி. என கணக்கிடப்பட்டு அதில் தமிழ்நாட்டுக்கு மட்டும்  419 டி.எம்.சி. வழங்கவேண்டும் என கூறியிருக்கிறது.
 

 இந்தத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட மத்திய காங்கிரஸ் அரசு தயங்கிக் கொண்டிருக்க, உச்ச நீதிமன்றம் கொடுத்த கடும் நெருக்கடியால் வேறு வழியில்லாமல் மத்தியஅரசு இதை கெசட்டில் பதித்தது. காவிரி நதிநீர் வழக்கில் இது மிகப்பெரிய வரலாற்று நிகழ்வு...!

ஆனால் ' காக்கா உட்கார பனம்பழம் விழுந்த ' கதையாக இதை தமிழகத்தின் ஆளுங்கட்சி கொண்டாடுவது மிகவும் வேடிக்கையாக உள்ளது.ஜெயலலிதாவின் ஒரு பக்க அறிக்கையில் " எனது ஆணையின்படி..என் உத்தரவு படி..நான் பெற்றுத்தந்தேன்." என ஆறேழ இடங்களில் குறிப்பிடும் அளவுக்கு இந்த வெற்றியை தனதாக்கிக் கொள்ளும் பதட்டம் அவரிடம் தெரிகிறது.
 

காவிரி நடுவர் மன்றம் அமைத்தபோது ஒவ்வொரு டெல்டா விவசாயியின் வாயில் உச்சரிக்கப்பட்ட ஒரே பெயர் வி.பி.சிங் தான்.இரண்டு மாநிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனை என்று ஒவ்வொரு அரசும் மெத்தனமாக இருக்க,தீர்ப்பு ஒரு மாநிலத்திற்குதான் சாதகமாக வரும் என தெரிந்தே தைரியமாக நடுவர் மன்றத்தை அமைத்தவர் வி.பி.சிங். இவ்வளவுக்கும் அவர் சார்ந்த ஜனதா தளம் அப்போது கர்நாடகத்தில் மிகப்பெரிய சக்தியாக இருந்தது.

இன்று தமிழக விவசாயிகளுக்கு கிடைத்த இந்த நீதிக்கு யார் காரணம் என்று தஞ்சை,திருவாரூர்,நாகை மாவட்ட விவசாயிகளிடம் கேட்டுப் பாருங்கள்.ஒருமித்தக் குரலில் சொல்வார்கள் ' உண்மையான காவிரி நாயகன் வி.பி.சிங் ' தான் என்று...! வணக்கங்களுடன்......
மணிமாறன். 
-------------------------------------------------((((((((((((((((((()))))))))))))))))))))---------------------------------------------------