Showing posts with label இலக்கியம். Show all posts
Showing posts with label இலக்கியம். Show all posts

Saturday, 4 July 2015

சப்பாத்தியை ஓட்டை போடுவது எப்படி..?

 சிங்கை வந்த புதிது. இங்குள்ள சிங்கப்பூர் தமிழ்க் குடிமக்கள் பேசும் தமிழைப் புரிந்து கொள்வதற்கு ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமப்பட்டேன். தமிழ் நாட்டில் ஒவ்வொரு பகுதி மக்களுக்கும் ஒரு வட்டார பேச்சு வழக்கு உண்டு. நெல்லைத்தமிழ் , கொங்கு தமிழ், மதுரைத்தமிழ், சென்னைத்தமிழ் என்று அந்தந்த பகுதி மக்களுக்கும் ஒரு ஸ்லாங் உண்டு.

இதை SLANG என்று சொல்வதை விட DIALECT என்று சொல்வதுதான் சரி. SLANG வேறு... DIALECT வேறு.  "ங்கோத்தா.. " என்பது சென்னை ஸ்லாங்.  "படா பேஜாருப்பா..இப்ப இன்னா சொல்லுறே நீ.." என்பது சென்னை DIALECT . புரியவில்லை என்றால் விட்டுவிடவும். நான் சொல்ல வருவது இதைப் பற்றியல்ல.

நம்மூரில் பல வட்டார பேச்சு வழக்கு இருப்பது போல சிங்கை-மலேசியாவுக்கும் தனித்துவமான வட்டார பேச்சு வழக்கு உண்டு. "அண்ணே... இத இனிமே பாய்க்க முடியாதண்ணே..." என்பார்கள். பாய்க்க முடியாது என்றால், பாவிக்க முடியாது. பாவிக்க முடியாது என்றால், பயன்படுத்த முடியாது. இதே வார்த்தை இலங்கையிலும் பாய்க்கப்படுவதாக ஸாரி..பயன்படுத்தப்படுவதாக சென்னைப் பித்தன் அய்யா பதிவு ஒன்றில் பார்த்தேன். இலங்கையில் ஒரு துணிக்கடையில் "நாங்கள் பாவிக்கும் புடவை விற்கிறோம்” என்று பதாகை எழுதி வைத்திருந்தார்களாம். உபயோகிக்கும்..பயன்படுத்தும்...என்கிற அர்த்தத்தில் இதை எடுத்துக்கொள்ள வேண்டும்.

சிங்கை சென்ற புதிதில், என் அலுவலகத்தில் மலேசியா நண்பன் ஒருவன் நைட் ஷிப்ட்டில் வேலை பார்த்தான். அவனது பெயர் முருகன். காலை ஷிப்டை முடித்துக்கொண்டு நான் கிளம்பும் வேளையில் இரவுப் பணிக்கு அவன் வருவான். ஒரு நாள் பணிக்கு வந்த உடனேயே பரபரப்பாக அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தான்..

"என்ன முருகா .. என்ன தேடிகிட்டு இருக்க..?.."

" என் சப்பாத்திய எவனோ ஓட்டை போட்டுட்டாண்ணே.."

" என்னது சப்பாத்திய ஓட்டை போட்டுட்டானுவளா.. அதப் போயி எதுக்குய்யா ஓட்டை போட்டாணுவ..  அத எங்க வச்சிருந்த..?"

" ட்ரெஸ் கழட்டுற இடத்தில தான்ணே வச்சிருந்தேன்.. "

" அத எடுத்துட்டு வா பாக்கலாம்... "

" அண்ணே.. ஓட்டை போட்டுட்டாணுவங்கிறேன்.. அத எடுத்துட்டு வா..ங்கிறீங்க.."

"சரியா.. டென்சன் ஆகாதய்யா.. வேற வாங்கிக்கிலாம் விடுய்யா ...."

"அண்ணே அது அம்பது வெள்ளிண்ணே.. "

" அம்பது வெள்ளியா.. என்னய்யா அநியாயமா இருக்கு.. சரி இனிமே வாங்குனா பேக்கு உள்ளேயே வச்சிக்க.. வெளிய வைக்காத..":

" நானே ஓட்டை போட்டுடாணுவங்கிற டென்சன்ல இருக்கேன்.. நீங்க வேற பேக்குல வய்யி.. லாக்கர்ல வய்யின்ட்டு.. "

"ஓட்டை போடுற அளவுக்கு வக்கிரம் புடிச்சவன் எல்லாம் இங்க இருக்கானா... ஒருவேள விளையாட்டா செஞ்சியிருப்பாங்க... சரி விடுய்யா... எவனாச்சும் கவர்ல என்ன இருக்குனு தெரிஞ்சிக்கிறதுக்கு விரல விட்டு பாத்துருப்பான். ஓட்டை விழுந்திருக்கும். இருந்தாலும் சப்பாத்தி அம்பது வெள்ளி விக்கிறது அநியாயம்யா.. அந்த ஹோட்டல் எங்க இருக்கு..."

அவ்வளவுதான். செம காண்டாகி அங்கிருந்து கிளம்பி போயிட்டான். எனக்கு ஒரே குழப்பம். நம்ம ஊரு பையன் ஒருத்தன கூப்பிட்டு, " என்னப்பா சாப்பிடற சப்பாத்திய போயி எவனாவது ஓட்டை போடுவானா... மட்டமா இருக்காங்கப்பா .."

"அவனே ஷூ வை காணும்னு தேடிக்கிட்டு இருக்கான்...  அவன ஏன்ணே டென்சன் ஏத்துறீங்க.."

" யோவ் சத்தியமா தெரியாதுய்யா.. அவன்தான் சப்பாத்தியை ஓட்டை போட்டுட்டாங்கனு சொன்னான்.."

"அது சப்பாத்தி இல்லன்ணே.. சப்பாத்து.."

அடப்பாவிகளா.. ஷூவதான் சப்பாத்துனு சொல்றீங்களா.. அப்போ இவ்ளோ நேரம் ஷூ காணாம போனத பத்திதான் பேசிகிட்டு இருந்திருக்கானா.. அவன் சப்பாத்துனு சொன்னது என் காதில சப்பாத்தின்னு விழுந்திருக்கு. நான் சப்பாத்தின்னு சொன்னது அவன் காதுல சப்பாத்துனு விழுந்திருக்கு. அப்போ ஓட்டைப் போடுறதுன்னா திருடிட்டு போறது போல.. 

அப்புறம் விசாரித்தால்தான் தெரியுது. சப்பாத்து என்பது shoe-வின் தமிழாக்கமாம். ஜெயமோகன் கூட அந்த வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார். நமக்குத்தான் தெரியாமல் போய்விட்டது.

ஒரு தமிழ் வார்த்தையை அயல்நாடு சென்று அறிய வேண்டிய சூழல் எனக்கு. ஆனால் வேற்று மொழியிலிருந்து வந்த நிறைய வார்த்தைகள் தற்போது தூய தமிழ் சொற்கள் போல தமிழில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிலர் எழுதும் மரபுக் கவிதைகளில் கூட அவ்வார்த்தைகள் சர்வ சாதாரணமாகத் தென்படுகிறது.

உதாரணத்திற்கு சில... (அடைப்புக் குறிக்குள் உள்ளது தூய தமிழ்ச் சொல்)

அர்ச்சனை  (மலரிட்டு வழிபடுதல்)
சுதந்திரம்  (விடுதலை)
வாகனம்  (ஊர்தி)
 வருடம்  (ஆண்டு)
பட்சி  (பறவை)
சங்கதி  (செய்தி)
வாசனை  (மணம்)
விவாகம்  (திருமணம்)
பண்டிகை  (திருவிழா)
கேணி  (கிணறு)
கடுதாசி  (கடிதம்)
ஆஸ்பத்திரி  (மருத்துவமனை)
மகசூல்  (விளைவு)
ஜமக்காளம்  (விரிப்பு)
தபால்  (அஞ்சல்)
தயார்  (ஏற்பாடு)
புகார்  (முறையீடு)
வக்கீல்  (வழக்குரைஞர்)
பந்தயம்  (பணயம்)
அசல்  (மூலம்)
ஆசாமி  (ஆள்)
இலாகா  (துறை)
சந்தா (உறுப்பினர் கட்டணம்)
மைதானம்  (திடல்)
சன்னல்  (காலதர்)
பந்தோபஸ்து  (பாதுகாப்பு)
சிபாரிசு  (பரிந்துரை)
கோர்ட்  (நீதி மன்றம்)
சிப்பாய்  (போர்வீரன்)
பாக்கி  (மிச்சம்)
வாய்தா  (நிலவரி)
ஏராளம்  (மிகுதி)
நபர்  (ஆள்)

டிஸ்கி..
ஒன்னுமில்ல... ஒரே சினிமா பதிவுகளா எழுதி எனக்கும் போரடிச்சி போச்சு. அதான் ஒரு சேஞ்சுக்கு...

-------------------------------XXXXXXXXXXXXXXXXXXXX---------------------------------

Thursday, 7 November 2013

ஜெயமோ தந்திரம், எழுத்தே மந்திரம், தமிழே பத்திரம் சிவ சம்போ..!


Kaniyitai eriya sulaiyum -mutral 
kazhaiyitai eriya saarum,
panimalar eriya thenum- kaaichchup
paakitai eriya suvaiyum 
nanipasu pozhiyum paalum-thennai 
nalkiya kulirila neerum,
iniyana enpen eninum -thamizhai 
ennuyir enpen kanteer! 

ப்படி படிக்க  நல்லா இருக்குல்ல....

இதை எனது பக்கத்து சீட்டில் உட்கார்ந்திருக்கிற பிலிப்பைன்ஸ்காரனிடம்( Pacey Averilla) கொடுத்து படிக்கச் சொன்னேன். அவனது தாய்மொழி 'டகாலூக்'. அதன் வரிவடிவம் லத்தின் (ஆங்கில) எழுத்துகள். (அதாவது ஜெமோ சொன்னது போல் அதை 'எழுத்துரு'னு சொல்லலாம்... வரிவடிவம்னு சொல்லலாம்... புய்ப்பம்னும் சொல்லலாம்.. புண்ணாக்குனும் சொல்லலாம்) 

அவன் முதல் வரியை படித்துப் பார்த்துவிட்டு, "எழுத்தெல்லாம் ஓகே. ஆனால் இது டகாலூக் இல்லையே " என்றான். "ஆமா இந்த லாங்குவேஜ்க்கு பேரு 'டகால்டி' . இப்பத்தான் எங்க ஊர்ல புதுசா கண்டுபுடிச்சிருகாங்க..  நீங்களெல்லாம் இப்படி எழுதித்தான் பெரிய ஆளா இருக்கீங்கன்னு எங்க ஊரு விஞ்சானி ஒருத்தர் ஆராய்ச்சி பண்ணி கண்டுபுடிச்சிருக்காரு. இப்ப நாமெல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னாயிட்டோம்... கொஞ்சம் படிச்சி மட்டும் காமி " னு சொன்னேன்.

கொஞ்சம் தட்டுத்தடுமாறி முதல்வரியைப் படித்தவன், இரண்டாம் வரியை இப்படி படித்தான்." கசையடி எரிய சாரும்.." .  நல்லவேளை கசையடியோட என் தமிழ் தப்பித்தது.

எதற்காக அவனைப் படிக்கச் சொன்னேன் என்றால், ஜெயமோகன் குறிப்பிட்ட 'டகாலூக்' -ஐ தாய்மொழியாகக் கொண்டவன் என்பதற்காக மட்டுமல்ல, ஒருவேளை ஜெயமோகன் சொன்னது போல தமிழ் வரிவடிவம் வழக்கொழிந்து ஆங்கில(லத்தின்) வரிவடிவம் மட்டும் நம் எதிர்கால சந்ததியினருக்கு புகட்டப்பட்டால், அவர்களின் மொழி உச்சரிப்பு எவ்வாறு இருக்கும் என்பதை சோதித்துப் பார்க்கத்தான்.ஆனால் சர்வ நிச்சயமாக,  ன-ண, ர-ற, ழ-ள-ல இவை எல்லாம் காலப்போக்கில் ஒரே ஒலிவடிவத்தில் மாற்றம் கண்டு,  தமிழ் மெல்ல செத்து போகும்.

ஜெயமோகன் உதாரணம் காட்டும் மற்றொரு மொழி மலாய். மலேசிய மக்கள் பேசும் இம்மொழி லத்தின் (ஆங்கில) வரிவடிவத்தை பயன்படுத்தி எழுதப்படுகிறது. மலாய் மொழிக்கு தனித்துவமான வரி வடிவம் கிடையாது என்பது மட்டுமல்ல, நிறைய பதத்திற்கு நேரடியான மலாய் வார்த்தைகளே கிடையாது.

உதாரணத்திற்கு,

Doctor என்பதற்கு தமிழில் மருத்துவர் என்ற பெயர் உண்டு. ஆனால் மாலாய் மொழியில் அதை' Doktor ' என்று சொல்வார்கள். நான் சிங்கை வந்த புதிதில் உடம்பு சரியில்லை என்றவுடன் ஒரு மலேசிய தமிழ் நண்பர் ' போயி டொக்டர பாருங்க' என்றார். ஒருவேளை டாக்டரைத்தான் அப்படி உச்சரிக்கிறார் என்று நினைத்தால் கடைசியில் அவர் மாலாய் மொழியில் அப்படி சொல்லியிருக்கிறார் எனப் புரிந்தது.

அதே போல் நிறைய வார்த்தைகள் ஆங்கில வார்த்தைகளையே  தழுவி வரும். biscuit  / biskut , coffee  / kopi,  lorry  / lori ..இப்படி நிறைய சொல்லலாம். இதை எதற்காக சொல்கிறேன் என்றால், சுயமான வார்த்தைகளே இல்லாத மலாய் மொழியோடு கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடியை, அதுவும் ஒர் தமிழ் இலக்கியவாதி ஒப்பிட்டு பேசுகிறாரே என்கிற ஆதங்கத்தை வெளிப்படுத்துவதற்காக..! 

நிற்க,

எத்தனையோ இடையிறாத எழுத்துப் பணிகளுக்கு மத்தியில் இந்த மகா சிந்தனை ஜெயமோகன் அவர்களுக்கு எப்படி தோன்றியது என்று மங்குனி அமைச்சர் போல மணிக்கொருமுறை உட்காந்து யோசித்துப் பார்க்கிறேன்.

அதாகப்பட்டது....

அவர் சென்னையில் ஆங்கிலப் புத்தகக் கடையொன்றை கடந்து செல்லும் வேளையில் அங்கு வாசலில் ஒட்டியிருந்த ஓர் அறிவிப்பு  அவரை அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது. ஆங்கில நூல் ஒன்று வெளிவந்த முதல் நாளே 2,000 பிரதிகள் விற்றிருக்கிறது என்பதற்கான அறிவிப்புதான் அது.


விழுமியங்கள், தரிசனம், மனவெழுச்சி, புறமொழி, நனவிலி, நிகழ்வியல், படிமங்கள், குறியீடுகள் என்று தமிழில் புதிய அகராதியே எழுதுமளவுக்கு தமிழ் மொழி வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பாற்றிக்கொண்டிருக்கும் இலக்கியவாதியான எனது புத்தகங்களே வருடத்திற்கு 500 பிரதிகள் விற்பது குதிரைக் கொம்பாக இருக்கும் தமிழ்ச்சூழலில், ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரு புத்தகம் ஒரே நாளில் 2,000 பிரதிகள் எப்படி விற்றது என்று அப்படியே ஓரமாக முட்டுச்சந்தில் உட்கார்ந்து முக்கி முக்கி யோசித்த பொழுதுதான் இப்படியொரு ‘தரிசனம்’ அவருக்குக் கிடைத்திருக்கிறது.

அதுமட்டுமல்லாது,ஜெமோ அவர்கள் பேனா பிடித்து எழுதி பதிமூன்று வருடங்களாகிறதாம். கணினி விசைப் பலகையில் ஆங்கில எழுத்துகளை தட்டச்சு செய்து தமிழில் எழுதுவது போரடித்துவிட்டதால், நேரடியாக ஆங்கில 'எழுத்துரு' வையே பயன்படுத்தலாமே என்கிற யோசனை வந்திருக்கிறது. 

வீட்டில் மூட்டைப்பூச்சி இருந்தால் வீட்டையே கொளுத்துவது எப்படி சரிவரும் ஜெமோ சார்?. தமிழ் இலக்கியப் பரப்பில் மிகத் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கும் இலக்கியவாதி மட்டுமல்ல, விஷ்ணு புரம், அறம் போன்ற அற்புதப் படைப்புகளை தமிழுக்கு அருளியவர் நீங்கள். அதற்காக தமிழ் இலக்கிய உலகமே உங்களைச்சுற்றி சுழலவேண்டும் என நினைப்பது எப்படி சரியாகும்..?  நீங்கள் எழுதிய நூல்கள் வருடத்திற்கு 500 பிரதிகள்தான் விற்கிறது என்றால் அதுதான் தமிழ் எழுத்தாளர்களின் படைப்பிற்கான வணிக வரையறையா..?  நீயா நானா கோபி, சோம வள்ளியப்பன் எழுதிய புத்தகங்கள் லட்சக் கணக்கான பிரதிகள் விற்றதாக சொல்கிறார்களே...? சுஜாதா, இறையன்பு எழுதிய புத்தகங்கள் பல்லாயிரக் கணக்கில் விற்றுள்ளதாக ஒரு பதிப்பாளர் சொல்கிறாரே.?

தமிழில் புத்தகங்கள் அதிகம் வாசிக்கப்படாததற்கு தமிழ் எழுத்துருவே காரணம் என்றால் இது மட்டும் எப்படி சாத்தியமானது.?. என்னைப் போன்ற ஒரு சராசரி வாசகனுக்கு உங்கள் நாவல்களை வாசிக்கத் தடையாக இருப்பது உங்கள் மொழியின் கனமே அன்றி எழுத்துரு அல்ல. உங்களின் கட்டுரைக்கு வந்த எதிர்ப்புகள் எல்லாம் உங்கள் மீதான தனி மனித தாக்குதல் அல்ல. உங்களது கருத்துக்கான எதிர்வினைகள். எமது தாய்த் தமிழை சிறு களங்கமுமில்லாமல் எங்களின் அடுத்தத் தலைமுறைக்கும் எடுத்துச் செல்லவேண்டும் என்கிற பொறுப்புணர்ச்சியின் வெளிப்பாடு. அந்தப் பொறுப்புணர்ச்சி உங்களைவிட எங்களுக்கு நிறையவே இருக்கிறது. 


டிஸ்கி

ஜெமோ-வின் கட்டுரை வெளியாகிய சில மணி நேரத்திலே அதற்கான எதிர்வினைகள் பேஸ்புக்கில் வெளியாகி, அவரது கருத்துக்கெதிராக பலரும் பொங்கித்தள்ளினர். இரண்டு நாட்கள் வரை விவாதங்கள் நடைபெற்றது. இறுதியாக சில தமிழார்வ அரசியல் தலைவர்கள்  'தி இந்து' அலுவலகத்திற்குச் சென்று எதிர்ப்பை நேரிடையாக பதிவு செய்தனர். ஏனோ தெரியவில்லை.... பிளாக்கரிலும் வலைத்தளத்திலும் ஒரு சிலரைத்தவிர மற்றவர்கள் யாரும் இதைக் கண்டுகொள்ளவில்லை. பிளாக்கர்கள் வெறுமனே சினிமா விமர்சனம் எழுதத்தான் லாயக்கு என சில பேஸ்புக் பதிவர்கள் கிண்டலடித்ததைப் படித்திருக்கிறேன்.. ஒருவேளை அதுதான் உண்மையோ...!