Thursday 31 May 2012

கொந்தளித்த தமிழர்கள்...ஓட்டம்பிடித்த நடிகை...பேஸ்புக்-ல் சொதப்பியது எப்படி?.


 
 தன்யா பாலகிருஷ்ணா.... அந்தக்கால சரோஜாதேவி,சிவாஜிராவ் முதல் இந்தக்கால பிரபுதேவா,குத்து ரம்யா வரை வானளவு புகழும் பணமும் வாரி வழங்கி வாழவைத்த கோலிவுட்டில்,புதிதாக தடம் பதித்திருக்கும் இன்னொரு கன்னட சிட்டுக்குருவி.வந்தாரை வாழவைக்கும் சென்னையில் தங்கி,வாய்ப்பு தேடிக்கொண்டிக்கும் இந்த பெங்களூரு பெண் குட்டி,தன்னை வாழவைக்கும் தமிழனின் தன்மானத்தை உரசிப்பார்த்திருக்கிறார் .

  இவர் ...வசூலில் சரித்திர சோசாதனை  படைத்த ’ஏழாம் அறிவு’, ’காதலில் சொதப்புவது எப்படி’ போன்ற சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் நடித்துவிட்டோம் என்ற மிதப்பில் பேஸ்புக்-ல் தமிழர்களையும், தமிழகத்தையும் குறிப்பாக சென்னைவாசிகளை தரக்குறைவாக எழுதி இருக்கிறார்.

சென்னை மக்களை "பிச்சைக்காரர்கள்" என்ற ரீதியில் அவரது கருத்து அமைந்திருந்தது.கர்நாடகாவிடம் காவிரி தண்ணீர்,மின்சாரம் தருமாறு தமிழகம் பிச்சை கேட்டது என விமர்சித்து பேஸ்புக்கில் எழுதியிருந்தார்.தமிழ் சினிமாக்களில் தொடர்ந்து நடிக்க வாய்ப்பு கேட்டு முகாமிட்டிருந்த அவரது கருத்துக்களைப் படித்த தமிழகத்தைச் சேர்ந்த பலரும்,பேஸ்புக்கில் அந்த பேதைக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.இவரது கருத்துகள் பேஸ்புக்கில் வேகமாக பரவ,இதை சற்றும் எதிர்பார்க்காத தன்யா,பயந்து போய், பேஸ்புக்கில் மன்னிப்பு கோரினார்.


இவரின் இந்த ஆணவப் பேச்சுக்கு தமிழ் திரையுலகம் கண்டனம் தெரிவித்து, இனிமேல் தமிழ் சினிமா படங்களில் அவருக்கு வாய்ப்பு அளிக்கக் கூடாது என முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.பெங்களூருவைச் சேர்ந்த சில தமிழ் அமைப்புகளும்,நடிகை தன்யா வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக கருத்து தெரிவித்துள்ளன.

இதனால் அதிர்ச்சியடைந்த தன்யா,பெங்களூருக்கு ஓடி விட்டார்.அதை மூடி மறைக்கவே,தமிழகத்துக்கு செல்ல மாட்டேன்,தமிழ்ப் படத்தில் நடிக்க மாட்டேன் என்று அறிக்கை வாசித்துள்ளார்.

தமிழகம் எந்த காலகட்டத்திலும் கர்நாடகாவிடம் மின்சாரம் கேட்டதில்லை. நெய்வேலியிலிருந்துதான் அவர்களுக்கு மின்சாரம் போகிறது என்று கூட அந்த பால்குடி மறவா குழந்தைக்கு தெரியவில்லையா?

காவிரிநீர் என்பது நமது உரிமை.அதில் நமக்குரிய பங்கைத்தான் கேட்கிறோமே தவிர,அவர்களிடம் பிச்சைக்கேட்கும் அளவிற்கு தமிழன் ஒரு போதும் தரம் தாழ்ந்து விடமாட்டான்.இது கூட தெரியாமல், 'காவிரி நீரை தமிழகம் பிச்சை கேட்கிறது' என்று அந்த நாடோடி கூறியிருப்பது அவரின் அறிவீனத்தின் மடத்தனமான வெளிப்பாடுதான்.

      நுனிநாக்கு ஆங்கிலமும்,கலாச்சாரமற்ற வாழ்க்கையும்,வெளுத்த தோலும் இருந்தால் எதை வேண்டுமானாலும் பேசிவிடலாமா? எப்படி வேண்டுமானாலும் எழுதிவிடலாமா? திரைத்துறை,இசைத்துறை உட்பட அனைத்திலும் அண்டை மாநிலத்தவரை மகுடத்தில் வைத்து அழகு பார்க்கும் நமக்கு,இவர்கள் கொடுக்கும் வெகுமானம் இதுதானா?


---------------------------------------------------------(((((((((((()))))))))))))))))))))))))------------------------------
Wednesday 30 May 2012

சில்மிச 'வாத்தி'களுக்கு விழுந்த செருப்படி..எங்கே செல்கிறது ஆசிரியர் குலம் ...


 
சில மாதங்களுக்கு முன் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் மாணவன் தன் பள்ளி ஆசிரியையே கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் தமிழ்ச் சமூகத்தின் பொதுமனத்தில் மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒட்டுமொத்த ஊடகமும் மக்கள் மனதில் தட்டையாக கட்டமைத்த சித்திரம் இப்படித்தான் இருந்தது.ஆசிரியர் நல்லவர்,ஒழுக்கமானவர்.கண்டிப்பானவர்.மாணவரின் வளர்ப்பு சரியில்லை.தவறானவர்.அந்தச்சம்பவம் ஏற்படுத்திய மிகப்பெரிய தாக்கமே நாம் அவ்வாறு விளிக்கக் காரணமாயிற்று.அனைத்து ஊடகங்களும், ஆசிரியர்-மாணவர்கள் இடையே உள்ள பிரச்சனைகளை வெவ்வோறு கோணங்களில் அலசித்தீர்த்ததோடு அதன் கடமையை முடித்துக் கொண்டது.

ஆனால் ஆசிரிய-மாணவ உறவின் மற்றொரு பக்கத்தையும் தீவிரமாக அலச வேண்டிய நேரமிது.சமீப காலங்களில்...சாமியார்களின் லீலைகளுக்குப் போட்டியாக குரு ஸ்தானத்தில் இருக்கும் மற்றொரு மேன்மை பொருந்திய இனம்,தனக்கு கீழ்படிந்து நடப்பவர்களின் மீது எடுத்துக் கொள்ளும் உட்ச பட்ச உரிமையாக,அவர்கள் மீது பாலியல் ரீதியான அக்கிரமங்களை அரங்கேற்றியிருக்கிறது. அதிலிருந்து சில வக்கிர துளிகள்......

சம்பவம் 1 (பிப்-2012)

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் முத்துப்பிள்ளை மண்டபத்தில் தனியார் நர்சிங் கல்லூரி மாணவிகளுக்கு நடந்த கொடூரம்...

"இரவு நேரத்தில் கல்லூரி இயக்குனர் அவரது அறைக்கு எங்களை அழைப்பார். பலூனை ஊதி கீழே போட்டுவிடுவார்.அதை எடுக்க சொல்வார். நைட்டி அணிந்திருக்கும் நாங்கள் குனிந்து பலூனை எடுக்கும் போது பார்த்து ரசிப்பார். ‘நீங்கள் யாருடனாவது உறவு வைத்திருந்தால் கூறுங்கள்,பாவமன்னிப்பு தருகிறேன்’ என்று அசிங்கமாக பேசுவார்.இதற்கு விடுதி வார்டன் உடந்தையாக உள்ளார்.இதுகுறித்து தட்டி கேட்டால் இன்டர்னல் மார்க்கில் கை வைத்து பெயிலாக்கி விடுவதாக மிரட்டுகின்றனர்" என்ற மாணவிகளின் மனக்குமுறல்கள் ஒருவழியாக வெளிச்சத்துக்கு வர,கும்பகோணம் மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி அடிகளார் விசாரணை நடத்தி,இயக்குனர் மரிய பிரான்சிசை சஸ்பெண்ட் செய்தும்,வார்டன் டயானாவையும் அங்கிருந்து இடமாற்றம் செய்யவும் உத்தரவிட்டிக்கிறார்.

சம்பவம் 2 (பிப்-2012)

பள்ளிக்கூடத்தில் பிளஸ் 2 மாணவியிடம் செக்ஸ் சில்மிஷம் செய்த ஆசிரியர் கைது.....

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கீழ் கோத்தகிரியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக பால்ராஜ் (வயது 48) என்பவர் பணியாற்றி வந்திருக்கிறார்.அவர் பிளஸ் 2 மாணவி ஒருவரை, பள்ளிக்கூட அலுவலர் அறைக்கு தனியாக வரவழைத்து செக்ஸ் சில்மிஷம் செய்ததாகவும்,அந்த மாணவியை செல்போனில் படம் எடுத்து இன்டர்நெட்டில் வெளியிடப்போவதாக மிரட்டியதாகவும் கூறப்பட்டது.இதற்கிடையே அந்த ஆசிரியர் மேலும் சில மாணவிகளிடம் சில்மிஷம் செய்ததாக தெரிய வந்ததால்,கிராம மக்கள் திரண்டு சென்று ஆசிரியர் பால்ராஜ் இருந்த அறையின் கண்ணாடிகளை அடித்து உடைத்திருக்கிறார்கள். விபரீதத்தை உணர்ந்த போலீசார் உடனடியாக ஆசிரியர் பால்ராஜை கைது செய்து சிறையிலடைத்தனர்.

சம்பவம் 3 (பிப்-2012)

கல்லூரி மாணவியை மயக்கி ஆபாச படம் எடுத்த பேராசிரியர்.......

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச்சேர்ந்த தனியார் கல்லூரியில் ஆசிரியர் சசிகுமார்(28).அதே ஊரைச் சேர்ந்தவர் மதுமதி (18),சாத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி படித்து வருகிறார்.பத்தாம் வகுப்பு படிக்கும் போது மதுமதி, தருணிடம் டியூஷனுக்கு சென்று வந்தார்.இந்நிலையில் ஒரு நாள் டியூஷன் சென்ற மதுமதிக்கு, சசிகுமார் கூல் டிரிங்ஸ்-ல் மயக்க மருந்து கலந்து கொடுத்து,பாலியல் பலாத்காரம் செய்ததோடு தனது செல்போன் கேமராவில் அதை பதிவும் செய்திருக்கிறார்.பேராசிரியர் தன்னிடம் தவறாக நடந்துள்ளது தெரியவந்ததும் மதுமதி டியூஷனுக்கு வருவதை நிறுத்திவிட, மதுமதியின் ஆபாச படங்களை காட்டி,அவரை மிரட்டி தன் இச்சைகளை தீர்த்துள்ளார் சசிகுமார்.காமபோதையின் அடுத்தக்கட்டமாக,மதுமதியை மிரட்டி தனது நண்பர்கள் சிலருக்கும் பணிய வைத்துள்ளார்.அதையும் செல்போன் கேமராவில் படம் பிடித்து வைத்துக்கொண்டார்.இந்த விஷயம் மதுமதியின் உறவினர் ஒருவருக்கு தெரியவந்திருக்கிறது.அவர், தருணிடம் தகராறு செய்து மதுமதி மற்றும் நண்பர்கள் படங்களை பதிவுசெய்து வைத்திருந்த லேப்டாப்பை பிடுங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்று போட்டு பார்த்தபோது அதில் மதுமதியுடன் பேராசிரியர் இருக்கும் அந்தரங்க படங்கள் 3 மணிநேரம் ஓடியிருக்கிறது.3 ஆண்டாக மதுமதியை சீரழித்த படங்கள் அடங்கிய லேப்டாப் தற்போது கோவில்பட்டி போலீசாரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவம் 4 (மார்ச்-2012)
 

மாணவர்களை ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்திய ஆசிரியர் கைது.....

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்தித்தோப்பு ரோட்டில் அன்னை தெரசா நகரை சேர்ந்தவர், ஜெகன்குமார் (வயது 26).இவர் எட்டயபுரம் அருகே கோட்டூரில் உள்ள பஞ்சாயத்து யூனியன் பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.இவரின் வக்கிரகுணம் மேலே சொல்லப்பட்ட எல்லாவற்றையும் விஞ்சிவிட்டது.இவர்,இந்தப் பள்ளியில் பயிலும் 4 மாணவர்களை ஒரு அறையில் தள்ளி பூட்டி அவர்களை ஒருவருக்கொருவர் ஓரின உறவில் ஈடுபட வைத்து பார்த்து ரசித்திருக்கிறார்.மறுநாள் அந்த 4 மாணவர்களும் பள்ளிக்கூடத்துக்கு செல்ல மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்க,கலவரமடைந்த அவர்களின் பெற்றோர் தீர விசாரித்திருக்கின்றனர். அதன் பிறகே அந்த ஆசிரியரின் ஒழுங்கீனமாக செயல் குறித்து பெற்றோர்களுக்கு தெரியவந்திருக்கிறது.பிற்பாடு மக்களின் அறச்சீற்றத்துடன் கூடிய போராட்டம் வலுப்பெறவே, வேறு வழியில்லாமல் அந்த வக்கிர ஆசிரியரை போலிஸ் கைது செய்துள்ளது.

சம்பவம் 5 (மார்ச்-2012)

மாணவிகளுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த ஆசிரியர்கள்

நீலகிரி மாவட்டம், குன்னூரில் ஆதிவாசி மாணவ, மாணவிகளுக்கான சற்குரு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.அங்கு தங்கிப்படிக்கும் மாணவிகளுக்கு நேர்ந்த துயரம்....

"சில ஆண்டுகளாக இங்குள்ள விடுதியில் தங்கி இப்பள்ளியில் படிக்கிறோம். உடற்கல்வி ஆசிரியர் சிவகுமார் (46) என்பவரும்,விடுதி பொறுப்பாளர் நாகராஜ் (வயது 70-ஓய்வுபெற்ற ஆசிரியர்) என்பவரும் பாலியல் ரீதியாக எங்களை துன்புறுத்துகிறார்.இரட்டை அர்த்தத்தில் பேசுவது,கீழே குனிய சொல்வது, பின்னால் தட்டுவது, தகாத முறையில் தொட்டு பேசுவது என அவர்களின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.பள்ளி நிர்வாகத்திடம் பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.ஏற்கனவே 2 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் புகார் அளித்தார். ஆனால், பள்ளி நிர்வாகம் மூடி மறைத்துவிட்டது. எனவே,பாலியல் தொல்லை தந்துவரும் இருவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று காவல்துறையிடம் மாணவிகள் துணிந்து புகார் அளிக்கவே,ஆசிரியர்கள் இருவர் மீதும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டிருக்கிறது.

சம்பவம் 6 (மார்ச்-2012)

மாணவிகளுக்கு செல்போனில் ஆபாச படம் காட்டிய ஆசிரியர்..

திருத்தணி அருகே கோரமங்கலம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக இருப்பவர் சுந்தரம் (52).இவர்,தங்களிடம் ஒழுங்கீனமாக நடப்பதாக மாணவிகள் பெற்றோரிடம் அடிக்கடி புகார் தெரிவித்தனர்.இந்நிலையில்,ஆசிரியர் சுந்தரம் தனது செல்போனில் உள்ள ஆபாச படங்களை மாணவிகளுக்கு காண்பித்துள்ளார்.பார்க்க மறுத்ததால் மாணவிகளை பற்றி ஆபாசமாக பேசியுள்ளார். இதனால் பயந்து போன மாணவிகள், தங்களது பெற்றோரிடம் இது பற்றி சொல்லி அழுதிருக்கின்றனர்.  பெற்றோர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து மாவட்ட கல்வி அதிகாரிக்கு புகார் அனுப்பப்பட்டது .இறுதியில் ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

சம்பவம் 7 (மார்ச்-2012)
  
17 வயது மாணவனை கடத்திச் சென்ற 37 வயது ஆசிரியை...

சென்னை வியாசர்பாடி எம்.கே.பி. நகரை சேர்ந்தவர் குமுது(37).இவர் யானைகவுனியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் அறிவியல் ஆசிரியை ஆக பணிபுரிந்தார்.அதே பள்ளியில் பிளஸ்-1 படிக்கும்  சுனில்குமார் என்ற மாணவனை கடத்திச்சென்று குடும்பம் நடத்திய செய்தி மூன்று மாதங்களுக்கு முன் எல்லா ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாகி சந்தி சிரித்தது.நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு கணவன் மனைவியாக வாழப் போகிறோம் என்று அந்த மாணவன் சொன்னபோது,ஆசிரியை-மாணவன் உறவே களங்கப்பட்டு விட்டது எல்லா ஊடகங்களும் கிழித்து தள்ளியது.

சம்பவம் 8 (மார்ச்-2012)

கல்லூரி மாணவியை கற்பழித்ததாக ஆசிரியர் கைது - மனைவி தற்கொலை

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகில் இருக்கும் ஆரூர்பட்டி நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக இருந்த கணேசன்(32) தன்னிடம் டியூசன் படித்த கல்லூரி மாணவியை திருமண ஆசை காட்டி கற்பழித்து விட்டதாக செய்யப்பட்ட புகாரின் பேரில்,கணேசனை போலீசார் கைது செய்தனர்.இந்த அவமானத்தால் மிகுந்த மனவேதனைக்கு ஆளான கணேசனின் மனைவி கலாவதி,வாழ பிடிக்காமல் படுக்கை அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவம் 9 (ஏப்ரல்-2012)

கவுன்சிலர் மகள் தற்கொலை வழக்கில் கல்லூரி பேராசிரியர் கைது...

சென்னை மாநகராட்சி 24-வது வார்டு அ.தி.மு.க.கவுன்சிலர் சுப்பிரமணியின் மகள் ஷோபனா (வயது 23)கடந்த மாதம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதை புலனாய்வு செய்த போலீசார்,இதற்குக் காரணம் இவர் படித்த கல்லூரியில் கம்ப்ïட்டர் சயின்ஸ் பிரிவில் உதவி பேராசிரியராக வேலை செய்து வந்த ராஜா என்பதைக் கண்டறிந்தனர்.இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருந்தும்,தான் ஒரு பேச்சிலர் என்று ஷோபனாவை நம்பவைத்து அவருடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.பிறகு இவரின் உண்மை சுயரூபம் தெரிய வரவே,மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் ஷோபனா.

சம்பவம் 10 (ஏப்ரல்-2012)

செல்போனில் செக்ஸ் படம் காட்டி மாணவியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர்...

குமரி மாவட்ட மலையோர பகுதியில் உள்ள ஆறுகாணியில் தனியார் பள்ளியில் டோமி (40) என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.அவர், 8-ம் வகுப்பு மாணவி ஒருவரிடம் செல்போனில் ஆபாச படங்களை காட்டி, சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது.பிறகு இது போலிஸ் வரை சென்று வழக்கு நடந்து வருகிறது.

சம்பவம் 11 (ஏப்ரல்-2012)

நெல்லை பல்கலைக்கழக 'செக்ஸ்' பேராசிரியர் தற்காலிக நீக்கம்.....

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வேதியியல் துறை தலைவரான செல்லமணி, மாணவிகளுக்கு செ‌க்‌‌ஸ் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரையொட்டி,பல்கலைக்கழக வளாகத்தில் மாணவ-மாணவிகள் தொட‌ர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.பிறகு கலெக்டர் வரை இந்தப் பிரச்சனை  எடுத்துச்செல்லப்பட,பேராசிரியர் செ‌ல்லம‌ணியை 45 நா‌ள் சஸ்பெண்டு செய்து மாவட்ட கலெக்டர் உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர்.
 
                                            **********************************************
 
  
 
  இந்தச்செய்திகளைப் படித்தால்,ஏதோ ஒரு மூன்றாந்தர மஞ்சள் பத்திரிக்கையைப் படித்த உணர்வுதான் ஏற்படுகிறது.இவைகள் யாவுமே கடந்த மூன்று மாதங்களில் நம் மாநிலத்தில் ஆங்காங்கே ஒரு சில ஆசிரியப் பெருந்தகைகளால் நடத்தப்பட்ட பாலியல் அத்துமீறல்களில் சிலவையே...
 
     இந்தகைய செயல்களில் ஈடுபடும் இவர்களுக்குக் கொடுக்கப்படும் தண்டனைகள் யாவுமே வெறும் மேம்போக்காகவே இருப்பதாக மக்களிடம் அதிருப்தி இருந்தது.இதனிடையே கடந்த வாரம் தமிழக அரசிடமிருந்து இது தொடர்பாக ஒரு அறிக்கை வெளிவந்து பெற்றோர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.அதன்படி....மாணவ,மாணவிகளிடம் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து,அவர்களுக்கு கடும் தண்டனையாக கட்டாய ஓய்வு,பணி நீக்கம் மற்றும் பணியறவு(டிஸ்மிஸ்) போன்ற தண்டனைகள் வழங்கப்படும்.அத்துடன், சம்பந்தப்பட்ட ஆசிரியரின் கல்வி சான்றிதழ் அனைத்தும் ரத்து செய்யப்படும். மேலும் இது தொடர்பாக மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி,இது போல தவறுகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு உளவியல் ஆலோசனைகளும் வழங்கப்பட வேண்டுமென்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
            தமிழக அரசுப்பணிகளிலே மிக சௌகரிகமானக் கருதப்படுவது ஆசிரியத்தொழில்.மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம், தீபாவளி மற்றும் பொங்கல் போனஸ்,ஓய்வூதியம்,மிகக் குறைவான வேலைநாட்கள் மற்றும் வேலைநேரம் மேலும் மற்ற அரசு ஊழியர்களைவிட அதிக சலுகை என்று அரைத்த மாவையே அரைக்கும் இந்த ஆசிரியர்களுக்கு அரசு அள்ளிக் கொடுக்கிறதென்றால் அதற்கு முதல் காரணம் ஒரு நாட்டின் வளர்ச்சியை தீர்மானிக்கும் கல்வியை போதிப்பவர்கள் என்பதால்தான். அறியாமையின் இருட்டில் இருக்கும் மக்களை நாகரிக வெளிச்சத்துக்கு கொண்டுசெல்வதில் இவர்களின் பங்கு அளப்பரியது. ஆசிரியர்களை‘மாதா பிதா குரு தெய்வம்’ என்னும் வரிசையில் கடவுளுக்கு முன்பாக வைத்திருப்பதும் ‘எழுத்தறி வித்தவன் இறைவன் ஆகும்’ எனப் போற்றுவதும் ‘ஆசிரியப் பணி அறப் பணி’ என விழுமியம் கொண்டிருப்பதும் நம் சமூகம் தான்.அதனால் தான் ஒரு சிலர் தவறு செய்தாலும் அது நம் சமூகத்தில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
 
  சரி,இப்படி நல்லவைகளை எடுத்துச்சொல்லும் ஆசிரிய இனம்,ஒட்டு மொத்தமாக நம் சமூகத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் என்ன தவறு இருக்கிறது?
 
 
 
--------------------------------------------(((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))-------------------------------
 

Wednesday 23 May 2012

ஆறு கோடியும் மூன்று உயிர்களும் மற்றும் நித்தியும்

 ஆறு கோடியும் மூன்று உயிர்களும்.......     

        கடந்த வாரம் சிங்கப்பூரில் பரபரப்பாகப் பேசப்பட்ட நிகழ்வு!.எல்லையில்லா அறிவியலின் வளர்ச்சியை அசுர வேகத்தில் முன்னெடுத்துச் செல்லும் மனித சக்தியை,அதன் ஆக்கமே அழித்துவிடும் என்பதை ஆணித்தரமாக உணரவைக்கும் சம்பவங்களில் இதுவும் ஒரு SAMPLE.கடுமையான போக்குவரத்து விதிகள் கடைப்பிடிக்கப்பட்டு அதன் மூலம் விபத்துகள் முற்றிலுமாக தவிர்க்கப்பட்ட நிலையிலுள்ள இந்த 'ஹைடெக்' நகரத்தில் கடந்த வாரம் நிகழ்ந்த ஒரு சாலை விபத்து,பார்ப்போர் அனைவரின் நெஞ்சங்களையும் உருக்குலைய வைத்தது.கசக்கப்பட்ட காகிதம்போல் விபத்துக்குள்ளான வாகனங்களும்,சுக்கல்  சுக்கலாக சிதறிக்கிடக்கும் அதன் பாகங்களும் நமக்கு நெற்றிப்பொட்டில் அடித்துச் சொல்கிறது... வரையறுக்கப்படாத வேகத்தில் சென்றால், என்னைப்படைத்த பிரம்மாவேயானாலும் உனக்கு படையல்தான்.!!!


  எனக்குத்தெரிந்து இப்படியொரு கவனக்குறைவான அதேநேரத்தில் இவ்வளவு மோசமான ஒரு விபத்து இங்கு நடந்ததாக கேள்விப்பட்டதேயில்லை.அதுவும் இந்தியர்கள் அதிகமாக வந்து செல்லும் 'லிட்டில்இந்தியா'- விற்கு மிக அகுகாமையில் உள்ள புகிஸ் என்னுமிடத்தில் உள்ள ரிச்சி ஸ்ட்ரீட்-ல் இது நிகழ்ந்துள்ளது. போக்குவரத்து விளக்கின் வழிகாட்டுதலின் படி வந்த டாக்ஸியின் மீது,சிவப்பு விளக்கின் எச்சரிக்கையை மதிக்காமல் மின்னல் வேகத்தில் வந்த .'.பெராரி கார் (விலை இந்திய ரூபாயில் ஆறுகோடி) வெறித்தனமாக மோத, கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்திருக்கிறது அந்த கொடூர விபத்து. டாக்ஸி ஓட்டுனர்,டாக்ஸியில் பயணம் செய்தவர், .'.பெராரி காரை ஓட்டி வந்த அதன் உரிமையாளர் அனைவரும் 'ஸ்பாட் அவுட்'. இந்த வழியாக நானும் நிறையதடவை குடும்பத்துடன் டாக்ஸியில் பயணித்திருக்கிறேன். இந்தச் சம்பவத்தை கானொளியில் பார்த்தபோது கொஞ்ச நேரம் என் சப்த நாடியும் அடங்கிப்போனது. சிங்கப்பூரில் அவ்வப்போது அங்குமிங்கும் சிற்சில விபத்துகள் நடைபெறுவதை ஊடகங்களின் மூலம் அறிந்திருக்கிறேன்.அதில் பெரும்பாலும் வாகனம் மட்டுமே சேதமடையும். உயிர்ப்பலி மிகக்குறைவே. ஆனால் இந்த ஒரு சம்பவம் தான் சிங்கப்பூர் முழுவதிலும் மிகப்பெரிய அதிர்ச்சியலையை ஏற்படுத்தியிருக்கிறது.அதன் காணொளி கீழே....

 
 முற்றிலுமாய் உருக்குலைந்து போன இந்தக்கார்களின் விலை கோடிகளில் இருக்கலாம்.....ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் காலன் வீசிய பாசக்கயிறுக்குப் பலியாகிப் போன இவர்களின் உயிர்களின் மதிப்பு...?

(மயிரிழையில் உயிர்பிழைத்த-இந்த நிகழ்வை படம்பிடித்த காரின் ஓட்டுனர், "லக்கிலே..."என்று சொல்லும் வார்த்தையில் எமனின் வீட்டு வாசல் வரை சென்று திரும்பிய மரணபயம் தெரிகிறது பாருங்கள்.... # உனக்கு ஆயுசு ரொம்ப கெட்டிலே ...) 

------------------------------------------------------------------------------------- 
வாழ்க பல்லாண்டு  

செல்வ சீதனமே நீ சிரிக்கையிலே பல சில்லரை சிதரிவிடும்
செலவு செய்ய நினைத்தால் கூட இதயம் பதறிவிடும்.....    # பிரசன்னா        ஒரு வழியாக நட்பு நடிகைக்கும் பிரசன்னாவிற்கும் இனிதே நடந்து முடிந்திருக்கிறது சினிமாத்தனமாநிஜ கல்யாணம்.பார்த்திபன்கனவு வெளியான காலக்கட்டத்தில்,பெண்தேடும் படலத்திலிருந்த நிறைய கட்டிளம் காளைகளுக்கு சினேகாதான் கனவுக்கன்னி!. "சினேகா மாதிரி ஹோம்லியான பொண்ணாப்பாருங்க"-னு நான் கூட சொல்லியிருக்கிறேன்(பிறகு ஏண்டா இப்படிச் சொன்னோம்னு எண்ணி சுவத்தில முட்டிக்காத நாளே இல்ல).பெட்டிக் கடையிலிருந்து கல்யாணமண்டபம் வரைக்கும் இவங்க வந்து தான் திறந்து வைக்கனும்னு ஒரு ஐதீகமே இருந்தது.அதனாலவோ என்னவோ சைக்கிள்கடை அண்ணாச்சியிலிருந்து 'ஜவுளிக்கடைஓனர்' வரைக்கும் இவரை வைத்து கிசுகிசுக்கப்பட்டது.ஒருவழியாக பிரசன்னாவால் கால்கட்டு போடப்பட்டு, 'ரியல் ஹோம்லி' பெண்ணாக மாற்றப்பட்டுவிட்டார் சினேகா. ஆனால் இவர்கள் திருமணத்தைப் பற்றி பத்திரிகைகளில் அடுத்தடுத்து வரும் செய்திகள் ஒருவேளை இது  சினிமாக் கல்யாணமோ என்ற தோற்றத்தை ஏற்படுத்துவதை தவிர்க்க முடியவில்லை.திருமணத்திற்கு முன் "நான் இரண்டு முறை தாலி கட்டுவேன்" என பிரசன்னா அறிக்கைவிட(பின்ன என்ன சிநேகாவா?) உடனே கண்கொத்தி பாம்பாக டெலஸ்கோப் கண்களோடு சமூக நிகழ்வுகளை மிக உன்னிப்பாக கவனித்து வரும் 'ட்வீட்டர்கள்' சும்மா விடுவார்களா.."பாத்துப்பா..அப்பறம் இரண்டு தடவை கோர்டுக்கு போற மாதிரி ஆயிடப்போகுது"னு அபசகுனமா ஆரம்பித்து வைத்துவிட்டார்கள். எனக்கென்னவோ"அழகான புள்ளி மானே" பாடலில் வரும் அந்த இரண்டு வரிகள்தான் ஞாபகம்  வருகிறது.

  ஆனால் இந்த சினிமாக்காரங்களுக்கு எல்லாமே வியாபாரம்தான் போல. மங்களகரமான ஒரு திருமண வைபோகத்தை எதோ புதுப்படம் தயாரித்து  டிவி ரைட்ஸ் கொடுப்பதுபோல் தனியார் தொலைக்கட்சிக்கு விற்று அதிலேயும் நாலு காசு பார்த்து விடுகிறார்கள்.அப்ப...மாலை மாற்றுவதற்கும்,மெட்டி போடுவதற்கும், தாலி கட்டுவதற்கும் ஐயர் மந்திரம் சொல்வதற்கு பதில் ஸ்டார்ட்-ஆக்சன்-கேமரா சொல்வாரோ?. ஒருவேளை அதனால்தான் பிரசன்னா ரெண்டு டேக் எடுப்பேன் என்று சொன்னாரோ? எது எப்படியோ.. அடுத்தடுத்து நடக்கும் சங்கதிகளையும் டிவிக்கு விற்காமல் இருந்தால் சரி. ஆனால் பல உச்சபட்ச நடிகர்கள் திருமணத்திற்கு வராமல் போனதால் வியாபாரம் பிசுபிசுத்துப் போனதாக செய்தி. சில வருடங்களுக்கு முன் இந்தியாவின் மிக மிக பிரபலமான அந்தக் குடும்பத்தில் நடந்த திருமண நிகழ்வை இரண்டுகோடி ரூபாய்க்கு விற்றிருக்கிறார்களே என்று ஒரு கேள்வி-பதில் பகுதியில் வைரமுத்துவிடம் ஒரு வாசகர் கேட்டிருந்தார். அதற்கு அவர் அளித்த பதில் இவ்வாறு இருந்தது. அட்சதை அரிசி சமைப்பதற்கல்ல;கல்யாணக்காட்சி விற்பதற்கல்ல;    

  எது எப்படியானா நமக்கு என்ன?..இரண்டு பேரும் இணைந்து பல்லாண்டு வாழ வாழ்த்துவோம்.    
 
---------------------------------------------------

வானம் வசப்படுமே........

 


----------------------------------------------------------------------------

3D CORNER

   அப்பனே கணேசா...உன்னைப் பார்க்க முயற்சி செய்பவர்களுக்கு காட்சி தந்து  அருள் புரிவாயாக...!


------------------------------------------------------------------------------


ரிலாக்ஸ் ப்ளீஸ் ................

டைரக்டர்      :     "ஆக்சுவலா கதைப்படி வில்லன் ஆரம்பத்தில சின்ன சின்ன திருட்டு, அப்பறம் பொய், பித்தலாட்டம், கொள்ளை, கொலை, கற்பழிப்பு..இப்படி படிப்படியா....."

தயாரிப்பாளர்:      "பயங்கர தாதா ஆயிடுரானா?"

டைரக்டர்         :    " இல்லே...ஆதீனம் ஆயிடுறான் ..! "
 
---------------------------------------------------------------------
 
வாத்தியார் 1:. " எதுக்கு சார் இந்தப் பையனைப்  போட்டு இப்படி அடிக்கிறீங்க?"
  
வாத்தியார்2: "பின்ன என்ன சார்...ஆங்கிலத்தில மட்டும் பாஸாகி மற்ற சப்ஜெக்ட் -ல பெயிலாயிருக்கிறான்.ஏன்னு  கேட்டா ஆதீனம் ஆகுறதுக்கு  இது  போதும்னு சொல்றான்."

-----------------------------------------------------------------------------
ஜெயில் வார்டன் 1 : "அங்க என்ன ஒரே கலாட்டா?"

ஜெயில் வார்டன்  2 : "இந்த குருக்கள் ராமநாதன் தொல்லை தாங்க முடியில.."


ஜெயில் வார்டன் 1 : "அப்படி என்னதான் பண்றான்? "

ஜெயில் வார்டன் 2 : "வேணும்னா என் வீடியோவையும் போட்டுப்பாரு..எந்த விதத்தில நான் நித்தியானந்தாவுக்கு குறைந்து போயிட்டேன்..என்னையும் ஆதீனம் ஆக்குங்கனு  அடம்பிடிக்கிறான்."
------------------------------------------------------------------------

நம்ம வண்டு முருகன் ஏதோ தத்துவம் சொல்றாரு..என்னானுதான் கேளுங்களேன்..
--------------------------------------------((((((((((((((((((())))))))))))))))))))))))))))))----------------------

Sunday 20 May 2012

எந்த ஊர் போனாலும் நம்மவர்களை எளிதில் கண்டுபிடிக்க சில வழிகள்...(சிரிப்புக்கு கியாரண்டி..)!

நாம் எந்த ஊர் போனாலும் நம்மவர்களை கண்டுபிடிக்க சில எளிய வழிகள்..........

1 .  25000  ரூபாய்க்கு மொபைல் போன் வாங்கி, அதில் missed கால் கொடுப்பது.


2 .  பஸ்ல இருந்து எரோப்ளேன் வரை ஜன்னல் சீட்டுக்கு ஆசைப்படுவது.

3 .  10  லட்சம் ரூபாய்-க்கு கார் வாங்கினாலும் அதில் எலுமிச்சைப் பழம் தொங்க விடுவது.

4 .ஹோட்டல் போனால் மெனுகார்டு பார்க்காமல் அடுத்தவன் சாப்பிடுவதைப்பார்த்து ஆர்டர்  செய்வது.

5 . வயிற்றில் இடம் இல்லாவிட்டாலும் finishing touch -a ஆபாயில் சாப்பிடுவது. 

6.  பஸ்ல 1 .50  டிக்கட்டுக்கு 100 ரூபாய் கொடுத்து சீன் போடுவது.

7.  முகப்பருவுக்குக் கூட cancer  இருக்குமோனு பயப்படுவது. 

8 . கடைக்காரன்கிட்ட 2 ரூபாய்க்கு அரைமணி நேரம் பேரம் பேசுவது.

9 . வெறும் ஊறுகாய வச்சே அசால்டா 1 full அடிப்பது.

10. தாய்மொழியைத் தவிர மத்த அனைத்து மொழிகளையும் சரியாக பேசுவது.

11.பக்தியோடு கோயிலுக்குப் போனாலும்  வெளியேப் போட்ட செருப்பின் மீதே கவனம் இருப்பது.

12.பர்ஸ் நிறைய பணம் இருந்தாலும் அன்னதானதிற்காக 4 மணி நேரம்  கியூ கட்டி நிப்பது. (கேட்டால் சாமி பிரசாதம் என்று சமாளிப்பது)

13.கண்ணுக்கு முன்னால நாலு குப்பைக் கூடை இருந்தாலும் பத்தடி  தள்ளி போய் ரோட்டில் காரித்துப்புவது.

14.பீர் பாட்டிலில் பச்சைத் தண்ணியை ஊற்றிக் கொடுத்தால் கூட போதை  ஏறியதுபோல் தள்ளாடுவது . 

(ஒரு சிலது முகப்புத்தகத்தில் கிடைத்தது.)

--------------------------------------------------------------------------------------

  டாக்டர் VS  நர்ஸ் VS பேஷன்ட்....


(ஏற்கனவே இதுபோல் நிறைய படித்திருக்கலாம் ...இருந்தாலும் ஆதி,அந்தம், லாஜிக் எதுவும் பாக்காம சிரிச்சித் தள்ளுங்க..)


பேஷன்ட்:   " டாக்டர் ..மூச்சுவிட ரொம்ப சிரமமா இருக்கு..."

டாக்டர்    :   "கவலையேப்படாதீங்க..கூடிய சீக்கிரத்தில் நிறுத்திடுறேன்..."

--------------------------------------

டாக்டர்   :  "ஆச்சர்யமாயிருக்கே..நான் ஆப்பரேசன் செஞ்ச பின்பும்  பல்ஸ் நார்மலா ஆகி ,பேஷன்ட் உயிரோட இருக்கிறாரே..!."

நர்ஸ்       :  "சீ..போங்க டாக்டர்..அது என் கை.."

------------------------------------------------------------------

ஒரு பெண்: " என் மாமியாருக்கு ஆப்பரேசன் முடிஞ்சதும் ஒய்வு எடுக்க எங்க வீட்டு மாடி அறையை ஒதுக்கி வைக்கட்டுமா டாக்டர்..? "

டாக்டர்   :   "மாடிக்கெல்லாம்  எதுக்காக தூக்கி சுமக்கனும்.பேசாம உங்க வீட்டு ஹாலிலே பார்வைக்கு வச்சிடுங்க.."

------------------------------------------------------------------

பேஷன்ட்: " என்ன டாக்டர்..என்னைத் தூக்கு மேடைக்கு கொண்டுபோகச் சொல்றீங்க..."

டாக்டர்   :  " நான் தான் சொன்னேனே... நான் ஆப்பரேசன் பண்ற ஸ்டைலே தனினு..."
-----------------------------------------------------------------

நர்ஸ்       : " அந்த பேஷன்ட்கிட்ட கல்யாணத்துக்குப் பிறகு தலைமுடி நரைக்காதுன்னு சொன்னீங்களே,அது எப்படி டாக்டர்?.."

டாக்டர்   : " கல்யாணம் ஆயிட்டா தலையில முடி எங்கே இருக்கப் போகிறதுங்கிற தைரியம்தான்..."

-----------------------------------------------------------------

பேஷன்ட்: "ராத்திரியில தூக்கமே வரமாட்டேங்குது டாக்டர்...என்ன செய்ய?.."

டாக்டர்   : " அது தெரிஞ்சா ..நான் ஏன்யா  ராத்திரியில ஆஸ்பத்திரியை திறந்து வெச்சுக்கிட்டு உட்கார்ந்திருக்கேன்..? "

-------------------------------------------------------------------

பேஷன்ட்: " ஏன் டாக்டர் ..'யங்' நர்சுகலையே வேலைக்கு வச்சுக்க மாட்டேங்கிறீங்க..?"

டாக்டர்   :  " எங்கேயா..எனக்கு  நோயாளிகளை கவனிக்கவே நேரமில்லாமப் போயிடுது..."

--------------------------------------------------------------------

நண்பர்:   " நீங்க டாக்டரா இருக்கும்போது பையன மட்டும் ஏன் வக்கீலுக்கு படிக்க வைக்கிறீங்க..? "

டாக்டர்   : "ஆப்பரேசன் முடிஞ்சி அடிக்கடி போலிஸ் ஸ்டேசன் போக வேண்டியிருக்கு.அதான் வீட்டோட ஒரு வக்கீல் தேவைப்படுது..."

----------------------------------------------------------------
பேஷன்ட்: " டாக்டர் ..நீங்க எனக்கு செய்யப்போற ஆப்பரேசன் வெற்றி ஆனா, பீஸுக்கு மேல அன்பளிப்பா ஆயிரம் ரூபாய் தாரேன்..."

டாக்டர்   : " வெற்றியானா...நானே உங்களுக்கு அன்பளிப்பா ஆயிரம் ரூபாய் தரேன்."

-----------------------------------------------------------------

பேஷன்ட்: " டாக்டர் எனக்கு மயக்கம் வர்ற மாதிரியிருக்கு.. "

டாக்டர்   :  " நெனைச்சேன்... ட்ரீட்மென்ட் எல்லாம் முடிஞ்சு நான் பீஸைப் பத்தி ஆரம்பிக்கும்போது உங்களுக்கு இப்படி ஏதாவது வரும்னு எனக்கு நல்லாத் தெரியும். நர்ஸ்....உடனே அந்த ஏ.சி வார்டுல உள்ள ரூம் ஒன்ன புக் பண்ணு . சாருக்கு அஞ்சு நாள் வச்சு ட்ரீட்மென்ட் எடுக்கணும்.."

பேஷன்ட்: "ஐயோ ..டாக்டர் இப்ப எல்லாம் சரியாகிடுச்சு.."

---------------------------------------------------------------

டாக்டர்   : " நர்ஸ்..ஆபரேசனுக்கு எல்லாம் ரெடி பண்ணிட்டீங்களா..? "

நர்ஸ்      :  " மாலைகூட வாங்கியாச்சு...ஊதுவத்தியும் ஏத்திட்டேன் டாக்டர்."

டாக்டர்  :  " ஸ்டுபிட்.. என்ன சொல்ற....? மொதல்ல வக்கீல்கிட்டேயில சொல்லணும்."

பேஷன்ட்:
" ?>?$&^*#@%??!"*@??...."

-------------------------------------------------------
நர்ஸ்        : டாக்டர்..டாக்டர்..ஆபரேசனுக்கு கொண்டுபோன பேஷன்ட் தப்பிச்சு ஓடுறார்...

டாக்டர்   : ம்ஹும்...பிழைச்சு போறான் விட்டுடு...
-------------------------------------------------------

பேஷன்ட்: "ஆப்பரேசன் பண்ணாம என்னைக் காப்பாத்த வழியே இல்லையா டாக்டர்..? "

டாக்டர்   : " உங்களைக் காப்பாத்தத்தான் ஆப்பரேசன்னு யாரு சொன்னது.? "

------------------------------------------------------
டாக்டர்    : "ச்சே..இந்த ஸ்கின் ஸ்பெசலிஸ்ட் தொழிலையே விட்டுடலாம்னு தோணுது..."

நண்பர்    :  "ஏங்க இவ்வளவு வெறுப்பாயிடீங்க...? "

டாக்டர்  : " பின்ன என்னய்யா ...தோலில் புள்ளி..புள்ளியா இருக்குனு அந்த ஆளு வந்து காட்டுறான்..".

நண்பர்   :  " அதுல என்னங்க தப்பு..? "

டாக்டர்  :" யோவ்...அவன் காட்டுறது வாழைப்பழத் தோலுயா ..."
--------------------------------------------------

டாக்டர்   : நீங்க தினமும் தூங்கி எழுந்த உடனே வாக்கிங் போங்க..

வந்தவர் :  அதுக்கெல்லாம் எங்க மானேஜர் அனுமதி கொடுக்க மாட்டாரு டாக்டர்...

---------------------------------------------

பேஷன்ட்: " டாக்டர் கேட்ட பணத்தை ஆப்பரேசனுக்கு முன்னாடி கொடுத்தும் கூட தலையில் பண்ண வேண்டிய ஆப்பரேசன காலில பண்ணிட்டாரே ..."

நர்ஸ்    : " நான்தான் சொன்னேனே...அவருக்கு பணம் வந்துட்ட தலைகால் தெரியாதுன்னு..."

-------------------------------------------

பேஷன்ட்: 
" டாக்டர் எனக்காக நீங்க ஒரு காரியம் பண்ணனும்..".

டாக்டர்   : "   ஸாரி...பொதுவா நான் ஆப்பரேசன் மட்டும்தான் பண்ணுவேன். காரியம் எல்லாம் உங்க சொந்தக்கராங்கதான்   செய்யணும்..."

------------------------------------------

பேஷன்ட்:    " டாக்டர் எனக்காக நீங்க ஒரு காரியம் பண்ணனும்..".

வேற ஒரு டாக்டர்   : " ஸாரி...நீங்க கட்டியிருக்கிற பீஸு..ஆப்பரேசனுக்கு மட்டும்தான்... "

---------------------------------------

பேஷன்ட்:   " டாக்டர் எனக்காக நீங்க ஒரு காரியம் பண்ணனும்..."

இன்னொரு டாக்டர்: " பொறுய்யா...எல்லாம் வரிசைப்படிதான் செய்யணும். மொதல்ல ஆப்பரேசன் அதுக்கப்பறம்தான் காரியம்..".

 ------------------------------------

டாக்டர்    :  "  ராத்திரியில படுக்கும்போது கவலையோடு படுக்காதீங்க...!"


பேஷன்ட்:   " என்ன பன்றது டாக்டர் ..என் சம்சாரம் தனியா படுக்க பயப்படுறா.."

-------------------------------------

பேஷன்ட்:  " டாக்டர் என்னால சிறுநீர் கழிக்க முடியவில்லை..."

டாக்டர்   :   " உங்க வயசு என்ன.. ? "

பேஷன்ட்: " தொண்ணூறு ஆகிறது டாக்டர்.."

டாக்டர்   :  " அப்படீன்னா இத்தனை வருஷம் நீங்க போனதே போதும்..! "

-------------------------

இதுல இது வேறயா..?....Saturday 19 May 2012

எங்கள் இதயதெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மாவின் ஓராண்டு கால சாதனைப் பட்டியல்கள். ன்பார்ர்ர்ர்ந்த பெரியோர்களே ..தாய்மார்களே...எங்கள் இதயதெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மாவின்(குலோத்துங்க-வ விட்டு விடவில்லையே.....) உயிரிலும் மேலான ரத்தத்தின் ரத்தமான கழக உடன்பிறப்புகளே...எங்கே நான் அம்மாவின் புகழை இந்தத் தரணியெங்கும் பரப்புவதின் மூலம்,அம்மாவின் அதி படு தீவிர அடித்தொண்டனான சமக கட்சியின் அகில அண்டத்தலைவர் சித்தப்பு சரத்குமார் அவர்களையும், 'மானமிகு' பேரவை முன்னவர்,அம்மாவின் கார் டயரையே பாதத் திருவடியாக நினைத்து பாதஅபிஷேகம் செய்ய பணிக்கப்பட்ட முன்னாள் தற்காலிக முதல்வர் ஒபிஎஸ் அவர்களையும் பின்னுக்குத்தள்ளி, இதயதெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மாவின் இதயத்தில் நான்  இடம்பிடித்து விடுவேன் என்று எல்லோரும் நினைத்துவிடக்கூடாது என்பதை இங்கே உங்கள் முன் சொல்லிக்கொள்ள கடமைப்பட்டு கட்டுப்பட்டுள்ளேன். 

   எங்கள் அம்மாவின் ஓராண்டுகால சாதனைகளைப் பார்த்து நம் இந்தியாவே வியந்து மூக்கின்மேல் விரலை வைத்து('யாரு மூக்குல' என்றெல்லாம் கேட்கக் கூடாது) மூச்சிரைத்துப் போகவேண்டும் என்ற லட்சிய நோக்கோடு இந்தியாவின் அனைத்து ஊடகங்களிலும் விளம்பரம் செய்யப்பட்டது.அதே நேரத்தில் தமிழகபட்ஜெட்டில் விளம்பரங்களுக்காக ஒதுக்கப்பட்ட ரூ25,00,00,000 யில் வெறும் ரூ.15கோடி மட்டுமே விளம்பரத்திற்கு செலவிடப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி எங்களை மீள முடியா வேதனையில் ஆழ்த்தியது. சொடக்குபோடும் நேரத்தில் சுவிஸ் வங்கியையே போயஸ் தோட்டத்திற்கு புலம்பெயரச் செய்யும் ராவணர்கள் சுற்றியிருந்தும் வெறும் சொற்ப பணத்திலா  விளம்பரம் செய்வது?அதே வேளையில் இந்த சாதனைளை இணையத்தில் வெளியிடப்படாததைக்கண்டு கட்சியின் இணைய வழி கொ.ப.செ என்ற முறையில் எனக்கு ஏற்பட்ட கடும் மன உளைச்சலுக்கு மருந்தாகவே  இங்கே பதிவிடவேண்டிய கட்டாயம். 

 ஆங்...அதே நேரத்தில் அம்மா பேரவை பயர்பாக்ஸ் பிரிவு IP 162-256-854 சார்பாக உங்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.எங்கள் அம்மாவைப் பற்றி தரக்குறைவாக பேசுபவர்களை தன் வாயாலேயே புரட்டிஎடுக்க,அம்மா பேரவை கால்நடைப்பிரிவின் மாநிலத் தலைவர் எங்கள் கிராமத்து நாயகன் ராமராசன் புறப்பட்டு விட்டார்.கொஞ்ச நாட்களுக்கு முன் சட்டப் பேரவையில் நாக்கை மடித்து நீட்டி முழங்கிய எதிர்கட்சித்தலைவரை அடக்கி வைப்பதற்கு மேடையேறிய எங்கள் மக்கள் நாயகன் ஒரு ரகசியத்தை அம்பலப் படுத்தினார்.அதைக்கேட்டு விட்டு,என் இருபத்து ஐந்து வருட சினிமா வாழ்க்கையே களங்கப்பட்டு விட்டது என்று கதறி கதறி அழுதுக் கொண்டிருக்கிறார் அந்த எ.க.தலைவர்.இதுபோல் பல ரகசியங்களை தன் மூளையின் ரகசிய அறையில் மூடிவைத்திருப்பதாக நம்பவே முடியாத தகவல்கள் தெரிப்பதால் இனி யாரும் அம்மாவைப்பற்றி நாக்கு மேல் எதைப்போட்டும் பேசக்கூடாது என்று எங்கள் கிளையின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன். 

  அதே நேரத்தில்(எதோ ஒரு நேரத்தில் விடுங்கப்பா...) புரட்சித்தலைவி அம்மாவின்  ‘நூறாண்டு பேசும் ஓராண்டுச் சாதனை’யை நாற்பது  பக்கத்தில் விளம்பரம் செய்யாமல் வெறும் நான்கு பக்கத்தில் மட்டுமே செய்த 'செய்திமக்கள்தொடர்புத்துறை'க்கு எனது ஆழ்ந்த கண்டனங்களை பதிவு செய்வதுடன்,அம்மாவின் ஏனைய சாதனைகளை இங்கே பட்டியலிட கடமைப் பட்டுள்ளேன்.


  1.தீயசக்திகளின் கடந்த ஆட்சியில் ஏற்பட்ட  மின்வெட்டால் மக்கள் கடும் அவதிபடுகிறார்கள் என்பதை கொடநாட்டிலிருந்தே மிக உன்னிப்பாக கவனித்து வந்த எங்கள் அம்மா,காலம் வரும்வரைக் காத்திருந்து கடைசியில் கடும் போராட்டத்தில் ஈடுபட்டதை நீங்கள் நன்றாக அறிவீர்கள்.கடந்த ஆட்சியில்,ஒரு நாளுக்கான 24 மணிநேரத்தில் 7200 மணித் துளிகளாகயிருந்த மின் வெட்டு,எங்கள் இதயதெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மாவின் ஆட்சியில் 86400 மணித்துளிகளில் வெறும் 8 மணி நேரம் மட்டுமே மின்வெட்டு இருக்கிறது என்பதை பெருமையுடன் சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன். 

 2.மின்சாரம் இல்லாதிருந்தாலும் மக்களுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர்,பேன் போன்றவற்றை அளிப்பதால், இவைகளை மின்சாரமில்லாமல் எப்படி இயக்குவது என்று சிந்திப்பதின் மூலம் பல இளம் விஞ்ஞானிகள் உருவாகக் கூடிய சந்தர்ப்பத்தை நாங்கள் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம் என்பதையும் உங்களுக்குத் தெரியப்படுத்தக் கடமைப் பட்டுள்ளேன். 


3.எங்கள் அம்மாவிற்கு தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை வரதட்சனை. அப்படியிருக்கும்போது 'சமச்சீர் கல்வி' என்பதில் உள்ள 'சீர்' என்ற வார்த்தை திருமணத்தில் பெண்வீட்டார் கொடுக்கும் 'சீர்வரிசை'யைக் குறிப்பதாக உள்ளதால்,இந்த 'சமச்சீர்கல்வி'க்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்.அதைக் கூட புரிந்து கொள்ளாமல் சுப்ரீம் கோர்ட் வரைச் சென்ற தீய சக்திகளுக்கு எதிராக, மீண்டும் எங்கள் அம்மா புயலெனப் புறப்படுவார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


4.    நூலகத்துக்கு வந்தோமா படித்தோமா என்றில்லாமல் "யம்மாடியோ.. இவ்ளோப் பெரியக் கட்டிடமா..! இம்புட்டு வசதியாவா?" என்று வருபவர்கள் வாய்பிளந்து நிற்பதால் படிப்பதில் ஆர்வமில்லாமல் போய் விடுவதாக உளவுத்துறை கொடுத்த ரகசிய தகவலின் அடிப்படையில்,அந்தக் கட்டிடத்தையே குடோனாக மாற்ற நினைத்த எங்கள் அம்மாவின் உயரிய சிந்தனையில் மண்ணை வாரிப்போட்ட தீய சக்திகளை வேரோடு அழித்து,தான் நினைத்ததை மீண்டும் சாதித்து காட்டுவார் என்பதையும் இங்கே சொல்லிக்கொள்கிறேன். 
 5.'ஓல்ட் இஸ் கோல்ட்' என்று நினைப்பவர் எங்கள் அம்மா.அதற்கு உதாரணமாக சிறுவயதில் விளையாடிய நடைவண்டி,பல்லாங்குழி, கிலுகிலுப்பை,கோழிகுண்டு,கிட்டிப்புள்ள உட்பட எல்லாவற்றையும் பொக்கிசமாக வைத்திருக்கிறார்.அவர் பார்ப்பது கூட பழைய பிளாக் அண்ட் ஒயிட் படங்களைத்தான்.அவர் அவ்வப்போது முனுமுனுக்கும் பாடல்கள் கூட பா..பா பிளாக்ஷிப்-ம்,டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார்-ம் தான். இவ்வளவு ஏன் இவருடன் படித்த-நடித்த நண்பர்களுடன் இன்னமும் நல்ல நட்பில் இருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.அப்படிப் பட்டவரை,ஏதோ புதிதாக சட்டமன்றம் கட்டியிருக்காங்களாம். அதில்தான் சட்டப் பேரவைக் கூட்டம் நடத்தப் படவேண்டுமென்றால் அதை எப்படி ஏற்பார்? அதுவுமில்லாமல் நம் வாழ்வியல் சூழலோடுப் பழகிப்போன கொசுவும் மூட்டைபூச்சியும் அங்கு அறவே இல்லையாம்.அது கூட பரவாயில்லை அங்கே மைக்கைப் பிடிங்கி அடிப்பதற்கும்,முகத்தில் ஓங்கி குத்துவதற்கும் ஏதுவாக இருக்கைகள் யாவும் மிக அருகில் இல்லையாம்.இதிலிருந்து  நம் முதல்வர் அம்மா,'புதியன அழிதலும் பழையன வாழ்தலும்' என்ற ஆன்றோர் வாக்குக்கு இணங்க வாழ்ந்துக் கொண்டிருக்கிறார் என்பது புலப்படும்.   

6.எங்கள் அம்மா ஆட்சிக்கு  வந்த அடுத்த நாளிலே "எல்லாக் கொள்ளையர்களும் ஆந்திராவுக்கு தப்பி ஓடி விட்டனர்!" என்று உளவுத்துறைக்கு கூட தெரியாத சங்கதியை தெரியப்படுத்தியத்தின் மூலம்,பேங்க் லாக்கரிலும் ரகசிய அறையிலும் பாதுகாப்பாக வைத்திருந்த நகைகளை மீண்டும் மக்களை அணியவைத்து,அதன் மூலம் கொள்ளையர்கள் மிக சுலபமாக நகைப் பறிப்பு சம்பவங்களை நடத்த வழிவகை செய்த அம்மாவின் கருணையுள்ளத்தை அந்த நான்கு பக்க விளம்பரத்தில் தெரியப்படுத்தவில்லை என்பதை நான் இங்கே கடுமையான விமர்சனமாக வைக்கிறேன்.

7.கடந்த தீயசக்திகளின் ஆட்சியில்,மேடையில் பேசஅனுமதித்து,பின் சிறையில் அடைத்த'தள்ளு தள்ளு' சீமானை,இந்த ஆட்சியில் மேடையில் பேசுவதால் பக்கத்து தெருவில் இரண்டு பேருந்துகள் தானாகவே மோதிக்கொள்வதாலும், அடுத்தத் தெருவில் பத்து பேர் தானாகவே சுட்டுக்கொண்டு இறந்து விடுவதாலும், மேடை அமைந்திருக்கும் வீதியில் உள்ள சாக்கடையில் ரத்த ஆறு ஓடுவதாலும்,இனிமேல் பேசவே அனுமதிக்கக் கூடாது என்று முடிவெடுத்ததின் மூலம் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ நம் முதல்வர் பாடுபடுகிறார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

8.ஏதோ பால் விலை ஏறிவிட்டது என்று கூக்குரலிடுகிறார்களே..அதன் பின்னணியில் உள்ள மகத்துவம் உங்களுக்குத் தெரியுமா?...பால் விலை உயர்ந்தால் பாலின் மதிப்பு உயரும்.பாலின் மதிப்பு உயர்ந்தால் பால் கொடுக்கும் மாட்டின் மேல் மதிப்பு வரும்.மாட்டின் மேல் மதிப்பு வந்தால் அந்த மாட்டை இலவசமாகத் தரும் இதயதெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மாவின் மீதும் மதிப்பு வரும்..மதிப்பு வரும்..மதிப்பு வரும்..என்பதை இங்கே நினைவு கூறுகிறேன்.அதேபோல் பேருந்து கட்டணத்தை உயர்த்தி விட்டதாக பல தீய சக்திகள் கொக்கரிக்கிறார்கள்.அவர்களுக்கு நான் ஒன்று சொல்லிக் கொள்கிறேன்..எங்கள் அம்மா 2050-ல் இந்தியாவின் மற்ற மாநிலங்களில் என்ன கட்டணம் இருக்குமோ அதை ஒப்பிட்டுப் பார்த்துதான் இங்கே உயர்த்தியிருக்கிறார்கள்.இதைக்கூட அறியாமல் நீங்கள் அங்கலாய்த்துக் கொள்வது உங்களின் அறிவீனத்தையேக் காட்டுகிறது. 9.எல்லாவற்றையும் விட ஒரு சமூகவியல் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது எங்கள் அம்மாவின் ஓராண்டு ஆட்சி.கடந்த தீயசக்தியின் ஆட்சியில் டாஸ்மார்க் கடைகளில் கிடைத்த வருமானத்தைவிட,எங்கள் அம்மா ஆட்சியில் பற்பல புதுப்புது ரகங்களை அறிமுகப்படுத்தியதின் மூலம் இரண்டு மடங்கு வருமானத்தை ஈட்டியிருக்கிறோம் என்பதை என் அடிமனத்தைத் தொட்டு நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். 

10. போராட்டம் நடத்துகிறார்களா...சுட்டுத்தள்ளு.!. பேங்குல கொள்ளையடிச்சாங்களா..போட்டுத்தள்ளு..! இவற்றின் மூலம் எல்லா மக்களும் சமமே என்ற சமதர்மக் கொள்கையை நாங்கள் நிலை நிறுத்துகிறோம் என்பதை..............

 ஏய்....ஏய்....எதுக்கு கல்லெல்லாம் எடுக்கிற..கீழப்போடு...
கீழப்போடு...

பெரியோர்களே..தாய்மார்களே...நான் இருக்கக் கூடிய காகூக கட்சியில் சரியான பாதுகாப்பு இல்லாத காரணத்தினால்...
 -----------------------------------------------------(((((((((((())))))))))))))))))))))--------------------------

 


  Wednesday 16 May 2012

திருப்பியடி-சிறுகதை

"ஏண்டி...சனியம்புடிச்ச நாயே...எத்தன தடவ சொல்றது...மீன் கொழம்பு காரமா வையுன்னு..எடுத்து மூஞ்சிலே ஊத்துறம்பாரு.." கோபத்தின் உச்சத்திற்கே சென்றான் கோவிந்தன்.அவன் வாயிலிருந்து தெறித்த எச்சியில் அழுகிய பழ நாற்றம் அடித்தது.அந்த மதிய நேரத்திலும் குடித்திருந்தான்.
     
கோவிந்தன் கார்பெண்டர் வேளையில் கைதேர்ந்தவன்.ஆனால் அந்தத் தொழிலை  தொடர்ச்சியாகச் செய்ய இன்னும் தேரவில்லை.

"இல்லப்பா...உனக்கு வாயில புண்ணு வந்திருக்கிறதா கோமதி சொன்னா.. அதான் காரம் கம்மியா வச்சேன்.." தன் ஒரே செல்ல மகனின் கோபத்தை சாந்தப்படுத்தினாள் அந்தத் தாய்.

கோபத்தில் எதுவேண்டுமானாலும் செய்வான் கோவிந்தன் என்பதை உணர்ந்த அவனின் ஐந்து வயது மகன் மாதவன்,தன் பாட்டியின் மடியின் தஞ்சமடைந்திருந்தான்.

போகாத பொழுதை ராணிமுத்து புத்தகத்தைப் படித்துப் போக்கிக்கொண்டிருந்தாள் கோவிந்தனின் மனைவி கோமதி.

இரண்டு வருடமாக காச நோயால் அவதிப்பட்டுவரும் கோவிந்தனின் அப்பா அந்தக் குடிசையின் ஒரு மூலையில் கிடந்த கட்டிலில் ஒருக்களித்து படுத்திருந்தார்.மகனின் கோபத்தை ஒருபுறம் உணர்ந்திருந்தாலும் தனக்கு தேவையானதின் அவசியத்தைத் தெரியப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்.

"தம்பி...மாத்திரை வாங்கியாரச்சொன்னேனே...வாங்கியாந்...க்..க்.. " அதற்கு மேல் வெளிவந்த வார்த்தைகள், அவரின் கடுமையான இருமலுக்குக் கட்டுப்பட்டது.

"ஏன்...மாத்திரை சப்டலனா செத்தாப் போயிடப் போற?...ஒனக்கு ஒரு எழவு வர மாட்டேங்குதே..." எரிச்சலோடு கத்தினான் கோவிந்தான்.

"ஏம்மா...இந்தாள வெளியத்தான படுக்கச்சொன்னேன்...சாப்டர நேரத்தில லொக்கு..லொக்கு னு இருமிக்கிட்டே கெடக்கு சனியன்"  தன் தாயிடம் மீண்டும் எரிந்து விழுந்தான்.

        தவு திறக்கப்படும் சத்தம் கேட்டு பழைய நினைவிகளிலிருந்து மீண்டு வந்தார் கோவிந்தன்.வேகமாக உள்ளே வந்த மாதவன் தன் சட்டையைக் கழற்றி மாட்டிவிட்டு சாப்பிட உட்காந்தான்.அந்த வீட்டின் மூலையில் அதே கட்டிலில் கோவிந்தன்.சில வருடங்களுக்கு  முன் குடி போதையில் தச்சுவேலை செய்து கொண்டிருந்தபோது பெரிய ஆணி ஓன்று இவரின் வலது காலை பதம் பார்த்திருந்தது.அது சீழ் பிடித்து நெறிகட்டிவிட,வேலைக்குப் போக முடியாமல் வீட்டிலே முடங்கிப்போனார் கோவிந்தன்.சில நாட்களாகத் தான் கொஞ்சம் ஊன்றி ஊன்றி நடக்க ஆரம்பித்திருக்கிறார்.

 இலவச வண்ணத் தொலைக்காட்சியில் சீரியலின் அரிதாரம்பூசிய அழுகையில் ஆழ்ந்து மூழ்கியிருந்தாள் நிறைமாத கர்ப்பிணியான மாதவனின் மனைவி செல்வி.

"அப்பாவ...போற வழியில பெரியாஸ்பத்திரியில கொஞ்சம் இறக்கி விட்டுட்டு போறியா " தன் மகனுக்கு சாப்பாட்டை பரிமாறிக்கொண்டே மெதுவாகக் கேட்டாள் மாதவனின் தாய் கோமதி...

"ஏன்...அந்தாளுக்கு காலு மொத்தமா வெளங்காமலையா  போச்சி.அவர நடந்துப் போகச்சொல்லு"

எதுவும் பேசாமல் மௌனமாக இருந்த கோமதி மீண்டும் மெல்லிய குரலில் தயங்கியபடி கேட்டாள்.

"தம்பி..எனக்கு கொஞ்ச நாளா கண்ணு சரியா தெரிய மாட்டேங்குதுய்யா.கண் ஆஸ்பத்திரி கூட்டிபோகச் சொன்னேனே...எப்பக் கூட்டிட்டுப் போற."

"எல்லாத்துக்கும் என்னையே எதிர்பாக்காத..ஏன் நீயும் கெளம்பி போக வேண்டியதுதானே...சும்மா சாப்பிடுற நேரத்தில தொன தொனன்னுட்டு..."

"அதுல்லப்பா...அதுக்கு 500  ரூவா வேணும்மா.அதான்.."  அச்சத்துடனே கேட்டாள் கோமதி.

"இங்க பணம் என்ன மரத்திலையா காய்க்குது...இல்ல நீயும் உன் புருசனும் எனக்கு சொத்து சேத்து வச்சிருக்கீங்களா..." அவனின்  முகம் சிவந்தது.

"அப்ப... காசுக்கு நாங்க எங்கப்பா போறது.....? "

"எங்கயாச்சும் போய்த் தொலைங்க..." சாப்பிட்டத் தட்டை விசிறி எறிந்து விட்டு சட்டையை மாற்றி புறப்பட்டான் மாதவன்.

"ச்சே..வீட்டுக்கு வந்தா நிம்மதியே இல்லை..ரெண்டு கிழங்களும் கெடந்துட்டு என் உசுர வாங்குது. இதுங்களுக்கு ஒரு சாவு வர மாட்டேங்குது." கத்திக் கொண்டே வெளியேறினான் மாதவன்.

கட்டிலில் படுத்திருந்த கோவிந்தன் மெதுவாக எழுந்து உடை மாற்றிக்கொண்டு புறப்படுவதைக் கவனித்த கோமதி சற்றுப் பதட்டமானாள்.

"எங்க கெளம்பிட்டீங்க .."

"பக்கத்துத் தெரு மாரிமுத்து எதோ செக்யுரிட்டி வேலை இருக்கிறதா சொன்னான்.அதான் போயி என்னான்னு கேட்டுட்டு வாறேன்."

"என்ன சொல்றீங்க...இந்த நிலமையில உங்களால வேலையெல்லாம் செய்ய முடியுமா?..புள்ள எதோ சொல்லிட்டானு இப்படியா பன்றது?..என்னதான் சொன்னாலும் அவன் நம்ம புள்ளைங்க..."

"நம்ம புள்ள...நம்ம புள்ள.. போதும்டி எல்லாம். ஒத்தப் புள்ளனு  செல்லம் கொடுத்து வளத்ததாலதான் இன்னிக்கி அப்பன் ஆத்தாவ மதிக்க மாட்டேங்கிறான்.அன்னிக்கி எங்க அப்பன் ஆத்தா செல்லம் கொடுக்காம என்ன அடிச்சி வளத்திருந்தாங்கனா,எனக்கு நல்லது கெட்டது எதுன்னு தெரிஞ்சிருக்கும்.பாவம்...வயசான காலத்தில அவங்களுக்கு கஞ்சி கூட ஊத்தாம பட்டினி போட்டிருக்கேன்.அவங்க எவ்வளவு வேதனைப் பட்டிருப்பாங்கனு இப்பப் புரியுதுடி.அந்தப் பாவம் தாண்டி இப்ப நம்மள இப்படிவந்து படுத்துது. புள்ளைங்களுக்கு சொத்து சேத்து வைக்கலனாலும் பரவாயில்ல.கட்டுப்பாட்டோட வளர்த்திருக்கணும். அன்னிக்கி என் அப்பன் ஆத்தாள திட்டினதப் பாத்து இன்னிக்கி நம்மள திட்டுறான்.நாளைக்கு பொறக்கப் போற கொழந்தை இதப் பார்த்து வளந்ததுனா,பிற்பாடு அதுவும் இப்படிதான் பேசும்.நம்ம அடுத்த தலைமுறைக்கு காசு பணம் சேத்து வைக்கலனாகூட பரவாயில்ல..அவங்களுக்கு தவறான முன்னுதாரணமா நாம இருந்திடக்கூடாது.இப்ப நாம பன்ற தப்புக்கு தண்டனையா அடுத்தத் தலைமுறை நம்மள திருப்பியடிக்கும். என் ஒடம்புல உசுரு இருக்கிற வரைக்கும் நான் என் சொந்தக் காலில்தான் நிக்கப்போறேன்." தீர்க்கமாக பேசிவிட்டு வெளியேறினார் கோவிந்தன்.

--------------------------------------------((((((((((((((((((((((())))))))))))))))))))))))))))))))))------------------