Saturday 29 June 2013

கல்யாணம் பண்ணிப்பார்...(வைரமுத்து எழுத மறந்த கவிதை..)



கல்யாணம் பண்ணிப்பார்...

உச்சந்தலையைச் சுற்றி 'ஒளிவட்டம்' தோன்றும்...
உலகமே உன்னை வெறித்துப் பார்க்கும்...
ராத்திரியின் நீளம் குறையும்...
அதிகாலையின் கொடூரம் புரியும்..


உனக்கும் சமைக்க வரும்...
சமையலறை உனதாகும்..
ஷாட்ஸ் பனியன் அழுக்காகும்..
பழைய சாம்பார் கூட அமிர்தமாகும்..
ஃபிரிட்ஜ் ,வாசிங் மெசின், கிரைண்டர்,மிக்சி
கண்டுபிடித்தவன் தெய்வமாவான்.
கையிரண்டும் வலிகொள்ளும்...
கண்ணிரண்டும் பீதி கொள்ளும்...


கல்யாணம் பண்ணிப்பார்...

தினமும் துணி துவைப்பாய்...
மூன்று வேளை பாத்திரம் துலக்குவாய்...
காத்திருந்தால்....'வரட்டும்... இன்னிக்கி வச்சிருக்கேன்' என்பாய்...
வந்துவிட்டால்....'வந்திட்டியா செல்லம் போலாமா' என்பாய்....


வீட்டு வேலைக்காரி கூட உன்னை மதிக்காது  -ஆனால்
வீடே உன் கண்ட்ரோலில் உள்ளதாய்
வெளியே பீலா விடுவாய்...


கார் வாங்கச்சொல்லி
கட்டியவள் வயிற்றில் மிதிக்க,
கடன் கொடுத்தவன் கழுத்தைப் பிடி
க்க,
வயிற்றுக்கும் தொண்டைக்
குமாய்
உருவமில்லா உருண்டையொன்று
உருளக் காண்பாய்...


இந்த மானம்,  இந்த வெக்கம் ,
இந்த சூடு,  இந்த சொரணை,
எல்லாம் கட்டிய நாளோடு
கழட்டி வைத்து விடுவது தான்
கொண்டவளை கவுரவிக்கும்
ஏற்பாடுகள் என்பாய்...


கல்யாணம் பண்ணிப்பார்...

இருதயம் அடிக்கடி
எதிர்த்துப் பேசத் துடிக்கும்...
நிசப்த அலைவரிசைகளில் மட்டுமே
உனது குரல் ஒலிக்கும்...
உன் நரம்பே நாணேற்றி உனக்குள்ளே
வெறியேற்றி விடும்...  
எதிரில் எது கிடந்தாலும்
கோபத்தில் உனது கைகள் கிழிக்கும்...
கழுத்து நரம்பு புடைக்கும்...
குருதிக் கொதித்து எரிமலையாய்
வெடிக்கக் காத்திருக்கும்... -ஆனால்        
உதடுகள் மட்டும் ஃபெவிகாலைவிட
அழுத்தமாக ஒட்டியிருக்கும்...
பிறகு....
"என்ன அங்க சத்தம்..." என்கிற
ஒத்த சவுண்டில் சப்த நாடியும் அடங்கிவிடும்...


கல்யாணம் பண்ணிப்பார்...

சப்பை பிகர் கூட செட்டாக விட்டாலும் ,
சாதி சனம் கூட சட்டை செய்யா விட்டாலும்..
உறவுகள் கூட உதவாக்கரை என்றாலும்....
செட்டான ஒரு பிகரும் முதல் நாள் நைட்டு லெட்டர் எழுதிவைத்து ஓடிப்போனாலும்...
நீ நம்பிய அவனோ அவளோ உன்னை நட்டாத்துல விட்டுவிட்டு போனாலும்...
விழித்து பார்க்கையில் சரக்கடித்த போதையில் தெருவில் கிடந்தாலும்...


கல்யாணம் பண்ணிப்பார்...

மகாரௌரவம், கும்பிபாகம், காலசூத்திரம், அசிபத்ரவனம், அந்த கூபம், கிருமி போஜனம்
இதில் ஏதேனும் ஒன்று
இங்கேயே நிச்சயம்


கல்யாணம் பண்ணிப்பார்...


 ( திடங்கொண்டு போராடு சீனுவுக்கு 'காதல் கடிதம் ' எழுதலாம்னு யோசிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இதெல்லாம் வந்து போகுது...:-) அடுத்து அதை எப்படி எழுதப்போறேன்னு தெரியல..?)



--------------------------------------------------------((((((((((()))))))))))))))))))))))------------------------------------------------

Wednesday 26 June 2013

சீனியர் வீரர்களுக்கு ஆப்பு... தோனி முடிவு சரியா..?


 லைமைத்துவத்தில் தான் ஒரு விற்பன்னர் என்பதை மீண்டும் ஒரு முறை 
அனாயசமாக ஜெயித்து நிருபித்திருக்கிறார் நம் ' தோனி '. இன்னும் அழுத்திச் சொன்னால் கட்டுக்கடங்காத காட்டாற்று வெள்ளத்தில் கட்டுக்கோப்புடன் அணியை சுமந்து வெற்றிக்கரையைக் கடந்திருக்கிறது இந்த சூப்பர் சிங்கத் ' தோணி '.



எவ்வளவு  பெரிய  திறமைசாலியாக  இருந்தாலும்  வெற்றி  தோல்வியைப் பொறுத்தே அவர்களின் சாதூர்யமும்  நுண்ணறிவும்  மெச்சப்படுகிறது. அதன் நிர்ணயம்  அவரவர்  அதிஷ்டத்தைப்  பொறுத்தது என்றாலும் மிகச்சிக்கலான தருணங்களில் சமயோசித புத்திக் கூர்மையால் எடுக்கப்படும் முடிவுகள் கூட அதிஷ்டத்தைத்  தாண்டி  வெற்றியை  மிகச் சுலபமாக்குகிறது.

அந்த வகையில் சமகாலத்திய கிரிக்கெட் கேப்டன்களில் சமீபத்திய வெளிச்சம் மகேந்திர சிங் தோனி. கிரான்ட் மாஸ்டரின் மாஸ்டரே  வந்தாலும் உத்தேசிக்கவே  முடியாத  உலக ஆச்சர்யம்  ' தோனி மனசில என்ன '  என்பது தான். தோனி எடுக்கும் ஒவ்வொரு முடிவும் ரஸ்க்கை மீறிய ரிஸ்க்.  அது சரியானதுதானா  என  யோசிப்பதற்குள் அதை வென்று
அடுத்தப் பாய்ச்சலுக்கே தயாராகிவிடுகிறார்.

சாம்பியன் கோப்பைக்கு தேர்வாகியிருந்த அணியைப்  பார்த்த போது ஆச்சர்யமாக இருந்தது.  இரண்டு வருடத்திற்கு முன்பு நடந்த உலகக்கோப்பைப் போட்டியில் இந்தியாவின் வெற்றியை தூக்கி நிறுத்திய அநேக தூண்கள் மிஸ்ஸிங்.  இவ்வளவு பெரிய வெற்றிக்குப் பின் இவ்வளவு சிறிய காலத்திற்குள் எந்த நாட்டு வீரர்களும் இப்படி பந்தாடப்பட்டிருக்க மாட்டார்கள்.  சச்சின் ஓய்வுப் பெற்றதால் அந்த  இடம் மட்டுமே காலியாகயிருக்க வேண்டும்.ஆனால் 'டாப்ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் அப்படியே அப்புறப்படுத்தப்பட்டிருந்தனர். என்னதான் சீனியர் வீரர்கள் என்றாலும் 'கன்சிஸ்டன்சி' இல்லை என்றால் மூட்டைக்கட்ட வேண்டியதுதான் என்பதை நெற்றிப்பொட்டில் அடித்து சொன்னதுபோல் இருந்தது தோனி மற்றும் தேர்வாளர்களின் முடிவு.

சச்சின் போனதால் ' நான் தான் அடுத்த சூப்பர் ஸ்டார்' என அலப்பரை கொடுத்த சேவாக்-க்கு வைக்கப்பட்டது முதல் ஆப்பு.  அணியின் உள்ளே தோனியுடன் தகராறு,  வெளியே கிரிக்கெட் போர்ட்டுடன் தள்ளு முள்ளு. ஆனால் பத்து மேட்ச்சில்  ஒரே ஒரு மேட்ச் மட்டும் அடித்துவிட்டு மற்றவற்றில் வெகு நேக்காக 'டக் அவுட்' ஆவார். உலக சாதனை வச்சிருக்கோம்ல,அசைச்சிக்க முடியாது என்ற மிதப்பில் இருந்த சேவாக்கை மண்ணோடு பெயர்த்துச் சாய்க்க தோனி பயன்படுத்திய கடப்பாரைதான் 'சிகார் தவான்'. முதல் இரண்டு போட்டியிலும் தொடர் சதம் அடித்த தவான் எடுத்த மொத்த ரன்கள் 363. (தவான் தம்பி.. தங்க ' பேட் 'டை நல்லா தூக்கி பிடி.அதுவும் அந்த சேவாக் கண்ல படுற மாதிரி...)

யு டியூப்-ல் கிரிக்கெட் ஃபைட்டிங் என தேடினால் நிறைய கவுதம் காம்பீரோட வீடியோ தான் வருகிறது.ஆனால் அந்த ஆக்ரோசம் பேட்டிங் பண்ணும்போது மட்டும் சமீபத்திய போட்டிகளில் சுத்தமாக தென்படவில்லை. ஒரு FLUKE -ல ரோகித் சர்மாவை தவானுடன் களமிறக்க, நான்கு போட்டிகளிலுமே வெற்றிக்கான அடித்தளத்தை இந்த ஜோடி கச்சிதமாக அமைத்துக் கொடுத்தது.(அப்புறமென்ன... நீ பேசாம டெல்லிக்கே  போய்டு காம்பீரு..)

அடுத்த விக்கெட் நம்ம ஆல்ரவுண்டர் யுவராஜ்தான். கடுமையான நோயின் பிடியிலிருந்து மீண்டு வந்ததால் என்னவோ அடுத்தடுத்து நிறைய வாய்ப்புகள் கொடுக்கப்பட்டும்,தொடர் சொதப்பல் IPL போட்டிகள் வரை தொடர்ந்தது. ஆல்ரவுண்டராச்சே...கருணைக் காட்டப்படாதா என கண்கள் பனிக்க காத்திருந்தவரின் விக்கட்டை வீழ்த்தியது நம்ம சர் ஜடேஜாஜீ தான். (ஆறு பால்... ஆறு சிக்ஸர்.. கண்ணு முன்னால வந்து வந்து போகுது....என்ன பன்றது தம்பி. பேஸ்மென்ட் ஸ்ட்ராங்காத்தான் இருக்கு,ஆனால் பில்டிங் புட்டுகிச்சேப்பா ... )


 
 அப்படியே, ஜாகிர்கானும் நெஹ்ராவும் முறையே புவனேஷ்குமார்,யாதவின் யார்க்கரில் கிளீன் போல்டாக, நான் இருக்கிற வரையில நீ உள்ள வர முடியாது மச்சி என ஹர்பஜனைப் பார்த்து செம தில்லாக கூறுகிறார் நம்ம ஊரு அஸ்வின்.இவை எல்லாவற்றையும் விட மிடில் ஆர்டரில் பீஷ்மனைப் போல் நிற்கிறார் நம்மூரு சிங்கம் தினேஷ் கார்த்திக்( ' வார்ம் அப் ' மேட்ச் எல்லாம் ரெக்கார்டுல வாராதுனு யாருச்சும் இவர் கிட்ட சொல்லுங்கப்பா)   

எந்த தைரியத்தில இப்படி ஒரு டீமை செலெக்ட் பண்ணினார் தோனி என 'டிவீட்' போட ஏற்கனவே தயாராக வைத்திருந்ததை அரக்கப் பறக்க அழித்திருக்கிறது பல கிரிக்கெட் பழங்கள். அணித்தேர்வில் இன்னொரு நெருடலும் இருந்தது. முரளி விஜய்,ரெய்னா, அஸ்வின்,ஜடேஜா இவர்களுடன் தோனி என ஐந்து பேர் CSK -ல் விளையாடியவர்கள். இந்த சலசலப்பு கூட வெற்றியின் ஆர்ப்பரிப்பால் அடங்கிப் போனது.

உலகக் கோப்பையை வென்றெடுத்த ஒரு அணியை பிரிப்பதில் எவ்வளவு ரிஸ்க் இருக்கிறது என்பதை தோனி உணராமல் இருந்திருக்க மாட்டார். அப்படி கழட்டி விடப்படும் வீரர்களின் இடத்தை நிரப்ப அவரை விட திறமையானவரை நியமிப்பதில்தான் ஒரு கேப்டனின் சவாலே இருக்கிறது.அதில் நூறு சதவித வெற்றி யடை
ந்திருக்கிறார் தோனி என்றே சொல்லலாம்.

சாம்பியன் கோப்பை இறுதிப் போட்டியின் 18 வது ஓவர். இங்கிலாந்து வெற்றி பெற 18 பந்துகளில் 28 ரன்கள் இலக்கு.ஆறு விக்கெட் அவர்களிடம் கைவசம் இருக்கிறது.மோர்கனும் போபராவும் இரும்புத்தூண்களாக இருபுறமும்.அடுத்த 19 மற்றும் 20-வது ஓவர் பவர் ப்ளே.கண்டிப்பாக அடித்து நொறுக்குவார்கள். இந்த ஓவர் தான் கோப்பை யாருக்கென்று நிர்ணயிக்கப் போகிறது. இந்த ஓவரில் இரண்டு தூண்களில் ஒன்றை சாய்த்தாக வேண்டும். என்ன முடிவெடுக்கப் போகிறார் தோனி என நூறு கோடி இந்திய உள்ளங்களும் படபடக்க, தோனி பந்து வீச அழைத்தது இசாந்த் சர்மாவை.


அதுவரையில் அதிக ரன்களை விட்டுகொடுத்திருந்த இசாந்த் சர்மாவை அழைத்தது சரியா என யோசித்துக் கொண்டிருக்கையில், இரண்டாவது பந்தில் சிக்சர் பறக்கிறது.அந்த நொடியில் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களாலும் அர்ச்சிக்கப்பட்ட ஒரே நபர் தோனியாகத்தான் இருக்கும்.ஆனால் அதற்கான பதிலடி அடுத்த இரண்டு பந்துகளில் கொடுக்கப்பட்டதுதான் மேட்சிக்கான பெரிய ட்விஸ்ட்.இரண்டு தூண்களும் அடுத்தடுத்து தகர்க்கப் பட்டது. இதை 'லக் ' என்ற வரையறையில் கொண்டுவர முடியாது. சமீபத்திய IPL -ல் CSK விளையாடிய நிறைய போட்டிகளில் கடைசி பந்து வரை டென்சன் எகிற,முடிவில் அது CSK  க்கு சாதகமாக அமைந்ததை ஒப்பிட்டுப் பார்த்தாலே புரியும் 'லக்'கையும் மீறி தோனி எடுக்கும் நுட்பமான முடிவுகளாலே சாத்தியமானது என்று.

' கேப்டன் ' தோனியிடம் எல்லோருமே வியக்கும் ஒரு குணாதிசயம் உண்டு.அது, எவ்வளவு நெருக்கடியான  சூழ்நிலையிலும் பதட்டப்படாமல் முடிவெடுக்கும் ஆளுமைத் திறன்...!.  அதனால் தான்  என்னவோ தோல்வியையும் வெற்றியையும் சம தூரத்தில் வைத்து இவரால் பார்க்கமுடிகிறது. இதே இங்கிலாந்தில் 324 ரன்களை  இந்தியா சேஸிங் -ல் ஜெயித்தபோது சட்டையைக் கழட்டி கங்குலி போட்ட ஆட்டம் நினைவுக்கு வருகிறது. உலகக்கோப்பை, சாம்பியன் கோப்பை ,T20 உலகக் கோப்பை என்கிற மூன்று மைல்கல்லை எட்டிய ஒரே கேப்டன் என்ற போதிலும் அந்த வெற்றிக்குப் பின் தோனியிடமிருந்து வெளிப்பட்ட நிதானம், கிரிக்கெட்டை விட்டு வெளியே இருப்பவர்களும் கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கைப் பாடம்.ஊழல் கரை படிந்த IPL -ல் CSK வுக்கு போட்டதைவிட இன்னும் தம்பிடித்து சத்தமாக தோனிக்கு ஒரு விசில் போடலாம்...



 --------------------------------------------------((((((((((((((((((()))))))))))))))))))))))))))--------------------------------------------

Saturday 22 June 2013

தாவத் தயாராகும் எம்எல்ஏ வைத் தடுப்பது எப்படி...?




"தம்பி...இப்படி மாடு கழுத்து பூரா மணியை கட்டி ஊரெல்லாம் நாய்ஸ் பொலூசன் உண்டாக்கிட்டு மாட்டு வண்டியில அப்படி எங்கப்
பா போறீங்க ..ஏதாவது திருவிழாவா..."

"ஐயா இருவது வருசத்துக்கு முன்னால,  பதினெட்டுப் பட்டி....."


"ஸ்டாப்...எனக்கு நெறைய வேலையிருக்கு...மேட்டர மட்டும் சொல்லு.."

"ஐயா...கடந்த அஞ்சு வருசமா தனி ஆளா தோட்டத்தில வேலை செஞ்சுகிட்டு இருந்த சின்ன கவுண்டர்,ஒரு வழியா கண்டவன் கைய கால  புடிச்சி இப்பத்தான் 29  பேரை  வேலைக்கு  சேத்தாருங்கயா.....  ஆனா இவரு மச்சான் சக்கர கவுண்டர்,சின்னகவுண்டர் தோட்டத்தில வேலை செய்யிற ஒவ்வொரு ஆளா ஆசைகாட்டி தன் தோட்டத்துக்கு இழுத்துகிட்டாருயா.அதிலும் பாருங்க
ய்யா போனவன் சும்மா இல்லாம தொகுதி வளர்சிக்காக பாக்கப் போனேன்னு பொய் வேற சொல்றானுவய்யா.அதான் பொறுத்து பாத்துட்டு பஞ்சாயத்தைக் கூட்டிட் டாரு எங்க சின்ன கவுண்டர்..."

"ஆமா... பில்கவுண்டர் ,கேஷ் கவுண்டர் ,டிக்கெட் கவுண்டர் கேள்வி பட்டிருக்கேன்..அது என்ன சின்ன கவுண்டர்..?"

"ஐயா உங்களுக்கு சின்னகவுண்டர் தெரியாதுங்களா....எங்க சின்னக் கவுண்டர் பரம்பரை இருக்குங்களே அது சாராயத்தில கலந்த வாட்டரையும்,சரக்குல கலந்த சோடாவையும் தனித்தனியா பிரிக்கிற பரம்பரைங்க.. அதிலும் சின்னகவுண்டர் இருக்காருங்களே வெறும் வாசனையை வச்சே எந்த நாட்டுல எந்த வருசத்தில தயார் பண்ணினது
னு கரெக்டா சொல்வாருங்க. முடிஞ்சா ஒரு எட்டு வந்து பஞ்சாயத்த பாத்து போட்டு போங்கயா..."    


இடம்: பதினெட்டுப் பட்டி பஞ்சாயத்து ஆலமரம்.

"சின்ன கவுண்டர் வந்துடார்ருங்க...
சின்ன கவுண்டர் வந்துடார்ருங்க...சின்ன கவுண்டர் வந்துடா..சின்ன கவுண்டர் வந்....சின்ன கவுண்ட...சின்ன க.....சின்...சி......."

" டிங் டிங் டிங் டட டிங் டிங்,,,,,  

கண்ணுபடப் போகுதையா சின்னக் கவுண்டரே....
உனக்கு சுத்திப் போட வேணுமையா சின்னக்கவுண்டரே........"

சின்ன கவுண்டர் : நாயே..நாயே.......நானே ஒன்னு ஒன்னா போகுதேன்னு கவலையில இருக்கேன்...இதுல கண்ணு படப் போகுதா....

பஞ்சாயத்து பெருசு : ஐயா..உங்களுக்கு தெரியாதது எதுவும் இல்லை...தலைமுறை தலைமுறையா இந்த பதினெட்டு பட்டி ஜனங்களுக்கும் தெரிஞ்சதுதான்.பதினெட்டு பட்டி பஞ்சாயத்து இங்க கூடியிருக்குனா.. பதினெட்டுப் பட்டிக்கு தீர்ப்பு சொன்ன நம்ம கவுண்டர் அய்யாவுக்கே இப்படி ஒரு நெலமை வந்தத நெனச்சி பாக்கும் போது.....மாட்டுவண்டி கொட சாஞ்சா நிமுத்து வச்சிரலாம்...கவுண்டரய்யா குடும்ப மானமே கொட சாஞ்சி நிக்கிறத நெனைக்கும் போது.... 

சின்ன கவுண்டர் :   நாயே... நாயே....மேட்டருக்கு வாடா...

பஞ்சாயத்து பெருசு : நம்ம ஊர் ஜனங்களுக்கு தெரியாதது ஒன்னும் இல்ல...மொதல்ல நம்ம கவுண்டரய்யா கட்ன கல்யாண மண்டபத்த இடிச்சாங்க,கவலைப்படல.... பின்னாடியே கொடை பிடிச்சிட்டு திரிஞ்ச வடிவேல வச்சி கழுவி கழுவி ஊத்தினப்ப,கலவரப்படல....கூட்டணிக்காக   சக்கரைக்கவுண்டர் தோட்டத்தில  ஜிம்மி மாதிரி பம்மிகிட்டு நின்னப்போ கூட அசிங்கப்படல.....குடிகாரன்னு சொன்னப்போ கூட..ம்
ஹும்.......நொந்து போயி கவுண்டரய்யா சம்சாரமே மது ஒழிப்பு போராட்டம் நடத்தினப்போ கூட அதிர்சியடையில........
  
ஆனா அய்யா தோட்டக்காரங்க ஒவ்வொருத்தரயும்  அந்த சக்கர கவுண்டர் ஆட்டையை போட்டா அத எப்படிங்க பாத்துட்டு சும்மா இருக்க முடியும்.அட போனவன் சும்மா போனா பரவாயில்ல. ஏதோ தொகுதி வளர்ச்சியாம். இப்ப மட்டும் தொகுதி பத்தடி பெருசா வளந்துடவா போகுது. அதனால கொட சாய்ஞ்சு போன கவுண்டரய்யா மானத்தை செங்குத்தா தூக்கி நிறுத்தணும்னா வெண்ணிற ஆடை மூர்த்திய கூப்பிட முடியாது..நாமலே பாத்து ஒரு யோசனை சொல்லோனும்...




பெருசு 2: ஐயா.. நான் ஒரு யோசனை சொல்றேனுங்கையா..இனிமே ஒங்க தோட்டத்திலேருந்து யாராவது சக்கர கவுண்டர் தோட்டத்துக்கு வேலை செய்யப்போனா,பதினெட்டுப் பட்டி ஜனங்களோட அண்ட்ராயரை தொவைக்கனும்னு தீர்ப்பு சொல்லி போடுங்கையா...

பெருசு 3: ஐயா...ஒவ்வொருத்தருடைய சம்சாரத்துகிட்டயேயும் போயி..."தொகுதி" ங்கிறது  அவுங்க 'செட்டப்'போட செல்லப் பெயர்னு  சொல்லிடுங்கய்யா...இனி எவனாவது தொகுதி வளர்ச்சிக்காக அங்க போனேன்னு சொல்வானா... 


 பெருசு 4: ஐயா..அப்டி ஓடிப்போற ஆள இழுத்து வந்து  ஊரு ஆலமரத்தில கட்டிவச்சி,விருதகிரி,சபரி, மரியாதை படத்த கேப் விடாம போட்டு காமிக்கிறோம்.எப்படியும் ஒரு படத்திலேயே மயக்கம் போட்டுடுவான். தெளிஞ்ச ஒடனேயே அடுத்தப் படத்த போடுறோம்.தெளிய வச்சி..தெளிய வச்சி போட்டு காண்பிக்கிறோம். ஒரு வழியா மூளை குழம்பி போய் இங்கேயே இருந்துடுவான்...அப்படியும் முடியலனா, கடைசி ஆயுதமா சுறா, வேட்டைகாரனை போட்டு மொத்தமா முடிச்சிடலாம். 

பெருசு 5: கவுண்டரய்யா இப்படி செஞ்சா என்ன...மிச்சம் இருக்கிற கொஞ்சம் போரையும் கூப்பிட்டு,இது வரை நான் அடிக்காத சரக்கு ஏதாவது இருந்தா கொண்டு வாங்கனு சொல்லுங்க.அவுங்க எங்க தேடியும் கிடைக்காது. அதுக்குள்ள அடுத்த எலக்சன் வந்துடும்...


பெருசு 6: ஐயா..பேசாம அவுங்க வீட்டை சுத்தி பள்ளம் தோண்டி,அது மேல இலை தழை எல்லாம் போட்டு மூடி வச்சிடுவோம். அது தெரியாம அது மேல நடத்து போவும் போது பள்ளத்துக்குள்ள விழுந்துடுவாங்க. நாம லபக்குனு புடிச்சிடலாம்...எப்படி என் ஐடியா...ஹி...ஹி...ஹி..


சின்ன கவுண்டர் : அடிங்.. கொய்யால.அவங்க போனது கூட கஷ்டமா இல்லடா..உங்க கிட்ட யோசனை கேட்டேன் பாரு. அப்படினா இந்த பஞ்சாயத்துக்கு தீர்ப்பு சொல்ற நேரம் வந்துடிச்சினு நெனைக்கிறேன். எல்லாரும் நல்லா கேட்டுக்குங்க.நான் இந்த துண்டை எடுத்து இடுப்ல கட்னனா சாமி கும்பிடப்போறேன்னு அர்த்தம்.இந்த துண்டை எடுத்து...............


"ஆமா இவரு துண்டை எடுத்து கால் கவட்டைகுள்ள விட்டாருன்னா கோமணம் கட்டப்போறாருனு அர்த்தம். அந்த துண்டை எடுத்து தலைமேல போடாருன்னா,சின்ன வீட்டுக்கு திருட்டுத்தனமா போறாருன்னு அர்த்தம்.அப்படியே    தரையில விரிச்சார்ன்னா சரக்கு அடிக்கபோறார்னு அர்த்தம்.எல்லாம் தெரியுங்க சின்னகவுண்டரு...மொதல்ல தீர்ப்ப சொல்லுங்க..."

சின்ன கவுண்டர் : பதினெட்டுப் பட்டி ஜனங்களும் நல்லா கேட்டுக்குங்க...மாடு பால் கொடுக்குதுங்கிறதுக்காக கொம்புல கறந்தா வறாது.அதோட மடில கறக்கணும்.பனை மரத்தில கள்ளு வருதுங்கிறதுக்காக அதோட வேர்ல வெட்டினா வறாது.நுங்குல வெட்னும்.அது மாதிரி இனி இவனுகள நம்பி எந்த பிரயோசனமும் இல்ல. சாட்சிகாரன் கால்ல விழுறதை விட சண்டைக்காரன் காலிலே விழுந்தடலாம்னு முடிவு பண்ணி நாளைக்கே நானும் தொகுதி வளர்ச்சின்னு சொல்லி சக்கர கவுண்டர் தோட்டத்துக்கு வேலைக்கு போறதா முடிவு பண்ணிட்டேன்.இதுதான் இந்த பஞ்சாயத்தோட தீர்ப்பு.இது எங்க ஆத்தா மேல சத்தியம்.




Thursday 20 June 2013

ஒரே அக்கப்போராகும் பேஸ்புக்...மனுஷ் VS சமூக நீதிமான்கள்



இது எப்படியும் ஒரு நாள் முடிவுக்கு வரும் என நினைத்திருந்தால் மீண்டும் மீண்டும் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்திருக்கிறது முக நூலில்.

முகம் தெரியாத நட்புகளை உருவாக்கி அவர்களுடன் கருத்து பரிமாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ளும் சமூக நோக்கில் தொடங்கப்பட்ட முகநூலில் இன்று சில சமூக விரோதிகள் மேற்கொள்ளும் ஆபாச பேச்சு
க்கள், அவதூறு பிரச்சாரங்கள், தனிமனித தாக்குதல்கள் என இணைய சுதந்திரம் ஒரு தவறான பாதைக்கு தடம் மாறியுள்ளது.

ஒரு காலத்தில் வெறும் அச்சு ஊடகங்கள் மூலமாக மட்டுமே பத்திரிக்கையாளர்களையும், எழுத்தாளர் களையும் தொடர்பு கொண்டிருந்த காலம் போய் தற்போது கைக்கெட்டும் கம்ப்யு
ட்டர் ஸ்க்ரீன் வழியாக சட்டையைப் பிடித்து உலுக்காத குறையாக கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டோம்.அதன் பரிணாம வளர்ச்சியாகத்தான் 'கழுவி ஊத்துதல்' என்கிற தனி மனித தாக்குதலை இணையத்தில் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறோம்.

இப்படி ஒரு தவறான வழிகாட்டுதல் எங்கு ஆரம்பித்தது என்று ஆராய்ந்தால் ஈழப்பிரச்சனையில் தங்களு
க் கிருக்கும் சில சுய நிலைபாட்டோடு ஒத்துப் போகாத அன்றைய திமுக அரசிடமிருந்து அதுவும் கலைஞரிட மிருந்துதான் ஆரம்பித்திருக்கனும்.ஈழ இறுதியுத்தத்தில் கலைஞரின் செயல்பாடு என ஆரம்பித்தால் அது இதைவிட பெரிய அக்கப்போராக இருக்கும் என்பதால் தற்போது மனுஷ்யபுத்திரன்  விசயத்திற்கு வருவோம்.

முகநூல் பிரபலங்களில் மனுஷ்ய புத்திரனும் ஒருவர்தான். நிலைத்தகவலுக்கு விழும் லைக்,கமெண்ட் அடிப்படையில் மட்டுமே இங்கே பிரபலங்கள் என அறியப்படுவதால் அந்த வகைமைக்குள் மனுஷ்ய புத்திரனும் வருகிறார்.தவிர அவர் ஒரு பத்திரிக்கையாளர்,சமூக சிந்தனையாளர் ,இலக்கியவாதி என பன்முகங்களைக் கொண்டவர். ஒரு சாதாரண ஸ்டேடசுக்கு 500 லைக்குக்கு மேல் வாங்குபவர்,அதுவே விமர்சனத்துக்குள்ளாகும் ஸ்டேடஸ் என்றால் 1500 தாண்டியே சென்றிருக்கிறது. முகநூலில் ஊடகவியலார் என எடுத்துக்கொண்டால் (கார்டூனிஸ்ட் பாலா ,டிமிட்ரியைத் தவிர்த்து) இது ஒரு மைல்கல் தான். வெறும் லைக்கை மட்டும் வைத்து எப்படி ஒருவரின் தரத்தை நிர்மாணிக்க முடியும் என கேள்வி எழுப்பினால், 1000 பேருக்கு மேல் தன் நிலைபாட்டோடு ஒத்துப் போகச்செய்வதே ஒரு சவால் தானே... அதுவுமில்லாமல் முகநூலின் அளவுகோலே 'லைக்' எண்ணிக்கை  மட்டும் தானே..

சரி....இப்படி தனிக்காட்டு ராஜாவாக இருந்த மனுஷுக்கு என்ன ஆனது....?.கடந்த இரண்டு வாரங்களாக முகநூலில் சில கும்பல்களால் கடுமையாக தாக்கப்பட்டு வருவதில்லாமல், அவரது அந்தரங்க விசயங்களை தோலுரித்துக் காட்டுகிறேன் என இணையம் முழுவதும் அவதூறுகளை பரப்பி அவரை கடும் உளைச்சலுக்கு ஆளாக்கி வருகிறது அந்த கும்பல். அசால்ட்டா 600 லைக் வாங்கியவர் 200
லைக் வாங்குவதற்கே தண்ணி குடிக்கிறார். அப்படியென்ன தவறு செய்துவிட்டார் திருவாளர் மனுஷ்ய புத்திரன்...?

சமீபத்தில் நடந்த கலைஞரின் 90 வது பிறந்த நாளில் கவிப்பேரரசு வைரமுத்துவின் ஏற்பாட்டில் நடந்த 90 கவிஞர்கள் பங்குபெறும் கவிபாடும் மன்றத்தில் மனுஷ்யப் புத்திரனும் கலந்துகொண்டு கலைஞரை வாழ்த்திப் பாடினாராம்.இது தமிழ் கூறும் நல்லுலகுக்கே பெரும் அவமானம் அல்லவா..நம்பிக்கைத் துரோகமல்லவா...அதனாலதான் அந்த கும்பல் வெகுண்டு எழுந்தது.ஏனென்றால் அவர் அங்கு செல்வதற்கு முன் இந்த கும்பலிடம் அனுமதி வாங்கவில்லை போல...

முதலில் அவர் கலைஞரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டது சரியா...?  மனுஷ்யப் புத்திரன் அவர்களை ஆரம்பத்திலிருந்தே கவனித்து வந்தவர்களுக்கு ஒரு விஷயம் தெளிவாகத் தெரியும்... அவர் கலைஞரின் ஒரு சில அரசியல் நிலைப்பாடுகளை விமர்சனம் செய்திருக்கிறாரே தவிர கடுமையாக தாக்கிப் பேசியதில்லை.கலைஞரிடத்தில் எப்போதும் அவருக்கு ஒரு மெல்லிய பிரியம் இருந்ததை மறுக்கலாகாது. தவிர உயிர்மையை தவிர்த்து அவரின் ஊடக செயல்பாடுகள் குங்குமம்,நக்கீரன்,கலைஞர் டிவி என திமுகவை சார்ந்தே அமைந்திருக்கிறது.இப்படி ஒரு சூழலில் கலைஞரின் பிறந்த நாள் விழாவில் அவர் கலந்து கொண்டது அந்த கும்பலுக்கு எந்த வகையில் வெறுப்பை ஏற்படுத்தியது..? ஒருவேளை கலந்து கொள்ளாமல் இருந்தால்தான் ஆச்சர்யம்.அவர் என்ன திமுகவின் கட்சி மாநாட்டிலா கலந்து கொண்டார்...?  அல்லது இவர் மட்டுமா கலந்து கொண்டார்..?

அடுத்தது... கலைஞர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வது தவறா...? உங்களுக்கு கலைஞர் பிடிக்க வில்லை என்றால் அவரை வாழ்த்துபவர்கள் எல்லாம் ஓணாண்டி புலவர்களா...? அப்படியென்ன அவர் தமிழுக்கு தீங்கிழைத்து விட்டார்?.சமகாலத்திய அரசியல் தலைவர்களில் அவர் அளவுக்கு தமிழின் வளர்ச்சிக்கு உழைத்துக் கொண்டிருப்
ர் யார்? உடனே 'ஈழத்தில் ஒரு லட்ச்சத்து..........'என தேய்ந்து போன பழைய ரெகார்ட திரும்பவும் போட்டீங்கனா...பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகமே இருட்டுன்னு சொன்ன கதைதான் ஞாபகத்துக்கு வந்து தொலையும்.. சரி..இந்த விவகாரம் இப்ப தேவையில்ல.. மனுஷ் மேட்டருக்கு வருவோம்.

முதலில் அவர் மீது அவதூறைக் கிளப்பும் கும்பல் எது...? அவர்கள் ஒன்றும் நடுநிலை நாராயணசாமிகள் கிடையாது...எல்லோரும் அம்மாவின் அடிவருடிகள்தான். ஒருவர் சவுக்கு சங்கர். தமிழக காவல்துறையில் முன்பு எழுத்தராக பணிபுரிந்தவர்.காவல்துறை,நீதித்துறை என இவரின் தொடர்பு எல்லை பெரியது.அங்கு கிடைக்கும் சில தகவல்களை அடிப்படையாகக் கொண்டு கொஞ்சம் கற்பனையையும் கலந்து தன் சவுக்கு தளத்தில் எழுதி வருகிறார். ஜெயலலிதாவைச் சுற்றி இருப்பவர்களை கடுமையாக சாடினாலும் அம்மாவை சிறு துரும்பு அளவுக்கு கூட விமர்சிக்க மாட்டார்.அப்படியொரு நடுநிலை நாயனம் இவர்.ஆனால் கலைஞரை யாராவது துதி பாடினால் அவரை சொம்பு என்று விளிப்பார். அந்த வகையில்தான் மனுஷ்ய புத்திரன் சொம்படி சித்தரானார். "இறந்து போங்கள்....","ஓய்வு பெறுங்கள்.." என  கலைஞரை சாடி இவர் எழுதிய பதிவுகளை உடன்பிறப்புகள் படித்தால் ரத்தக் கொதிப்பே வந்துவிடும்.அப்படியொரு நாகரீகமான எழுத்தாளர்.

அடுத்தவர் கிஷோர் சாமி என்கிற அம்மாவின் அதிதீவிர சொம்பு.. முகநூலில் இவரின் செயல்பாடுகள் முற்றிலுமாக அருவருக்கத்தது. திருமாவளவனை சாடுவதாக
ச் சொல்லி தனித் இன மக்களையே கேவலமாக திட்டுவார். முன்பு ஒருமுறை "நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தால்.."என்கிற ரீதியில் இவர் எழுதிய நிலைத் தகவலால் கொதித்துப் போன சிறுத்தைகள் அமைப்பு இவர் மீது காவல் துறையில் புகார் அளித்தது. இதைப்பற்றி ஒரு பதிவு  கூட எழுதியிருக்கிறேன்.ஆனால் நடவடிக்கை எதுவும் கிடையாது. காரணம் ஐந்து ஸ்டேடஸ் அவதூறாக இருக்கும். ஆறாவது ஸ்டேடஸ் மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா இன்று அதைத்திறந்து வைத்தார்.... இதைத் திறந்து வைத்தார் என அமைச்சர்களே பொறாமைப்படும் அளவுக்கு புகழ்ந்து தள்ளுவார். அதிலும் முகநூல் முகப்பில் முதல்வரின் படம் வேறு(இந்த வார நக்கீரனில் கூட வந்திருக்கிறது).பிறகு எப்படி நடவடிக்கை எடுப்பார்கள்..? இவர் குறிவைப்பது இணையத்தில் இயங்கும் தலித் பெண்கள் மீதுதான். குறிப்பாக கவிதா சொர்ணவல்லி,கவின் மலர் போன்ற பத்திரிகையில் இயங்கும் பெண்கள் மீது இவர் தொடுக்கும் ஆபாசத் தாக்குதல்கள் அருவருப்பின் உச்சம். இப்படிப்பட்டவரின் பார்வைதான் தற்போது மனுஷ் அவர்கள் மீது திரும்பியிருக்கிறது. அதிலும் அவரின் ஊனத்தை நக்கலடித்த திலிருந்து அவரின் ஒவ்வொரு ஸ்டேடசையும் காபி செய்து(கவிதைகள் உட்பட) இவர் பக்கத்தில் இட்டு அதன் கீழே மோசமான வார்த்தைகளில் எழுதுவது வரை இவரின் வன்மம் இன்னமும் தொடர்கிறது.  சரி..இவர்களை இப்படி தொடர்ந்து செயல்பட வைப்பது யார்..?  வேறு யாரு.. இணையத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் இவர்களின் அல்லக்கைகள்தான்.எவ்வளவு வன்மமாக எழுதினாலும் கண்ணை மூடிக்கொண்டு அதற்கு 'லைக்'கிடும்  இது போன்ற சொம்பு கூட்டங்கள் இருக்கும்வரை இவர்களின் வக்கிர செயல்பாடுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

இந்த வார நக்கீரனில் மனுஷ்ய புத்திரன் எழுதியது.

இவரைத் தவிர்த்து இன்னும் சிலர் காலையில் எழுந்து தூக்கம் கலையாமல் பல்லு கூட விளக்காமல் முதல் வேலையாக முகநூலைத் திறந்து மனுஷ் இன்று என்ன ஸ்டேடஸ் போட்டிருக்கிறார் என்று ஆராய்ந்து அதற்கு பதிலடியாக தன் பக்கத்தில் எதாவது உளறி வைத்துவிட்டுத்தான் ஆபிசுக்கு கிளம்புகிறார்கள். இதில் நடுநிலை நாயன்மார்களாக பல வேசங்கள் போடும் சிலரும் நான் நடுநிலைதான் ஆனால் கலைஞரை யார் பாராட்டினாலும் எனக்கு அவர் எதிரிதான் என்கிற உயரிய நிலைப்பாட்டோடு அங்கு சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.

இங்கே நான் மனுஷ்ய புத்திரனுக்கு சப்பைக் கட்டு கட்டவில்லை.விஸ்வரூபம் சம்மந்தமாக அவரின் ஒரு ஸ்டேடசை கடுமையாக விமர்சித்து நானும் ஒரு பதிவு போட்டிருக்கிறேன். ஆனால் விமர்சனம் என்பது வேறு...அவதூறு தாக்குதல் என்பது வேறு. ஒருவரின் கருத்தோடு உங்களுக்கு முரண்பாடு ஏற்பட்டால் கருத்தியல் ரீதியாக அவரை எதிர்கொள்வதுதான் நாகரீகம்.அதைவிடுத்து அவரின் அந்தரங்க விசயங்களில் மூக்கை நுழைத்து கட்டுக் கதைகள் பல அவிழ்த்து விடுவது வக்கிரமல்லவா.. இதில் சில அறிவிலிகள்,சவுக்கு சங்கர் வெளியிட்ட குற்றச்சாட்டு பொய் என்றால் இவர் காவல்துறையில் புகார் கொடுத்திருக்கலாமே. அமைதியாக இருக்கிறார் என்றால் எல்லாம் உண்மையென்று அர்த்தம் தானே என கேட்கிறார்கள்.அவர்தான் தெளிவாக சொல்கிறார்.'அவர் கூறிய ஒரு குற்றச்சட்டையாவது ஆதாரத்தோடு நிருபித்தால் நான் எழுதுவதையே நிறுத்திக் கொள்கிறேன்' என்று. நமக்கு நிருபிப்பதா முக்கியம். முகநூல் பாசை படி 'கழுவி ஊத்தணும்,டவுசர் கழட்டனும் ' அது போதும்.


இவர்கள் மட்டுமல்ல இணையத்தில் மட்டும் (கவனிக்க மட்டும்..)தன்னை ஒரு போராளி(!?)யாகக் காட்டிக் கொள்ளும் இன்னொரு குருப்பும் இப்படித்தான். கலைஞர் சம்மந்தப்பட்ட எந்த பதிவாக இருந்தாலும் அங்கு சென்று வாந்தியெடுத்து விட்டு வந்து விடுவார்கள். இவர்களின் நோக்கம்தான் என்ன..?

வெரி சிம்பிள்... 2011 தேர்தலில் படு தோல்வியடைந்த கலைஞர் மீண்டும் எழுந்து வந்துவிடக் கூடாது. இணையத்தில் இதுவரை மிக மோசமாக,வக்கிரமாக விமர்சனம் செய்யப்பட கலைஞர்,எக்காரணம் கொண்டும் யாராலும் சிறு புகழுக்குக் கூட ஆளாகி விடக் கூடாது. அதாவது கலைஞர் கடைசிவரை கழுவி ஊற்றப்பட வேண்டும்.ஏதோ முக நூல்தான் தமிழகத்தில் தலைவிதியையே மாற்றி எழுதுகிற மாதிரி. மனுஷ்ய புத்திரன் போன்ற மீடியாவில் புகழ் பெற்றவர்கள் கலைஞரை பாராட்டி பேசும்போது எங்கே கலைஞர் மீதிருக்கும் தவறான பிம்பம் மாறிவிடுமோ என்கிற அச்சம்தான் இது போன்றவர்களை மனநிலை பாதிக்கும் அளவுக்கு உசுப்பேற்றியிருக்கிறது.

எனக்கு இன்னொரு சந்தேகம்.முகநூலே கலைஞருக்கு எதிராக இருக்கிறது என்பது போன்ற பிம்பம் நிலவுகிறதே. இது எந்த அளவுக்கு உண்மை...?  உண்மையைச் சொன்னால் இப்படியொரு மாயபிம்பம் உருவாகவில்லை, உருவாக்கபட்டிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.இதற்கு முக்கிய காரணம் இதில் இருக்கும் 'பிளாக்' என்கிற ஆப்சன். கலைஞரை வசைபாடி எழுதுகிற நிலைத்தகவலுக்கு யாராவது வந்து எதிர் கேள்வி கேட்டால் உடனே அவர்களை பிளாக் பண்ணிவிடுவார்கள்.அதாவது இனி அவர்கள் இடும் நிலைத்தகவல் பிளாக் செய்யப்பட்டவருக்குத் தெரியாது.இப்படி கேள்வி கேட்பவர்கள் எல்லோரையும் பிளாக் செய்துவிட்டு தன்னோடு ஒத்தக் கருத்து உள்ளவர்களை மட்டும் தன் நண்பர்கள் லிஸ்டில் வைத்துக் கொண்டால் இனி எவனும் கேள்வி கேட்க முடியாதல்லவா...    


அப்படிஎன்றால் கலைஞரைக் கலாய்த்து போடும் ஸ்டேடசுக்கு அதிக லைக் விழுகிறதே...இதுவும் ஒரு மாய பிம்பம்தான்.முகநூலில் அதிக லைக் வாங்குபவர்களை( அரசியல் ரீதியாக மட்டும்..பெண்கள் குறிப்பாக நடிகைகள் இந்தக் கணக்கில் கிடையாது) எளிதாக அடையாளம் காணலாம்.உதாரணமாக கலைஞருக்காகவே கார்ட்டூன் வரைய அவதாரம் எடுத்த 'கார்டூனிஸ்ட் பாலா' வரையும் கார்ட்டூன்களுக்கு அதிக பட்சமாக 1500-2000 லைக் விழுந்திருக்கும். இது சராசரியை விட மிக அதிகமாயிற்றே என தோன்றும்(இந்த மிதப்பில் தான் இவரைப் போன்றவர்கள் கலைஞரை மட்டும் கலாய்ப்பதிலே குறியாக இருக்கிறார்கள்). ஆனால் சதவிகித அடிப்படையில் பார்த்தால் தெளிவாகப் புரியும். முகநூலில் இவருக்கு இருக்கும் நண்பர்கள் 5000+ பாலோயர்ஸ் 25,000 (இதில் அநேக உடன்பிறப்புகள் பிளாக் செய்யப்பட்டிருக்கிறார்கள்.)ஆக மொத்தம் முப்பதாயிரம் பேர்.அனைவருமே இவருடைய கருத்தோடு ஒத்துப் போகிறவர்கள் அல்லது நடுநிலைப் போர்வையில் ஒளிந்துக் கொண்டிருப்பவர்கள். ஆக முப்பதாயிரத்தில் வெறும் 1500 லைக்கை பெற்று ( 5 சதவிகிதம்) உலகமே கலைஞரைக் காரித்துப்புகிறது என்கிறார். குறிப்பாக இவருக்கு விழும் லைக்குகளில் பெரும்பான்மை தமிழகத்தில் ஓட்டுரிமை இல்லாத புலம் பெயர் தமிழர்கள்.அப்படி இப்படிப் பார்த்தால் தமிழகத்திலிருந்து 500 லைக் கூட விழுந்திருக்காது.இதுதான் முகநூலின் மிகப்பிரபலமான பிலாக்கூனிஸ்ட் பீலா...ச்சீ...கார்டூனிஸ்ட் பாலாவின் நிலைமை.இதை வைத்துதான் அவர் டவுசரை உருவுவேன் ..ஜட்டியைக் கழட்டுவேன்னு சொல்லிட்டு திரியுறார்.  

இப்படி கலைஞருக்கு எதிராக பொய்யாகவே கட்டமைக்கப்பட்டுள்ள பிம்பத்தை யாராவது தகர்த்து விடுவார் களோ என்கிற பதட்டத்தில் தான் இது போன்ற சில்லுண்டி வேலைகளைச் செய்கிறது அந்தக் கும்பல். கருத்தியல் ரீதியாக எதையும் எதிர்கொள்ள தைரியமில்லாத பொட்டைப் புழுக்கள். ஓவ்வொரு வருக்கும் ஒரு நிலைப்பாடு உண்டு.தன் நிலைபாட்டோடுதான் அனைவரும் ஒத்துப் போகவேண்டும் என எதிர்பார்ப்பது மடத்தனத்தின் உச்சம். இந்தப் பதிவு என்னோடைய நிலைப்பாட்டின் பிரதிபலிப்புதான். இதோடு நீங்கள் ஒத்துப் போகவேண்டும் என உங்களை நான் வற்புறுத்தவும் முடியாது.அப்படி ஒத்துப் போகாத உங்கள் மீது பொய்யான அவதூறுகளை நான் பரப்பினால் என்னை என்ன சொல்லி வசை பாடுவீர்களோ அதையேத்தான் அந்தக் கும்பலை நோக்கி கர்ர்ர்ர்...த்தூ எனத் துப்புகிறேன்.





------------------------------------------------(((((((((((())))))))))))))))))))-------------------------------------

Tuesday 11 June 2013

என்ன நடந்தது இளவரசன்-திவ்யா காதல் வாழ்க்கையில்..?




 2012 நவம்பர்  7.    மறக்க முடியுமா அந்த நாள்....!

வட தமிழகத்தையே புரட்டிப் போட்ட கடந்த வருடத்தின் கருப்பு நாள்.! கடந்த 9 மாதங்களாக காதல் திருமணங்கள் பற்றியும் கலப்புத் திருமணங்கள் பற்றியும் பெரும் விவாதங்களை உருவாக்கிய சம்பவம். சமாதியாகிவிட்ட சாதீய உணர்வுகளை மீண்டும் தோண்டியெடுத்து அதில் நஞ்சைக் கலந்து நடுவீதியில் போட்டு சில பிணந்தின்னிகள் வெறியாட்டம் போட்ட  நிகழ்வு..முற்றிலுமாக மூன்று தலித் கிராமங்கள் தீக்கிரையாக தங்கள் வாழ்வாதாரத்தை தொலைத்து விட்டு நாதியற்று நிற்க வைத்தது அந்த சம்பவம்.


சாதி வன்முறைக்கு பகடைக்காய்களாக பயன்படுத்தப்பட்ட திவ்யா- இளவரசன் தம்பதிகள் இன்று பிரிந்து விட்டனர்.

இந்த காதல் சம்பவம்தான், தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்த பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாசுக்கு கிடைத்த துருப்புச்சீட்டு.தலித்  மக்களுக்கு எதிரான குள்ளநரி தாக்குதல்களுக்கு ஆரம்பப்புள்ளி வைக்கப்பட்டது இங்கிருந்துதான்.

வட மாவட்டங்களில் தலித் இன மக்களின் வில்லனாக தற்போது அறியப்படுகிற ராமதாஸ் ஆரம்பத்தில் அவர்களோடு கை கோர்த்துக் கொண்டு இணக்கமாகத்தான் இருந்தார்.தமிழ்க்குடிதாங்கி என திருமாவளவ- னால் பாராட்டுப் பெரும் அளவுக்கு நெருக்கம் இருந்தது.

தன் இன மக்களுக்காக தன்னலம் பாராமல் களப் போராட்டம் கண்ட ராமதாஸ், ஒரு காலத்தில் ஒட்டு மொத்த வன்னியர்களின் நம்பிக்கைக்கு
ப் பாத்திரமான காட்பாதராக  இருந்தார். அவரின் ஒரு சொல் அசைவில் வட மாவட்டங்களே கட்டுப்பட்டன. 'பந்த்' என்கிற சொல்லின் வீரியம் வன்னியர் இயக்கம் நடத்திய போதுதான் நிதர்சனமாக உணரமுடிந்தது.கிட்டத்தட்ட ஆறு மாவட்டங்களுக்கு மேல் இவரின் செல்வாக்கு கொடி கட்டி பறந்தது..இது எல்லாமே தன் இன மக்களின்  உரிமைக்காக போராடும் ஒரே தலைவன் என்கிற அடிப்படையில் தான்.

காலப் போக்கில் வாரிசு அரசியல் என்கிற எழுதப்படாத விதியால் ராமதாசின் அரசியல் தலையெழுத்தே மாறிப் போனது. எந்த வாய் தன் குடும்ப உறுப்பினர்கள் சட்டமன்ற வாசலில் காலடி எடுத்து வைத்தால் செருப்பால் அடியுங்கள் என சொன்னதே அதே நார வாய்தான் ஐந்தாண்டுக்கு ஒரு முறை அம்மாவிடமும் அய்யாவிடமும் தன் மகனின் எம்பி சீட்டுக்காக கைகட்டி பல்லிளிக்க செய்தது.

தேர்தலுக்கு சில மாதங்கள் முன்புவரை,'தனித்து நிற்போம்','வன்னியனே முதல்வர்' என முழங்குவார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் கோபாலபுரத்திற்கு ஒரு குரூப்பையும்.போயஸ் தோட்டத்திற்கு ஒரு குரூப்பையும் அனுப்பி கூட்டணி பேரம் நடத்துவார்.பேரம் படியும் கட்சியுடன்  'இது கொள்கைக் கூட்டணி, வெற்றிக் கூட்டணி,எங்கள் தயவில்லாமல் யாரும் ஆட்சியமைக்க முடியாது' என தோட்டத்து வாசலிலோ அல்லது அறிவாலய கேட்டுக்கு முன்னே நின்று வெக்கமில்லாமல் முழங்குவார்.அதாவது ஐந்து வருடத்திற்கு ஒரு முறை அம்மாவின் சேலையையும்,அய்யாவின் வேஷ்டியையும் கூச்ச நாச்சமில்லாமல் துவைப்பார்.


சரி இந்த கன்றாவி எல்லாம் இப்போ எதுக்குன்னு கேக்கிறீங்களா... குரங்கு மரத்துக்கு மரம் தாவுகிற மாதிரி ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணியை மாற்றிவிட்டு, சமீபத்திய தோல்விக்கு தலித்களோடு இணக்கமாக போனதுதான் காரணம் என்று இந்த அறிவு ஜீவிகள் கண்டுபிடித்திரு
க்கிறது. கடந்த இரண்டு தேர்தலில்களிலும் இவருக்கு மக்கள் கொடுத்த மரணஅடிக்கான  பின்புலம் என்னவென்பதை அரசியல் ஞானிகளை வைத்து அலசத் தேவையில்லை... கொஞ்சம் திரும்பிப் பார்த்தாலே புரிந்துவிடும்.

தன் அரசியல் செல்வாக்கு சரிந்து போனதற்கு என்ன காரணம் என்பதை மங்குனி மணிகள்,வெட்டி குருக்கள் முன்னிலையில் தைலாபுர தோட்டத்தில் வைத்து ஆலோசித்திருப்பார். அந்த சமூக நல்லிணக்க சிகாமணிகள் என்ன சொல்லியிருக்கப் போகிறது..? திருமாவுடன் கைகோர்த்தது தவறு..,தலித்களுடன் நெருக்கிப் போவது ஆபத்து... , அவர்கள் நமக்கு எதிராக இல்லை என்றாலும் எதிரியாக்கிக் கொள்வதுதான் எதிர்கால அரசியல் முன்னெடுப்புக்கு நல்லது என தெளியவைத்து தெளியவைத்து டாக்டருக்கே ஏற்றியிருப்பார்கள்.

இந்த சந்தர்ப்பத்தில்தான்
இளவரசன்-திவ்யா காதல் சம்பவம் மருத்துவர் ஐயாவுக்கு துருப்புச் சீட்டாக அமைந்து போனது.

இரண்டு குடும்பங்களுக்குள்ளான காதல் பிரச்னையை இரு சமூகங்களுக்கிடையேயான சாதி பிரச்சனையாக மாற்றி,மூன்று தலித் கிராமங்களை எரித்து,அந்த சுவாலையின் வெப்பத்தை வைத்துதான் தன் கட்சியின- ருக்கு சூடேற்றி இருக்கிறார். மது ஒழிப்பு போராட்டங்களை ஒரு புறம் நடத்தினாலும் இது தன் கட்சியினரை உத்வேகப்படுத்தாது என்பதை
த் தெளிவாகப் புரிந்து கொண்டு தான் தலித் எதிர்ப்பரசியலை மீண்டும் தூசி தட்டியிருக்கிறார்.

காதல் திருமணத்தில் மட்டுமல்ல நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில் கூட ஒரு வருடத்தில் தாம்பத்திய வாழ்க்கை சலித்து போய்  நிறைய பிரச்சனைகள் தலை தூக்குகிறது. பல பேர் உயிருக்கும் உடமைக்கும் உலைவைத்த அந்த சம்பவத்திற்குப் பிறகு இவர்களது காதல் வாழ்க்கை கடுமையான மன உளைச்சலை அளித்திருக்கும். தந்தை தற்கொலை செய்துகொண்டது திவ்யாவுக்கு பேரிழப்பாக இருக்கும் சூழலில் தன் தாயாரின் அன்பை நோக்கி அவரது மனம் அலை பாய்ந்திருக்கும். அந்த சந்தர்பத்திற்கு காத்திருந்தது போல் திவ்யாவின் உறவினர்கள் கலங்கிய அவரது மனக் குட்டையில் மீன் பிடித்திருக்கிறார்கள்.

இளவரசனை பிரியும்படி யார் மூலம் நெருக்கடி வந்திருக்கும் என்பதெல்லாம் மர்மமான விசயமல்ல.சாதி என்கிற சாணியை தன்  உடல்முழுவதும் பூசிக்கொண்டே திரியும் சாக்கடை நாய்களுக்கு மத்தியில் நம் சமூகம் சுழலுவதால் யார் மூலம் நெருக்கடி வந்திருக்கும் என்பதை சொல்லவா வேண்டும்..?

ஆனால் இதுவரை திவ்யா இளவரசனைப் பற்றி எந்தத் தவறான அபிப்பிராயமும் சொல்லவில்லை. இளவரசனை நிரந்தரமாகப் பிரிகிறேன் என்றும் கூறவில்லை. "இப்போதைக்கு என் மனம் அம்மாவோடு இருக்க விரும்புகிறது” என்று மட்டுமே கூறியிருக்கிறார்.அதற்கு தன் அம்மா தம்பியின் உயிர் குறித்த கவலை அந்த பெண்ணை இந்த முடிவு எடுக்க செய்திருக்கலாம். கடந்தமாதம் தனது கர்ப்பம் கலைந்துபோன மன உளைச்சல் காரணமாகக் கூட திவ்யாவுக்கு அம்மாவின் அருகாமை தேவைப்பட்டிருக்கலாம்.

இளவரசனும் , "தன்னுடைய குடும்பத்திற்கு ஏதும் ஆபத்து நேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக என்னை விட்டு பிரிந்து சென்றுள்ளார் திவ்யா. அவளுடைய தாய்க்கும் எங்களை பிரிப்பதில் உடன்பாடில்லை. ஏதோ ஒரு அழுத்தத்தின் காரணமாகத்தான் உயர்நீதிமன்றத்தில் மனு போட்டிருக்கிறார் "  என கூறியிருக்கிறார்.

திவ்யாவின் தந்தையின் மரணம் ஏற்கனவே பல சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கையில்,தற்போதைய கவலை திவ்யா உயிர் குறித்ததே.. கொலை செய்துவிட்டு, "மன உளைச்சல் காரணமாக திவ்யா தற்கொலை செய்து கொண்டார்.. ” என்று செய்தியை வெளியிடுவது ஒன்றும் சாதிவெறியர்களுக்கு பெரிய விசயமாக இருக்காது என்கிற எதார்த்தமே அந்த பயத்திற்கு காரணம்.. இப்போது திவ்யா எடுத்திருக்கும் முடிவைப் பார்க்கையில் தன் அம்மா தம்பியின் பாதுகாப்பு குறித்து அந்த
ப்பெண் எவ்வளவு மன உளைச்சலுக்கும் பயத்திற்கும் உள்ளாகியிருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

இந்தப் பிரச்னைக்கு தீர்வு திவ்யா கையில்தான் உள்ளது. தருமபுரி சம்பவத்திற்கு சில மாதங்களுக்குப் பின் இவர்களை பிரபல கார்டூனிஸ்ட் ஒருவர் சந்தித்துப் பேட்டியெடுத்த போது மிக தைரியமாக திவ்யா பேசியதைக் குறிப்பிட்டார்.அவர்களின் வாழ்க்கையை அவர்கள் தெளிவாக முடிவெடுத்துள்ளதாக அவரிடம் தெரிவித்தாராம்.அப்படியொரு தைரியமான திவ்யாவை மிரட்டியது யார்...? பாசத்துக்குக் கட்டுப்பட்டவரை பாசத்தை வைத்தே மிரட்டியிருக்கிறார்கள். இளவரசன் தரப்போ மிகத் தெளிவாக உள்ளது. ஆனால் முடிவு திவ்யா கையில்தான் உள்ளது....சாதியெனும் சாக்கடையில் உழலும் புழுக்களுக்கு  திவ்யாவின் முடிவு எந்த விதத்திலும் தீனி போடும்படி இருக்கக் கூடாது.


காதல் திருமணம் செய்பவர்கள் மட்டுமல்ல கலப்புத் திருமணம் செய்பவர்களும் இச்சமூகத்தில் வெற்றிகர மாகவும் சந்தோசமாகவும் வாழ்க்கை நடத்துகிறார்களா என்கிற சமூக அடிப்படையிலான விவாதங்களுக்கும் சாதியை மீறி திருமணம் செய்ய முயலும் பலருக்கும் இளவரசன்-திவ்யாவில் காதல் வாழ்க்கைதான் எதிர்காலத்தில் உதாரணமாக எடுத்துக்கொள்ளப்படும் என்பதில் சந்தேகமில்லை.அதை சாத்தியப் படுத்தக் கூடிய பொறுப்பு திவ்யாவிடம்தான் உள்ளது.  அவர் நல்ல முடிவை எடுப்பார் என நம்புவோம்.

எப்படியோ இவர்களின் பிரிவு மருத்துவர் அய்யா அவர்களின் அரசியல் வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனை என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. தன் இனப்பெண்ணை ஒரு தலித்  திருமணம் செய்துகொள்வதற்கு எதிராக இவ்வளவு பெரிய தர்ம(புரி) யுத்தம் நடத்திய அவர் தற்போதுதான் நிம்மதியாக தூங்குவார்.

யாரோ சொன்னது நினைவில் வருகிறது. "சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்.."


---------------------------------(((((((((((((((((((())))))))))))))))))))----------------------------