Sunday 19 April 2015

காஞ்சனா -2 - ஓவர் டோஸ்

 # எதுக்குப் போனேன்னா.... 
கே கண்மணி படத்துக்கு போகலாம்னுதான் பிளான். ஆனா படம் பார்த்த பிற்பாடு 'மவுஸ்' புடிச்ச கையை வைச்சிக்கிட்டு சும்மா இருக்க முடியாதே.. பிறகு என்ன செய்யிறது என்கிற குழப்பத்தோடு இருந்தபோதுதான் '0.5/5 ' என்ற மெட்ராஸ்பவன் சிவாவின் மார்க்கு ' ஓகே கண்மணி ' யைத் தவிர்த்துவிட்டு காஞ்சனாவைப் பார்க்கத் தூண்டியது.

தற்போது ' ஓகே கண்மணி ' பரவாயில்லை என்பதுபோன்ற விமர்சனங்கள் நிறைய வர ஆரம்பித்திருக்கிறது. இருக்கட்டும். அதற்கு முன்பு காஞ்சனா-2 என்கிற காவியத்தைப் பற்றிப் பார்ப்போம்.

பார்ட்- 1, 2, 3 இது மாதிரி வருகிற படங்கள் எல்லாமே ஒரே மாதிரியான கதையமைப்பு உடைய படங்கள் என்பது சினிமாவுக்கே உரித்தான ஓர் விதி என்பதால் அதற்குள் காஞ்சனாவும் கட்டுப்பட்டுத்தானே ஆகவேண்டும்..!.  முன்பாதி முழுக்க காமெடி.. பின்பாதி முழுக்க த்ரில்லர்... இந்த எளிய சூத்திரத்தை வைத்துக் கொண்டு இன்னும் ஒரு டஜன் படங்களை எடுக்கும் செம்ம தில் ராகவா லாரான்சைவிட வேறு யாருக்கு இருக்கப் போகிறது..!

# என்ன சொல்றாங்கனா... 

ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரியும் ராகவா லாரன்சுக்கு பிறவியிலிருந்தே பேய் என்றாலே மூச்சா போகும் அளவுக்கு பயம். அவர் வேலை செய்யும் தொலைக்காட்சி நிறுவனம் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதல் இடத்திற்கு வருவதற்காக பேய் சம்மந்தப்பட்ட நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்ப முடிவு செய்கிறது. அதை ஒருங்கிணைப்பவர் டாப்சி. அதைப் படம்பிடிக்கும் பொறுப்பு லாரன்சிடம் கொடுக்கப்பட, டாப்சி மீது கொண்ட காதலால் வேறு வழியில்லாமல் ஒப்புக்கொள்கிறார்.

பீச் ஓரத்தில் அமைந்துள்ள ஒரு பழைய பங்களாவைத் தேர்ந்தெடுத்து ' செட்டப் பேய் ' யை வைத்து படப்பிடிப்பை நடத்தும்போது அங்கு உண்மையிலேயே பேய் நடமாட்டம் இருப்பது அவர்களுக்குத் தெரிய வருகிறது. அங்குள்ள பீச் மணலில் புதைத்திருந்த ஒரு தாலியை எதிர்பாராத விதமாக டாப்சி தோண்டி எடுத்துவிட, அதுவரை அடங்கியிருந்த பேய் ஆக்ரோசமாய் கிளம்புகிறது.  பேய் என்றாலே யார் மீதாவது ஏறத்தானே வேண்டும்.. அந்த விதிப்படி முதலில் ஹீரோயின் உடலினுள் ஏறிவிடுகிறது. ச்சீ.. புகுந்து விடுகிறது. பிறகு அங்கிருந்து ஷிப்ட் ஆகி ஹீரோவின் உடலினுள் தஞ்சம் அடைகிறது.

பிறகு என்ன...  வழக்கம்போல மனித உடலில் புகுந்த பேய் அதற்கு என்ன நடந்தது என்பதை நமக்கு 'பிளாஸ்பேக்' போட்டு காட்டிவிட்டு, அதற்குக் காரணமானவர்களை பழிதீர்த்துவிட்டு, கடைசியில் மனித உடலிலிருந்து வெளியேறி ஒன்வே டிக்கெட் எடுத்துக்கொண்டு மேலே போய்விடுகிறது. இறுதியில் ஹீரோ ஹீரோயினோடு சேர்ந்து நாமும் பெருமூச்சு விட்டு நிம்மதியடைகிறோம்.

அவ்வளவுதான். ஆனால் ஒரு ஹாரர் படத்தில் காமெடியை கலந்துகட்டி மூன்று மணிநேரம் சலிப்பில்லாமல் கொண்டு செல்லும் ராகவா லாரன்ஸில் திரைக்கதை அமைப்பு உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியது.

 

# எப்படி இருந்துச்சுன்னா...

முன்பாதி முழுவதும் கலகலகல என்று போகிறது. கோவை சரளாவை லாரன்சுக்கு அம்மாவாக ஆர்டர் கொடுத்து செய்திருப்பார்கள் போல. அம்மா-மகனுக்குள் அப்படியொரு கெமிஸ்ட்ரி. ஆரம்பத்தில் தன் மகனின் பேய் பற்றிய பயத்தை விளக்குவதாக இருக்கட்டும், பிறகு பேயுடன் சிக்கிக் கொண்டு சமாளிப்பதாக இருக்கட்டும், மொத்தப் படத்தையும் தன் தனித்துவமான டயலாக் டெலிவரியால் ஒத்தை ஆளாக தூக்கி நிறுத்துகிறார் இந்த கொங்கு நாட்டு 'ஆச்சி' . பேயுடன் மாட்டிக்கொண்டு அடிவாங்கும் காட்சிகளில் தியேட்டரே அதிர்கிறது. கோவை சரளா இல்லாத இடங்களில் மனோபாலா, மயில்சாமி கூட்டணி கொஞ்சம் கிச்சுகிச்சு மூட்ட முயற்சி செய்கிறது.

முதல் இரண்டு பாகங்களிலும் முறையே ராஜ்கிரண், சரத்குமார் நடித்த பாத்திரத்தை இதில் லாரான்ஸே ஏற்றிருக்கிறார். முந்தைய படங்களில் அந்த இரண்டு பாத்திரங்களும் பரவலாகப் பேசப்பட்டதால் என்னவோ எல்லாப் புகழும் எமக்கேயாகட்டும் என்கிற சுயநலமாக இருக்கலாம். ஆனால் முன்பாதி+பின்பாதி முழுவதும் இவரே வியாபித்திருப்பதால் கொஞ்சம் சலிப்புத் தட்டுவதைத் தவிர்க்கமுடியவில்லை.

முன்பாதியில் பேய்க்கு பயப்படும் 'ராகவா' பாத்திரம் செயற்கையாகப்படுவதால் அவ்வளவாகக் கவரவில்லை. எதற்கெடுத்தாலும் பயந்து நடுங்குவதால் இவர் மீதுதான் பேய் ஏறப்போகிறது என்பதை முன்கூட்டியே கணிக்கமுடிவது படத்தின் முக்கிய பலவீனம். பிளாஷ்பேக்கில் மொட்டை சிவாவாக அதிரடி காட்டியிருப்பது வித்தியாசமாக இருந்தாலும் ராஜ்கிரன்- சரத்குமார் பாத்திரங்கள் கொடுத்த அழுத்தத்தை ' மொட்டை சிவா ' தரவில்லை. ஆனால் பேயாக மாறி, கொலை செய்யப்பட ஒவ்வொருவரின் தோற்றத்தில் லாரன்ஸ் தோன்றி பீதியைக் கிளப்புவது அட்டகாசம். அதிலும் அந்த சிறுமியின் தோற்றம். 'மொட..மொட ..' பாடலில் அச்சு அசலாக பெண்ணின் நளினத்தோடு ஆடுவது செம கிளாஸ்..!

பொதுவாக பேய்ப் படங்கள் என்றாலே சில பாத்திரங்களின் ஓவர் ஆக்டிங் எரிச்சலை ஏற்படுத்தும். இதில் டாக்டர் பிரசாத்தாக வரும் ஸ்ரீமானும், கங்காவாக வரும் நித்யா மேனனும் அப்பொறுப்பை செவ்வனே செய்கிறார்கள். ஆரம்பத்தில் கொஞ்சம் சிரிக்க வைத்த ஸ்ரீமான் பேயிடம் மாட்டிக்கொண்டு அலறும் காட்சிகள் கொஞ்சம் ஓவர்.

நித்யா மேனன் சாதரணமாக பேசும்போதே பேய் பிடித்தது போல பேசுகிறார். மாற்றுத்திறனாளியாக வரும் அவரது பாத்திரம் ஏனோ அவ்வளவாக மனதில் ஒட்டவில்லை. அவர் பிடிவாத குணம் உடையவரா அல்லது அரக்க மனம் படைத்தவரா என்பதைக் காண்பிப்பதில் இயக்குனருக்கு ஏன் அவ்வளவு குழப்பம்..? அவர் மனநலம் பாதிக்கப்பட்டவரோ என்று கூட நினைக்கத் தோன்றுகிறது. அதனால்தான் என்னவோ கங்கா பாத்திரம் மீது அனுதாபம் வர வேண்டியதற்குப் பதில் அருவருப்பே வருகிறது. என்ன நோக்கத்தோடு அந்த பாத்திரத்தை கால் ஊனமுற்றவராக இயக்குனர் காண்பிக்க முயன்றாரோ, அவரின் குணாதிசயத்தை தவறாக காண்பித்ததின் மூலமாக அந்த நோக்கமே அடிபட்டு போகிறது. அந்த ஊனமான பாத்திரப் படைப்பின் மீது நமக்கு எவ்வித மென்மையான பிம்பமோ, அனுதாபமோ வராததால், அவர் கொல்லப்படும் காட்சிகூட நமக்கு அவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

லாரன்சுக்கு இணையான பாத்திரம் டாப்சிக்கு. அவரது உடலில் பேய் புகுந்த பிற்பாடு ஒவ்வொரு காட்சியிலும்  வெளிப்படுத்தும் உடல்மொழி , இந்தப்பூனையும் பால் குடிக்குமா என்று கேட்கவைக்கிறது. பேய் படத்திலும் சரி.. 'பிட்' படத்திலும் சரி.. முடிச்சை அவிழ்க்கும் வரைதான் சுவாரஸ்யம். அதற்குப் பிறகு 'சப்' என்று ஆகிவிடும் அல்லது ஓவர் டோஸாகிவிடும். இதிலும் அப்படித்தான் சொதப்பியிருக்கிறார்கள்.

இடைவேளை வரை சுவாரஸ்யமாக சென்ற திரைக்கதை, நாயகி உடலில் பேய் புகுந்தவுடன் பேய்க்குப் பயந்த லாரன்ஸ் போல பம்ம ஆரம்பித்துவிடுகிறது. பேய் என்பது ஒரு கற்பனைக் கதாபாத்திரம் என்பதால் அதன் குணாதியங்களை எப்படி வேண்டுமானாலும் வரையறுக்கலாம் போலும். அதிலும் இந்த சினிமாக்காரர்கள் கையில் கிடைத்தால் கேட்கவா வேண்டும். தமிழ் சினிமா வரலாற்றிலே பேய் முதல் முறையாக பன்ச் டயலாக் பேசுகிறது. " நீ மோசமானவன்னா நா ரொம்ப மோசமானவன்.... நீ பொறுக்கின்னா நா கேடுகெட்ட பொறுக்கி....நீ மாஸ்னா நா பக்கா மாஸ்..."  .

கடைசியில் வில்லன் பேயை  பழிவாங்கும் நேரத்தில் கூட " பேய்க்கும் பேய்க்கும் சண்டை..அத இந்த ஊரே வேடிக்கை பார்க்குது..நீ சாதா பேய் நான் சாமிப்பேய்.." என்று ஹீரோ பேய் ஃபைனல் பன்ச் அடிக்கிறது. நல்லவேளை வில்லன் பேய்க்கு எதிர் பன்ச் அடிக்கும் வாய்ப்பை இயக்குனர் கொடுக்கவில்லை. அடுத்தப் பாகத்தில் கொடுப்பார் போல..

எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட்.. இந்தப் பேய்கள் எல்லாம் இருக்கிறதே..குறிப்பாக கொல்லப்பட்டவர்களின் உடலிலிருந்து புறப்படும் பேய்கள்.. இவைகள் எல்லாம் நள்ளிரவில் கிளம்பி சம்மந்தமே இல்லாத ஆட்களை எல்லாம் அச்சுறுத்தி கொலை நடுங்க வைப்பது போல எல்லாப் படங்களிலும் காண்பிக்கிறார்கள் . இவைகள் எல்லாம் எதற்காக பேய்களாக அலைகிறது என்று கேட்டால் கொன்றவர்களை பழிதீர்க்க என்கிறார்கள். சரி போகட்டும். அதற்கு சம்மந்தமே இல்லாத ஆட்களை பயமுறுத்துவதற்குப் பதில் கொலை செய்தவர்களையே நான்கு நாட்கள் இப்படி பயமுறுத்தினால் போதுமே.. தக்காளி எல்லோரும் பயத்தில ஜன்னி வந்தே செத்துப் போயிடுவாங்களே..! அதைவிட்டுவிட்டு எதற்கய்யா சம்மந்தமில்லாதவர்களை பயமுறுத்தி, படம் பார்க்க வந்த நம்மையும் பயமுறுத்தி.... இதையெல்லாம் கேட்டா நம்மள.... சரி விடுங்க.  

சரி... இன்னொருவரின் உடலில் ஏன் ஏறுகிறது..? ஏனென்றால் அதற்கு முன்பு வெறும் ஆன்மாக இருந்த பேய், உரு பெறுவதற்காக மனித உடலில் புகுந்து தன் காரியத்தை சாதித்துக் கொள்கிறது. அப்படியென்ன காரியம்..? கொலை செய்தவர்களை பழி தீர்ப்பதுதான். அது எப்படிப்பா.. ஆன்மாவாக இருக்கும்போது  அதை எதிர் கொண்டவர்களை அந்தரங்கத்தில் தூக்கி அடிக்கிறது. மந்திரவாதியை போட்டுத்தள்ளுகிறது. புழுதிப் புயலை வரவழைக்கிறது. மேகங்களை திரட்டுகிறது. பகலை இரவாக்குகிறது. இவ்வளவு சக்தி படைத்த அந்த ஆன்மா, நேரா போயி கொலை செய்தவர்களை தூக்கிப்போட்டு நாலு மிதிமிதிச்சி சாவடிப்பதை விட்டுட்டு ஹீரோயின் உடலில் பூருமாம்... அப்புறம் ஹீரோ உடலிலும் பூருமாம்... பாதிரியார், பெண் உடலில் உள்ள ஆன்மாவை ஆண் உடலில் புகுந்துக்கொள் என்று சொன்னவுடன் கபால்னு ஹீரோயினை விட்டுவிட்டு ஹீரோ உடலில் புகுந்து கொள்ளுமாம்..   ஆஆ.....வ்... போங்கையா யோவ்...

சரி விடுங்க.. மொத்தத்தில் முன்பாதி கலகல...பின்பாதி லகலக..

Friday 17 April 2015

தாலியை எடுத்துக் கொடுப்பவரே எப்படி அறுக்கச் சொல்லலாம் ..?

னது முந்தைய பதிவைப் படித்த தமிழ் தேசிய டம்ளர்.. ஸாரி.. நண்பர் ஒருவர், வீடியோ லிங்க் ஒன்றை அனுப்பிப் பார்க்கச் சொல்லியிருந்தார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் தனது கைகளால் தாலியை எடுத்துக் கொடுத்து ஒரு திருமணத்தை நடத்தி வைக்கும் நிகழ்வு அது.

" இதுதான் இணையப்போராளிகளால் நேற்று பேஸ்புக்கில் பரப்பப்பட்டு மூத்திரக் குடுவையோடு தனது இறுதி மூச்சுவரை போராடிய ஒரு கிழவனின் இயக்கத்தையே கொச்சைப்படுத்தி கழுவி ஊற்றினார்களே.. இதை எப்படி பார்க்காமல் இருப்பேன்..." என்று பதிலனுப்பினேன். 

"அப்படி என்றால் அன்று தாலியை எடுத்துக் கொடுத்து கட்டச் சொன்னவர் இன்று எப்படி தாலியை அகற்ற சொல்லலாம்.. இது பச்சைப் பொறுக்கித்தனம் இல்லையா.. " என்று பொங்கினார்.  

" தாலியை கட்ட சொன்னவரால் தானே அதை அகற்று என்று சொல்லமுடியும்..." என்று ஆரம்பித்து பெரிய விளக்கத்தை சொல்ல ஆரம்பித்தவுடன் செம்ம கடுப்பாகிவிட்டார்.

" தாலியே கூடாது என்றுதானே தாலி அறுப்பு விழா நடத்துகிறார்கள்.. பின்ன என்ன மயித்துக்கு தாலியை கட்ட சொல்லணும்.. நாங்க எல்லாம் கேனையன்களா... இந்த வந்தேறி திராவிட நா....." என்று ஏக வசனத்தில் திட்ட ஆரம்பித்துவிட்டார்.

இப்படித்தான்.. டம்ளர் பாய்ஸ்களுக்கு என்று ஒரு தனி சிறப்பு உண்டு. இணையத்தில் டம்ளர் குரூப் எங்கேயாவது தற்குறித்தனமான கேள்விகளை கேட்டு வைக்கும். இவர்கள் அங்கு சென்று, 'அதானே.. இந்த திராவிட வடுக வந்தேறி நாய்களை தமிழ் நாட்டை விட்டே விரட்டவேண்டும்... என்று ஆரம்பித்து 'சுந்தரத் தமிழில்' சில வார்த்தைகளையும் சேர்த்து வாந்தி எடுத்து வைப்பார்கள். அத்தோடு விடுவார்களா.. அந்தக் கேள்விகளை 'காப்பி' செய்து எங்கெல்லாம் இவர்களுக்கு எதிராக நிலைத்தகவல் பதியப்பட்டிருக்கிறதோ அங்கெல்லாம் சென்று அதை 'பேஸ்ட்' செய்து வைப்பார்கள். அதற்கு யாரும் பதிலளிக்கவில்லை என்றால், தான் ஐநா சபையிலே கேள்வி கேட்டது போல காலரைத் தூக்கிவிட்டுக் கொள்வார்கள் ஐந்து நிமிடம் ஐநா சபையில் பேசி ஈழம் பெற்றுத்தரும் சீமானின் அருமைத் தம்பிமார்கள்.

தப்பித்தவறி அவர்களையே மடக்குவது போல பதிலளித்துவிட்டோம் என்றால் அவ்வளவுதான். பதிலளித்த நாம் திராவிட வந்தேறிகளாகிவிடுவோம். மொத்த அர்ச்சனையும் நம் மீது கொட்டிவிடுவார்கள். இதுபோன்ற அரைவேக்காடுகள் நிறைய இணையத்தில் உலவுகின்றன. அவர்களிடம் வாதிடுவது நமக்குத்தான் டென்சன்.

தெரியாமத்தான் கேட்கிறேன்....

தி.க தலைவர் கி.வீரமணி ஏதோ யாருக்கும் தெரியாமல் ரகசியமாக திருமண ஏற்பாடு செய்து, எவரும் பார்க்காத நேரத்தில் தாலியை எடுத்து மணமகனிடம் கொடுத்து கட்டச்சொன்னது போலவும், அப்போது இவனுக அவர்களுக்கு தெரியாமலே  மறைந்திருந்து வீடியோ எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் உலவ விட்டது போலவும் தைய தக்கான்னு குதிக்கிறாங்களே...

ஏம்பா டம்பளர் பாய்ஸ்களா... திராவிடர் இயக்கம் தோன்றியபோது நாமெல்லாம் பிறந்திருக்கவே மாட்டோம். ஆட்சி அதிகாரத்தில் ஆர்வமில்லாமல் மக்கள் நலனை மட்டுமே கொள்கையாகக் கொண்டு போராட்ட உரத்தில் வளர்ந்த ஒரு இயக்கம், ஊரறிய தாலியை எடுத்துக்கொடுக்கிறது என்றால் அதற்குப் பின்னால் உள்ள சூட்சமத்தை புரிந்துகொள்ள வேண்டாமா..! உங்கள் சிந்தனைகள் எல்லாம் எப்போதும் அரைவேக்காட்டுத் தனமாகத்தான் இருக்குமா..?

பொதுவாகவே திராவிடர் கழகம் முன்னெடுக்கும் போராட்டங்கள் இரு வகைகளில் நடைபெறும். ஒன்று, மூட நம்பிக்கைகளை தெளிவாக மக்களிடையே விளக்கிச் சொல்லும் வாய்வழிப் பிரச்சாரம். இன்னொன்று நேரடியாக களத்தில் இறங்கி, அந்த மூடநம்பிக்கையே தவறு என நிரூபிக்கும் செயல் பிரச்சாரம்.

உதாரணம் சொல்கிறேன். தீ மிதிப்பதும், உடலில் அலகு குத்துவதும் காட்டுமிராண்டித்தனமான செயல் என்று ஊருக்கு ஊரு மேடை போட்டு முழங்குவார்கள் கருஞ்சட்டை தோழர்கள். அது தெய்வ செயல் அல்ல. கடவுள் மறுப்பாளனும் செய்யலாம் என்று விளக்குவார்கள்.  இது ஒருவகை பிரச்சாரம்.



இன்னொன்று, கழக தோழர்களே பிரும்மாண்ட தீமிதி திருவிழாவை ஏற்பாடு செய்து 'கடவுள் இல்லை.. கடவுள் இல்லை ' என்று முழங்கிக்கொண்டே தீ மிதித்துக் காண்பிப்பார்கள். அதுபோலவே அலகு குத்துதலும். இரண்டுமே பக்தியால் வருவதல்ல.. பயிற்சியால் வருவது என்பதை மக்களுக்கு நிரூபித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள். அந்தப் புகைப்படம்தான் மேலே உள்ளது. அந்தப் படத்தை வைத்துக் கொண்டு கடவுள் இல்லை என்று சொல்கிற தி.க கட்சிக்காரங்களே தீ மிதிப்பது சரியா என கேட்பது எப்படி முட்டாள்தனமான சிந்தனையோ அதேப் போலத்தான் கி.வீரமணி அவர்கள் தாலி எடுத்துக் கொடுத்த நிகழ்வையும் நக்கலடிப்பது.

எப்படி இரண்டும் ஒன்றாகும் எனக் கேட்கிறீர்களா..? எனக்குத் தெரிந்து சுயமரியாதைத் திருமணங்கள் இரு முறைகளில் செய்யப்படுகிறது. ஒன்று தாலி கட்டாமலே செய்யப்படுவது. மற்றொன்று தாலி கட்டுவதற்கான அனைத்து சம்பிராதயங்களையும் உடைத்து செய்யப்படுவது. இரண்டுமே சுயமரியாதைத் திருமணங்கள்தான். முதலில் சொன்னது பெரியார் காலத்தில் நடத்தப்பட்டது. இரண்டாவது சொன்னதை நானே நேரில் பலமுறை பார்த்திருக்கிறேன்.

தெளிவாகச் சொல்கிறேன். திராவிடர் இயக்கத்தின் போராட்ட முறையே, இருக்கும் மூடநம்பிக்கைகளை தவறு என்று நிரூபிப்பதுதான். அப்படியானால் அதை அவர்கள் வழியில் சென்றுதானே நிரூபிக்க முடியும்..!. இந்துக்களின் திருமணங்களில் 'தாலி' என்பதை நினைத்த நேரத்தில் கட்டிவிட முடியாது. வேதங்கள் சாஸ்திரங்களின் அடிப்படையில் நிறைய நடைமுறைகள் உள்ளது. அதை தவறென்று நிரூப்பிப்பது தானே இவர்களது வேலை..!.

ராகுகாலம் , எமகண்டத்தில் தாலி கட்டக் கூடாது... கிழக்குத் திசையில் பார்த்துதான் கட்டவேண்டும்.. வானத்தில் ஏதோ தெரியுமாம். அது தெரிந்தால்தான் கட்ட முடியும். பார்ப்பனர் வந்து வேதம் ஓதி, சமஸ்கிரதத்தில் மந்திரம் சொல்லவேண்டும். அக்னி ஏற்றவேண்டும்.. அட்சதை தூவ வேண்டும்.. மேளம் கொட்டவேண்டும்.. அதாவது எப்படி வேதங்கள் மந்திரங்கள் ஓதி ஒரு கற்சிலையில் கடவுளை கொண்டுவந்து அடைப்பதாக சொல்கிறார்களோ (அது களவு போனால் சிலை காணாமல் போய்விட்டது என்பார்கள்) அதுபோல் வெறும் நூல் கயிற்றில் மொத்த சங்கதியையும் கொண்டுவந்து அடைக்கிறாங்களாமாம். இதையெல்லாம் செய்யவில்லை என்றால் இவர்கள் அல்பாயுசில் சென்றுவிடுவார்களாம். எந்த செல்வமும் பெருகாது. இருவரும் சேர்ந்து வாழவே முடியாது.சந்ததி விருத்தி ஆகாது... இன்னும் என்னென்னவோ சொல்கிறார்கள். இந்தக் கொடுமையெல்லாம் பொய் என்று எப்படியய்யா நிரூபிப்பது..?

எங்களைப் பொறுத்த வரையில் தாலி என்பது வெறும் கயிறுதான். நீ வேதங்களின் சாஸ்திரங்களின் அடிப்படையில் தாலியை கட்டச் சொல்கிறாய் என்றால் நாங்கள் எந்த சம்பிராதயமும் சடங்கும் இல்லாமல், அக்னி ,அட்சதை, மந்திரம் எதுவும் இல்லாமல் தமிழில் உறுதிமொழி எடுத்துத் தாலியைக் கட்டச்சொல்லி, எப்படி உன்வேதப்படி திருமணம் நடத்த தம்பதிகள் வாழ்கிறார்களோ அதைவிட ஒருபடி மேல எங்கள் வழக்கப்படி திருமணம் நடந்த தம்பதிகள் வாழ்ந்து காட்டல நான் பெரியார் தொண்டன் இல்லடா என்று அண்ணாமலையில் ரஜினி விட்ட சவால் போல நடைபெறுவதுதான் இரண்டாவது வகை சுயமரியாதைத் திருமணம். இதைத்தான் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நடத்திக் காட்டியிருக்கிறார்.

நீ கிழக்கு திசையில் பார்த்து தாலி கட்டுச் சொல்கிறாய் என்றால் நாங்கள் மேற்கு திசையை நோக்கி அமர்ந்து தாலி கட்டுவோம். நீ நல்ல நேரம் பார்க்கிறாய் என்றால் நாங்கள் எமகண்டத்தில் கட்டுகிறோம். நீ “மாங்கல்யம் தந்துநாநேந மம ஜீவனஹேதுநா கண்டே பத்தாமி ஸூபகே ஸஞ்ஜிவசரதசதம்” என சமஸ்கிரத மந்திரம் ஓதுகிறாய் என்றால் நாங்கள் எங்கள்  தாய்மொழியில் உறுதிமொழி எடுப்போம். மொத்தத்தில் வேதங்களையும் சாஸ்திரங்களையும் பொய்யென்று நிரூபிக்க வேண்டும்.

சரி.. தாலி என்பது உங்களுக்கு வெறும் கயிறுதான் என்றால் எதற்காக தாலி அகற்றும் போராட்டம் நடத்த வேண்டும்..?

வருடா வருடம் மேடை போட்டு தாலி அகற்றும் போராட்டத்தை நாங்கள் நடத்தவில்லை. தாலி என்பது வெறும் கயிறுதான் என்பதால் அதற்கான அவசியமும் எங்களுக்கு இல்லை. ஆனால் தாலி பற்றிய ஒரு விவாதத்தையே பொறுத்துக் கொள்ளமுடியாமல் இந்துத்வா கும்பல் ஒன்று வெடிகுண்டு வீசும் அளவுக்கு துணிகிறது என்றால் தாலி என்பது அவ்வளவு புனிதமா என்கிற கேள்வி இங்கே எழுகிறது. அதை இன்னும் புனிதமாக்கி, தங்கத்தில் தாலி அணிவது இந்து மரபுப்படி தவறு. மஞ்சள் கயிற்றில்தான் அணியவேண்டும். அப்படி அணியாதவர்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று இஸ்லாமிய தீவிரவாதிகள் போல இந்துத்வா வெறியர்களும் மாறிவிட வாய்ப்புள்ளது. அதை முளையிலே கிள்ளி எறியவேண்டும். எங்கள்  தோழர்கள் அணிந்திருப்பது வெறும் கயிறுதான் என்றாலும் அது புனிதமானது அல்ல என்கிற விழிப்புணர்வு மக்களுக்கு வரவேண்டும் என்பதற்கே இந்த தாலி அகற்றும் நிகழ்வு.

Tuesday 14 April 2015

யார் தாலியை எவன் அறுத்தால் இவர்களுக்கு என்ன..?



முதலில் தாலி அறுப்புக்கும், அகற்றுதலுக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளுங்கள். சாலையில் சென்று கொண்டிருப்பவர்களை வலுக்கட்டாயமாக இழுத்துவந்து முச்சந்தியின் நிற்க வைத்து தாலியை அறுக்கவில்லை. அவர்கள் அவர்களது இயக்கத்தில் உள்ள சில பெண்கள் அணிந்துள்ள தாலியை அவர்களின் சம்மதத்தோடு அகற்றுகிறார்கள். சரி..  அறுக்கிறார்கள் என்றே வைத்துக்கொள்ளுங்கள். யார் தாலியை எவன் அறுத்தால் உங்களுக்கு என்ன வந்தது..?  எதற்காக இந்த இந்து வெறியர்கள் இப்படி கூச்சல் போடுகிறார்கள்...?

இதற்கு சில இந்துத்வா அமைப்புகள் கண்டனம் தெரிவிக்கிறது. அது அவர்களின் பிழைப்பு, விட்டுவிடுவோம். ஆனால் இந்த டம்ளர் பாய்ஸ் எதற்கு சந்தில் சிந்து பாடுகிறார்கள்..?.

தாலி அகற்றும் நிகழ்வுக்கு ஆதரவாக பேசினால் உடனே இவர்கள் வைக்கும் முதல் கேள்வி, உன் வீட்டுக் குடும்பப் பெண்களின் தாலியை நீ அறுப்பாயா..? அதை முதலில் செய்துவிட்டு பிறகு இதற்கு அதரவு கொடு என்கிறார்கள். இதை இந்துத்வா ஆதரவாளர்கள் சொன்னால் பரவாயில்லை. இந்துத்வா கொள்கைகளையும் மோடியின் முகமூடியையும் சமூக வலைத்தளங்களில் கிழித்தெடுக்கும் டம்ளர் பாய்ஸ் சொல்வதுதான் வேதனை ..!

தாலி அகற்றும் இந்த நிகழ்வுக்கு ஆதரவாக நான் மட்டுமல்ல, முற்போக்கு சிந்தனையுடைய அனைவரும் தத்தமது குடும்பப் பெண்களின் கழுத்தில் கட்டியிருக்கும் தாலியை கண்டிப்பாக அகற்றுவார்கள். ஆனால் அதற்கு முன்பு பெண்ணடிமைத் தளை என்கிற தாலியின் மீதான புனிதப் பிம்பம் உடைத்தெறியப்பட்ட வேண்டும். அதற்கான ஆரம்பப் புள்ளியைத்தான் திராவிடக் கழகம் வைத்திருக்கிறது.

எதற்காக கி.வீரமணி இந்த 'தாலி அகற்றுதல் மற்றும் 'மாட்டுக்கறி உண்ணும்' போராட்டத்தை முன்னெடுத்தார் என்பது உங்களுக்குத் தெரியாதா..? புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நடந்த 'தாலி அவசியமா' என்கிற விவாதத்திற்கு எதிர்வினையாக அந்த நிறுவன அலுவலகம் மீது வெடிகுண்டு வீசப்பட்டது. அதைச் செய்தது இந்துத்வா கும்பல். இந்தியாவின் ஒரு மாநிலத்தில் மாட்டுக்கறி உண்ண தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. காரணம், அது இந்துக்களின் புனிதமாம். அதனால் அது கொல்லப்படவோ உண்ணப்படவோ கூடாதாம். இச்சட்டத்தை கொண்டுவந்ததும் ஒரு இந்துத்வா அரசுதான். நாம் என்ன சாப்பிடவேண்டும், சாப்பிடக்கூடாது என்பதை முடிவு செய்ய அவர்கள் யார்..?  ஒருவேளை உயிர்களைத் துன்புறுத்தக்கூடாது என்கிற அக்கரையில் சொல்கிறார்கள் என்றால் ஆடு, கோழி போன்றவைகளைச் சாப்பிடுவதற்கும் தடை விதிப்பார்களா..?.

ஆனால், சமூக வலைத்தளங்களிலும், சில ஊடகங்களிலும் மற்ற நிகழ்வுகள் போல ஒருநாள் மட்டும் இது விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, சில எதிர்ப்புகளை பதிவு செய்துவிட்டு தன் கடமையை முடித்துக் கொண்டார்களே தவிர, எந்த இயக்கமும் அதற்கு எதிரான களப்போராட்டத்தை முன்னெடுக்கவில்லை. காரணம் ஓட்டரசியல். இந்துக்கள் காலங்காலமாக பின்பற்றிவரும் ஒரு நம்பிக்கையில் கைவைத்தால் அது எதிர்ப்பு அலையாக மாறி தேர்தல் வரை எதிரொலிக்கும் என்கிற பயம். ஆனால் ஓட்டரசியலில் துளியும் நம்பிக்கை இல்லாத திராவிடர் கழகம் தைரியமாக களத்தில் குதித்தது.

தாலி என்பது பெண்ணடிமைத்தனம் என்கிற பிரச்சாரத்தை முதலில் முன்னெடுத்தது பெரியார்தான். அன்றைய காலக்கட்டத்தில் நிறைய சுயமரியாதைத் திருமணங்கள் தி.க வினரால் நடத்தப்பட்டது. தாலி அணியாமலே நிறைய திருமணங்கள் நடந்தது. அது ஒன்றே தி.க வின் கொள்கை இல்லை என்பதால் என்னவோ பெரியார் மறைவுக்குப் பிறகு அவரது தொண்டர்களே அதைப் பின்பற்றவில்லை.

திரும்பவும் கி.வீரமணி எதற்காக அதைக் கிளறவேண்டும்...? ஒன்றைத் தெளிவு பெறுங்கள். தி.க ஒரு அரசியல் கட்சி கிடையாது. அது ஒரு இயக்கம். இந்த நிகழ்வை வைத்து அடுத்தத் தேர்தலில் நின்று அரசியல் ஆதாயம் அடைவது அதன் இலக்கல்ல. பரபரப்பாக ஏதாவது ஒன்றைச் செய்து மக்கள் மத்தியில் தங்களைப் பிரபலப்படுத்திக்கொள்ளவேண்டிய அவசியமும் அவர்களுக்குக் கிடையாது. மக்கள் விடாப்பிடியாகப் பிடித்திருக்கும் ஒரு மூட நம்பிக்கையை அவர்களிடமிருந்து அகற்ற வேண்டுமானால் அதற்கு எதிரான முதல் போராட்டப் புள்ளியை நம்மிடமிருந்து தான் ஆரம்பிக்கவேண்டும் என்று பெரியார் பின்பற்றிய அதே முறையைத்தான் கி.வீரமணியும் வழிமொழிந்திருக்கிறார்.


எதற்காக பெரியார் தனது தோட்டத்தில் இருந்த நானூறு தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார்..? யோசித்துப் பார்த்தீர்களேயானால், அது சுத்த மடத்தனமான செயல்போல தோன்றும். மதுவிலக்கு பிரச்சாரம் செய்ய மரத்தை ஏன் வெட்டி சாய்க்கவேண்டும்..? தனது பிரச்சாரத்தின் ஆரம்பமே மக்களால் பரவலாக கவனிக்கப்படவேண்டும்.. அதுவே விழிப்புணர்வுக்கான முதல் விதையாக இருக்கும் என்று நம்பினார் தந்தை பெரியார். இன்று வரை மதுவிலக்கு என்றால் பெரியார் தனது தோட்டத்தில் வெட்டி சாய்த்த மரங்கள் அல்லவா நமக்கு ஞாபகம் வருகிறது. அதே நடைமுறையைத்தான் கி.வீரமணியும் பின்பற்றியிருக்கிறார்.

உடன்கட்டை ஏறுவது மிருகத்தனமான, அறிவீனமான செயல் என்று தற்போது எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்படுகிறது. அந்நடைமுறையே முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஆனால் முன்னொரு காலத்தில் மக்கள் மீது கட்டாயமாகத் திணிக்கப்பட்ட மத நம்பிக்கையாக அது பார்க்கப்பட்டது.  அதற்கெதிராக பிரச்சாரம் செய்பவர்களை இப்படித்தான் விரோதிகள் போல தூற்றினார்கள். அதன்பிறகு கணவன் இறந்துபோனால் மனைவிமார்கள் கண்டிப்பாக வெள்ளுடை அணியவேண்டும், பொட்டுவைக்கக் கூடாது, பூச்சூடக் கூடாது என்பது போன்ற கொடூர தண்டனைகள் இச்சமூகத்தால் கணவனை இழந்தப் பெண்களுக்கு விதிக்கப்பட்டது. அப்படி செய்யாதவர்களை விபச்சாரிகள் என்று சொன்னார்கள். ஆனால் காலபோக்கில் அது மாறவில்லையா..?  அந்த மூடத்தனத்தின் கடைசி எச்சம்தான் இந்தத் 'தாலி'.


இந்து மதத்தில் கணவனை இழந்தப் பெண்ணுக்கு தாலி அறுக்கும் சடங்கு என்ற ஒன்றை தற்போது நடத்துகிறார்கள். பதினாறாவது நாள் என நினைக்கிறேன். தன் கணவனை பறிகொடுத்து சிதையின் தணலில் ஏற்றிய அந்த நாளைவிட, பிற்பாடு தாலி அகற்றும் நாள்தான் பெண்களுக்கு கொடூரமானது. கணவன் இறந்த நாளிலிருந்து எல்லோரும் ஆறுதல் சொல்லி கொஞ்சம் கொஞ்சமாக அவளைத் தேற்றி வருவார்கள். அவளும் ஓரளவு தேறிவரும் சமயத்தில்தான் இந்த தாலி அறுக்கும் சடங்கு நடக்கும். ஏதோ அவள் இனி இந்த உலகத்திலேயே வாழத் தகுதியில்லாதவள் போலவும், அவளது வாழ்க்கையே சூனியமாகி விட்டது போலவும் சுற்றியிருக்கும் பெண்கள் எல்லாம் அவளைக் கட்டிபிடித்து அழ ஆரம்பிப்பார்கள். தலையில் பூச்சூடி, நுதலில் திலகமிட்டு, கைகள் நிறைய வளையலிட்டு சுற்றிலும் பெண்கள் சூழ அமர வைப்பார்கள். பிறகு ஒவ்வொரு அடையாளத்தையும் அழிக்க ஆரம்பிப்பார்கள். கூடவே எழவு விழுந்த ஒப்பாரி சத்தமும் சேர்ந்துக்கொள்ளும். யோசித்துப் பாருங்கள். கணவனை இழந்தத் துயரத்தில் இருக்கும் ஒரு பெண்ணுக்கு உளவியல் ரீதியாக இது எவ்வளவு பெரிய மன அழுத்தத்தை உண்டாக்கும்..! எந்தத் துணையுமில்லாமல் தன்னால் இந்த உலகத்தில் வாழமுடியும் என்ற என்ற நம்பிக்கையில் மீண்டு வருபவளை அப்படியே புரட்டிப்போடும் சம்பவம் அல்லவா அது..! உடன்கட்டை ஏறுவதை விட  கொடூரமான நிகழ்வு அல்லவா இந்தச் சடங்கு...! தாலி இல்லாத பெண்களை வெறும் முண்டமாக சித்தரிக்கும் மத நம்பிக்கை நமக்கு தேவையா..?

அதற்காக எல்லோரும் தாலியை அறுத்தெறியுங்கள் என சொல்லவில்லை. இச்சமூகத்தில் தாலி மீதான புனிதப்பிம்பம் மெல்ல மெல்ல குறையவேண்டும்.. எப்படி மேட்டுக்குடி மக்களிடம் 'மெட்டி' என்கிற வஸ்து மீதான ஆர்வம் தற்போது குறையத் தொடங்கியுள்ளதோ அதேப்போல தாலி மீதான புனிதப் பிம்பமும் இன்னும் ஐம்பது அல்லது நூறுவருடங்களில் உடைத்தெறியப்பட்டு, 'தாலி' என்பது கழுத்தில் அணியப்படும் ஒரு அணிகலன் என்று சொல்லும் நிலைமை கண்டிப்பாக வரும். ஒருவேளை  இன்று நடந்த தாலி அகற்றும் நிகழ்வு ஒரு வரலாற்று சம்பவமாக அப்போது பதிவு செய்யப்பட்டிருக்கலாம்...! 

இன்று தாலியை அகற்றிய தோழர்களை விபச்சாரிகள் என்று ஒரு இந்துத்வா தலைவர் சொல்கிறார். அதற்கு இணையப் போராளிகள் ஒத்தூதிக் கொண்டிருக்கிறார்கள். இதைவொரு விழிப்புணர்வு சார்ந்த நிகழ்வாக உங்களால் எடுத்துக் கொள்ள முடியவில்லை என்றால் விட்டுவிடுங்கள். அவர்கள் உங்கள் வீட்டு பெண்களின் தாலியை அகற்றவில்லை...!

இச்சமூகத்தில் அனைத்து மூடநம்பிக்கைகளும் கடும் போராட்டத்திற்குப் பின்புதான் களையப்பட்டன. இந்துக்களின் மனதில் சிலரால் புனிதப் பிம்பமாகக் கட்டமைக்கப்பட்டிருக்கும் தாலி என்கிற மூடநம்பிக்கையும் அவ்வாறு கலையப்படவேண்டுமெனில் எதிர்வினைகளை கண்டு அஞ்சாமல் சிலபல போராட்டங்களை செய்துதான் ஆகவேண்டும்.

Sunday 5 April 2015

கூர் மழுங்கிய கொம்பன்...


னிமேல் ' படத்தை முதலில் எனக்கு போட்டுக் காட்டு அல்லது  தடைசெய்' என யாராவது கிளம்பினால் நாம் உஷாராகிவிடவேண்டும்...!

படத்தை தயாரித்தவனுக்கு ஒத்த பைசா செலவில்லாமல் ஓசியில் விளம்பரம் கிடைத்துவிடுகிறது. தடை போட சொன்ன ஆளுக்கு சமூகத்தில் இமேஜ் பிளஸ் துட்டு என ஒரே கல்லில் இரண்டு மாங்காய். ஆனால் இவனுக அடிக்கிற கூத்தை சீரியஸாக எடுத்துக்கொண்டு அதிக எதிர்பார்ப்போடு படம் பார்க்க செல்லும் நம் நிலைமைதான் இஞ்சி தின்ன குரங்குமாதிரி ஆயிடுது. நல்ல படத்திற்கு சர்ச்சை மூலம் கிடைக்கும் விளம்பரம் தேவையில்லை. இது போன்ற மொக்கைப் படங்களுக்குத்தான் கட்டாயம் தேவைப்படுகிறது.

ஜென்டில்மேன் படத்தின் ஆரம்பக் காட்சியில், காடுகளில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு உள்ளே ஏலம் நடந்து கொண்டிருக்கும். வெளியே ஒரு கும்பல் ' வெட்டாதே.. வெட்டாதே.. மரங்களை வெட்டாதே....' என கோஷம் போட்டுக்கொண்டிருக்கும். ஏலம் முடிந்தவுடன் உள்ளிருந்து ஒருவர் வந்து ' சரி..சரி.. ஏலம் முடிஞ்சிடுச்சி..எல்லாரும் கெளம்புங்க... ' என்பார். வேலை முடிந்த திருப்தியில் அக்கும்பல் அமைதியாக கலைந்து செல்லும். அன்றைய சூழலில் அக்காட்சியின் அர்த்தம் எனக்கு சரியாக விளங்கவில்லை. இதன் மூலம் இயக்குனர் என்ன சொல்லவருகிறார் என்பதைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு முதிர்ச்சி அப்போது இல்லை. ஆனால் அது மக்களை திசைதிருப்பும் அரசியலின் நவீன வடிவம் என்பதை தற்போது புரிந்துகொள்ள முடிகிறது. இனி படத்திற்கு பட்ஜெட் போடும்போது ' சர்ச்சையை உருவாக்கி விளம்பரம் செய்ய இவ்வளவு தொகை ' என தனியாக ஒதுக்கி வைத்துக் கொள்ளும் கோடம்பாக்கத் தயாரிப்புத் தரப்பு.

தமிழர்களின் பாரம்பரிய பெருமையை எடுத்துச்சொல்லும் மண்வாசனை வீசும் படங்கள் அவ்வப்போது தமிழ் சினிமாவில் தலையெடுப்பது நல்ல விசயம்தான். அதற்காக தமிழர்களின் கிராமிய வாழ்வியல் எதார்த்தத்தை படம்பிடிக்கிறேன் என சொல்லிக்கொண்டு அரிவாள், வெட்டுக்குத்து, பஞ்சாயத்து, ஏலம், ஊர்ப்பகை, சாதிப்பெருமிதம் என்று காலங்காலமாக அரைத்து அரைத்துப் புளித்துப்போன அதே மாவில் தோசை ஊற்றி பரிமாறும் நம் தமிழ் சினிமா படைப்பாளிகளை நினைத்தால்தான் அச்சமாக இருக்கிறது.

தெரியாமத்தான் கேட்கிறேன், கொம்பன் படத்தில் அப்படி என்ன இருக்கிறது என்று இந்த கிருஷ்ணசாமி இந்த குதி குதிக்கிறார்?. சொல்லப்போனால் இப்படம் முக்குலத்தோர் சமூகத்தின் அழுக்குப் படித்த இன்னொரு முகத்தைக் காட்டி அவர்களை சிறுமைப்படுத்தும் முயற்சியை செய்திருக்கிறதே தவிர, சாதிப்பெருமை பேசி அச்சமூகத்தை உயர்த்திப் பிடித்தோ அல்லது தலித் சமூகத்தை இழிவு படுத்தியோ எடுக்கப்பட்ட படமல்ல.

உண்மையிலேயே டாக்டர்.கிருஷ்ணசாமி போராட்டம் நடத்த வேண்டுமென்றால் 90-களில் வெளிவந்த கே.எஸ்.ரவிக்குமார், ஆர்.வி.உதயகுமார் படங்களுக்கு எதிராகத்தான் போராடியிருக்க வேண்டும். அவர்களது படங்களில்தான் ஆண்ட பெருமை பேசும் கவுண்டர்கள் மிகமிக நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் கண்ணியமிக்க ஜமீன்தாராகவும் பஞ்சாயத்து தலைவராகவும் இருப்பார்கள். தலித் மக்கள் மேல் சட்டை போடாமல் அவர்களுக்குக் கூனிக்குறுகி கும்பிடு போடும் அடிமைபோல சித்தரிக்கப்படுவார்கள். சில படங்களில் கெட்டவனாகவும், வில்லனாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இவர் போராடிய விருமாண்டியும் கொம்பனும் ஒரே சமூகத்தைச் சார்ந்த இரு இனக்குழுவுக்கிடையே நடக்கும் மோதல்களைக் காண்பித்து அதன்மூலம் அவர்களின் அறியாமையையும் மூடத்தனத்தையும் வெளிக்கொணர்ந்த படங்கள்.  நியாயப்படி பார்த்தால் இவ்விரு படங்களையும் டாக்டர் கிருஷ்ணசாமி பாராட்டி வரவேற்றிருக்க வேண்டும்.

இதில் காட்டப்படும் செம்ம நாடு, ஆப்பநாடு, வெள்ளலூர் இம்மூன்று பகுதிகளிலும் வசித்த முக்குலத்தோர் சமூகத்தின் இனக்குழுவுக்குள் நடந்த மோதல்களை தவிர்த்துவிட்டு அவர்களின் வரலாற்றை நிறைவாக எழுதிவிடமுடியாது. செம்ம நாடும் ஆப்ப நாடும் மறவர் நாடு. வெள்ளலூர் கள்ளர் நாடு. மறவர் இனத்தில் மிகவும் தொன்மையானவர்கள் செம்ம நாட்டு மறவர்கள். வெள்ளையர்களை முதன்முதலில் எதிர்த்த மன்னர் புலித்தேவன் இந்த இனக்குழுவை சேர்ந்தவர்தான்.

ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு முன்பு ராமநாதபுரத்தை தலைமை இடமாகக் கொண்டு ஆட்சி செய்த மன்னர்கள் சேதுபதிகள் என அழைக்கப்பட்டனர். பிறகு கிழக்கிந்தியக் கம்பெனியின் கட்டுப்பாட்டிற்குள் சேதுபதி பரம்பரை கொண்டுவரப்பட்டது. 1803 -ல் ஆங்கிலேயர்களால் மன்னர் என்கிற தகுதி அகற்றப்பட்டு ஜமீன்தார் என்ற நிலைக்குத் தாழ்த்தப்பட்டது. பிறகு 'இராமநாதபுரம் ஜமீன்' என்று சேதுபதிகள் ஆளுகைக்குட்பட்ட பகுதிகள் அழைக்கப்படலாயிற்று. இவர்கள் வழிவந்தவர்கள்தான் செம்ம நாட்டு மறவர்கள்.

மறவர் சமூகத்தில் கொஞ்சம் உயர்வாகக் கருதப்பட்டது ஆப்ப நாட்டு மறவர் இனக்குழு. முத்துராமலிங்க தேவர் ஆப்ப நாட்டு மறவர் இனக்குழுவை சேர்ந்தவர். அரசியல், அதிகாரம் உள்ளிட்ட அனைத்திலும் இவ்விரு இனக்குழுவுக்குள்ளும் தொடர்ந்து மோதல்கள் இருந்துகொண்டே வந்திருக்கிறது. இதை அடிப்படையாகக் கொண்டுதான் கொம்பன் படத்தின் கதையை செதுக்கியிருக்கவேண்டும். அம்மூன்று பகுதிகளையும் ஊர்களாக சுருக்கி பஞ்சாயத்து தேர்தல்,முன்பகை, ரவுடிசம், ஆட்கடத்தல் என்று சினிமாவுக்காக கதையை மாற்றி சாதிப் பெருமிதம் பேசியிருக்கிறார் இயக்குனர். ஆனால் இதில் தலித் இனமக்கள் எங்கே வருகிறார்கள் என்பது டாக்டர் கிருஷ்ணசாமிக்கே வெளிச்சம்.

இணையத்தில் சிலர் மெட்ராஸ் படத்தையும் கொம்பன் படத்தையும் ஒப்பிட்டு எழுதிக் கொண்டிருக்கிறார்கள். மெட்ராஸ் என்கிற அற்புதமான கலைப்படைப்பின் தரத்தை கால்வாசி கூட தொடவில்லை கொம்பன். வடசென்னை தலித் மக்களின் வாழ்வியல் எதார்த்தத்தை மிக நேர்த்தியாக சொன்னது மெட்ராஸ். அந்தப் படத்தில் ஒரு இடத்தில் கூட தலித் சமூகத்தைப் பற்றிய படம் என்பதற்கான வெளிப்படையான குறியீடு எதுவும் இருக்காது. ஆனால் ஒட்டுமொத்தப் படமும் அவர்களின் வாழ்வியல் சிக்கல்களை அலசியது.


ஆனால் கொம்பன் ஒரு அமெச்சூர்த்தனமான சினிமா. படத்தில் எதுவுமே நிறைவாக இல்லை. மறவர் இனக்குழுக்களின் மோதல்களை பதிவு செய்வதற்கு இதைவிட மொக்கையானக் கதை எதையும் தேர்ந்தெடுக்க முடியாது. ஆப்பநாடு, செம்ம நாடு என்று இரு ஊர்களை மையப்படுத்துகிறார்கள். யார் யார் எந்தெந்த ஊர் மக்கள் என்பதைப் புரிந்துகொள்வதற்குள் பாதிப்படம் நகர்ந்துவிடுகிறது. அதைத் தெளிவாக ஆரம்பத்திலேயே சொல்லியிருக்க வேண்டும். அவ்விரு ஊர்களையும் தத்தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் இரு சண்டியர்களுக்குள்  நடக்கும் யுத்தம்தான் கொம்பன். அதில் கொஞ்சம் காதல், அப்பா செண்டிமென்ட், அம்மா செண்டிமெண்ட், மாமனார் செண்டிமெண்ட் என்கிற மசாலா தடவி, வீரம் செறிந்த கதையைக் காவியமாக்கியிருக்கிறேன் என்று சொல்லி, தமிழ் ரசிகர்களைக் கூப்பிட்டுக் குமட்டிலே குத்தியிருக்கிறது கொம்பன் டீம்.

ஒரு வருடத்திற்கு முன்பு மதயானைக் கூட்டம் என்ற ஒரு படம் வந்தது. கிட்டத்தட்ட இதே கதையமைப்பு. ஆனால் சொல்லிய விதம் அருமையாக இருந்தது. திரைக்கதையும் வசனமும் அப்படத்திற்கு மிருக பலம். ஆனால் வித்தியாசமான கிளைமாக்ஸ் வைக்கிறேன் என்று ஒட்டு மொத்த உழைப்புக்கும் அவர்களே உலை வைத்துக் கொண்டார்கள். அப்படமும் முக்குலத்தோர் பெருமிதம் பேசும் படம் என்று ஆரம்பத்தில் சொல்லப் பட்டது. ஆனால் அதுவும் அச்சமூக மக்களை காட்டுமிராண்டிகள் போல சித்தரித்தப் படம்தான்.

கார்த்திக்குக்கு சமீபத்திய படங்கள் எல்லாம் படுதோல்வியடைந்ததால் பருத்திவீரன் போன்ற ஒரு மெகாஹிட் படம் கொடுக்க வேண்டும் என்கிற முனைப்பில் கொம்பன் எடுக்கப்பட்டிருக்கலாம். தமிழ் சினிமாவின் அடுத்தக் கட்டமாக பருத்திவீரன் பேசப்பட்டது அதன் திரைக்கதைக்காகவும் வசனத்திற்காகவும் மட்டுமே. அதுவே இப்படத்தின் பெரிய பலவீனம்.

' மாமனாரு இன்னொரு அப்பாவுக்கு சமம்..'  என்பது போன்ற வசனங்களை வைத்து பின்பாதியில் நெஞ்சை நக்குகிறார்கள். ஆனால், அதற்கு முன்பு ஒரு ஹீரோவே கட்டையால் தனது மாமனாரின் மண்டையை உடைக்கும் அற்புத காட்சியை தமிழ் சினிமாவில் முதன்முதலில் காண்பிக்கிறார்கள். அதிலும் ராஜ்கிரண் போன்ற பெரிய நடிகருக்கு அப்படியொரு காட்சி  வந்தபோதே வெறுப்பில் தியேட்டரைவிட்டு வெளியேறி விடலாம் எனத் தோன்றியது. அக்கொடுமையான காட்சிக்குப் பிற்பாடு அச்செயலுக்காக  ஹீரோ வருந்துவது போன்ற அழுத்தமான காட்சிகள் எதுவும் காண்பிக்கப்படாதது மிகப்பெரிய மைனஸ். முக்குலத்து சிங்கமாக இதே ராஜ்கிரனை சண்டைக்கோழி படத்தில் லிங்குசாமி காண்பித்திருப்பார். அது தேவர்மகன் சிவாஜிக்கு இணையான பாத்திரம்.

ராஜ்கிரண் என்கிற முதியவர் ஊரே நடுங்கும் ஒரு ரவுடியை தனி ஆளாக அடித்துக் கையை உடைக்கிறார் என்பதே அபத்தமாக இருந்தாலும் அவரைத் தீர்த்துக்கட்ட வெளியில் சுலபமான வழிகள் இருக்கும் போது, அவரை ஜெயிலுக்கு வரவழைத்து... ஆள் செட்டப் செய்து... கரண்ட் கட் பண்ணி....  ஜெயிலர்களையும் துணைக்கு அழைத்துக்கொண்டு....   இவ்வளவு பெரிய சம்பவம் தேவையா...?

தென் மாவட்டக் கலவரம் என்றாலே கையெறிகுண்டும் துப்பாக்கியும் தவிர்க்க முடியாத ஆயுதமாகிவிட்ட காலத்தில் அவ்வளவு பெரிய ரவுடிகளிடம் அதிக பட்ச ஆயுதமாக காய்கறி நறுக்கும் அளவில் கத்தி மட்டும் இருப்பது ஆச்சர்யம்தான்.

நேசனல் அவார்டு கண்டிப்பாக உண்டு என சொல்லி லட்சுமி மேனனை நடிக்க வைத்திருப்பார்கள் போல. வர வர அவரது முகம் மொக்கையாகிக்கொண்டே போகிறது.  ' மேல கையை வையுங்கடா பார்க்கலாம்..' என சீரும் அந்த ஒரு காட்சியில் மட்டும் கம்பீரமாகத் தெரிகிறார். கிளைமாக்சில் தனியாக வில்லன் ஆட்களிடம் மாட்டிக்கொள்ளும்போது ஏதோ வீரமாக செய்யப்போகிறார் என்றால், சப்பென்று போய்விட்டது.

செண்டிமெண்ட் காட்சிகளில் கோவை சரளாவின் முகத்தில் நான்கு சிவாஜி , ஐந்து சாவித்திரி தெரிகிறார்கள். அதற்கு குளோசப் காட்சிகள் வேறு வைக்கிறார்கள். ஆனால் ஒரு பெண்ணைப் பெற்ற அப்பாவாக ராஜ்கிரண் கலங்கி நிற்கும் காட்சிகள் உண்மையிலேயே நெஞ்சை வருடுகிறது.

மண்மணம் வீசும் திரைப்படங்களை எடுத்து தமிழர்களின் வீரம் செறிந்த வாழ்வியலை உலகுக்கு காட்ட உங்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை. அதன் பாரம்பரிய பெருமைகளை சிதைக்காமல் இருந்தாலே போதும்.

கொம்பன் கூர் மழுங்கி நிற்கிறான்.