Tuesday 28 October 2014

விஜய்ண்ணாவுக்கு ஒரு கடிதம்...


அன்புள்ள விஜய்ண்ணா..... 

"என் உயிரே போனாலும் விவசாயத்தை விட்டுடாதீங்க..." அப்படின்னு காவல் நிலையத்தில் நீங்கள் கதறிய கதறல் இன்னும் என் காதுக்குள்ள எதிரொலிச்சிகிட்டே இருக்கு. போயி புள்ளக்குட்டிய படிக்க வையுங்கடானு கமல் சொன்னப்போ கூட யாரும் கேக்கல.

ஆனா விஜய்ண்ணா, இங்க தியேட்டரில் விசில் பறக்குது. என்கூட படத்துக்கு வந்திருந்த  நண்பன் உணர்ச்சி வசப்பட்டு சீட் மேல ஏறி நின்னு கை தட்டினான்.  எனக்கோ மயிர் சிலிர்க்க ஆரம்பிச்சுட்டுது.   அதிலும் வெளிநாட்டில் வேலை செய்யிறவங்க எல்லாம் எப்படா ஊரில் போயி விவசாயம் பண்ணலாம்னு இருக்காங்கனு சீன் வச்சீங்க பாருங்க.. அந்த கும்மி இருட்டுலேயும் அத்தனைப்பேர் கண்ணுலேயும் கண்ணீரை பாத்தேன் விஜய்ண்ணா...

படம் முடிந்து வெளியே வந்தவுடன் என் நண்பனிடம் , ' ரொம்ப உணர்ச்சி வசப்பட்டுட்ட போல.. அப்போ ரெண்டு வருஷ காண்ட்ராக்ட் முடிந்தவுடன் ஊரில் போயி விவசாயம் பண்ணுவனு சொல்லு...'

" ஏய் போப்பா..நானே எங்கப்பன் என்னை வயல்வேலை செய்ய சொல்லுவாருனு பயந்து போயிதான் பணத்தைக் கட்டி சிங்கப்பூர்ல வந்து கன்ஸ்ட்ரக்சன் வேலை பாத்துகிட்டு இருக்கேன்.."

" அப்படினா விசில் அடிச்சி கைதட்டினது எல்லாம்...?"

"அது எங்க இளைய தளபதிக்காக..."

அடப்பாவி.. எங்க விஜய்ண்ணா சிக்ஸ்பேக் எல்லாம் வச்சி ஜட்டியோட வந்து விவசாயத்தை விட்டுடாதீங்கனு கதறி அழுவுறது உங்களுக்கெல்லாம் வேடிக்கையா இருக்கா..?



அவன் சொன்னத கேட்டதும் நான் அப்படியே  ஷாக் ஆயிட்டேன் விஜய்ண்ணா. நீங்க முடிவெடுக்கவேண்டிய நேரம் வந்திடுச்சி. எடுத்து சொல்றது முக்கியம் இல்லீங்கண்ணா. நீங்க எடுத்துக்காட்டா இருக்கணும். இவங்களுக்கு எல்லாம் விவசாயம்னா என்னன்னு புரிய வைக்கணும்.

எங்க ஊர் பக்கத்தில விவசாயம் செய்ய நிறைய தண்ணீர் கிடைத்தாலும் யாருக்கும் விவசாயம் செய்ய விருப்பம் இல்ல.. விளை நிலங்களை எல்லாம் பிளாட் போட்டு விக்க ஆரம்பிச்சிட்டாங்க.. ஏன்னு கேட்டா, "விவசாயம் பண்ணினேன். வெறும்பயல் ஆனேன். பிளாட் போட்டு வித்தேன் கோடீஸ்வரன் ஆனேன்" என பன்ச் டயலாக் அடிக்கிறாங்க. 

"அப்படின்னா தண்ணீர் மட்டும் இருந்தால் விவசாயம் செய்துவிடலாம் என்று எங்க விஜய்ண்ணா சொன்னதெல்லாம் பொய்யா....." என்று நடிகர் திலகம் ஸ்டைலில் இழுத்து கேட்டேன். பொக்குனு மூஞ்சிலே குத்திடாங்கண்ணா...

 "தைரியம் இருந்தா உங்க விஜய்ண்ணாவ வந்து இங்க விவசாயம் பண்ண சொல்லு பாக்கலாம்" என்று சவால் விடுறாங்கண்ணா..

" யோவ். யாருகிட்ட சவால் விடுற.. எங்க விஜய்ண்ணா விவசாயிகளுக்காக மூணு நாள் பைப்புகுள்ள உட்காந்து போராட்டம் பண்ணினவருய்யா... இதே ஊர்ல 20 ஏக்கர் நிலத்தை வாங்கி எங்க விஜய்ண்ணாவை விவசாயம் பண்ண சொல்றேன் பார்"  என நானும் எதிர் சவால் விட்டுட்டு வந்துட்டேன்.

நான் சொன்னதில ஏதாவது தப்பு இருக்காங்கண்ணா...?

நடு ராத்திரியில நான் மட்டும் ஏண்டா சுடுகாட்டுக்கு போவணும்னு நீங்க பொலம்பறது எனக்கு கேக்குது விஜய்ண்ணா..

ஆனா.. ஒரே ஒரு பிளாஷ்பேக் சொல்றேன். அதை கேட்டுட்டு நீங்களே முடிவு பண்ணிக்கீங்க..

5 வருசத்துக்கு முன்னாடி கந்தசாமின்னு படம் வந்ததே ஞாபகம் இருக்குங்களா.. கலைப்புலி தானு தயாரிப்பில் சுசிகணேசன் இயக்கத்தில் நம்ம சீயான் விக்ரம் நடித்த படம்.  கலைப்புலி தானு நிறைய கடன்வாங்கி, கஷ்டப்பட்டு தயாரித்த படம்.

அந்தப் படத்தோட படப்பிடிப்பு முடியும் நேரத்தில் பட யூனிட் ஒரு அறிவிப்பு செய்தது. தமிழ் சினிமா சரித்திரத்தில் ஒரு வித்தியாசமான, பாராட்டப்பட வேண்டிய நிகழ்வு அது. இரண்டு கிராமங்களை கந்தசாமி குழு தத்தெடுக்கிறது என்பதுதான் அந்த செய்தி. அது தொடர்பான காணொளி கூட வந்தது. படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு அவ்விரு கிராமங்களை சேர்ந்தவர்களை அழைத்து வந்து கௌர
ப்படுத்தினார்கள் .

படம் தயாரிப்பில் இருக்கும் சமயத்தில் அது தொடர்பான விழாவோ அல்லது பொதுச்சேவையோ செய்தால் அது தயாரிப்பாளரின் தலையில்தான் விழும் என்பது சினிமா இண்டஸ்ட்ரியில் எழுதப்படாத விதி. ஏற்கனவே பணப் பற்றாக்குறையால் இடையில் தடைபட்டு பின்பு மிகுந்த சிரமத்திற்குப் பிறகு எடுத்து முடிக்கப்பட்ட படம் அது. அப்படியிருக்க இரு கிராமங்களை
த் தத்தெடுக்க வேண்டிய அவசியம் என்ன..?

ஒருவேளை வியாபார தந்திரமாக இருக்குமோ..? எல்லோரும் அப்படித்தான் நம்பினார்கள். ஆனால் அதற்கான விடை படம் வெளிவந்த பிறகுதான் கிடைத்தது. 




கந்தசாமி படத்தின் கிளைமாக்சில் விக்ரம் பேசும் வசனம் அப்படத்திற்கு மட்டுமல்ல சமுதாயத்திற்கே ஒரு நல்ல மெசேஜ். படத்தில் வில்லன் சொத்துபத்திரங்கள், பணம் உள்ளிட்ட தனது அனைத்து உடமைகளையும் ஒரு சொகுசுப் பேருந்தில் மறைத்து வைத்து கூடவே ஒரு வடநாட்டு கில்மாவுடன் "என் பேரு மீனாகுமாரி...." பாட்டுக்கு குத்தாட்டம் போட்டுக்கொண்டே  பயணம் செய்வார்.

அப்பேருந்தை வழிமறித்து செதில் செதிலாக உடைத்தெடுப்பார் விக்ரம். அப்போது அந்த கில்மாவைப் பார்த்து, " உனக்கு பஸ்சுக்குள்ள ஆடுறதுக்கு எவ்வளவு கொடுத்தான்..." என்று கேட்பார்.


" 30 லட்சம்..."

அடுத்து அவன் பக்கம் திரும்புவார். அப்பொழுதுதான் அந்த வசனம் வரும்.. 

" இதில 200 ஏழைக்குழந்தைகளை தத்தெடுத்திருக்கலாம். இல்ல உங்க கம்பெனிய சுத்தி இருக்கிற ரெண்டு மூணு கிராமத்தையாவது தத்தெடுத்திருக்கலாம். முடியலனா நீ வாழ்ற தெருவையாவது தத்தெடுத்திருக் கலாம். அதுவும் கஷ்டம்னா உன் கீழ வேலை செய்யிற ரெண்டு மூணு குடும்பங்களையாவது தத்தெடுத்திருக் கலாம். இந்த மாதிரி செஞ்சிருந்தா நம்ம மண்ணுல சம்பாதித்த பணத்தை வெளிநாட்டுல சம்பாதிச்ச மாதிரி கணக்கு காட்டி இவ்வளவு பணத்தை வெளிநாட்ல பதுக்கி வைக்க தோனிருக்காது..." 



கொஞ்சம் லாஜிக் படி யோசிச்சீங்கனா... அந்த பாம்பே கில்மாவுக்கு லட்சம் லட்சமா பணம் கொடுத்து ஐட்டம் டான்ஸ் ஆட கூட்டி வந்தது கந்தசாமி பட குரூப். ஆனா வசனம் வில்லனை திட்டி பேசுவாங்க. படம் பார்க்கிற நமக்கு என்ன தோணும்..? "அடேய் வக்கனையா வசனம் பேசுறீங்களே.. முமைத் கான்-க்கு பணம் கொடுத்து கூட்டிவந்ததே நீங்கதானடா.. அதுல நீங்க ரெண்டு கிராமத்தை தத்தெடுக்க வேண்டியதுதானே.. ஸ்ரேயாவுக்கு கொடுத்த பணத்துக்கு பத்து கிராமத்தை தத்தெடுக்கலாமேடா.. ". இப்படிப்பட்ட விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதால்தான் முன்கூட்டியே இரண்டு கிராமங்களைத் தத்தெடுத்தார்கள்.

கந்தசாமி நூறாவது நாள் விழாவில் கூட அந்த கிராமங்களை இரண்டு தொழிலதிபர்கள் தத்தெடுப்பதாக அறிவித்தார்கள்.  அந்த கிராமங்கள் தற்போது எப்படி இருக்கிறது என்று தெரியாது. ஆனால் படத்தில் வரும் அந்த வசனங்களுக்கு உயிர்கொடுக்க வேண்டும் என்பதற்காக நேரடியாக களப்பணியாற்றி சாதித்துக் காட்டியது கந்தசாமி படக்குழு.


பிளாஷ்பேக் முடிஞ்சதுங்கண்ணா....


த்தி படத்திற்கு 20C வாங்கியதாக பேசிக்கொள்கிறார்கள். அது கருப்பா வாங்கினீர்களோ அல்லது வெள்ளையா வாங்கினீர்களோ தெரியாது.ஆனால்,"5000 கோடி கடன் வாங்கின பீர் பாக்டரி ஓனர் தற்கொலை பண்ணிக்கல. ஆனா 5000 ரூபாய் கடன் வாங்கின விவசாயி தற்கொலை பண்ணிக்கிறான் " என கொஞ்ச நாட்களுக்கு முன்பு பேஸ்புக்கில் நிறைய லைக், ஷேர் வாங்கின ஒரு ஸ்டேடசை காப்பியடிச்சி சினிமாவுல பேசி கைதட்டல் வாங்குறீங்க.

திமுக மீது  2G ஊழல் புகார் சுமத்தப்பட்ட பிறகு நடந்த எத்தனை பாராட்டு விழாவில் நைனாவோட போயி கலைஞரை பாராட்டி பேசியிருப்பீங்க. அதையெல்லாம் மறந்துவிட்டு 2G ன்னா என்னான்னு தெரியுமான்னு கேட்டு உசுப்பேத்தி விடுறீங்க..

அதெல்லாம் விடுங்க விஜய்ண்ணா..

"என் உயிரே போனாலும் விவசாயத்தை விட்டுடாதீங்க..." அப்படின்னு திரையில கதறுற நீங்க, ஏன் விலை நிலங்களாக மாறிக்கொண்டிருக்கும் விளை நிலங்களை வாங்கி விவசாயம் பண்ணக் கூடாது.?

நீங்க வாங்குற 20C யில அஞ்சு கல்யாணமண்டபம் கட்டலாம்.  ECR ரோட்டுல பத்து பிளாட் வாங்கிப் போடலாம். ஆனால் அதுல கால்வாசி செலவு செய்தால் போதும். 10 ஏக்கர் நிலத்தை வாங்கி ஏன் நீங்க விவசாயம் பண்ணக் கூடாது..?

விவசாயம் என்றால் நீங்கள் சேற்றில் கால் வைக்க வேண்டியதில்லை விஜய்ண்ணா. எங்க ஊர் பக்கம் தண்டல் விடுவது என்று சொல்வார்கள். அதாவது, ஒருகாலத்தில் ஏக்கர் கணக்கில் பயிர் செய்தவர்கள் பிறகு வெளியூரிலோ அல்லது வெளிநாட்டிலோ செட்டில் ஆகும் சூழல் ஏற்படும்போது அந்நிலங்களை ஊரில் விவசாயம் செய்ய ஆர்வமாக உள்ளவர்களிடம் கொடுத்து விவசாயம் செய்ய சொல்வார்கள். ஒரு ஏக்கருக்கு இத்தனை மூட்டை நெல்லாகவோ அல்லது பணமாகவோ அந்நில உரிமையாளர்கள் பெற்றுக் கொள்வார்கள். இதில் இருவருக்குமே லாபம். விவசாயமும் பாதுகாக்கப்படும்.

அதுபோல செய்யலாமே விஜய்ண்ணா. அல்லது அதில்வரும் லாபத்தை அதில் உழைத்த ஏழை விவசாயிகளுக்கு பங்கிட்டுக் கொடுக்கலாமே.  அப்படி செய்தால் நீங்கள் பேசும் பொதுவுடமை சித்தாந்த கொள்கைக்கு உயிர் கொடுத்தது போல் இருக்குமே.. செய்வீர்களா விஜய்ண்ணா....

இப்படிக்கு..

"என் உயிரே போனாலும் விவசாயத்தை விட்டுடாதீங்க..."
என்கிற டயலாக்கை கேட்டு பொறிகலங்கி போய் நிற்கும்
ஒரு ரசிகன்...


Sunday 26 October 2014

கத்தியும் அதன் மீதான எதிர்வினைகளும்..


விஜய் ரசிகர்கள் ஏ.ஆர்.முருகதாஸ்-க்கு நன்றி கடன் பட்டிருக்கிறார்கள். கடந்த ஐந்து வருடங்களில் விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்களில் துப்பாக்கியையும் கத்தியையும் நீக்கிவிட்டு பார்த்தால் அனைத்தும் மொக்கை வகையறாக்கள். அதிலும் கத்தி பட அளவுக்கு இதுவரை எந்தப் படத்தின் டீசரும் இப்படி கலாய்க்கப் பட்டதில்லை. கத்தியில் விஜய்யை பத்திரமாக சுமந்து கரை சேர்த்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் .

படத்தின் மூலக்கதை வேறொருவருக்கு சொந்தமானது என்று இணையத்தில் செய்தி பரவுகிறது. கதைக்கு சொந்தமானவர் நிறைய நண்பர்களிடம் இக்கதையை சொல்லியிருக்கிறார் போல. " இரண்டு வருடத்திற்கு முன்பு நண்பர் கோபி அவர்கள் என்னிடம் இந்தக்கதையை சொன்னார் .." என்கிற ரீதியில் நிறைய பதிவுகள் பேஸ்புக்கில் காண முடிகிறது. விவசாய நிலங்களை கையகப்படுத்தும் கார்பரேட் முதலாளிகளுக்கும் அந்நிலங்களின் உரிமையாளர்களுக்கும் இடையே நடக்கும் யுத்தத்தை முழு திரைக்கதையாக்கி  ஏ.ஆர்.முருகதாஸிடம் சொல்லியிருக்கிறார் கோபி.

புழல்,வீராணம் உள்ளிட்ட சென்னைக்கு குடிநீர் கொண்டுசெல்லும் அனைத்து தண்ணீர் குழாய்களையும்  தகர்த்தெறிவது வரை அவரது திரைக்கதையில் இருந்திருக்கிறது. இரட்டை வேடங்கள் என்கிற சிறிய மாற்றத்தை மட்டும் திரைக்கதையில் செய்து கத்தியாக படைத்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். மற்றவரின் படைப்பை, உழைப்பை களவாடி கத்தியாக களமாடியிருக்கிறார் என்கிற குற்றச்சாட்டு இயக்குநர் மீது சுமத்தப் பட்டாலும் களவாடப்பட்ட அனைத்து கதைகளும் இங்கு வெற்றிபெறுவதில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். தற்போது இது சம்மந்தமாக வழக்கு நடைபெறுகிறது என்று தெரிகிறது. இது அவர்களது பிரச்சனை. நாம் நம் வேலையை பார்ப்போம்.

கதையை பல விமர்சனங்களில் படித்திருப்பீர்கள். படம் ரிலீசாகி  அடுத்த நாளே இணையத்தில் வெளியாகி விட்டதால் அனைவரும் கண்டுகளித்திருப்பீர்கள் . இருந்தாலும் நம் கடமை என்று ஒன்று இருக்கிறதல்லவா... ! ஆகையால்...


கத்தி - செம ஷார்ப்...

டைப்பு ரீதியாக கத்தி சிறந்த படம்தான். இந்தக் கதையை கையாள்வதற்கே தனித்திறன் வேண்டும். மணிரத்னம்,சங்கர், ஏ.ஆர்.முருகதாஸ் போன்ற ஒரு சில ஆளுமைகள் மட்டுமே தொடக்கூடிய சப்ஜெக்ட் இது. 

வறண்டு கிடக்கும் நஞ்சை பூமியின் அடியில் உள்ள நீராதாரத்தை அறியும் கார்ப்பரேட் கும்பல் ஒன்று அந்நிலங்களை கையகப்படுத்தி தொழிற்சாலை கட்ட முயல்கிறது. எங்களுக்கு சோறுபோட்ட இந்த புண்ணிய பூமியில்  விவசாயத்தை தவிர வேறு எந்த தொழிலையும் செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று அந்நிலத்தில் காலங்காலமாக விவசாயம் செய்துவரும் உரிமையாளர்கள் போர்க்கொடி உயர்த்துகிறார்கள். பணபலம், மிரட்டல்,வன்முறை என்று அத்தனை ஆயுதங்களையும் அந்த ஏழை விவசாயிகள் மீது ஏவி விடுகிறது கார்ப்பரேட் கும்பல். இறுதியில் சட்டத்தின் கதவு தட்டப்படுகிறது. அந்தக் கதவு யாருக்கு திறந்தது என்பதே படத்தின் இறுதிக் கட்டம்.

கதிரேசன்(கத்தி), ஜீவானந்தம் என்று இரு கெட்டப் விஜய்க்கு. வழக்கம்போல எந்த வித்தியாசமும் காட்டாமல் ( பாஸ்.. ஒரு மருவாவது ஒட்டி வச்சிருக்கக் கூடாதா..?). கதைக்கருவில் இரண்டு விஜய்க்கான அவசியம் இல்லைதான். ஆனால் கமர்சியல் கன்றாவி என்று ஓன்று இருக்கிறதே. டூயட், ரொமான்ஸ் இன்னபிற வணிக சமாச்சாரங்களை எல்லாம் இடைச்செருகல் செய்ய  கதிரேசன் தேவைப்பட்டிருக்கலாம்.

சண்டை, நடனம்,காமெடி காட்சிகளில் கலக்கும் வழக்கமான அதே விஜய்யாக கதிரேசன். அந்த பிரஸ்மீட் காட்சியில் மட்டும் அதகளப்படுத்துகிறார்.

ஆனால், ஜீவானந்தம் கேரக்டர் உண்மையிலேயே விஜய் கேரியரில் ஒரு மைல்கல். ஒரு பாடாவதி படத்துக்கு
'தலைவா' என்று பெயர்வைத்ததற்குப் பதிலாக இந்தப் படத்திற்கு  வைத்திருக்கலாம். ஓரளவு நடிப்பதற்கு வாய்ப்புள்ள பாத்திரம். ஆனால் அதை முழுவதும் பயன்படுத்திக் கொண்ட மாதிரி தெரியவில்லை. இறந்தவர்களின் கட்டைவிரலில் மைதடவி அவர்களின் நிலத்தை அபகரித்துவிட்டார்கள் என்று அறிந்தவுடன் கதறி அழும் அந்தவொரு காட்சி மட்டும் அட்டகாசம். 

நஸ்ரியா செட்டில் ஆனதால் இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னி சமந்தா என்பதில் துளியளவு(!) கூட சந்தேகமில்லை. அழகுப் பதுமையாக வந்து விஜய்யோடு டூயட் ஆடுவதோடு இவர் வேலை முடிந்தது. 


சில இடங்களில் பின்னணி இசையில் செம கலக்கு கலக்கியிருக்கார் அனிருத் (என்ன..படம் முடிந்து வெளியே வரும்போது காதுக்குள்ள  ங்கொய்..ன்னு ஒரு சத்தம்) . 

சமகாலப் பிரச்சனையை நுட்பமாக கையாண்டிருப்பதால் இயக்குனருக்குத்தான் அத்தனைப் பாராட்டுகளும். வசனம் படத்திற்கு மிருக பலத்தை சேர்த்திருக்கிறது. அதே நேரத்தில் கத்தி தொடர்பான எதிர்கருத்துகளும் மறுபுறம் வந்து கொண்டே இருக்கிறது. 

கதிரேசனாக வரும் விஜய் ஒரு போக்கிரி. சமூகத்தின் மீது எந்த அக்கறையும் இல்லாத ஊதாரி. அவர் ஜீவானந்தத்தின் இடத்திற்கு வரும்போதுதான்  சமந்தாவும் அங்கு வருவார். அதன்பின்னர் தான் அங்கு என்ன பிரச்சனை என்பதை கொஞ்சம் கொஞ்சமாக விஜய் அறிவார். அப்போதெல்லாம் கூடவே இருக்கும் சமந்தாவுக்கு அவர் ஜீவானந்தம் அல்ல என்கிற விஷயம் எப்படி தெரியாமல் போயிற்று..? 

ஜெயிலிருந்து தப்பிக்கும் தீவிரவாதியை தன் மதிநுட்பத்தால் பிடித்துக் கொடுக்கிறார் விஜய். அதனால் விஜய்யை கண்டுபிடித்து பழிவாங்க ஜெயிலில் இருக்கும் மற்றொரு விஜய்யுடன் இன்னும் இருவரையும் சேர்த்து தப்பிக்க வைக்கிறான் அந்தத் தீவிரவாதி. இவ்வளவு ரிஸ்க் எடுப்பவன் ஏன் அவனே தப்பிக்கக் கூடாது...? 

அப்படி வந்த மற்ற இருவரும் திடீரென்று காட்சியிலிருந்து காணாமல் போகிறார்களே... ?

இவ்வளவு பெரிய கார்பரேட் கம்பெனியின் C.E.O வாக இருப்பவர் நேரடியாக களத்தில் இறங்கியா சண்டை போடுவார்..?

ஐந்து கோடி பணத்தை திருப்பிக்கொடுக்க செல்லும் விஜய்  ஏதோ பெட்டிக்கடை வாசலில் நிற்பவரிடம் கொடுப்பது போல கொடுத்துவிட்டு வருகிறார்.

ஏரிகளிலிருந்து தண்ணீர் கொண்டு செல்லும் பைப்பினுள் அமர்ந்து மூன்று நாட்கள்  போராட்டம் என்பதெல்லாம் சாத்தியமா..? காற்றோட்டமே இல்லாத அதன் உள்ளே அரை மணிநேரம் கூட உட்காரமுடியாதே..

இதுபோல லாஜிக் ஓட்டைகள் நிறைய இருந்தாலும் இணையத்தில் வேறுமாதிரியான எதிர்வினைகள் விவாதிக்கபடுகிறது.

கோகோ  கோலா விளம்பரத்தில் நடித்து நம்மை கோக் குடிக்க சொல்லி வற்புறுத்திய விஜய், எப்படி கோக் கம்பெனி தாமிரபரணி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுப்பதைப் பற்றி பேசலாம். 'நீங்கள் குடிக்கும் குளிர்பானம் ஏழைகளின் ரத்தம்' என்றுவேறு பன்ச் அடிக்கிறார்.

விஜய்யிடம் கேட்டால் , 'இதில் என்னங்ண்ணா தப்பு இருக்கு. கோக் குடிங்க-ன்னு சொல்றதுக்கும் அந்தக் கம்பெனி தண்ணீர் எடுப்பதைக் கண்டிப்பதும்  ஒன்றா '  என்று கேட்பார். சரிதான்.

விஜய் என்பவர் ஒரு தொழில்முறை நடிகர். பணத்தைத் தவிர நடிகனுக்கு வேறு கொள்கை இருக்கவேண்டும் என்கிற அவசியம் கிடையாது. அந்தந்த காலகட்டத்தில் அரசியல் சூழலுக்கேற்ப கலைஞரில் ஆரம்பித்து மோடி வரை சந்தித்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தவர் இளைய தளபதி அவர்கள். அவரிடம் போய் கோக் விளம்பரத்தில் நடித்தீர்களே என்று தர்க்க ரீதியாகக் கேள்வி கேட்டால் பாவம் என்ன பதில் சொல்வார்...?

இலங்கை அரசுக்கு எதிராக உண்ணாவிரதத்தில் கலந்து கொள்வார். அப்படியே ஈழப்படுகொலையை தடுக்காமல் வேடிக்கைப் பார்த்த காங்கிரஸ்-ன் துணைத்தலைவர் ராகுல்
காந்தியை சந்தித்துவிட்டு துண்டு போட்டுவிட்டு வருவார். ஒரே ஒரு வாசகத்துகாக தான் நடித்த படத்தையே தடை செய்யும் அரசுக்கு எதிராக எதுவும் பேசமாட்டார். ஆனால் அவரை ஆறுகோடி மக்களின் தாய்.. என் தாயை பழிக்கலாமா என்று புலம்புவார். ராஜபக்சேவை கண்டிப்பார். அவரது பினாமியின் படத்திலே நடிப்பார். இப்படி தனக்கென்று சுயமாக கொள்கை வகுக்காதவரிடம் போய் கோககோலா விளம்பரத்தில் நடித்து சரியா என்று அறச்சீற்றத்துடன் கேள்வி எழுப்பினால் பாவம் பச்சப்புள்ள என்ன பதில் சொல்லும்..?

நாம் கேள்வி கேட்க வேண்டியது இவரிடமில்லை. தான் ஒரு நடிகர் என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறார். இவர் நைனா ஒருத்தர் இன்னும் கொஞ்ச நாளில் வெளியே வரு
வார். வந்தவுடன் மக்கள் சக்தி விஜய்.. அடுத்த முதல்வர் விஜய் என உலர ஆரம்பிப்பார். அப்போது வைத்துக் கொள்ளலாம். 

சரி..படத்தில் மையக்கருவுக்கும் இதில் விஜய் பேசும் வசனத்துக்கும் ஏதாவது சம்மந்தம் இருக்கிறதா?. "என் உயிரே போனாலும் விவசாயத்தை விட்டுடாதீங்க" என்கிறார். இந்தப்படம் விவசாயத்தைப் பற்றி எங்கே பேசுகிறது..? விவசாயத்தின் அவசியத்தைப் பற்றி எங்கே பேசுகிறது. விவசாயிகள் படும் அவலத்தைப் பற்றி எங்கே பேசுகிறது ?. நிலத்தடி நீராதாரம் மட்டும் இருந்தால் விவசாயம் செய்துவிட முடியுமா..?. 

தஞ்சை,திருவாரூர் , நாகை டெல்டா  பகுதிகளில் இல்லாத நீராதாரமா..? 20 அடியில் தண்ணீர் கிடைக்கிறது . 50 அடி தோண்டினால் விவசாயம் செய்யும் அளவுக்கு தண்ணீர் கொட்டுகிறது. கிராமந்தோறும் இலவச மின் இணைப்பில், இலவச மின்சார மோட்டார் அமைத்துக் கொள்ளும்படி அரசு மன்றாடுகிறது. அதை எத்தனைப் பேர் பயன்படுத்திக் கொள்கின்றனர். விவசாயம் செய்வதற்காகன அனைத்து வசதிகள் இருந்தும் ஏன் விளைநிலங்கள் எல்லாம் ரியல் எஸ்டேட்டாக மாறிக்கொண்டிருக்கிறது..? இதற்கெல்லாம் தீர்வு சொல்லிவிட்டு விவசாயத்தை விட்டுடாதீங்க என்று கதறினால் ஒரு அர்த்தம் இருக்கும்.

இதைவிட ஒரு அபத்தமான காட்சி படத்தில் இருக்கிறது. விஜய் அங்கிருந்தபடியே சிங்கப்பூர், மலேசியா , வளைகுடா நாடுகளில் வேலைபார்க்கும் இளைஞர்களிடம் பேசுவார். அவர்கள் எல்லோரும் 'ஊருக்கு வந்து வயலில் இறங்கி எப்படா வேலை செய்வோம் என இருக்கு' என்பார்களாம். உண்மையிலேயே வெளிநாடுகளில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்பவர்களிடம் எத்தனைப் பேர் ஊரில் சென்று விவசாயம் செய்ய விரும்புகிறார்கள் என கேளுங்கள். ஊரிலிருந்தால் வயல்வேலை செய்ய சொல்வார்கள் என்பதால்தான் வெளிநாட்டுக்கு வந்தேன் என்று அநேக
ம் பேர் சொல்வார்கள். அவர்கள் எதற்காக விவசாயத்தை வெறுக்கிறார்கள் என்பதை விளக்கிவிட்டு, விவசாயத்தை விட்டுடாதீங்க என்று கதறினால் ஒரு அர்த்தம் இருக்கும்.

பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துக் கொள்வார்கள் என்பது சரி.. ஆனால் நான்கு வருட காண்ட்ராக்டில் இருப்பவர்கள் இடையில் ஊருக்கு வரவே முடியாது என்பதெல்லாம் உண்மையல்ல.

பிரஸ்மீட் காட்சியில் கதைக்கு தேவையான எல்லா புள்ளி விவரங்களையும் சொல்லிவிட்டு கடைசியாக ஒரு 'அபவுட் டேர்ன்' போடுவார். தற்போது கேமரா, விஜய்யின் முகத்தையும் இதுவரை எதிரே நின்றுகொண்டிருந்த பிரஸின் முகங்களையும் ஒரே நேரத்தில் ஃபோகஸ் செய்யும் . ஏதோ கதைக்கு மிக முக்கியமான விஷயம் சொல்லப்போகிறார் என்று நினைத்தால் '2G ன்னா என்னான்னு தெரியுமா' என்பார்.  அப்படி என்றால் அந்த பிரஸ்மீட்டின் மைய நோக்கம் 2G யைப் பற்றியதா..?

கதைக்கருவுக்கும் 2G -க்கும் என்னய்யா சம்மந்தம்...? திமுகவைத் தாக்கி வசனம் வைப்பவர்கள்  ஏன் ஜெயலலிதாவின் வழக்கைப் பற்றிப் பேசத் தயங்குகிறார்கள் என்று கேட்கவில்லை. ஆனால், தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சி சம்மந்தப்பட்ட, இன்னமும் ஊழல் என்று நிரூபிக்கப்படாத ஒரு வழக்கைப் பற்றி எதற்காக இந்த இடத்தில் பேசவேண்டும்...? ஒருவேளை, கடைசிவரை படம் வெளிவருமா என்கிற பதட்டத்தில் இருந்தவர்கள் இந்த ஒரு காட்சியை அம்மாவுக்கு போட்டுக் காட்டி அனுமதி வாங்கியிருக்கலாம். 

அது ஏனோ தெரியவில்லை.. அதுவரை கத்தியின் நுனியில் கம்பீரமாக நின்ற A.R.முருகதாஸ் அந்த ஒரு காட்சிக்குப்பிறகு மம்மியை கண்ட மினிஸ்டர் போல் கூனிக்குறுகி காட்சியளிக்கிறார்.

ஹி ..ஹி





Wednesday 22 October 2014

பூஜை

பூஜை



கோயிலுக்கு தானமாகக் கொடுத்த பூர்வீக நிலத்தை அபகரிக்க நினைக்கும் வில்லனிடமிருந்து தனியாளாக விஷால் மீட்பதே படத்தின் ஒன் லைன் .

இந்த மொக்கை கதையை மட்டும் வைத்துக்கொண்டு  வழக்கமான கார் சேசிங், தாறுமாறாக காற்றைக் கிழிக்கும் அரிவாள், 100 அடி உயரத்தில் பறக்கும் சுமோ,கொஞ்சம் குடும்ப செண்டிமெண்ட் என ஹரி படத்தின் அத்தனை சமாச்சாரங்களையும் கலந்து களமாடியிருக்கிறார்கள். ஆனால் திரும்பத் திரும்பப் பார்த்து சலித்துப்போன காட்சிகளால் நமக்கு வெறுப்புத்தான் மிஞ்சுகிறது.

ஹரி படத்தில், ஹீரோவும் வில்லனும் மாறிமாறி கத்தி நமக்கு எரிச்சலை  ஏற்படுத்தினாலும் அதையெல்லாம் மறக்கும்படி நெகிழ்ச்சியான செண்டிமெண்ட் சீன்  இடையில் செருகியிருப்பார்.. அழகான குடும்ப அமைப்பை காட்சிப்படுத்துவார். ஆனால் இதில் காட்டுகிறாரே ஒரு குடும்பம்....! கொலைகார குடும்பம்..!.

பல வருடங்களாக மகனை ஒதுக்கி வைத்த தாய் திடீரென்று மகனை வரவழைத்து 'வில்லனின்  கையை முறிச்சி வா' என்கிறார். குழந்தைகளுக்கு சாவு பயத்தை காட்டிடாணுவ அவனுகளை கொன்னுடு என்று சுருதி உசுப்பேத்தி விடுகிறார். அவன் கையை முறிச்சிட்டு வந்ததுக்கு பதிலா அவன் கையை வெட்டிட்டு ஜெயிலுக்கு போனானும் பரவாயில்லை என்று அத்தை ரேணுகா கதறுகிறார். இவ்வளவுக்கும் அந்த குடும்பத்தில் இருக்கும் ஒரே ஆண்பிள்ளை... மூத்த பிள்ளை...விஷால்தான்.

வில்லனை விஷால்  அடித்து துவைத்ததை சின்ன வாண்டுகள் முதற்கொண்டு வீட்டுப் பெண்கள் வரை குடும்ப மானத்தைக் காப்பாற்றி விட்டதாக விஷாலை தலையில் வைத்து கொண்டாடுகிறார்கள் .

படம் முழுக்க கூலிப்படை என்கிற வார்த்தை உச்சரிக்கப்படுகிறது. எல்லோரும் பிகாரிகள்  (அவர்கள் மேல் என்ன கோபமோ..). போதாக்குறைக்கு விசாலை அவர் குடும்பமே ஒரு கூலிப்படை போல்தான் நடத்துகிறது.



இந்தப் படத்தில் அற்புதமான தாய்-மகன் பாசப்பிணைப்பை வேறொரு கோணத்தில் அலசியிருக்கிறார் ஹரி.  தன் சொந்த பிள்ளையை உதவாக்கரை..உருப்படாதவன்.. தண்டச்சோறு .. இப்படி திட்டும் அப்பாக்களை மட்டும்தானே திரையில் பார்த்திருக்கிறீர்கள். இதில் அம்மாவை காண்பிக்கிறார் ஹரி.. இவ்வளவுக்கும் எந்த வம்பு தும்புக்கும் போகாமல் வீட்டில் எல்லோரையும் மதித்து நடக்கும் நல்ல பிள்ளையாகத்தான் விஷால் இருக்கிறார். அப்பாவும் கிடையாது. ராதிகாவுக்கு  ஒரே ரத்த சொந்தம் தன் மகன் விஷால் மட்டும்தான் . ஆனால் சூரியவம்சம் சக்திவேல் கவுண்டர் போல தன் மகனை எதற்காக ஆரம்பத்திலிந்து வெறுக்கிறார் என்பது புரியவில்லை. அதிலும் வீட்டை விட்டு விலக்கி வைக்கும் அளவுக்கு கல் நெஞ்சம் படைத்த தாய் இந்த உலகத்தில் எங்கு இருக்கிறார்...?

ஹரியின் செண்டிமெண்ட் பார்முலா சறுக்கியது இங்குதான். அதிலும் அம்மாவும் பிள்ளையும் சேரும் அந்தக் காட்சி இருக்கிறதே .. கண் கொள்ளாக்   காட்சி.. தமிழ்த்திரை சரித்திரத்தில் தளபதிக்கு அடுத்ததாக இந்த சீன் தான் பேசப்படும்.

படத்தில் பலவீனமே  அழுத்தமில்லாத காட்சியமைப்புகள் தான். விஷாலும் ஸ்ருதியும்  ஒருவருக்கொருவர் காதல் கொள்வது பிளாக் அண்ட் ஒயிட் காலத்து சினிமாவை விட கேவலமாக இருக்கிறது. அது ஏன் எல்கேஜி  படிக்கிற பொண்ணு பேச்சுப் போட்டியில் பேசுற மாதிரியே ஸ்ருதி பேசுது...?  பேசுவதைக் கூட பொறுத்துக் கொள்ளலாம்.ஆனால் கவர்ச்சி காட்ட முயல்வதுதான் மிகக் கொடுமை. கவுசல்யா கவர்ச்சி காட்டியதையே சகித்துக்கொண்ட இத்தமிழ் சமூகம் இதையும் சகித்துக் கொள்ளும் என் நம்புவோமாக...

சமீபத்தில் வெளிவந்த எந்த படத்தைப் பார்த்தாலும் அதில் சூரி கண்டிப்பாக இருக்கிறார். அவர் காமெடியனா அல்லது ஹீரோவின் தோழனா என்பதை டைட்டிலிலே போட்டுவிடுவது நல்லது. பரோட்டா காமெடிக்குப் பிறகு சூரி நடித்த ஒரு காமடியாவது நினைவுக்கு வருகிறதா..?

சூரி, இமான் அண்ணாச்சி, பாண்டி கூட்டணியில் இவர்கள் அடிக்கும் லூட்டி தலைவலியின் உச்சம். ஒருவரையொருவர் மாற்றி மாற்றி அடித்துக் கொள்கிறார்கள். கேட்டால் காமெடியாம். விஷால் -சூரி வரும் அநேக காட்சிகளில் சூரி விஷாலிடம் அடிவாங்குகிறார். அதுவும்  காமெடியாம். ஆண்டவா இந்த இமான் அண்ணாச்சியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். இந்த சூ(ர )ரி மொக்கையிலிருந்து  தமிழ்சினிமாவைக் காப்பாற்று.

காதலித்து ஓட முயன்ற ஸ்ருதியின் தோழியாக வரும் பெண்ணைப் பார்த்து தே..தே...தேவதைன்னு சொல்ல வந்தேன் என்பார் சூரி. அதாவது காதலித்து தான் விரும்பியவருடன் ஓடிப் போக நினைப்பவள் தேவடியாளா...? என்ன கொடுமை சார் இது..  இதெல்லாம் ஒரு காமெடியா..?

ஆனால் இதையெல்லாம் மிஞ்சுகிற ஒரு காமெடிக் காட்சி இருக்கிறது. ஸ்ருதியின் தோழி தன்  காதலருடன் ஓடிப்போவாள் . அவர்களை மறித்து விஷால் அட்வைஸ் செய்வார். நாலே டயலாக்தான். ஓடிப்போக எத்தனித்தவர்கள் மனம் திருந்தி மன்னிப்புகேட்டு பிரிந்துசென்றுவிடுவார்கள். இந்த அற்புதத்தை திரையில் கண்டுகளியுங்கள்.

தேவதை பாடல் மட்டும் பரவாயில்லை. வழக்கம்  போல ஹரியின் இந்தப் படத்திலும் பின்னணி இசையை, கார் கிரீச்சிட்டு பறக்கும் சத்தமும் உலோகங்கள் ஒன்றோடு ஓன்று மோதும் சத்தமும் , பன்ச் டயலாக்கும் மொத்தமாக விழுங்கி விடுகிறது.

ஹரி படத்தில் பிரேமுக்கு ஒரு வில்லன் என புதிது புதிதாக முளைப்பார்கள். அத்தனை போரையும் ஹீரோ ஓய்வில்லாமல் புரட்டி எடுப்பார்.நல்லவேளை இதில் ஒரே வில்லன்தான்(முகேஷ் திவாரி) . அதற்காக படம் முழுதும் அவர்  ஒருவரையே அடித்து துவைத்தெடுப்பது பாவமாக இல்லையா..?

அதுசரி.. இந்தப் படத்தில் சத்யராஜ் எதற்கு...?  காவல்துறை அதிகாரியாக அறிமுகமாகும் போது அமர்க்களமாக  இருக்கிறது. அத்தோடு காணாமல் போகிறார். கடைசியில் வருகிறார். விசாலை அடிக்கவிட்டு வேடிக்கை பார்க்கிறார். இறுதியில் வில்லனை விஷால் கொன்றுவிட, கடமை தவறாத காவல்துறை அதிகாரியான அவர் தன் துப்பாக்கியால் ஏற்கனவே இறந்த வில்லனை சுட்டுவிட்டு ஹீரோவை தப்பிக்க விடுகிறார்.(யோவ் இத இன்னும் எத்தனை படத்திலய்யா காண்பிப்பீங்க..)

இன்னொரு தாமிரபரணியாக இருக்கும் என்று நினைத்து போனால் இன்னொரு தோரணையாக..ம்ஹும் ..அந்த அளவுக்கு  கூட இல்லை.