முகமூடி கொடுத்த அனுபவம் அவரின் அடுத்தப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அவ்வளவாக இல்லை.திரும்பிப் போக மனமில்லாமல், ' சரி.. ஓநாயும் நாய்க்குட்டியும் ஒன்னு குடுங்க' என பணத்தை நீட்ட,அவர் சற்று முறைத்து விட்டு டிக்கெட் கொடுத்தார்.திரும்பியபோது தான் கவனித்தேன்.அது 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்'. அடக்கொடுமையே இந்த லட்சனத்தில் விமர்சனம் எல்லாம் எழுதிட்டு இருக்கோமே. சரி பரவாயில்ல.. இரண்டு குட்டிகளும் என் செல்லப்பிராணிதான் என சமாதானம் படுத்திக்கொண்டு அரங்கத்தினுள் நுழைந்தேன். அங்கொன்றும் இங்கொன்றுமாய் தலைகள் தெரிய, கூட்டினால் இரட்டை இலக்கத்தைக்கூட தொடவில்லை.
சிங்கையில் இது ஒன்றும் புதிய அனுபவமில்லை என்பதால் வெளியில் சென்று பாப்கார்ன்,கோக் வாங்கிக் கொண்டு ஆற ஆமர வந்து இருக்கையில் ஐக்கியமானேன். முன்னணி இசை கோர்ப்பு இளையராஜா என்கிற 'டைட்டில் கார்டு கவுரவம்' இசைஞானிக்கு கொடுக்கப்பட்ட போதே, படத்தில் ராஜாவின் ராஜ்ஜியம் கொடிகட்டிப் பறக்கும் என்கிற நம்பிக்கைக்கீற்று திடீர் உற்சாகத்தைக் கொடுத்தது.அதற்காக ஒவ்வொரு பிரேமிலும் இப்படி அடித்து விளாசுவார் என எதிர்பார்க்கவில்லை. ராஜா சோலோவாக பின்னணியில் கோலோச்சும் இது போன்ற படங்களைப் பார்த்து எவ்வளவு நாளாகிவிட்டது.
துல்லியமான திரைக்கதை, அலட்டலில்லாத நடிப்பு, குழப்பமில்லாத காட்சியமைப்பு, கதைசொல்லும் புதிய யுக்தி, இவை எல்லாவற்றுக்கும் உயிர் கொடுக்கும் பின்னணி இசை... இப்படியொரு ஒருங்கிணைப்போடு ஒரு படைப்பு இருந்தால் எந்த ரசிகனைத்தான் அறிதுயில் நிலையை அடையச்செய்யாது..? இரண்டரை மணிநேரத்தில் மொத்தமாக வசப்பட்டுப் போனேன். சமீப காலங்களில் எந்தப்படமும் இந்தளவு தாக்கத்தை என்னுள் ஏற்படுத்தவில்லை.
விமர்சனம் எழுதலாம் என உட்கார்ந்தால்,வார்த்தைகள் வசப்படவில்லை. ஒருவேளை இந்தப் படைப்புக்கு விமர்சனம் எழுதும் அளவுக்கு நீ என்ன பெரிய அப்பாடக்கரா என என் மனசாட்சியே என்னைக் கேள்வி கேட்டு குடைந்தது கூட காரணமாக இருக்கலாம்.அந்தத் தாக்கத்திலிருந்து மீண்டுவரும் வேளையில், மொக்கைப் படங்களை வஞ்சகமில்லாமல் கழுவி ஊற்றும்போது சமகாலத்திய தமிழ் சினிமாவில் அரிதாக வரும் இதுபோன்ற நல்ல படைப்புகளைப் பாராட்டி இரண்டு வார்த்தைகளாவது எழுதவில்லை என்றால் என் விமர்சனப்பார்வை சமநிலை அடையாது என்கிற சமாதானத்தை மனசாட்சி ஓரளவு ஏற்றுக்கொண்டது.
இன்னும் அந்த கதை சொல்லும் காட்சி கண் முன்னே விஷுவலாக விரிந்துக்கொண்டே இருக்கிறது. அது வெறுமனே கதை சொல்லும் காட்சி என்கிற வரையறைக்குள் அடக்கிவிட முடியாது. உலக சினிமா அறிவு எனக்கு அவ்வளவாக கிடையாது. ஆனால் என் சிற்றறிவுக்கு எட்டிய வகையில் தமிழ் சினிமாவில் இது வியக்கத்தக்க முயற்சி.
சமகாலத்திய தமிழ் சினிமாவில் பொதுவாகவே நாயகன், ஆரம்பத்தில் கொடூரமானவனாகவோ அல்லது சைக்கோ மாதிரியாகவோ அல்லது சிறைக் கைதியாகவோ அல்லது மனநிலை பாதிக்கப்பட்டவனாகவோ காண்பிக்கப்பட்டால் கண்டிப்பாக அவனுக்கு ஒரு 'கலர்ஃபுல்' பிளாஸ்பேக் இருக்கும். இதிலும் அப்படித்தான் எதிர்பார்த்தேன். "அவர் யார் தெரியுமா..அவர் எப்படி வாழ்ந்தார் தெரியுமா..." " பூஞ்சோலைனு ஒரு கிராமம்.. வறுமைனா என்னானு தெரியாது.." " எனக்கு இன்னொரு பேரு இருக்கு.." இது மாதிரி வழக்கமான வசனத்தோடு எப்போ பிளாஸ்பேக் ஆரம்பிக்கப் போகுதோ என்றுதான் நினைத்திருந்தேன்.
அதிலும் தொடர்ந்து வுல்ஃப்-ஐ சிக்கலில் மாட்டிவிடும் ஸ்ரீயை எதுவுமே செய்யாமல் மன்னித்துவிடுவது, பிளாஸ்பேக்கை யாரிடமாவது சொல்லவேண்டும் என்கிற வழமையான தமிழ்சினிமா கட்டமைத்து வைத்திருக்கும் பிம்பத்தை மிஷ்கினும் பிரதிபலிக்கிறாரோ என்கிற என் சந்தேகம் கடைசியில் உடைபட்டுப் போனது. ஒவ்வொரு தடவையும் ஸ்ரீ மூலம் தொல்லைகள் வர, எப்படியும் இவரிடம்தான் பிளாஸ்பேக்கை அவிழ்க்கப்போகிறார்...அதை இப்பவே சொல்லித் தொலையவேண்டியதுதானே என்கிற நம் ஆதங்கம், அப்படி ஒரு அவசியமே இல்லை என்பதை அந்தக் கதைமூலம் உணர்ந்து அடங்கிவிடுகிறது
கிளைமாக்சுக்கு நெருக்கமாக வரும் அந்த 'ஓநாய்- ஆட்டுக்குட்டி' கதைக்கு முன், வுல்ஃப் ஆக வரும் மிஸ்கின் மொத்தமாக முப்பது வார்த்தைகள் கூட பேசியிருக்க மாட்டார். நம்மை அப்படியொரு எதிர்பார்ப்புக்குள்ளாக்கி அந்தக் 'குட்டிக்கதை'யில் நம்மை மொத்தமாக லயிக்க வைத்தது மிஸ்கினின் மாபெரும் வெற்றி.
"எட்வர்டு அண்ணா நீங்களாவது ஒரு கதை சொல்லுங்களேன் ...."
"ஒரு ஊர்ல ஒரு ஓநாய் இருந்துச்சாம். அந்த ஓநாய் ஒரு பெரிய கரடிகிட்ட வேலை செஞ்சிச்சாம். கரடிக்கு பிடிக்காத நரியை எல்லாம் ஓநாய் காட்ல போயி வேட்டையாடுமாம். அப்போ ஒரு நாள்...., ஒரு நரியை வேட்டையாடும் போது ஒரு ஆட்டுக்குட்டி குறுக்க வந்திச்சி. ஓநாய் தெரியாம அந்த ஆட்டுக்குட்டியை கொன்னுடிச்சி. அந்த ஆட்டுக்குட்டிய கொன்னதால என்ன பண்றதுனு தெரியாம அந்த ஆட்டுக்குட்டி வீட்டுக்கு அந்த ஓநாய் போச்சாம். அந்த ஆட்டுக்குட்டி வீட்ல ஒரு அப்பா ஆடும், ஒரு அம்மா ஆடும், ஒரு குட்டி தங்கச்சி ஆடும் இருந்திச்சாம். அந்த மூணு பேருக்கும் கண்ணு தெரியாதாம். அவுங்கள பாத்து ரொம்ப கஷ்டப்பட்டு தன் பழைய வேலையெல்லாம் விட்டுட்டு அந்த குடும்பத்தோடயே அந்த ஓநாய் தங்கி அவுங்கள ரொம்ப பத்திரமா பாத்துகிச்சாம் .
வேட்டைக்கு வராத ஓநாயை தேடி ஒரு நாள் கரடி அந்த ஆட்டுக்குட்டி வீட்டுக்கு வந்திச்சாம். 'வேட்டைக்கு வா.. வேட்டைக்குவா...' னு கூப்பிட, நான் வரமாட்டேன்னு அந்த ஓநாய் சொல்ல, கோபமான அந்த கரடி அந்த அப்பா, அம்மா ஆட்டுக்குட்டிங்ககிட்ட உங்க ஆட்டுக்குட்டிய இந்த ஓநாய்தான் கொன்னிச்சுனு சொன்னுச்சாம்.அதை கேட்டு அந்த ஓநாய், ஒரு மூலையில் உட்கார்ந்து ஒடஞ்சி அழுதுச்சாம். அப்போ அந்த அம்மா ஆடும், அப்பா ஆடும் அந்த ஓநாய் பக்கத்தில வந்து ' நீ அந்த ஆட்டுக்குட்டிய வேணும்னு கொன்னுருக்க மாட்டேடா கண்ணா. அழாதடா..'னு சொல்லி கட்டிப்புடுச்சி நீதான்டா அந்த ஆட்டுக்குட்டினு சொல்லிச்சாம்.
அந்த ஓநாய் மூணு போரையும் கூட்டிட்டு வேற இடத்துக்கு போச்சாம். போற இடத்துக்கெல்லாம் அந்த கரடி ஓநாயை தேடிவந்து 'வேட்டைக்கு வா... வேட்டைக்கு வா...' னு சொல்லிச்சாம். வராட்டினா, அந்த அம்மா,அந்த அப்பா,அந்த குட்டி ஆடுகளை கொன்னுடுவேன்னு பயமுடிச்சிதாம். என்ன பண்றதுன்னு தெரியாம அந்த ஓநாய் அந்த கரடியை கடிச்சிபோட்டுடுச்சாம். அப்பறம் அந்த மூணு பேரையும் கூட்டிட்டு அந்த ஓநாய் எங்கெங்கோ போச்சாம்..
காட்டை காவல் காக்கிற புலிகள் எல்லாம் அந்த ஓநாயை தேடித்தேடி அலைஞ்சிச்சாம். எப்படியோ ஓநாய் இருக்கிற இடத்தைத் தேடிக் கண்டுபுடிச்சி அத கொல்ல வர, திரும்பவும் ஓநாய் ஓட, அதுகூட ஓட முடியாம அந்த அப்பா ஆடும்,அம்மா ஆடும், குட்டி ஆடும் ஒரு பத்திரமான இடத்தில ஒளிச்சி வச்சிட்டு அந்த ஓநாய் ஓடிச்சாம். ஆனா ஒரு புலி அந்த ஓநாயை கடிச்சி போட, அந்த ஓநாய் தப்பிச்சி நொண்டி நடத்து போயி ஒரு மூலையில கீழ விழுந்திடுச்சாம்...
அப்போ இன்னொரு குட்டி ஆடு வந்து அந்த ஓநாயை வீட்டுக்கு கூட்டிட்டு போயி காயத்துக்கு மருந்து போட்டுச்சாம். ஆனா மறுநாள் காலையில அந்த ஓநாய், அப்பா,அம்மா,குட்டியைத் தேடி போச்சாம். அவங்கள கூட்டிட்டு ஓடறதுக்குள்ள, அந்தக் கரடி... அந்தக் காயம்பட்ட வெறிப்புடிச்ச கரடி அவுங்க எல்லோரையும் கொல்றதுக்கு தொரத்தி தொரத்தி வர, இன்னொரு பக்கம் புலிகளெல்லாம் தொரத்த, இப்போ ஒவ்வொரு இடமா ஓடிகிட்டு இருக்காம்.
எங்க ஓடுமோ....எப்படி ஓடுமோ....???? "
இந்த ஒரு காட்சிக்காகவே என் வாழ்நாளில் ஒரு முறையேனும் மிஷ்கினை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் கட்டிப்பிடித்து கதறவேண்டும் போல இருக்கிறது.

இந்தப்படத்தில் குறிப்பிட்டு சொல்ல நிறைய காட்சிகள் இருக்கிறது.ஏற்கனவே பாராட்டி நிறைய விமர்சனங்கள் வந்துள்ளதால் இந்த ஒரு காட்சியை மட்டும் குறிப்பிட்டுள்ளேன்.
படத்தில் சில இடங்களில் தர்க்கப்பிழைகள் இருக்கலாம். இது போன்ற சிறந்த கலைப்படைப்புகளில் அதை மட்டும் விமர்சனத்திற்கு எடுத்துக்கொள்வது நாகரிகமற்றது.
இணையத்தில் சில இலக்கிய ஓநாய்கள் திரிந்துக்கொண்டிருக்கிறது. கூடவே சில ஊடக நரிகளும். இவர்கள் சாமானிய மக்களின் சராசரிப் பார்வையிலிருந்து விலகி நிற்பது போன்ற பிம்பத்தை கட்டமைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு படம் மொக்கை என்று உலகமே கழுவி ஊற்றும். ஆனால் அதுதான் தமிழின் ஆகச்சிறந்த படம் என்று குருட்டு வாதம் செய்து மற்றவர்களின் பார்வையை தன் பக்கம் திருப்புவார்கள். நல்ல படம் என்று நிறைய பேர் பாராட்டிவிட்டால் போதும், அதுதான் தமிழ் சினிமாவின் அவமானச்சின்னம் என்கிற ரீதியில் விமர்சனத்தை அடுக்குவார்கள்.
ஒரு விஷயம் கவனிக்கலாம். படம் வெளிவந்த உடனையே விமர்சனம் செய்ய மாட்டார்கள். படத்திற்கு பொதுவான விமர்சனம் எப்படி இருக்கு என்று சில நாட்கள் நோட்டம் விடுவார்கள். பிறகு, "இன்னிக்குதான் அந்த படம் பார்த்தேன்.இப்படி ஒரு குப்பையை எப்படித்தான் இவர்கள் கொண்டாடுகிறார்களோ தெரியில..." என்றவாறு விமர்சனத்தை ஆரம்பிப்பார்கள். அதுவும் சொந்தமா காசு கொடுத்து தியேட்டர்ல பார்க்காம திருட்டு விசிடியிலோ அல்லது இணையத்திலேயோ பார்த்துவிட்டு,'அந்த காட்சியில லைட்டிங் சரியில்ல, அவர் பேசுற வசனம் தெளிவாவே இல்ல... படம் ஒரே இருட்டா இருக்கு.. அப்படி இப்படினு அளந்து விடுவதைப் பார்க்கும் போது இந்த ஓநாய்களையும் நரிகளையும் எந்த புலியாவது வந்து கடிச்சி வைக்கக் கூடாதா என தோன்றும்.

















