Sunday 30 December 2012

2012 ன் அதிரி புதிரி விருதுகள்...

ருடக் கடைசியில் எல்லோரும் ' டாப் 10 ' போட்டுக் கலக்க,நம்ம லெவலுக்கு நம்மால் முடிந்த 2012 -க்கான விருதுகள்.
 ===========================================================================================
" நடுவுல கொஞ்சம் சத்தத்த காணோம்." விருது.

கடந்த ஆட்சியில் கலைஞருக்கு எதிராக முஷ்டியை  முறுக்கி,காலை பரப்பி,தலையை சிலிப்பி வீராவேசமாக நீட்டி முழங்கிய தமிழ்நாட்டின் ஒரே செந்தம்ப்ளர் சீமானை கொஞ்ச நாளாகவே காணல.இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என ரைமிங்கா பேசியவரை யாரோ சைலண்ட் மோடில் போட்டுவிட்டதால் இவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
===========================================================================================
  " கும்தக்கடி கும்மாவா..இன்னோவானா சும்மாவா." விருது.

வீடுவரை உறவு.. வீதி வரை மனைவி... காடுவரை பிள்ளை.. கடைசிவரை  மதிமுக..என நெஞ்சை நிமிர்த்திப் பாடிய நாஞ்சில் சம்பத்தை,விதி இன்னோவா ரூபத்தில் தாக்கி,இனி காலம் முழுவதும் மூங்கில் சொம்பத்தாக பர்பாமான்ஸ் பண்ணப் பணித்ததால் இந்த விருது. 
===========================================================================================
"எவனாயிருந்தாலும் வெட்டுவேன்..எவனாயிருந்தாலும்  வெட்டுவேன்.."விருது.
 

' நம்ம இனத்துப் பெண்ணை எவன் காதலிச்சாலும் வெட்டுங்க...' என வடதமிழக மக்கள் அமைதியாக வாழ அறிவுரை சொன்ன பாமகவின் தலையாரி மோடுமுட்டி ச்சீ.. காடுவெட்டி குருவுக்கு இந்த விருது. 

===========================================================================================
' சம்முவம்... உட்ரா வண்டிய ' விருது. 

ஊருக்குள்ள எது நடந்தாலும் அன்னைக்கு சாயந்திரமே அறச்சீற்றம் அடைந்து, ஏதாவது ஒரு டிவி ஸ்டேசனுக்கு வண்டிய உட்டு " நாம் என்ன மாதிரியான சமூக கலாச்சார கட்டமைப்பு உடைய சமுதாய சமதர்ம பொதுவெளியின்  கலாச்சார மரபின் பின்னணியற்ற சமூகப் பண்பாட்டுப் பற்றிய பொதுப்புத்தி இல்லாத சமூகத்தில் வாழ்ந்தாலும் அதன் பின்புலம் என்னவென்றே அறியாத சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை நமது அடுத்த தலைமுறையின் கலாச்சார சமுதாய சமதர்ம...........  "  என ஓயாமல் வகுப்பெடுத்த எழுத்தாளர் மனுஷ்ய புத்திரனுக்கு இந்த விருது.
===========================================================================================


" ட்வீட் போட்டா சின்னாத்தா.. எகிறி குதிச்சா மங்காத்தா..." விருது.

 
"நான் ஆபாசத்தின் சிறப்பு... பாயாசத்தின் பருப்பு.." போன்ற எழுச்சிமிக்க சமூகப் புரட்சி பாடல்களைப் பாடி இளைய சமுதாயத்தை உசுப்பேற்றி, இணைய சுதந்திரத்தை காவு வாங்கிய கலியுக காளிகாம்பாளுக்கு இந்த விருது. 
===========================================================================================

"அது போன மாசம்..இது இந்த மாசம்" விருது...

கூடங்குளம் அணு மின் சக்தியைவிட இவர் விடும் அறிக்கை பலமடங்கு பீதியைக் கிளப்பக் கூடியது." இன்னும் பதினைந்து நாளில்..." என ஓவ்வொரு மாதமும் தன் ஏழாம் அறிவின் மூலம் கணித்து இவர் அடிக்கும் பன்ச் டயலாக் சமகால தமிழ் சினிமா கூட கண்டிராது.எவர் தடுத்தாலும் ஏர்போர்ட் வாசலில் உளரும் உன்னத கொள்கையைக் கைவிடாத ஓட்டவாய் நாராயணசாமிக்கு இந்த விருது.
===========================================================================================
"ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிருக்குனும்டா." விருது.

கடந்த ஆட்சிக்காலத்தில்,கூட்டணியில் இருந்தாலும் திமுகவை வம்படியாக இழுத்து கழுவிக் கழுவி ஊத்தி அவர்களின் பொறுமையின் எல்லைக்கே சென்று எள்ளி நகையாடிவர்...அடுத்தப் பாராளுமன்ற தேர்தலுக்காக தற்போது பம்முவதால் இந்த விருது.

===========================================================================================
"மல்டிபிள் டிஸ்ஆர்டர் பர்சனாலிட்டி.." விருது..

' பெட்ரோல் விலையைக் குறைக்காவிட்டால் கூட்டணியை விட்டு வெளியோருவோம்' என மூக்கு புடைத்தவர் அடுத்த இரண்டு மணிநேரத்தில் 'நான் அப்படி சொல்லவே
ல்லை' என்பதில் தொடங்கி,'கலாம் என்றால் கலகம் என்று பொருள்....','டெசோ மாநாட்டில் தனி ஈழம் கோரப்படாது...','வால் மார்ட்டுக்கு மாநிலத்தில் எதிர்ப்பு ஆனால் மத்தியில் ஆதரவு' என இந்த வருட இறுதி வரை அந்தர்பல்டி அடித்து இந்த ஆண்டுக்கான "மல்டிபிள் டிஸ்ஆர்டர் பர்சனாலிட்டி.."க்கான விருதை போட்டியின்றித் தட்டிச்செல்கிறார் தலைவர்.
===========================================================================================
" ஒரு கல் ஒரு களவாணி.." விருது...


மதுரையில் வெற்றிக்கொடிகட்டிய ரியல் படையப்பாவின் கிரானைட் குவாரியைத் தோண்ட தோண்ட கிளம்பிய மோசடி பூதத்தால்,' படையப்பா.... ஜெயிலுக்கு நடையப்பா' ஆனாதால் இந்த விருது.
===========================================================================================

' டெங்கு கொசு ' விருது.

கடந்த கால சாதிய வன்முறைகளையும் பகையுணர்வையும் மறந்து சகோதர மனப்பான்மையுடன் பழகும் இரண்டு சமூகத்தினரிடையே மீண்டும் சாதிவெறியைத்தூண்டி அந்தத்தீயில் அரசியல் குளிர் காயத்துடிக்கும் தமிழ்க்குடி தாங்கி(!?) அய்யாவுக்கு இந்த விருது.சாதிக்கு எதிராக(?!) இவர் விட்ட ஒவ்வொரு அறிக்கையும் டெங்கு காய்ச்சலைவிட கொடூரப் பீதியைக் கிளப்பியதுடன் "இந்தக் கொசுத்தொல்லை தாங்க முடியில நாராயணா.." என மக்கள் புலம்புவதாலும் இந்த வருடத்திற்கான ' டெங்கு கொசு ' விருது ஐயாவுக்கு அளிக்கப்படுகிறது. 

===========================================================================================

" காதலை சிதைப்பது எப்படி...? " விருது.

80-90 களில் வந்த தமிழ் சினிமா வில்லன்களை அப்படியே அச்சு அசலாக நம் கண் முன் நிறுத்தினால் எப்படியிருக்கும்..? காதலுக்கு எதிராக இவர்கள் கடைசியாகக் கொளுத்திப் போட்ட அதிர்ச்சிப் பட்டாசு
"தமிழர் பண்பாட்டில் காதலே இல்லை" . போகுற போக்கைப் பார்த்தால் "காதல்" என்ற சொல்லை தமிழ் அகராதியிலிருந்தே நீக்கவேண்டும் என போராட்டம் நடத்தினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.இந்த விருதை இருவரும் பகிர்ந்துக் கொள்கிறார்கள்....   
===========================================================================================
" ஒஸ்தி "  விருது.

தருமபுரி சம்பவத்தால் வடதமிழக மக்களுக்கிடையே கலவர பீதி தொற்றியுள்ள சிக்கலான
சூழலில்,எரியிற தீயில் எண்ணையை ஊற்றுவது போல் ஊர் ஊராகச் சென்று தலித்துகளைப் பற்றி தரக்குறைவாகப் பேசித் தன் சமூகத்தினரிடையே சாதிய வன்மத்தை உருவாக்கும் முயற்சியில் ராமதாஸ் ஈடுபட்டிருந்தாலும்,எக்காரணம் கொண்டும் தன் பின்னால் உள்ள இளைஞர்கள் சாதிய வன்மம் கொண்டுவிடக் கூடாது என்ற நோக்கில் மிகவும் பக்குவமாகவும்,வார்த்தைகளை கவனமாகவும் பேசும் திருமாவுக்கு இந்த விருது.
===========================================================================================

 "ஆத்தா அண்டா வாங்கினா..குண்டா வாங்கினா..ஆத்துக்கு ஒரு 'சொம்பு' வாங்கல...அதுக்குப் பதிலாத்தானே..." விருது.

இந்த விருதுக்கு கடுமையானப் போட்டி இருந்த நிலையில் சொம்பு தூக்கிய விதத்திலும் அதிலுள்ள சாராம்ச சமாச்சார விகிதத்தையும் கணக்கில் கொண்டு மூன்று பேருக்கு இந்த விருது பகிர்ந்தளிக்கப்படுகிறது.நூலிழையில் இந்த விருதைத் தவறவிட்டவர் மூங்கில் சொம்பத்.. :-((

===========================================================================================
' சாருலதா ' விருது.

"சாட்டையை சுழற்றிவிட்டார் அம்மா..உயிர்த்தோழிக்கு வைத்துவிட்டார் உலை.தோட்டத்தை விட்டே துரத்தப்பட்டது மன்னார்குடி மாபியா கும்பல்.." என ரத்தத்தின் ரத்தங்கள் உற்சாகத் தாண்டவமாடி இனிப்புப் பரிமாறிக் கொண்ட சந்தோசம் கொஞ்ச நாட்கள் கூட நீடிக்கவில்லை.வழக்கம் போலவே இதுவும் " சும்மா லுலுலா.."தான் என நிருபித்த உயிர்த்தோழிகளுக்கு இந்த விருது.

===========================================================================================
"அழகிரிசாமியின் குதிரை..." விருது.

வழக்குகளுக்கு அஞ்சி அப்பா எட்டடி பாய்ந்தால் மகன் எண்பது அடி பாய வேண்டாமா..? அஞ்சாநெஞ்சனின் மகன் என்ற ஒரே தகுதியை மட்டும் வைத்துக் கொண்டு மதுரையில் குட்டி ராஜ்ஜியமே நடத்திய இந்த சின்ன பி.ஆர்.பி, ''விண்ணைத்தாண்டி' ஒளிந்தது ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் கலந்த  'தமிழ்படம்' .
===========================================================================================
" ஊத்திக்கினு கடிச்சிக்கவா...கடிச்சிக்கனு ஊத்திக்கவா.." விருது.

வருட ஆரம்பத்திலேயே சட்டமன்றத்தில் பதினெட்டுப் பட்டி ஜனங்கள் முன்னிலையில், கண்கள் சிவக்க நாக்கு மேல பல்லைப்போட்டு கடிச்ச இந்த சக்கரைக் கவுண்டர்," நீயாட சம்பளம் கொடுக்கிற... ங்கொயால.." என்று ஏர்போட்டில் முஷ்டியை முறுக்கிய சம்பவங்கள் வரை கேப்டன் எப்போ எந்த மூடில்(?!) இருப்பார் என அவருக்கே தெரியாததால் இந்த விருது.

===========================================================================================
" இது ஒன்னும் அவ்ளோ பெரிய காமெடி இல்லையே.."விருது.

செம காமெடியான பதிவு என நினைத்துக்கொண்டு இந்த வருடத்தில் எழுதிய எல்லா பதிவுகளும் கடைசியில் படு மொக்கையானதால்,இந்த விருதை போட்டியின்றித் தட்டிச்செல்பவர் நானேதான்...!


வணக்கங்களுடன்...
மணிமாறன்  

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Wednesday 26 December 2012

சச்சின்...கிரிக்கெட் சாம்ராஜ்யத்தின் பேரரசன்..!



மனம் ஒப்புக்கொள்ளவே மறுக்கிறது,சச்சின் இல்லாத நம் இந்திய கிரிக்கெட் அணியை நினைத்துப் பார்க்க  ...!

சச்சின் டெண்டுல்கர்...சுமார் இருபது ஆண்டுகளுக்கு மேலாக உலக கிரிக்கெட் ரசிகர்களால் உச்சரிக்கப்பட்ட மந்திரச்சொல்.....
கிரிக்கெட் என்ற உலகமகா சாம்ராஜ்யத்தின் பேரரசன்.. பறந்து விரிந்த கிரிக்கெட் என்ற பிரபஞ்ச வான்வெளியின்  சூரியன்.... இப்படி உலகத்தின் ஒட்டுமொத்த சக்திகளோடு நெஞ்சை நிமிர்த்தி ஒப்பிடலாம் அந்தக் கிரிக்கெட் கடவுளை..!.இதை மறுதலித்துக் கூட பேச முடியாது.ஏனென்றால் சச்சினின் கடந்த கால சாதனைகள் அப்படி...

சச்சினை சில நேரங்களில் நான் இசைஞானியோடு ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்வதுண்டு.உயரத்திலும் தொழில் மீது கொண்ட அர்ப்பணிப்பிலும் அல்ல.அசர வைக்கும் சாதனைகளில்.

 பதினைந்து வருடங்களுக்கு மேல் இசைத்துறையில் எப்படி ஒரு அசைக்க முடியாத சக்தியாக இசைஞானி இருந்தாரோ அதே போலத்தான் கிரிக்கெட்டில் சச்சின். பிற மொழிப்பாடல்களில் லயித்துப் போயிருந்த தமிழ் ரசிகர்களை,மொத்தமாக தன் பக்கம் ஈர்த்து தமிழ் பாடல்களை ரசிக்க வைத்தவர் இசைஞானி. அதே போலத்தான் சச்சினும்.சச்சின் கிரிக்கெட்டில் தன் கணக்கைத் தொடங்குவதற்கு முன் வரை இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் ஹீரோ யார் என யோசித்துப் பார்த்தால் விவியன் ரிச்சர்ட்,டொனால்ட் பிராட்மேன், இம்ரான்கான், கவாஸ்கர், ரவிஷாஸ்திரி ..என பட்டியல் நீளும்.ஆனால் அத்தனை ரசிகர்களையும் தனது ' பேட்டிங் ஸ்டைலால்'  தன் பக்கம் ஈர்த்துக் கொண்டவர் சச்சின் என்றால் அது மிகையல்ல.

மியூசிகல் கடைகளின் போர்டுகளில் பல ஆண்டுகளாக இசைஞானியின் படம் மட்டுமே இடம்பெற்ற சாதனையைப் போல்,ஒரு காலத்தில் பள்ளி நோட்டு புத்தகங்களின் அட்டையில் லாரா,கபில்தேவ் படங்களுடன் கடைகளில் விற்ற காலம் போய்,மொத்தமாக சச்சின் படம் மட்டுமே இடம்பிடித்ததும் ஒரு சாதனையே.

இருவருமே பந்தயக் குதிரைகள்தான்.இளையராஜா கோலேச்சியிருந்த காலகட்டத்தில் அவரை முந்த பல குதிரைகள் களமிறக்கப்பட்டது.இன்னும் பத்தே படங்களில் இளையராஜாவை வீழ்த்திக் காட்டுகிறேன் என சபதமிட்டார் சந்திரபோஸ்.சொன்ன படியே பத்துப் படங்களின் பாடல்களும் ஹிட்டானது.ஆனால் அதற்குள் இளையாராஜா ஐம்பது படங்களை சூப்பர் டூப்பர் ஹிட்டாக்கியிருந்தார்.பல பிரபலமான இயக்குனர்கள், வெளி மாநில இசையமைப்பாளர்களைக் கூட களமிறக்கிப் பார்த்தார்கள்.அவர்கள் வந்த சுவடுகள் கூட இல்லாமல் போனார்கள்... 

ச்சினின் கிரிக்கெட் பயணமும் அப்படித்தான்.ஒரு நாள் போட்டிகளில் சச்சின் தனது சதங்களின் எண்ணிக்கையில் இரட்டை இலக்கத்தைத் தொட்டபோது,அவருக்கு வெகு அருகில் பாகிஸ்தானின் சயீத் அன்வர் வந்துகொண்டிருந்தார்.எங்கே தொட்டுவிடுவாரோ என்ற அச்சம்,அடுத்தடுத்த அவரின் 'அவுட் ஆப் .'.பார்ம்'-னால் சிறிது நாட்களிலேயோ தகர்ந்து போனது.அதற்கடுத்து கங்குலி,மார்க் வாவ்,ஜெயசூர்யா,லாரா என சச்சினைத் துரத்திய ஜாம்பவான்கள் ஏராளம்.ஆனால் எல்லோருமே அவரைத் துரத்த முடிந்ததேத் தவிர,தொடக்கூடமுடியவில்லை என்பதுதான் நிதர்சனம். கடைசியாக எதிர் பார்க்கப்பட்ட ரிக்கி பாண்டிங்கும் சமீபத்தில் தன் ஓய்வை அறிவித்து விட்டார். இனி சச்சினின் சாதனைகள் அனைத்துமே முறியடிக்கப்படாமல் கிரிக்கெட் வரலாற்றின் கல்வெட்டுகளில் செதுக்கப்படப் போகின்றது...

கட்டைப்போடும் டெஸ்ட் மேட்சிலிருந்து வேறு ஒரு பரிணாமமாக ஒரு நாள் போட்டிகள் தோன்றியபோது, டெஸ்ட் போட்டிகளிலிருந்த அதே பேட்டிங் முறையையே பின்பற்றி நிறைய பேட்ஸ்மேன்கள் மந்தமாக ஆடினார்கள்.ஒருநாள் போட்டிகளை விறுவிறுப்பாக்கிய வீரர்களில் சச்சின் மிக முக்கியமானவர்.முதல் பதினைந்து ஓவர்களில் அடித்து ஆடும் முறையை கையாண்டது முதலில் சச்சின்தான் என்று சொல்லப்படுகிறது.பிறகுதான் ஜெயசூர்யாவும்,அப்ரிடியும் மற்றவர்களும்.

உலகில் பவுலிங்கில் பல பேருக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த நிறைய பவுலர்கள் சச்சினிடம் டவுசர் கிழிந்துதான் போனார்கள்.ஷேர்ன் வார்னேயிடமும், முத்தையா முரளிதரனிடமும் கேட்டால் ரூம் போட்டு விலாவாரியாக விளக்குவார்கள். 

கிராமங்களில் முன்பெல்லாம் கபடி விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள்  தற்போது அவர்களின் வசதிற்கேற்ப கிடைத்த பொருள்களை பேட்டுகளாக்கி,வயல்வெளிகளை மைதானமாக்கி கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.அவர்கள் ஒவ்வொருவருக்குமே சச்சின்தான் ' ரோல் மாடல் ' என்பதை மறுக்க முடியுமா.?அவர்களின் இந்த மாற்றத்திற்கு சச்சினும் ஒரு காரணம் என்பதை ஒத்
துக்கொள்ளத்தானே வேண்டும். 

சச்சின் சதமடித்த நூறு போட்டிகளும்.

எல்லா விளையாட்டு வீரர்களுக்குமே ஒய்வு என்பது தவிர்க்க முடியாத ஒன்றுதான்.கால ஓட்டத்தில் கடவுள்,சச்சினுக்கு மட்டும் விலக்கு அளிப்பாரா என்ன...?ஆனால் சமீப காலத்தில் அவரின் ரன் குவிப்பில் ஏற்பட்ட சறுக்கள் கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டது. நன்றாக விளையாடும்போது தலைமேல் தூக்கிவைத்து ஆடுவதும் சரியாக விளையாடவில்லை என்றால் கடுமையாக விமர்சிப்பதும், இந்திய ரசிகர்கள் கிரிக்கெட் மீது வைத்திருக்கும் ஆர்வத்தின் வெளிப்பாடுதானே தவிர பக்குவமற்றத் தன்மை அல்ல.

எதிர்காலத்தில் கிரிக்கெட்டைப் பற்றி நான்கு வரியில் ஒரு குறிப்பு வரைக என்றால் அதில் ஒரு வரி கண்டிப்பாக சச்சின் டெண்டுல்கரைப் பற்றி இருக்கும் எ
ன்பது மட்டும் நிதர்சன உண்மை.


வணக்கங்களுடன்...
மணிமாறன்.

------------------------------------------------------------------------------((((((((((((())))))))))))))))))))------------------------------------------------

Saturday 22 December 2012

தூ..பக்கி பார்ட்-2. அன் ஆக்சன் காமெடி த்ரில்லர்..!!!

--------------------------------------------------------------------------------

இடம்: கருவக் காடு, குப்பைமேட்டிற்கு பின்னால் புதர்மறைவு.
  
- டைகர் தலைமையில் டிங்கு,ஜிம்மி,ஜாமி,பிங்கி உட்பட 12 பேர் ரகசிய மீட்டிங்.

- ஏற்கனவே டைகர் கடிச்சு வச்சதில் அரை மயக்கத்தில் ராப்பிச்சை.



--------------------------------------------------------------------------------
டைகர் : நாய்ஸ்.....நல்லா கவனமா கேளுங்க...இது கொஞ்சம் சீரியசான கேம்.நம்மளோட ஆப்போசிட் டீம் யாருன்னு இன்னும் கொஞ்ச நேரத்தில தெரியப்போகுது.நேத்து நைட்டு  ராப்பிச்சையோட கட்டை விரலை நான் கடிச்சி வச்சதால இப்போ மயக்கத்தில இருக்கான்.  இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சி இந்த ராப்பிச்சை எழுந்திருப்பான்.அவன நாம பாலோ பண்ணனும்.

டிங்கு : எதுக்கு பாஸ்...இன்னொரு கட்டைவிரலையும் கடிச்சி வைக்கணுமா..?

டைகர் : இல்ல...அவன் அடுத்ததா ஒரு ஆள மீட் பண்ணுவான்...

டிங்கு : அவன் கட்டை விரல கடிச்சி வைக்கணுமா
பாஸ்...

டைகர் : முழுசாக் கேளுடா என் மொங்கு... அவன் அடுத்து ஒரு ஆள  மீட் பண்ணுறப்போ நம்ம டீம் ரெண்டா பிரிஞ்சி ஆறுபேர் ஒருத்தனையும் ஆறுபேர் இன்னொருத்தனையும் பாலோ பண்ணனும்.அவன் அடுத்தடுத்து மீட் பன்ற ஒவ்வொருத்தனையும் நாமெல்லாம் பிரிஞ்சி போயி தனித்தனியா ஒவ்வொருத்தரையும் பாலோ பண்ணனும்.

டிங்கு : பாஸ்.. ஏற்கனவே மனுசங்க எல்லாம் ' நாய்ப்பொழப்பு..' னு நம்மள வச்சி கேவ
ப்படுத்துறாங்க.இது அதைவிட கேவலமான பொழைப்பா இருக்கே..

ஜிம்மி:
ஆமா பாஸ்... எங்களுக்கு ஒண்ணுமே புரியலையே..

டைகர்:. இதுக்கு பேரு 'ஆபரேசன் ஸ்நேக்பாபு '.....

டிங்கு : ஸ்நேக்பாபுக்கு ஏதாவது ஆபெரேசன் பண்ணப் போறிங்களா  பாஸ்..

டைகர்:..யெஸ்.. அவனுக்கு குடும்பக்கட்டுபாடு ஆபரேசன் பண்ணி அஞ்சு கிலோ அரிசியும் ஹார்லிக்ஸ் பாட்டிலும் தரப்போறோம்..இப்படியே பேசிகிட்ருந்த உனக்கு பாம்பே ஆபெரேசன் பண்றனா இல்லையாப்பாரு. எப்போதும் மனுசங்க மாதிரியே யோசிக்காதீங்க..வீ ஆர் நாய்ஸ்.மைண்ட் இட்.நம்ம இனத்தையே அழிக்க நினைக்கும் ஒரு மனித கூட்டத்தையே நாம கடிச்சி வைக்கப்போறோம்.

ஜாமி :: ஆமா..நம்ம பாஸ் சொல்றது கரெக்ட் தான்.டெய்லி ஒவ்வொரு ஹோட்டல் வாசலிலிலும் போய் பார்த்தா..தின்ன இலையைக்கூட வைக்காம மொத்தமா அபேஸ் பண்ணுது ஒரு குரூப்பு.

பிங்கி:  எப்ப வாரானுவ, எப்ப பொருக்குறாணுவ, எப்போ எடுக்கிராணுவ எதுவும் தெரியமாட்டேங்குது.எச்சி இலை போட்ட சுவடே தெரியமாட்டேங்குது பாஸ் ..

ஜிம்மி :.. ஆமா பாஸ்..நேத்தி நான் முனியாண்டி விலாஸ் வாசலில்
குப்பைத்தொட்டிக்கு பக்கத்தில்தான் படுத்திருந்தேன்.மணி மதியம் ரெண்டு இருக்கும்.உள்ளேயிருந்து சாப்பிட்ட மொத்த இலையையும் கொண்டு வந்து போட்டதுதான் தெரியும்.திடீர்னு ஒருத்தன் பாய்ஞ்சு வந்தான்.ரெண்டே நிமிசத்தில மொத்தத்தையும் சுருட்டிட்டு போயிட்டான்.அவன் கூட சண்டை போட்டதில என் கால் உடைஞ்சது தான் மிச்சம். 

பிங்கி அங்க மட்டுமில்ல.கோனார் கடை,மீனாட்சி பவன்,நாயர் கடை எல்லா இடத்திலேயும் இப்படித்தான். எதோ பிளான் பண்ணி கரக்டா வந்து மொத்தத்தையும் அள்ளிட்டு போயிடுரானுவ.

டைகர்: யெஸ்.. இவனுக எல்லாருமே சிலீப்பர் செல்..

டிங்கு   :  நோக்கியா செல் தெரியும்...சாம்சங் செல் தெரியும்..இது என்ன பாஸ் புது செல்லா இருக்கு.சைனா மேக்கா..?

டைகர்: இல்ல...
ஸ்நேக்பாபு மேக். ஐ மீன் ஸ்நேக்பாபுவோட ஆளுங்க...

டிங்கு :  பா..........ஸ்.... என்ன சொல்றீங்க...

டைகர்: நீ எதுக்கு இப்போ ஓவர் ரியாக்சன் கொடுக்கிற...நான் இன்னும் விசயத்தையே சொல்லலடா வென்ட்ரு. நம்ம இனத்தை மொத்தமா அழிக்க ஸ்நேக்பாபு செட்டப் பண்ணியிருக்கிற 'சிலீப்பர் செல்ஸ்' தான் இவங்க.

டிங்கு : வெரி இண்டரஸ்டிங்...மேலே சொல்லுங்க பாஸ்...

டைகர்: அடிங்..மொங்கு....நான் என்ன கதையா சொல்றேன்...பி சீரியஸ்.அதாவது இவனுக யாரும்
ஸ்நேக்பாபுவை பார்த்திருக்கக்கூட மாட்டாங்க.ஆனா டெய்லி இவங்களுக்கு அவன்கிட்டேருந்து இன்பர்மேசன் மட்டும் வரும்.எந்த ஹோட்டல்ல எத்தனை மணிக்கு எச்சி இலையை தூக்கிப் போடுவாங்க,எப்போ மீந்த சோறை கொட்டுவாங்க என்கிற இன்பர்மேசன் ஸ்நேக்பாபுவுக்கு மட்டும்தான் தெரியும்.அந்த இன்பர்மேசனை வேறு ஒரு ஆள் மூலமா இந்த ஸ்லீப்பர் செல்ஸ்க்கு அவன் பாஸ் பண்ணுவான்.

பிங்கி: இதனால அவனுக்கு என்ன லாபம் பாஸ்..

டைகர்: இருக்கு. இப்படி எல்லா குப்பைத் தொட்டியிலேயும் விழுற மீந்து போன சாப்பாட்டை நம்ம திங்க விடாம செய்வதின் மூலமா நம்மள பட்டினி போட்டு கொல்லப் பார்க்கிறானுவ.

பிங்கி: நம்மள கொன்னுட்டா நம்ம இனத்தையே மொத்தமா அழிச்சிட முடியுமா பாஸ்..

டைகர்: மொத்தமா முடியாட்டியும் அட்லீஸ்ட் இவங்க ஏரியாவிலையாவது நம்மள தீர்த்திடுனும்னு பார்க்கிறாங்க. இதன் பின்னணியில இன்னொரு கிரிமினல் பிரைனும் ஒளிஞ்சிருக்கு.நம்மள மட்டும் அவனுவ கொல்லல.நம்ம வாரிசும் இந்த ஏரியாவில இல்லாம செஞ்சி அவங்களோட அடுத்த வாரிசெல்லாம் நிம்மதியா இருக்க பிளான் பண்றாங்க...

ஜாமி :  பாஸ்..இப்போ நாம என்ன பண்றது...?

டைகர்: அதுக்குதான் இப்போ நாம ' ஆபரேசன் ஸ்நேக்பாபு ' நடத்தப்போறோம். நம்மளோட நோக்கம் இந்த ஸ்லீப்பர் செல்சை கடிச்சி வைக்கிறதில்லை.இவங்க வெறும் அம்புதான்.இவங்களுக்கெல்லாம் மூளையா இருக்கிற ஸ்நேக்பாபுதான் நம்மோட குறி..

பிங்கி: அவன எப்படி பாஸ் கடிச்சி வைக்கிறது..?

டைகர்: அதுதான் என்னோட மாஸ்டர் பிளான்.இந்த ஸ்லீப்பர் செல்சை நாம அட்டாக் பண்ணினோம்னா அவன் தானா வெளிய வருவான்.இவனுகள நீங்க கடிக்கிற கடில கொலை கத்து கத்தனும்.அந்த சத்தத்தில ஸ்நேக் பாபு தானா வெளிய வருவான்.ஏன்னா இங்க கடிச்சா அங்க வலிக்கும்.

டிங்கு :  அது எப்படி பாஸ்..இங்க கடிச்சா இங்கதானே வலிக்கணும். அங்க எப்..........?  

டைகர்: டேய் ..ஜிம்மி அந்த கத்தரிக்கோல கொஞ்சம் கொண்டா...

டிங்கு :  எதுக்கு பாஸ்...

டைகர்: இல்ல...வாலு கொஞ்சம் வெறப்பா இருந்தா இப்படியெல்லாம் பேசத் தோணுமாம்.அதை கட் பண்ணிட்டா எல்லா சரியாகிடும்.

டிங்கு : ஐயோ பாஸ் என்னை விட்டுடுங்க.... 

பிங்கி: பாஸ்.. பாஸ்.. ராப்பிச்சை கண் முழிச்சிடான்..

டைகர்: நாய்ஸ்... யாரும் பேனிக் ஆக வேண்டாம்.இப்போ நாம பன்னிரெண்டு பேருக்கு பன்னிரெண்டு பேர் இருக்கோம். த கேம் ஈஸ் கோயிங் டு ஸ்டார்ட் நவ்..... நாம ஆத்தங்கரையில பக்கத்துத்தெரு நாய்களோட சண்டைப் போட்டு கடிச்சிகிட்டோமே அதைத்தான் இங்கேயும் செய்யப்போறோம்.ஒரே நேரத்தில நாலு குப்பைத்தொட்டியையும் கவர் பண்ணி மொத்த சோறையும் அபேஸ் பண்றது,சீரியல் பெக்கிங்...அவுங்க டெக்னிக் நமக்கும் தெரியனும்னு காட்டனும்.நான் ஒன் டூ த்ரீனு சொல்லிட்டு ஊளையிடுவேன்.ஒரு செகண்ட் வித்தியாசம் இல்லாமல் ஒரே நேரத்தில் எல்லோரையும் கடிச்சி வைக்கணும்... கண்டிப்பா ஸ்நேக்பாபு வெளிய வருவான்.எல்லோரும் ஒரே நேரத்தில அவனையும் கடிச்சி வக்கணும். ஓகே...

டிங்கு :  க்க்க்கே பாஸ்.....
.
.
.

 (அடுத்த சில நிமிடத்தில்....)


டிங்கு :  பாஸ் நம்மோட அடுத்த ஆபரேசன் என்ன ....?

டைகர்: அடுத்த ஆபரேசன் எனக்கு தாண்டா...


---------------------------------------------------------((((((((((((((((((((((()))))))))))))))))))))))--------------------------------------

Friday 21 December 2012

பாலியல் வன்புணர்வு..பதறுது நெஞ்சே...



கேட்கும்போது நெஞ்சே பதறுகிறது.........

"என் வாழ் நாளில் இப்படி ஒரு ரேப் செய்யப்பட்ட பெண்ணை பார்த்தது  இல்லை..உள்ளே இருக்கும் குடலையும் கூட சிதைத்து விட்டார்கள்..."  டெல்லியில் சில காமுகன்களால் சிதைத்து எறியப்பட்ட அந்தப் பெண்ணுக்கு சிகிச்சையளிக்கும் டாக்டர் சொன்னதாக இன்றைய ஊடகங்களில் வெளிவந்த செய்தியைப் படித்த போது நெஞ்சே பதறுகிறது.

பாலியல் வன்முறை நிறைந்த திரைப்படங்களில் கூட இப்படியொரு காட்சியமைப்பை சிந்தித்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.எந்த பழிவாங்கும் பின்புலம் கூட இல்லை.வெறுமனே,அந்தப் பெண் ஒரு ஆணுடன் இரவு நடந்து சென்றதால் பாடம் கற்பிக்கவே அப்படி செய்ததாக சொல்லியிருக்கிறார், அந்தப் பேருந்தை ஓட்டிய டிரைவர்.

டிரைவர்,டிரைவரின் தம்பி உட்பட மொத்தம் ஆறுபேர் அந்தப்பெண்ணை வன்புணர்வு செய்து, பின்பு இரும்பு ராடால் அவளது உறுப்பை சிதைத்திருக்கிறார்கள்.அந்தப் பெண்ணின் கதறலை சுமந்துக்கொண்டே உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைநகரில் வட்டமடித்துப் பயணித்திருக்கிறது அந்தப் பேருந்து. கடைசியில் மொத்த ஆடையும் உருவப்பட்டு குத்துயிரும் குலையுயிருமாய் சாலையில் வீசப்பட்ட அந்த பெண், போலிஸ் வரும்வரை சீந்துவாரின்றி அனாதைபோல கிடந்திருக்கிறாள்.நம் தலைநகரில் மருத்துவப் படிப்பு படிக்கும் ஒரு பெண்ணுக்கு, நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவிற்கு  இப்படியொரு கொடூரம் நடந்தேறியிருக்கிறது.

இன்று  இந்தியாவின் ஒட்டு மொத்த ஊடகங்களும் இந்த வன்கொடுமையைக் கண்டு அலறுகின்றன. இந்தியாவில் ஒரு வருடத்தில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் பெண்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் தலையே சுற்றுகிறது.

கடந்த வருடம் பிப்ரவரியில் கூட இப்படிப்பட்ட ஒரு சம்பவம் பரபரப்பாகப் பேசப்பட்ட
து.கேரளாவில் ரயிலில் பயணம் செய்துக்கொண்டிருந்த ஒரு இளம்பெண்ணை நம் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பிக்பாக்கெட் பொருக்கி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றிருக்கிறான்.முயற்சி பலிக்காததால் அந்தப்பெண்ணை தூக்கி ரயிலில் இருந்து வெளியே வீசியுள்ளான்.தலையில் பலமாக அடிபட்டு உயிர்போகும் நிலையிலும் அந்தப்பெண்ணை வன்புணர்வு செய்திருக்கிறான்.சில மாதங்களிலேயே அவனுக்கு கோர்ட் தூக்குத்தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கியது.இரண்டு வருடம் முடியப்போகும் நிலையில் இன்னும் தண்டனை நிறைவேற்றப்படவில்லை. இன்னும் சில காலங்கள் கழித்து அவனுக்கு மன நிலை சரியில்லையென மருத்துவ சான்றிதல் அளித்து தண்டனையிலிருந்து விடுவிக்கப்படலாம்.நம் துருப்பிடித்த சட்டம் எப்போதும் இதுபோன்ற தவறுகளில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமாகத்தான் இருக்கிறது.

கேரளா ரயில் சம்பவம்

இதற்கிடையே தினமணி போன்ற சில ஊடகங்களில் இந்த சம்பவம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் கோபத்தையும் எரிச்சலையும் தான் ஏற்படுத்துகிறது.இந்தச் சம்பவத்திற்கு அடிப்படைக் காரணத்தை அறியாமல், சுயக்கட்டுப்பாடு இல்லாத பெண்கள்தான் என பிற்போக்குத்தனமான காரணத்தை சொல்கிறது தினமணி தலையங்கம்.

நவ நாகரிக உடைகளும்,மேற்கத்திய கலாச்சாரமும் தான் ஆண்களுக்கு உணர்ச்சிகளைத் தூண்டி தவறு செய்ய வைக்கிறது என்றால் கேரளாவில் ரயிலில் நடந்த பாலியல் பலாத்காரம் சம்பவமும்,கோவையில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவமும் எந்த வகையில் வன்புணர்வு செய்ய தூண்டியது..? 

நியாயமான ஆதங்கம்.!!!

வெளிநாடுகளில் குறிப்பாக நான் வசிக்கும் சிங்கப்பூரில்,உடைகளைப் பொறுத்தவரையில் பெண்களுக்கு நூறு சதவீத சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்கிறது.ஆண்கள் லுங்கி கட்டிக்கொண்டு ரோட்டில் நடந்தால் சந்தேகப் பார்வையோடு கொஞ்சம் கடுமையாக விசாரிக்கும் போலிஸ்,கொஞ்சம் பெரிய சைஸ் ஜட்டி,பிராவோடு திரியும் பெண்களிடம் எதுவுமே கேட்பதில்லை.பாலியல் உணர்ச்சிகளோடு எந்த ஆண்களும் அவர்களை நோட்டம் விடுவதும் இல்லை.இன்னும் சொல்லப்போனால் நள்ளிரவில் கூட பெண்கள் இதுமாதிரி உடைகளைப் போட்டுக்கொண்டுதான் பொதுவெளியில் சுற்றுகிறார்கள்.கவர்ச்சியான உடைகளால்தான் பாலியல் குற்றங்கள் நடக்கிடது என்றால் இங்கு தினம் நூற்றுக்கு மேற்பட்ட பலாத்காரங்கள் அரங்கேறியிருக்கவேண்டும்.நான் அறிந்தவரையில் இங்கு வசித்த பத்தாண்டுகளில் எந்தவித பாலியல் வன்புணர்வு சம்பவத்தையும் கேள்விப்பட்டதில்லை.சிறு சிறு குற்றங்கள்தான்.அதுவும் ஒப்பந்த அடிப்படையில் வெளிநாட்டிலிருந்து இங்கே வேலைப்பார்க்கும் ஒரு சில வேலையாட்களால் மட்டும்தான். அதற்கும் கடுமையான தண்டனைகள் இங்கே விதிக்கப்படுகிறது.


வெளிநாடுகளில் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் குறைவாக இருப்பதற்கு அங்கே நடைமுறையில் இருக்கும் கடுமையான தண்டனைகள்தான் முக்கிய காரணம்.மேல் கோர்ட்,கீழ் கோர்ட் என்று இழுத்தடிக்கும் வேலையெல்லாம் இல்லாமல் குறுகிய காலத்திலேயே தீர்ப்பளித்து அதற்கான தண்டனையையும் நிறைவேற்றிவிடுவார்கள்.கருணை மனுவுக்கெல்லாம் கடைக்கண் பார்வை கூட கிடைக்காது.  

இரண்டு வருடத்திற்கு முன்பு நம்ம ஊரிலிருந்து இங்கே 'ப்ளம்பிங் (plumbing) வேலைப் பார்ப்பதற்காக வந்த ஒருவர், இங்குள்ள ஒரு பள்ளியின் டாய்லெட்டில் வேலை
ப் பார்த்துக் கொண்டிருந்தபோது,அங்கு வந்த ஒரு சிறுவனிடம் தகாத முறையில் நடந்துள்ளார்.அந்த சிறுவன் தன் பெற்றோர் மூலம் பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்து,பின்பு அந்த பிளம்பர் கைது செய்யப்பட்டார்.அடுத்த சில வாரங்களிலே குற்றம் நிருபிக்கப்பட்டு, அவருக்கு இருபது ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது.அவருக்கு தற்போது 25 வயது என வைத்துக் கொண்டால்,தனது 45 வது வயதில்தான், அதாவது கிட்டத்தட்ட தன் இளமைப் பருவத்தைக் கடந்துதான் விடுதலை செய்யப்படுவார். சிறுவன் மீதா பாலியல் குற்றத்திற்கே இந்தத் தண்டனை என்றால் பெண்கள் மீதான பாலியல் பலாத்காரம் என்றால்....ஸ்ட்ரைட்டா தூக்கு மேடையில போயி உட்காந்துக்க வேண்டியதுதான்.

இந்த செய்தியைப் படிக்கும் போது நமக்கு அடிவயிற்றில் சொர சொரப்பு எடுப்பது உண்மைதானே... அப்படியொரு பயம் நம் நாட்டு சட்ட திட்டங்கள் மீது நமக்கு இருக்கிறதா..?.குற்றவாளியே குற்றத்தை ஒப்புக்கொண்டாலும்,'உனக்கு எதிரான சாட்சிகள் சரியில்லாததால் உன்னை விடுதலை செய்கிறேன்' னு ஜட்ஜ் அய்யாவே  தீர்ப்பை மாற்றி எழுதிவிடுவார்.

சௌதி அரேபியாவில் பாலியல் வன்புணர்வுக்கு அளிக்கப்பட்ட தண்டனையாம்..

கடுமையான சட்டங்களால் கிடைக்கப்போகும் தண்டனைகள் ஏற்படுத்தும் பயம் மட்டுமே இது போன்ற வன்செயல்கள் நடைபெறாமல் கட்டுப்படுத்த முடியும்.

"தீர்ப்பு என்கிறது ஒரு மனுசன திருத்திறதுக்குதானே தவிர அழிக்கறதுக்காக இல்ல.." என அந்தக்கால ஆலமர சின்ன கவுண்டர் தீர்ப்பை எல்லாம் தூக்கிப்போட்டுட்டு..பாலியல் பலாத்காரம் என்றால் ஒன்னு இழுத்து வச்சு வெட்டுங்க.. இல்லைனா நம்ம ஊரு வெள்ளைத்துரைகிட்ட கேசை ஒப்படைச்சுடுங்க....   


------------------------------------((((((((((((((((())))))))))))))))))))))))))))))))------------------------------

Wednesday 19 December 2012

உங்கள் பன் டிவி வழங்கும் உலக அழிவு தின சிறப்பு நிகழ்ச்சிகள்



( நம்ம பங்குக்கு ஏதாவது பீதியைக் கிளப்ப வேண்டாமா...?)

ங்கள் பன் டிவியில்..... 21-12-12  அன்று உலக அழிவு தினத்தை முன்னிட்டு பன் டிவி வழங்கும் சிறப்பு நிகழ்ச்சிகள்...

காலை 6 மணிக்கு...

"அமங்கல இசை"...வழங்குபவர்கள்  சாவு மேளம் சாமிக்கண்ணு ,கண்ணம்மா பேட்டை கண்ணாயிரம், தீச்சட்டி கோவிந்தன்,சங்கு சண்முகம் குழுவினர்.

காலை 7 மணிக்கு..

"சாவைக் கண்டு பயமேன் .." பூந்தி பயேந்திரர் சாமிகள் அவர்களின் ஆன்மீக சொற்பொழிவு. 

காலை 8 மணிக்கு..

'' உலகம் அழியுமா'' 15 நாள் டைம் கொடுப்பாங்களா? பிரபல ஜோதிடர் கூடன்குளம் நாராயணசாமி தனது ஏழாம் அறிவு மூலமாக கணிக்கிறார்.

காலை 9.30 மணிக்கு...

"மண்டையை போட்ட பின்பு... மண்ணில் புதைப்பது சிறந்ததா..மண்ணெண்ணையை ஊற்றி எரிப்பது சிறந்ததா.." பேராசிரியர் வாளமீன் ஆப்பையா தலைமையில் சிந்திக்க வைக்கும் சிறப்பு பட்டிமன்றம்.


காலை 11 மணிக்கு...

"செத்து செத்து விளையாடுவோம் வாங்க..." நடிகர் முத்துக்காளை தொகுத்து வழங்கும் மாறுபட்ட கேம் ஷோ.....மலைஉச்சி,பாழுங்கிணறு,ரயில் தண்டவாளம்  இங்கெல்லாம் அழைத்துச்சென்று, நைசாக பின்னால் இருந்து தள்ளி விட்டு விளையாடும் புத்தம் புது நிகழ்ச்சி.   


நண்பகல் 12.00 மணிக்கு...

"உன்னையே  நீ எண்ணிப் பாரு.."  பாடல் உருவான விதம் பற்றி இயக்குனர் பீலா உங்களை  சுடுகாட்டுக்கே அழைத்துச் சென்று விளக்குகிறார்.

பிற்பகல் 1 மணிக்கு...

"ஒப்பாரி வைக்கலாம் வாங்க..."  தனியாக ஒப்பாரி வைப்பது எப்படி..? சொந்தங்களுடன் ஒப்பாரி வைப்பது எப்படி..?,ஊர் கூடி ஒப்பாரி வைப்பது எப்படி..? என்பதைப்பற்றி எழவு விழுந்த வீட்டுக்கே சென்று ஒப்பாரி வைத்துக் காட்டுகிறார் தேனி குஞ்சம்மாள்.

பிற்பகல் 1.30 மணிக்கு...

'' பேய் புடிக்கலாம் வாங்க '' கண்னம்மா பேட்டையில் தூங்கி
க் கொண்டிருப்பவர்களுடன் ஆவி அமுதா பங்கு பெரும் கலகலப்பான நிகழ்ச்சி .

பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை...


" பியுசைப் புடுங்குவோம் நாங்க.. "

தமிழ் நாடு அரசு மற்றும் நாத்தம் புஸ்வனாதன் கு
ழுவினர் வழங்கும் ''பவர்கட்''. தமிழ்நாட்டின் சம்பிரதாய, பாரம்பரிய சடங்கு நிகழ்ச்சி .

மாலை 6 மணிக்கு...


இந்திய
த் தொலைகாட்சி வர‌லாற்றில் முதல் முறையாக திரைக்கு வருமா என்று கூடத் தெரியாத அகில உலக பவர் ஸ்டார் நடித்த 'மாணவன்' திரைப்படம்.

அழிவு தினத்தில் எஞ்சியிருக்கிற ஒரு சில பேரும் இந்தப்படத்தைக் கண்டு சாவத்தவறாதீர்கள்.


இரவு 11 மணிக்கு ...

அகில அண்டத் தொலைக்கட்சியில் கடைசி முறையாக,பன் டிவி கடைசியாக வழங்கும் " பாசக்கயிறு..." .
எமதர்மன் எருமையுடன் வந்து தன் பாசக்கயிறால் எல்லோரையும் கட்டியிழுக்கும் தத்ரூபக் காட்சி நேரடியாக ஒளிபரப்பாகும்.....

நேயர்களே 21-12-12 அன்று உலக அழிவை முன்னிட்டு உங்கள் பன் டிவியின் சிறப்பு நிகழ்ச்சிகளை அனைத்தையும் கண்டு களியுங்கள்....சாவு பண்டிகையை குடும்பத்துடன் ஆனந்தமாய் கொண்டாடுங்கள்...

-----------------------------------------((((((((((((((((((()))))))))))))))))))))))))))))------------------------------------------------------

Sunday 16 December 2012

இளையராஜா கொளுத்திப் போட்ட அதிர்ச்சிப் பட்டாசும், 'புல்ஷிட் புல்டாக்கு' என்கிற சமூக விளையாட்டும்.


மீபத்தில் குமுதம் வார இதழில் ராகதேவன் இசைஞானி அவர்களின் பேட்டி வெளியாகியிருந்தது.மனதில் பட்டதை எந்தவித ஒளிமறைவின்றி,தைரியமாக ' நறுக்' கென்று சொல்வதில் அவருக்கு நிகர் அவரே..! அவரின் மேடைப்பேச்சுகள் பலமுறை பலரை சங்கடப்படுத்தியிருக்கிறது.அதற்காகவே பல சினிமா நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வதைத் தவிர்க்கிறேன் என்று கூட ஒரு முறை சொல்லியிருக்கிறார். சமீபத்தியப் பேட்டியில் கூட அப்படியொரு அதிர்ச்சிப் பட்டாசைக் கொளுத்திப் போட்டிருக்கிறார்.

தற்கால வாழ்க்கை முறையில் தாங்கள் வெறுக்கும் விஷயம் எது ..?  என்றகேள்விக்கு அவர் அளித்த பதில் ..

"என் பிறப்பு..."


இதை எப்படி எடுத்துக் கொள்வது..? இசைக்காவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்.இந்திய அளவில் திரைத்துறையில் இசைச் சக்ரவர்த்தியாகக் கோலேச்சியவர்.இனம்,ஜாதி,மொழி கடந்து தன் இசையால் ரசிகர்களை கிறங்கடித்தவர்.இப்படி நீண்டு கொண்டே செல்லும் சாதனைகளை,எந்தவித அடிப்படை இசையறிவும்,இசைப் பாரம்பரிய பின்புலமும் இல்லாத ஒருவர் நிகழ்த்தியிருப்பது சாதாரணமான விஷயம் அல்ல.அப்படிப்பட்ட ஒருவரை சமூக ரீதியாகத் தனிமைப் படுத்திப்பார்ப்பது சரியில்லைதான்.சாதீய ரீதியாக அடையாளப் படுத்துவதும் முறையில்லைதான்.அதற்காக தன் பிறப்பையே வெறுக்கும் அளவுக்கு அவரைக் காயப்படுத்தியது எது..?

தலித் முரசு என்ற இதழில் 2001 ஆம் ஆண்டில், நாட்டுப் புறப் பாடல்கள் ஆய்வாளரும்,மிகச்சிறந்த மக்கள் பாடகரும்,புதுச்சேரி பல்கலைகழத்தின் நாடகத்துறைத் தலைவரும்,பேராசிரியருமான டாக்டர் கே.ஏ. குணசேகரன், இசைஞானி இளையராஜவின் இசையைப் பற்றிய தொடர் எழுதினார்.அந்தத் தொடரை  "இசைமொழியும் இளையராஜாவும்" என்ற தலைப்பில் புத்தமாக வெளியிட்டபோது,இசைக்கு வெளியே சென்று இளையராஜாவைப் பற்றி கடுமையான விமர்சனங்களை அதன் இறுதிப் பாகத்தில் வைத்திருந்தார்.

' இளையராஜா தலித் என்னும் தன் அடையாளத்தை மாற்றவும் சிதைக்கவும் முற்படுகிறார். எனினும் இளையராஜா போல் தலித் அடையாளத்தை அனைவரும் மாற்றிக்கொள்ளவோ மறைத்துக் கொள்ளவோ மறுதலித்துக் கொள்ளவோ தயாராக இல்லை ' என்று கே.ஏ.குணசேகரன் எழுதியிருந்தார்.இதற்கு மறுப்பு அறிக்கையோ,விளக்கமோ தராமல் அவர் மீது வழக்கு தொடர்ந்தார் இளையராஜா.கடைசியில் அந்தப் புத்தகம் தடை செய்யப்பட்டதாக அறிந்தேன்.அதைத் தொடர்ந்து தன் சமூகத்தில் இருக்கும் விளிம்புநிலை மக்களுக்கு இளையராஜா என்ன செய்தார் என்ற ரீதியிலும் அப்போது விமர்சனங்கள் எழுந்தது.  

தலித் மக்களுக்கு எதிராக தன்னை 'ஆண்ட சாதிகள்' என சொல்லிக்கொண்டு சில ஆதிக்கசாதி அமைப்புகள் ஒன்றுதிரண்டுள்ள இந்த வேளையில் இளையராஜாவின் இந்த பதில்,சாதி வெறியர்களால் சிதை மூட்டப்பட்ட தலித் இன மக்களின் இதயத்தில் சீமெண்ணெயை ஊற்றுவது போல் இல்லையா..? 
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
      மக்கெல்லாம் வயதாகிவிட்டது என்பதை இந்த நடிகைகளைப் பார்த்துதான் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.இந்த இரண்டு படத்திற்கும் குறைந்தபட்சம் ஒரு வித்தியாசம் கூட கிடையாது.கம்பீரம் படத்தில் நம்ம சித்தப்புவுக்கு மகளாக  நடித்த அதே பெண்தான்,இப்படி வளர்ந்து தயாராக நிற்கிறது திரைக்கு முன் 'திறமை' காட்ட...!!!.அம்மணி ஒரு படத்தில் ஹீரோயினா நடிக்கிராங்களாம்.அது சரி... இந்த ஸ்கூல், காலேஜ்,படிப்பு இப்படி மேற்படி விசயங்கள் இருப்பது இதுங்கள பெத்தவுங்களுக்கு உண்மையிலேயே தெரியாதா..? எப்படியோ சித்தப்புவுக்கே ஹீரோயினாகி,பிற்பாடு அக்காவாகி,அப்புறம் அம்மாவாகி கடைசியில ஏதோ ஆகி கலைச்சேவைப் புரிய வாழ்த்துக்கள்.


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

ப்ளிங்,கஞ்சன் ஜங்கா,ஜலபுல ஜங்க்ஸ்,ஸ்பூன்லிங்,டிக்கிலோனா இப்படிப்பட்ட சர்வதேச 'சமூக நல்லிணக்க' விளையாட்டுகளை நீங்க பார்த்திருப்பீங்க.சில பேர் விளையாடவும் செஞ்சிருப்பீங்க.ஆனால் இதைப் பார்த்திருக்கமாட்டீங்க..


இது என்ன புது விளையாட்டு என யோசிக்காதீங்க.இதுக்குப் பேருதான் 'புல்ஷிட் புல்டாக்கு'.அதாவது மூணு மாசம் குளிப்பாட்டாத,எழும்பும் தோலுமா உள்ள ஒரு பசு மாட்டை,தெரு முச்சந்தியில கட்டி வச்சி அதுக்கு கீழால மூணு தடவை புகுந்து புகுந்து வரணும்.அப்படியே அது போடுற சாணியையும்,மூ.......யும் எடுத்துட்டு போயி உங்க வீட்டு வாசலில தெளிச்சு வச்சீங்கனா,மூனே வருசத்தில உங்கள் தோஷமெல்லாம் நீங்கி, செல்வம் பெருகிப்பெருகி........கடைசில ரிலையன்ஸ் ஓனர்  வீட்டிலே அலையன்ஸ் பார்க்கிற அளவுக்கு ஒசந்துடுவீங்களாம்...

அடேய் ..பல வருசமா எங்க ஊர்ல சாணி அள்ளுற பேச்சியம்மாவும்,முனியம்மாவும் இப்படித்தான் ஒரு நாளைக்கு பத்து தடவை புகுந்து புகுந்து போறாங்க.எங்க ஊரு பால்பாண்டி அண்ணன் அந்தப்பக்கமும்
ந்தப்பக்கமும் புகுந்து போயிதான் தினமும் பால் கறக்கிறாரு.அப்படிப்பாத்தா இந்நேரம் அவுங்க பில்கேட்சோடு உட்கார்ந்து பிரேக்பாஸ்ட் அல்லவா சாப்பிட்டிருக்கணும்..? உங்களை எத்தனை பெ............. ம்ஹும்... முடியவே முடியாது.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
  
இந்த வாரம் வலைச்சரத்தில் என் தளத்தைப்பற்றி நண்பர் NKS.ஹாஜா மைதீன் குறிப்பிட்டிருக்கிறார்.இதற்கு முன்பு திரு பாலா அவர்களும்,முரளிதரன் அவர்களும் குறிப்பிட்டிருந்தனர்.எனக்குக் கிடைத்த பாலோயர்களில் சிலர் வலைச்சரம் மூலம் கிடைத்தவர்களே.அந்த வகையில் என் தளத்தைக் குறிப்பிட்ட நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி..

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

ரிலாக்ஸ் ப்ளீஸ்...


-------------------------x ------------------------

இது கேப்டனின் மங்காத்தா...A Captain Game...!!!



வணக்கங்களுடன் ...
மணிமாறன்.

---------------------------------------------------------------------((((((((((((((()))))))))))))))))))))------------------------------------------

Wednesday 12 December 2012

எதையும் பிளான் பண்ணி பண்ணனும்...

(சிறுகதை)


நிர்மலா ஹாஸ்பிடல். 

பரபரப்புடன் காணப்பட்டாள் சுமதி. 

"டாக்டர்... இப்போ எப்படி இருக்கார்.?" 

"கொஞ்சம் சிவியர் அட்டாக்தாம்மா...நிறைய பிளட் கிலாட் இருக்கு.ஹெவியான இன்ஜெக்சன் போட்டிருக்கோம்.மானிடரிங் நடக்குது." 

 "ரொம்ப சீரியஸா டாக்டர்,,?" 

 "ம்ம்ம்...இதுக்கு முன்னாடி இதுபோல வந்திருக்கா..?" 

 "இதுதான் பர்ஸ்ட் டாக்டர்.காலையில ஆபிஸ் போறதுக்கு பைக்க எடுத்தாரு.அப்படியே நெஞ்சு வலிக்குதுன்னு உட்கார்த்து விட்டார்."

 "சரி.நான் மாத்திரை எழுதித் தாறேன் .டெய்லி சாப்ட சொல்லணும்..." 

"மாத்திரையில சரியாகிடுமா டாக்டர்."

 "ஆகலாம்.ஆகாமலும் போகலாம்..." 

"அப்படினா ஆபரேசன் செஞ்சிடுங்க டாக்டர். " தாமதிக்காமல் சொன்னாள். 

"நீங்கள் அவருடைய மனைவியா..? வாரிசு இருக்காங்களா..?"

 தயக்கத்துடன், "ஆமா டாக்டர்.இரண்டாவது மனைவி.வாரிசு எதுவும் இல்லை.முறைப்படி விவாகரத்து வாங்கிட்டுதான் திருமணம் செய்தார்."

 "ஆபரேசன் -னா நிறைய செலவாகுமேம்மா..." 

 "அதைப்பற்றி கவலையில்லை டாக்டர்.நீங்கள் உடனே ஆபரேசன் செய்யுங்கள்.முடிந்தவுடன் பணம் கட்டுகிறேன்." 

"சாரிம்மா..இங்கே ஆபரேசன் செய்யும் முன்பே மொத்தப் பணத்தையும் கட்டவேண்டும்." 

"இப்போ கையில ஏதும் பணமில்லையே டாக்டர்.." 

"ஆபரேசன் முடிந்த பிறகு மட்டும் எங்கிருந்து பணம் வரும்...? "

 "அவரை நான் பத்து லட்ச ரூபாய்க்கு இன்ஸ்யூர் செய்திருக்கேன்..."

 (டாக்டர் மைன்ட் வாய்ஸ்.. "அடி நாசமத்துப்போறவ...என் 'கைராசி'யைப் பத்தி நாலு பேருகிட்ட விசாரித்துட்டுதான் வந்திருக்கா..." )

 $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

 அஸ்வின் ராக்ஸ்...(சும்மா அள்ளிவிடுவோம்..)





வணக்கங்களுடன்...
மணிமாறன்.  

--------------------------------------------((((((((((((((()))))))))))))))))))))))))))----------------------------------------------