Tuesday 11 December 2012

மனித உரிமை என்னும் மண்ணாங்கட்டி...

னித உரிமைகள் தினம் நேற்று நம் நாட்டில் கடைப் பிடிக்கப்பட்டதா எனத் தெரியவில்லை.குறைந்த பட்சம் இப்படியொரு நாள் இருப்பது நம் மக்களுக்கு தெரிந்திருக்கிறதா என்பதே சந்தேகம்தான்.

  நம் ' நட்பு' நாட்டில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்களின் வக்கிரமான கோரமுகத்தை ஐநாவே தற்போது உணர்ந்து வருந்தும் வேளையில்,நம் தொப்புள் கொடி உறவுகளின் மரணக் கதறல்களைக் கண்டும் காணாதது போல கைகட்டி வேடிக்கைப் பார்த்த நம் மைய அரசின் கையாலாகாத்தனம் தான்,இந்த நூற்றாண்டில் மனித உரிமைக்கு வைக்கப்பட்ட மிகப்பெரிய கரும்புள்ளி. 

 மனித உரிமை மீறலுக்கும்  நமக்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது.சில தினங்களுக்கு முன் நடந்த நிகழ்வு. இணையத்தில் பார்த்தபோது அதிர்ச்சியாக இருந்தது.


இது அன்றாடம் நம் வாழ்க்கைச் சூழலில் பார்த்துப் பழகிப்போன விசயம்தான்.காணொளியை உற்று நோக்கினால் நன்றாகப் புலப்படும்.தவறு செய்த தன் மகனை கன்னத்தில் அறைந்து தண்டித்து நல்வழிப் படுத்துகிறார்,பொறுப்புள்ள தந்தை ஸ்தானத்தில் உள்ள ஒரு மக்கள் பிரதிநிதி.இதை அப்படித்தான் எடுத்துக் கொள்ளவேண்டும்.அதை விடுத்து மனித உரிமை,மனிதாபிமானம்,மண்ணாங்கட்டி என்று பிதற்றிக்கொண்டு திரிந்தால்,66A என்கிற சட்டப்பிரிவு உங்கள் சட்டையைப் பிடித்து இழுத்து,கொலைக் குற்றவாளிகளுக்கு இணையாக சட்டத்தின் முன் நிறுத்தி விடும்.

சில தினங்களுக்கு முன் மகாராஷ்டிராவில் நடந்த நிகழ்வு.அந்த 'மகனின்' பெயர் D.G. Patil.வயது வெறும் 65 தான்.தனியார் ஒப்பந்தக்காரர்.தண்ணீர் கொண்டு செல்லும் குழாயில் ஏற்பட்ட கோளாறை சரி செய்ய கொஞ்சம் தாமதமாகிவிட்டதாம்.அந்தக் கோபத்தில் ஏற்பட்ட உணர்ச்சிக் கொந்தளிப்பின் வெளிப்பாடுதான் இது.அவரை அறைபவர்,இனவெறி ஆதிக்கசாதி கும்பலின் இளையத்தலைவன் ராஜ்தாக்கரேயின் 'மகாராஷ்டிரா  நவநிர்மான் சேனா' கட்சியைச் சேர்ந்த மாநகராட்சி உறுப்பினர் 'நிதின் நிகம்'.

ஒரு பொதுவெளியில் தன் தந்தை வயதையொத்த ஒரு முதியவரை,கடுங்குற்றம் புரிந்தவராக இருந்தாலும் கூட,கைநீட்டி அடிக்கும் அதிகாரம் இவர்களுக்கு யார் கொடுத்தது.? தண்டிக்கும் உரிமையை தன் கையிலெடுக்கும் சுதந்திரம் யார் தந்தது.?.

ஒருவிதத்தில் பார்த்தால் இதுவொன்றும் அதிசய நிகழ்வல்ல..ஊருக்கு ஊர்,தெருவுக்கு தெரு,வீதிக்கு வீதி அன்றாடம் நம் வாழ்வியல் சூழலோடு பழகிப்போன சாதாரண சம்பவம்தான்.அகிம்சையைப் போதித்த காந்தி பிறந்த தேசத்தில் மரணதண்டனையையும்,என்கவுண்டர்களையும் கொண்டாடி மகிழும் நமக்கு மனித உரிமையைப் பற்றிப் பேச என்ன தகுதியிருக்கிறது?   
வணக்கங்களுடன்...
மணிமாறன். 

No comments:

Post a Comment