Monday, 3 August 2015

ஆரஞ்சு மிட்டாய்... -கொஞ்சம் இனிப்பு..நிறைய புளிப்பு


ரஞ்சு மிட்டாய் என்றொரு படம் வந்திருக்கிறது.

ஒரே நேர்கோட்டில் எவ்வித இலக்கும் இல்லாமல் தட்டையாக பயணம் செய்யும் தமிழ் சினிமாவின் வழித்தடத்தை அவ்வப்போது வேறொரு திசை நோக்கி திருப்ப முயற்சிக்கும் வெகு சில படைப்பாளிகளில் விஜய் சேதுபதியும் ஒருவர். அவருக்காகத்தான் இந்தப் படத்தைக் காண சென்றிருந்தேன்.

காலங்காலமாகக் கட்டமைக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் எந்தக் கலையையும் அடக்கிவிடக் கூடாது. அதன் இலக்கணங்களும் கட்டமைப்பும் அவ்வப்போது உடைக்கப் படவேண்டும். அதன் வெவ்வேறு பரிமாணங்கள் வெளிப்பபட வேண்டும். ஒரு கலையின் பரிணாம வளர்ச்சி அதைப் பொருத்துதான் அமைகிறது.

தமிழ் சினிமாவுக்கும் சில இலக்கணங்கள் இருக்கிறது. சமீபத்திய சில படைப்புகள் அதை உடைக்கும் முயற்சியில் இறங்கியிருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சி தரும் விசயம்தான். காக்கா முட்டை அதில் அசுர வெற்றியைப் பெற்றது. அதுபோன்ற ஒரு புதிய முயற்சிதான் ஆரஞ்சு மிட்டாய்..

இரண்டுமே வணிக சினிமா இல்லை. இரண்டு தலைப்புகளும் விளிம்பு நிலை மக்களுக்கு நன்கு பரிச்சயம். இரண்டிலுமே படத்தின் மையக் கருவுக்கும் படத்தலைப்புக்கும் நேரடிச் சம்மந்தம் கிடையாது. ஆனால் ஆழமாக யோசித்தால் அவ்விரண்டு படங்களின் தலைப்பு சொல்லும் செய்தி, கதைக் கருவைவிட தத்துவார்த்தமாக இருக்கும்.

காக்கா முட்டை திரைப்படம் ஒரு விவரிக்க முடியாத பரவசத்தைக் கொடுத்தது. அதன் வணிக ரீதியான வெற்றி பல மசாலா படைப்பாளிகளை திரும்பிப் பார்க்கச் செய்தது . அந்த ஜெனரில் வந்திருக்கும் படம்தான் ஆரஞ்சு மிட்டாய்..


மொத்தமே நான்கு கதாபாத்திரங்கள் தான்.

108 மருத்துவ விரைவு ஊர்தி ஓட்டுநர் ஆறுமுகம் பாலா, அதில் வேலைபார்க்கும் அவசர மருத்துவ சேவகன் ரமேஷ் திலக், வயதான தோற்றத்தில் வரும் விஜய் சேதுபதி மற்றும் படம் முழுவதும் இவர்களை சுமந்து செல்லும் அந்த TN -31 G3669 ஆம்புலன்ஸ்.. இந்த நான்கு பாத்திரங்களுக்குள் நடக்கும் சுவாரஸ்ய சம்பவங்களே ஆரஞ்சு மிட்டாய்.

சாகுற நாள் தெரிஞ்சா வாழுற நாள் நரகமாகிடும் என்பார்கள். தனது சாகுற நாளை குத்துமதிப்பாக தெரிந்து கொண்ட ஒரு முதியவர், வாழும் கொஞ்ச நாட்களை ஜாலியாக கடக்க நினைக்கிறார். தனது ஒரே மகனிடம் கொண்ட கருத்து வேறுபாட்டால் சொந்த கிராமத்தில் தனிமையில் வாழ்கிறார் அந்த முதியவர். தனிமை அளிக்கும் நரக வேதனையிலிருந்து விடுபட அவ்வப்போது 108 ஆம்புலன்ஸ்க்கு ஃபோன் போட்டு வரவழைத்து அவர்களை ஒரு நாள் முழுக்க டார்ச்சர் செய்வது அவரது பொழுதுபோக்கு. அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் சிக்கிக் கொள்கிறார்கள் ஆறுமுக பாலாவும், ரமேஷ் திலக்கும். இம்மூவருக்குள் நடக்கும் சுவாரஸ்ய சம்பவங்களின் கோர்வைதான் ஆரஞ்சு மிட்டாய்.

ஐம்பது வயதைக் கடந்த முதியவர் தோற்றத்தில் விஜய் சேதுபதி. மஞ்சள் கறைபடிந்த பற்கள், நரைத்த முடி மற்றும் தளர்ந்த கண்களுடன் வாழ்க்கைப் பயணத்தின் கடைசி தருவாயிலில் நிற்கும் ஒரு முதியவரின் தோற்றத்தில் படம் முழுக்க வருகிறார். உண்மையிலேயே இப்படி வரும் தில்லு, தமிழ் சினிமாவில் கமலுக்கு அடுத்து விஜய் சேதுபதிக்குத்தான் இருக்கிறது. அதற்காக அவரைப் பாராட்டுவதில் எந்த தயவு தாட்சண்யமும் காட்டக் கூடாது.

ஆனால், தமிழ் சினிமாவில் இவர் ஜெயித்த படங்களின் எண்ணிக்கை இரட்டை இலக்கத்தையே தொட்டிராத நிலையில், சமீபத்திய இவரது படங்கள் எதுவும் பெரிதாக கல்லா கட்டாத நிலையில், இவரின் போட்டியாகப் பேசப்பட்ட சிவகார்த்திகேயன் மாஸ் ஹீரோவாக நிலைத்துவிட்ட நிலையில், பொழுதுபோக்கான அதே நேரத்தில் கருத்தாழமிக்க வித்தியாசமான படத்தை அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், விஜய் சேதுபதிக்கு இப்படியொரு சோதனை முயற்சி தேவையா..?

வித்தியாசமாக முயன்றது சரிதான்.. ஆனால் அதை நிறைவாகச் செய்திருக்கிறாரா என்பதையும் கவனிக்க வேண்டும். சிகைக்கு வெள்ளைநிற டை அடித்து தொப்பையை கூட்டிவிட்டால் முதியவர் தோற்றம் வந்து விடுமா..?  நடையில் தளர்ச்சி இல்லை.. கண்களில் முதிர்ச்சி இல்லை.. ஒரு பெரிய மனுஷன்  செய்யிற வேலையா இது என நிறைய காட்சிகளில் நம்மையே கேட்க வைக்கிறார்.. இந்தியன் படத்தில் கிழவனாக வரும் கமல், கடைசிவரை முழுக்கை சட்டையோடுதான் வருவார். வேட்டியை மடித்துக் கட்டும் காட்சியே அந்தப் படத்தில் இருக்காது. தசைகள் தளர்ந்த தோற்றத்தைக் காண்பிக்கவேண்டும் அல்லது அதை முற்றிலுமாக மறைக்க வேண்டும். ஆனால் இதில் வேட்டியை மடித்துக் கட்டும்போது மாறுவேடம் போட்ட முதியவராகத்தான் விஜய் சேதுபதி தெரிகிறார்..

தோற்றத்தில் கோட்டைவிட்டவர் நடிப்பின் ஸ்கோர் செய்திருப்பது ஆறுதல். நள்ளிரவில் குத்தாட்டம் போடுவது... ஆட்டோவில் எவ்வித சலனமுமில்லாமல் திடீரென்று கண்விழித்து அதிர்ச்சி ஏற்படுத்துவது... ஸ்ட்ரெட்ச்சரில் ஜாலியாக உட்கார்ந்துகொண்டு வழியில் செல்பவரிடம் சினிமாவைப் பற்றி பேசுவது... பெற்ற மகனிடமே வீராப்பு காட்டுவது என்று நிறையக் காட்சிகளில் கைதட்டு வாங்குகிறார் விஜய் சேதுபதி.

பண்ணையாரும் பத்மினியும் படத்தில் மினிபஸ் டிரைவராக வந்த ஆறுமுகம் பாலாவுக்கு இதில் ஆம்புலன்ஸ் டிரைவராக புரமோஷன். இவர் வரும் காட்சிகள் அனைத்தும் கலகல.. ரமேஷ் திலக்கின் காதலியை உனக்குப் பிடிக்குமா என விஜய் சேதுபதி கேட்கும்போது ஒரு எக்ஸ்ப்ரஷன் கொடுப்பார் பாருங்க.. செம்ம.. ! நல்ல கேரக்டராக தேர்ந்தெடுத்து நடித்தால் பெரிய காமெடியனாக வலம் வரலாம்.

படத்தில் அத்தனை கேரக்டர்களையும் மிஞ்சுவது ரமேஷ் திலக்தான். ஒரு பக்கம் காதலியிடமிருந்து டார்ச்சர்.. இன்னொரு பக்கம் சூப்பர்வைஷரிடமிருந்து குடைச்சல்.... இதற்கிடையில், கூட இருந்தே குடையும் கைலாசப் பெரியவரையும் சமாளிக்க வேண்டும்.. அத்தனைப் பேரையும் அவரவர் போக்கிலே சென்று சமாளிக்கும் திறமை ஒரு தேர்ந்த நடிகனுக்கு மட்டுமே இருக்கும். உண்மையிலேயே நீ நடிகன்ய்யா..!  ஒவ்வொரு காட்சியையும் குறிப்பிட்டு சொல்லவேண்டியதில்லை. ஒரு இடத்தில் கூட மிகை நடிப்பு இல்லை. ஒருவேளை இந்த வருடத்திற்கான  ' பெஸ்ட் சப்போர்டிங் ஆக்டர் '  விருது கிடைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை..

ஒரு உணர்வுப் பூர்வமான பத்து நிமிட குறும்படத்திற்கான ஸ்க்ரிப்டை வைத்துக் கொண்டு ஒன்றரை மணி நேரத்திற்கு இழுத்திருக்கிறார்கள். ஒரு கிளாஸ் ஆப்பிள் ஜூஸில் ஒரு பக்கெட் தண்ணீரை ஊற்றினால் எப்படி இருக்கும்...? நாயகன் விஜய் சேதுபதியை லொள்ளு பிடித்த ஆசாமியாக காட்சிப்படுத்த முயன்றிருக்கிறார்கள். அதை இன்னும் கலகலப்பாக செய்திருக்கலாம். திடீரென்று டென்சன் ஆகிறார். அட்வைஸ் செய்கிறார். அப்புறம் மஞ்சள் பல் தெரிய 'ஈ 'என்கிறார்.

படம் முடிந்து வெளிவரும்போது ஒரு பெண்மணி, ' கடைசியிலாவது கதையிருக்கும்னு நெனச்சிருந்தேன். ஆனா ஒன்னுமேயில்லை ' என்று வேறொருவரிடம் புலம்பிக்கொண்டு வந்தார். அனேகமாக அவர் விஜய் சேதுபதிக்கு ஏதாவது பிளாஸ்பேக் இருக்கும் என்கிற எதிர்பார்ப்பில் இருந்திருக்கலாம். சஸ்பென்ஸ், ட்விஸ்ட் எதுவும் இல்லாமல் நகரும் திரைக்கதைக்கு வலுசேர்க்க அழுத்தமான பிளாஸ்பேக் வைத்திருந்தால் முடிவு சுவாரஸ்யமாக இருந்திருக்கும்.

என்னைப் போன்ற காக்கா முட்டைப் பிரியர்களுக்கு வேண்டுமானால் இந்தப் படம் பிடித்திருக்கலாம்.. மற்றவர்களுக்கு..?

ஆரஞ்சு மிட்டாய்... நிறைய புளிப்பு + கொஞ்சம் இனிப்பு..

என் பார்வையில் முதல் இடத்தை ரமேஷ் திலக் தட்டிக்கொண்டு போகிறார்

4 comments:

 1. ரமேஷ் திலக் அவர்கள் ஒரு ரவுண்டு வருவார்...!

  ReplyDelete
 2. திரைக்கதையில் பயங்கர தொய்வு பாஸ். காக்கா முட்டையில் இருந்த விறுவிறுப்பு இதில் இல்லை , ஆகவே இந்த முட்டாய் எல்லா தரப்பு ஆடியன்ஸுக்கும் இனிக்குமா என்பது சந்தேகம் தான், நேற்று சாயந்திர காட்சி பார்த்தேன் என்னோடு சேர்த்து வெறும் 11 பேர் மட்டுமே!

  ReplyDelete
 3. வணக்கம்...

  வரும் அக்டோபர் மாதம் 11ஆம் தேதி ஞாயிறு அன்று வலைப்பதிவர்கள் சந்திப்பு மாநாடு புதுக்கோட்டையில் நடக்க உள்ளது... விழாவிற்கு வரும் அனைவருக்கும் இலவசமாக “தமிழ்-வலைப்பதிவர் கையேடு-2015” எனும் நூல் தரப்பட உள்ளது... தங்களின் தளத்தையும் அதில் இணைக்கும் விவரங்கள் http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-1.html எனும் பதிவில் உள்ளது... நன்றி...

  புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
  அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

  ReplyDelete
 4. விட்டில் இருந்து வருமானம் பார்க்க வேண்டுமா கவலைய விடுங்கள் உடனே நமது பணம்அறம் இணையதளதிற்கு வாங்க அதில் உள்ள ஆன்லைன் வேலைக்கு தேவையான உக்திகளை கற்று கொண்டு உங்கள் வருமானத்தை பெருக்குங்கள்........

  பணம் அறம் இணையதளம்

  ஆன்லைன் வேலை பற்றிய சந்தேகத்தை பதிவிட கிழே உள்ள லிங்கில் உங்களை உறுபினராக இணைந்து கொண்டு உங்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளுங்கள்

  உதவிக்கு பயன்படுத்து லிங்க்

  ReplyDelete