Showing posts with label மரண மொக்கை. Show all posts
Showing posts with label மரண மொக்கை. Show all posts

Thursday, 20 November 2014

ஒரே நாளில் உலக பேமஸ் ஆவது எப்படி..?



ஒரே நாளில் உலக ஃபேமஸ் ஆவது எப்படி..? ரொம்ப சிம்பிளான விசயம்ங்க..

நம் சமூகத்தின் ஏதோ ஒரு சந்து பொந்தில் வாழும் விளிம்பு நிலை மனிதர் நீங்கள். யாருக்கும் உங்களைத் தெரியாது. தெரு நாய் கூட உங்களை மதிக்காது என வைத்துக்கொள்வோம்

ஆனால் ஒரே நாளில் இந்த உலகமே உங்களைப்பற்றி பேசும். சிறார்கள், மாணவர்கள் எல்லாம் "சார்" என்று மரியாதையோடும், பெரியவர்கள் எல்லாம் "தம்பி" என்று பாசத்துடனும் அழைப்பார்கள். மாணவ சமுதாயமே உங்கள் பின்னால் திரளும். ஏழைகளுக்கு அடுத்த எம்ஜியார் நீங்கள் தான். அரசு ஊழியர்கள் எல்லோரும் கையெடுத்துக் கும்பிடுவார்கள். ஊடகங்கள்,தொலைக்காட்சி எல்லாம் உங்களைப் பற்றியே பேசும். அரசியல்வாதிகளுக்கும்,  கார்ப்பரேட் பண முதலைகளுக்கும் நீங்க சிம்ம சொப்பனமாக திகழ்வீர்கள்.

இப்படியெல்லாம் நடக்கணும்னா ஏதாவது புரட்சி செய்யணும் அல்லது போராட்டம் நடத்தனும் அல்லது தீவிரவாதியாக மாறணும் அப்படித்தானே... என நீங்கள் கேட்க வருவது புரிகிறது. அதுதான் இல்லை. நீங்கள் செய்யவேண்டியது ஒன்னே ஒன்னுதான்... வாயால வடை சுடனும்..!

தெளிவாகச் சொல்கிறேன். அக்கம் பக்கத்தில் ஏதேனும் அநீதிகள் நடப்பதுபோல் உங்கள் ஞானக் கண்களுக்குத் தெரிந்தால் உடனே அதை பேஸ்புக்கில் ஸ்டேடஸ் ஆக பதியுங்கள். அல்லது சமூகத்தை திருத்துகிறேன் என்று ஏதாவது நாலு ஐடியா கொடுங்கள். உடனே உங்கள் பெயர் இந்தியா முழுவதும் பரவும்.

இந்த ரோடு ஏன் இப்படி குண்டும் குழியா இருக்கு தெரியுமா...? ரோடு போடுற கான்ட்ராக்டர் சரியில்லை. இந்த பைப்பில் ஏன் தண்ணீர் வரவில்லை தெரியுமா..? தண்ணீர் டேங் பைப்பை இன்னும் யாரும் திறக்கல.. தெருவிளக்கு ஏன் எரியமாட்டேங்குது தெரியுமா..லைட் பியூஸாகி விட்டது. இந்த பஸ் ஏன் ஆக்சிடெண்ட் ஆகுது தெரியுமா..?  டிரைவர் சரியில்லை. அதனால் தினமும் டியூட்டிக்கு செல்லும்முன் ஒரு மருத்துவரை வைத்து ஓட்டுனர்களை சோதிக்கணும். இப்படிப்பட்ட சமூக விழிப்புணர்வு ஐடியாக்களை, நாலு பேரைக் கூப்பிட்டு தெரு முக்குல கூட்டம் போட்டு சொல்லுங்க. அப்புறம் பாருங்கள் .

எல்லோரும் எழுந்து நின்று கைகளைத் தட்டி,'இப்படி ஒரு அறிவாளியைத்தான் நாங்க தேடிகிட்டு இருந்தோம். இவ்வளவு நாளா நீ எங்க இருந்த ராசா...' என்று உங்களை ஆரத்தழுவிக் கொள்வார்கள். 'இம்பூட்டு  நாளா மூடிக்கிடந்த எங்கள் அறிவுக்கண்ணை சாவி இல்லாமலே திறந்து விட்டியே தம்பீ...'  என்று பெக்கர் முதல் கலெக்டர் வரை உங்கள் காலில் விழுவார்கள். 'இந்தத் தம்பி சொன்னது என்னிக்கு நடக்குதோ அன்னிக்குத் தான் நமக்கு உண்மையான சுதந்திரம் கிடைச்ச மாதிரி..'  என்று சொச்ச நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கும் தியாகிகள் எல்லாம் உங்களை கையெடுத்துக் கும்பிடுவார்கள்.

இவ்வளவு ஏன் நீங்கள் பிரதமராகக் கூட வாய்ப்பிருக்கிறது.

என்ன...சொந்த மானிட்டராக இருந்தாலும் பரவாயில்லை, பொளிச்னு துப்பிடலாம்னு தோணுமே. எனக்கும் அப்படித்தான் தோணிச்சி, ஜெய்ஹிந்த்-2 படத்தை பார்த்தபோது...! .


ஒரு நாய் அனாதையா செத்துக்கிடக்கிறத பார்த்தவுடனையே அர்ஜுனுக்கு ஜென்டில்மேன், முதல்வன் படம் ஞாபகத்துக்கு வந்திடும். உடனே "மனுசனா பொறந்ததுக்கு ஒரு அர்த்தம் இருக்கணும். வாழ்க்கையில ஏதாவது சாதிக்கணும்" னு சொல்லிட்டு கிளம்புவாரு. ஏதோ புரட்சி பண்ணப்போறாரு என்று பார்த்தால் இணையத்துல எதைஎதையோ தேடுவாரு. முடிவில ஹீரோயின் சைலண்டா வந்து 'இது மட்டும் நடந்திருச்சுன்னா இந்தியா வல்லரசு ஆகிடும்' என்பாங்க.

ரமணா பாணியில ஏதோ நடக்கப் போகுதுன்னு சீட் நுனி வரை நகர்ந்து  சீரியஸா கவனிச்சா, பிரஸ்ஸை கூப்பிட்டு, "தனியார் பள்ளிகளை எல்லாம் தேசியமயமாக்கனும்" னு வடை சுடுவாரு. அதற்கடுத்து நடக்கும் பாருங்க கொடுமை....! அவர் சொன்னது இந்தியா பூரா பரவி எல்லோரும் அபிமன்யு சொன்னது மட்டும் நடந்துட்டா இந்தியா அப்படியாகிடும்..இப்படியாகிடும்னு பில்டப் கொடுப்பாணுக.. இவ்வளவு நாளா எல்லோரும் அடிமுட்டாளா இருந்திருக்கோம் போல. அட இதைக்கூட மன்னித்து விடலாம். ஜெயில்ல இரண்டு கைதிகள்  அர்ஜுனைப் பார்த்து,"டிவியில பாத்தேன் தலைவா. சோக்கா பேசின..","தம்பி நீ நூறு வருஷம் நல்லா இருக்கணும் தம்பி.."என்று சொல்லும்போது வரும் பாருங்க ஒரு கோபம்.. தட் அவரே குண்டு வைப்பாராம் அவரே எடுப்பாராம் மொமென்ட்..!

ஏம்பா இந்தியாவில உள்ளவங்க எல்லாம் இந்த அளவுக்குக் கூட சிந்திக்கும் திறன் இல்லாதவர்களா.. தினமும் டிவியில விவாதம் என்கிற பெயரில் ஆளுக்கொரு ஐடியா சொல்றாங்க.. அவர்கள் எல்லாம் உலக பேமஸ் ஆகிடுறாங்களா என்ன..? அப்படிப் பார்த்தா நீயா நானா கோபியும் மனுஷ்யப் புத்திரனும் இந்நேரம் ஐநா சபை வரை போயிருக்க மாட்டாங்களா.. என்ன லூசுத்தனமான கான்செப்ட் அது..?  டிராபிக் ராமசாமிக்கே ஃபைனப் போட்டு ஆஃப் பன்ற ஊருய்யா இது.

எப்பவோ போட்ட டீ -யை இப்போ வந்து எதுக்கு ஆத்து ஆத்துன்னு ஆத்துறேன்னு கேக்கிறீங்களா.. ?  இரண்டு நாட்களுக்கு முன் ஒரு செய்தி படித்தேன். "ஜெய்ஹிந்த்-2 படத்தை பிரதமருக்கு போட்டுக் காண்பிப்பேன்.." என்று அண்ணாத்தே அர்ஜூன் பேட்டி  கொடுத்திருந்தார்.  அதனாலதான் இவ்வளவு ஆத்த வேண்டியிருக்கு.

பாவம் அவரே பேக்கேஜ் டூர்ல ஒவ்வொரு நாடா சுத்திப் பாக்கப் போயிருக்கார். அதிலும் கேமராவைத் தேடித்தேடி போஸ் கொடுத்தே டயர்டா போயி வருவாரு. வந்த உடனே படத்தை போட்டு காண்பித்து ஏன்யா அவரை இன்னும் டயர்டா ஆக்கணும்..?


ஜெய்ஹிந்த் வெளிவந்த 1994 ஆம் வருடத்தில் இந்தியாவிலிருந்து ஆஸ்கருக்கு அனுப்ப எந்தப் படமும் சிக்காததால் வேறு வழியில்லாமல் அப்படம் தேர்வானது. வித்தியாசமான கவுண்டமணி-செந்தில் காமெடி டிராக், ரகளையான(ஹி..ஹி..) ரஞ்சிதா என்கிற கமர்சியல் கலவைகள் நிறைந்திருந்தாலும் patriotism என்கிற விஷயம் ஆங்காங்கே தூவப்பட்டிருந்தது பாராட்டும்படி இருந்தது . எப்படா இது மண்டையப் போடும் என்று எரிச்சல் ஏற்படுத்தும் மனோரமாவின் போர்சனைத் தவிர படம் அவ்வளவு மோசமில்லை. ஆனால் ஜெய்ஹிந்த்-2 வில் கான்செப்ட்டும் காமெடியும் மொக்கை, ஹீரோயின் சப்பை என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். சுவாரஸ்யமாகப் போகவேண்டிய திரைக்கதையை இப்படி தலைகீழாகத் திருப்பி  சொதப்பியிருக்கிறார்களே..!

திரைக்கதையைப் பற்றி அவ்வளவு நுட்பமாக எனக்குத் தெரியாது. இணையத்தில் உள்ள திரைக்கதைப் புலிகள் யாராவது சொல்லட்டும். இந்தப் படத்தில் மூன்று முக்கிய சம்பவங்கள் நடக்கிறது. அதைப் பின்னித்தான் திரைக்கதை அமைத்திருக்கிறார்கள்

1. தனியார் பள்ளியில் படிக்கும் குழந்தைக்கு பீஸ் கட்ட முடியாமல் ஒரு குடும்பம் தற்கொலை செய்துக் கொள்கிறது.

2. அதனால் பாதிக்கப்பட்ட அர்ஜுன் பிரஸ்மீட் வைத்து ஒரு புதிய திட்டத்தை அறிவிக்கிறார். நாடு முழுதும் அது காட்டுத்தீயாகப்(!) பரவுகிறது.

3. நீதி கிடைக்காததால் வெளிநாட்டில் பயிலும் தனியார் பள்ளி உரிமையாளர்களின் வாரிசுகளைக் கடத்துகிறார்.

இம்மூன்று சம்பவங்களும் இதே வரிசைப்படி நடப்பதாக திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை அப்படியே ரிவர்ஸில் அமைத்திருந்தால்...!

1. வெளிநாட்டில் படிக்கும் தனியார் பள்ளி உரிமையாளர்களின் வாரிசுகளை அர்ஜுன் கடத்துகிறார். அது இந்தியா முழுமையும் பரபரப்பான செய்தியாகிறது. யார் கடத்தினார்கள். அவர்களின் நோக்கம் என்ன என்று மீடியாக்கள் அலசுகிறது.

2.கடத்திய அர்ஜுன் ஒரு பிரஸ்மீட் ஏற்பாடு செய்யச் சொல்கிறார். இந்தியாவே அந்த பிரஸ்மீட்டை ஆவலுடன் எதிர்பார்க்கிறது.

3. எதற்காகக் கடத்தினார் என்று சொல்வதற்கு முன், ஒரு குடும்பம் தற்கொலை செய்துகொள்ளும் பிளாஸ்பேக்கை அவிழ்க்கிறார். அதைக்கேட்ட எல்லோரும் அதிர்ச்சியாகிறார்கள். அதன்பிறகு அந்த தேசியமயமாக்கல், இன்னபிற சமாச்சாரங்களை எல்லாம் சொல்கிறார்.

அதன் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு வருவதுபோல் காண்பித்தால், சொல்ல வந்த விஷயம் இன்னும் வீரியமாக இருக்கும், படமும் விறுவிறுப்பாக இருக்கும். ரமணா படத்தின் திரைக்கதையும் கிட்டத்தட்ட அப்படிப் பட்டதுதானே..


ஒரு ஏழ்மையான குடும்பம். அவர்கள் படிக்கும் காலத்தில் வசதிகள் இல்லாததால் படிப்பறிவு இல்லாமல் கூலிவேலை செய்துவருகின்றனர் . அதனால் தன் ஒரே மகளை எப்படியாவது கஷ்டப்பட்டு தனியார் பள்ளியில் படிக்க வைத்து பெரிய உத்தியோகத்துக்கு அனுப்பவேண்டும் என்று அக்குழந்தையின் அப்பா ஆசைப்படுகிறார். அதற்காக கண்டவன் காலில் விழுந்து (LKG அட்மிசனுக்காக!) பணம் புரட்டுகிறார். பணப் பற்றாக்குறையால் தன்  கிட்னியையே விற்கிறார்.அப்படியும் பணம் பற்றாததால் குடும்பத்தோடு தற்கொலை செய்துக் கொள்கிறார்கள். (அந்தக் குழந்தை பிரைவேட் ஸ்கூலில் படிக்க வைத்தால்தான் படிப்பேன் என அடம்பிடித்ததா என்ன..அதை எதுக்குய்யா கொல்லனும்..?.) ஜென்டில்மேன் படத்தின் பிளாஸ்பேக் ஞாபகம் வருது இல்லையா..? 

இந்தப் படத்தில் அர்ஜுன் சொல்லும் அந்த 'கான்செப்ட்' ,  நடைமுறை சாத்தியமில்லை. அதனால் அதை விட்டுவிடுவோம். ஆனால் அந்த சோக சம்பவம் மூலம் அர்ஜுன் என்ன சொல்ல வருகிறார்..?. தனியார் பள்ளியில்தான் நல்ல கல்வி கிடைக்கிறது. சாப்பாட்டுக்கே வழியில்லை என்றாலும் அரசுப் பள்ளியில் படிக்க வைக்காமல் தனியார் பள்ளியில் சேர்த்தால்தான் உயர்ந்த உத்தியோகத்துக்கு போக முடியும். அதற்காக கிட்னியைக் கூட விற்கலாம்.

ஒருவேளை, அரசுப் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவனின் பெற்றோர் இந்தப் படத்தைப் பார்த்தால் என்ன நினைப்பார்கள்...? பிரைவேட் ஸ்கூல் LKG  சீட்டுக்காக ஒரு குடும்பமே தற்கொலை செய்துகொள்கிறது என்றால் நாமதான் அறிவுகெட்ட தனமா நம்ம பிள்ளையை கவர்மென்ட் ஸ்கூலில் படிக்க வைத்துவிட்டோம் போல என நினைக்கத் தோன்றாதா ?

இப்படி ஒரு மொக்கை கான்செப்ட் உள்ள படத்தைப் போட்டுக் காட்டுறேன் என்று  பிரதமர் ஆபிஸ் பக்கம் போனால் செக்யூரிட்டியே காரித்துப்பிடுவான்.



Wednesday, 22 October 2014

பூஜை

பூஜை



கோயிலுக்கு தானமாகக் கொடுத்த பூர்வீக நிலத்தை அபகரிக்க நினைக்கும் வில்லனிடமிருந்து தனியாளாக விஷால் மீட்பதே படத்தின் ஒன் லைன் .

இந்த மொக்கை கதையை மட்டும் வைத்துக்கொண்டு  வழக்கமான கார் சேசிங், தாறுமாறாக காற்றைக் கிழிக்கும் அரிவாள், 100 அடி உயரத்தில் பறக்கும் சுமோ,கொஞ்சம் குடும்ப செண்டிமெண்ட் என ஹரி படத்தின் அத்தனை சமாச்சாரங்களையும் கலந்து களமாடியிருக்கிறார்கள். ஆனால் திரும்பத் திரும்பப் பார்த்து சலித்துப்போன காட்சிகளால் நமக்கு வெறுப்புத்தான் மிஞ்சுகிறது.

ஹரி படத்தில், ஹீரோவும் வில்லனும் மாறிமாறி கத்தி நமக்கு எரிச்சலை  ஏற்படுத்தினாலும் அதையெல்லாம் மறக்கும்படி நெகிழ்ச்சியான செண்டிமெண்ட் சீன்  இடையில் செருகியிருப்பார்.. அழகான குடும்ப அமைப்பை காட்சிப்படுத்துவார். ஆனால் இதில் காட்டுகிறாரே ஒரு குடும்பம்....! கொலைகார குடும்பம்..!.

பல வருடங்களாக மகனை ஒதுக்கி வைத்த தாய் திடீரென்று மகனை வரவழைத்து 'வில்லனின்  கையை முறிச்சி வா' என்கிறார். குழந்தைகளுக்கு சாவு பயத்தை காட்டிடாணுவ அவனுகளை கொன்னுடு என்று சுருதி உசுப்பேத்தி விடுகிறார். அவன் கையை முறிச்சிட்டு வந்ததுக்கு பதிலா அவன் கையை வெட்டிட்டு ஜெயிலுக்கு போனானும் பரவாயில்லை என்று அத்தை ரேணுகா கதறுகிறார். இவ்வளவுக்கும் அந்த குடும்பத்தில் இருக்கும் ஒரே ஆண்பிள்ளை... மூத்த பிள்ளை...விஷால்தான்.

வில்லனை விஷால்  அடித்து துவைத்ததை சின்ன வாண்டுகள் முதற்கொண்டு வீட்டுப் பெண்கள் வரை குடும்ப மானத்தைக் காப்பாற்றி விட்டதாக விஷாலை தலையில் வைத்து கொண்டாடுகிறார்கள் .

படம் முழுக்க கூலிப்படை என்கிற வார்த்தை உச்சரிக்கப்படுகிறது. எல்லோரும் பிகாரிகள்  (அவர்கள் மேல் என்ன கோபமோ..). போதாக்குறைக்கு விசாலை அவர் குடும்பமே ஒரு கூலிப்படை போல்தான் நடத்துகிறது.



இந்தப் படத்தில் அற்புதமான தாய்-மகன் பாசப்பிணைப்பை வேறொரு கோணத்தில் அலசியிருக்கிறார் ஹரி.  தன் சொந்த பிள்ளையை உதவாக்கரை..உருப்படாதவன்.. தண்டச்சோறு .. இப்படி திட்டும் அப்பாக்களை மட்டும்தானே திரையில் பார்த்திருக்கிறீர்கள். இதில் அம்மாவை காண்பிக்கிறார் ஹரி.. இவ்வளவுக்கும் எந்த வம்பு தும்புக்கும் போகாமல் வீட்டில் எல்லோரையும் மதித்து நடக்கும் நல்ல பிள்ளையாகத்தான் விஷால் இருக்கிறார். அப்பாவும் கிடையாது. ராதிகாவுக்கு  ஒரே ரத்த சொந்தம் தன் மகன் விஷால் மட்டும்தான் . ஆனால் சூரியவம்சம் சக்திவேல் கவுண்டர் போல தன் மகனை எதற்காக ஆரம்பத்திலிந்து வெறுக்கிறார் என்பது புரியவில்லை. அதிலும் வீட்டை விட்டு விலக்கி வைக்கும் அளவுக்கு கல் நெஞ்சம் படைத்த தாய் இந்த உலகத்தில் எங்கு இருக்கிறார்...?

ஹரியின் செண்டிமெண்ட் பார்முலா சறுக்கியது இங்குதான். அதிலும் அம்மாவும் பிள்ளையும் சேரும் அந்தக் காட்சி இருக்கிறதே .. கண் கொள்ளாக்   காட்சி.. தமிழ்த்திரை சரித்திரத்தில் தளபதிக்கு அடுத்ததாக இந்த சீன் தான் பேசப்படும்.

படத்தில் பலவீனமே  அழுத்தமில்லாத காட்சியமைப்புகள் தான். விஷாலும் ஸ்ருதியும்  ஒருவருக்கொருவர் காதல் கொள்வது பிளாக் அண்ட் ஒயிட் காலத்து சினிமாவை விட கேவலமாக இருக்கிறது. அது ஏன் எல்கேஜி  படிக்கிற பொண்ணு பேச்சுப் போட்டியில் பேசுற மாதிரியே ஸ்ருதி பேசுது...?  பேசுவதைக் கூட பொறுத்துக் கொள்ளலாம்.ஆனால் கவர்ச்சி காட்ட முயல்வதுதான் மிகக் கொடுமை. கவுசல்யா கவர்ச்சி காட்டியதையே சகித்துக்கொண்ட இத்தமிழ் சமூகம் இதையும் சகித்துக் கொள்ளும் என் நம்புவோமாக...

சமீபத்தில் வெளிவந்த எந்த படத்தைப் பார்த்தாலும் அதில் சூரி கண்டிப்பாக இருக்கிறார். அவர் காமெடியனா அல்லது ஹீரோவின் தோழனா என்பதை டைட்டிலிலே போட்டுவிடுவது நல்லது. பரோட்டா காமெடிக்குப் பிறகு சூரி நடித்த ஒரு காமடியாவது நினைவுக்கு வருகிறதா..?

சூரி, இமான் அண்ணாச்சி, பாண்டி கூட்டணியில் இவர்கள் அடிக்கும் லூட்டி தலைவலியின் உச்சம். ஒருவரையொருவர் மாற்றி மாற்றி அடித்துக் கொள்கிறார்கள். கேட்டால் காமெடியாம். விஷால் -சூரி வரும் அநேக காட்சிகளில் சூரி விஷாலிடம் அடிவாங்குகிறார். அதுவும்  காமெடியாம். ஆண்டவா இந்த இமான் அண்ணாச்சியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். இந்த சூ(ர )ரி மொக்கையிலிருந்து  தமிழ்சினிமாவைக் காப்பாற்று.

காதலித்து ஓட முயன்ற ஸ்ருதியின் தோழியாக வரும் பெண்ணைப் பார்த்து தே..தே...தேவதைன்னு சொல்ல வந்தேன் என்பார் சூரி. அதாவது காதலித்து தான் விரும்பியவருடன் ஓடிப் போக நினைப்பவள் தேவடியாளா...? என்ன கொடுமை சார் இது..  இதெல்லாம் ஒரு காமெடியா..?

ஆனால் இதையெல்லாம் மிஞ்சுகிற ஒரு காமெடிக் காட்சி இருக்கிறது. ஸ்ருதியின் தோழி தன்  காதலருடன் ஓடிப்போவாள் . அவர்களை மறித்து விஷால் அட்வைஸ் செய்வார். நாலே டயலாக்தான். ஓடிப்போக எத்தனித்தவர்கள் மனம் திருந்தி மன்னிப்புகேட்டு பிரிந்துசென்றுவிடுவார்கள். இந்த அற்புதத்தை திரையில் கண்டுகளியுங்கள்.

தேவதை பாடல் மட்டும் பரவாயில்லை. வழக்கம்  போல ஹரியின் இந்தப் படத்திலும் பின்னணி இசையை, கார் கிரீச்சிட்டு பறக்கும் சத்தமும் உலோகங்கள் ஒன்றோடு ஓன்று மோதும் சத்தமும் , பன்ச் டயலாக்கும் மொத்தமாக விழுங்கி விடுகிறது.

ஹரி படத்தில் பிரேமுக்கு ஒரு வில்லன் என புதிது புதிதாக முளைப்பார்கள். அத்தனை போரையும் ஹீரோ ஓய்வில்லாமல் புரட்டி எடுப்பார்.நல்லவேளை இதில் ஒரே வில்லன்தான்(முகேஷ் திவாரி) . அதற்காக படம் முழுதும் அவர்  ஒருவரையே அடித்து துவைத்தெடுப்பது பாவமாக இல்லையா..?

அதுசரி.. இந்தப் படத்தில் சத்யராஜ் எதற்கு...?  காவல்துறை அதிகாரியாக அறிமுகமாகும் போது அமர்க்களமாக  இருக்கிறது. அத்தோடு காணாமல் போகிறார். கடைசியில் வருகிறார். விசாலை அடிக்கவிட்டு வேடிக்கை பார்க்கிறார். இறுதியில் வில்லனை விஷால் கொன்றுவிட, கடமை தவறாத காவல்துறை அதிகாரியான அவர் தன் துப்பாக்கியால் ஏற்கனவே இறந்த வில்லனை சுட்டுவிட்டு ஹீரோவை தப்பிக்க விடுகிறார்.(யோவ் இத இன்னும் எத்தனை படத்திலய்யா காண்பிப்பீங்க..)

இன்னொரு தாமிரபரணியாக இருக்கும் என்று நினைத்து போனால் இன்னொரு தோரணையாக..ம்ஹும் ..அந்த அளவுக்கு  கூட இல்லை.


Tuesday, 3 December 2013

ஸ்ருதி பாய்ந்த பதினாறு அடியும் சிவாஜிக்கு விழுந்த மரண அடியும் (சும்மா அடிச்சு விடுவோம்-8 )

இந்தியா மார்ஸ்-க்கு மங்கள்யான்  ராக்கெட் விட்டதற்கு அடுத்தப்படியாக மிகப் பரபரப்பாகப் பேசப்பட்ட விஷயம்,ஸ்ருதிஹாசன் வீட்டுக்குள்ள எவனோ கையை விட்டது. அதைப்பற்றிய 'சிறப்புப் பார்வை' யைத்தான் தற்போது காணப்போகிறோம்.

சில நாட்களுக்கு முன்பு மும்பை,பாந்தராவில் உள்ள அபார்ட்மென்ட் ஒன்றில் தங்கியிருந்த நம் தங்கத்தமிழச்சி ஸ்ருதிஹாசனை ஒருவர் கையைப் பிடித்து நையப்புடைத்தார் இல்லையா....!. தன் சொந்தப் பிரச்சனைக்காகத் தான் அவரைத் தாக்கினேன் என்று பிறகு கைதான அந்த நபர் தெரிவித்திருந்தார். ஆனால், அதன் பின்னணியில் வேறொரு சங்கதி இருப்பதாக வட இந்திய ஊடகம் ஒன்றில் சமீபத்தில் படிக்க நேர்ந்தது.

அதற்கு முன், தன் மகள் மீதானத் தாக்குதலைப் பற்றி, பத்துமாசம் சுமந்துப் பெத்தெடுத்த ஆத்தா சரிகா என்ன சொன்னார் என்பதுதான் இங்கே கவனிக்கப்படவேண்டிய விஷயம். அதே மும்பையில், சரிகாவின் இன்னொரு மகளான அக்சராவுடன் சரிகா தங்கியிருக்க, சுருதி மட்டும் ஏன் தனியாக தங்கவேண்டும் என்று சரிகாவிடம் கேட்டபொழுது, வெகு கூலாக அவர் சொன்ன பதில்," ஸ்ருதிக்கு தொழில் முக்கியம். என்னுடன் தங்கமாட்டார்.".

உடனே, இதைத்திரித்து வேறொரு அர்த்தம் எடுத்துக்கொள்வது சரியா என்று நியாயத் தராசை தூக்கிகொண்டு வரப்படாது ஆமா.... முதலில் தாக்குதலுக்கான பின்னணியை டீப்பா ஆராய்ந்துவிட்டு பிற்பாடு எப்படி அர்த்தம் எடுத்துக் கொள்வது என்பதை யோசிப்போம்.

(கமல் எதைப்பார்த்து இப்படி கதறி அழுகிறார் என்பதைத் துல்லியமாக அறிய ஆ.வி 3D கண்ணாடி வழியாகக் காணவும் )
சரி... முதலில் இந்தக் கோணத்தில் யோசிப்போம்.. அந்த நபர் எதற்காக ஸ்ருதிஹாசனைத் தாக்கவேண்டும்...?. ஒருவேளை அவர் சர்வதேச நடிகை(!) என்பதால், பாலியல் ரீதியான அத்துமீறல் அல்லது சில்மிசங்களில் அந்த நபர் ஈடுபட முயற்சித்திருக்கலாம் என்று பார்த்தால், அப்படியெதுவும் நடந்தமாதிரி தெரியவில்லை. திருடும் நோக்கமும் இருந்ததாகத் தெரியவில்லை. பிறகு எதற்கு கலைஞானியின் கலைவாரிசை அந்தாளு கையைப் பிடித்து முறுக்க வேண்டும்....?  இப்போது மைல்டா ஒரு டவுட் வந்திருக்குமே...! அதேதான்.அந்த ரகசியத்தைத் தான் இப்போ சொல்லப்போறேன்.

அதாகப்பட்டது, தனது கலைச்சேவையை இந்தியளவில் விரிவாக்கும் பொருட்டு, இந்தித்திரைப்பட உலகிலும் தன் பரந்த கடையை விரிப்பதற்காக சில இந்தி நடிகர்களுக்கு ஸ்ருதி தூண்டில் போட்டதாக சொல்லப்படுகிறது. பின்னே...பாலிவுட்டில் எந்தவொரு நடிகரின் அரவணைப்பும் இல்லாமல் அங்குலம் அளவுகூட நடிகைகள் வளர முடியாது என்பது உலகறிந்த விசயமாச்சே...அதில் வசமாக அந்த 'கான்' நடிகர் சிக்கியதாக பட்சி சொல்கிறது. இந்தியில் அறிமுகமாகும் நிறைய நடிகைகளை அண்ணன்தான் முதலில் 'அரவணைத்து ' வாழ்த்து சொல்லி ஊக்குவிப்பாராம்.

நம்ம ஸ்ருதி வேற கலைஞானியின் கலை வாரிசு இல்லையா..! அதனால் கொஞ்சம் அதிகமாக அரவணைக்க வேண்டியிருந்ததால், தினமும் இரவு ஸ்ருதி தங்கியிருக்கும் அபார்ட்மென்ட்டில் தங்கி அரவணைத்து சென்றிருக்கிறார் நம்ம கான் நடிகர். இது எப்படியோ அவரது மனைவியின் காதுக்கு எட்ட, வெகுண்டெழுந்த அந்த அம்மையார் போட்ட பிளான்தான் அதுவாம். ஸ்ருதியுடன் கான் நடிகர் தங்கியிருக்கும் தருணத்தில், ஸ்ருதியைத் தாக்கினால் உள்ளேயிருக்கும் 'கான்' வெளியே வருவார்.அபார்ட்மெண்டில் கூட்டம் கூடும்.கையும் களவுமாக மாட்டிக் கொள்வார்கள் என்பதுதான் அவரின் திட்டமாம். அதற்காக அவர் செட்டப் பண்ணின ஆள்தானாம் அது. ஆனால் தாக்குதல் நடத்தும்பொழுது ஸ்ருதி சுதாரித்துக் கதைவை இழுத்து சாத்திவிட, சிறு காயங்களுடன் தப்பித்துக் கொண்டார். கடைசியில அம்மையார் போட்ட திட்டம் பணால் ஆகிவிட்டதாம்.

                                           ( பதினாறு அடி பாயும் குட்டி......! )

தாக்குதல் நடந்த உடனையே ஸ்ருதி தரப்பு போலிசுக்கு போகாததற்கு இதுதான் காரணமாம். பிறகு விஷயம் வெளியே தெரிந்தவுடம், கண்துடைப்புக்காக புகார் கொடுத்துவிட்டு பிற்பாடு பூசுதல், மொழுகுதல் வேலை எல்லாம் நடந்தது ஊரரிந்ததுதான்.

இதிலென்ன இருக்கு.? சினிபீல்டில்,அதுவும் பாலிவுட்டில் இதுபோன்ற சங்கதிகள் நடப்பது ஒன்றும் அதிசயமான நிகழ்வில்லையே..... அப்படினுதான் நீங்க, நான் மட்டுமல்ல....., கமல் கூட நினைத்திருப்பார்..! ஏனெனில், அவருக்குத் தான் திருமணம் என்பதே பழைய பஞ்சாங்கம் போன்றதாச்சே...! லிவிங் டுகெதர், கோயிங் ஸ்டெடி எல்லாம் நம் கலாச்சாரத்தோடு கலந்த ஒன்றுதான் என்று வாதிடுகிறவராச்சே... !

இவ்வளவு ரகளைக்குப் பின், ' பார்த்து ஜாக்கிரதையாக இருக்கவும்' என்கிற ஒரேயொரு அட்வைஸோடு ஒரு அப்பாவாக அவர் கடமை முடிந்துவிட்டது. எனக்கு என்ன தோன்றுகிறதென்றால், ஸ்ருதி எந்தப் பின்புலமும் இல்லாதவரா என்ன...? அல்லது நடித்துதான் தன் குடும்பத்தையும் தன்னை நம்பியிருப்பவர்களையும் காப்பாற்ற வேண்டும் என்கிற நெருக்கடியில் இருப்பவரா என்ன..? . பிறகு எதற்காக வாய்ப்பு வேண்டும் என்று இவ்வளவு தூரத்திற்கு இறங்க வேண்டும். ஒருவேளை மேற்சொன்ன தகவல் உண்மையாகவே இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஹிந்தியில் முன்னணி  நடிகையாக ஒரு பெண் வரவேண்டுமென்றால் 'அட்ஜெஸ்ட்' செய்துகொண்டால் மட்டுமே சாத்தியம் என்கின்ற கசப்பான உண்மையை கமல் அறியாமல் இருப்பாரா என்ன..?

கேட்டால், என் வீட்டு பாத்ரூமை எதற்கு எட்டிப் பார்க்கிறீர்கள் என்று தர்க்க ரீதியாக கேள்வி எழுப்புவார். நாங்கள் சினிமாக்காரர்களை வெறும் பாத்ரூம் சமாச்சாரமாக மட்டும் பார்த்திருந்தால் , நாற்பது ஆண்டுகளுக்கு மேல் எங்கள் தமிழகத்தை சினிமாக்காரர்களின் கைகளில் கொடுத்திருப்போமா...? அடியேன் கலைஞானியின் தீவிர ரசிகன்தான். கலைக்கு ஞானியாக இருப்பவர், கலாச்சாரத்திற்கும் ஞானியாக இருக்க வேண்டிய அவசியமில்லை, குறைந்த பட்சம் அதைக் கெடுக்காமல் இருக்கலாமே.

உலக நாயகன்கள் என்றால் அப்படித்தான் இருப்பார்கள் என்கிற குருட்டு வாதம் இங்கே செல்லாது. இறுதி மூச்சுவரை, தனது மகன்கள்,பேரப்பிள்ளைகள் எல்லோரையும் ஒரேவீட்டில் வைத்து ஒற்றுமையாக குடும்பம் நடத்தி காண்பித்திருக்கிறார் நடிப்புக்கே இலக்கணம் எழுதிய ஒருவர். தன் மகனுக்கு கற்பு நடிகையுடன் கனெக்சன் ஏற்பட்டபோது, கவலையால் நொடிந்து போனார் சிம்மக் குரலோன். அதைக் காரணமாக வைத்தே இருவரையும் பிரித்தார்கள் என்பது கோடம்பாக்க வரலாறு.
நடிகர் திலகம் அவர்களின் சிலையை அகற்றப்போவதாக வந்த செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. 12 வருடங்களுக்கு முன்பே மூட்டை முடிச்சி எல்லாம் கட்டிக்கொண்டு சென்னையிலிருந்து கிளம்பிவிட்டதால், அந்தக் கம்பீர சிலையை கண்களால் காணும் பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லை. வருடத்திற்கு ஒருமுறை சென்னையை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும், அது ஏர்போர்ட், தி.நகர், ECR ரோடு என பயணம் திசைமாறி விடுகிறது. ஒருவேளை ஏற்கனவே அச்சிலையை பார்த்திருந்தால் இன்னும் வருத்தம் கூடியிருக்கும்... போகட்டும்...

" கோயிங் ஸ்டெடி பார்ட்னர்.."  (3D)

வெறும் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இதுபோன்ற அக்கிரமங்கள் நடப்பது எவ்வளவு வேதனைக்குரியது..!. போக்குவரத்துக்கு  இடைஞ்சல், விபத்து மிகுதியானப் பகுதி என்பதெல்லாம், என்னைக்கேட்டால் சுத்த Humbug.. அப்படிப் பார்த்தால் அம்மையாரின் கோயிங் ஸ்டெடி பார்ட்னர் சிலை கூடத்தான் நடப்பவர்களுக்கு இடைஞ்சலாக இருக்கிறது. அதை அப்புறப்படுத்தட்டுமே...!

' நாங்கள் என்ன சிலையை மொத்தமாக அகற்றவேண்டும் என்றா சொல்கிறோம்..? கொஞ்சம் தள்ளி(!) மெரினா பீச்சில் வைக்கச் சொல்கிறோம். அவ்வளவுதானே' என்று ஒத்தடம் கொடுப்பவர்கள் கவனத்திற்கு...

ஒருவரை கௌரப்படுத்துவதற்காக வைக்கப்பட்ட சிலையிலிருந்து ஒரு செங்கல் அகற்றப்பட்டாலே, அது சிலையாக நிற்பவருக்கு இழைக்கப்பட்ட அநீதி,அவமானம் போன்றதுதான்.
அதற்கு பேசாமல் அந்தச் சிலையை உடைத்தே போட்டு விடலாம். கழுத்தில் கட்டின தாலி உறுத்துகிறது என்பதற்காக அதைக் கழட்டி காலில் கட்ட முடியுமா பாஸ்.....? ( ரொம்ப ஆராயக்கூடாது... :-)) அடுத்த மேட்டருக்கு போகவும்) 
என் பக்கத்து சீட்ல ஒரு பிலிப்பைன்ஸ்காரன் இருக்கான் என சொல்லியிருந்தேன் அல்லவா..  நேற்று லஞ்ச் பிரேக்குல பேசிகிட்டு இருந்தப்போ, எதேச்சையாக சைனாகாரனுவ பத்தி பேச்சு வந்தது. முக்கியமாக அவனுக யூஸ் பன்ற 'டிஸ்யூ பேப்பர்' பற்றி. 

" இவனுக எப்படித்தான் டாய்லெட்டுக்கு பேப்பர் யூஸ் பன்றானுகளே தெரியில.. என்னதான் இருந்தாலும் தண்ணியை ஊத்தி சும்மா சள சளனு மேட்டர் முடிப்பதில் உள்ள திருப்தி அதில கிடைக்குமா..?.அதுவுமில்லாம, கருமம் புடிச்சவணுக டாய்லெட்ல ஒரு பக்கெட், மக் வைக்கிரானுகளா பாரு. எனக்கெல்லாம் எவ்வளவு அடக்கமுடியா அவசரமாக இருந்தாலும், ஹாஃப் டே லீவ போட்டுட்டு, டாக்சியை புடிச்சாவது வீட்டுக்கு போயி நிம்மதியா போவேனே தவிர, இந்த பப்ளிக் டாய்லட் அல்லது  ஆபிஸ் டாய்லட் யூஸ் பண்ணவே மாட்டேன்.  உனக்கு எப்படி... இந்த பேப்பர் மேட்டர் ரொம்ப சௌகரியமா இருக்கா.." என்று அவனிடம் கேட்டேன்.

" ச்சே...ச்சே...எனக்கும் பேப்பர் யூஸ் பண்ண புடிக்காது.  வேற வழியில்லாம யூஸ் பண்றேன் " என்றான் .

"அப்படியா....?! " என்றேன் ஆச்சர்யமாக.

" ஆமாம். பிலிப்பைன்ஸ் பூராவும் தண்ணிதான் யூஸ் பண்ணுவாங்க.. எனக்கும் சள சளனு தண்ணியை ஊத்தி கிளீன் பன்றதுதான் புடிக்கும்.." என்றான்.

என்னவோ தெரியில... அவன் அப்படி சொன்னதிலிருந்து ஏதோ நம்ம சொந்தக்கார பயலை நேரில் பார்த்த மாதிரி ஒரே  பீலிங்...!

கடைசியா அவன் தோள்மீது கைபோட்டு சொன்னேன், " நீ என் இனமடா.... ! "

கலாட்டூன் கார்னர்...


இது 3D அனிமேசன் . Photoshop மூலம் முயற்சி செய்தேன்... இதையும் ஆ.வி 3D கண்ணாடி வழியாகக் காணவும். இனி இப்படித்தான், வாரம் ஒருத்தர் வாயில கத்தியை வுட்டு ஆட்டலாம்னு இருக்கேன்.. :-))

--------------------------------------------------------------X------------------------------------------------------
 அடிச்சி விடுவோம் பகுதியில இனி, தமிழ் சினிமாவில் அற்புதம் நிகழ்த்திய பல நடன அசைவுகளை கண்டெடுத்து உங்கள் பார்வைக்கு விருந்தாக்கலாம் என்றிருக்கிறேன்.

மானாட மயிலாட, ஜோடி நம்பர் -1 போன்ற நடனப்போட்டிகளில் கலந்துகொள்ளும் ஆர்வத்தில் இருப்பவர்கள், முதலில் இதைப் பார்த்துவிட்டு, இதைவிட சிறப்பாக ஆடிவிட முடியுமா என்பதை யோசித்துவிட்டு ,பின்பு போட்டிகளில் கலந்து கொள்வது பற்றி முடிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இது மிகவும் சிக்கலான கொரியோகிராஃப். எல்லோராலும் முடியாது. சிறு வயதில் ஸ்கூல் பெல் அடித்தவுடன், புத்தக மூட்டையை பின்னால் மாட்டிவிட்டு, கைகள் இரண்டையும் அகலமாக வைத்துக்கொண்டு, "டுர்ர்ர்... டொட்..டொட்.. டொட்.. டுர்ர்ர்.....ர்ர்ர்....ர்ர்ர் " என்று காற்றிலே பைக் ஓட்டிய முன் அனுபவம் இருந்தால், இதை சுலபமாக கற்றுக்கொள்ள முடியும். 




                                                                                                        இன்னும் அடிச்சி விடுவோம்..............

Monday, 11 November 2013

சிம்புவின் கரண்ட் லவ்வரும், ஒரு கில்மா பூங்காவும்...(சும்மா அடிச்சி விடுவோம்..-5 )



'காரை வச்சிருந்த சொப்னசுந்தரியை இப்போ யாரு வச்சிருக்கா' என்பதை கூட ஈசியா கண்டுபிடித்து விடலாம்யா. ஆனா நம்ம சிம்பு கரண்ட்ல யாரை வச்சிருக்காரு என்பதைத்தான் யாராலயும் கண்டுபிடிக்க முடியலையாம். ஆனா ஒரு விஷயத்தை பாராட்டியே ஆகணும். சிம்பு சீசனுக்கு ஒன்னு மாத்தினாலும்  சீக்ரெட்டா எதையும் வச்சிகிறதில்ல.  எப்படியோ மீடியாவுக்கு தெரியப்படுத்தி, எங்கப்பனைப் போல இல்ல, நான் ஒரு மச்சக்கார மன்மதன் என்று காட்டிக் கொள்வதில் அவருக்கு அப்படி ஒரு அலாதி.

லேட்டஸ்டா, ஆண்ட்ரியா போட்ட பாலில்(ஐ மீன்..பந்து) சிம்பு கிளீன் போல்டானாதாக கோலிவுட்ல பேசிக்கிறாங்க. இரண்டு பேருமே கிரவுண்டில் நின்று அடித்து ஆடுவதில் வல்லவர்கள் என்பதால் யார் பாலில் யார் போல்டானார்கள் என்பதுதான் தெரியில.. போகட்டும்...


இப்போ எனக்கு ஒரு சந்தேகம். முதலில் சிம்பு நயன்தாராவை லவ் பண்ணினார். என்ன பிரச்சனையோ தெரியவில்லை, நயன்தாரா பிரிந்து சென்று பிரபுதேவாவை லவ்வினார். அல்லது பிரபுதேவா 'கீப்'பினார். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் நெருக்கமாக வளர்ந்த இவர்களின் ' லிவிங் டுகெதர் ' சமாச்சாரத்தின் இடையில் கரடியாக புகுந்தவர்தான் ஹன்சிகா. எங்கேயும் காதல் பட ஷூட்டிங்-ன் பொழுது  எங்கெங்கோ போயி காதல் பண்ணி 'ஸ்லீப்பிங் டுகெதர்' வரை சென்ற விஷயம் நயனுக்கு கிட்டவே, காதல் புட்(டுகிட்)டது.

அதன் பிறகுதான் சுவாரஸ்யம். இந்த தெய்வீக காதல் பணால் ஆக காரணமான அந்த சப்பாத்தி மாவு, பின்னர் முதல் காதலில் பணால் ஆனவரோடு தற்போது லவ்விக்கொண்டு இருக்கிறார். இப்போ இந்த 'சர்க்யூட்' பக்காவா முழுமையடைத்திருக்கு இல்லையா... ? அதாவது நான் லவ்வியவளை அவர் 'கீப்'பினார்... அவர் லவ்வியவரை நான் 'கீப்'பிகிறேன். இதிலிருந்து என்ன தெரியுது... வாழ்க்கை என்பது மட்டும் ஒரு வட்டம் அல்ல... காதல் கூட ஒரு வட்டம்தான்..


ஆனால் இங்கதான் டிவிஸ்ட்...  கடைசியாக, இந்த பணால் பார்ட்டிகளின் காதலுக்கு இடையில் புதுசா ஒரு பியூட்டி நுழைந்திருக்கு. பட் என்ன கொடுமைனா,  இதுவும் ஏற்கனவே அனிருத்கிட்ட அடிவாங்கினதுதான்.

ஆகக்கடைசியா எனக்கு என்ன தோனுதுனா...  இதைவைத்து ஏன் தமிழில் ஒரு சினிமா எடுக்கக் கூடாது...? இப்படியொரு காதல் கதை இதற்கு முன் தமிழ் சினிமாவில்.. ஏன் இந்திய சினிமாவில் வந்திருக்கிறதா..?     ஏக்து​ஜே ​கேலி​யே வுக்குப் பிறகு நல்ல காதல்கதை எதுவும் வரவில்லை என்கிற குறையை இந்தப்படம் போக்கும் என்பது என் கணிப்பு. :-))

வேண்டுமானால் சுவாரஸ்யத்திற்கு சின்ன மாற்றம் செய்துக்கொள்ளலாம். பிரபுதேவா-நயன்தாராவை பிரிக்க சிம்பு அனுப்பிய அம்புதான் ஹன்சிகா என்கிற உண்மையை கிளைமாக்சில் சொல்றமாதிரி வைத்துக் கொள்ளலாம்.

அப்புறம் இடைவேளையின் பொழுது , பிரபு தேவாவைப் பார்த்து சிம்பு இப்படி பன்ச் டயலாக் பேசுற மாதிரி வச்சிக்கலாம்..

"இன்னிக்கு இந்தியாவிலே பெரிய டான்சர் என்கிற திமிர்ல என் பிகர நீ உஷார் பண்ணி எனக்குள்ள இருக்கிற மன்மதனை தட்டி எழுப்பிட்ட. தேவா...இதுவரை இந்த சிம்புவை விரல் சூப்பிரவனா பாத்திருக்க. இனிமேல விரல்வித்தைக்காரனா பாக்கப்போற. இந்த நாள்........, உன்னுடைய காலண்டர்ல குறிச்சி வச்சிக்க.  இன்னியிலிருந்து உன் அழிவுகாலம் ஆரம்பிச்சிடிச்சு. எனக்கும் உனக்கும் தர்மயுத்தம் தொடங்கிடிச்சி. இந்த யுத்தத்தில, நீ எப்படி என் பிகர உஷார் பண்ணி என்னை முச்சந்தில நிக்க வச்சி பொலம்ப விட்டியோ, அதே மாதிரி நானும் நீ பிக்கப் பண்ற எல்லா பிகரையும் உஷார் பண்ணி உன்னையும் என்னைப்போல முச்சந்தில நிக்க வச்சி பொலம்ப விடல.. நான் எங்க கரடிக்கு... ச்சீ..எங்க டாடிக்கு பொறக்கலடா ..."


ஆரம்பம் படத்திற்கு இணையத்தில் முதல் விமர்சனம் நான் தான் எழுதினேன் என நினைக்கிறேன். இதைப் பெருமைக்காக சொல்லவில்லை, ஒரு குற்ற உணர்வை சுட்டிக்காட்டுவதற்காகக் குறிப்பிடுகிறேன்.

ஏற்கனவே ஒரு முறை சொல்லியிருக்கிறேன். எனது ஆபிசிலிருந்து ஐந்து நிமிட நடை தூரத்தில் அமைந்திருக்கிறது தமிழ் சினிமாக்கள் ஓடும் அந்த சினி பிளெக்ஸ். சிங்கையில் நிறைய சினி பிளெக்ஸ் இருந்தாலும் இரண்டே இடத்தில்தான் தமிழ் படங்கள் திரையிடுவார்கள்.அதிலொன்று என் ஆபிஸ் அருகில் உள்ளது. பெரும்பாலான புதுப்படங்கள் முதல் நாள் இரவே இங்கு திரையிடப்படும்.  தற்போதெல்லாம் படம் வெளிவந்த மறுநாளே இணையத்தில் கிரிஸ்டல் கிளியரில் காணக்கிடைப்பதால், எவ்வளவு சீக்கிரம் திரையிட வேண்டுமோ அவ்வளவு லாபம் என்கிற வகையில் முதல் நாள் இரவிலிருந்தே திரையிடப்படும். எனது ஆபிஸ் ஷிப்ட் 12 PM - 9.00 PM  . இங்கு இரவு 9-30 மணியளவில்தான் முதல் காட்சி ஆரம்பிப்பார்கள். ஆக, மிகச்சுலபமால ஆபிஸ் முடிந்து படம் பார்த்துவிட்டு,அன்று இரவே முதல் விமர்சனம் போட்டுவிடலாம். சரி..சரி. இதெல்லாம் ஒரு பொழப்பானு கேட்க வாறீங்க...அதானே...?. நானும் அதையேத்தான் கடைசியாக சொல்ல வருகிறேன்.

இப்படியாக, நிறைய படங்கள் முதல் நாள் இரவே பார்த்தாலும், முதல் விமர்சனம் என்று இரண்டு படத்திற்குத்தான் எழுதியிருக்கிறேன். தலைவா மற்றும் ஆரம்பம் படத்திற்கு.  தலைவா படத்திற்கு மட்டும் ஆறாயிரம் ஹிட்ஸ் கிடைத்தது. சில பதிவர்கள் முதல் காட்சி பார்த்துவிட்டு அடித்துப் பிடித்து விமர்சனம் எழுதுவதின் சூட்சமம் அப்போதுதான் புரிந்தது. அதன்பிறகு நீண்ட இடைவேளைக்குப் பின் 'ஆரம்பம்'.

நானெல்லாம் எங்கெங்கோ தகவல்கள் திரட்டி, முக்கி முக்கி பதிவு போட்டாலும் முந்நூறு ஹிட்ஸ் வாங்குவதற்குள் மூச்சே போய்விடுகிறது. ஆனால் ஆரம்பம் விமர்சனத்திற்கு, படம் ரிலீஸ் ஆன அன்று மட்டும் எட்டாயிரம் ஹிட்சுக்கு மேல் கிடைத்தது. பொதுவாக என் பதிவை தமிழ்மணத்தைத் தவிர்த்து வேறு எதிலும் இணைப்பதில்லை. என் பேஸ்புக் சுவரில் ஒன்றிரண்டு பதிவுகள்தான் இணைத்திருப்பேன். அன்று இணைத்தது  தமிழ்மணம் மற்றும் வெட்டி பிளாகர்ஸ் -ல் மட்டும்.அதன் பின்னர் ட்விட்டர், பேஸ்புக், கூகுள் பிளஸ்-ல் நிறைய பேர் ' ஷேர்' செய்திருக்கிறார்கள் போல.இதில் என்ன கொடுமை என்றால், என் விமர்சனத்தை காப்பி செய்து டிவிட்டரில் அவர்கள் எழுதியாக சிலர் போட்டிருக்கிறார்கள். அதை வேறுசிலர், ட்விட்டரில் வெளியான முதல் விமர்சனம் என்று திரும்பவும் பேஸ்புக்கில் அப்படியே பதிந்திருந்தனர். இதைப் பார்த்தபோது அல்பத்தனமாக கோபமெல்லாம் வரவில்லை. ஏனெனில், காப்பி பேஸ்ட் செய்யும் அளவுக்காவது என் எழுத்துக்கள் மதிக்கப்படுகிறதே என்கிற சந்தோசம்தான். அதனால்தான் என் வலைப்பூவில் "காபி பேஸ்ட் செய்யும் அளவுக்கு என் பதிவுகளில் 'வொர்த்' இருந்தால் தாராளமாக செய்துகொள்ளலாம்..." என்று குறிப்பிட்டிருப்பேன்.

என்னைப்பொறுத்தவரையில் சினிமா விமர்சனம் என்பது, வெறுமனே அது நல்லா இருக்கு...இவரு நல்லா நடிச்சியிருக்காரு..., இந்தக் காட்சி அற்புதமாக இருக்கிறது... சிகரெட் பிடிக்கிறப்போ புகை ஏன் வரல... என்பதுபோல சிபித்தனமாக எழுதுவதில் உடன்பாடு கிடையாது. கதைக்கருவிலிருந்து ஆக்கம் வரை உள்ள குறீயீடுகள்,குறைபாடுகள், கதைக்களமும் தளமும் எதன் அடிப்படையில் கையாளப்பட்டுள்ளது என்பதைப் பற்றி விரிவாக இருக்கவேண்டும்.உதாரணத்திற்கு , ஆரம்பம் படம் பார்த்துவிட்டு முதல் விமர்சனம் எழுதவேண்டும் என்கிற அவசரத்தில் வெறும் SWORDFISH படத்தை மட்டும் ஒப்பீடு செய்து விமர்சனம் எழுதி பதிவேற்றி விட்டேன். ஆனால் இந்தியாவில் நடந்த முக்கியமான சம்பவத்தை அதில் கையாண்டிருக்கிறார்கள் என்கிற விஷயம் என் மரமண்டைக்கு அப்போது ஏறாமல் போய்விட்டது . இவ்வளவுக்கும் அதைப்பற்றி முன்பு ஒரு பதிவு எழுதி இன்னும் டிராப்டில் கிடக்கிறது. ஆனால் அச்சம்பவத்தைப் பற்றி மிகத் தெளிவாக, விரிவாக உண்மைத்தமிழன் எழுதியிருந்தார். அதைப் படித்தபொழுதுதான் உரைத்தது. சினிமா விமர்சனம் எழுதிவதில்  இன்னும் நான் 'ஒன்னாங்கிலாஸ்'யே தாண்டவில்லை என்று.

சமீபத்தில் சுட்டகதை விமர்சனம் லக்கிலுக் யுவா எழுதியிருந்தார். எவ்வளவு தகவல்கள்..! விமர்சனம் என்றால் இப்படியல்லவா இருக்கவேண்டும்..!

தீபாவளிக்கு முதல்நாள் இரவே பாண்டிய நாடும், அழகு ராஜாவும் இங்கே ரிலீஸ் ஆகிவிட்டது. தியேட்டர் வழியாகத்தான் நான் பயணிக்கும் பஸ் போகும். ஒருபுறம் கால் பரபரவென்று இழுக்க, மனது ஏனோ மறுத்துவிட்டது. பிறகு படம் பார்த்து விட்டோமே என்பதற்காக இரவோடு இரவாக விமர்சனம் எழுதத் தூண்டும்... எதுக்கு தற்குறி என்பதை நாமே தம்பட்டம் அடித்து நிருபிக்கவேண்டும்...?

(எக்ஸ்கியூஸ்மீ...."அப்பாடா இவன் தொல்லையிலேருந்து தப்பிச்சாச்சிப்பா "என்று பெருமூச்சு விடாதீங்க. நவ 22, இரண்டாம் உலகம் ரிலீசாமே...?. 21 இரவே இங்க ரிலீசாமாம். ராவோடு ராவா போட்டுடவேண்டியதுதான். பின்ன நாங்கல்லாம் எப்போ பாஸ் பிரபல பதிவரா ஃபார்ம் ஆகுறது..?   )   



ஒரு அடல்ட் ஒன்லி மேட்டர்... பெண்கள் இந்த லிங் -கை திறந்து பார்க்க வேண்டாம்( சில ஆண்களும் கூட..). பட்.. வெரி இன்ட்ரஸ்டிங்..!

வாரக்கடைசியில் எங்கேயாவது பார்க்-க்கு போகலாம்னு கூகுள்ல டைப் செய்து தேடிப் பார்த்தேன். இது வந்தா என் கண்ல மாட்டனும்..? ஏதோ புதுவகையான செடிபோலனு  நெனைச்சி உற்றுப்பார்த்தா,  கருமம்.. கருமம் ... இதுக்கு கூடவா பார்க் வச்சி மெய்ண்டைன் பண்றாங்க...? ஆனால், சும்மா சொல்லக் கூடாது கொரியாகாரனுவ கில்லாடிகள்தான். என்னவொரு கலை நுணுக்கம்... !!!  

இந்த 'பார்க்'(Haeshindang Park) தென்கொரியாவில் இருக்கிறது.இதன் பின்னணியில் ஓர் சுவாரஸ்யமான கதை உள்ளது .

முன்னொரு காலத்தில் மீனவன் ஒருவன் தன் 'கன்னிக்' காதலியை ஒரு பாறை மீது அமரச்செய்துவிட்டு கடலுக்கு மீன் பிடிக்க சென்றானாம். அப்போது கடுமையான புயல்தாக்கி அவள் இறந்துவிட்டாளாம். அதன் பின்னர் அந்தப் பகுதி மக்களால் மீன் பிடிக்க முடியவில்லையாம். பிறகுதான் அதற்கான காரணத்தைக் கண்டறிந்திருக்கிறார்கள். அந்த கன்னியை தன்னந்தனியாக அங்கே விட்டுச்சென்றதுதான் அதற்குக் காரணமாம். அதனால் அதற்குப் பரிகாரமாக, இறந்துபோன அந்த கன்னி ஆவியை சமாதானப்படுத்தும் பொருட்டு மிகப்பெரிய சைசில் 'அதை' மரத்தால் செய்து அங்கே நட்டுவைத்து விடவேண்டும் என தீர்மானித் -திருக்கிறார்கள்.

ஆனால் என்ன ஆச்சர்யம்... அதன் பின்னர் அவர்கள் வலையில் மீன்கள்  சிக்கோ சிக்கு என்று சிக்கியிருக்கிறது. பிற்பாடு அவர்களும் 'அதையே' கடவுளாகப் பாவித்து பூஜை செய்து(!) வணங்கி வருகிறார்களாம்...

இதுக்கு நம்ம ஊரு கன்னி ஆவிகள் எவ்வளவோ தேவலையப்பா... :-))



கலாட்டூன் கார்னர் :
உணர்ச்சியின் உச்சத்துக்குப் போன ஒரு ரத்தத்தின் ரத்தம், இப்படி போஸ்டர் அடிச்சி ஒட்டியிருந்திருக்கு.. நெஞ்சைப் பொளந்து அம்மாவை காண்பிக்கிறாராராமாம் . நான் விடுவேனா...? அந்த அப்ரசண்டியின் உணர்ச்சிக்கு உயிர் கொடுத்திட்டேன்... ! :-))



கிரிக்கெட்டின் ஆல்டைம் கடவுளாக மதிக்கப்படுகிற டொனால்டு பிராட்மேனை, அவரது வீட்டின் பூஜை -யறையில் தற்போதைய கடவுள்களான வார்னேவும், சச்சினும் சந்தித்தபோது... :-))









Saturday, 12 October 2013

வருகிறது 'தொப்புள் பாதுகாப்பு மசோதா' (18+)


இவ்வளவு நாட்களாக மெல்ல மெல்ல மடிந்துக்கொண்டிருக்கும் நம் பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியம் போன்றவற்றை எப்படி பேணிக்காப்பது என்பதில் மிகுந்த அக்கறையும் கவலையும் கொண்டிருந்தோம்.ஆனால் அதைவிட பெரிய சமாச்சாரம் ஓன்று இருப்பதை மறந்துவிட்டோம். அது... இந்த சினிமாக்காரர்களிடமிருந்து நம் பெண்களின் தொப்புளை பாதுகாப்பது.

கடந்த வாரம் ஒரு மனுஷன்... உண்மையச் சொல்லப்போனால் ஒரு நிஜ போராளி, இந்திய அரசை கண்டித்து சாகும் வரை உண்ணாவிரதம் இருந்திருக்கிறார். அதைப்பற்றி யாரும் இங்க பேசக்காணோம். பேஸ்புக்லேயும் டிவீட்டர்லேயும் ஒருத்தனும் பொங்கக் காணோம். ஆனால் நஸ்ரியா தொப்புளுக்கு டூப் போட்டுட்டாங்களாம். உடனே நம் இளைய சமுதாயம் கொதித்து எழுந்திருக்கிறது. அக்கவுண்டே இல்லாதவனெல்லாம் இதுக்காக புதுசா அக்கவுண்ட் கிரியேட் பண்ணி இது இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்று பொங்கிட்டு போயிருக்கானுவ. கேட்டால், ஒரு நம்பகத்தன்மை வேண்டாமா என கொதிக்கிறார்கள்.

இன்னும் ஒரு சிலர் 'ரிங்கா ரிங்கா' பாட்டுல வர்ற அந்த 'பின் போர்சன்' நஸ்ரியாவோடதுதான் என்பதை சட்டப்படி நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இந்த அரசுக்கு இருக்கிறது என பீதியைக் கிளப்புகிறார்கள்.

கடந்த சில நாட்களாக எத்தியோப்பியாவில் எழுச்சிப் பேருரையாற்றிவிட்டு, நைஜீரியாவில் நடைப்பயணம் மேற்கொண்டு , சோமாலியாவில் சோலாவாக கர்ஜித்துவிட்டு அப்படியே வரும்வழியில் அமெரிக்காவில் ஆயில்பாத் எடுக்கச் சென்ற வாக்கிங் புயல் வைகோவிடம் அமெரிக்கா அதிபர் ஒபாமாவே இதைப்பற்றி விசாரித்ததாக சங்கொலியில் செய்தி வந்திருக்கிறது.  
 

விஷயம் இவ்வளவு சீரியஸாக இருக்க,எழுச்சித்தலைவி பேரவை மீண்டும் எழுச்சிப் பெற இதைவிட வேற சந்தர்ப்பம் கிடைக்காது என்பதால் உடனடியாக எழுச்சித்தலைவியிடம் தொடர்பு கொண்டபோது அவரும் கடும் கொந்தளிப்பில் இருந்தார். நானெல்லாம் அந்த !#%%#%&&*&%#&^&^ காட்சியிலேயே டூப் போடாமல் நடிக்கிற ஆளு. ஆஃப்ட்ரால் இந்த தொப்புள் சீனுக்கு டூப் போட்டு கேவலப்படுத்திட்டாங்களே... இதை உடனடியாக தலைமைச்செயலகம் சென்று மனு கொடுத்து, முதல்வரை நடவடிக்கை எடுக்கச்சொல்லி வற்புறுத்தணும் என ஆவேசப்பட்டார்.

"என்னது அம்மணி ஒரு தொப்புள் மேட்டருக்கு போயி மனு கொடுக்கணுமா... ?"

"கல்லுல செதுக்கின ஒரு சிலைக்கே ஆண்மை இல்லைன்னு ஒருத்தன் மனு கொடுக்கிறப்போ, ஏன் இதுக்கு கொடுக்கக் கூடாது..?"

"என்னது அம்மணி அரசியல்லாம் பேசுது..?"

"ஆமாய்யா...... உலகம் போற்றும் திருக்குறளை எழுதி தமிழுக்கு பெருமை சேர்த்த திருவள்ளுவரை கௌரவிக்கிறதுக்காக குமரிக்கடலில் சிலையை கட்டி வச்சா, அவர் கோணலா நிக்கிறாரு, பேக் சைடு பெரிசா இருக்கு, முன்னால சிறுசா இருக்கு, வெக்கப்பட்டு நிக்கிற மாதிரி இருக்கு, ஆண்மையில்லாம இருக்கு, ஆகம விதிப்படி இல்ல, அதனால கருணாநிதி மேல நடவடிக்கை எடுக்கணும்னு மனு கொடுக்கலாம். ஆனா தொப்புளை பாதுகாக்கணும்னு மனு கொடுக்கக் கூடாதா..? "

அம்மணி இம்புட்டு பேசினதுக்கு அப்புறம் சும்மா இருக்கக் கூடாதுனு பேரவை சார்பா மனு கொடுக்கப்பட்டது. என்ன ஆச்சர்யம்.. முதல்வரிடமிருந்து உடனடியாக அறிக்கை வந்துவிட்டது.

"என் ஆணைப்படி ஆட்சிப்பொறுப்பேற்ற சில நாட்களிலேயே தமிழ் நாட்டில் எங்கள் கட்டுப்பாட்டில் இருந்த அனைத்து ரவுடிகளும், கொடுங்குற்றம் புரிபவர்களும் ஆந்திராவுக்கு துரத்தி அடிக்கப்பட்டு விட்டார்கள். அன்று முதல் என் ஆணைப்படி தமிழ் நாட்டில் ஒரு குற்றச்செயலும் நடைபெறாமல் பாதுகாப்புமிக்க மாநிலமாக திகழ்கிறது. அப்படியிருக்க, தாய்மையின் புனிதமாக கருதப்படுகிற தொப்புளை சில சமூகவிரோதிகள் தவறாக பயன்படுத்தி வந்துள்ள தாக தெரியவருகிறது. பம்பரம் விடுவது,கத்தியை விட்டு ஆட்டுவது, ஆம்ப்லேட் போடுவது போன்ற சில்லறைத்தனமான விளையாட்டு களில் ஈடுபடுவதாக அறிய நேரிட்டது. அடுத்ததாக சிலர் அங்கே கிரிக்கெட் போட்டி நடத்தவிருப்பதாகவும், சிலர் மாநாடு நடத்தப் போவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன், இனிவரும் காலங்களில் அவ்வாறு நடைபெறாமல் இருக்க வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் 'தொப்புள் பாதுகாப்பு மசோதா' நிறைவேற்றப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்."  

தாயுள்ளம் கொண்ட முதல்வரிடமிருந்து அறிக்கை வந்த பிறகு அது சம்மந்தப்பட்ட நபர்கள் கிலிப்பிடித்துப் போய் கதறி அழுவதாக நமக்கு தகவல் கிடைத்தது. விரைவிலே அவர்கள் ' தொடா ' சட்டம் மூலம் கைது செய்யப்படுவார்கள் எனத்தெரிகிறது.

இதில் முதலில் மாட்டப்போவது  தவசி அய்யானு பேசிக்கிறாங்க. பதினெட்டுப்பட்டிக்கு பஞ்சாயத்து பன்ற பெரிய மனுஷனான இவர், சங்கரபாண்டி வாத்தியாருனா எல்லாரும் பள்ளிக்கூட வாத்தியாருனு தப்பா நினைச்சிகிட்டு இருக்க, அவர் சிலம்பம் கத்துக்கொடுக்கிற குஸ்தி வாத்தியார் என்கிற வரலாற்று உண்மையை உலகுக்கு உரக்கச் சொன்ன இந்த வில்லேஜ் விஞ்சானி, ஒரு கன்னிப் பொண்ணு தொப்புள சுத்தி பம்பரம் விட்டிருக்கிறாரு. அதுவும் சின்னப்பசங்களை கூட சேத்துகிட்டு... அது என்ன பஞ்சாயத்து திடல்னு நெனைச்சியாயா பம்பரம் வுடுறதுக்கு ...?


காலேஜ் பொண்ணுங்கள 'ஈவ் டீசிங்' பண்ணினதுக்கே மெட்ராஸ் சிட்டியில பஸ் மேல தாவித்தாவி அந்த ரவுடிகளை வெளுத்தெடுத்த இந்த ஒருநாள் முதல்வர், பப்ளிக்கா ஒரு பொண்ணு தொப்புள்ல கத்திய வுட்டு ஆட்டியிருக்காரு.  ஏதாவது ஏடாகூடமா ஆயிட்டா என்ன செய்வீங்க மிஸ்டர் ஜென்டில்மேன்...?



நானெல்லாம் தோசைக்கல்லுல ஆம்ப்லேட் போட்டாலே ஒன்னு ஆஸ்திரேலியா மேப் மாதிரி இருக்கும்... இல்லனா ஆப்ரிக்கா மேப் மாதிரி இருக்கும். ஒரு குண்டக்க மண்டக்க சர்ஃபேஸ்-ல அதுவும் ஆயில் இல்லாம, பக்காவா ஆம்ப்லேட் போட்டு எடுக்கிறார்னா எவ்ளோப் பெரிய தில்லாலங்கடியா இருக்கணும்..! ?  யோவ்..அது என்ன இண்டக்சன் ஸ்டவ்னு  நெனைச்சியா..?   ஏற்கனவே ஊர்ல கரண்டு பிரச்சனை வேற.. இத பாத்துட்டு அவனவன் சொந்தமா முயற்சி பண்ணினா என்ன ஆவுறது..?




Thursday, 26 September 2013

உலகமே வியக்கும் தமிழ் சினிமாவில் தற்காப்புக் கலைகள்.

     உலகத்துக்கே குங்க்ஃபூ,கராத்தே போன்ற தற்காப்புக்கலைகளை அறிமுகப்படுத்தியது நாங்கள்தான் என இவ்வளவு நாட்களாக முளைக்காத மீசையை முறுக்கி விட்டுக்கொண்டிருந்த சீனாவுக்கே, நம்ம ஊரு போதிதர்மர் தான் 'குரு' என்கிற வரலாற்று உண்மையையை சமீபத்தில்தான் உணர்த்தினோம்.

வெறும் முறத்தை வைத்தே காட்டில் சிங்கத்துக்கு அடுத்த பொசிசனில் இருக்கும் புலியை, நமது வீரத் தமிழ் பெண்கள் விரட்டியடித்தையும் நம் தமிழ் வாத்தியார் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியதுபோல் ஊட்டியதை மறவோம்.அது முறத்தைக் கண்டு ஓடியதா அல்லது முறைத்ததைக் கண்டு ஓடியதா என்பது வேறு விஷயம்.!?

அப்படியொரு வீரம் விளைந்த மண்ணில் இதுவரை யாரும் அறிந்திராத சில தற்காப்புக் கலைகளை உலகறியச் செய்வதுதான் இந்தப் பதிவின் நோக்கம்.


1. இந்தத் தற்காப்புக் கலைக்கு பெயர் 'லிப்லாக் ரொமாண்டிக்கோ '

உங்களை யாராவது 'ஏய்...' னு சத்தம் போட்டுக்கொண்டே அரை கிலோமீட்டர் அப்பால் இருந்து ஒடிவந்து தாக்க முற்பட்டால் இந்தக்கலையை உபயோகிக்கலாம்.கொஞ்சம் ரொமாண்டிக்காக முகத்தை வைத்துக்கொண்டு கீழுதட்டை லேசாக சுழித்த வேகத்தில் ஆட்காட்டி விரலால் ஒரு ‘யூ டர்ன்’ அடிக்கவேண்டும். இந்த எதிர்பாராத ரொமாண்டிக் தாக்குதலால் தாக்க வந்தவன் நிலைகுலைந்து போய் ஓடிவந்த வேகத்தில் அப்படியே பின்னோக்கி வீசப்படுவான். ஒரு முக்கியமான விஷயம் உதட்டில் லிப்ஸ்டிக் போட்டிருந்தால் அவன் உயிருக்கே ஆபத்தாக முடிய வாய்ப்பிருக்கிறது.

பின்குறிப்பு: இது ஆண்களுக்கானது.. இதை பெண்கள் உபயோகித்து ஏதாவது ஏடாகூடமாகிவிட்டால் அதற்கு கம்பெனி பொறுப்பாகாது.  


 2. இதுக்குப் பெயர் ' கரடிகத்தே... '

இதைக் கற்றுக்கொள்வது கொஞ்சம் சுலபம்தான் என்றாலும் ஹை பிட்ச்சில் கத்துவதற்கேற்ற குரலமைப்பு பெற்றிருத்தல் வேண்டும். கையில் மூன்றடி வீச்சரிவாளை வைத்துக்கொண்டு... "டாய்..... ஏய்.... வாடா...ஓய்... டேய்.... " என நின்ற இடத்திலிருந்தே கத்தவேண்டும். உங்களை தாக்க வந்த எதிராளியின் பொறுமையை முடிந்தளவு சோதிக்கு வேண்டும். அவன் பொறுமை இழந்து உங்கள் கையிலிருக்கும் அரிவாளை பிடிங்கி அவனே வெட்டிக்கொண்டு சாவதுதான் இந்தக்கலையின் முக்கிய அம்சம்.


3.இது பழம்பெரும் கலை.மிகக் கடினமானது.மிகவும் ஆபத்தானதும் கூட.இதற்கான குறிப்பு ஓலைச்சுவடியில் இருப்பதாக சொல்கிறார்கள்.அந்தக் காலத்தில் புருஸ்லீ -யும் ஜேம்ஸ்பாண்டும் தமிழ் நாட்டுக்கு வந்து இந்தக் கலையை கற்றுக்கொள்ள எவ்வளவோ முயன்றார்கள். ஆனால்..கடைசிவரை அவர்களால் கற்றுக்கொள்ள முடியவில்லை. அதிலும் புருஸ்லீ பயந்துபோய் பாதியிலே ஓடிவிட்டார்.இந்தக்கலையில் கடைசியாக தென்னகத்து ஜேம்ஸ்பாண்டு ஜெய்சங்கர் கைத்தேர்ந்தவராக இருந்தார் என வரலாற்றுக் குறிப்புகள் சொல்கிறது. அவரது மறைவுக்குப் பின் அந்தக்கலையும் அவரோடு அழிந்துவிட்டது.

அதாவது எதிராளி நல்ல 'பல்க்கா' இருந்தா இந்தக் கலையை உபயோகப்படுத்தாலாம்.'ஆத்தாடி... எத்தேந்தண்டி' என்கிற பயம் ஆழ்மனதில் இருந்தாலும் அது கண்ணில் தெரியாமல் மெய்ண்டைன் பண்ண வேண்டும்.இது போல பல்க்கான ஆட்களை அடித்தால் மட்டுமே திருப்பி அடிப்பார்கள் என்கிற முன் நவீனத்துவ அறிவு இதற்கு அடிப்படை. அதாவது அடிப்பது போல கையை ஓங்க வேண்டும்.ஆனால் அடிக்கக் கூடாது.உதைப்பது போல் காலைத் தூக்கவேண்டும்.ஆனால் உதைக்கக் கூடாது.முறைப்பதுபோல் முகத்தை வைத்துக்கொள்ளவேண்டும். ஆனால் முறைக்கக் கூடாது. அவனும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு கடைசியில் இம்சை அரசனில் கரடி காரித்துப்பியது போல் " கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...த்தூதூ.." என துப்பிவிட்டு 'தொலைந்து போ சனியனே'னு போய்விடுவான்..  இதில் நமக்கு இழப்பு என்று பார்த்தால் ஒரு கர்சிப் அல்லது ஒரு டிஸ்யூ பேப்பர்.ஆனால் எதிராளி மனதொடிந்து போய் தற்கொலைக்கு முயற்சி செய்யலாம்.




4. இருப்பதிலே மிக நுட்பமான தற்காப்புக் கலை. எதிராளி பிஸ்டல், AK -47 போன்ற நவீன ரக ஆயுதங்களைக் கொண்டு தாக்க முற்பட்டால் இந்தக்கலையை உபயோகிக்கலாம். இதற்கென பிரத்யோகமான உபகரணங்கள் இருக்கிறது.இதில் முக்கியமானது 'ஜிகு ஜிகு ஸ்லீவ்லெஸ் புல்லட் புரூவ் ஜாக்கெட்'.

இதை அணிந்து கொண்டால் எதிராளி உங்கள் தலை,கை,கால் என எங்கு குறிவைத்து சுட்டாலும் அது நேராக உங்கள் மார்பை நோக்கித்தான் வரும். அப்படியே மோதிய வேகத்தில் திரும்பி, வந்த வழியே சென்று சுட்டவனையே போட்டுத்தள்ளிவிடும். இந்தக்கலையை நுட்பமாக கற்றுத்தேர்ந்தவர்கள் வெறும் டாலரையும், மோதிரத்தையும் வைத்தே சீறிவரும் புல்லட்டை சுக்கு நூறாக்கிவிடுவார்கள்.தமிழ்நாட்டில் கடைசியாக இந்த வித்தையை பயன்படுத்தித்தான் ஒருவர் பாகிஸ்தான் பார்டரில் பல தீவிரவாதிகளை பஸ்பமாக்கியிருக்கிறார். இவருக்கு அண்ணன் ஆந்திராவில் இருக்கிறார். அவர் ஒரே ஜம்பில் புல்லட்டை கவ்வி கடித்து துப்பிவிடுவார்.


5. அட் எ டைம் -ல ஐம்பது பேரு வந்தாலும் அசால்டாக அடிக்கக்கூடிய சாத்தியம் இந்தக்கலைக்கு உண்டு. இதற்கு கைவிரல்கள், மணிக்கட்டு பலமாக இருத்தல் அவசியம். பாட்டுபாடிக்கொண்டே பால் கறப்பவர்கள் இதில் விற்பன்னர்கள்.

உதாரணமா, உங்களை பத்து பேரு கும்பலா சேர்ந்து அடிக்க வராங்கனு வச்சிப்போம். உடனே ஹீரோயிசம் காட்டினா நீங்க சட்னிதான். அந்த இடத்தில இந்தக்கலையை எப்படி பயன்படுத்தறதுனு சொல்றேன்.. 

முதல்ல அந்த பத்து பேரு கையை காலைப் புடிச்சி வரிசையில நிக்க வைக்கணும்.ஒருத்தர் பின்னாடி ஒருவர் நிற்காம பக்கவாட்டில் நிற்கும்படி சொல்லணும்.முடியாதுனு சொன்னா காலில் விழக்கூட தயங்கக் கூடாது. அந்த நேரம் பார்த்து சைடுல ஒரு 'பிகர' நடக்க விடனும். எல்லோரும் அந்தப்பக்கம் ஜொள்ளுவிட்டு பார்த்துக் கொண்டிருக்கும் தருணத்தில் உங்கள் தாக்குதலை ஆரம்பிக்கணும். 

ஓடிவந்து முஷ்டியை முறுக்கி ஒரே நேர்க்கோட்டில் தாக்க வேண்டும். ஒருவேளை அவர்களுக்கு எதுவும் ஆகவில்லை என்றால் திரும்பவும் பழையபடி ஆட்டத்தை ஆரம்பிக்க வேண்டியதுதான். திரும்பவும் காலில் விழுந்து கதறி, கெஞ்சிக் கூத்தாடி வரிசையில் நிற்க வைக்கவேண்டும். இப்படியாக மூன்று நான்கு தடவை செய்தால் டென்சனாகி அவர்களே ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வார்கள். நம்ம வேலை சுலபமாக முடிந்திடும்.


சரி..சரி... தமிழ்நாட்டில் புதைந்து கிடந்த இந்தத் தற்காப்புக்கலைகளை வெளிக்கொண்டுவந்ததுமில்லாம ஃபீஸ்ஸே இல்லாம கத்துக்கொடுத்ததுக்காக சந்தோசத்துல கதறி அழுவது எனக்கு கேட்குது. இதுபோல இன்னும் பல கலைகளை அடுத்தடுத்த பதிவுகளில் பார்க்கலாம்.   


Wednesday, 4 September 2013

நான் வெறும் டம்மி பீசுப்பா...(பிரபல பதிவருக்கு நேர்ந்த கதி-பார்ட்-2)


எங்கேயாவது சாதிக்கலவரம்,காதல் பிரச்சனை, ஈழம் தொடர்பான போராட்டங்கள் என எது  நடந்தாலும் உடனே பேஸ்புக்லயோ அல்லது ட்வீட்டர்லயோ முந்திக்கொண்டு கருத்து போடவேண்டியது. நாம எதிர்க்கேள்வி கேட்டா பதில் சொல்ல பயந்துகிட்டு,சொல்லாம கொள்ளாம 'பிளாக்' பண்ணிடவேண்டியது.  அப்படிப்பட்ட ஒரு டுமாங்லி கருத்து கந்தசாமிதான் நம்ம பிரபலபதிவர் வால்டேர் வீரபாகு...  

இப்படித்தான் ஒரு கருத்து சொல்லப்போயி ஒருத்தன்கிட்ட செமையா சிக்கிக்கிட்டாரு... பதில் சொல்லவும் முடியாம,பிளாக் பண்ணவும் தெரியாம அல்லோகலப்படுறாரு பாருங்க...

@ TWITTER...


@ GOOGLE +


@FACE BOOK

@BLOGSPOT