Friday 29 May 2015

மாஸ்- டம்மி பீஸ். தமிழ்சினிமாவில் முன்பெல்லாம் ஹீரோக்களை  "ஏ..ய்.."  என்று கத்தவிட்டு நம்மை பீதியாக்குவார்கள். அதற்குப் பதில் தற்போது பேயைக் காட்டி அலறவைக்கிறார்கள்.

தமிழ்சினிமாவின் பாதை ஹாரர் வகைப் படங்களை நோக்கி நகர்வதாகத் தெரிகிறது. சமீபத்திய சிறிய பட்ஜெட் படங்கள் பெரும்பாலும் பேய்ப் படங்களாக வந்து ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிற நிலையில், சூர்யா போன்ற பெரிய ஹீரோக்களும் அதே பார்முலாவை தொடவேண்டிய சூழலுக்கு தமிழ் சினிமா தள்ளப்பட்டிருப்பது அதைத் தெளிவாக உணர்த்துகிறது.

சத்தியமா இதாங்க கதை..

திருட்டுத் தொழில் செய்யும் சூர்யாவும், பிரேம்ஜியும் ஒரு விபத்தில் சிக்கிக் கொள்கிறார்கள். அதில் பிரேம்ஜி இறந்துவிட, சூர்யா மட்டும் உயிர்தப்புகிறார். விபத்தில் சூர்யாவுக்கு பலமாக அடிபட்டதால் அவருக்கு பேய்களை மனித உருவில் காணும் அபூர்வ சக்தி கிடைக்கிறது. இறந்துபோன பிரேம்ஜி பேயாக சூர்யாவுடன் நட்பை தொடர்கிறார்.

சூர்யாவின் அபூர்வ சக்தியை அறிந்துகொண்ட சில பேய்கள், தங்களது நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றுவதற்காக சூர்யாவுடன் நண்பர்களாக இணைகின்றன. சூர்யா அவைகளின் ஆசைகளை நிறைவேற்றாமல் அவைகளை வைத்து பேய் நடமாட்டம் உள்ளதாக சொல்லி சிலரிடமிருந்து பணம் கறக்கும் வேளையில் இறங்குகிறார்.

ஒரு வீட்டிற்கு பேய் ஓட்டுவதற்காக சூர்யா செல்லும்போது, தனது பேய் நண்பர்கள் அல்லாத வேறு ஒரு பேய் அங்கு இருப்பதை அறிகிறார். அது சூர்யாவின் தோற்றத்தில் இருக்கிறது. அதற்கும் நிறைவேறாத சில ஆசைகள் இருக்கிறது. அது சூர்யாவைப் பயன்படுத்தி இருவரை கொலை செய்கிறது.

தன்னை கொலை செய்யப் பயன்படுத்தியதை உணர்ந்த சூர்யா, அவர் உருவத்தில் இருந்த அந்தப் பேயை கடுமையாக திட்டி வெளியேற்றிவிடுகிறார். பிறகுதான் அது சூர்யாவின் 'அப்பா பேய் ' என்பது அவருக்குத் தெரிகிறது.

தன் குடும்பத்தைக் கொலை செய்த ஒரு கும்பலைப் பழிதீர்க்கத்தான் தனது அப்பா, பேயாக தன்னை அணுகி உதவி கேட்டிருக்கிறார் என்பதை பிறகு தெரிந்து கொண்ட சூர்யா, மீதமிருக்கும் அந்தக் கும்பலை அழிப்பதே மாஸ் படத்தில் கதை ..

படம் எப்படி இருக்குன்னா ..

வழக்கமான ஹாரர் படங்களை போல் இல்லாமல் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காக இதுபோன்ற கதையை வெங்கட் பிரபு தேர்ந்தெடுத்திருக்கலாம். ஏனோ அவரது வித்தியாசமான முயற்சி பார்வையாளனுக்கு எந்தவித புதிய அனுபவத்தையும், மனவெழுச்சியையும் கொடுக்காமல் போனதுதான் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்.

அஞ்சான் படத்தில் வாயில் குச்சியோடு வித்தியாசம் காட்டிய(!) சூர்யா இதில் காதில் ஹூக்கோடு வருகிறார். சூர்யா நடிப்பில் இரண்டு படங்களுக்கும் அதிகபட்ச வித்தியாசம் என்றால் அது ஒன்றுதான் .

இதுவரை பிரேம்ஜியை பிடிக்காதவர்களுக்கு இந்தப் படத்தைப் பார்த்த பிறகு அவரைப் பிடிக்கும் என பேட்டி கொடுத்திருந்தார் வெங்கட்பிரபு. ஆனால் இதுவரை வந்த இருவரது காம்பினேஷனில் இதுதான் மொக்கை. படம் முழுக்க சூர்யாவுடன் வருகிறார். அவ்வளவுதான். இறுதி சண்டைகாட்சியில் வில்லனின் அடியாள் ஒருவனை "எவ்வளவோ செஞ்சிட்டோம்.. இது கூட செய்யமாட்டோமா"  என சொல்ல வைக்கும் காட்சியில் மட்டும் சிரிக்க வைக்கிறார்.

நிறைவேறாத ஆசைகளுடன் வரும் பேய்களாக கருணாஸ், ஸ்ரீமன், சண்முகசுந்தரம் இன்னும் சிலர். இவர்களை வைத்து செமையாக காமெடி செய்திருக்கலாம். ஆனால் காமெடி என்கிற பெயரில் கடுப்பேற்றுகிறார்கள்.

போலிசாக வரும் பார்த்திபன் சில காட்சிகளில் கொஞ்சம் கலகலப்பூட்டுகிறார். ஆனால் பார்த்திபனின் இயல்பான டைமிங் காமெடி இதில் மிஸ்ஸிங்.கண்ணாடியை பிடிங்கிவிட்டு "நான் எதுவுமோ புடுங்கவில்லை என்று யாரும் சொல்லிவிடக் கூடாது பாருங்க..." போன்று சில இடங்களில் தனித்துத் தெரிகிறார். அப்பா சூர்யாவுக்கு ஜோடியாக வரும் பிரணிதா செம கியூட்.  நர்சாக வரும் நயன்தாரா ஏனோ அவ்வளவாக மனதில் நிற்கவில்லை.

எங்கேயும் எப்போதும் படத்தில் விபத்தில் இறந்துபோன ஜெய்-யை இதில் பேயாக காண்பித்து கண்தானம் செய்வதுபோல காட்டியிருப்பது அக்மார்க் வெங்கட்பிரபு பன்ச்..!

அப்பா சூர்யாவாக வருபவர் ஈழப்பின்னணியை கொண்டவராக காண்பித்திருக்கிறார்கள்.. ரசிகர்களிடம் கைதட்டல் வாக்குவதற்காக இன உணர்ச்சியை தூண்டிவிடும் சில வசனங்களையும் கட்டாயத் திணிப்பு செய்திருக்கிறார்கள். ஏற்கனவே இதை பலர் முயன்றுவிட்டதால் உணர்வுக்குப் பதில் உறுத்தல்தான் மிஞ்சுகிறது . அதிலும் அப்பா சூர்யா பேசும் இலங்கைத் தமிழ் இருக்கே..!.   ' எனது  ' என்பதற்குப் பதில் 'எண்ட' என மாற்றிவிட்டால் அது ஈழத் தமிழாகிவிடுமா..?  தெனாலி படத்தில் கமல் பேசியதையே 'ஒரிஜினல் ஈழத் தமிழ் ' இல்லை என்று கடுமையான விமர்சனம் செய்தார்கள். இது எல்லாம் ஒரு பிழையா என்று கேட்க வேண்டாம். இதிலாவது கவனம் செலுத்தியிருக்கலாமே என்கிற சிறு ஆதங்கம்தான்.

பேய் படங்கள் என்றாலே லாஜிக் பார்க்கக் கூடாது என்பார்கள். பெரிய ஓட்டைகள் இருக்கும் போது குறிப்பிட்டுதானே ஆகவேண்டும். மற்ற படங்களில் பேய்களை அதிசக்திவாய்ந்த அமானுஷ்யங்களாகக் காண்பித்திருப்பார்கள். இதில் பேய்களால் பார்க்க முடியும், பேசமுடியும், ஆனால் ஒரு பொருளை எடுக்கவோ  அசைக்கவோ அல்லது தொடவோ முடியாது என்பது போல காண்பிக்கிறார்கள். அதனால்தான் தந்தை 'சூர்யா பேய்' தன் குடும்பத்தைக் கொன்றவர்களை பழிதீர்க்க மானிடனான சூர்யாவை அணுகுகிறது. மற்ற பேய்களும் சூர்யாவை நாடி வருவதற்கு இதுதான் காரணம். ஆனால் இதே பேய்களால் வீட்டில் உள்ள பொருட்களை தூக்கியடிக்க முடிகிறது, நாற்காலி, டேபிளை எல்லாம் நகர்த்த முடிகிறது. இறுதியில் சண்டையெல்லாம் போடமுடிகிறதே.. அது எப்படி..?

ஒரு கட்டிலையே அந்தரங்கத்தில் தூக்கி நிறுத்த முடிகிறது.. இறுதிக் காட்சியில் கிரேனை இயக்க முடிகிறது.. இவ்வளவு செய்யும் தந்தை சூர்யா பேயால் அவர்களை பழிவாங்க முடியாதா என்ன..?.

அது சரி வெங்கட் பிரபு சார்.. ,  ஏ.ஆர்.முருகதாஸ், கே.வி.ஆனந்த், லிங்குசாமி நீங்களெல்லாம் திட்டம் போட்டுத்தான் இது மாதிரி மொக்கை கதையாகத் தேர்ந்தெடுத்து சூர்யாவை நடிக்க வைக்கிறீங்களா..? கொஞ்சம் கூட சஸ்பென்ஸ், திரில், டிவிஸ்ட் எதுவுமே இல்லாத ஒரு ஹாரர் படத்தை எடுப்பதற்குத்தான் இவ்வளவு நாட்கள் ஆச்சா...?

டிமாண்டி காலனி, டார்லிங் போன்ற எதிர்பார்ப்பில்லாத சிறிய பட்ஜெட் படங்கள் கூட ஹாரர்+காமெடியில் செம கலக்கு கலக்கும் போது சூர்யா போன்ற மிகப்பெரிய நடிகரை வைத்து பக்கா மாஸ்-ஸா எடுக்க வேண்டிய ஒரு படத்தை இப்படி டம்மி பீஸாக்கிடீங்களே..

படம் பார்க்களாங்களா..?

சிலர்  வேண்டுமானால் படம் 'பக்கா மாஸ்' எனலாம்.எனக்கு படம் ' மொக்க பீஸ் ' ஆகத்தான் தெரிந்தது. -------------------------------------------------------XXXXXXXXXXX -----------------------------------------------