2012-ல் மலையாளத்தில் வெளியாகி சக்கைப்போடு போட்ட ஆர்டினரி(Ordinary) படத்தை, ஜன்னலோரம் நின்று, பட்டும் படாமல் பார்த்துவிட்டு, தமிழில் முயற்சித்திருக்கிறார் கரு.பழனியப்பன். ஆர்டினரி படத்தின் ஜீவனே கதையோடு பயணிக்கும் நகைச்சுவைதான். அதில் மொத்தமாக கோட்டை விட்டுவிட்டு உப்பு சப்பில்லாத வெகு ஆர்டினரி படத்தைத்தான் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
ஆர்டினரி கதைதான். பார்த்திபனும், விமலும் முறையே அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள். இவர்கள் தங்கியிருக்கும் பண்ணைக்காடு என்கிற கிராமத்தில் வசிக்கும் ஓய்வு பெற்ற ஆசிரியர் ராஜேசின் மகளுக்கும்( மனிஷா யாதவ் ), விமலுக்கும் ஒரு கட்டத்தில் காதல் மலர்கிறது.இது ஒருபுறமிருக்க, தன் நண்பனின் மகளை(பூர்ணா)த் தத்தெடுத்து வளர்த்து வரும் ராஜேஷ், அவரையே தன் மகனுக்கு மனம் முடிக்க எண்ணுகிறார்.
சூரத்தில் வேலைபார்க்கும் ராஜேசின் மகன்,திருமணத்திற்காக பண்ணைக்காட்டிற்கு வரும்பொழுது பார்த்திபன் & விமல் ஓட்டிவரும் பேருந்தில் அடிபட்டு இறந்துவிடுகிறார். துரதிஷ்டவசமாக அந்த பேருந்தை இயக்கிய 'நடத்துனர்' விமல் மீது கொலைப்பழி விழுந்து சிறைக்கு செல்கிறார். ஆனால் ராஜேசின் மகனை விமல் பேருந்து ஏற்றி கொல்லவில்லை என்பது பிற்பாடு தெரியவர,அவரை உண்மையிலேயே கொன்றது யார்..? எதற்காக கொன்றார் ..? என்பதற்கான பதில்தான் இறுதியில் சொல்லப்படும் ஒரேயொரு டிவிஸ்ட் .
அழுத்தமான கதையில்லைதான். வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே மலையாளத்தில் கல்லா கட்டியிருக்க வேண்டும். அதையே தமிழில் எடுக்கும்பொழுது நகைச்சுவைக்கு கொஞ்சமாவது முக்கியத்துவம் கொடுக்க வேண்டாமா...?. ஒரு இடத்தில்கூட சிரிப்பதற்கான சந்தர்ப்பத்தை கொடுக்கவில்லை இயக்குனர். திரைக்கதை -யிலும் எந்த சிரத்தையும் எடுத்தமாதிரி தெரியவில்லை. `வசனங்களிலாவது கவனம் செலுத்தியிருக்கலாம். எவ்வித சுவாரஸ்யமும் இல்லாமல் நகர்கிறது அடுத்தடுத்த காட்சிகள்.
பார்த்திபன்,விமல், விதார்த், ரமணா, யுவராணி, ராஜேஷ், சிங்கம் புலி, சந்தானபாரதி என பெரிய பட்டாளமே இருந்தும் அவர்களை சரியாகப் பயன்படுத்தாது பெரும் குறை. அதிலும் பார்த்திபனுக்கு ஹீரோவுக்கு இணையான பாத்திரப்படைப்பிருந்தும் அவரது அக்மார்க் நக்கல் பெரிதாக இல்லை. படத்தில் மிக முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறது அந்த அரசுப்பேருந்து. அக்கிராமத்திற்கு வரும் ஒரே பேருந்து என்பதால் அது அவர்களின் செல்லப்பிள்ளையாக இருக்கலாம். அதற்காக சில கேரக்டர்கள் தொடர்ந்து அதே பஸ்ஸில் பயணிப்பதாகக் காட்டுகிறார்களே..அவர்களுக்கு வேறு வேலையே இல்லையா...? குறிப்பாக கிருஷ்ணமூர்த்தி.
பூர்ணாவை மைனா ரேஞ்சுக்கு காதலிப்பதாக விதார்த் கேரக்டர் படைக்கப்பட்டிருக்கிறது. இறுதிக் காட்சியில் அவரைக் கொல்ல மனமில்லாமல்தான் குதித்துத் தற்கொலை செய்துகொள்கிறார். அப்படியிருக்க, ஒரு காட்சியில் பூர்ணா சேலை மாற்றும்பொழுது ஜன்னல் வழியாக அவருக்குத் தெரியாமல் காமப் பார்வையோடு ரசிப்பது ஏன்..?
ராஜேசின் மகனை தாங்கள்தான் பேருந்தை ஏற்றி கொன்றுவிட்டதாக நினைக்கும் பார்த்திபனும் விமலும் அவரது 'பேக்'கை இவ்வளவு அலட்சியமாகவா வீட்டில் வைத்திருப்பார்கள்....?
பூர்ணாவை குழந்தையாக இருக்கும்போதே தத்தெடுத்து ராஜேஷ் வளர்ப்பதாக சொல்கிறார்கள். ராஜேசின் மகன், மகளோடு சிறு வயதிலிருந்தே உடன்பிறந்தவள் போலவே வளர்பவள் எப்படி ராஜேசின் மகனோடு காதல் கொண்டார்..? அதிலும் ராஜேசின் மகன் ஊருக்குக் கிளம்பும்போது பூர்ணாவோடு காதலில் ததும்பி வழிந்து கொஞ்சும் காட்சி ஓவராகத் தெரியவில்லையா...?
இடையில் வெள்ளைகார தம்பதி ஒன்று வருகிறது( ஒரிஜினலிலும் வருகிறார்கள்). எதற்காக வந்தார்கள்... பிறகு எங்கே போனார்கள் என்று தெரியவில்லை.
விமல் தன் காதலை தெரியப்படுத்த,பத்து ரூபாய் நோட்டில் 'சம்மதமா' என்று எழுதி மனிஷா யாதவிடம் கொடுப்பார். அவரும் அடுத்தக் காட்சியிலேயே நேரடியாகவே 'சம்மதம்' என்று சொல்வார். ஆனால் இரண்டு காட்சிகள் கழித்து விமல் அவரிடம்,'நான் சம்மதமானு கேட்டேன் இன்னும் பதில் சொல்லவில்லையே' என்பார். என்னய்யா இது..?
ஒன்று, படம் நகைச்சுவையாக நகர வேண்டும், அல்லது சஸ்பென்ஸ் கலந்து விறுவிறுப்பாக செல்லவேண்டும். இரண்டுமே இல்லாத பட்சத்தில் இதுபோல குறைபாடுகள், இருக்கும் கொஞ்ச நஞ்ச சுவாரஸ்யத்தையும் கெடுத்துவிடுகிறது.
இவர்களின் பேருந்து பழுதடைந்துவிட, அதை சரிபார்க்கும் மெக்கானிக்காக சந்தானபாரதி வருகிறார். டூல் பாக்சை திறக்கிறார். உள்ளே குவார்ட்டரும், சைடு டிஷும். உடன் வந்த உதவியாளரை பேருந்தை சரிசெய்ய சொல்லிவிட்டு பார்த்திபனும் அவரும் நடு ரோட்டில் தண்ணியடிக்கிறார்கள். இது காமெடி சீனாம் .இதற்கு சிரிக்கவேண்டுமாம்... போங்க சார்...
படத்தில் ஆறுதலான சில விசயங்களில் பாடல்களும் ஒன்று. கரு பழனியப்பன்-வித்யாசாகர் கூட்டணி மீண்டும் கலக்கியிருக்கிறது. எல்லாப் பாடல்களும் முதல்முறைக் கேட்கும்பொழுதே ரசிக்க வைக்கிறது.
'பார்த்திபன் கனவு' கொடுத்த கரு. பழனியப்பனின் படைப்பா இது..? மனுஷ்ய புத்திரனை தொலைக்காட்சி விவாதமொன்றில் முதன்முதலில் திணறடித்து, புரட்டியெடுத்த அந்த கரு.பழனியப்பனா இவர்..? என்னவோ போங்க சார்..!